Skip to content
Home » கடல் விடு தூது – 1

கடல் விடு தூது – 1

முழுதும் இருள் சூழாத, முன் மாலை நேரம். 

‘அசந்தால் உன்னை ஆட்கொள்வேன்’ என மிரட்டும் சென்னை கடலையும், கடற்கரையையும் பார்த்து, பழகி வளர்ந்த நித்திலாவிற்கு, அழகான இந்த அந்தமான் கடலின் அமைதி மிகவும் பிடித்திருந்தது. 

வெளிர்‌ நீல வண்ணத்தில், உள்ளிருப்பதெல்லாம், பளீர் என வெளியே தெரியும் இந்தக் கடலில் கால் நனைக்காமல் இருப்பது பாவமில்லையா என யோசித்தது அவளின் மனம். 

அந்த ரெசார்ட்டின் ப்ரைவேட் பீச் அது. கடற்கரையிலேயே குட்டி‌க் குட்டியாக கூரைகள் அமைத்து, அதற்குள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு ஏதுவாக, மேஜைகளும், நாற்காலிகளும் இடப்பட்டிருந்தன. 

அந்த ரெசார்ட்டில் தங்கியிருந்த ஒரு விருந்தாளியின் அழைப்பின் பெயரில் அங்கு வந்திருந்தாள் நித்திலா.

அவள் வந்து பத்து நிமிடங்கள் கடந்திருந்தது. அவளை அழைத்தவர் வரும் அறிகுறியே தெரியவில்லை. அவரின் உதவியாளருக்கு இங்கு வந்ததுமே அழைப்பு விடுத்திருந்தாள். “சார் கிட்ட சொல்றேன், மேடம்” என்றானே‌ தவிர, அவனுடைய ‘சார்’ எப்போது வருவார் என்பதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. 

வேறு எங்காவது என்றால், ஒரு மணி நேரம் கூட காத்திருக்கக்கூடிய பொறுமைசாளிக்கு, கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் அழகுக்கடல் ஆசைகாட்டவும், பொறுமை பறிப்போனது. 

கைப்பையை மேஜையின் மீதும், காலணிகளை மேஜையின் கீழும் விட்டுவிட்டு, கடலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். 

கடலில் கால் வைத்ததும் தான், மனதுக்கு திருப்தி கிடைத்தது. எத்தனை நேரம், அலைகளில்லா அந்தக் கடலில் நின்றாள் என்று அவளும் அறியாள். 

“சாரி மிஸ்.நித்திலா. ரொம்ப நேரமா வெய்ட் பண்றீங்கல்ல..!.” என்று ஒரு ஆணின் குரல் வெகு சமீபத்தில் கேட்டது அவளுக்கு. 

அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, கால்கள் நனையாதபடி, கரையில், ஆனால், கடலுக்கு வெகு அருகில் நின்றிருந்தான் அவன்.

முழு ஃபார்மல் உடையில் இருந்தான். சாம்பல் நிற பேண்ட், பால் பிங்க் நிறத்தில் சட்டையும் அணிந்து, கருப்பு நிற ஃபாரமல் ஷூ அணிந்திருந்தான். 

அலையலையாய் கேசமும், ட்ரிம் செய்த தாடியும், ஃபிட்டான உடல் வாகுமாக, கண்ணுக்கு நிறைவாய் இருந்தான். அழகுக்கு அழகு சேர்ப்பது போல், அளவாய் சிரிக்க வேறு செய்தான்.

“மிஸ்டர். மிஷ்ரா?” என்றாள் நித்திலா, குரலில் கொஞ்சம் சந்தேகத்துடன். 

“அதை ஏன் இவ்வளவு சந்தேகமா கேக்கறீங்க? ஏன்? நான் மிஷ்ராவா இருக்கக் கூடாதா?” என்று அவன் கேட்க, “சாரி சாரி. அப்படியில்ல. நான் வேற மாதிரி கற்பனைப் பண்ணியிருந்தேன்” என்றாள், அவள் தலையில் கை வைத்துக்கொண்டு. 

“ஏன்? எப்படிக் கற்பனைப் பண்ணீங்க? பை த வே! இப்படி நீங்க கடல்லேயும், நான் கரையிலேயும் நின்னு தான் பேசப் போறோமா? இல்ல, நான் தண்ணில இறங்கணுமா?” என்று அடுத்த அடி எடுத்து வைப்பது போல் நடிக்க, “சாரி சாரி. எனக்குக் கடல்ன்னா ரொம்ப பிடிக்கும். அதான் கண்ட்ரோல் பண்ண முடியாம, உள்ள இறங்கிட்டேன்” என்று சொல்லிக்கொண்டே கரையேறினாள். 

“எத்தனை சாரி? மரைன் பயாலஜி படிச்ச நித்திலாக்கு கடல் பிடிக்கலன்னு சொன்னா தான் எனக்கு ஆச்சர்யம்” என்று அவன் சொல்ல சிரித்தாள் அவள்.

இருவருமாக, நித்திலா முன்பு அமர்ந்திருந்த அந்தக் குடிலை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

“சரி சொல்லுங்க. உங்க கற்பனைல மிஸ்டர். மிஷ்ரா எப்படி இருந்தாரு?” என்று அவன் கேட்க, “ஐயோ. அதை இன்னும் விடலையா நீங்க. உங்க ஃபேஸ் ரொம்ப சவுத் இந்தியன் சாயல்ல இருக்கு. அதான் கொஞ்சம் நம்ப முடியாம கேட்டேன். அதுவும், இவ்வளவு தெளிவா தமிழ் பேசுறப்போ, நம்பவே முடியல” என்றாள் நித்திலா.

சிரித்தவன், “நான் கூடத் தான், கவர்ன்மென்ட் ஆஃபீசர்ன்னா, ஒரு நாற்பது வயசுல எதிர்ப்பார்த்தேன். அதுக்காக, நீங்க தான் நித்திலான்னு நம்பாமலா  இருக்கேன்” என்றான். அதற்கு அவள் சிரித்ததோடு நிறுத்திக்கொண்டாள்.

இவர்கள் அந்தக் குடிலுக்குள் வந்து அமர்ந்து, இரண்டு காஃபி ஆர்டர் செய்யவும், கொஞ்சமாக இருட்டி இருந்தது.

அப்போது, தூரத்தில் ஒரு முப்பத்தி ஐந்து-நாற்பது வயதுமிக்க ஒருவர், நடந்து சென்றார். கொஞ்சம் பூசினார் போன்ற உடல்வாகு, வெள்ளை வெளேரென நிறம், பார்த்தாலே வடஇந்தியர் என்று தெரிந்தது. ட்ராக்-பேண்ட் டீ-ஷர்ட்டில் இருந்தார்.  “அதோ பாருங்க. மிஸ்டர். மிஸ்ரான்னு பேரை கேட்டதும் அவரை மாதிரி தான் இருப்பாங்கன்னு கற்பனைப் பண்ணேன்” என்று நித்திலா சொல்ல, அவன் சிரித்தான்.

“நீங்க ரொம்ப ஷார்ப்” என்று அவன் சொல்ல, “தப்பா கற்பனைப் பண்ணியிருக்கேன்’ன்னு கலாய்க்கறீங்கல்ல” என்றாள். “இல்லை. உண்மையாவே தான் சொல்றேன்” என்று சொன்னவன், சட்டென்று எழுந்து நின்றான்.

எதற்காக நிற்கிறான் என்று புரியாத நித்திலா, அவன் பார்க்கும் திசையில் பார்க்க, அந்த வடஇந்தியர், இவர்களை நோக்கித்  தான் வந்துக்கொண்டிருந்தார். வந்தவர், “சாரி மிஸ். நித்திலா. ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வச்சிட்டேன்” என்று ஆங்கிலத்தில் சொன்னார், முன்பு அந்த இளைஞன் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவருக்குப் பின்னால் அவன் நின்றுக்கொண்டான்.

தன்னைத்தானே ‘மிஷ்ரா’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர், அவளை எதற்காக அழைத்தாரோ அதைப் பற்றிப் பேசத்தொடங்கினார். அவரருகில் நின்றிருந்தவனை முடிந்தமட்டும் முறைத்துவிட்டு, மிஸ்ரா சொல்வதை கவனிக்கத் தொடங்கினாள்.

சிறியதும், மிகச் சிறியதுமாக நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்டது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள். அதில் வெகு சில தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ, பல தீவுகள் காடும், மலையுமாக இன்னும் வேற்று மனிதர்களின் கால் படாத நிலங்களாகவே இருந்து வருகின்றன. அதில் ‘எமரால்ட் ஐலேண்ட்’ என்ற சிறு தீவை தனக்குச் சொந்தமாக்கிக்கொண்ட, தொழிலதிபர் மிஷ்ராவுக்கு அதில் புதுவிதமான ஒரு ‘வாட்டர் தீம் பார்க்’ கட்ட வேண்டும் என்ற எண்ணம். அந்தமானுக்கு வரும் சுற்றுலா பயணிகளை இந்த வாட்டர் தீம் பார்க் நிச்சயம் கவரும் என்று யோசித்திருந்தார்.

அதற்கென, அந்தமான் அரசிடம் அனுமதி வாங்கச் சென்ற போது தான் சிக்கல் பிறந்தது. எமரால்ட் தீவுக்கு கொஞ்சம் தொலைவில் இருக்கும், க்ரிஸ்டல் தீவில் வெளிவுலகத்துடன் இன்னமும் பழகாத பழங்குடி இன மக்கள் வாழ்வதால் அனுமதி தர யோசித்தனர். இரண்டு தீவுகளுக்கும் இருக்கும் தொலைவைக் காரணம் காட்டி, எப்படி எப்படியோ அரசு அதிகாரிகளைச் சம்மதிக்க வைத்தார். எல்லாம் முடிந்து, இறுதியாக ‘கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்புத் துறை’யிடம் அனுமதி வாங்க வேண்டியிருந்தது.

பல அரியவகை மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களைக் கொண்டது அந்தமான். அதுவும், எமரால்ட் தீவு இருக்கும் பகுதி, இதுவரை அதிக மனித நடமாட்டம் இல்லாத பகுதி. இப்பொழுது, பொழுதுபோக்கு பூங்கா ஒன்று கட்டினால், மனித நடமாட்டம் நிச்சயம் அதிகம் இருக்கும். அதனால், இங்கு இருக்கும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், அழிவுக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதால், ‘தடையில்லா சான்றிதழ்’ வாங்கவேண்டிய கட்டாயம்.

இதைப்பற்றி ஆராய்ச்சி செய்து, சான்றிதழ் வழங்கும் பணியில் புதிதாக நியமிக்கப்பட்டவள் தான் நித்திலா. இவளுக்கு முன்பு, இதே பணியில் இருந்தவன், ஆராய்ச்சியின் நடுவில் ஆள் சென்ற இடம் தெரியாமல் தொலைந்து விட்டான். கடலோடு சென்றுவிட்டான் என்று தான் பலர் சொல்வதாக இவளிடம் சொன்னார் மிஸ்டர். மிஸ்ரா.

“ஏற்கனவே, நிறைய தடங்கல் வந்து, என்னோட இந்த ட்ரீம் ப்ராஜெக்ட் ரொம்ப நாள் தள்ளிப் போச்சு. அதனால, நித்திலா ஜீ… நீங்க உங்க ஆராய்ச்சியை சீக்கிரம் முடிச்சு, எங்களுக்குச் சாதகமா சான்றிதழ் வழங்குவீங்கன்னு நம்புறோம்” என்று அவர் சொன்ன தொனியில் மிரட்டல் இருந்ததா என்பது சந்தேகம். ஆனால் பணிவு இல்லை என்பது உறுதி.

அப்படியும் இப்படியுமாக நித்திலா தலையை அசைத்து வைக்க, “உங்களுக்கு எந்த ஹெல்ப் வேணும்ன்னாலும், இதோ எங்க கம்பெனி எம்ப்ளாயி தீரன் கிட்ட கேளுங்க. தீரன், மேடம்க்கு என்ன கேட்கறாங்களோ செஞ்சு குடு” என்று மிஸ்ரா சொல்லவும், அங்கு இருந்த இருவரும் தலையசைத்து வைத்தனர்.

“ஓகே” என்றவர், எழுந்து அவ்விடம் விட்டு சென்றார்.

மீண்டும் நித்திலாவுக்கு முன் அமர்ந்தான் தீரன்.

“நான் சொன்னேன்ல்ல மேடம், நீங்க ஷார்ப்ன்னு” என்றான் அவளிடம்.

அதுவரை ஏதேதோ யோசனைகளில் இருந்தவளுக்கு, இவன் இப்படிச் சொல்லவும் தான், வந்ததும் வராததுமாக இவன் தன்னை ஏமாற்றியது நினைவுக்கு வந்தது. “யூ ச்சீட்” என்றவளுக்கு, கோவத்திற்கு மாறாக சிரிப்பு வந்து தொலைந்தது. காரணம், எதிரில் அமர்ந்திருந்தவனின் அழகுப் புன்னகை.

யாரிடமும் எளிதில் பழகாத, நம்பாத, அதிகம் பேசாத குணம் நித்திலாவுடையது. ஆனால், தீரன் முகத்திலிருந்த அமைதியும், புன்னகையும் என்னவோ, அவனை ஆபத்தில்லாதவனாகப் பார்க்க வைத்தது.

“உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா?” என்று நித்திலா கேட்க, “நீங்க என்னவா இருந்தாலும் என்கிட்ட தான் கேக்கணும்ன்னு இப்போ தான என் பாஸ் சொல்லிட்டுப் போனாரு” என்றான் தீரன்.

