Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-18

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-18

அத்தியாயம்-18

   எப்பொழுது கண் சோர்வுற்று இமை தானாக மூடி, உடல் அசதியில் மெத்தையில் ஒதுக்கமாக படுத்தானென்றது இஷானே அறியாதது.

  துகிரா கண்விழித்து எழுந்தப் பொழுது களைந்த கேசத்தோடு, முரட்டுதனங்களை எல்லாம் மூட்டைக்கட்டி, அழகான முகவடிவில், இஷான் உறங்கியதை துகிரா கவனித்தாள்.

  “இந்த முகத்தில் இத்தகைய அமைதி, இஷான் உறக்கத்தில் தான் அவள் காண்கின்றாள்.

  இடத்தை சுற்றி பார்த்தாள். நேற்று ரிஷி துர்கா-இஷான் சேர்ந்திருந்த புகைப்படத்தை எடுத்தப்பொழுதே மெத்தையை அலங்காரம் செய்திருப்பான் போல. அதனால் அந்த அலங்காரம் இப்பவும்  மெத்தையின் நடுவே சிவப்பு ரோஜாவால் செய்த இதயவடிவமாக காட்சியளிக்க, அதையே வெறித்தாள்.

  திருமணம் பற்றி பள்ளி காலத்தில் கனவு கண்டதில்லை. கல்லூரியில் அடியெடுத்த சமயம் அக்கா துர்கா இஷானை மணந்ததால் வீட்டில் நிறைய பிரச்சனை எழுந்து துர்காவை பெற்றோர் சாபமிட்டதாலோ என்னவோ காதல், கல்யாணம் என்ற வார்த்தையிலும் கனவிலும் துகிரா நுழையவில்லை. ஏன் எட்டிக்கூட பார்க்கவில்லை.
  துர்கா வாயும் வயிறுமாக வந்த சமயம் கல்லூரி முடித்து வேலைக்கு செல்ல அப்ளிக்கேஷன் போட்டிருந்தாள்.
  கல்யாணமோ காதலோ எந்த கனவென்றாலும் அந்த வயதில் காண எண்ணியிருக்கலாம். ஆனால் விதி அவள் கையில் அக்கா குழந்தையை கொடுத்துவிட்டு பெற்றவர்களையும் இழந்து நிற்க, மெர்ஸியை சந்தித்த வேளையில் குழந்தைக்கு அம்மா என்ற அடைமொழியில், அங்கே தன்னை அறிமுகம் செய்ய, மற்றவர் பார்வையில் காதலையோ, அல்லது காதலிக்கும் கோணத்திலும் கல்யாணம் செய்யும் கோணத்திலும் துகிரா அப்பொழுதும் சிந்திக்கவில்லை.
  இதோ… சில நாட்கள் முன் சார்லஸ் காதலிப்பதை கூற, அமுல்யாவை நினைத்து மறுக்க, மெர்ஸி தான் மூளைசலவை செய்தது. அப்பொழுது கூட பெரிதாக கனவு கண்டதில்லை‌.
  இன்று காதல் கல்யாணம் இரண்டும் இஷான் என்றவனோடு தான் என்றானப்பின்… கனவு கூட அச்சப்பட்டு வரவில்லை.
  இதில் இதய வடிவ அலங்காரம் வேறு, என்ற சலிப்புடன், எழுந்து நிற்க, உடைகள் கலங்காமல், அலங்காரம் அழியாமல் ஓவிய பாவையாக நின்றிருந்தாள்.
  பிரதன்யா பார்த்து பார்த்து அலங்கரித்தவை தேவையற்றதென்று கூறியும் அலங்கரித்தாள். நேர விரயம், அலங்காரம் செய்ததும் தேவையற்றதாகி விட்டது என்று புரிய கண்ணாடி பார்த்து விரக்தியாக சிரித்து, பூ, நகைகளை கழட்டினாள்.

  பூ நகைகளை கழட்டி வைத்து, மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றாள்.

  அவள் சென்றதும் இமை திறந்த இஷானுக்கு தூக்கம் முற்றிலும் களைந்தது.
  ‘முதலிரவு ஒரு பொண்ணுக்கு எவ்ளோ சந்தோஷமான விஷயம் தெரியுமா இஷான். அம்மாவிடம் கூட தன் உடலை காட்ட கூச்சப்படும் பெண், தனக்கு வரப்போறவனுக்கு உடலை தந்ததோட மட்டுமில்லாம, கூச்சம், வெட்கம், வலியை பொறுத்து சுகத்தையும் தருவா. இந்த இரவு எனக்கு ஸ்பெஷல்டா’ என்று துர்கா தன் கன்னத்தை எச்சிப்படுத்த, ‘எனக்கு மட்டும் ஸ்பெஷல் இல்லையா? நானும் தான் உன்னிடம் என் கூச்சத்தை தூக்கி போட்டுட்டு, ஹார்ட் வொர்க் பண்ணறேன். இந்த கட்டில் போர்ல பூ வேலை பாடுல ஒருத்தன் கைகட்டி வீரத்தை காட்டலைன்னா எப்படி?’ என்று பதிலுக்கு அவளை முத்தத்தால் குளிப்பாட்டிய நாட்களுள் சென்று வந்தான்.
 
  இன்று துர்கா இல்லை…. துகிரா அவளிடத்தில். கட்டில் போருக்கு மெத்தையெல்லாம் அலங்காரம் செய்து யுத்தத்திற்கு தயாராக, வீரத்தை பறைச்சாற்ற இயலாத கோழையாக கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கின்றேன்.‌ என்னால் துகிராவிடம் நெருக்கமாக ஒரடி கூட எடுத்து வைக்க முடியாது. ஏன் இந்த தாலி, கல்யாணம்?
  அமுல்யாவிற்காக இந்த பெண்ணின் வாழ்வை நான் பாழ்படுத்தி விட்டேன். அவள் விருப்பியவனோடு மணந்திருக்கலாம்.

அமுல்யாவின் பிஞ்சு மனம் வாடாக்கூடாதென, இங்கே இரு மனங்கள் மணமுடித்து வாடுகின்றது.

  துகிரா வரும் அரவம் கேட்க, இஷான் சுதாரித்து விட்டு, பால்கனி சென்று விட்டான்.

   துகிரா, இஷான் அங்கே இருப்பதை அறிந்து, தலைக்கு டவலை கொண்டயிட்டு மெத்தையை களைத்து, பூவை எல்லாம் டஸ்பீனில் போட்டு, மெத்தையை அலச வாஷிங் மெஷினில் போட்டிருந்தாள்.
சம்பிரதாயத்திற்கு அவள் எதையும் குறைவைக்கவில்லை.
    வேகவேகமாய் ஈரக்கூந்தலை அள்ளி முடித்து கீழே வர, அங்கே அமுல்யாவோ உறங்குவதாக பிரதன்யா கூறினாள்.

  “ஸ்கூல் இருக்கு… இன்னும் தூங்கறாளா” என்று எழுப்ப வந்தாள்.

  “அம்மு.. இன்னிக்கு டெஸ்ட் இருக்கு. எந்திரிங்க.. டைம் ஆகுது. ஸ்கூலுக்கு போகணும்” என்று எழுப்ப குட்டி வாயை திறந்து கொட்டாவி விட்டு, “டூமினிட்ஸ் மம்மி” என்று படுத்துக்கொள்ள, “வாலு… ஏற்கனவே லேட்டுன்னு சொல்லறேன். டூ மினிட்ஸா” என்று மகளை அள்ளிக் கொண்டு வேகமாய் மாடியேறினாள்.
   பைரவியோ நேற்றைய அலங்காரம் எல்லாம் உபயோகமற்றதென்று துகிராவின் நடையிலேயே புரிய, இறைவனை தான் நாடி குறை கூற சென்றார்.

  இஷான் அதற்குள் குளித்து வந்திருக்க, “அமுலு ஸ்கூலுக்கு கிளம்பு. அப்பா ஆபிஸ் போகறப்ப அப்படியே டிராப் பண்ணிடுவேன்” என்று பெல்ட் அணிய துவங்கினான்.

  “அப்ப நான் ஸ்கூலுக்கு வரவேண்டாமா?” என்று துகிரா கேட்க, “வேண்டாம்.” என்றான்.‌

  “ஏன் டேடி?” என்று அமுல்யா கேட்க, “பச் போற வழியில் ஸ்கூல் விட்டுட்டு அப்பா ஆபிஸ் போகணும். உங்க அம்மா வந்தா அவங்களை ட்ராப் பண்ணணும். தனியா ஆட்டோல வரலாம். எத்தனை நாளைக்கு சொல்லு. இரண்டு செலவு. உங்கம்மா வீட்ல தானே இருக்கா. உன்னை அப்ப கவனிச்சிக்கட்டும்.” என்றான்.‌

  துகிரா அதற்குபின் என்ன சொல்வாள்? இரண்டு செலவு தான். சேமித்தவை எல்லாம் கையிலிருந்து கரைந்துவிட்டால்? வேலைக்கும் செல்ல முடியாத சூழலில் சிக்கியிருக்க, வீட்டிலிருந்தே செய்யும் வேலையை தேடிட நினைத்தாள்.

தற்போது குழந்தையை பள்ளிக்கு தயார் செய்யும் வேலையில் மூழ்கினாள்.

   இஷான் அலுவலகம் கிளம்பி தயாராக இருக்க, துகிரா மகளை தயார்படுத்தும் அழகை ரசித்தான். உண்மையில் அவன் கண்ணுக்கு துர்கா அமுல்யாவை தயார் செய்வதாக மனதில் பதிந்தது.

  தலைவாறி லப்பர் பேண்ட் போட்டு பவுடர் பொட்டு அணிந்து அடையாள அட்டையை கழுத்தில் அணிவித்து, கூடுதலாக காலரை சரிசெய்து, அமுல்யா காலுக்கு ஷாக்ஸ் ஷூ என்று மாட்டிவிட்டு, கையை அலம்பி புத்தக பையை எடுத்தாள்.

  அமுல்யா உடனடியாக கீழே சாப்பிட செல்ல, இஷான் தன்னையே பார்ப்பதை கண்டு குழப்பமாய் பார்வையிட, இஷானுக்கு துர்கா பார்வை தன்னை ஆசையாக தழுவுமே, என்று யோசிக்க புத்திக்கு துகிரா என்று புரியவும், புத்தக பையை வெடுக்கென்று பிடுங்கினான்.

  ‘இப்ப நான் என்ன செய்தேன்’ என்று துகிரா உள்ளம் துவண்டது.
 
  அமுல்யா இஷான் சென்றதும் லேசாக அழுகை வர, அமுல்யா சாப்பிட தாமதப்படுத்துவாளென்று கீழே ஓடினாள்.

  துகிரா எண்ணியது போலவே, “பொங்கல் வேண்டாம் அத்தை” என்று கூற, “பிரதன்யா… நீங்க காலேஜிக்கு கிளம்பணும்ல நீங்களும் சாப்பிடுங்க. நான் அம்முக்கு ஊட்டி விடறேன்” என்று துகிரா கூற, பிரதன்யா சாப்பிட அமர்ந்தாள்.

  துகிரா பொங்கலில் திராட்சை முந்திரியை அள்ளி போட்டு நெய்யை எடுத்து, ”பார்த்துக்கோ… நெய் விடறேன். மிளகுல இருக்கற காரத்தை இழுத்துடும். ஓகேவா” என்று காட்டிவிட்டு பிசைந்து ஊட்டிவிட சாப்பிட்டாள்.

  இத்தனை நேரம் சாப்பிட வற்புறுத்தி மறுத்து சோர்ந்த பிரதன்யா பைரவி இஷான் ரிஷியோ, துகிராவை காண, இஷானின் பார்வை கண்டு, “மிளகோட காரத்தை நெய் இழுத்துக்கும். அதான் குழந்தை சாப்பிடறா.” என்று மீண்டும் கூறி சமிக்ஞை தர, ஏமாற்று வேலையை அறிந்து பிரதன்யா சிரித்து சாப்பிட, ரிஷியோ, “இந்த ட்ரிக்ஸ் எனக்கு தெரியாம போச்சே” என்று புலம்ப, பைரவியோ துகிராவின் கன்னத்தை தட்டி சென்றார்.
  இஷானோ பெருமையாக பாவித்த பாவணையை துகிரா பார்க்கவும் கைகடிகாரத்தை பார்த்து, விழுங்க, “அம்மு.. சீக்கிரம் நேரமாகுது பாரு” என்றாள்.
 
   இஷான் நடவடிக்கைகளை துகிராவும், துகிரா நடவடிக்கைகள் இஷானும் கவனிப்பதை அவரவர் அறிந்துக் கொண்டு தத்தமது பணியை மேற்கொண்டார்கள்.

    ரிஷி, பிரதன்யா கல்லூரி செல்ல, இஷான் மகளை பள்ளிக்கு அழைத்து சென்று அங்கே விட்டுவிட்டு, அலுவலகம் சென்றுயிருக்க, பைரவி துகிரா தான் தனித்து இருந்தனர்.

   பைரவி டிவியை வைத்து விட்டு,  போனில் தலையை நுழைத்த துகிராவிடம் “நேத்து ஏதாவது பேசினானா?” என்று கேட்டார்.
 
  துகிராவோ, “என் பொண்ணுக்காக நான் செய்த தியாகம் தான் இந்த கல்யாணம். இந்த கல்யாணத்துல துளி விருப்பம் கூட எனக்கில்லை.” என்று கறாரான குரலில் பேச, பைரவியோ ”அதுவந்து” என்று பைரவி ஏதோ கூற வர, துகிரா நிறுத்தாமல் கையை மட்டும் காட்டி முடிச்சிடறேன் என்றவள் “என்கிட்ட பேச ட்ரை பண்ணாத. உன்கிட்ட பேச எனக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை. தயவு செய்து தூங்கற வேலையை பாரு” என்று இஷான் சொன்னதை அப்படியே அவன் கூறிய தோரணையில் உரைத்தாள்.

  “நேத்து உங்க பையன் இதை தான் சொன்னார். சாரி அவரிடம் நான் எதுவும் பேசலை. அவரை பார்த்தா பேச்சு வரலை… போய் படுத்துட்டேன். அவர் எப்ப தூங்கினார்னு தெரியாது அத்தை. ஆனா நான் அழுததில் எப்படியோ தூங்கிட்டேன்.” என்றாள் துகிரா.

“மன்னிச்சுடு… அவன் உடனே மனைவியா நடத்துவான்னு நானும் நினைக்கலை. அட்லீஸ்ட் பேசவாது செய்வான்னு பார்த்தேன். இப்படி பேசி மனதை காயப்படுத்தியிருக்கான்.
  இந்த கல்யாணத்துல தியாகம் செய்தது அவனில்லை. நீ தான்‌ அக்கா மகளுக்காக இஷானை மணந்தது. எப்படி அவனால உன் தியாகத்தை யோசிக்க முடியலை.” என்று வருத்தமாய் கூறினார்.

“ஒரு வேளை அவருக்கு நேத்து நைட் அக்காவோட நினைப்பு வந்திருக்கும் அத்தை. எவ்ளோ வேதனையா இருக்கும். துர்கா அக்காவோட இருந்த நினைவுகள் ஒரு பக்கம் வாட்டும். இதுல ஒரே மாதிரி உருவத்துல நான் வேற… அதே ரூம்ல…
     அக்கா சொல்விருக்கா, நேத்து நடந்த ரெஜிஸ்டர் ஆபிஸ்ல தான் அக்காவுக்கும் மாமாவுக்கும்… கல்யாணம் ஆனதுனு. அதே ரெஜிஸ்டர் ஆபிஸ்ல என்னோட திரும்ப கல்யாணம். இதுல கோவில்ல திரும்ப தாலி கட்டி, அதே ரூம்ல, என்னை தள்ளி விட்டா, பாவம் அவர் என்ன பண்ணுவார் அத்தை.
  நானாவது பரவாயில்லை‌…” என்று கண்ணீரை மறைத்து சமாளிக்க, இஷான் அனைத்தையும் கேட்டு தள்ளாடி நடந்தான்.
அவன் மனதை அப்படியே படித்தவளாக துகிரா இருக்க, கண்கள் சுழற்றியது.

    உண்மையில் துர்கா உருவத்தில் துகிராவை காண்பதும், நித்தம் நித்தம் ஆர்ப்பரிக்கும் உணர்வை கட்டுப்படுத்துவதும் இஷானுக்கு வேதனையின் உச்சமே.

   பைரவி பார்க்கவும், மாடிக்கு வேகமாய் சென்றுவிட்டான்.‌

  திரும்பி வரும் பொழுது போனில் “லேப்டாப் விட்டுட்டு கிளம்பிட்டேன்‌. இப்ப எடுத்தாச்சு. இல்லை… இல்லை.. பாஸ்டா வந்துடுவேன்.தேங்க்ஸ்” என்று அலுவலகத்தில் யாரிடமோ பேசுவது போல பேசியபடி அங்கிருந்து ஓடினான்.

  பைரவியோ லேப்டாப் எடுக்க தான் வந்தானாக்கும், என்று திரும்பிக்கொள்ள, இஷான் பேசிவிட்டு கடைசியாக துகிராவை பார்ததபடி போனில் தேங்க்ஸ்’ என்றதில் துகிரா, ‘இந்த தேங்க்ஸ்… எனக்கா?’ என்றது போல முழித்தாள். ஆனாலும் வாசல் வரை சென்றவனிடம் என்கிட்டயா சொன்னிங்க? என்று கேட்க இயலுமா? கேட்டால் தான் இனிக்க இனிக்க பேசிடுவானா?’

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

8 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-18”

  1. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 18)

    நான் தான் முதல்லயே சொல்லிட்டேனே. இனி எதற்கெடுத்தாலு கை பட்டால் குத்தம், கால் பட்டால சத்தம்ன்னு எல்லாத்துக்கும் குதிக்க வேண்டியது தான்.

    அப்பா டா…! இப்பவாவது துகிராவை புரிஞ்சிக்க ட்ரை பண்றானே அந்த மட்டுக்கும் சந்தோஷம் தான். இஷான் இப்ப துகிராவுக்கு தானே தாங்க்ஸ் சொன்னான்…
    இல்லைன்னு சொல்லி, எங்க லிட்டில் ஹார்ட்ஸை உடைச்சிடாதிங்க ப்ளீஸ்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!