Skip to content
Home » ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்…

ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்…

     

ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்…

                                                                     அத்தியாயம்-1📲

பெயர் பெற்ற கல்லூரி கட்டிடதின் உள்ள இருந்த ஒரு வகுப்பறையில் எல்லோரும் வீட்டுக்கு செல்ல ஆயத்தமாக இருக்க அவள் மட்டும் தன் வீட்டிற்கு செல்லவே பிடிக்காமல் அமர்ந்து இருந்தாள்.

ஏதோ ஒரு சோகத்தை உள்ளடக்கி அமர்ந்த நிலை யாராயிருப்பினும் கண்டு கொள்ளலாம். ஆனால் நின்று பேச தான் இவ்வுலகில் நேரமில்லை எவருக்குமே. தனது கவலை ஒதுக்கி தன் அருகே இருந்த தன் தோழி செய்கை கண்டு இருந்தாள் ஸ்வேதா. ஸ்வேதா பற்றி தான் நாம் பார்க்க போவது.

“என்ன பண்ற வித்யா?” என்றாள் ஸ்வேதா.

“பார்த்தா தெரியலை என் போன்ல சிம் போட்டு கொண்டு இருக்கேன்.” என்றாள் வித்யா.

“ஏற்கனவே ஒரு சிம் இருக்கே இது என்ன இரண்டாவது சிம்?”

“எவடி இவ… இது ரஞ்சித் கொடுத்தான். அப்பாக்கு என் மேல சின்ன சந்தேகம்… அதனால என் கார்டை போஸ்ட் பெயிடா மாற்றிட்டார். அதிக மெசேஜ் பண்ணினா பில்லுல நம்பர் காட்டி கொடுத்து விடும் அதான் அவன் எக்ஸ்ட்ரா சிம் கொடுத்தான் யூஸ் பண்ண… என்னோடது டூயல் சிம் அதான்.”

“உங்க அப்பா பக்கத்தில் இருந்து போனை வாங்கி பார்த்து இரண்டு சிம் இருக்கே என்று கேட்க மாட்டார்”

“முதல்ல என் பக்கத்தில உட்கார அவருக்கு எங்க நேரம்… பிசினஸ் பணம் அத்தியாவசிய செலவுல இருந்து ஆடம்பர செலவு பண்ண அவங்களுக்கு தேவையான பணத்தை தேடவே நேரமில்லை பக்கத்துல உட்கார்ந்து பார்பார்களா? ஏதோ போன் பில் கம்மியா மெஸஜ் கம்மினா, பொண்ணு தன் கட்டுக்குள் இருக்கறதா தன் கண் பார்வையில் இருக்கறதா நினைப்பு…” என்று சலித்தாள்.

“உங்க அப்பா அம்மா உன் மேல நம்பிக்கை வைத்து தானே இப்படி பேசலை என்றாலும் போனை செக் பண்றாங்க”

“நீ வேற உண்மையான அக்கறை என்றால் என்னோட தினமும் ஒரு அரை மணி நேரம் ஒதுக்க சொல்லு அதான் உண்மையான அன்பு அத பண்ணுவாங்களா முடியாது… இது சந்தேகம் கண்கானிக்கறாங்க உனக்கு சொன்னா புரியாது… ரஞ்சித் மெசேஜ் பண்ணுறான் அப்பறம் பேசறேன் பை” என்று வித்யா சிட்டாய் பறந்து செல்ல இதற்கு மேல் இங்கும் தனிமை என்று கிளம்பினாள் ஸ்வேதா.

வித்யா பெற்றோர் போல தான் ஸ்வேதா பெற்றோரும் ஏன் இன்றைய சூழலில் தங்கள் மகள் மகனை சாப்பிட்டாயா என்பதை கூட கேட்காமல் பிசினஸ் பணம் என்று ஓடும் பலர் இருக்க தான் செய்கின்றார்கள்.

கவலையில் நடந்தபடி வந்தாள். எதிரில் பல நாளாக காதல் என்று தன்னை தொல்லை செய்யும் ரவீஷ் நின்றான்.

இவனை வேற கடக்கனும் என்று முனுமுனுத்து நகர்ந்தாள்.

“ஸ்வே…. ஸ்வே.. நில்லு… எதுக்கு என்னை அவாய்ட் பண்ற… லவ் பண்ணலை அட்லீஸ்ட் பிரண்டா பேசலாமே… ஏன் ஸ்வே ஒதுக்கற” என்றான்.

“இங்க பாரு ரவீஷ் எங்க வீட்ல இப்படி ரோட்ல நின்று பேசறதை பார்த்தா எனக்கு தான் ஆபத்து. சோ ப்ளீஸ்… ” என்று கடந்து செல்ல ஆரம்பித்தாள்.

“ஸ்வே… அப்போ போன்ல பேசு” என்றான்.

அச்சோ இப்ப எப்படி சமாளிக்க என்று யோசித்தவள் வித்யா அவளின் அப்பா போன் பில் பார்த்ததை தன் தந்தை பார்பார் என்று சொல்லிடலாம் நம்பரும் தர வேண்டியது இல்லை என்று எண்ணினாள்.

“இங்க பாரு ரவீஷ் என் நம்பர் போன் லிஸ்ட் மெசேஜ் எல்லாம் எங்க அப்பா பார்ப்பார். அதனால நான் யாரிடமும் நம்பர் கொடுப்பதில்லை” என்று நகர்ந்தாள்.

“ஸ்வே பிரைவேட்டா சாட் பண்ண நியு நம்பர் யூஸ் பண்ணு… ” வித்யா சொன்ன அதே தான் என்றதும் திரும்பினாள்.

“நீ ஓகே சொல்லு” என்று தனது புது சிம் எடுத்து நீட்டினான். ஆக்சுவலி தம்பி கேட்டான் வாங்கினான். நீ யூஸ் பண்ணு அவனுக்கு வேற வாங்கி தந்துக்கறேன். நீ யார் கூட என்றாலும் பேசலாம்” என்று சொல்ல யோசித்தவள் அவனை பயந்து திருட்டு முழியோடு பார்த்தாள்.

“அடிக்கடி பேசி தொந்தரவு செய்ய மாட்டேன். பிராமிஸ்..” என்றபடி கொடுக்க அவளோ அதற்குண்டான பணம் கொடுத்து வாங்கினாள்.

“ஏன் ஸ்வே பணம் எல்லாம் நீட்டற” என்றான்.

“எனக்கு இல்லைனா ஏதோ அன்கம்பர்ட்டபிளா இருக்கும் ரவீஷ்” என்று சொல்ல சரி என்று சொல்லி பணம் வாங்கி கொண்டான்.

தனது வீட்டில் கிரில் கேட்டில் கை வைக்க அதுவோ சரியாக மூடாது கையில் நசுங்கியது.
கை நசுங்கவும் அதீத வலியில் துடித்தாள். ரத்தம் கட்ட வலியோடு வீட்டுக்குள் வந்தவள்

”அம்மா கேட்டுல கை மாட்டிக்கிட்டு வலிக்குது கை ரெட் ஆகுது என்ன செய்ய?” என்று கேட்க நீலாவோ பார்வை பதித்து போனில்

”ஒன் செகண்ட்… கலா” என்று மகளிடம் திரும்பினாள்.

”போன் பேசிட்டு இருக்கேன். நீ பெரிய பொண்ணு தானே நீயே முதலுதவி செய்துக்கோ போ” என்று சொல்ல கை வலியோடு அம்மா தன்னை கவனிக்கவில்லை என்ற வலியே அதிகம் தாக்க தனது அறைக்கு சென்றாள்.

ரத்த கட்டு அதிகமாக அப்படியே வலியில் உறங்க செய்தாள். கொஞ்ச நேரம் கழித்து எழுந்தவள் குளிக்க செய்ய பசியில் சாப்பிட போனாள்.

கையில் இருந்த ரத்த கட்டு உணவை எடுக்க இயலாது வின்னென்று வலி கொடுக்க

”அப்பா சாதம் பிசைந்து கொடுங்க கையில..” என்று அடிபட்டதை கூற வந்தவளை இடைப்புகுந்து பேசினார்.

”ஸ்வேதா ஸ்பூனில் சாப்பிடு… என்னோட ஒரு ஃபைல் தேடனும்” என்று அவளுக்கு என்ன கையில் என்று கூட பாராமல் தந்தை சூரியப்ரகாஷ் பேச இதற்கு மேல் இவர்களிடம் என்ன பேச என்று கண்ணீரை துடைத்தவள் வேலைக்காரி சுதாவிடம் பால் மட்டும் கேட்டு கொண்டு அறைக்கு சென்றாள்.

பாலில் கொஞ்சம் கேல்லாக்ஸ் போட்டு ஸ்பூன் எடுத்து இரவு உணவாக முடித்தாள்.
கலங்கிய விழிகளோடு தனக்கு தெரிந்த ஒரு க்ரீம் எடுத்து பூசி கொண்டு உறங்கினாள்.

ரவீஷ் கொடுத்த அந்த சிம் அடுத்த நாள் ஆக்டிவ் ஆக ரவீஷ் தான் காலை வணக்கம் முதல் தத்துவம் நகைச்சுவை அனுப்பினான்.

இரு தினம் கழித்து சாப்பிட்டாயா? என்ன செய்து கொண்டு இருக்கின்றாய்? என்று உரையாட ஸ்வேதா தான் கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாக உரையாட செய்தாள். அவளின் தனிமைக்கு இவனின் பேச்சு சுவாரசியமானது.

