Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-9

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-9

அத்தியாயம்-9

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   இஷான் அமுல்யாவிடம் இடைபட்ட நாளில் பழகயியலாது துடித்தவன், வேறு வழியின்றி, துகிராவிடம் பேசும் நோக்கத்தில் அமுல்யாவை பள்ளிக்கூடம் சேர்க்க துகிராவை தான் அழைத்து வந்தான்.

  காரில் பின்னிருக்கையில் அம்மாவும் பொண்ணும் அமைதியாக வர, இஷான் மகளை அடிக்கடி திரும்பி பார்த்து, மிரரில் கவனித்தான்.

  “இந்த ஏரியாவிலேயே இந்த ஸ்கூல் தான் பெட்டரா இருந்தது‌.” என்று அமுல்யாவை பார்வையிட, அவளோ அன்னை கையை பிடித்து நடந்தாள்.

  இஷான் பொறுமையை கைப்பிடித்தவனாக, நடந்து வந்தான். விவரம் தெரியாத குழந்தை அல்ல என் மகள். அவளுக்கு நடக்கும் சம்பவம் மூலமாக மனிதரை கவனிப்பதை அறிந்ததும் ஏற்பட்ட மாற்றம்.

    துகிராவோ “அம்மு… உனக்கு இந்த ஸ்கூல் பிடிச்சிருக்கா? இங்க தான் ஜாயின் பண்ணப்போற” என்று கேட்க, “ரொம்ப பெருசா இருக்கு மம்மி” என்று கண்ணை உருட்டி கட்டிடத்தை வேடிக்கை பார்த்தாள்.

  “அம்மு இத்தனை நாள் குட்டி கிளாஸில் இருந்திங்க. இப்ப எல்கேஜி, யூகேஜி படிக்கிற குட்டிஸுக்கு நீங்க அக்காவா மாறிட்டிங்க. இனி பெரிய ஸ்கூல் பெரிய படிப்பு படிக்கணுமே.” என்று கூறியதும் அமுல்யாவோ “ரொம்ப கஷ்டமாயிருக்குமா மம்மி” என்று கேட்க, “சேசே அம்முக்கு படிக்க கஷ்டமாயிருக்காது. அம்மு தான் டெய்லி படிச்சிடுவாளே. அம்முக்கு எல்லாம் தெரியுமே” என்று பாராட்டி பேச, குழந்தையிடம் நெயிற்ச்சியாக பேசும் துகிராவை மெச்சுதலாக தான் பார்த்தான்.

பள்ளி நிர்வாகியிடம் அலுவலக அறைக்கு வந்து சேர்ந்தனர் மூவரும்.
  “ஏற்கனவே போனில் தன் மகளுக்கு இங்கே சீட் வேண்டுமென்று கேட்டு பாதி வேலையை முடித்திருக்க பணம் கட்டும் ப்ரஸிஜர் மட்டும் நடந்தேறியது. பீஸ் மற்றும் டொனேஷன் கட்டிவிட்டு அமுல்யாவை முதல் வகுப்பில் சேர்ந்தாள். அன்றே அப்பள்ளியில் வகுப்புக்கு செல்ல கூற, அமுல்யா விழித்ததை காட்டிலும் துகிரா தான் விழித்தாள்.

திரும்பி வரும் போது காரில் ஜீவனேயின்றி நடந்தாள். காரில் பின்னிருக்கையில் அமரவும், இஷான் ஓட்டுனர் இருக்கையில் வாகனத்தை இயக்கினான்.

  சிறிது நேரம் கழித்து ஓரமாக வண்டியை நிறுத்தினான்.

   அவன் வண்டியை நிறுத்தியதை கூட அறியாமல் அமுல்யா இல்லாத வருத்தத்தில் திளைக்க, “உன்கிட்ட பேசணும்” என்று கூற அவளோ என்ன ஏதேனெ கேட்காமல் அதே மௌனத்தில் திளைக்க, “ஏய்.. உன்னிடம் தான் பேசணும்னு சொல்லறேன். வேண்டுமின்னே அவாய்ட் பண்ணறியா?” என்று எரிந்து விழுந்தான்.‌

திடுக்கிட்டு நிமிர்ந்தவள், “என்ன சொன்னிங்க. நான் நிஜமாவே கவனிக்கலை. சும்மா… ஏதாவது கத்தாதிங்க” என்று பொரிந்தாள்.

  “ஓகே லீவ் இட். எனக்கு ஒரு உதவி செய்” என்றான்.

“உதவியை இப்படி திமிரா கேட்க கூடாது. பணிவா கேட்கணும்” என்றாள் துகிரா.

  “ஏய்… என்னடி உன்னிடம் எல்லாம் உதவி கேட்க வந்ததால் என்னை மட்டமா பார்க்கறியா?” என்றான் இஷான். அவனது ஆங்கார கோபம் அப்படி பேசவும், “மட்டமா நீங்க நடந்துக்கிட்டதால உங்களை மட்டமா தான் என்னால பார்க்க முடியும்” என்று முகம் திருப்பினாள்.

“ஸ்டாப்பிட்… இப்ப உதவுவியா மாட்டியா?” என்றான்.

துகிராவோ பெருமூச்சுடன் “சொல்லுங்க. என்ன உதவி?” என்றாள்.
 
  இஷான் தொண்டையை நனைத்து, “அமுல்யா என்னை கண்டாலே பயந்துப்போறா. அவளுக்கு நான் அப்பானு தெரிந்தும், என்னை அப்பானு கூப்பிட மாட்டேங்கறா. காரணம்… உன்னை நான் அடிச்சது, கழுத்தை நெறிச்சதை பார்த்ததால… அவ மனசுல நீ உயர்ந்த இடத்துல இருப்பதால, எனக்கான இடத்தை தரமறுக்கறா. தயவு செய்து அவளிடம் எனக்காக பேசு. என்னிடம் பேச சொல்லு.” என்றதும், துகிரா யோசனையாகவே இருக்க, “என் பொண்ணை என்னிடம் பேச வைக்கிறேன்னு சொல்லு” என்று அதிகாரமாய் கேட்க, “இங்க பாருங்க.. சும்மா மிரட்ட வேண்டாம். நீங்க பண்ணின வேலைக்கு நான் ஏன் உங்களுக்கு உதவணும்.” என்று முடிக்க, “என்ன தப்பு பண்ணினேன்?” என்று அவசரத்தில் கத்திவிட்டு அவள் உதடு துடிக்க, பார்வையை வேறு பக்கம் திருப்பினான்.‌

  அவள் சொல்லாமல் விட்ட மீதி புரிந்தவனால் மேற்கொண்டு வாதம் செய்ய மனமின்றி வண்டியை ஓட்டினான்.

  காரில் இருக்கையில் சாய்ந்தமர்ந்து கொண்டு பிடிவாத குணத்துடன், வீடு வரும் வரை அமைதியானாள்.

  ” ஈவினிங் அம்முவை திரும்ப கூப்பிட போகணும்.” என்று கூறிட, இம்முறை காது கேட்காதவள் போல, அவள் சென்றாள்.
 
  ‘என்ன நெஞ்சழுத்தம் இருடி.. உன்னை விரைவில் என் பொண்ணிடமிருந்து‌ துரத்துறேன்.” என்று மனதிற்குள் உறுமினான்.

  ஹாலில் மகளை அழைத்து வர, காத்திருந்தான்‌.
  
  ரிஷி பிரதன்யா இருவரும் கல்லூரிக்கு சென்றிட, பைரவி மட்டும் மகன் துகிரா வந்து சேர்ந்ததை கண்டு, அமுல்யா பள்ளியில் இன்றே விட்டுவிட்டு வந்ததை புரிந்துக்கொண்டார்.

   எப்படி தான் இருவரும் காரில் ஒன்றாக வந்தார்களோ என்று  ஆச்சரியப்பட்டாலும் இருவரும் எள்ளும் கொள்ளுமாய் வருவது முகத்தில் தெரிந்தது‌.

  சற்று நேரம் கழிய, இஷான் துகிரா அறை வரை வந்து எட்டியெட்டி பார்த்துவிட்டு, ‘பச்’ என்று சலிப்போடு காரில் கிளம்பினான்.

அவனுக்கு அவளை பெயரிட்டு அழைக்கவோ, கூடவே வா என்று மகளை சேர்த்த பள்ளிக்கு கூப்பிடவோ துளியும் பிடித்தமில்லை.

அமுல்யாவை அழைத்திட தனியாக பள்ளிக்கு வந்தான்.

   வகுப்பு விடும் நேரம், இஷான் ஆசையாக தன் மகளது வருகைக்காக காத்திருந்தான்.
 
  ஒவ்வொரு பிள்ளைகளையும், வரிசையாக அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்க, இஷானை கண்டு தயங்கி செல்ல மறுத்தாள்.

இவர்கள் உறவுமுறை சிக்கலை அறியாத வகுப்பு ஆசிரியரோ, “உங்க டாடி வந்தாச்சு போங்க” என்று அனுப்ப, அமுல்யா மெதுவாக நடந்துவந்தாள். காலையில் பையும் இரண்டு நோட் பென் என்று பள்ளியே கொடுத்திருக்க, அதை சுமந்தவளாக அடியெடுத்து வந்தாள்.

  இஷான் கையை நீட்ட, அமுல்யா புன்னகை விரிந்தது. வேகமாக ஓடி வந்தவள் இஷானை தான்டி ஓடினாள்.

இஷான் மகள் செல்வதை கண்டு திரும்ப, அங்கே துகிரா மூச்சுவாங்க நின்றுயிருந்தாள்.

அமுல்யாவை முத்தமிட்டு எழுந்திட, பல்லை கடித்தபடி இஷான் வேகமாய் கார் நிறுத்தியயிடம் வந்து சேர்ந்தான்.

துகிரா அமுல்யாவை தூக்கிக்கொண்டு நடக்க, தன் கோபத்தை அடக்கி கார் கதவை திறந்தான்.

  துகிரா அமுல்யா இருவரும், பின்னிருக்கையில் ஏறவும், வண்டியை கிளப்பினான்.

  காலையில் நிறுத்திய இடம் போலவே ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் நிறுத்தி, பின்னால் திரும்பி, “நான் என்ன உங்க இரண்டு பேருக்கும் டிரைவரா? அதெப்படிடி குழந்தை எப்படியாவது என்னை தேடி வந்து கையை பிடிப்பான்னு கனவு கண்டப்ப, நீ வந்து எல்லாத்தையும் கெடுக்கற. உன்னை சொல்லி குத்தமில்லை. என் ரத்தத்தில உதிச்சிட்டு என்னிடமே வர யோசிக்கற உன்னை சொல்லணும்.” என்று குழந்தை அமுல்யா பக்கம் பாய்ந்தான்‌.

  “நான் தான் உன்னோட அப்பானு உனக்கு தெரியுது தானே? பிறகு ஏன் என்னை கண்டா பேயை பார்க்கற மாதிரி முழிக்கற. என்னிடம் வந்து பேச என்ன தயக்கம்?
  அந்த சார்லஸ் அவனெல்லாம் உன் சித்தி துகிராவை கல்யாணம் செய்ய போறவன். நான் தானே அப்பா. என்னை தேடி தானே நீ வந்தாகணும்.
   உன் சித்தி துகிரா என்னைக்காயிருந்தாலும் சார்லஸை கல்யாணம் பண்ணிட்டு பெட்டியை கட்டிடுவா. முதல்ல ஒன்னை புரிஞ்சுக்கோ. குழந்தை பெத்தவங்க கூட தான் இருக்க கோர்ட் ஜட்ஜ்மெண்ட் தரும். நீ அழுதாளோ அடம் பிடிச்சாளோ ஏன் சாப்பிடாம ஜூரம் வந்து மயங்கினா கூட என்னிடம் தான் இருக்கணும். சார்லஸ் எல்லாம் அப்பாவா மாற முடியாது.
  உன் எதிர்ல கெட்டவனா நிற்கற நான் தான் அப்பா. உனக்கு வேற வழியில்லை.” என்று கொதித்து பேசியவன், பின்னர் “நீயும் உங்க அம்மாவும் இறந்துட்டதா நினைச்சி வாழ்க்கையையே ஏனோ தானோனு வாழ்ந்தவன் நான். இப்ப நீ கிடைச்சியிருக்க. ஆனா என்னை தவிக்க விடும் போது, செத்துடலாம்னு தோனுது அமுலு” என்று மகளது கையை பிடித்து முகத்தில் வைத்துக்கொண்டான்.

  அவனது கண்ணீர் அமுல்யா கைகளில் விழுந்து வழிவதை அவளால் உணர முடிய, துகிராவை தான் பார்த்தாள்.

  துகிராவோ பாவமான முகத்தோடு, மன்னித்து பேசு என்பதாக சமிக்ஞை செய்ய, அமுல்யாவ, அப்பொழுதும் தயங்க, இஷானோ துகிரா முன்னால் கண்ணீரை காட்டிட கூடாதென்ற வைராக்கியத்தில் சட்டென திரும்ப காரை இயக்கினான்.
கண்ணீரை மறைத்து, “உன்னோட பொம்மையை உனக்கு பிடிக்காதவங்க பிடுங்கி வச்சிட்டு தர மறுத்தா அந்த ஆப்போசிட் பெர்ஸனை பார்த்தா கோபம் வருமா வராதா. உங்க சித்தி மேல எனக்கு அந்த கோபம் இருக்கு. என் குழந்தையை அவ வச்சி விளையாட்டு காட்டறா.” என்று அமுல்யாவிடம் பேச, அவளோ இமைகள் படபடக்க, துகிராவை கண்டாள்.

  துகிராவோ சித்தி என்று சொல்லே உறுத்த, இஷானை திட்டும் நோக்கத்தில் இருந்தாலும், அவனது காயத்தை எண்ணி அமைதியானாள்.

   அமுல்யாவோ, “அவங்க சித்தி இல்லை. அம்மா‌ என்னோட துகிரா அம்மா.” என்று திருத்தினாள்.

  “அப்ப நான் யாரு?” என்று கேட்க, “அப்பா” என்றாள் அமுல்யா.

  சடன்பிரேக் போட்டு காரை நிறுத்த, “எனக்கு தெரியும் நீங்க என் அப்பானு. இனி சார்லஸ் அங்கிளை அப்பானு சொல்லமாட்டேன்.” என்று கதவை திறந்து இறங்கி வீட்டிற்குள் நடந்தாள்.

  “அம்…அமுலு” என்றவன் காரை அதனிடத்தில் வைத்துவிட்டு வந்தவன் மகளை தேட, “என்னடா நீ துகிராவை விட்டுட்டு போயிட்ட.” என்று கோபிக்க, ‘ரொம்ப முக்கியம். அவளை நான் ஏன் கூட்டிட்டு போகணும்” என்று மகளை தேட, துகிராவோ இஷான் எது பேசினாலும் பொறுத்துக் கொண்டாள். அவன் பக்கம் நின்று யோசித்தால் அவனது கோபம் நியாயமாக தோன்றியதே!

அமுல்யா உடை மாற்ற குளியலறைக்கு சென்றிருக்க, துகிரா பையை எடுத்து வந்து சேர, இஷான் அதே அறையில் மகளுக்காக காத்திருந்தான். துகிராவோ, அவன் வெளியே செல்லமாட்டானா என்று பரிதவிக்க, ‘இவ வேற’ என்று வெளியேறினான்.
  எப்படியும் மகள் சிற்றுண்டி சாப்பிட வெளியே வருவாளென்று ஹாலில் காத்திருந்தான். முதல் முறையாக அப்பா என்று அழைத்த மகளை மீண்டும் மீண்டும் அழைத்திட சொல்ல ஆசையில் திளைத்தான்.‌

  பைரவியோ மகனது புன்முறுவலில் அமுல்யா இருந்த அறைக்குள் நடந்து வர, “அம்மா… நீங்க சார்லஸ் அங்கிளை கல்யாணம் செய்தா என்னை விட்டு போயிடுவிங்களா? இனி அப்பா கூட தான் இருக்கணும்னு கோர்ட் ஜட்ஜ்மெண்ட் கொடுப்பாங்களா?” என்று கேட்க, குழந்தையிடம் உண்மையை மறைத்து பொய்யாக அப்படியில்லை என்று கூறிட மனம் எடுத்துரைத்தாலும், உண்மையை ஏற்கும் பக்குவம் இதுபோன்ற தருணத்தில் அவளை செதுக்கிட வேண்டும். பின்னாலில் நான் இல்லையென்றாலும் தவிக்க மாட்டாளென்ற நினைப்பில், “நான் சார்லஸை மேரேஜே பண்ணறேனோ இல்லையோ, ஆனா உன் அம்மாவா நிரந்தரமா இங்க இருக்க முடியாதே அம்மு. உன் அப்பா அவர் தான். அவர் உன்னை ஏஞ்சல் போல வளர்க்க தயாராயிருக்கார். அம்மா எல்லாம் எத்தனை காலம் சொல்லு. பிராக்டிகல்னு ஒன்னு இருக்கே.
   துர்கா அக்கா மாதிரி இந்த வீட்ல நான் உன்னோட உரிமையா இருக்க முடியாது. வர்றப்ப கேட்டியே… நீ வாய் நிறைய அம்மானு சொன்னாலும் சித்தினு தான் என்னை நினைப்பாங்க” என்று நிதானமாக எடுத்துரைந்தாள்.

அமுல்யாவோ, “நான் உங்களை எப்பவும் அப்படி கூப்பிட மாட்டேன் அம்மா.” என்று கட்டிக்கொள்ள, பைரவியோ தான் நடத்த போகும் நாடகத்திற்கு ஏதோ நேர்பதமாக சூழ்நிலை அமைவது போல எண்ணி அர்த்தமாய் புன்னகைத்தார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 




6 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!