Skip to content
Home » கண்ணுக்குள் கடல்-2

கண்ணுக்குள் கடல்-2

அத்தியாயம்-2

    சர்வானந்தன் போலீஸ் உடையோடு தன் பைக்கில் பறந்துக் கொண்டிருக்க, வீட்டிலிருந்து அழைப்பு வந்தது.

   தனது இருசக்கர வாகனத்தை ஓரமாய் நிறுத்தி, “சொல்லுங்கப்பா?” என்றான் சர்வானந்தன்.

   “என்ன ஆனந்தா நீ காலையில அம்மா செய்த பொங்கலை சாப்பிடாம ஓடிட்டியாமே. என்‌ பையன் வெறும் வயிற்றில் வேலைக்கு கிளம்பிட்டான்னு உங்கம்மா ஒரே அழுகை. அப்படியென்ன அவசரம்?” என்று‌ கடிந்தார் சுதாகர். மனைவி யோக லட்சுமியிடம் ப்ரியம் வைப்பவராயிற்றே. இல்லத்தரசியின் கவலையை எடுத்துரைத்தார்.

   சர்வானந்தனோ கையில் கடிகாரத்தில் நேரத்தை பார்த்து, “அப்பா எனக்கு பத்து மணிக்கு மீட்டிங்.

நேரத்துக்கும் நேர்மைக்கும் பிறந்தவன் அப்பா நானு. அப்படியிருக்க, மீட்டிங்கு நேரத்துக்கு போக வேண்டாமா? பொங்கல் சாப்பிட்டு பொறுமையா வந்திருந்தா, மீட்டிங்கல தூங்கி வழிய வேண்டியது தான். இங்க கேன்டீன்ல பார்த்துக்கறேன்னு அம்மாவிடம் சொல்லிடுங்கப்பா.” என்றான்.

    பத்து மணிக்கு மீட்டிங் என்றதும் மகனிடம் பேசுவதை குறைத்து, “சரிப்பா நான் அம்மாவிடம் சொல்லிக்கறேன். நீ உடலை கவனிச்சிக்கோ. சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும். உன் உத்தியோகத்துக்கு நீ திடகாத்திரமா கம்பீரமா இருப்பது ரொம்ப முக்கியம்.” என்று தந்தை சுதாகர் அறிவுரை கூறிமுடிக்க, “சரிங்கப்பா” என்று துண்டித்தான்.

   இன்று இந்த ஏரியாவில் குழந்தை கடத்தல் வீடியோ ஒன்று,  காலையிலேயே வாட்ஸப் குரூப்பில் பரவ துவங்கிவிட்டது.

  சிசிடிவியில் முகம் மறைத்து வந்த ஆட்கள் தனியாக இருக்கும் சிறுவனிடம் சாப்பாடு பொட்டலம் நீட்ட அந்த பையன் வாங்கும் பொருட்டு முன்னே எட்டி பார்க்கும் நேரம் உணவு பொட்டலத்திற்கு கீழே ஒரு கர்ச்சீப்பை கொண்டு மூக்கில் பொத்திட மயங்கி சரிகின்றான்‌ சிறுவன்.

  உடனடியாக ஒரு ஆட்டோ வருகின்றது சிறுவனை தாங்கி ஆட்டோவில் போட்டு வண்டி கிளம்புகின்றது.

  அதே போல மற்றொரு வீட்டின் முன் விளையாடும் குழந்தையை ஒரு வண்டி அடிக்கடி நோட்டமிடும் வீடியோவும் அனுப்பியிருந்தனர்.

   பெற்றவர்கள் தங்கள் ஏரியா செய்தி என்பதால் சுடசுட தீயாக பார்வோர்ட் செய்து கொண்டிருக்க, நடுநடுவே போலீஸ் தூங்குகின்றதா என்று முகநூலில் டேக் செய்து பிரச்சனையை அதிகரித்து கொண்டிருந்தனர்.‌

  சர்வானந்திற்கு காலையிலேயே டிபார்டமெண்டிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. அவசர மீட்டிங் ஏற்பாடு செய்து விட்டார்கள்.

   சாப்பிடுவதற்கு நேரகாலமெல்லாம் ஒதுக்க முடியாது அவனும் விரைவாய் வந்தடைந்தான்.

  பெரும்பாலும் காவலதிகாரி என்றால் பணத்தை லஞ்சமென்ற பெயரில் பிடுங்கி வயிறு வளர்க்கும் கூட்டமாக பார்த்து இருப்பவர்களுக்கு தன் பணியை கண் போல பாவிப்பவர்களை அறிந்து வைத்திருப்பது குறைவே.

   ஆனால் சர்வானந்தனை கவனித்திருக்க வாய்ப்புண்டு. அவன் உடற்கட்டும், யாரிடமும் பேசும் கறார் பேச்சும், லஞ்சத்தை நீட்டும் மக்களிடம் முகம் திருப்பி செல்வது ஓரளவு அறிந்தவர் உண்டு.

    அவசர மீட்டிங்கில் தன் மேலதிகாரிக்கு சல்யூட் அடித்து நிற்க, அனைவரும் வந்துவிட்டதாக மீட்டிங் துவங்கப்பட்டது.

     முன்பெல்லாம் குழந்தை கடத்தி கண்ணை நோண்டி பிச்சை எடுக்க வைப்பார்கள் என்று கூறி குழந்தையை அச்சுருத்துவார்கள்.

   அதோடு இடைப்பட்ட காலத்தில் பெண்கள் என்றால் விலைமகளாகவும், ஆண்கள் என்றால் அடிமையாக அடிதடி கத்தி குத்துவிற்கு உபயோகித்து கொள்வார்கள். இன்று நிலைமையே வேறு.

   யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல மனிதனும் இருந்தாலும் இறந்தாலும் அவர்களை வைத்து பணம் பார்த்திடுவார்கள். தலையில் இருந்து கண் மூளை இதயம், கிட்னி, தோல், முதல் முடி ரத்தம் என விற்பனை செய்கின்றார்கள். இதில்  கர்ப்பப்பையை கூட வாடகை முறையில் குழந்தை பெறவும், குறைந்த மாத கருவை எடுத்து விற்றாலும் அழகுக்கலைக்கு பணம் கொடுத்து வாங்குகின்றார்கள். என்ன சம்மந்தப்பட்ட பெண் அனுமதி கூட வேண்டாம். மயக்கத்திலேயே கடத்தி வந்து ஊசி மூலமாக கருவை செலுத்தி குழந்தையை பெற வைத்து விற்கின்றார்கள்.

   எல்லாமே பணம் என்று மாயமாக மனிதனிடம் இருக்கும் மனிதநேயம் மாயமாகிடுகின்றது.

   அதிலும் சிறுவன் சிறுமி கடத்தல் அதிகமாக நடைப்பெறுகிறது. இப்பொழுது எல்லாம் பெற்ற பிள்ளைகளை பக்கத்து கடைக்கு கூட தனியாக அனுப்ப பயப்பட வேண்டிய உலகத்தில் திரிகின்றோம்.

    இங்கே யார் கடத்தியது எதற்கு கடத்தியிருப்பார்கள். எப்படி இவர்களை பிடிப்பது‌? அல்லது தடுப்பது என்று மாநாடு நிகழ்ந்தது.

    சர்வானந்தன் அதில் கவனம் செலுத்தியிருக்க, அவன் போன் சைலண்டில் மின்னி அணைந்தது.
  
   அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல, ஏழெட்டு முறை என்றதும், சர்வானந்தன் போனை அணைந்துவிட்டான்.

   நான்கு சுவரில் காவலர்கள் இதற்கு ஒரு திட்டம் போட்டு அதனை செயல்படுத்த ‘மிஸ்ஸிங் சைல்ட்’ என்று ஆப்ரேஷனை ஆரம்பித்து பேசினார்கள்.  

  சர்வானந்தன் தலைமையில் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

   சர்வானந்தனும் மீட்டிங் முடிய, வெளியே வந்தான்.

‘இவளுக்கு எத்தனை முறை சொல்லறது. ஒரு முறை போன் எடுக்கலைன்னா அடுத்து வரிசையா போன் பண்ணாதனு.’ என்று கடுகடுன்னு போனை எடுத்து தன் காதலி பிருந்தாவிற்கு அழைத்தான்.

"ஏன்டி போன் எடுக்கலைன்னா கொஞ்ச நேரம் காத்திருக்க மாட்டியா?" என்று சர்வானந்தன் பொரிய, மறுபக்கம் அழுகை சத்தம் கேட்டது. 

“சர்வா அப்பா அப்பா… எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார்.‌ ஈவினிங் என்னை பார்க்க மாப்பிள்ளை பையன் வர்றாராம். என்னை காலேஜிக்கு அனுப்பலை” என்று விக்கித்து விக்கித்து அழவும், “பிந்து ஏய்… எவன் வந்து உன்னை பார்க்கட்டும் போகட்டும். உன் கழுத்துல தாலி கட்டி உன்னை ஆளப்போறதும் நான்‌ தான். ஈவினிங் உன்னை பார்க்க நான் வருவேன்.” என்று உரைக்கவும் “ம்ம்” என்று தெம்பு வந்தவளாக போனை வைத்தாள்‌.

 போன் பேசி முடித்ததும் தான் நிம்மதி உணர்ந்தவளாக பிருந்தா இருக்க, சற்று தெளிந்தாள். 

சர்வானந்தன் சொன்னால் நிச்சயம் செய்யும் ரகமென்று வாசலில் தவம் இருந்தாள்.

பெண் பார்க்க நகை புடவை என்று அணிந்தபடி இருக்க, பிருந்தா சேட்டை பிடிக்காமல் இருப்பதே பெற்றவர்களுக்கு திகிலை தந்தது.

ஆனாலும் பெண் பார்க்க வருபவரிடம் மகள் காதலிப்பதை உரைத்திருக்க நிம்மதியாக இருந்தார். அவர் ஒன்றும் மூடி மறைக்கவில்லையே‌.

அந்த தைரியத்தில் பெற்றவர்களும் இருந்தார்கள்.

சரியாக நான்கு மணிக்கு பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரவும், பிருந்தா தந்தை கைலாஷ் ஆனந்தமாய் வரவேற்றார்.

ஒவ்வருத்தராக அமர, பிருந்தா வந்து காபி தட்டை நீட்டவும் மாப்பிள்ளைகென்று கொடுக்கும் பொழுது சர்வானந்தன் வந்து எடுத்துக்கொண்டான். 

காக்கி உடையில் வந்தவன், “அப்பறம் பொண்ணு பார்க்க வந்திங்களா மாப்பிள்ளை சார். மாமா என்னை பத்தி விளக்கி சொல்லியும் வந்திருக்கிங்க?” என்று கேட்க, தான் பருக வந்த காபியை எடுத்ததில் மாப்பிள்ளை பையனுக்கு முகம் கறுத்தது.

“ஆப்ட்ரால் நீங்க குடிக்க எடுக்க வந்த காபியை, நான் கையில எடுத்ததும் முகம் கறுக்குது. நான் சின்ன வயதிலிருந்து ஆசையா என் தாய் மாமா பொண்ணை விரும்பறேன். கல்யாணம் பண்ண கனவெல்லாம் கண்டிருக்கேன். கேப்ல வந்து நீங்க பொண்ணு பார்த்தா அதென்ன நியாயம் சார்.” என்றதும் மாப்பிள்ளை பையனாக வந்தவனோ, “உங்க மாமா தான் வரச்சொன்னார்.” என்று பதில் தந்தார்.

“சார் மாமா உண்மையை சொல்லி தானே வரச்சொன்னார். அப்படின்னா கல்யாண பொண்ணு பிருந்தாவுக்கு பிடிக்கலைனு தெரியுது இல்லையா? அப்பறமும் தட்டுமாத்த பூ பழம் வெத்தலை பாக்குன்னு வந்து நின்றா என்ன அர்த்தம்?” என்றதும் கல்யாண பையன் “சாரி சார்” என்று தடதடவென செல்ல, அவன் பின்னாலே “டேய் கண்ணா” என்று பெற்றவள் செல்ல, மாப்பிள்ளையின் தந்தையோ, “அப்பு சார் நீங்க உங்க தங்கை பையன் வீடு தேடி வரமாட்டார்னு சொன்னிங்க. அதை நம்பி தான் நாங்க வந்தோம். அவமானப்படுத்திட்டிங்க” என்று நகர்ந்தார்.

பிருந்தா தந்தை அப்புசாமியோ “இல்லைங்க ஒரு நிமிஷம்” என்று பின் தொடர பெண் பார்க்க வந்த கூட்டம் வாசலை தாண்டியிருந்தது.

சர்வானந்தன் அப்புசாமியை ஏளிட்டான். அவன் காதலிக்கும் பிருந்தா தன் சொந்த தாய் மாமாவின்‌ மகள். ஐந்து வருடம் முன் குடும்ப சண்டை காரணமாக பேச்சு வார்த்தை கிடையாது.
‌பெரியவர்கள் தலைமுழுகி போன உறவில், பிருந்தாவை காதலிப்பதாக சர்வானந்தன் கூற பிருந்தாவுக்கும் சர்வாவை பிடித்திருக்க, இரண்டு வருட காதல் சமீபகாலமாக பெரியவர்களுக்கும் தெரிய விஸ்வரூபம் எடுத்தது.

அப்புசாமி சுதாகர் ஒரு திருமணத்தில் சந்திக்கும் நேரம் சண்டையிட, அதன் வாக்குவாதத்தில் “அப்பு மாமா வீட்டில் படியேற மாட்டேன் என்று சர்வா வாக்கு தத்தான். அதனால் தான் எப்படியும் இங்கு வந்து தடங்கல் செய்ய மாட்டான் என்று நம்பினார்.

பிருந்தாவை வீட்டிலே வைத்து திருமணம் பேசி முடித்திட திட்டம் போட்டார்‌. ஆனால் நான் என் பிருந்தாவிற்காக காலடி வைப்பேன் என சர்வானந்தன் வந்து நின்றான்.

“நான் இங்க இருக்க மாட்டேன் சர்வா. என்னை கூட்டிட்டு போ” என்று கூற கைப்பற்றினான்.

தன் பேண்ட் பேக்கெட்டில் வைத்திருந்த மாங்கல்யத்தை எடுத்து அணிவித்தான்.

“அப்படியே கூட்டிட்டு போனா உன்னை ஓடுகாலி சொல்லுவாங்க. தாலி கட்டிட்டு என் மனைவியா அழைச்சிட்டு போக வந்துட்டேன்.” என்றவன் பிருந்தா அப்பா அப்புசாமி மற்றும் தாய் பங்கஜம் இருவர் எதிரில் தன் மாமன் மகளுக்கு தாலி அணிவித்தான்.

சாதாரணமாகவே பதினெட்டு வயது பூர்த்தியானவர்களின் வாழ்வை தடையிடமுடியாது. அதிலும் இவன் காவலதிகாரி‌, உரிமையானவனும் கூட, மேலும் மகளே அவனோடன் செல்ல விரும்ப, அதனால் கையாளாகாத தனத்தில் கோபமாய் நின்றனர்.

சர்வாவோ “போலாம் பிருந்தா” என்று அழைக்க தாய் தந்தையரை கண்டு “அப்பா அம்மா நான் யாரையோ நம்பி போகலை. நம்ம சர்வா மாமாவை நம்பி போறேன். உங்க சண்டையில் என் மனசை வதைக்காதிங்க. மனசுக்குள்ள என் மேல அன்பிருந்தா என்னை வாழ்த்துங்க” என்று கூறி சென்றாள்‌.

சர்வாவோ “நம்மளை வாழ்த்தாம சாபமா விடுவாங்க? நீ வா பிருந்தா” என்றான்.‌

‌‌சர்வாவுடன் பைக்கில் பயணிக்க, “ஏங்க அத்தை மாமா என் மேல கோபப்படமாட்டாங்களே? என்னை ஏற்றுப்பாங்க தானே.” என்று கேட்டாள்.

“அம்மாவுக்கு அவங்க அண்ணன் மகளை மருமகளா அழைச்சிட்டு வந்தா கசக்குமா என்ன?” கூறியவன் தாய் யோகலட்சுமி தந்தை சுதாகர் ஏற்றுப்பாரென நம்பினான்.

இருவரும் வாசலில் பைக்கை நிறுத்த, பிருந்தா கழுத்தில் மஞ்சள் தாலி கயிறு இருக்கவும் சுதாகரோ “நில்லு டா” என்று அவ்விடம் அதிர சப்தமிட்டார்‌.

-தொடரும்.

7 thoughts on “கண்ணுக்குள் கடல்-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *