Skip to content
Home » கண்ணுக்குள் கடல்-6

கண்ணுக்குள் கடல்-6

அத்தியாயம் -6

     இரண்டு வாரமாய் வினோத்திற்கு மானஸ்வியை சமாதானம் செய்வதிலேயே நேரம் கழிந்தது.

    மானஸ்வி எளிதில் மனம் மாறவில்லை. இருக்காதா பின்னே?! இரவு நேரத்தில் தன் திருமணம் சம்மதமாக பேச வந்தவள். அப்படி இருக்க வினோத் பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு, பொது இடத்தில் தியேட்டரில் படம் பார்த்து கொண்டு, போதையில் முத்தம் கேட்டு அடம் பிடித்தவனை என்ன செய்வது?

   யாரேனும் தியேட்டரில் வம்பு செய்து போலீஸ் வரை பிரச்சனை இழுத்து தொலைத்திருந்தால்? இதையெல்லாம் மானஸ்வி யோசிக்காமல் இல்லை.

    பிரச்சனை எந்த விதமாக எல்லாம் வரலாமென்று சிந்திப்பவளே. தனித்து வாழும் தன்னிலை என்பதால், இதெல்லாம் யோசித்து வைப்பாள்.
  
   சிலருக்கு மட்டும் தான் நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டுமென சிந்திப்பார்கள். மானஸ்வி நேர்மறை எண்ணங்களை எண்ணுவது போல எதிர்மறை எண்ணங்களாக வந்தாலும் நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டுமென திடப்படுத்தி கொள்பவளே.

    வினோத்தை காதலித்தது கூட தனக்கென யார் மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைப்பது? தானாக வந்த காதலை தனக்கும் பிடித்திருக்க ஏற்றாள்.

வினோத் கெஞ்சாத குறையாக தொடர் குறுஞ்செய்தியில் காதல் வேட்கை கொண்ட பதிவாக போட்டு மன்னிப்பை கேட்டான்.

பூங்கொத்து வாங்கி பரிசு வாங்கி கொடுத்தான்.

இரண்டு வாரத்தில் அவன் செய்த அக்கப்போரில் “சரி சரி மன்னிச்சிட்டேன்” என்றால் மானஸ்வி.

அடுத்த நிமிடமே “சரி எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் நீ ஓகே சொன்னா இந்த நிமிஷமே தாலி கட்டறேன்” என்று கையில் தாலி கயிறை வைத்து கேட்டான்.

மானஸ்வி அவனது செய்கையில் கண்ணீர் வந்து பேச்சற்று நின்றாள்.

“உடனே எப்படி வினோத் கட்டிக்கிறது.
எனக்குன்னு யாரும் இல்ல உண்மைதான். ஆனா மேரேஜ் சிம்பிளா வேணான்னு தோணுது. என்னோட ஆபீஸ்ல வேலை செய்றவங்க, ஸ்கூல் காலேஜ் பிரெண்ட்ஸ் இருக்காங்க. இப்ப தங்கி இருக்கிற ஹாஸ்டல்லோட மேளம் இருக்காங்க அங்கேயேயும் ரூம் மேட்ஸ் இருக்காங்க.
அவங்களெல்லாம் ஒன்று சேர்த்து, எனக்கும்,
என் திருமணத்துக்கு கொஞ்சம் போல கூட்டம் வருதுன்னு கண்குளிர பார்க்க வேண்டாமா?

அதோட உன்னோட பேரன்ட்ஸையும் நான் இன்னும் மீட் பண்ணவே இல்ல. அவங்கள மீட் பண்ணி அவங்கள கன்வின்ஸ் பண்ணி, உன்னோட சொந்தக்காரங்களையும் சேர்த்து நம்ம கல்யாணத்துல நிறைவாக மணமுடிக்க ஆசையா இருக்காதா?! ” என்றாள்.

 வினோத் முகம் எல்லாம் மலர்ந்து "சரி நீ என்னோட அப்பா அம்மாவை இப்பவே பாக்க வர்றியா? உன்னை கூட்டிட்டு போகவா?" என்று கேட்டான்.‌

மானஸ்வி சிந்தனையில் உடனே என்றால் எப்படி வினோ? நீ முதல்ல என்ன பத்தி உங்க அப்பா அம்மாகிட்ட பேசு. அவங்களுக்கு என்னை பத்தி அபிப்ராயம் என்னனு பாரு. பிறகு பிடிச்சிருந்தா சந்திக்க வர்றேன். என்னை பத்தி ஒன்னும் சொல்லாம நேரா இவளை காதலிக்கறேன்னு காட்டினா நல்லா இருக்காது வினோத்.

மெதுவா நம்ம காதலிச்சதையும், என்ன பத்தியும், சொல்லு. அவங்களுக்கு என்ன பாக்கணும்னு விருப்பம் இருந்தா, அதுக்கப்புறம் நான் வந்து மீட் பண்றேன், இது இடையில என்கிட்ட பேசணும்னா போன்ல என்னை காண்டாக்ட் பண்ண சொல்லு. உடனே நான் கால் பண்றேன். முடிஞ்சா அப்பவே நேர்ல வந்துடறேன். என்ன சொல்லற?” என்று கேட்டாள்.

வினோத் தலையாட்டி சரி என்று புறப்பட்டான்.

அவர்கள் வாங்கி வைத்த வேர்கடலை அப்படியே சாப்பிடாமல் கடற்கரை மண்ணில் கோன் ஐஸ் ஷேப்பில் வைத்திருக்க, அவர்கள் இரண்டெட்டு நகர்ந்ததும் நிரஞ்சன் ஓடிவந்து அதனை எடுத்தான்.

எடுக்கும் தோரணையில் ஆங்காங்கே வேர்கடலை சிதறியது.

ஆனால் பசி வயிற்றை கிள்ள, கடகடவென திண்றான்.
இதில் கீழே மண்ணில் விழுந்த வேர்கடலையையும் பொறுக்கி எடுத்து மண்ணோடு விழுங்கினான்.

கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் துளிர்த்தது.

அதனை தன் அழுக்கு சட்டையில் துடைத்து கொண்டு வேர்கடலை இருக்கும் பேப்பரை கைகள் நடுங்க பிடித்திருந்தான். 

எதிரே அங்கே திரியும் நாய் கூர் பற்களோடு அவனை நெருங்க, பேப்பரை காற்றோடு பறக்கவிட்டு ஓட்டமெடுத்தான்.

நாயும் துரத்துவதை கண்டு “அம்மா அப்பா அம்மா” என்று அலறிக்கொண்டு ஓடினான்.‌

அங்கிருந்த கடைக்காரர்கள் மனிதர்கள் நாயை விரட்ட, நாய் மிரண்டு வேறு பக்கம் ஓடியது‌.

நிரஞ்சன் அதனை கவனித்தால் தானே. எங்கே வேகத்தை குறைத்தால், நாய் கடித்திடுமோயென தரையில் கால்படாமல் ஓடினான்.

ஓடியவன் எதிரே வந்த பிருந்தாவையையும் சர்வானந்தனையும் இடித்து விழுந்தான்.

“டேய் தம்பி அடிப்பட்டுருச்சா?” என்று சர்வானந்தன் கேட்க, இதற்கு முன் காக்கி உடையில் சர்வானந்தனிடம் உணவு பொட்டலத்தை திருடிய போது முகத்தை கவனித்திருக்க நிரஞ்சனின் நினைவாற்றல் அப்பொழுதே ஓடிவிடு என உந்தவும் சர்வானந்தன் கையை தட்டிவிட்டு ஓடினான்.

அதற்கேற்றது போல ”டேய் தம்பி நீ அன்னிக்கு.. டேய் நில்லு டா.” என்று அழைக்க திபுதிபுவென ஓடினான்.

“யாருங்க?” என்று பிருந்தா தோளை சுரண்ட, “நம்ம கல்யாண நாளைக்கு யாருக்குமே கல்யாண சாப்பாடு போடலைனு பீல் பண்ணிட்டு இருந்தேன். இந்த பையன் அவனா வந்து ஹோட்டலில் நமக்குன்னு உணவு வாங்கி பைக்ல வச்சேன். அதை எடுத்துட்டு இப்படி தான் ஓடிட்டான். இப்ப எதச்சையமா பார்க்கறேன். அவன் இப்பவும் ஓடிட்டான்.‌ ஏன்னு தெரியலை இந்த பையன் முகம் அதனால் மனசுல பதிந்திடுச்சு.” என்று கூறவும் பிருந்தா சிறுவன் நிரஞ்சன் சென்ற திசையை கவனித்தாள்.

அழுக்கான உடையோடு எவனோ ஒரு சிறுவன் செல்ல, “ஏங்க… கல்யாணமாகி ஒரு மாசமாகுது இன்னிக்கு தான் தியேட்டருக்கு பிறகு பீச்சுக்கு வந்திருக்கோம். உங்க பார்வையை இங்க திருப்புங்க” என்று அவன் கரம் பற்றி கடலை நோக்கி அழைத்து சென்றாள்.

இருவரின் பாதங்களை முத்தமிட்டு விளையாடி சென்ற கடலின் அழகை ரசித்தாள்.

என்றாவது இந்த கடல் தன் பாதத்திற்கு தீண்டி செல்வதற்கு பதிலாக இதயத்தை பருகுமென நினைத்ததில்லை.

இருவரும் கடற்கரையில் அமரவும், “அப்பா அம்மா இன்னமும் ஏத்துக்கலை சர்வா. என்ன செய்யறது? அத்தை மாமாவாது உங்களிடம் பேசறாங்களா?” என்று வருத்தமாய் கேட்டாள்.

“என்ன பிருந்தா பேசினா சொல்ல மாட்டேனா? அம்மா மட்டும் அப்பாவுக்கு தெரியாம திருட்டுத்தனமாக என்னிடம் பேசறாங்க. தம்பி விஹன் எப்பவும் போல பேசுவான். என்னிடம் பேசலைனா அவனோட அன்றைய நாள் முழுமையடையாதுன்னு சொல்வான்‌. ஏன் எனக்குமே என் தம்பியிடம் பேசலைனா அந்த நாள் முழுமையில்லை” என்று கூற பிருந்தா விசும்பினாள்.

“ஏய்ய்ய்… எதுக்கு அழுவற?” என்று பதறினான் சர்வானந்தன்.‌

“பின்ன அத்தை உங்களிடம் பேசுறாங்க தானே‌. என்னிடமும் இரண்டு வார்த்தை மாமாவுக்கு தெரியாம திருட்டுதனமா பேசினா என்ன? நான் அவங்க உடன்பிறப்போட மகள் தானே?

இத்தனை நாள் அவங்க உங்களிடம் கூட பேசலைனு தவிச்சேன். அவங்க பேசறாங்க ஆனா நீங்க என்னிடம் ஷேர் பண்ணலை. இதுல விஹான்” என்று குமைந்தாள்.

“பிருந்தா… அம்மாவிடம் பேசறியா? கால் பண்ணவா?” என்று நொடியும் தாமதிக்காது அம்மாவின் எண்ணிற்கு அழைத்தான்.

மறுமுனையில் கர்ஜினையாக “என்னடா வெட்கமேயில்லாம என் பொண்டாட்டிக்கு கால் பண்ணற? சூடு சொரணை எதுவும் இல்லையா? அதானே தாய் மாமன் குணமா?

போலீஸா இருந்துட்டு திருட்டுத்தனமா போன் பேசியிருக்க, உங்கம்மா கால் ஹிஸ்ட்ரி பல்லை காட்டி உன்னை காட்டி கொடுத்துடுச்சு.” என்று பேசவும், “அப்பா” என்று சர்வானந்தன் ஆரம்பித்தான்.

சுதாகரோ “நிறுத்துடா. கல்யாணமாகி ஒரு மாசம் ஓடவும் பாசம் முளைக்குதோ? வீட்டை விட்டு போறப்ப இருந்த ரோஷம். வெறும் பேச்சுக்கு மட்டும் தானா?” என்று இகழு, “ஏங்க அவனே” என்று யோக லட்சுமி இடையிட, “வாயை மூடு டி” என்று அதட்டி விட்டு போனை துண்டித்தார்.

சர்வானந்தனோ போனை வெறித்து கடலை மெதுவாக நோக்கினான்.

பிருந்தாவோ, “சாரிங்க” என்று தோளை தீண்டினாள்.

“இட்ஸ் ஓகே பிருந்தா. அப்பா கோபம் ஒரு மாசத்துல தீருமா என்ன? விடு நம்ம மூடை ஸ்பாயில் பண்ணிக்க வேண்டாம்‌” என்று எழுந்தான்.

வெளியே உணவு முடித்து வீட்டுக்கு செல்வதாக இருந்தனர். அதனால் அதுப்படியே மாற்றமின்றி செயல்படுத்தினார்கள்.

என்ன சர்வானந்தன் முகம் லேசான வருத்தம் தாக்கியது.

அப்படியென்ன இவர்களுக்குள் பகை.

அப்பு மாமா வீட்டில் சொத்து பிரிக்கும் நேரம் பொண்ணுக்கு சொத்து கொடுக்க வேண்டுமா என்ன? என்று பரம்பரை சொத்தை கொடுக்க யோசித்தார். முக்கிய காரணம் சுதா கருக்கு இரண்டு மகன். சர்வானந்தன் போலீஸ் அதிகாரி. விஹான் நீச்சல் வீரன் கூடுதலாக இங்கே சாக்லேட் கப்பே திறக்க போகின்றேன் என்று பணம் சேர்க்கின்றானென அப்புசாமி மாமா தவிர்த்தார்.

சுதாகர் தன் மனைவிக்கு சொத்து வேண்டுமென்று அடம் பிடிப்பவர் அல்ல. ஆனால் இது போல பெண் பிள்ளைக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சட்டத்தை எடுத்துரைத்தார்.

சாதாரண பேச்சு வாதமாக மாறி ஒரு குடும்பம் இரு அணியாக மாறியது.

வாதத்தில் வார்த்தையை இருதரப்பும் அள்ளி வீசிக் கொண்டார்கள்.

யார் பேசியது தவறு யார் பேசியது நியாயம் என்று அளவிட முடியாது.
உனக்கு நான் சளைத்தவர் அல்ல என்று இரண்டு பக்கமும் பேச்சு முட்டியது.

இதோ சொந்த பந்தத்தில் திருமணம் செய்தும் விரோதியாக நிற்கின்றனர்.

சர்வானந்திற்கு ஏதோ வயிற்றை நிறைத்திட, கொஞ்சம் கொஞ்சமாய் பிருந்தாவோடு சகஜமாக மாறினான்.

-தொடரும்.

8 thoughts on “கண்ணுக்குள் கடல்-6”

  1. Avatar

    சொத்துன்னாலே இப்படித்தான் பிரச்சினை ஆகிடுமோ என்னவோ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *