Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-17

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-17

அத்தியாயம்-17

  வீட்டுக்கு வந்து விளக்கேற்ற கூற, துகிரா அக்காவின் புகுந்த வீடாக எண்ணியே நடமாடியவளுக்கு, இன்றோ இது உன்‌ புகுந்த வீடு என்று பைரவி பேச்சு இருந்தது.
    நிதானமாக சோபாவில் துகிரா அமர, இஷானோ அவசரமாய் மாடிக்கு சென்று உடைமாற்ற நினைத்தவன் அங்கே துர்காவோடு அவன் எடுத்த புகைப்படம் இல்லாமல் போகவும், “ரிஷி இங்கயிருந்த பிக்சர் எங்கடா?” என்று கோபமாய் கேட்க, பைரவியோ, “அந்த போட்டோ வச்சி என்ன செய்ய போற? துர்கா தனியா இருக்கற போட்டோவை பூஜை ரூம்ல வச்சிட்டேன். இனி அவ தங்கைக்கும் அவ குழந்தைக்கும் அவ சாமியா இருந்து நல்லது செய்வா.?” என்று அவன் ஆவேசத்திற்கு இணையாக பேசினார்.‌

கோபமாய் வார்த்தை பேச ஆரம்பிக்கும் நேரம் அமுல்யாவோ, “டேடி கோவில்ல நீங்க அம்மா நான் சேர்ந்து எடுத்த பிக்சர் சித்தா போட்டோ எடுத்தார். அது ஈவினிங் பிரேம் போட்டு தர்றேன்னு சொன்னார். நாம அதை அங்க மாட்டுவோம். நான் உங்களோட‌ அம்மாவோட சேர்ந்து எடுத்த முதல் பிக் மாட்டினா நல்லாயிருக்கும்” என்று குதூகலமாக கூற, இஷான் வார்த்தையை மென்று முழுங்கி சிரிக்க கடினப்பட்டான்.

  இஷானின் கத்தலில் துகிரா எழுந்து அவனையே பார்வையிட, இஷானின் மனவோட்டம் புரிந்து, பாவமாக தோன்றியது.
  இங்கு தன் நிலையே கவலைக்கிடம் என்பதை அவர் அறிவாரா?’ என்று சமாதானம் செய்துக்கொண்டாள்.

  அன்றைய பொழுதில் பால் பழம் இனிப்பு என்று மணமான தம்பதிகள் சுவைக்க கொடுப்பதை பைரவி செய்ய தயங்கினார்.
  ஆனால் மதியம் செய்த உணவை இனிப்பை அமுல்யா அவளது பிஞ்சு கரத்தால் இஷானுக்கு ஊட்டிவிட்டு, அப்படியே துகிராவுக்கு ஊட்டிவிட, வேறு வழியின்றி இஷானின் பாதி சுவைத்த இனிப்பை விழுங்கினாள்.

  பைரவியோ, “இதெல்லாம் இறைவன் போட்ட முடிச்சு. கடவுளுக்கு நன்றி செலுத்தணும்” என்று கூற பிரதன்யாவோ, “மா… இதெல்லாம் நான் ஸ்கிரிப்ட் எழுதி, உங்க பேத்தியிடம் சொல்லி, உங்க பேத்தி செய்யறா. நீங்க என்ன கடவுளுக்கு நன்றி செலுத்தறிங்க. எனக்கு ஏதாவது வாங்கி தரணும்.” என்று கூற, “இதெல்லாம் நல்லா தான் திட்டம் போடுற. ஆமா… யாரையாவது விரும்பறியாடி? உங்க இரண்டு அண்ணனும் காதல் கல்யாணம். நீ எப்படி? முதல்லயே சொல்லு. என் இதயத்தை பக்குவப்படுத்திக்கறேன்” என்றார்.‌

“அச்சோ… இப்படினு தெரிந்தா என்னிடம் பிரப்போஸ் செய்தவங்களுக்கு ஓகே சொல்லியிருப்பேன் அம்மா. பட் அண்ணா காதல் கல்யாணம் வேதனைனு பட்டதை பார்த்து காதலுக்கே பெரிய கும்பிடு போட்டுட்டேன். பிரதன்யா இதயம் காலி மனை.” என்றாள் கிலுக்கி சிரித்தாள்.

  “அவன் எங்க ரிஷி? கோவில்ல அந்த அஞ்சனா பொண்ணை கூட்டிட்டு வந்து போட்டோ எல்லாம் எடுக்க வச்சான். பயம் விட்டு போச்சா?” என்று ஆரம்பிக்க, “ஐயோ அம்மா..‌. இப்ப வந்து கேளுங்க. அவன் எப்ப அண்ணனுக்கு அமுல்யா இருந்த இடம் தெரிய வந்தது அஞ்சனா மூலமாக என்றதும் கொஞ்சம் கெத்து காட்டி திரிகின்றான்.‌” என்றாள். 

  “என்னவோ.. போடி.. இஷான் ஹால்ல இருந்தாலே துகிரா வெளியே வரமாட்டா. இப்ப இரண்டு பேரையும் ஒன்னா ஒரே ரூம்ல போட்டதுல பக்குனு இருக்கு. உங்கண்ணா செல்ஃபிஷா பேசி மனசை காயப்படுத்துவான். துகிரா எதிர்த்து எல்லாம் பேசுறா. ஆனா இஷான் முன்ன வாய் திறப்பாளானு தெரியலை.” என்று சலித்துக் கொண்டாலும் இன்றைய நாளில் இஷானுக்கு ஒருத்தியை மணமுடித்து வைத்த திருப்தியில் பைரவி அம்மாவாக பூரித்தார்.

  இஷான் துர்கா புகைப்படம் இல்லாத அறைக்குள் அதையே வெறித்தான்.

   மாலை ஆனதும், சிற்றுண்டி செய்து தந்திட, அமுல்யாவிற்கு பாடம் சொல்லி தருவதில் முனைப்பாய் இருந்தாள் துகிரா.

  இஷான் அறையிலிருந்து வரவேயில்லை. ஆனால் வேலை விஷயமாக லேப்டாப்பில் மூழ்கியிருப்பதாக அமுல்யாவை விட்டு விவரம் அறிந்தனர் பைரவி. குழந்தையிடம் நேரிடையாக அப்பா என்ன பண்ணறார் பார்த்துட்டு வந்து சொல்லறியா? என்று கேட்காமல், பிரதன்யாவே “உன் டிராயிங் புக் எடுத்துட்டு வா. அப்பா தூங்கினா டிஸ்டர்ப் பண்ணாம கொண்டு வரணும்.” என்று கூற, குழந்தையும் டிராயிங் நோட்டை எடுத்து வந்து தந்தாள்.

“அப்பா தூக்கறப்ப டிஸ்டர்ப் பண்ணலையே?” என்று கேட்க, “அப்பா தூங்கலை அத்தை. லேப்டாப்ல ஆபிஸ் வேலை பார்க்கறார்” என்று தகவல் தந்தாள். இப்படி தான் மதியமும் அப்பாவுக்கு ஊட்டிவிடு, அப்பா சாப்பிட்டதும் அம்மா சாப்பிடாம எஸ்கேப் ஆகிடப்போறாங்க. இரண்டு பேருக்கும் நீயே ஊட்டிவிடு.’ என்று கூறியிருக்க, அமுல்யாவும் அவ்வாறு செய்திருந்தாள்.

    இரவு நேரம் நெருங்க நெருங்க, “அமுல்யா.. இன்னிக்கு அத்தை கூட தூங்க வர்றியா. அத்தை கதை சொல்லறேன்” என்று ஆசைக்காட்ட, “அம்மாவே கதை சொல்வாங்களே? நான் அம்மா அப்பா கூட தூங்க போறேன்.” என்று குழந்தை சந்தோஷமாக இத்தனை நாள் அம்மாவிடம் அப்பாவிடம் என்று தனிந்து உறங்கி பழகியவள், இன்று தாய் தந்தையரோடு உறங்க எண்ணி கூறினாள்.

  பைரவியோ, “அப்பா அம்மா நைட்டு பேசி கொள்ளட்டும். ஏற்கனவே லாட்ஆஃப் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். பேசி பிரெண்டா ஆனா உனக்கு தானே நல்லது.” என்று ஐஸ் வைத்து  ஆழம் பார்த்தார.
  
  அமுல்யாவிற்கு அம்மா அப்பா சண்டை போடாமல் கூடவே இருக்க வேண்டும். அவர்கள் பேசி சமாதானம் ஆகட்டும். பிரதன்யா அத்தையோடு இன்று உறங்கலாமென்று பைரவி பேச்சுக்கு சம்மதித்து விட்டாள்.

 “ரிஷி நீ அமுல்யாவோடு இரு. பிரதன்யா துகிராவை அலங்காரம் பண்ணட்டும், டேய் அமுல்யாவை இஷான் ரூமுக்கு அனுப்பிடாதடா. திரும்ப கீழே இழுத்துட்டு வரமுடியாது.” என்று கூறிவிட்டு செல்ல, ரிஷியோ அவன் வீடியோ கேமில் டூ-பிளேயரில் போட்டு அமுல்யாவும் அவனும், அவனது அறையில் விளையாடிருந்தனர்.

  பிரதன்யா அறையில் துகிராவுக்கு அலங்காரம் ஆரம்பமானது.
“இப்ப எதுக்கு மேக்கப் பிரதன்யா. ப்ளிஸ்” என்று துகிரா மறுக்க, “முன்ன நீ துர்காவோட தங்கை.. உன்னை எதுவும் சொல்ல எனக்கு உரிமையில்லைடிம்மா. இப்ப நீ என் மருமக. அதுவும் மூத்த மருமக. காலையில் கல்யாணம் முடிச்சி, இப்ப தூங்கப்போற நேரத்தில் எதுக்கு அலங்காரம் செய்வாங்க? அமுல்யா எங்களோட தூங்குவா. முடிந்தா இஷானோட பேசி புரிதலோட உங்க வாழ்க்கையை ஆரம்பிக்க பாருங்க. வீட்டுக்கு பெரியவங்க என்ற முறையில் நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டிய கடமையில் நான் சரியா செய்துடறேன். அப்பறம் இனி என்னை முறை வச்சு கூப்பிடு. நான் உனக்கு மாமியார்” என்று துகிராவை பேசவிடாமல் செய்தார்.‌

  இஷானோ அரையும் குறையுமாக பேச்சை காதில் வாங்கி வந்தாலும் அன்னையின் திட்டத்தை யூகித்து விட்டான். அதற்கு முன் மகளை தன்னோடு வைத்து கொள்ளும் முடிவில், “அமுலு, டைம் ஆச்சு தூங்க வா” என்று அழைக்க, “அப்பா… நான் இன்னிக்கு பிரதன்யா அத்தை கூட தூங்கப்போறேன்.‌” என்றாள்‌.

   “நைட்டு தூக்க கலக்கத்தில் அழுவ அமுலு. மேல வா” என்று கைப்பிடித்து அழைக்க, “அப்பா… அத்தை கதை சொல்லறேன்னு சொல்லிட்டாங்க. அழமாட்டேன்.‌ அம்மா தான் மேல இருக்காங்களே. நான் ஏன்‌ அழப்போறேன். நான் வரலை. பாருங்க.. நீங்க டிஸ்டர்ப் பண்ணவும் சித்தா ஜெயிச்சிடுச்சு. நான் அவுட். டோண்ட் டிஸ்டர்ப் மீ டேடி” என்று இஷானை தள்ள சொல்லி பார்வையை வீடியோ கேமிலேயே பார்வையிட்டு மூழ்கினாள்.

“அமுலு” என்று மீண்டும் அழைக்க, பைரவியோ இஷானை கைப்பிடித்து வெளியே அழைத்து வந்து, “எதுக்குடா அமுலு. இன்னிக்கு உனக்கு துகிராவுக்கு கல்யாணமாகி முதல் நாள். ஒரு குழந்தைக்கு அப்பாவான உனக்கு, அமுல்யாவை அனுப்பாததுக்கு எல்லாம் காரணம் சொல்லணுமா? ஒழுங்கு மரியாதையா உன் ரூமுக்கு போ. அமுல்யா எங்களோடவும் பழக வேண்டாம்” என்று கடிந்தார்.
 
  ரிஷி நமுட்டு சிரிப்பை உதிர்க்க, இஷானோ எரிச்சலோடு மாடிக்கு வேண்டாவெறுப்பாய் ஏறினான்.

   பிரதன்யா அறையில் துகிராவுக்கு எல்லாம் செவியில் கேட்டது. பிரதன்யாவோ, கண்ணாடியில் அண்ணி முகத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.‌

   அச்சுறுத்தாத மிதமான அலங்காரம், எளிமையான சேலையில் தான் துகிரா இருந்தாள்.‌ ஆனால் முகம் வாடிய பூ முகமாக காட்சியளித்தது.

  “அண்ணி அவ்ளோ தான்” என்று கூற, பைரவி வந்தார்.‌

“உனக்கு வேற தனியா சொல்லணும்னு இல்லை. அமுல்யா உன்‌ பொண்ணு தான். அதுக்குன்னு உனக்குனு ஒரு குழந்தை வரக்கூடாதுன்னு சட்டமில்லை. இஷான் மாதிரி ஒரு பையன் பிறந்தாலும் நல்லதுதான்.” என்று கூறிட, துகிரா வாய் திறக்கவில்லை.

  பைரவி இப்படி எல்லாம் இதுவரை பேசியதில்லை. இன்று மாமியாராக அதிகாரம் தூள் பறக்க ஆடுகின்றார். துகிராவுக்கு தன் நலனிற்காக பேசுபவரை கோபித்துக் கொள்ளவா முடியும்.
  இஷானோடு பேசும் போது, அவளுக்குன்னு அம்மா அப்பா இல்லை. என் பொண்ணுக்கு இந்த நிலைன்னா நான் என்ன‌ பேசுவேனோ அதை தான் துகிராவுக்காக பேசறேன் என்று இஷானிடம் பேசிய தங்க குணம் தானே!

   “பிரதன்யா அந்த பால்” என்று பைரவி கூற, பிரதன்யா கொண்டு வந்து “அண்ணி” என்று கொடுக்க பெற்றுக்கொண்டு அமுல்யாவை தேடி நழுவினாள்.

  “நல்ல வேளை அவளே போயிட்டா…” என்று பிரதன்யா செல்வதை கண்டு, பைரவி குரலை செருமி, “இந்த கல்யாணம் உங்க இரண்டு பேருக்கும் சங்கடம் தான். ஆனா உன் அம்மா ஸ்தானத்துலயிருந்து இதான் உனக்கு சரின்னு முடிவெடுத்தது.
   முதராத்திரினா கண்டதும் நினைச்சு பயந்துட்டு இருக்காத. அவனோட பேசி பாரு. அவன் பேசினா இரண்டு பேரும் புரிதலோட வாழ, முதலில் மெனக்கெடுங்க. எனக்கு தெரியும் முதலிரவு ஒரு பொண்ணுக்கு பல கனவுகளை தரும். நிச்சயம் அந்த கனவுக்கு எதிரா தான் இஷான் மூஞ்சை காட்டலாம்.
  பெத்தவளா அவன் குணம் எனக்கு தெரியும். அதுவும் உன்னிடம் நாய் மாதிரி வள்ளு வள்ளுனு எரிந்து விழறதை கவனிச்சிருக்கேன். ஆனாலும் எதுக்கும் ஆரம்பம் வேண்டும் துகிரா” என்று தாடை பிடித்து கூற, துகிரா விழி நிமிர்த்தி பைரவியை காண, “போயிட்டு வா” என்று மாடிபக்கம் பார்வையை பதித்தார்.

   துகிரா மெதுவாக படியேற, பைரவியும் ரிஷி அறைக்கு வந்து, அமுல்யா குட்டி அத்தை ரூமுக்கு போகலாம் வாங்க. இன்னிக்கு பாட்டியும் உன் கூட தான் தூங்க போறேன்.” என்று கூடுதலாக ஆனந்தத்தை கொடுத்தார்.‌

  அமுல்யாவிற்கு பாட்டி அத்தை சித்தா என்ற உறவுகளும் இங்கு வந்ததில் கிடைத்த நிறைவோடு படியில் ஏறி மேலே வந்துவிட்டாள். இஷான் அறைக்கதவை கண்டதும் மானை போல மிரண்டு துடித்தாள்.
 
நிச்சயம் வார்த்தை கத்தியை கொண்டு குத்தி கிளறும் பேச்சை உதிர்த்தால் என்ன செய்வதென்ற கவலையில், திடத்துடனே கதவு மீது கை வைக்க, கதவு தாழிடாத காரணத்தால் திறந்தது.

   மெத்தைக்கு நேரதிராக காலையில் மணமான போது எடுத்த புகைப்படம் கண்ணுக்கு விருந்து படைத்தாலும் அதை ரசிக்கும் நிலையில் துகிராவும் இல்லை.

  இதயவோட்டம் எக்குதப்பாக தாளமிசைக்க, கைகள் நடுங்க, கால்கள் தள்ளாடி மெதுவாக வந்தவள் பால் டம்ளரை வைத்து நின்றவள் என்ன செய்வதென்று குழம்பினாள்.
 
  அக்கா கணவர் இஷான், அக்கா இறந்ததும் தன்னை மணந்து, இந்த நிலையில் சந்திக்கும் இக்கட்டு எல்லாம் வருமென்று கனவிலும் நினைக்கவில்லை.
 
  தரையில் திக்கற்ற பார்வையில் இஷான் மெத்தையில் அமர்ந்திருக்க, அவன் முன் பாலை நீட்டவும் பயந்தாள். தட்டி விட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாலும் இந்த நொடி தாங்கிக்கெண்டு எதிர்த்து பேச துகிரா தயாராகயில்லை. மனதளவில் அதிகம் குழம்பிவிட்டாள். அவளுக்கு நிறைய தெளிவு வேண்டியிருந்தது.
அதனால் கைக்கு அருகேயிருந்த மேஜையில் வைத்துவிட்டு, ஆசிரியரிடம் தவறு செய்த பள்ளி சிறுமி போல நின்று அவனிடம் பேச முயல, கையை நீட்டி தடுத்தவனாக, “என் பொண்ணுக்காக நான் செய்த தியாகம் தான் இந்த கல்யாணம். துர்காவை நேசித்த என்னால உன் கூட ஒரே ரூம்ல இருக்கவும், இந்த கல்யாணத்துலயும் துளி விருப்பம் கூட எனக்கில்லை. என்கிட்ட பேச ட்ரை பண்ணாத. உன்கிட்ட பேச எனக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை. தயவு செய்து தூங்கற வேலையை பாரு.” என்றான்.
  அவன் பேசிவிட்டு அதே திக்கற்ற பார்வையில் புஸுபுஸுவென மூச்சுவாங்க கோபத்தை தணிக்க முடியாமல் திண்டாட, துகிராவோ மெத்தையின் மறுபக்கம் வந்து அமைதியாக ஒருகளித்து படுத்து, போர்வையை மூடிக்கொண்டாள்.

   இஷானுக்கு தன் மெத்தையில் துர்காவுக்கு அடுத்து இன்னொருத்தி உறங்க, பஞ்சு மெத்தை தீஞ்ஜூவாலை போல தெரிய, நெடுநேரம் அப்படியே சிலை போல இருந்தான்.‌ அவன் ஒன்றும் முதல் திருமணம் தாய் தந்தை பார்த்து வைத்த பெண்ணை மணந்து வாழ்ந்தவனில்லை‌ அவனாக துர்காவை காதலித்து அல்லவா மணந்தது‌ அத்தனை சுலபமாக இன்னொருத்தி அவனது அறையில் வந்து நின்றதே அவனால் தாங்கயியலவில்லை‌

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


9 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-17”

  1. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 17)

    அச்சோ…! இப்ப இதெல்லாம் தேவையா..? அவனைப்பத்தி வீட்ல இருக்கிற எல்லாருக்கும் தெரியும் தானே ? தவிர, அவனாலேயும் தான் காதலிச்சுப் கை பிடிச்ச பெண்ணை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது தானே…? முன்னாடி கோபத்துல சண்டைப் போட்டு போய், ஒரேயடியா போய் சேர்ந்துட்டா, ஆனா குழந்தை கிடைச்சது சந்தோஷம் தான்.
    அதுக்காக இன்னொரு கல்யாணம்ன்னா… கொஞ்சம் டைம் எடுக்கும் தானே..?
    இப்ப குழுந்தைக்காக கல்யாணத்தை பண்ணிக்கிட்டாலும், இதெல்லாம் இப்பவே தேவையா..?

    ஆனாலும், பெரியவங்க ஏதாவது செய்யுறாங்கன்னா..
    அதுல காரணம் காரியம் இல்லாமலா இருக்கும்.
    இஷானைப் பத்தி பெத்த தாய்க்கு தெரியாதா என்ன..?
    எல்லாத்தையும் சூட்டோட சூடா முடிக்கப் பார்க்கிறான்ங்க போல.
    ம்.. இனி காலம் தான் பதிலை சொல்லும்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!