“ஆமா ஆமா. அப்போ, எனக்கு ஒன்னு சொல்லுங்க. இதுக்கு முன்னாடி என்னோட போஸ்ட்ல வேற ஒருத்தர் இருந்தாரு தான? அவருக்கு என்ன ஆச்சு? நெஜமாவே கடலோட போயிட்டாரா?” என்று கேட்க, ஒரு நொடி தீரன் முகத்தில் எப்போதும் ஒட்டியிருக்கும் புன்னகை மறைந்ததோ.

“அவர் பேர் ஆராவமுதன். அவரும்  அவரோட டீமும் தான், எமரால்ட் ஐலேண்ட்ல கிட்டத்தட்ட ஒரு மாசம் தங்கியிருந்தாங்க. அதுக்கருகில் கடல்ல வாழுற கடல்வாழ் உயிரினங்களைப் பத்தி ஆராய்ச்சி செய்யுறதுக்கு. அவங்களுக்குத் தேவையான எல்லா வசதியும் எங்க பாஸ் செய்து குடுத்திருந்தாரு. அமுதனுக்கு கடல்ன்னா அவ்வளவு பிரியம். அவர் கிட்ட பேச்சுக் குடுத்ததுக்கு அப்புறம் தான், என் கண்ணுக்கு கடல் ரொம்ப அழகா தெரிய தொடங்குச்சுன்னே சொல்லலாம். தோணும்போதெல்லாம் ‘சீ – காயாகிங்’ செய்யுற ஆளு. ஒரு நாள் அப்படிப் போனவர், திரும்ப வரலைன்னு அவரோட டீம்-மேட்ஸ்  சொல்றாங்க” என்றான் தீரன். எப்பொழுதும் முகத்தில் இயற்கையாய் இருக்கும் புன்னகையை வலுக்கட்டாயமாக இழுத்து ஒட்டி வைத்திருந்தான்.

“ஓஹ்….” என்று நித்திலா சொல்ல, சில நொடிகள் அமைதியின் ஆட்சியே.

“சரி. நான், நாளைக்குத் தான் ஆஃபீஸ்லேயே சார்ஜ் எடுக்கறேன். நான் ஆஃபீஸ் போயிட்டு, இதுக்கு முன்னாடி இந்த ப்ராஜெக்ட்ல ஒர்க் பண்ணவங்களோட பேசிட்டு, அப்பறம் சொல்றேன். அந்த தீம் பார்க்குக்கான அப்ரூவல் ப்ராஸஸ் என்ன நிலைல இருக்கு. இன்னும் என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்குன்னு” என்று அவள் சொல்லிவிட்டு அந்த ரெசார்ட்டை விட்டுக் கிளம்ப ஆயத்தமானாள்.

வாசல் வரை அவளுடன் நடந்தான் தீரன். “எங்க தங்கியிருக்கீங்க?” என்க, “ஆஃபிஸ் குவாட்டர்ஸ்” என்று பதில் வந்தது அவளிடமிருந்து.

அவள் டேக்ஸி ஏறும் வரை காத்திருந்தவன், “எந்த உதவி வேணும்னாலும், எனக்கு கால் பண்ணுங்க” என்று அவன் கார்டை நீட்டினான்.

“நிச்சயமா. இந்த நொடி, இந்த போர்ட்-ப்ளேர் தீவுல… ஏன், இந்த மொத்த அந்தமான்லயும், நான் அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேசுன ஒரே ஆள் நீங்க தான். உங்களுக்குத் தான் கால் பண்ணுவேன்” என்று அவள் சொன்னதும், வண்டி கிளம்பியது.

அந்த வாகனம் கண்ணை விட்டு மறையும் வரைக் காத்திருந்தவன், ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு உள்ளே சென்றான்.

** ** ** ** ** **

“நான் அந்தமான் வந்ததுல இருந்து, நிறைய பேர சந்திச்சிருக்கேன். ஆனா, நண்பன்’ன்னு சொல்லிக்கற அளவுக்கு யார் கூடவும் நெருக்கமில்ல. ஆனா, இப்போ எனக்கு ஒரு புதிய நண்பன் கிடைச்சிருக்கான். தீரன்! வேலை விஷயமா தான் அறிமுகம் என்றாலும், வேலையைத் தாண்டியும் மணிக்கணக்கா மற்ற விஷயங்களைப் பற்றியும் பேசிய நினைவுகள் எல்லாம் மறக்க முடியாதது!

இந்த போர்ட்-ப்ளேர் தீவுல. ஏன், இந்த மொத்த அந்தமான்லயுமே, எனக்கு இருக்க ஒரே நண்பன் அவன் தான்.”

– ஆரா

** ** ** ** ** **

7 thoughts on “கடல் விடு தூது – 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *