Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-7

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-7

அத்தியாயம்-7

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  அமுல்யாவை துகிரா தேடி வந்து இன்றோடு ஒரு வாரம் கடந்திருந்தது.

   பிரதன்யாவோடா துகிரா அமுல்யா நன்றாக பழகினாள். துகிராவை விட சின்ன பெண்ணென்ற காரணமாக இருக்கலாம். துகிராவை கூட அண்ணி என்று தான் பிரதன்யா அழைத்தாள். அப்படி கூப்பிடாதே என்று மறுத்ததிற்கு, பைரவியோ “துர்காவோட தங்கச்சி தானம்மா நீ. உறவுமுறையில் அண்ணினு கூப்பிடலாம். ரொம்ப யோசிக்காதம்மா” என்று சாமர்த்தியமாக கூறிட, அப்பொழுதிலிருந்து பிரதன்யா துகிராவை அண்ணி என்றே கூப்பிடுவது. பைரவியின் பேச்சால் ரிஷி கூட தட்டு தடுமாறி அண்ணி அமுல்யா என்ன பண்ணறா. இது அமுல்யாவுக்கு வாங்கியது’ என்று அளவோடு பேசினான்.
  பைரவி வந்தால் வயதுக்கு மரியாதை தந்து பேசுவாள். பெரிதாக எல்லை தாண்டி பழக மாட்டாள்.
   குழந்தையிடம் மட்டும் “அமுல்யாவோட பாட்டி” என்று பதிய வைக்க, பாட்டியோடு குழந்தை ஓரளவு ஒட்டுதலானாள்.

   ரிஷி குழந்தையிடம் பேச வந்தால், ஏதேனும் கொடுத்தால் வாங்கிக்கொள் என்று இமை மூடி ஒப்புதல் தந்தாள் அமுல்யா வாங்கிக்கொண்டு நன்றி நவில்வாள்.

  இஷான் அந்த பக்கம் வந்தாலே துகிரா அவ்விடத்திலேயே இல்லாதவளாக நடந்துக்கொள்வாள்.
முதல் இரண்டு நாள் இஷான் அறையிலேயே தங்கியவளை, “முதல்ல அவ என்‌ ரூம்ல இருக்கக்கூடாது” என்றதும், ரோஷப்பட்டு, ”இவர் ரூம்னு தெரிந்தா முதல்லயே இங்க படுத்திருக்க மாட்டேன். சாரி இனி இந்த அறையில படுக்கவே மாட்டேன்.” என்று முரண்டு பிடிக்க,  என்ன முயன்றும் அதன் பிறகு வராமல் போக அமுல்யாவுமே துகிரா பின்னால் படுக்க செல்ல, “பாவி.. என் குழந்தையை முந்தானையிலேயே முடிச்சிட்டு போறா’ என்று கடுப்படைந்தான்.‌

  மாடியில் வேறோரு அறையை தயார் செய்து துகிராவுக்கு தர, அங்கே துகிராவும் அமுல்யாவும் தங்கினார்கள்.
தூங்கறதுக்கு மட்டும் தான் என் குழந்தை இங்க வரணும். மத்த நேரம் என் கூட, என் அம்மா கூட, என் தம்பி, தங்கை கூட தான் இருக்கணும்” என்று விதிமுறை இயற்றினான்.‌

  துகிராவோ காது கேளாதவள் போல நடந்துக்கொண்டாள். ஆனால் இவ்வீட்டிற்கே வந்த நோக்கமே அமுல்யாவை அவளது குடும்பத்தில் சேர்ககவும் தானே, தன்னை இருக்க கூறியது.
  அதனால் பொறுத்துக் கொண்டாள். அப்பொழுது கூட “அமுல்யாவோடு நான் பேசணும் நீ இங்கிருந்து போ” என்று கத்துவான். துகிரா அதனால் இஷான் வரும் பொழுது நைஸாக நழுவிக்கொள்ள, அமுல்யாவோ இஷானை கண்டாலே, துகிராவை தேடி ஓடிவந்து அவள் கையை பற்றி பின்னால் ஒளிந்துக்கொள்வாள்.
  இஷான் மட்டுமே அமுல்யாவிடம் நெருங்கி பழகும் வாய்ப்பை இழந்தவனாக இருக்க இஷானுக்கு அதற்கெல்லாம் கோபம் துகிரா மீதே வளர்ந்தது.

  அன்று அப்படி தான் அமுல்யா துகிராவுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் அமுல்யா பார்பி டால்லோடு கிச்சன் செட் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். துகிரா அந்த அறையிலிருந்த பால்கனியில் அவளது துணியை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

  எப்பொழுதும் தான் வந்ததும் துகிரா வெளியேற முற்படுவாள். இன்று அறையில் அவளில்லை என்றதும், குழந்தை மட்டும் விளையாடுவதாக எண்ணிக்கொண்டான்.

  கதவை அடைத்து எப்படியாவது அப்பா என்று புரிய வைக்க முனைந்திட சத்தமில்லாமல் அமுல்யா உயரத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரவழைத்த பெரிய பொம்மையை வாங்கி வந்திருந்தான்.

  அமுல்யாவோ, ”நான் குக்கீஸ் தரவா பார்பி” என்று கிச்சன் செட்டிலிருந்த பேன் வடிவத்தில் குக்கீஸ் போன்ற பொம்மையை வைத்து பார்மி பொம்மையருகே வைத்தாள்.

  “அம்மா… உனக்கும் குக்கீ” என்று திரும்ப, அங்கே இஷானை கண்ட குழந்தையோ, “குக்..கீ..கீ..” என்று துகிராவை தேடியது. கதவை மூடியிருக்க, ”ம…மம.. ம்மி.” என்று பயத்தில் சத்தமில்லாமல் கத்தவும் அஞ்சினாள்.

  “ஏன் அம்மு என்னை பார்த்து பயப்படற. நான் உன் அப்பா. உனக்கு தெரிந்தும் ஏன் என்னை நெருங்க விடமாட்டேங்கற.? உன் பிரெண்ட் கிஷோருக்கு எல்லாம் அப்பா இருக்காங்க தானே? நான் அம்முவோட அப்பானு சொல்லியும் ஏன் பழக தயங்கற?” என்று மண்டியிட்டு கேட்டான்.

  “நீ…நீங்க என் அம்மாவை கழுத்தை இப்படி நெறிக்க ட்ரை பண்ணினிங்க. என் அம்மா கன்னத்துல அடிச்சிங்க. நீங்க பேட் பாய்” என்று பயந்தாலும் சொல்லிவிட்டாள்‌.

  “யார் பேட் பாய். அம்மு… அவ உன் அம்மாவே இல்லை.” என்று அடக்கப்பட்டு கூறினாள்.
 
  “இல்லை… அவங்க தான் என் அம்மா. நீங்க என் அப்பா இல்லை. துகிரா அம்மா சார்லஸ் அப்பாவை தான் மேரேஜ் பண்ணப் போறாங்க. அவர் தான் என் அப்பா” என்று கூற, “அம்மு.. உன் அப்பா நான். கண்டவனை அப்பா சொல்லி என் கோபத்தை தூண்டாத” என்று மகள் தன்னை தாண்டி எவனையோ சொல்வதை தாங்க இயலாதவனாய் கத்தினான்.
  துகிராவோ துணியை உதறியவளுக்கு இஷான் குரல் கேட்க, “அவர் தான் என் அப்பா” என்று  குழந்தையும் இவனை போலவே கத்த, “என்ன சொன்ன” என்று கையை ஓங்கினான் இஷான், ஆனால் அடிக்கவில்லை. அவனை கட்டுப்படுத்திக் கொண்டான்.
  அமுல்யாவோ ஒரு நொடியில் வேகமாய் கதவருகே ஓடிசென்று வெளியேற, துகிராவோ “என்ன பண்ணறிங்க? என் குழந்தையை கை நீட்டற வேலையெல்லாம் வச்சிக்காதிங்க” என்று பால்கனியில் இருந்து வேகமாக வர, இஷான் இருந்த கோபத்தில், துகிரா முடியை கொத்தாக பிடித்து, “என்னடி..‌. வார்த்தைக்கு வார்த்தை என் குழந்தை என் குழந்தைன்னு கத்தற. என்னோட படுத்து பிள்ளையை பெத்தியா.. இல்லைல… பிறகு ஏன் அந்த வார்த்தை சொல்லற?

அம்மு என் குழந்தை. எனக்கும் துர்காவுக்கும் பிறந்த குழந்தை. மரியாதையா அவளிடம் நான் அப்பானு சொல்லி மனசுல பதியவை. இல்லை… உன்னை கொண்று புதைச்சிடுவேன்.” என்று கூற வலியில துகிரா முகம் சுணங்கினாள்.

“எவன் எவனையோ அப்பானு சொல்லியதை முதல்ல மாத்து. இந்த வீட்ல அவளுக்கு முக்கியமான உறவுன்னா அது நான் தான்னு சொல்லு‌‌. என் ஆபிஸுக்கு கூட போகாம என் குழந்தை என்னை அன்பா பார்த்து பேசவும் பழகவும் நாயா பின்னாடி சுத்திட்டு இருக்கேன்‌.
   எத்தனை நாள் இந்த வீட்ல இருந்து ஒப்பேத்த போற. எனக்கு என் குழந்தையை நெருங்க விடுடி” என்று கர்ஜிக்க, “ப்ளிஸ் கையை எடுங்க. வலிக்கு… நான் என்ன செய்தேன். அவ பார்க்கறப்ப எல்லாம் நீங்க தவறானவரா மனதில் பதியும் போது உங்க பெயரை சொன்னாலே அவ காது கொடுத்து கேட்கறதில்லை.
   ப்ளிஸ் முதல் முறை என்னிடம் தவறா மிஸ்பிஹேவ் முத்தமிட்டது நீங்க. அன்னைக்கு அடிச்சிங்க இப்பவும் என்னை துன்புறுத்தறிங்க ” என்று இஷானின் கைகளிலிருந்து கூந்தலை விடுபட வைத்து தள்ளி வர போராடினாள்.
  “எனக்கு அதெல்லாம் தெரியாது. அன்னிக்கு… துர்கானு நினைச்சி கிஸ் பண்ணினேன். இப்ப அதையே சாக்கா வச்சி என் வீட்டை சுத்தறியா? பணம் ஏதாவது மொத்தமா வேண்டுமின்னா வாங்கிட்டு சீக்கிரம் போய் தொலை. பட் என் குழந்தையை குயிக்கா என்னிடம் சேர்க்கற வழியை பாரு.” என்று கட்டளையிட, “பாட்டி இவர் தான் என் அப்பா” என்ற அமுல்யாவின் துள்ளலான குரல் ஹாலில் கேட்டது.

  இஷான் கைகள் தளர, துகிராவோ, சிற்சில யோசனைக்குள் சென்று வேகமாய் வெளியே வந்தாள்.

  அங்கே அவள் நினைத்தது போலவே மெர்ஸி, சார்லஸ் வந்திருந்தனர்.

   “மெர்ஸி” என்று கட்டிக்கொள்ள, “ஏய் என்னாச்சுப்பா தலைமுடி எல்லாம் ஒரு மாதிரி இருக்கு.” என்று கவனித்தாள் தோழி.
  இஷான் கைவண்ணத்தில் அழகாக வாறிய தலை களைந்து யாரோ கொடுமைப்படுத்திய விதமாக காட்சியளித்தது.

  “அது துணி காயப்போட்டேன். க்ளிப்ல முடி மாட்டிக்கிடுச்சு” என்று சமாளித்தாள் நாயகி.

  “துகிரா.. டிரஸை எல்லாம் கொண்டு வர முடியுமானு கேட்டியே. இதோ” என்று பெட்டியை காட்ட, தேங்க்ஸ்‌ மெர்ஸி” என்று பெட்டியை திறக்க முயன்றாள்.

  “இங்க ஒருவார்த்தை சொல்லியிருந்தா துணிகடையை வீட்டுக்கே வரவழைச்சியிருப்பேனேம்மா. ஏன் உன் பிரெண்டுக்கு வேலை வச்சிட்ட அதோட குழந்தை அப்பானு தப்பா சொல்லுதே.” என்று பைரவி மிக நாசூக்காய் உன் பிரெண்ட் எதுக்கு இங்க அழைத்த? அதுவும் குழந்தை வேறு இவனை அப்பா என்கின்றாளே’ என்ற கேள்வி மறைமுகமாக பொடி வைத்து பேசினார்.‌

‌ “இங்க துணி கொடுக்குற சாக்கில் அவ காதலனை பார்க்க நினைச்சிருப்பா அம்மா” என்று இஷான் துகிராவை கேவலப்படுத்தும் நோக்கத்தில் பேசினான்.‌

  “இங்க பாருங்க.. என்னிடம் தப்பாவே பேசறிங்க. தப்பாவே நடக்கறிங்க. நான் மெர்ஸியை தான் இதெல்லாம்  கொண்டு வர சொன்னேன். சார்லஸை எந்த வேலையும் பாரமா இழுத்து வைக்கலை. அதோட மெர்ஸியிடம் துணியை மட்டும் எடுத்துட்டு வர சொல்லலை.
  அமுல்யாவோட யூ.கே.ஜி படிப்பு முடிந்துடுச்சு. உங்களுக்கு தான் தெரியுமே‌. கான்வெகேஷன் விழால கூட டான்ஸ் ஆடி இந்த நிலையிலா வந்து நின்றுட்டோமே.
  அமுல்யா அடுத்து பஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கணும். அதுக்காக தான் டீசி எடுத்துட்டு வர சொன்னேன்.
   மெர்ஸியிடம் வீட்ல இங்க இருக்குனு சொன்னது நான் தான். அதோட இங்க வர்றப்ப மூன்று டிரஸ் தான் கொண்டு வந்தேன். அதையே ரிப்பீட்டட்டா போட ஒரு மாதிரி இருக்கு. அதான் வர்றப்ப எக்ஸ்டா டிரஸ் கொண்டு வர சொன்னேன்.
  ஏன் உங்க புத்தி தப்பாவே யோசிக்குது. என்னை அசிங்கப்படுத்தறிங்க பொறுத்துப்பேன். என்னை சார்ந்தவங்களை அசிங்கப்படுத்தினா அமுல்யாவை கூட்டிட்டு இப்பவே கிளம்பிடுவேன்.” என்று பொங்க, யாரிடமாவது சொல்லிக் கொள் என்ற ரீதியில் இஷான் இருந்தான்.

  “நீங்க இப்பவும் அமுல்யாவை அழைச்சிட்டு வரலாம் துகிரா. கோர்ட்ல நாம கேஸ் போட்டுக்கலாம். எப்பவும் குழந்தைகள் அம்மாவிடம் தான் இருக்க நீதிமன்றமே நியாயம் சொல்லும்” என்று உரைத்திட, மெர்ஸியோ அண்ணனிடம் இந்த உண்மையாவது சொல்லி அழைத்து வந்திருக்கலாமென்று வருந்தினாள்.

  இஷானோ ஏளனமாக, “கோர்ட்ல போய் என் குழந்தையை வாங்கி தருவிங்களா? அதுக்கு அவ  குழந்தையை பெத்திருக்கணும். அமுல்யா எனக்கும் துர்காவுக்கும் பிறந்த குழந்தை.
  சித்தி என்ற பந்தத்தில அழைக்க வேண்டிய உறவை, எல்லாம் அம்மானு கூப்பிட வச்சா அம்மாவா ஆகிட முடியாது. அமுல்யா விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது நான் மட்டும் தான். அவ என்னோட பொண்ணு.” என்று கூற, அமுல்யா இஷானையும் துகிராவையும் தான் உன்னிப்பாக கவனித்தாள்.

   “பிரதன்யா குழந்தையை அழைச்சிட்டு போங்க” என்று  அனுப்பிவிட்டு, “சார்லஸ்… எனக்கு இன்னமும் கல்யாணமாகலை. அமுல்யா என் அக்கா குழந்தை. அமுல்யாவுக்கு அம்மானு அறிமுகமாகி தான் அவளை அம்மாவாவே பார்த்துக்கிட்டுயிருந்தேன்.
  ஒரு குழந்தைக்கு அம்மாவா உங்களுக்கு அறிமுகமானேன். யாராவது என்னை மேரேஜ் பண்ணறதா இருந்தா என் குழந்தையையும் ஏத்துக்கணும் இல்லையா. அக்கா பொண்ணா அறிமுகமான அவாய்ட் பண்ண காரணம் உண்டுனு தான் என் குழந்தையா எங்கயும் பதிய வச்சேன்‌. நீங்க என்னை விரும்புவிங்கனு நானும் மெர்ஸியுமே எதிர்பார்க்கலை.  மெர்ஸியும் நானும் உங்களிடம் அமுல்யா என் குழந்தையில்லைனு தெரியப்படுத்த வேண்டாம்னு நினைச்சோம். அமுல்யா என் குழந்தையா ஏத்துக்கணும்னு எதிர்பார்த்தேன்.” என்றதும் சார்லஸ் துகிராவையும் மெர்ஸியையும் பார்த்தான்.‌

  “ஆக… என்‌மேல ஆரம்பத்துலயே நம்பிக்கையில்லை. இல்லையா துகிரா?” என்று கேட்டவன் இஷானை கண்டு சங்கடமாய் நின்று, “நான் வெளியே வெயிட் பண்ணறேன். நீ பேசிட்டு வா மெர்ஸி” என்று வெளியற, துகிரா அமுல்யாவை தான் தேடினாள்.
  இந்த இடைப்பட்ட நாளில் அரசல் புரசலாய் நான் உன் பொண்ணு தானம்மா?” என்று கேட்டு வருந்தியவளை “ஆமாடா அம்மு. நீ என் குழந்தை என்று அழுத்தமாய் பதியவைக்க, இன்றோ குழந்தை நேரிடையாக துகிரா அன்னை அல்ல. அன்னையின் தங்கை என்று புரிய துவங்கியதாக அமுல்யா பார்வையை காணவும் மகளை தேடி தானே ஓடுவாள் துகிரா.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.




7 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-7”

  1. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 7)

    அடப்பாவி..! புருசனைத் தானே பொண்டாட்டிங்க முந்தானையில முடிச்சுக்கிட்டதா சொல்லுவாங்க. இஷான் என்ன மகளை கூட முந்தானையில முடிச்சிக்கிட்டதா சொல்றான்.
    கோவத்துல வார்த்தைகளை என்னம்மா விடறான் பாருங்களேன்.

    அய்யய்யோ..! இவன் என்ன வரம்பை மீறிய வார்த்தைகள் எல்லாம் விடறான்..? ஏற்கனவே அம்மூ இவன் பண்ண கூத்தை பார்த்து தான், அவன் கிட்டக்க வந்தாலே , அவ எட்டக்க போயிடறா, இதுல இவன் வேற என்னோட படுத்து பிள்ளையை பெத்தியான்னு
    கேட்டால்… அம்மாவுக்கே முகம் சுளிக்க வைக்குற வார்த்தைகளை, குழந்தை கேட்டால் இன்னும் விலகித் தானே போவாள்.

    இதுல சார்லஸ், மெர்ஸி வேற வந்து குழந்தை எதிர்லயே எல்லா உண்மையையும் போட்டு உடைச்சால், குழந்தை பயந்துடாதா…?
    இப்ப குழந்தையை வேற சமாளிக்கனுமே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!