கல்லூரி கிளம்பி பேச ஆரம்பித்தால் அடுத்து சரியாக மாலை பேச அழைப்பு தொடுப்பான். இதே நடைமுறையாக ஸ்வேதா கொஞ்சம் தனிமையில் இருந்து வெளியேற செய்தாள்.

தற்பொழுதும் தாய் தந்தை பேசுவது கிடையாது தம்பி ஹரீஷ் வந்து பைக் எடுத்து சென்றிடுவான். இருந்தும் தொலைப்பேசி ரவீஷை தொலைவில் நிறுத்தவில்லை. ஸ்வேதாவின் அருகே இருப்பதை போல மாயயை தோற்றுவித்தது.

அடுத்து வந்த காலங்களில் வித்யா பேச அவளிடம் நம்பர் பரிமாறினாள். அப்படியே தோழிகளில் சிலருக்கும் ரவீஷ் கொடுத்த நம்பர் கொடுத்து பேச செய்தாள். அதில் ரவீஷ் எண் என்று நினைத்து சிலர் இவளுக்கு அழைப்பை தொடுக்க அவர்களும் நண்பர்கள் ஆனார்கள்.

ரவீஷ் தான் எண் வாங்கியதும் நம்பர் கொடுத்தேன் என்னோட ப்ரெண்ட்ஸ்க்கு சாரி ஸ்வே… உனக்கு அது ஒன்றும் பிரச்சனையில்லை தானே…?” என்று கேட்டான்.

”இதுல என்ன பிரச்சனை யார் போன் மெசேஜ் செய்தாலும் இது உன் நம்பர் இல்லை என்று சொல்லி உன் புது நம்பரை தர போறேன். இதுல என்ன இருக்கு” என்றதும் ரவீஷ் அப்படியே விடுத்தான்.

சாதாரணமாக ரவீஷ் பேசும் இயல்பான பேச்சு தான் எழுந்துடியா படிச்சிட்டியா சாப்பிட்டியா என்ன பண்ற? எந்த சப்ஜெக்ட் என்ன மார்க்? அரியர் இல்லையா? இப்படி பேசுவது கூட அவளுக்குள் ஏக்கம் கொண்ட மனம் தனக்காக ஒருவன் பேசுகின்றான் அன்பு காட்டுகின்றான். தன்னோடு பழக ஆசைக் கொள்கின்றான்.

இவனை போல ஒருவன் வாழ்வில் இருந்தால் எனது வெறுமை தனிமை எல்லாம் பறந்து போகும் என்று நம்பினாள்.

இதே வார்தைகள் பெற்றோர் பேசினாலே வயது பெண்களின் மனம் அம்மா அப்பா என்ற பிடிப்பில் இருக்குமோ என்னவோ? அதை செய்ய மறந்து இருந்தார்கள் ஸ்வேதா தாய் தந்தையர்.

ரவீஷ் கூட பேசிய சாதாரண பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக காதலில் வர அவனுக்கு மகிழ்ச்சி உச்சம் தொட ஸ்வேதா இன்று மறைமுகமாக பேசிய காதலுக்கு எல்லாம் விடியலில் தெரிவிக்க எண்ணினாள்.

அன்று காதலை சொல்லும் நோக்கில் அவனை நோக்கி சென்றாள்.

அவனும் ஸ்வேதா எப்படியும் இன்னும் சில தினங்களில் காதலை அவள் வாயிலாக சொல்வாள் என காத்திருந்தான்

                                                                 அத்தியாயம்-2 📲

ஆயிரம் கனவுகளோடு ரவீஷிடம் காதலை சொல்ல வந்தவள் தூரத்திலே ரவீஷ் கண்டு பதுங்கி அவனுக்கு பயம் காட்ட வர அவனோ ஒரு நண்பனிடம்

“அவ சும்மா டைம் பாஸ் மச்சி. என்னை ஒருத்தி கண்டுக்கலை என்றா எப்படி? அதான் காதல் என்று விட்டேன் ரீலு எப்படியும் கிளி இந்த வாரத்தில் காதலை சொல்லும் பாரு” என்றான்.

“பொண்ணு நல்லா தானே இருக்கா கட்டிக்கலாமே டா” என்றான் ரவீஷ் நண்பன்.

“எங்க மாமா பொண்ணு ஷைலுவை தான் டா… கல்யாணம் பண்ணுவேன் அப்ப தான் மாமா சொத்தும் வரும். ஷைலு ஒரே பொண்ணு… வசதி வேற ஸ்வேதா எல்லாம் அழகு நமக்கு கிடைச்சா போதும் அதுக்கு பிறகு எதுக்கு அவ” என்றவனின் தெளிவான பேச்சில் அப்படியே மரத்தின் மறைவில் சரிந்து அமர்ந்தாள்.

பேசியவன் இருவருமே கடந்து வேறிடம் செல்ல ஸ்வேதா கண்கள் கலங்கி நின்றது.
உலகில் தூய்மையான அன்புக்கு மதிப்பு இல்லையா….? இல்லை அன்பு செலுத்த யோசிப்பது ஏன்?

ஒரு வார்த்தை அன்பில் கனிந்து பேச எதற்கு தயங்குகிறது உலகம். பணம் பொருள் எல்லாம் தேவை என்ற அடிப்படையில் அன்புக்கு இடம் இல்லையா? என்ற அழுகை அவள் கண்ணில் விழுந்தது. இனி எதற்கு அழுகை என்றது போல நின்றது.

வீட்டுக்கு வந்து தனது அறையில் போனையே வெறித்தாள். அதனை தூள் தூளாக உடைக்க கை ஆர்பரித்தது.

அப்பொழுது தான் போனில் தனது பிறந்த நாள் வாழ்த்து வந்த வண்ணம் இருக்க இன்று அதை கூட புறக்கணித்திட வைத்தானே என்றது உள்ளம்.

மீண்டும் தானே சமாதானம் செய்து வந்த எல்லாவற்றிற்கும் நன்றி கூறி முடித்தாள். சிலரின் போன் கால் மனதில் லேசாக மணியை பார்த்து கிளம்பினாள்.

முதல் வகுப்பு முடிந்து இருக்க வந்து சேர்ந்தாள். அடுத்த வகுப்பு துவங்கி பிரேக் வந்திட தோழி வித்யா பாத்தீமா சுதா உயிர் தோழமை அழைத்து கொண்டு கேண்டீன் சென்றாள்.
அவளை தேடி பரிசோடு ரவீஷ் வந்தான்.

தோழிகளும் இவன் வரவே ஸ்வேதாவை விட்டு நகர்ந்தனர்.

“ஹாய் ஸ்வே ஹாப்பி பெர்த் டே” என்று கிப்ட் நீட்டினான்.

“வாழ்த்து மட்டும் போதும் ரவீஷ் கிப்ட் எல்லாம் வேணாம்” என்றாள் அவன் பொருளை தவிர்க்க

“உன் பிரெண்ட் கொடுக்கிறேன்
வாங்கிக்க மாட்டீயா? ” என்றான் பிரெண்ட் என்றதில் அழுத்தம் கொடுத்து

“ரவீஷ் நீ பிரெண்ட் தான் ஆனா என் டியரஸ்ட் பிரெண்ட் இல்லை அதனால கிப்ட் வேணாம் வீட்ல திட்டுவாங்க” என்று அவனை போலவே அழுத்தமாக சொல்லி வகுப்புக்கு கிளம்ப ரவீஷ் குழம்பி போனான்.

காதலை சொல்பவளை போல அப்படி சாப்ட்டா வெட்கப்பட்டு எல்லாம் பேசினா ஆனா டியர் பிரெண்ட் லிஸ்ட்ல கூட நான் இல்லை என்பது போல பேசிட்டு போறா… சம்திங் ராங் என்னவாக இருக்கக் கூடும் என்று யோசித்தான்.

பிறந்த நாள் சாக்காக அவளை தன்னோட உணவகம் அழைக்க வந்தவனுக்கு ஏமாற்றம் மிஞ்ச யோசித்தான்.

ஸ்வேதா என்றும் போல தோழிகளுக்கு மட்டும் ட்ரீட் வைத்து கிளம்பினாள்.

போன் செய்தும் வேலை அது இது என்று பேசுவதை தவிர்த்தாள்.

ஒரு கட்டத்தில் ரவீஷ் தன்னை விட்டு அவள் விலகுவதை உணர்ந்தான். அவள் தன்னை கண்டு விட்டாள் என்பதையும் தாமதமாக அறிந்து கொண்டான்.

அன்று வழிமறித்து கேட்க “நீ எப்படிப்பட்ட ஆள் என்று தெரிந்து போச்சு வழி விடு” என்று தைரியமாக பேசினாள்

“என்ன… ஓ… எப்படி?” என்றான் எகத்தாளமாக

“நல்லவர்களுக்கு கடவுள் காட்டி கொடுப்பார்” என்று நகர்ந்தாள்.

“எனக்கு கம்பெனி கொடு… ஒன்ஸ்.. அதுக்கு பிறகு நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்றவனை பார்வையில் எரித்திடும் சக்தி இல்லாமல் வெதும்பினாள்.

“என்ன லுக் அதான் நான் இப்படி என்று தெரிந்த பிறகு நான் நடிக்க வேண்டியது இல்லை…” என்று கையை பற்ற அடுத்த கணம் அறை வாங்கி கன்னம் சுள்ளென்று எரிய நின்றான்.

“இது தான் கடைசி… ஒரு மாட்டுக்கு ஒரு சூடு போதும் நினைக்கிறேன்.. இல்லை எருமை மாட்டுக்கு மழை பெய்தது போல திரும்ப வந்து தொந்தரவு செய்த போலீஸ் ஸ்டேஷன் பக்கம் தான், ஒரு கம்பிளைன் கொடுத்தேன் தோளை உறிச்சு தொங்க விடுவாங்க” என்று செல்கின்ற அவளையும் தன்னை சுற்றி இருந்த கூட்டத்தையும் கண்டு அவமானமாக உணர்ந்து அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

அளவுக்கு அதிகமாக மது நாடி ஸ்வேதாவை எப்படி பழி வாங்க என்று யோசித்தான். அவள் எடுத்ததும் போலீஸ் என்றதும் கொஞ்சம் அதிகமாகவே பயந்து தான் போனான்.

தான் தலையிடாது அவளுக்கு சிக்கலை கொண்டு விடனும் என்று யோசித்தவன் அவளின் தொலைப்பேசி எண்ணை தான் வெறித்தான்.

எண்ணை கண்டு சிரித்தவன் உன் நம்பர் இந்த உலகத்தில் இருக்கற சபலம் கொண்ட ஆண்கள் கையில் கிடைக்கும்… வைக்கிறேன் பாரு ஆப்பு.. என்று அதிகமாக புழங்கும் ஆண்கள் உபயோகிக்கும் கழிவறையில் சுவற்றில் ஸ்வேதா எண்ணை கிறுக்கி, கால் கேள் என்றது போல கிறுக்கி வைத்தான். தான் சென்ற இடம் எல்லாம் சிலர் இப்படி தான் பொது இடங்களில் அப்படி எழுத சில ஆண்களின் சபல ஆசையில் அதனை மனனம் செய்து கொண்டனர்.

சில நாளில் தனக்கு ரவீஷிடம் இருந்து தான் டார்ச்சர் வரும் என்று நினைத்தவளுக்கு அதற்கு பதிலாக தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்பு கண்டு எரிச்சல் ஆனாள். ஒரு கட்டத்தில் அந்த எண்ணை கூட தூர எரிய செய்தால் போச்சு என்று எண்ணினாள்.

ரவீஷ் வேலை இது என்றதில் இவளுக்கு சந்தேகமே இல்லை நேரில் தானாக தொந்தரவு செய்ய பயந்து இப்படி செய்கின்றான் என்றது புரிந்தது.

இதையும் கடக்க தான் அவள் மனம் பழக செய்தது.

முன்பு தொலைபேசியில் கிட்டிய சந்தோஷம் அதை தூக்கி எரிந்து தனிமை தேட அதில் உறக்கம் ஒன்றை தேடினாள்.

மகளின் முக வாட்டம் எதையும் அவர்கள் பெற்றோர் கண்டது போல தோன்றவில்லை. தாய் மாதர் சங்கத்தின் ஒரு பிரச்சனையில் பிசியாக இருந்தார்.

தந்தை அவர் பணி கணிப்பொறி தொலைப்பேசி என்று எந்திரத்தில் மூழ்கிக் போனார்.

சாப்பிட கூட புலனத்தில் அழைக்கும் நாட்கள் கூட உண்டு. தம்பி கொஞ்சம் பரவாயில்லை.. ஆண் என்பதாலோ என்னவோ வீட்டில் இல்லை என்றாலும் தேடுவதில்லை.. அவனின் வாழ்வு நட்பில் சிறப்பாக தான் இருந்தது.

அவனுக்கு இதே போன்ற எண்ணம் உதிக்கவில்லையோ அல்லது அவனின் நட்பு வட்டம் சரியாக பயணிக்கின்றாதோ பெற்றோர் அன்பில் ஆண்கள் அன்பை அதிகம் நாடுவதில்லையோ என்னவோ ஹரீஷ் வீட்டில் அதிகம் இருப்பதில்லை.
ஸ்வேதா வந்த அழைப்பில் கடுப்பின் உச்சதில் இருந்த பொழுது ரவிஷ் கொடுத்த எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

இது ரவீஷ் கொடுத்த எண்ணாக இருந்தாலும் இவள் அதற்கு பணம் கொடுத்தே பெற்றதால் அவன் அதனை கேட்கவில்லை. இவளும் கொடுக்கவே இல்லை. தூர எறியவும் யோசனையில் இருந்தாள். நட்பில் பாதி இந்த எண்ணில் பேசிட இது பயனாக தான் இருக்கு ஆனா கூடவே இப்படி கால் கேர்ள் என்று கேட்டு மனம் புண்படியாக பேசி விடுகின்றார்கள். தான் அப்படி இல்லை என்ற பேச்சு கூட காதில் விழாத போதையில் உழலும் ஆண்கள் பேச்சை எரிச்சலுடன் கட் செய்து மனவுளைச்சலில் ஆளாகுவது கஷ்டமாக இருக்க தூக்கி எரியும் நோக்கில் அதே சமயம் ஒரு எண்ணில் இருந்து வந்த அழைப்பு அது.

”ஹாய்…”

”ஸார்… நான் கால் கேர்ள் இல்லை… ஏதாவது பேசி கடுப்ப ஏற்றாதீங்க.. ஒரு அயோக்கியன் என் நம்பரை கண்ட இடத்தில் கிறுக்கி வச்சி இருக்கான் அதுக்கு இப்படி ஆண்கள் சபலப்பட்டு இஷ்டதுக்கு எந்த நேரம் என்றாலும் ஒரு நம்பர் என்று போனை பண்ணி உயிரை வாங்குவீங்களா?” என்று கத்தினாள்.

”உங்க கோபம் புரியுது.. நான் அதுக்காக போன் பண்ணல … அங்க இருந்த நம்பர் அழிச்சுட்டேன் இனி கொஞ்சம் நிம்‌மதியா இருங்க.. இப்படி தான் இருக்கும் என்று தோணுச்சு அதான் கால் பண்ணி பேசி உங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தேன்”

”என்ன ஆறுதலா…? உங்களுக்கு என்ன வேணும் ஏன் என்றால் இந்த உலகத்தில் யாருமே சும்மா ஆறுதல் செய்ய மாட்டாங்க.. காரியம் ஆக தான் எல்லாம். அதுவும் இப்படி தானா வருகின்ற அழைப்பு…” என்று எரிச்சலோடு பேசினாள்.

”ஹலோ ஹலோ.. எக்ஸாக்ட்லி நீ நினைக்கிறது சரி தான். நான் உன்னிடம் பேசிட தான் வந்தேன்… எனக்கு ப்ளார்ட் பண்ணி பேச செய்ய இல்லை… எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகி இருக்கு.. ஆனா மனைவி பேசியதில்லை.. அந்த வருத்தம் தான் சாதாரணமா இரண்டு வார்த்தை பேச ஆசைப்பட்டேன்” என்று அவன் கூறியதில் ஸ்வேதா அமைதியானாள்.

”சாரி எனக்கு இப்ப இந்த நிலைமையில் பேச முடியலை.. ஐ அம் சாரி” என்று துண்டித்தாள்.

ஸ்வேதா போனை வைத்து விட்டு ‘நம்ம போல நிறைய பேர் இருப்பாங்க போல.. அது என்ன எனக்குனு தேடி வந்து பேச வருவாங்களோ? அப்பா அம்மா தான் பேசாம இப்படி பண்றாங்க என்று பார்த்தா இவர் மனைவி பேசலை என்று சொல்றார்.. எல்லாம் என்ன டிசைன்னோ.’ என்று மற்றதை மறந்தாள்.

ஒரு வாரம் கடக்க முன்பு போல எந்த போன் கால் தொல்லைகள் இல்லை என்றதை எண்ணி இயல்பு வாழ்வில் பயணித்தாள்.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகி கொண்டாள். இப்படி பத்து நாட்கள் கடக்க மீண்டும் அதே எண்ணின் அழைப்பு முதலில் பார்க்காமல் எடுத்து காதில் வைக்க

”என்னமா இப்பவும் தேவையில்லாத கால் வருவதில்லை தானே?” என்று ஆரம்பித்திருந்தார்.

”ஆமா நீ… நீங்க யாரு?” என்று அஞ்சினாள்.

”பயபடாதே மா.. நான் தான் அன்னிக்கு கூட பேசினேன். நீங்க திட்டினீங்க? நான் கூட ஒய்ப் பேசாம இப்படி பேச ஆசைபட்டேன் என்று…” இழுத்தான்.

”ஓஹ் சாரி ஸார் எனக்கு மறந்து போச்சு.. பெயர் தெரிலை..” என்று பேசினாள். உண்மையை கூறி பேசுவதாக ஸ்வேதா சிறிதளவு நம்பி பேசினாள்.

”என் பெயர் subhash மா… எப்படி இருக்க இப்பவும் கால் வருதா? என்றார்.

”இல்லை.. என்ன செய்திங்க?”

”அதான் சொன்னேனே அந்த நம்பர் கிறுக்கி இருந்த இடத்தினை அழிச்சுட்டேன்” என்றதும்

”ரொம்ப தாங்க்ஸ் சார்” என்றாள் ஸ்வேதா.

”தாங்க்ஸ் எதுக்கு மா.. சார் சொல்லாதே.. பேர் சொல்லி கூப்பிடு” என்றதும்

”இல்லை சார்.. அது மரியாதையா இருக்காது… நீங்க திருமணம் ஆனவர்” என்றதும்

”அதனால சார் சொல்லியே ஆகணுமா? எனக்கு ஒரு நட்பை தேடறேன். நீ நண்பனை பேர் சொல்லாம சார் சொல்லுவியா?” என்று அவளின் கருத்தே இல்லாமல் அவளின் தோழன் என்ற பதவியை அவராகவே வாங்கி கொண்டார்.

”ஓகே இனி ட்ரை பண்றேன் அப்படி கூப்பிட” என்று அவளும் வெளிபடையாக நட்பை சொல்லி கொள்ளவில்லை என்றாலும் அதிலே அவள் நட்பை சொல்லாமல் சொன்னதாக போனது.

                                    அத்தியாயம்-3 📲

ஒரு மாதம் சென்று இருக்கும் சுபாஷ் பேச்சு ஓரளவு அதே போல இருக்க தனது தோழி வித்யாவிடம் அடுத்த நாளே பகிர்ந்து இருந்தமையால் அவள் சொல் படி பெயர் முதல் எல்லாமே மாற்றி கொடுத்து தான் பேசியிருந்தாள் ஸ்வேதா.

பெயர் கவிதா என்றும் கோ-எஜுகேஷன் படித்தாலும் வுமன்ஸ் காலேஜ் என்றும் அப்பா அம்மா ஹை-கிளாஸ் என்பதை மிடில் கிளாஸ் என்றும் மாறி மாறி சொல்லி இருந்தாள். உணவு கூட காலையில் இட்லி என்றால் பூரி என்று சொல்லி முடித்து இருப்பாள். பிடித்தது சிலது மட்டும் ஓரளவு உண்மை சொல்லி இருப்பாள்.

இது எல்லாம் மாற்றி தான் பொய்யாக தான் சொன்னாள். ஆனால் பேசும் நிகழ்வுகளில் மட்டும் பொதுப் படையாக நிருத்தினாள்.

இது தவறு தானே என்று ஸ்வேதா கேட்டதற்கு.. வித்யாவோ ”இப்ப நம்ம முகநூலில் இன்ஸ்டால்கிராம் ட்விட்டர் என்று எல்லாவற்றிலையும் வந்து பேசினா ஜஸ்ட் ஒரு ஹாய் ஹலோ அப்படியா தாங்க்ஸ் என்ற அளவுக்கு நிறுத்திப்போம் அது போல தான். இதுவும். என்ன கொஞ்சம் அதிகமா நல்லா பேசினா நாமளும் பேசலாம்.. இதுல என்ன தப்பு?

டீன்ஏஜ் லைஃப்ல ஒரு பொண்ணு கல்யாணம் ஆகலை என்றால் சாதாரணமா பேசலாம் இதுல என்ன தப்பு இதே பெண்கள் நட்பு கிடைச்ச என்ன செய்து இருப்ப? ஒரு குடும்ப தலைவி என்ற ரீதியில் அக்காவிடம் பேசுவோம் அது மாதிரி தான்.

என்ன ஏதாவது ஏடாகூடாம பேசின சைலன்ட்டா பிளாக் பண்ணி விடு இல்லையா நம்பர் தூக்கி போடு. ஆல்ரெடி நீ நம்பர் கீழே போட தானே எண்ணி இருந்த தென் அப்பறம் என்ன?” என்று நீண்ட விளக்கம் தர ஸ்வேதாவுக்கும் சரியாக பட்டது.

முதலில் சாதாரணமாக வெறும் சாதாரண நடையில் பொதுவான பிடித்தம் பற்றி பேசி மகிழ்ந்த தருணம் கொஞ்சம் கொஞ்சமாக தனது வீட்டின் பிரச்சனை அதாவது அவளுக்கு ஏற்படும் தனிமை பெற்றோர் கவனிக்காதது எல்லாம் சொல்லும் அளவுக்கு சென்றன.

தனது தாய் தந்தையார் பேசுவது இல்லை என்பதில் இருந்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்றவரை சொல்லி பேசும் அளவுக்கு முன்னேறியது.

சுபாஷ் அவனுமே தனது மனைவி தவிர்த்து தனக்கு தனிமை பற்றி பொதுவான ஒத்த கருத்துக்களை பேசி கொண்டார்கள்.
அவன் நல்லவனா கெட்டவனா என்று அறியாது பழக்கம் போனது.

”கவிதா உன் போட்டோ அனுப்பு நீ எப்படி இருப்ப என்று பார்க்கணும்” என்ற கேள்வியில் கவிதா சற்றே தயங்கி தான் இருந்தாள்.

இந்நாள் வரை பேசிய நெருக்கம் அனைத்தும் அந்த ஒரு வார்தையில் தடுமாறியது. அப்போ இவரும் ஏதோ ஒரு காரணம் தானா? என்றதை வாய்விட்டே கேட்டிட….

”சே சே அப்படி இல்லைங்க நான் கூட தான் என் போட்டோ அனுப்பலை… அதுக்காக அனுப்பிட்டு கேட்டேனா? ரொம்ப நாள் ஆச்சு பேசிட்டே இருக்கோம் பார்க்கணும் என்ற ஆவல் தான்” என்று முடிக்க ஸ்வேதாவோ “எனக்கு நேரம் வேணும் யோசிக்கணும்.. யோசிச்சுட்டு அனுப்பறதா இருந்தா சொல்றேன்” என்று வைத்திட செய்தாள்.

வித்யாவிடமும் சொல்ல அவளோ அறிவுரைகளை அள்ளி தெளித்தாள்.

”போட்டோ எல்லாம் கொடுக்காதே. நேர்ல வர சொல்லு பாரு.. அது வரை இந்த ஒரு வாரம் அவன் அகைன் போட்டோ கேக்கமா இருக்கானா என்று செக் பண்ணி பாரு. எதையும் கேட்கலை என்றால் அப்போ பார்க்கலாம்” என்று அவள் அறிவுக்கு யோசனை வழங்கி சென்றாள்.

ஒரு தோழி நல்விதமாக கிடைத்தால் கூட ஒருவன் தனிமை அகன்றுவிடும். அங்கு அது கிடைக்கவில்லை. ஸ்வேதா மனம் யோசிக்கவும் இல்லை தன்னிடம் பழகும் சில தோழிகள் எல்லாமே அப்படி தான் இருக்க அது தான் வயதின் அம்சம் என்றே எண்ணி கொண்டாள்.

கல்லூரி அப்படி.. எல்லாமே மேல் தட்டு வர்க்கம் சார்ந்தது. அங்கே பாசம் எல்லாம் அதிகம் இல்லை. உண்மையான நட்பு என்று சொல்லிட முடியாது. கை விட்டு எண்ணிடலாம் நட்பின் உன்னதம் உணர்ந்தவர்களை.

மற்றவர்கள் எல்லாம் பேசும் வரை தான் எல்லாம் ஹை ரேஞ்ச் என்றதாலோ ஒரு வட்டதுக்குள் வாழும் நிலை அல்லாதவர்கள்.

ஸ்வேதா இதற்குள் இருப்பதே திரிசங்கு போல தான். இன்னும் சரியாக சொன்னால் ஓட்டை படகில் பயணம் செய்யும் நீந்த தெரியாத ஒருத்தி. எப்பொழுது வேண்டுமென்றாலும் அவளின் வாழ்வு இருளில் சிக்கும் வகையில் தான்.

என்ன அவளின் உண்மையான பாசம் ஏங்கும் மனம் தவறான பாதைக்கு இன்னும் செல்லவில்லை.

சுபாஷ் அதிகம் போட்டோ கேட்காமல் இருக்க ஸ்வேதா கொஞ்சம் இன்னும் கூடுதலாக நல்ல அபிப்ராயம் கொண்டாள்.

”உங்களை பார்க்கணும்.. பேசணும்.. ஒய்ப் டார்ச்சர் பேசாம சந்நியாசி ஆகலாம். எனக்கு உங்களை போல ஒரு பொண்ணு மனைவியா கிடைச்சு இருக்கலாம்.” என்று வந்து விழுந்தன சுபாஷின் பேச்சு.

ஆடி தான் போனால் ஸ்வேதா. இப்படி எல்லாம் பேச்சு அவள் கேட்டதில்லை.
தானாக காதல் என்று வந்து இருக்க இது இன்னமும் மாறுபட்டது. இதனை எப்படி எடுத்து கொள்வது என்று கூட அறியாத வயதின் வீரியதில் இருக்க இதே போல பேச்சு மட்டும் தொடர்ந்தன.

சுபாஷ் அதிகமாக மற்ற ஆண்களை போல தொல்லை கொடுக்கவும் இல்லை அதே நேரம் பேசாமல் போகவும் இல்லை. தினமும் பேசி பழகி ஸ்வேதா மீது ஒரு அக்கறை அன்பு இருப்பதாக காட்டி கொண்டான். ஆனால் இது எத்தகையான அன்பு என்றதில் ஸ்வேதா குழம்பி தவிக்க வித்யாவிடம் பகிர அவளோ காத்து கத்து கத்தினாள்.

”ஏன் டி எவனோ ஒருத்தன் பேசறான் ஓகே பழகுறான். அவன் மனைவி காதலி என்று ஆரம்பிக்கும் பொழுதே கட் செய்யாம இருக்க… கொஞ்சம் யோசி. அவன் அன்மேரிட் என்றால் நீ கல்யாணம் செய்துகொள்ள ஒரு வாய்ப்பு இருக்கு. ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கறவன் எப்படி? மரியாதையா பிளாக் செய்து சும்மா இரு…” என்றாள் கடுகாய் பொரிந்து.

இதை கேட்டு ஸ்வேதா கொஞ்சம் யோசிக்க செய்தாள்.

அடுத்த நாள் முடிவாக சுபாஷிடம் இனி நாம பேச வேண்டாம் பழக வேண்டாம். இத்தோட எனக்கு நீங்க அழைப்பும் செய்யாதீங்க” என்றதற்கு சுபஷோ

”கவிதா பிளீஸ்.. அப்படி சொல்லாதே… எனக்கும் இங்க பேச பிடிக்கலை.. எந்த நேரம் மனைவி அவ ஒரு உலகத்துல இருக்கா. எனக்குனு இந்த தனிமைக்கு தான் நான் உனக்கு போன் செய்ததே.. போன் பேசிய அடுத்த நிமிடம் புரிந்தது. நீ அப்படிபட்டவள் இல்லை யாரோ இப்படி உன் நம்பர் எழுதி உன்னை அசிங்கப்படுத்தி இருக்காங்க என்று. நான் உண்மையை தானே சொன்னேன் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்று மறைக்கவில்லையே…

ஏன் மனைவி சதா என்னை கவனிக்காம இருக்கா.. இதுல குழந்தகைகளிடமும் என்னை உதாசீனப்படுத்தி பேசி அவர்களிடம் நெருங்கவும் முடியலை…. எனக்கு இது போல பெண்களிடம் பேசி தான் எனது காயங்களை மாற்றிப்பேன். என்னவோ உன்னிடம் பேசியதும் கொஞ்சம் நிம்மதி” என்றதும் மவுனம் கொண்டாள்.

”இங்க பாருங்க சுபாஷ் எனக்கு இனி இப்படி பேசுவதில் உடன்பாடு இல்லை. என்ன பண்ண சொல்லறிங்க” என்று கவிதாவாகிய ஸ்வேதா கேட்டாள்.

”நாம ஒரு முறை சந்திக்கலாமா? சந்திச்சு பேசி உணவு பகிர்ந்து கொள்ளலாம் அதுக்கு பிறகு பேசாம இருக்கலாம்” என்று சொல்ல கவிதா யோசித்து சொல்வதாக சொல்லி போனை வைத்தாள்.

அடுத்த நாள் சுபாஷிடம் தான் வந்து சந்திப்பதாக சொன்னாள். எங்கே எது என்று சுபாஷ் கேட்டு கொண்டான். சந்திக்கும் இடமும் கேட்டுக் கொண்டார்கள்.

இந்த சந்திப்பு யாருக்கு மனக்காயம் ஏற்படுத்தும் என்பதை அறியாது கிளம்ப தயாரானார்கள்.

ஸ்வேதாவுக்கு இது சரியா தவறா என்று எல்லாம் புரியவில்லை. அவளின் கல்லூரி இரண்டாம் வருடம். வாழ்வின் அனுபவம் மேடு பள்ளங்கள் கஷ்ட நஷ்டம் கூட அறியாத அவள் தனிமையின் கிடைத்த அனுபவத்தில் கிளம்பி கொண்டு இருந்தாள்.

தன்னோட பெயர் கூட உண்மை சொல்லாத நபரிடம் சந்திப்பு எப்படி இருக்கும்? சுபாஷை சந்தித்து பேசி அவரின் பேச்சுக்கு எதற்கும் செவி சாய்க்காமல் போனோமா உண்மையான டீடெயில்ஸ் எதையும் சொல்லாமல் பேசினோமா சாப்பிட்டோமா வந்தோமா என்று இருக்கணும் அதுக்கு பிறகு இந்த போன் முதலில் தூக்கி போட்டு உடைக்கனும்.

இல்லையா.. லாக்கர்ல வச்சி பூட்டிடனும்… என்னையே அப்பா அம்மா சாபிட்டாங்களா என்று கூட யோசிக்க வைக்காம இதுக்குள்ள இழுக்குது. அவங்க தான் என் மேல அக்கறை இல்லாமல் இருக்காங்க என்று இருந்தேன். இந்த போன் வந்ததிலருந்து நானும் அவர்கள் மேல அக்கறை இல்லாமல் தானே இருக்கேன்.

இந்த உலகம் டெக்னாலஜி இது எல்லாமே மனிதர்களை தன் வசம் படுத்திடுது சே.. என்று வெளியே வர ஹரீஷ் தலையில் காயங்களோடு கட்டு கட்டி கொண்டு வந்து இருந்தான்.

”டேய் ஹரீஷ் என்னாச்சு?” என்று ஸ்வேதா பாசத்தோடு கேட்டாள்.

”பைக் ரைஸ் அக்கா… எப்பவும் வின் ஆவேன். அதுல ஒரு ஹாப்பி இருக்கும். இன்னிக்கு ஓட்டும் பொழுது ஒரு குழந்தை குறுக்கே வந்துடுச்சு அதான். அதை பார்த்து வேற பக்கம் திருப்பினேன். எனக்கு அடிபட்டுடுச்சு. நல்ல வேலை குழந்தைக்கு ஒண்ணும் ஆகலை… இல்லை அம்மா அப்பா எனக்கு பைக் ஓட்ட கூட விடமாட்டாங்க” என்று கூறினான்.

”ஏன் டா… இப்படி அடிபட்டு இருக்கு இப்ப மட்டும் பைக் ஓட்ட விடுவாங்களா?” என்று கேட்டாள்.

”அப்பா இனி பைக் எடு.. கையை ஓடைகிறேன் சொல்வார். அம்மா இதுக்கெல்லாம் எங்க போன ஹோஸ்பிடலுக்கு கையில காசு எப்படி வச்சி இருந்த என்று கேட்டாங்க… அவளோ தான்” என்றான். ஏதோ அதுவே பெரிய விஷயமாக சொல்லி டி‌வி பார்த்து கொண்டு இருந்தான்.

ஸ்வேதாவுக்கு மனம் வலித்தது. அப்பாவை விட்டுவிடுவோம். அம்மா இவர்களுக்கு என்ன ஆனது. அவர்கள் போக்கும் கண்டு கொள்ளா விதமும் எரிச்சலை தர செய்தது. 

                                                         அத்தியாயம்-4 📲

ஹரீஷ் அன்று வீட்டில் தான் இருந்தான். தலைகாயம் கொஞ்சம் வலி கொடுக்க விடுமுறை விட்டு இருந்தான் கல்லூரிக்கு.

காலையில் கல்லூரி விட்டு வந்தாள். மாலை திவ்யா கூட போவதாக சொல்லி கிளம்பி இருந்தாள். என்றும் இல்லாத நாளாக ஸ்வேதா அப்பா சூரியப்ரகாஷ் வீட்டுக்கு வந்து இருக்க அப்பாவை கண்டு திருட்டு முழி முழித்தாள். அவரோ அவளை கண்டு எப்பவும் போல அறைக்குள் நுழைந்தார். அப்பா வருவதற்குள் சென்றிட வேண்டும் என்று ஒரே ஓட்டமாய் கிளம்ப செய்தாள். சூரியபிரகாஷ் எங்கோ கிளம்ப தயாராக வெளியே வந்தவர். மகன் டிவியில் சத்தமாக பாட்டினை கேட்க அவரும் விசிலடிதபடி வந்தவர். மகனை கண்டதும் “சத்தம் குறைச்சி கேளுடா.” என்று அதட்டினார்.

”அக்கா எங்க டா?” என்று கௌட்டார்..

”வித்யா அக்கா கூட கடைக்கு போறதா சொன்னப்பா” என்று சொல்ல ஹரீஷ் மீண்டும் டிவியில் கண் பதித்தான்.

ஹரீஷ்க்கே டப் கொடுக்கும் விதமாக அலங்கரித்த சூரியப்ரகாஷ் தனது காரில் கிளம்பினார்.

எங்கும் வாகன இரைச்சலில் தத்தி தத்தி சென்றது.

தூரத்தில் ஸ்வேதா அந்த ஷாப்பிங் ஸ்பாடில் இருக்க கண்டவர்.. யோசனையோடு ஒரு மெசேஜ் செய்து விட்டு காத்திருக்க அவரோ கொஞ்சம் தள்ளி இருக்கும் வேறொரு உணவகம் சென்றார். அங்கு சென்று காரினை பார்க் செய்திட அங்கே அதே நேரம் ஸ்வேதா ஆட்டோவில் இருந்து இறங்க சூரியப்ரகாஷ் உடனடியாக ஒரு போன் செய்து மறைந்து நின்றார்.

அவரின் போன் கவிதாவுக்கு கால் செய்து அழைத்து கொண்டு இருக்க, அதே நேரம் ஸ்வேதா போன் ரிங் ஆனது.

மீண்டும் மீண்டும் அழைத்து தனது ஐயத்தை தீர்க்க, இம்முறு கவிதா போனை எடுத்தாள்.

அதே நேரம் ஸ்வேதா எடுத்து ‘ஹலோ’ என பேச நினைக்கும் நேரம் துண்டித்தார்.
சூரியபிரகாஷ் தலையில் அடித்து அப்படியே அந்த பக்கம் இருந்த படிக்கட்டில் அமர்ந்தார்.

உடலெங்கும் வேர்த்து போனது. உலகமே ஒரு கணம் சுழன்றதை நிறுத்தியது போல உணர்ந்தார்.

தன்னை அங்கே இருக்கும் செக்யூரிட்டி ‘என்னாச்சு சார்? உடம்பு சரியில்லையா?’ என்று அருகே வந்து நிற்க அவரை கண் மங்கலாக பார்த்தார்.

செக்யூரிட்டி முகத்தில் நீர் அடிக்க அது ஏனோ சூரியபிரகாஷ் என்ற சுபாஷிற்கு எச்சியை துப்பி முகத்தில் அறைந்தது போன்ற உணர்வை தந்தது.

அவசரமாக மெசேஜ் செய்து ”நீ வீட்டுக்கு போ நாம சந்திக்க வேண்டாம்” என்ற குறுஞ்செய்தி அனுப்பினார். ஸ்
வேதா அதனை பார்த்து சுற்றி முற்றி பார்த்து சுபாஷ் என்ற நம்பருக்கு அழைப்பை தொடுக்க அதுவோ அணைத்து இருப்பதாக தகவல் தர இரு முறை போன் செய்து ஒய்ந்தவள் ஆட்டோ பிடித்து கிளம்பினாள். போகும் நேரம் இப்படி அலய விட்ட சுபாஷ் நம்பர் டெலீட் செய்து ஆத்திரத்தை காட்டினாள்.

அவள் சென்ற கணம் மீண்டும் காரினை எடுத்து கிளம்பினார். ஆளரவமற்ற அத்தெருவில் வண்டியை நிறுத்தி கதறி அழுதார்.

முகத்தில் கையால் அறைந்து அறைந்து அழுதார்.

”கடவுளே….. என்னை ஏன் இப்படி சோதிச்சுட்ட…. இத்தனை நாள் அப்போ என் மகளிடமா நான் இப்படி பேசி தொலைச்சு இருக்கேன்… ஆண்டாவா…” என்றேஉ கண்ணாடி முகத்தில் காறி காறி உமிழ்ந்தார்.

சூரியப்ரகாஷ் சுபாஷ் என்ற பெயரில் தான் கவிதா என்ற மங்கையிடம் அதாவது ஸ்வேதாவிடம் பேசியது.

தற்செயலாக ஒரு கழிவறையில் ஒருவன் காதலித்தவளை விரக்தியில் மட்டும் ஒரு பெண்ணை பிடிக்காமல் இப்படி எழுதி அசிங்கபட வைப்பான் என்று எண்ணி தான் அந்த எண்ணிற்கு அழைப்பை தொடுத்தார்.

எப்படியும் இதே விரக்தி கொண்ட பெண் கொஞ்சம் அன்பில் லயித்து பேசினால் இலக வாய்ப்பு உண்டு என்று கணக்கீட்டு பேசினார்.

45 தாண்டிய ஆண்… பெரும்பாலும் மனைவியிடம் கிட்டதா சில விஷயம் இப்படி மற்ற பெண்ணிடம் தேடத்தான் செய்கின்றனர். சமூகத்தில் இருக்கும் சமூக வலைத்தளம் தான் பெரும்பாலும் இப்படிபட்ட கன்றாவிக்கு முதல் துவக்கம்.
ஆபாச புகைப்படம் அதில் இருக்கும் சில நம்பர் அதில் அழைப்பு சொர்க்கம் என்று சிலர் சுற்றி திரிக்கின்றனர். அது எல்லாம் தனக்கு பின் வரும் தலை முறைகளுக்கு இப்படி சீரழிந்து கிடப்பதற்கு வழிவகுக்கும் என்பதை அறியாது சிக்கி சிதறுகின்றனர்.

இதற்கு வயது எல்லாம் வரை முறை அல்ல.. பதினைந்து வயது பாலகனுக்கு கையில் போனை கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் உலகம் தான். பதினெட்டில் காமம் தேடி எட்டு வயது ஒன்பது வயது சிறுமிகளை இச்சை படுத்தி காமத்தின் கொடூரமாக ஆகிவிடுகின்றது. அதையும் மீறி வயது ஏறிய முதுமையில் இப்படி பெண்களை எந்த வகையில் நாட, ஆறுதல் மொழியில் அடைக்கலாமாக மாறி, ஆக்கிரமிக்கும் வக்கிர மிருகங்களை கடக்கின்றன இந்த சமூகம்.

இங்கே ஆண்கள் அதிக தவறு என்றால் பெண்கள் சிலர் தேடியே புதையில் விழுகின்றனர். சிலருக்கு அது தூசி போல துடைத்துவிட்டு கடந்து விடுகின்றார்கள். சில பெண்களோ சமூகம் அப்படி மாறுகின்றது என்பதை அறிந்து அறியாமல் அகப்பட்டு பல நம்பிக்கை என்ற அடிப்படையில் தன்னை இழக்கின்றார். சிலர் வேண்டுமென்றே விழுவது தனி கதை..

பிரியாணிக்கு ஆசைப்பட்டு குழந்தைக்கு விஷம் வைக்கும் பெண்கள் தாய்மையின் புனிததிற்கு அவப்பெயர் கொடுத்தும் செல்வதுண்டு.

ஆனால் இப்படி தனக்கு பாடம் புகட்ட விதி வந்து விளயாடும் என்று சூரியபிரகாஷ் கொஞ்சம் கூட எண்ணிடவில்லை.

மகளிடம் என்ன என்ன வார்தைகள். இக்கணம் தான் மனித பிறவியே இல்லை என்று தோற்றுவித்தது மனம்.

தான் சரியான வழியில் நடைபயில்விக்கும் தானே இப்படி என்று கேவி கேவி அழுதார்.
என்ன அழுதாலும் நடந்தவைகளை மாற்ற இயலுமா? நடப்பவைகளை மாற்றிட முயலலாம்.

மகள் என்ன என்ன வார்த்தை சொன்னால் தன்னிடம் நின்று பேச கூட தந்தை தாயிற்கு நேரமில்லை.. என்றாளே.. அவளுக்கு அடிபட்டு ரத்தம் கட்டியிருக்க உணவு கூட ஊட்டாமல் சென்றேனே.. தானே அவளிடம் ஊட்டி விடும் மனைவி தான் வேண்டும் என்றது எண்ணி மீண்டும் அறைந்தார் கன்னத்தில்.

எங்கேனும் சென்று காரினை லாரியில் விட்டுவிடலாமா? என்று எண்ணி யோசிக்க அது சரி என்று கண் மண் தெரியாது ஒரு லாரியில் இடிக்க போனார் சூரியபிரகாஷ்.

                                                           அத்தியாயம்-5 📲

லாரி காரன் அச்சத்தில் நிறுத்திட சூரியபிரகாஷ் கார் மட்டும் மோதிய வேகத்தில் அவரின் கார் சுக்கலாக நசுங்கியது. அதிர்ஷ்டவசமாக அவர் கார் கதவை பூட்டாது இருந்தது அதில் கீழே விழுந்து இருந்தார்.

இருந்தும் அங்கங்கே சிராய்ப்பு இருக்க மருந்து கட்டி வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள். கார் நசுங்கியதால் போலீஸ் அது இது என்றாகி வண்டியை எடுத்து சென்றார்கள். இன்சுரன்ஸ் கேட்டு சென்றார்கள்.

ஸ்வேதா வந்ததும் போனை தூக்கி போட்டதோடு சரி அது தனித்தனியாக சென்று கிடந்தன. ஒரு மணி நேரம் கோவத்தில் அங்கும் இங்கும் நடந்தாள்.

கொஞ்ச நேரத்தில் தந்தை சூரியாவுக்கு அடிப்பட்டு வீட்டுக்கு வந்து விட்டதும் நீலாவும் அந்த நேரத்தில் இல்லாமல் போக தந்தை இப்படி அடிப்பட்டு வந்ததை காண இயலாது கண்ணீர் வடித்தாள். சுபாஷ் தான் சூரியா என்று தெரிந்தால் இவள் கண்ணீர் துளியும் வந்திருக்காது.

சூரியா தான் மகளை காண இயலாது முகத்தினை மறைக்க இமை மூடினார்.

தந்தை வலியில் துடிப்பதாக எண்ணி “அப்பா வலிக்குதா… கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கப்பா எல்லாம் சரியா ஆகிடும். இந்த விபத்தில் உயிர் பிழைத்தது அபூர்வம் என்று போலீஸ் சொல்லிட்டு போறாங்க… கடவுளுக்கு நன்றி சொல்லுங்க பா… இந்த விபத்தோட விட்டதே” என்று சொல்ல சூரியாவுக்கு ஸ்வேதா விபத்து என்று குறிப்பிட்டது தங்கள் சந்திக்காமல் இருந்தமையே… இப்ப மட்டும் சந்தித்து இருந்தால் உயிர் இருந்தும் அது செத்த பிணத்திற்கு சமமாக மதிக்கப்பட்டு இருப்பேன்.

நீலா வந்ததற்கு பிறகு சூர்யாவின் கவனிப்பு எல்லாம் அவர்கள் பார்க்க ஸ்வேதா போனை தான் வெறித்து வெறித்து பார்த்தாள். நான்கு நாள் போன் செய்யவில்லை. சுபாஷ் போன் வரும் வரும் என்று ஏமாந்தாள். இதில் தந்தை ஏதோ இன்னும் தன்னை தவிர்ப்பது கண்ணில் பட தாயிற்கு பணியே சரியாக இருந்தது.

ஸ்வேதாவுக்கு கண்ணீர் துளிகள் ஒன்று சேர்ந்தன. கோவம் கோவமாக வந்தது. இன்று வேறு ஞாயிறு ஆனதால் வீட்டிலே அறையில் கிடந்து பைத்தியம் போன்று கிடந்தாள்.

சுபாஷ் அழைப்பை எதிர் நோக்கி இருந்தவள் சட்டென கோவமாக போன் எடுத்து அழைப்பை தொடுக்க தேட நேற்று அவன் எண்ணை அழித்ததை யோசித்து அவளாக எண்ணை அழுத்தி காதில் வைத்தாள். போன் ஆன் ஆன அடுத்த கணம்

“எதுக்கு டா இப்படி பண்ற நீயா தெரியாத எனக்கு போன் செய்த பேசின.. நானும் தனிமையில் அப்பா அம்மா பேசலை என்ற சோகத்தில் உன்கிட்ட பேசினேன். நீ அன்பா கேர் எடுத்த, எனக்கு பிடித்தது உனக்கு பிடிக்கும் அது இது சொன்ன… என்னை மாதிரி மனைவி கிடைக்கலை என்று ஏகத்துக்கு கவலைப்பட்ட, நான் அப்ப கூட நட்பு எல்லையில் தானே பேசினேன். எதுக்கு ஆசையா சந்திப்போம் அது இது எல்லாம் சொல்லி என்னை சந்திக்கலை….சரி போன் பண்ணி எதுக்கு அன்னிக்கு வராம போன அதையாவது சொல்லலாம்ல இப்ப வரை போன் செய்யாம கஷ்டப்படுத்தற… இது வரை போன் சுவிட்ச் ஆப் பண்ணி வைத்திருக்க?” என்று அழுதாள்.

மறுபக்கமோ “ஏய் சீ… அழுகைய நிறுத்து. முதலில் தண்ணீர் குடி. மூச்சு விடாமா பேசிக்கிட்டு இருக்க” என்ற குரல் வித்தியாசமாக இருந்தது. இது சுபாஷ் குரல் அல்ல.. என்று “ஹ..ஹலோ… நீங்க யாரு…?” என்றாள்.

“ம்… இப்ப கேளு… நாலு பக்கத்துக்கு பேசிட்டு… ஆமா எந்த நம்பருக்கு கால் செய்த?” என்ற அதட்டலில் எண்ணை சொன்னாள்.

அவனோ “எல்லாம் சரி கடைசி நம்பர் மட்டும் மாத்தி டைப் பண்ணி இருக்க போல…”

“அய்யோ சாரி… நான்.. சு… “

“நீ ஒரு வெங்காயமும் சொல்ல வேணாம் எனக்கு புரிஞ்சுடுச்சு. என்ன பெயர் ஆளு எவன் என்று தெரியாம பேசிட்டு இருந்தியா? இப்ப அவன் பேசலை என்றதும் கவலைப்படற அதானே?” என்றான் அசால்டாக என்ன இவன் கூடவே இருந்து பார்த்தது போல சொல்றான் என்றவளோ மனவொட்டத்தில் மிதந்தாள்.

“ஒய் லவுட் ஸ்பீக்கர்… என்னடா கூட இருந்து பார்ப்பது போல சொல்றான் யோசிக்கிறீயா?” என்றான் புது எண்ணிற்கு உரியவன்.

“ம்…”

“என்ன காலேஜ் படிக்கிறீயா? அப்பா அம்மா கவனிக்கிறது இல்லை… ஹைபை பேமிலி… தனி ரூம் தந்து இருப்பாங்களே….” என்றான்.

ஸ்வேதா வாயை பிளந்தவாறு கேட்க “லவுட் ஸ்பீக்கர்… இங்க பாரு இப்படி எவனோ ஒருத்தனிடம் எல்லாம் பேசாதே. அப்பா அம்மா கண்டுக்காம இருந்தாலும் உனக்கு ஏதாவது என்றால் முதல் ஆளா கூட வருவாங்க…”

“இல்லை எனக்கு அடிப்பட்டப்ப அம்மா கண்டுகவே இல்லை.. அப்பா பக்கத்தில் உட்கார்ந்து பேச கூட மாட்டார். அதான்…”

“ஏய் அப்பா அம்மா கவனிக்கிறது கவனிக்காதது எப்படி இருந்தாலும் அவங்க உன் பெற்றோர் உன் நிர்வாணத்தை ஏலம் விட மாட்டாங்க. ஆனா போன்ல பேசறவன் உன் கழுத்து வரை இருக்கற போட்டோ கிடைத்தாலும் கூட விட மாட்டாங்க கேவலமான புகைப்படத்தில் வைச்சி பார்த்து ரசிப்பாங்க.. இப்ப இருக்கற டெக்னாலஜி உன் வாழ்க்கையை சீரழித்திடும். அதனால இனி தெரியாத எந்த நம்பர் என்றாலும் பேசாதே… புரியுதா” என்றான்.

“நானா பேசலை எங்க வீட்டில் என்னை பேசலை அந்த பாதிப்பில் பேசினேன். நீங்க என்ன என்னவென்னவோ பேசறீங்க” என்று தன்னை குற்றம் சுமத்திடுகின்றானே என்று பேசினாள்

“திரும்ப திரும்ப இதே சொல்லாதே கேர்ள்… ஏன் பேசலை என்று உன் அப்பா அம்மா கிட்ட கேளு உன்னை கண்டுக்கலையா நடு ஹாலில் உட்கார்ந்து அழு… இப்ப அழுதியே அப்படி. அவங்க எதுக்கு டி அழுது தொலைக்கற என்று கேட்கற வரை அழு… எப்படியும் ஒரு கட்டத்தில் கேப்பாங்க… லோடலோடனு உளறாமல் ஒழுங்கா தெளிவா உன் தனிமையை அன்பை புரிய வை கேட்பாங்க” என்றான்.

“ம்….”

“குட்… அப்பறம் எனக்கு தேங்க்ஸ் சொல்லனும் அது இதுனு எனக்கு ஆரம்பித்து விடாதே… உனக்கு என் நேம் தெரிய வேணாம் எனக்கு உன் நேம் தெரிய வேணாம்… உன்னை பொறுத்தவரை நானும் ‘ஒரு நம்பரின் தவறிய அழைப்பில்…’ வந்தவன் அவ்ளோ தான் நான் உன் நம்பர் பேசி முடித்ததும் டெலிட் பண்ணிடுவேன். நீயும் போனை ஒரு செங்கல் எடுத்து உடைச்சிடு… படிக்கிற காலம் ஒழுங்கா படி அது போதும். அதையும் மீறி அப்பா அம்மா பேசலை என்றால் புக் எடுத்து படி எத்தனை எழுத்தாளர்கள் எழுதி வைத்த நல்ல புத்தகம் படிக்க ஆள் இல்லாமல் இருக்கு… அது போதும் தனிமை என்னும் கொடுமையை விரட்ட” என்று சொல்ல

“ம்… முயற்சி பண்ணறேன் நிச்சயம் இனி போன எடுக்க பிடிக்கலை… தேங்க்ஸ்” என்று சொல்லவும் போன் கட் ஆகவும் சரியாக இருந்தது. ஸ்வேதா இம்முறை அது யார் திரும்ப பேசலாமா என்று எல்லாம் யோசிக்கவில்லை. சுபாஷ் கூட போன் வேண்டாம். முதலில் அவன் சொன்னது போல போனை உடைக்கனும் என்று யோசித்தவள் மீன் தொட்டியில் போட்டு வேடிக்கை பார்த்தாள்.

தண்ணீரில் அது அடியில் போக என்னவோ தன் எண்ணங்களும் அடியில் போனது போன்ற உணர்வில் இருந்தவள் நடு ஹாலில் அந்த நம்பர் சொன்னவன் சொல்லியது போல அழுதாள்.

இம்முறை சூரியா நீலாவிடம் “நீலா பாப்பா எதுக்கு அழுவுறா என்று பாருமா…” என்றார் அறைக்குள் இருந்தபடி

“பிரெண்ட்ஸ் கூட சண்டை இருக்கும்.. விடுங்க” என்ற நீலா சொல்ல

“இல்லை மா இருக்காது. நீ எதுக்கோ அன்பா கேளு… இனி குழந்தையை தனியா விடாதே நம்மிடம் பேச யோசிச்சு அவ கவலைகளை வேற தவறான நபரிடம் சொல்ல ஆரம்பிக்கலாம். நாம தானே அவளுக்கு எதுனாலும் சொல்லனும் போ என்னனு கேளு” என்றார் நீலா அறியாது கண்ணீர் துடைத்து.

நீலா கணவரின் கூற்றில் ஸ்வேதா அருகே செல்ல ஸ்வேதா அழுகைகான காரணமாக தான் தனிமையும் தங்கள் அன்பு இல்லை என்றும் வருத்தமாய் கொட்டினாள்.

நீலா அவளின் அழுகை புரிந்து ஆறுதலாக தலை கோதினார்.

“நாங்க அன்பு செலுத்தவே இல்லை என்று யார் சொன்னது டா. இது உன் வயசுல அப்படி தான் தோன்றும். எங்களுக்கு நீங்க படிக்க அடுத்த நிலைக்கு கொண்டு வர தேவையானவையை சம்பாதிக்க செய்யனும். அதோட வீட்லயே இருந்தா நல்லாவா இருக்கும். நாங்க உன்னை கண்டுக்காம இருக்கோம் என்றால் என் மகள் மகன் வளர்ந்து இருக்காங்க இனி சுயமா தெளிவா முடிவெடுத்து உங்களை நீங்க பார்த்துபீங்க என்ற நம்பிக்கை தான் மா…”

“இல்லை நீங்க அன்னிக்கு கை இரத்த கட்டு ஆச்சு நீங்க என்னை கவனிக்கவே இல்லை… கை வலி சாப்பிட கூட முடியலை நீங்க ஊட்டி விடலை என்று எப்படி ஏங்கினேன் தெரியுமா” என்றவளின் அழுகை அதிகமானது.

“அன்னிக்கு தான் டா ஒரு குழந்தை பாலியல் தொல்லை வந்து நம்ம மாதற்சங்கத்துல காப்பாத்தி எங்க அவளை தங்க வைக்க, அந்த குழந்தைக்கு கவுன்சலிங் கொடுக்க, அம்மாகிட்ட கருத்து கேட்டாங்க.

அதான் எனக்கு அந்த விஷயம் முக்கியமா பட்டது. அதனால தான் உனக்கு அப்படி அடிப்பட்டதை கூட நீ கவனித்து கொள்வ என்று விட்டுட்டேன் தப்பா…” என்று தாடை பற்றி கேட்க, ஸ்வேதா தன் தாய் இப்படி நடந்ததில் தவறில்லை என்று உதித்தது.

“சரி என் பட்டு குட்டி இனி இப்படி கஷ்டப்படறது இப்ப தானே புரியுது அம்மா இனி உன்கிட்ட இரவு மட்டும் ஊட்டி விடறேன். உனக்கு இது போல ஏதாவது ஷேர் பண்ண வேண்டும் என்றால் தினமும் பேசு சரியா” என்றதும் சூரியா நீலாவிடம் அருகே வந்தார். மனைவி மேல் அவர் கொண்ட தவறான கருத்தும் புரிந்து தன் தவறை உணர்ந்து நின்றார்.

“ஐ லவ் யூ மா லவ் யூ பா… ” என்று அணைத்து கட்டி கொள்ள சூரியா மகளின் நிலை இனி அவளுக்கு ஏற்படாமல் தானும் நீலாவிடம் அன்பை பகிரனும் வெளியே தேட கூடாது. நீலா செய்வது ஒன்றும் மாதற்சங்கம் என்று கேலி கொண்டாட்டம் என்று இல்லையே… இனி தான் தனி நபர் ஒழுக்கம் கையாள வேண்டும் என்று தனக்கு தானே கூறி திருந்தி கொண்டார்.

                                                            இரண்டு வருடம் பிறகு….

                                                                 அத்தியாயம்-6 📲

நீலா ஸ்வேதாவிற்கு இரவு உணவை ஊட்டி விட்டபடி “ஸ்வேதா இனி அம்மா ஊட்டி விடறது கஷ்டம் டா…” என்றதும் எதற்கு என்பது போல ஸ்வேதா பார்க்க சூரியபிரகாஷ் தான் அடுத்து பேசினார்

“உனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டோம் டா பேர் யஷ்வந்த்… இதோ அவரோடு டீடெய்ல்ஸ்… பாரு பிடிச்சதுனா சொல்லு.. மற்றதை பேசிடுவோம்” என்று கொடுக்க வாங்கினாள்.

அறைக்குள் வந்து கதவை சாற்றி புகைப்படம் எடுத்து ‘கடவுளே பிடிச்ச மாதிரி இருக்கனும்…’ என்று ஒரு சின்ன கோரிக்கை வைத்து கவரை திறக்க மயக்கும் வசீகர புன்னகையில் யஷ்வந்த் இருந்தான்.

பெயர்-யஷ்வந்த் வயது 27 லண்டனில் MBA படித்து முடித்து வந்தவன். சொந்தமாக பிசினஸ் அப்பா-அகரன் அம்மா-பவதாரணி ஒரே மைந்தன் என்று இருந்தது.

எப்பொழுதும் ஒருவரின் முகம் கூட தோற்றம் கூட அந்நபரின் குண அதிசயங்கள் சொல்லிடும். அப்படி பார்த்தால் யஷ்வந்த் கூர் கண்கள் அழுத்தகாரன் என்றது, தெளிவான புன்னகை குழப்பமில்லாதவன் என்றது, அவனுக்கு அடங்காத சிகை என் முடிவை நானே எடுப்பேன் என்பது போல தோன்றியது. சட்டென இதயத்தில் ஒட்டி கொண்டான்.

இந்த இரண்டு வருடத்தில் ஸ்வேதா நீலாவிடம் மாதற்சங்கத்தில் இணைந்து சில பல அனுபவங்களால் மனிதர்களை எடை போடும் விதம் அறிந்து கொண்டாள்.

மனிதரின் புன்னகை பேச்சில் கூட உண்மை சிரிப்பு, போலி பேச்சு கண்டு அறியும் சூட்சமம் அறிந்து இருந்தாள்.

இதோ தாய் தந்தை பேசி முடித்து யஷ்வந்த் கை பற்றி கொண்டாள்.

அவர்களுக்கான அறையில் அவனின் அருகே “சாரி… கல்யாணத்துக்கு முன்ன நாம பேசிக்க முடியலை இட்ஸ் எ ஆக்சிடெண்ட் நம்ம மேரேஜ்.

அப்பா அம்மாவுக்கு நான் லண்டன் லைப்ல இருந்திடுவேனு பயம் என்னை மேரேஜ் முடிச்சி ஒரு கால்கட்டு போட்டுட்டா இங்கேயே இருப்பேனு….”


“எனக்கும் அம்மா அப்பா அன்பு தவிர வேற கவலை வர கூடாது என்று அவர்களுக்கு பிறகு பார்த்துக்க உங்க தலையில் கட்டிட்டாங்க போல” என்றவள் சிரித்தாள்.

அச்சிரிப்பில் கரைந்தவன் அவள் இதழை கைகளால் தீண்டியவன் இதழாலும் தீண்ட அங்கே இனிய இல்லறத்தின் தொடக்கமாக ஆரம்பித்து தங்களை பற்றி விருப்பு வெறுப்பை பேசி கொண்டு தாம்பத்தியம் முடிந்தது.

அடுத்த நாள் யஷ்வந்த் போன் அடிக்க எழுந்தவள் எடுக்க தடுமாறினாள். யஷ்வந்த் பேசி முடித்து ஸ்வேதாவிடம்

“என்ன அப்படி பார்க்கற?”

“இல்லை எதுக்கு டூ நம்பர்?” என்றாள்.

“ஒன்னு பிரைவேசி மா… இன்னொன்று ஆபிஸ் எண் வேதா. இது என்னோட ஆபிஸ் எண் சேவ் பண்ணிக்கோ” என்று நீட்டினான். ஸ்வேதாவை வேதா என்று கொஞ்சியபடி.

ஸ்வேதா அந்த எண்ணை பார்த்தால் தனக்கு அறிவுரை வழங்கிய அதே எண். தனக்கு சரியான அறிவுரை சரியான தருணத்தில் வழங்கியவன்… தற்போது தன் கணவனாக… என்றவள் பேச்சற்ற திசையில் பயணித்தது.

“என் நம்பரை சேவ் பண்ணிட்டீயா வேதா?” என்று கேட்க “இரண்டு வருஷம் முன்ன இந்த நம்பருக்கு நான் போன் செய்தேன். அப்பா அம்மா பேசலை நான் டென்ஷனா போன் பண்ணி பேசி ஹர்ட் ஆகி… ஆன என் பெயர் கூட சொல்லலை அதே போல இந்த எண்ணில் இருந்த எண்ணும் பெயர் சொல்லலை…” என்று ஸ்வேதா யஷ்வந்த் என்ன எண்ணுவானோ என்று அவன் கண்களை சந்திக்க தயங்கினாள்.

“ஹேய்… லவுட் ஸ்பீக்கர்… நீ தானா?” என்று புன்னகையுடன் நினைவு வைத்து கேட்டான்.

ஆம் என்றவள் தலை அசைத்து “யஷ் … அது என்னோட மெர்சூர்ட் இல்லாதப்ப…” என்று அவன் தவறாக தன்னை எண்ணிடுவானோ என பயந்தாள்.

“ஹே கூல்… புரியுது. நிறைய வீட்ல இப்படி கேர்ஸ் பேரண்ட்ஸ்ஸ மிஸ்டேக்கா நினைச்சிடறாங்க…

மே பீ சில பேரண்ட்ஸ் இப்படி தான் இருக்காங்க அதனால தான் பெண்கள் மாறறாங்க. சரியான நேரத்துக்கு அவங்களுக்கு அட்வைஸ் தர இல்லாத போது தவறான வழியில் போயிடறாங்க. தேங் காட் என் வேதாக்கு நானே அட்வைஸ் பண்ணி இருக்கேன்” என்று மூக்கை ஆட்டினான் யஷ்வந்த்.

இனி வேதா வாழ்வில் யஷ் பார்வையில் பொருள் அறிந்து தனிமை அகற்றுவான் அதில் ஐயமில்லை.

📲 ——சுபம்—–📲

– பிரவீணா தங்கராஜ்

ஹாய்

கதையில் நிறைய இன்னும் ஆழமா எழுதலாம் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இலை மறையாக சொன்னாலும் புரிந்து இருக்கும் என்று நம்பறேன்.

இந்த உலகம் போற வேகம் வீட்டில் இருந்தாலும் விலகி தான் இருக்கு உறவுகள். அதனால குழந்தைகள் பருவ வயது கடக்கும் பறவைகள் தங்கள் தனிமைகாக போலியாக பேசறவங்களிடம் எல்லாம் மனதை தொலைக்கறாங்க… பெண்கள் கற்பையும் மானத்தையும் தான்.

குழந்தைகள் கூட இப்படி அன்பை தேடி தான் அடுத்தவரின் பாலியல் வன்முறைக்கு காரணம் ஆகுது. பெற்றோர்கள் சிலர் கவனிக்காம இருந்தாலும் அவர்கள் நம்ம ஆசை கனவு தேவை நிவர்த்தி செய்ய தான். அவர்கள் உங்களை கூட மறந்து இருக்கலாம். எந்த பெற்றோரும் உங்களுக்கு ஒன்று என்றால் துடிக்க தான் செய்வாங்க அது நம்மிடம் காட்ட மாட்டாங்க அதான் உண்மை.

2 thoughts on “ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்…”

  1. Kalidevi

    Very good story with a nice information. For all parents and children . Niraya prachanai pasangaluku vara karanam ithu tha snbu kaga engi atha veliya theda aarambikuranga illa thana kedaikuthu stha ethukura situation la thappu nadakuthu nu puriura mari solringa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *