Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-12

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-12

அத்தியாயம்-12

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  இஷான் மகளோடு மட்டும் செல்வதற்கு தான் ப்ரியப்பட்டது. ஆனால் அமுல்யா தான் அம்மாவும் வரணும்’ என்று முகம் சுருக்க கூற, இஷானோ அமுல்யாவிடம் சிரித்து சம்மதித்துவிட்டு அடுத்த நொடியே துகிராவை நெருப்பை அள்ளி வீசும் பார்வையை தெளித்து சோபாவில் அமர்ந்தான்.

“அம்மா… அண்ணா பார்வையே இவங்களை எரிச்சிடும் போல. ஏன் அம்மா… இந்த ஜோடியை சேர்க்கணும். பேசாம அண்ணாவுக்கு வேற பொண்ணு பார்க்கலாமே. அவங்களும் சார்லஸை விரும்பறாங்க.” என்று துகிராவுக்காக பாவம் பார்த்தாள்.

பைரவியோ “அடப்போடி… உங்கண்ணாவிடம் ஒரு பொண்ணை பேசி கட்டி வைக்க தொல்லை பண்ணி தான் தாடி வச்சிட்டு திரிந்தான். காலையில் நான் கண் முழிக்கறதுக்கு முன்ன ஓடறது. நைட்டு நான் தூங்கினப்பிறகு வருவது. என்னயெல்லாம் செய்தான்னு எனக்கு தான் தெரியும். இப்ப பொண்ணு வந்ததால இன்னொருத்திய யோசிப்பான்னு நினைக்கறியா?
  அதோட முக்கியம் அமுல்யாவுக்கு உணர்வு பூர்வமான அன்பு அம்மாவிடம் கிடைக்கணும். குழந்தையை பாரு எவ்ளோ அழகா துகிராவோட ஒட்டியிருக்கா. அவளுமே அக்கா குழந்தை என்ற ரீதியிலா வளர்த்தா? தன் குழந்தையா தானே பார்க்கறா?

   இந்த அன்பு புதுசா வர்றவளிடம் கிடைக்குமா? அந்த சார்லஸை அவயிப்ப தானே விரும்பியிருப்பா. நம்ம இஷானை கட்டிக்கிட்டா அவனை எல்லாம் மறந்துடுவா.” என்றார் சாதாரணமாக.

   “இல்லைம்மா… என்ன தான் இருந்தாலும் விரும்பியவங்களை மறந்து..” என்று கூறு தயங்க, “சும்மாயிருடி… அமுல்யாவே சப்போர்ட் பண்ணுவா. நீ இருக்கியே..” என்று கடிந்து சென்றார்.

   இஷான், அமுல்யா, துகிரா மூவரும் மீன்கண்காட்சிக்கு சென்றனர். அப்படியொன்றும் இஷானுக்கு அந்த கண்காட்சி ரசிக்கும்படியாக இல்லை. எல்லாம் வண்ண மீன்களையும், வித்தியாசமான மீன்களையும் ஏற்கனவே இதுபோல பார்த்ததுண்டு. அவனை பொறுத்தவரை தன் மகளின் முகபாவனை மட்டுமே கண்டுகளிக்க, அவள் கை நீட்டும் பொருளை வாங்கி தந்து உலகை ஜெயித்த மிதப்பில் வாழ்க்கையை வாழ மட்டுமே.

  துகிராவோ ஏற்கனவே இஷான் காட்டிய ஒதுக்கத்தையும், அவன் முன் முந்தானை சரிந்த தன் அவலத்தையும் எண்ணி, சங்கடமாய் தான் வேறுவழியின்றி அமுல்யா கையை பற்றி நடந்து வந்தாள்.
 
  அமுல்யாவிற்கு தான் கொண்டாட்டம். மீன்களை கண்டு துள்ளி குதித்தாள். 70 அரங்குகள் கொண்ட மீன்கண்காட்சியில் 300, 400 மீன்களை கண்ணாடி தொட்டியில் தனித்தனியாக வைத்திருக்க, சிலவற்றில் கூடுதல் அலங்காரம் செய்து காண்போரை கவர்ந்திழுத்தது. அதிலும் வாஸ்து மீன்கள் எல்லாம் ஒரு தொட்டியில் ஒன்று என்று பார்வைக்கு வைத்திருந்தனர். சில வண்ண மீன்கள், ஒரே இனத்தை சார்ந்த மீன்களை எல்லாம் ஒரே தொட்டியில் போட்டிருந்தனர்.
  அமுல்யாவிற்கு கால்கள் நிலத்தில் இல்லை. “அப்பா இங்க பாருங்க, கலர் பிஷ்.” என்று கை தட்டி ஆர்ப்பரிக்க, இஷான் மகளை தூக்கி வைத்து அவள் புன்சிரிப்பில் மிதந்தான்.‌

துகிரா மட்டும் அவர்களை மெதுவாக பின் தொடர்ந்தாள்.

  ஒவ்வொரு மீனின் பெயரையும் கூறி அவளிடம் மனதில் நெருக்கத்தை அதிகரித்தான் இஷான்.

  கண்காட்சி முழுவதும் பார்வையிட, பின்னர் அங்கே விளையாட்டு திடலும் இருந்தது. அதில் அமுல்யா விளையாடி மகிழ, அடிக்கடி துகிரா நீரை புகட்டினாள்.
  கூடவே வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை தந்தாள்.
  அதெல்லாம் போதாதென்று அங்கே மீன் உணவுகளும் ஸ்டால் போடப்பட்டியிருந்தது.

  இஷான் “மீன் வாங்கி தரவா?” என்று கேட்க, “எனக்கு முள்ளு எடுக்க தெரியாது அப்பா. அம்மாவுக்கு சரியா எடுக்க வராதே” என்று குறைப்பட்டாள்.

“அப்பா எடுத்து தர்றேன்” என்று மீனே வாங்கி முள் நீக்கி அமுல்யாவுக்கு ஊட்டிவிட, இஷானின்-அமுல்யாவின் சந்தோஷம் கண்டு, ‘சே.. இத்தனை நாள் அப்பா மகள் உறவை பிரிச்சிட்டேன்.  அக்கா உறவினரை தேடி சென்று அமுல்யா பிறந்ததை அக்கா இறப்பை தெரிவித்திருக்க வேண்டும்.’ என்றெண்ணினாள்.

  “போதும் அப்பா… அம்மாவுக்கு கொடுத்துடுங்க.” என்று இஷானின் கையை துர்கா உதடருகே தள்ளி “அம்மா.. நீ சாப்பிடு. எனக்கு போதும்” என்று கூப்பிட நினைவு கலைந்து “என்ன?” என்று முழிக்க, இஷான் கையை விடப்படியாக துகிராவின் உதட்டருகே ஊட்ட முற்பட்டாள்.
இஷானோ, “அமுலு.. ப்ளிஸ். வேண்டாம்னா அப்பா சாப்பிட்டுப்பேன்.” என்று கையை இழுத்துக் கொண்டான்.

  துகிராவோ, அவனை காண தயங்கி வேடிக்கை பார்ப்பது போல நகர, பின்னர் மகள் கேட்ட சாக்லேட் ஐஸ்க்ரீம் என்று அடுத்தடுத்து வாங்கி தந்தான்.‌

“அம்மா எதுவும் சாப்பிடலை” என்றதும் தான் அவளை காண, அவளுமே ”அம்மு… பசிக்கலைடா” என்று மறுத்தாள்.

  “இல்லை.. ஏதாவது சாப்பிடுங்க” என்று கூற அதே நேரம் கரும்பு ஜூஸ் விற்குமிடத்தில் நடந்திருக்க, அதை வாங்கி தந்தான்.

அருகே குழந்தைகள் கார் ஓட்டும் பகுதி இருக்க, அதில் டிக்கெட் எடுத்து அமுல்யாவை அனுப்பினான்.‌

கரும்பு ஜூஸை மெதுவாக பருகி அமுல்யாவை ஏறிட, “கதவை லாக் பண்ணணும்னு அறிவில்லை” என்றான்.

  ஆரம்பித்துவிட்டானா? என்ற சோர்வுடன் “ப்ளிஸ்… நான் எந்த தப்பும் செய்யலை‌. அமுல்யா கீழே இறங்கி அத்தையை பார்க்க போயிருப்பானு தெரியாது. நான் குளிக்க போனப்ப டோர் லாக் பண்ணிருந்தேன். என்னை குறை சொல்லணும்னு நினைக்காதிங்க. உங்களோட தான் அமுல்யா நல்லா பழகறாளே. கவலைப்படாதிங்க.. கூடிய சீக்கிரம் நான் இங்கியிருந்து போயிடுவேன்.” என்றாள். அதை கூறும் பொழுது அவள் நெஞ்சடைக்க பேசினாள்.

  “நான் தப்பா சொல்ல வரலை. ரிஷி வந்திருந்தா என்னாயிருக்கும். அதுக்கு தான் சொன்னேன்.” என்றான். என்னவோ இவன் அவளது கோலத்தை கண்டால் அவளுக்கு பரவாயில்லை என்பது போலவா என்ன? என்று அவன் யோசிக்கவில்லை.

“அவர் மாடியேறி உங்க ரூமுக்கு வேண்டுமின்னா வருவார். என் ரூம்ல அமுல்யா இருந்தா கதவை தட்டி கூப்பிடுவார். கதவை திறந்து என்னைக்கும் இந்த இடைப்பட்ட நாளில் வந்ததில்லை. நீங்க தான் உங்க வீடு, உங்க வீட்ல நான் இருப்பதால், உங்க குழந்தையை பார்க்க, கதவை தட்டணுமா? என்ற ஈகோவில் அப்படியே வந்து பயமுறுத்தறிங்க” என்று கூறவும், அப்படியில்லை என்று மறுக்க வந்தவன் அமைதியானான்.

  உண்மையில் இஷான் மனதில், ‘என் வீட்ல, என் ரூமுக்கு பக்கத்துல, என் பொண்ணுக்கூட இருக்கா. என் பொண்ணை பார்க்க கதவை தட்டி பர்மிஷன் கேட்கணுமா? நெவர் நான் அப்படியே தான் அவள் அனுமதியின்றி செல்வேன்’ என்ற ‘மமதை’ இருந்தது.

   தன் இரு கைகளை நீட்டி தோளைக்குலுக்கி, மகளை காண சென்றான்.‌

  துகிரா உள்ளுக்குள் ஒடிந்தவளாக அமுல்யாவை கண்டாள்.  
  ‘குழந்தைக்கு இனி நான் தேவைப்பட மாட்டேன். அவ அவளோட அப்பாவிடம் நல்லா ஒட்டிக்கிட்டா. ஒட்ட வச்சிக்கிட்டார். இனி நான் போகணும். விரைவில் நான் போகணும். இதை பத்தி அம்முவிடம் பேசணும்’ என்று நினைக்க நினைக்க நெஞ்சடைத்தது.

    வீட்டுக்கு திரும்பும் போது, அமுல்யா அரை உறக்கத்தில் இருந்தாள். துகிரா தலைகோதி மடியில் வைத்து மகளையே பார்வையிட்டு மனதில் பலவித எண்ணத்தோடு போராடினாள்.

   கார் வீட்டுக்கு வந்தப்பொழுது, எழுந்துவிட்டாள்.

“அம்மா தூக்கிட்டு போறேன்” என்று தூக்க முயல, “நான் அத்தையிடம் பிஷ் பார்த்ததை சொல்லணும்.” என்று இறங்கி வேகமாக ஓடினாள்.

  துகிரா வாட்டர் பாட்டில் அமுல்யா அங்கு கடையில் வாங்கிய பொருட்களை எடுத்து வர தாமதமாகவும், முன்னிருக்கையில் இருந்த இஷானோ, “சொல்லறேன்னு தப்பா நினைக்காத… சீக்கிரமா நீ இங்கயிருந்து போயிடு. அப்ப தான் உனக்கு நல்லது. இது என் செல்ஃபிஷ்காக சொல்லலை.” என்று கூறினான்.‌

  “போயிடறேன்… மொத்தமா போயிடறேன். அம்முவை விட்டு தூரமா போயிடறேன். போதுமா‌.. நான்  இனி இங்க தேவைப்பட மாட்டேன்னு தெரியும்.” என்று அடக்கி வைத்த வேதனையோடு உரைக்க, “நீ அம்முவை வளர்க்க அம்மாவா முதிர்ச்சியான முடிவை எடுத்திருக்கலாம். ஆனா இந்த உலகம் பத்தி உனக்கு தெரியலை. தெரியவர்றப்ப நான் சொன்னதுக்கான காரணம் தெளிவா புரியும்” என்று டோரை மூடினான். இஷானுக்கு துகிரா இருக்க அன்னையின் பார்வை மாற்றம், திட்டம் அறிந்து இவ்வாறு கூறினான். 

  இருவரும் நடந்து செல்ல, பிரதன்யா கமுக்கமாய் அண்ணன் அண்ணியை கண்டு சிரிக்க, பைரவியுமே ஏதோ ஜோடியாக கண்டதால் நிறைவோடு பார்த்து ரசித்தார்.

  “ஓகே.. எனக்கு தூக்கமா வருது குட்பாய்” என்று தள்ளாடினாள் அமுல்யா. இஷானோ “அமுலு.. வா தூங்கலாம்” என்று கையோடு அவளை தனது அறைக்கு தூக்கி கொண்டு அழைத்து செல்ல, துகிரா இஷான் அறையில் அமுல்யா செல்வதில், “என் குழந்தையை என்னோடு உறங்கவிடு’ என்று கேட்கும் திரணியின்றி நின்றாள்.

   எப்படியும் சற்று நேரத்திலா தன் வாசமின்றி அமுல்யா அறைக்கு வருவாளென்று காத்திருக்க, நேரம் நகர்ந்தும் அமுல்யா வருவது போல தெரியவில்லை என்றதும் துகிரா தலையனையில் முகம் புதைத்து அழுதபடி கண்ணயர்ந்தாள்.

  குழந்தை அதிகமாக விளையாடி ஊர்சுற்றிய களைப்பில் இஷானின் அணைப்பில் சுகமாய் உறங்கினாள்.
  இஷானுக்கு சொல்லயியலாத உவகை. முன்பு தன் அறையில் படுக்க வைக்க, அரண்டு ஊரையே கூப்பாடு போட்டு விட்டாள். இன்று தன்னோடு உறங்க, தந்தையாக அகம் மகிழ்ந்தான்.
 
   இவ்வாறு இரவு ரம்மியமாக இவனுக்கு செல்ல அதிகாலை விடியல் பிறந்தது.

  துகிரா காலையிலேயே உறக்கம் களைந்து வந்து, இஷான் அறையையே நோட்டமிட்டாள்.

  “என்னம்மா சரியா தூங்கலையா? கண்ணுக்கிட்ட வீக்கமா இருக்கு?” என்று கேட்டார் பைரவி.

“எப்பவும் அமுல்யாவோட தூங்கியது. நேத்து அவ.. அவளோட அப்பா கூட தூங்க போயிட்டா. தூக்கமே வரலை” என்று கூறியவள் கையை பிசைந்தாள்.

  “ஓ… இஷானும் அதான் எந்திரிக்காம பொண்ணு தூங்கறதை ரசிச்சிட்டு இருப்பான்.” என்று கூறியவர் துகிராவின் மனம் படும்பாட்டை கவனித்தார்.

  ஒரு வழியாக ஒன்பது மணிக்கு மகளுக்கு வயிறு பசிக்குமென்று அவளை எழுப்பி பல் தேய்த்து, அழைத்துவர, பிரேக்பஸ்ட் உண்ணும் நேரம், “நான் கேரளா போகலாம்னு இருக்கேன். மெர்ஸியை பார்த்துட்டு அப்படியே என்னோட வேலையை பத்தி கேட்கணும்‌.” என்றாள்.

“மதியம் பேகணும்னா கார் டிரைவர் புக் பண்ணிக்கூட போ” என்று இஷான் கூறிவிட்டு கையை துடைத்தான்.‌

அமுல்யாவோ, “ஏன் மம்மி?” என்று திகைத்திட, இஷானோ “அமுலு, வேலை செய்யற இடத்துல காரணம் சொல்லணும். ஏற்கனவே எத்தனை நாள் லீவு எடுத்தாச்சு. அதோட அவங்க மேரேஜ் பத்தி சார்லஸ் அங்கிளிடம் டிஸ்கஸ் பண்ணணுமே. போகட்டும்” என்று மகளை கையோடு அழைத்து செல்ல, அமுல்யாவோ திரும்பி திரும்பி துகிராவை பார்த்து சென்றாள்.

  பைரவியோ, “அப்படியென்னம்மா அவசரம்?” என்று பதறினார். தங்கள் திட்டத்தின் முதல்படி கூட இல்லாமல் இவள் சார்லஸை மணந்து சென்றுவிடுவாளே என்ற பயம்.

“அவசரம் இல்லைம்மா… அவசியம். இங்கயே இருக்க முடியாது. அவர் சொன்ன மாதிரி எனக்குனு வேலை மட்டும் தானே இருக்கு.” என்று சிரிக்க கடினப்பட்டாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.








11 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-12”

  1. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 12)

    அடப்பாவி ! எல்லாத் தப்பையும் இவன் பண்ணிட்டு, எல்லாத்துக்கும் அவளை போட்டு திட்டிட்டிருந்தா என்ன அர்த்தம்…? இதைத்தான் வேண்டாத மனைவின்னா கை பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம் என்கிறதோ ?

    அச்சோ…! இவன் பேசுற பேச்சுக்கு அவ மூட்டையை
    கட்ட ஆரம்பிச்சிட்டாளோ…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!