Skip to content
Home » கண்ணுக்குள் கடல்-10

கண்ணுக்குள் கடல்-10

அத்தியாயம்-10

இரவு முழுக்க கணவன் வராதது பிருந்தாவுக்குள் உதறலெடுக்க, காண்ஸ்டேபிளை அழைத்து கேட்டாள்.

சார் காலையில வந்துட்டு போனதோட அவ்ளோ தான் மேம். அப்பறம் வரலையே” என்று கூற இடிந்து போனாள்.

பின்னர் சமாதானம் செய்து தேடுவதாக கூறி முடித்தார்கள்.

மனம் பாரமாக தன் தாயிற்கு அழைத்தாள்.

கணவர் போன் எடுக்கவில்லை. தனியாக நிற்க மனம் பதபதப்பாகின்றது. வீட்டிற்கு வாருங்கள் என்றாள்.

“விளையாடத பிருந்தா. நீ காதலிச்சு போயிட்டனு உங்கப்பா இன்னும் கோபமாயிருக்கார்.

இதுல பொய் சொல்லி அழைக்காத.” என்று சாதாரணமாய் கூறி கத்தரித்தார் பங்கஜம்.

அதன் பின் தாயிடம் கர்ப்பவதியாக இருப்பதை கூட கூற தவிர்த்தாள்.

அடுத்து தன் புகுந்த வீட்டிலாவது கணவர் வராதது கவலைக் தர அத்தை வருவார்கள் என்று அங்கும் அழைத்து கூறினாள்.

அந்த நேரம் சுதாகர் போனை பிடுங்கி கேட்டுவிட்டார். 

“என்னம்மா நான் வர லேட்டாகுதுன்னு சொல்லு எங்கப்பா அம்மா பதறுவாங்கன்னு சொல்லி கொடுத்து எங்களை வரவழைக்க பார்க்கறானா?

இதுக்கு பதிலா சட்டுனு வரவேற்க ரெடியா ஒன்னு சொல்விங்களே. நீங்க தாத்தா பாட்டி ஆயிட்டிங்கனு அதை சொல்லலையா?” என்று நக்கல் தோணியில் சுதாகர் பேசவும் ஏனைய அக்கணம் பிருந்தாவுக்குள் கவலை சூழ, அவர்களிடமும் அவர்கள் வீட்டு வாரிசை சுமப்பதை தெரிவிக்கவில்லை‌.

அவளாக சர்வானந்தனின் போனுக்கு அழைத்து அழைத்து துவண்டாள். 

கான்ஸ்டேபிளோ நாளைக்கு வரை பார்க்கலாம் மேம். இல்லைனா தலைமையிடத்துல இருக்கற அதிகாரியிடம் போய் பேசுவோம்.’ என்றதும் சரியென்று தலையாட்டி வீட்டு வாசலிலேயே இருந்தாள்.

சட்டென போன் மின்ன கணவராக இருக்குமோயென ஆர்வமாய் காண விஹான் தான் அழைத்திருந்தான்.

“சொல்லு விஹான்” என்ற குரலே அழுது களைத்ததை கூறிட, “அண்ணி… என்னாச்சு குரல் சரியில்லை.? அண்ணன் எங்க?” என்றான்.‌

அண்ணன் எங்கே என்ற அந்த வார்ந்தையே பிருந்தாவை அழுதபடி வாய் திறக்க வைத்தது.

“தெரியலை விஹான். காலையில போனாரு. இன்னும் வீட்டுக்கு வரல. அதோட கான்ஸ்டேபிள்ல கேட்டா காலையில வந்துட்டு சைன் பண்ணிட்டு போனவர் தான் மேடம்னு சொல்றாங்க. அவர் போனும் சுவிட்ச் ஆஃப் ஆகுது. எப்படி இருக்காரு? எங்க இருக்காரு? ஒண்ணுமே தெரியல.

இதுக்கு முன்னாடி இது மாதிரி நடந்தது இல்ல விஹான்.

ரொம்ப பயமாயிருக்கு. அம்மாவை துணைக்கு கூப்பிட்டா மாப்பிள்ளை வரலைன்னு பொய் சொல்லி கூப்பிடாதேனு சொல்லுறாங்க. அத்தையிடம் சொன்னேன். மாமா பக்கத்துல இருந்திருப்பார் போல. ஏன் குழந்தை உண்டானதா சொல்லி எங்களை அங்க வரவைக்க பார்க்கலையானு கோபமா கிண்டல் பண்ணி கத்தினார்.

இங்க நிஜமாவே அவரை காணோம்‌. கான்ஸ்டேபிள் என்னனா நாளைக்கு வரை பாருங்கம்மா சார் எங்கயாவது வேலை விஷயமா கூட போயிருக்கலாம்னு. அப்பயும் வரலையா மேலதிகாரியிடம் பேசலாம்னு சொல்லிட்டார்.

ஆசை ஆசையா ஈவினிங் பிரகனென்ட் கிட் வாங்கி சோதிச்சு, அவர் அப்பாவாயிட்டார்னு சொல்ல பூவெல்லாம் வச்சி காத்திருக்கேன்‌. அவர் வரலை.

நான் என்ன செய்யறது என்று தெரியாம இப்ப வாசல்லயே உட்கார்ந்திருக்கேன் விஹான்” என்று கதறி அழுதாள்.

பிருந்தாவின் வார்த்தை ஒவ்வொன்றும் விஹானுக்குள் வலியை கடத்தியது.

அண்ணனிடம் பேசாமல் ஒரு நாளும் உறங்கியதில்லை. அப்படியிருக்க இதென்ன கவலை என்று பரிதவித்தான்.

தற்போது பிருந்தாவிற்கு ஆறுதல் உரைக்கும் வார்த்தையும் விஹான் தான் சொல்ல வேண்டும். அதனால் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு “அண்ணி கவலைப்படாதீங்க அண்ணா ஏதாவது வேற வேலை விஷயமா போயிருப்பாரு.

போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கலாம். காலையில் வந்து சாரி பிருந்தானு சொல்வாரு பாருங்க” என்றான் விஹான்.

“இப்ப கவலை இல்லாம போய் தூங்குங்க” என்று கஷ்டப்பட்டு தான் கூறினான்.

அவனுக்கே அபத்தமாக தோன்றியது. எவ்வாறு நிம்மதியாக உறங்குவார். செய்யும் தொழிலோ காவல் பணி. அதிலும் தனியாக இன்வெஸ்டிகேஷன் செய்யுமா பொஸிஷன். விரோதிகள் வராமலா இருப்பார்கள்?

“அண்ணி” என்றான்.

“காத்திருக்கேன் விஹான். உங்கண்ணாவை நம்பி நான் மலையையே முழுங்குவேன். இந்த கஷ்டத்தை முழுங்கிட மாட்டேனா? அவர் காலையில் வந்துடுவார்” என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள்.

விஹானிடம் பேசியப்பின்னும் பிருந்தா வாசலில் தான் இருந்தாள்.

கேட் திறக்கும் சப்தம் கேட்டால் ஓட தயாராக இருந்தாள். ஆனால் சர்வானந்தன் தான் வராமல் தவிக்க வைக்கின்றானே.‌

விஹானுக்கோ பிருந்தாவிடம் போன் பேசியப்பின் மனம் நிம்மதியாக இல்லை. அதனால் அண்ணனின் மேலதிகாரிக்கு அழைத்தான்.‌

கடற்கரை ரோந்து போலீஸும் அப்பொழுது தான் சர்வானந்தன் உடல் கடற்கரையில் மிதந்து வருவதை கண்டனர்.

அதனால் மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

விஹானும் போன் செய்ய, மேலதிகாரியோ “சாரி டூ சே விஹான். உங்க அண்ணன் உயிரோட இல்லை.” என்ற தகவலே கிடைக்க விஹானிற்கு உயிரே நின்றது.

“சார் என்ன சொல்றிங்க? எங்கண்ணாவுக்கு என்னாச்சு?” என்று அதிர்ந்து போனான்.

கடற்கரை ஓரமா உங்கண்ணா உடல் கிடைச்சிருக்கு” என்று இடத்தை கூறினார்.

"சார் எங்கண்ணா இறக்க மாட்டார். நீங்க தவறா சொல்லறிங்க. நான் உடனே வர்றேன். 

சார் எங்கண்ணி இப்ப தான் கர்ப்பமா இருப்பதா சொன்னாங்க. அவங்களிடம் இப்படி பொசுக்குன்னு சொல்லாதிங்க. நான் வர்றேன்‌.‌ நான் வந்து எங்கண்ணாவை பார்க்கறேன். அவனுக்கு ஒன்னும் ஆகாது” என்று கூற “சரி நீங்க நேர்ல வாங்க” என்று அணைத்தார்.

விஹான் இருப்பதோ மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பூனே இடத்தில்.
அங்கிருந்து நொடியும் தாமதிக்காமல் விமானத்தில் வரத்தயாரானான்.

வழியெங்கும் எங்கண்ணாவுக்கு ஒன்னும் ஆகியிருக்காது என்ற எண்ணத்தை மாற்றி கொள்ளவில்லை‌.

இரவெல்லாம் பிருந்தா பித்து பிடித்தவளாக வாசலில் இருந்தாள்.

அன்னை தந்தை இருந்தும் , கணவரின் தாய் தந்தை இருந்தும் ஏனோ இன்று யாருமற்ற நிலையில் கலங்கினாள்.

சர்வானந்த் எண்ணிற்கு அழைத்து சோர்ந்தவளாக வயிற்றில் பிள்ளை உதித்த முதல் நாளே பட்டினியாக இருந்தாள்.

அவள் கவலை எல்லாம் சர்வானந்தன் அடுத்த நொடி வந்து கொஞ்சி குலாவ மாட்டானா? என்ற ஏக்கம். எப்படியும் அவன் வந்தால் போதுமென்ற தவிப்பு.

இங்கு விஹான் அவசரமாய் வந்தவன் கலியமூர்த்தி கூறிய மருத்துவமனைக்கு வந்தான்.

அரக்க பறக்க இரவெல்லாம் உறங்காமல் வந்து சேர விடிந்து விட்டது.

மருத்துவமனை வளாகத்தில் நுழைந்ததும் மார்ச்சுவரிக்கு கைக்காட்ட, இதயம் செத்தே போனது. அண்ணன் இந்த உலகில் இல்லையா? என்று ஓடினான்.

பிணவறையில் அழுது, கத்தி கூச்சலிட்டு அடங்கி வெளிவர இரண்டு மணி நேரமானது. அதுகூட கலியமூர்த்தி தான் வெளியே அழைத்து வந்தார்.

சொல்லுங்க மிஸ்டர் விஹான். உங்க பேரண்ட்ஸிடம் தகவல் தெரிவிக்கலாமா?” என்று கேட்க, “சார் அவனுக்கு ரீசண்டா கல்யாணம் ஆச்சு. அண்ணி அண்ணி அங்க இவனை தேடி இருப்பாங்க” என்று துடித்தான்.

“அப்ப அங்க பாடியை கொண்டு போயிடலாம். நீங்க உங்க பேரண்ட்ஸிடம் தகவல் சொல்லுங்க. அதோட உங்கண்ணி கர்ப்பம் என்று சொன்னிங்க. அவங்களிடம் பதமா பேசுங்க” என்று உரைத்தார்.

கண்ணீரோடு ஆம்புலன்ஸில் அண்ணன் உடலை ஏற்றி அண்ணன் திருமணம் முடித்து அண்ணியோடீ வாழும் வீட்டிற்கு முதல் முறை வந்தான்.

ஆம்புலன்ஸ் என்றதும் வாசலிலேயே இருந்த பிருந்தா எழுந்தாள்.

  ஆம்புலன்ஸில் வரும் பொழுதே பெற்றவர்களுக்கும், அண்ணியின் அப்பா அம்மாவான, மாமா அத்தைக்கும் தகவல் கொடுத்தான்‌.

பங்கஜமும் அப்புசாமியும் வர அவர்களை கண்டு குழம்பி ஆம்புலன்ஸையே கவனித்தாள்.

மறுபக்கம் சுதாகர்-யோகலட்சுமி இருவரும் வர, ஆம்புலன்ஸிலிருந்து சர்வானந்தன் பிணம் இறக்கினார்கள்.

பிருந்தா வாசலில் தடுக்கி விழ, அவளது பிரகனென்ட் கிட் முதலில் கீழே விழுந்தது. மற்றவரின் பார்வை என்னவோ அவளது தோற்றத்திலும், அவள் கை நழுவியதிலும் இருந்தது.

இதில் அவளது பூசூடிய கோலம் சர்வானந்தனை எப்படியெல்லாம் தேடியதென்று கூறியது.

சர்வானந்தை கண்டு மூர்ச்சையாகி விழுந்தாள்.

அதன் பின் கண் விழிக்க பத்து மணியிருக்கும்.

பெத்தவர்களும் உற்றவர்களும் உறவுகளும் சூழ்ந்து ஐஸ் பெட்டியில் சர்வானந்தன் உறங்க, சுற்றிலும் ஒப்பாரி சப்தம்.

இத்தனை தூரம் சொத்து பிரித்த கணம் ஒருவருக்கொருவரை ஜென்ம விரோதியாக எண்ணிய சம்பந்திகள், “அய்யோ மச்சான் என் மகனை பார்றேன்.” என்று அழ, “அண்ணி என் பையனை சடலமா இருக்கானே” என்று யோக லட்சுமி கதறினார்.

பொண்ணை பெற்றவர்களுக்கு மட்டும் இக்காட்சி இனிக்கவா செய்யும். வேண்டாத மருமகனாக இருந்தாலும் மகள் ஏதோவேரு மூலையில் வாழ்கின்றாளென்று ஆனந்தம் கொண்டு வெளியே நடிக்கும் தம்பதிக்கு பிருந்தா கதறல் பார்க்க முடியவில்லை‌.

அதிலும் அவள் நேற்று மாலையிலிருந்து இறுகி வைத்திருந்த பிரகனென்ட் கிட் அவள் ஒடி வந்து தடுக்கி விழ இரு முதிய தம்பதியினருக்கும் வலியை கூட்டியது.

வாயிலும் வயிற்றிலும் அடித்து அவ்விடமே கலங்க வைத்தது.

விஹான் இரும்பு மனிதனாக, "எங்கண்ணாவை இந்த நிலைக்கு ஆளாக்கியவங்களை சும்மா விடமாட்டேன்." என்று கற்சிலையாக நின்றான்.

ஆளாளுக்கு விஹான் எப்படி வந்தானென்று காவலதிகாரி பேசிக்கொள்ளும் விதத்தால் அறிந்தனர்.

அதே போல சர்வானந்தன் எடுத்த கேஸால் தான் இவ்வாறு நிகழ்ந்திருக்க கூடுமென்று கணித்தான்.

இதில் நடுவீட்டில் சர்வானந்தன் உடல் ஐஸ் பெட்டியில் கிடக்க, தன் மகனை தேடி வந்தார் ஜெய்சங்கர். 


தன் மனைவியை பறிக்கொடுத்து வந்தவருக்கு இங்கும் இழப்பா என்று யாரிடம் என்ன கேட்பதென்று ஒவ்வொரு முகமாக பார்த்தார்.

விஹானோ ஜெய்சங்கரை கவனிக்க, அவரும் பிருந்தாவிடம் பையனை பற்றி அந்நிலையிலும் விசாரித்தார்.

மற்றவர்கள் திட்டி தீர்க்க, பிருந்தாவோ, “என்னங்க இங்க பாருங்க. நிரஞ்சனோட அப்பா வந்திருக்கார். அந்த பையனை தேடி கண்டுபிடிச்சி கொடுப்பேன்னு என்னிடம் பேசினிங்க. இப்ப அவர் மனைவி இறந்த இரண்டாவது நாளே வந்திருக்கார். இப்படி படுத்து இருக்கிங்களே? என்று அழவும் அது என்ன விவகாரமென கேட்டறிந்தனர்.

நிரஞ்சன் இன்னமும் கிடைக்கவில்லை. இதில் சர்வானந்தன் வேறு இப்படியிருக்க, கண்ணீரில் ததும்பியது அவ்விடம்.

அக்கணம் முக்காடுயிட்டு ஓர் உருவம் அவ்விட்டை எட்டி எட்டி பார்க்க விஹானோ மெதுவாக யாரும் அறியாது வாசலில் வெளியேறி அவ்வுருவத்தை அடைந்தான். ஆனால் அவ்வுருவமோ யாரேனும் தன்னை துரத்துவாரோயென யூகித்து வேகமாய் நடந்ததும்
விஹான் அந்த உருவத்தை பின் தொடர, தெரு திரும்பவும் ஓட்டமெடுத்தது. விஹான் ஏற்கனவே உச்சபட்ச கோபத்திலிருக்க ஓடிவந்தவன் அந்த நபரை ஆவேசமாய் பிடித்தான்.

-தொடரும்.

7 thoughts on “கண்ணுக்குள் கடல்-10”

  1. Kalidevi

    Sarva ku onum agathu ninacha ippadi sethutane .nalla vazhanum ninachi varavanga life ippadi tha aguma . Yar antha uruvam ethukaga inga vanthu iruku vihan pidichitan therium

  2. Avatar

    ஒருவேளை, அது நிரஞ்சனோ..?
    சர்வா ஏதோ பெருசா சாதிப்பான்னு நினைச்சேன்
    இப்படி அவனை போட்டு தள்ளிட்டிங்களே…? உங்களுக்கே இது நியாயமா…??

  3. Avatar

    மனசுல பாரங்களை ஏத்தி வச்ச மாதிரி பாரமாயிடுச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *