11. அரண்மனைச் சிறை
மறுநாள் காலையில் குமாரலிங்கம் உறக்கம் நீங்கிக் கண்விழித்து எழுந்தபோது, சூரியன் உதயமாகி மலைக்கு மேலே வெகுதூரம் வந்திருப்பதைப் பார்த்தான். ‘அப்பா! இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோ ம்! பல தினங்கள் தூக்கமில்லாமல் அலைந்ததற்குப் பதிலாக இப்போது வட்டி சேர்த்துத் தூங்குகிறோம் போல் இருக்கிறது!” என்று எண்ணித் தனக்குத்தானே நகைத்துக் கொண்டான். சுற்று முற்றும் பார்த்துத் தான் படுத்திருந்த இடத்தைக் கவனித்ததும் அவனுடைய நகைப்புத் தடைபட்டது. முதல் நாள் காலையில் தான் படுத்துத் தூங்கிய வஸந்த மண்டபம் அல்ல அது என்பதையும், அந்தப் பழைய கோட்டைக்குள்ளே இடிந்து கிடந்த பல பாழுங் கட்டிடங்களில் ஒன்றின் மேல் மச்சுத் தளம் அது என்றும் தெரிந்து கொண்டதும் அவனுக்கு ஒரே வியப்பும் திகைப்புமாய்ப் போய்விட்டது. நேற்றிரவுதான் இந்தக் கட்டிடத்துக்கு வந்து, மேல் தளத்தில் ஏறிப் படுத்துக் கொண்டதாகவே அவனுக்கு ஞாபகம் வரவில்லை. உறக்கக் கலக்கத்தோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கையில் தற்செயலாக இங்கே வந்ததும் படுத்துத் தூங்கிப் போயிருக்க வேண்டும்!
இது என்ன கட்டிடமாயிருக்கும்? ஒரு வேளை…? ஆகா? சந்தேகம் என்ன? ‘சின்ன நாச்சியார் அரண்மனை’ என்பது இதுவாகத்தான் இருக்க வேண்டும்!
பிறகு ஒவ்வொன்றாக இரவில் கனவிலே கண்ட நிகழ்ச்சிகள், கேட்ட சம்பாஷணைகள் எல்லாம் குமுறிக் கொண்டு ஞாபகம் வந்தன. உண்மையில் அவ்வளவும் கனவுதானா? கனவு என்றால், அநுபவங்கள் எல்லாம் அவ்வளவு உண்மை போலத் தோன்றுமா? ஒரே நாள் இரவில் பத்துப் பதினைந்து தினங்களின் நிகழ்ச்சிகளை உண்மை போல் உணர்ந்து அநுபவிக்க முடியுமா? அந்த அநுபவங்களும் பத்துப் பதினைந்து வருஷங்களில் நீடித்த அநுபவங்களைப் போல் உள்ளத்தில் பதிய முடியுமா?
இந்தப் பாழுங் கோட்டையில் ஏதோ மாய மந்திரம் இருக்கிறது! பொன்னம்மாள் சொன்னபடி மோகினிப் பிசாசு இல்லாவிட்டால், வேறு ஏதோ ஒரு மாயப் பிசாசோ, பில்லி சூனியமோ கட்டாயம் இங்கே இருக்கிறது. சேர்ந்தாற்போல் சில நாள் இங்கே இருந்தால் மனுஷனுக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடலாம்! உடனே இங்கிருந்து நடையைக் கட்ட வேண்டியதுதான்!…
பொன்னம்மாளை மறுபடியும் பார்க்காமலே போய் விடுகிறதா? அழகுதான்! பொன்னம்மாளாவது, கண்ணம்மாளாவது! ஐந்தாம் வகுப்புக் கூடப் பூர்த்தியாகப் படிக்காத பட்டிக்காட்டுப் பெண்ணுக்கும் காலேஜுப் படிப்பையெல்லாம் கரைத்துக் குடித்த தேசபக்த வீரனுக்கும் என்ன சிநேகம், என்ன உறவு ஏற்படக்கூடும். இந்தப் பாழுங் கோட்டையிலுள்ள ஏதோ ஒரு மாய சக்தியினால்தான் பொன்னம்மாளைப் பற்றிய நினைவே தன் மனத்தில் உண்டாகிறது. உடனே இங்கிருந்து புறப்பட வேண்டியதுதான்! வேறு எங்கே போனாலும் பாதகமில்லை. இங்கே ஒரு நிமிஷங்கூட இருக்கக்கூடாது!
இவ்வாறு தீர்மானித்துக்கொண்டு, அந்தப் பழைய மாளிகை மச்சிலிருந்து கீழே குதித்து இறங்கி, ஒற்றையடிப்பாதையை நோக்கிக் குமாரலிங்கம் நடந்தான்.
திடீரென்று நாய் குரைக்கும் சத்தம் கேட்டது! குமாரலிங்கத்தின் நாவும் தொண்டையும் ஒரு நொடியில் வறண்டு விட்டன. அப்படிப்பட்ட பயங்கர பீதி அவனைப் பற்றிக் கொண்டது. காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால், நம்ப முடியாத அசட்டுக் காரணந்தான்! இரவில் கனவிலே கேட்ட வேட்டை நாயின் குரைப்புச் சத்தத்தை அது அவனுக்கு நினைவூட்டியதுதான்.
காரணம் எதுவாயிருந்தாலும் மனத்தில் தோன்றிய பீதி என்னவோ உண்மையாயிருந்தது. சட்டென்று பக்கத்திலிருந்த இடிந்த பாழுஞ் சுவர் ஒன்றுக்குப் பின்னால் மறைந்து நின்று, ஒற்றையடிப் பாதையில் யார் வருகிறார்கள் என்று கவனித்தான்.
அவன் மறைந்து நின்றதும், கவனித்ததும் வீண் போகவில்லை. சில நிமிஷத்துக்கெல்லாம் கையில் தடியுடன் ஒரு மனிதன் முன்னால் வர, அவனைத் தொடர்ந்து ஒரு நாய் வந்தது. நாய் என்றால் தெருவில் திரியும் சாமான்ய நாய் அல்ல; பிரமாண்டமான வேட்டை நாய். முன் காலைத் தூக்கிக் கொண்டு அது நின்றால் சரியாக ஓர் ஆள் உயரம் இருக்கும்! எருமை மாட்டை ஒரே அறையில் கொன்று தோளிலே தூக்கிப் போட்டுக்கொண்டு அநாயசமாகப் போகக்கூடிய வேங்கைப் புலியுடன் சரிசமமாகச் சண்டையிடக்கூடிய நாய் அது!
குமாரலிங்கம் மறைந்து நின்ற பாழுஞ் சுவருக்கு அருகில் வந்த போது அந்த நாய் மேற்படி சுவரை நோக்கிக் குரைத்தது. முன்னால் வந்த மனிதன் திரும்பிப் பார்த்து “சீ! கழுதை, சும்மா இரு!” என்று சொல்லிவிட்டுக் கைத் தடியால் நாயின் தலையில் ‘பட்’ என்று ஓர் அடி போட்டான். நாய் ஒரு தடவை உறுமிவிட்டுப் பிறகு பேசாமல் சென்றது. மனிதன் நாயை அடித்த சம்பவத்தை குமாரலிங்கம் சரியாகக் கவனிக்கவில்லை. கவனிக்க முடியாதபடி அவனுடைய மனத்தில் வேறொன்று ஆழமாகப் பதிந்துவிட்டது. அப்படிப் பதிந்தது நன்றாகத் தெரிந்த அந்த மனிதனுடைய முகந்தான். முறுக்கிவிட்ட மீசையோடு கூடிய அந்த முரட்டு முகம், மாணிக்கவல்லியின் தந்தை சாக்ஷாத் சோலைமலை மகாராஜாவின் முகத்தைப் போலவே தத்ரூபமாக இருந்தது.
சுவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த படியினால் குமாரலிங்கத்துக்குத் தலை சுற்றியபோதிலும் கீழே விழாமல் தப்பிக்க முடிந்தது.
மனிதனும் நாயும் மறைந்த பிறகு குமாரலிங்கம் கோட்டை மதில் ஓரமாக ஓடிய சிறு கால்வாய்க்குச் சென்று முகத்தையும் சிரஸையும் குளிர்ந்த தண்ணீரினால் அலம்பிக் கொள்ள விரும்பினான். அதனால் தன் மனம் தெளிவடையும் என்றும், மேலே யோசனை செய்து எங்கே போவதென்று தீர்மானிக்கலாம் என்றும் எண்ணினான். அவ்விதமே கால்வாயை நோக்கிச் சென்றான்.
போகும்போது, சோலைமலை மகாராஜாவை எந்தச் சந்தர்ப்பத்திலே அவன் பார்த்தான் என்பதும், இளவரசி மாணிக்கவல்லிக்கும் அவருக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளும் திரும்பத் திரும்ப அவனுக்கு ஞாபகம் வந்து கொண்டிருந்தன.
மாறனேந்தல் மகாராஜா உலகநாதத்தேவர், சோலைமலைக் கோட்டையில் வெகு காலமாகப் பூட்டிக் கிடந்த ‘சின்ன நாச்சியார் அரண்மனை’யில் சுமார் பதினைந்து தினங்கள் வசித்தார். அந்த அரண்மனை வாசம் ஒருவிதத்தில் அவருக்குச் சிறைவாசமாகத்தான் இருந்தது. சிறைவாசத்திலும் தனிச் சிறைவாசந்தான். ஆனாலும் சொர்க்கவாசத்தின் ஆனந்தத்தை அவர் அந்த நாட்களில் அநுபவித்துக் கொண்டிருந்தார். பகலெல்லாம் அந்த அரண்மனைச் சிறையின் மேன்மாடத்தில் அவர் அங்குமிங்கும் நடந்துகொண்டிருப்பார். அவருடைய கால்கள் நடந்து கொண்டிருக்கையில் உள்ளம் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருக்கும்.
ஒரு குறிப்பிட்ட பலகணியின் அருகே அவர் அடிக்கடி வந்து நின்று எதிரே தோன்றிய பெரிய அரண்மனையை நோக்குவார். அந்த அரண்மனையின் மேல் மாடி முகப்பில் சில சமயம் ஒரு பெண் உருவம் உலாவிக் கொண்டிருக்கும். இளவரசி மாணிக்கவல்லி தமக்காகவே அங்கு வந்து நிற்கிறாள், உலாவுகிறாள் என்பதை எண்ணும் போதெல்லாம் அவருடைய உள்ளம் துள்ளிக் குதிக்கும்.
தினம் மூன்று வேளையும் வீரம்மா அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு புறப்படுவாள்; சின்ன அரண்மனைக்கு ஒழுங்காகச் சாப்பாடு கொண்டுவந்து வைத்துவிட்டுப் போவாள்.
சூரியன் அஸ்தமித்து இரவு ஆரம்பித்ததோ இல்லையோ, சிறைக் கதவு திறக்கப்படும். உடனே உலகநாதத்தேவர், கோதண்டத்திலிருந்து கிளம்பிய இராமபாணத்தைப் போல் நேரே வஸந்த மண்டபத்துக்குப் போய்ச் சேர்வார். சிக்கிரத்திலேயே மாணிக்கவல்லியும் அங்கு வந்துவிடுவாள். அப்புறம் நேரம் போவதே அவர்களுக்குத் தெரியாது. வருங்காலத்தைப் பற்றி எத்தனையோ மனோராஜ்ய இன்பக் கனவுகளைக் கண்டார்கள். இடையிடையே ஒருவரையொருவர் ‘நேரமாகிவிட்டது’ பற்றி எச்சரித்துக் கொள்வார்கள். எனினும் வெகு நேரம் சென்ற பிறகுதான் இருவரும் தத்தம் ஜாகைக்குச் செல்வார்கள்.
இப்படி ஒவ்வொரு தினமும் புதிய புதிய ஆனந்த அநுபவங்களை அவர்களுக்குத் தந்துவிட்டுப் போய்க் கொண்டிருந்த காலத்தில், ஒருநாள் பகல் வேளை முழுவதும் இளவரசியை அரண்மனை மேல்மாடி முகப்பில் காணாதபடியால் உலகநாதத்தேவர் ஏமாற்றமும் கவலையும் அடைந்தார். அஸ்தமித்த பிறகு வழக்கம் போல் வஸந்த மண்டபத்துக்குப் போய் அவர் காத்திருந்ததும் வீணாயிற்று. ஏதேதோ விவரமில்லாத பயங்களும் கவலைகளும் மனத்தில் தோன்றி அவரை வதைத்தன. மனத்தைத் துணிவுபடுத்திக் கொண்டு பெரிய அரண்மனைக்குச் சமீபமாகச் சென்று நின்றார். இருவர் பேசும் குரல்கள் கேட்டன. ஒரு குரல் மாணிக்கவல்லியின் இனிமை மிக்க குரல்தான். இன்னொரு குரல் ஆண் குரல் அவளுடைய தகப்பனாரின் குரலாகத்தான் இருக்க வேண்டும். அடர்த்தியான செடியின் மறைவிலே நன்றாக ஒளிந்து நின்று கொண்டு பலகணியின் வழியாக உலகநாதத்தேவர் உள்ளே பார்த்தார். அவர் எதிர்பார்த்தபடியே தந்தையும் மகளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஆஹா! அவ்வளவு அழகும் சாந்த குணமும் பொருந்திய இனிய மகளைப் பெற்ற தகப்பனாரின் முகம் எவ்வளவு கடுகடுப்பாகவும் குரோதம் கொதித்துக் கொண்டும் இருக்கிறது.
இதைப்பற்றி அதிகமாகச் சிந்திப்பதற்குள்ளே அவர்களுடைய சம்பாஷணையில் சில வார்த்தைகள் அவர் காதில் விழுந்தன. உடனே, பேச்சைக் காது கொடுத்துக் கவனித்துக் கேட்க ஆரம்பித்தார். சோலைமலை மகாராஜாவுக்கும் அவருடைய அருமை மகளுக்கும் பின் வரும் சம்பாஷணை நடந்தது:
தந்தை: ஏது ஏது! உலகநாதத் தேவனுக்காக நீ பரிந்து உருகிப் பேசுகிறதைப் பார்த்தால், கொஞ்ச நாளில் அவனைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று கூடச் சொல்லுவாய் போலிருக்கிறதே!
மகள்: நீங்களுந்தான் எனக்கு அடிக்கடி மாப்பிள்ளை தேட வேண்டிய கஷ்டத்தைப் பற்றிச் சொல்லுகிறீர்கள் அல்லவா? உங்களுக்கு அந்தக் கஷ்டம் இல்லாமற் போனால் நல்லதுதானே அப்பா!
தந்தை: என் கண்ணே! உன் தாயார் காலமான பிறகு உன்னை வளர்ப்பதற்கு நான் எவ்வளவோ கஷ்டப்பட்டேன். அதைப் போல் இந்தக் கஷ்டத்தையும் நானே சுமந்து கொள்கிறேன். உனக்கு அந்தக் கவலை வேண்டாம்.
மகள்: எனக்குக் கவலையில்லாமல் எப்படி இருக்கும், அப்பா! நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளை என் மனதுக்குப் பிடித்திருக்க வேண்டாமா? நான் தானே கலியாணம் செய்து கொள்ள வேண்டும்! அதற்குப் பிறகு ஆயுள் முழுவதும் அவரோடு நான் தானே இருந்தாக வேண்டும்?
தந்தை: என் செல்வக் கண்மணி! உன்னைக் கலியாணம் செய்து கொள்ளுகிற கழுதை உன்னைச் சரிவர வைத்துக் கொள்ளாவிட்டால், அவன் தவடையில் நாலு அறை கொடுத்துவிட்டு உன்னைத் திரும்ப இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடுவேன். இப்போது இருப்பதுபோல் எப்போதும் நீ இந்தச் சோலைமலைக் கோட்டையின் மகாராணியாக இருக்கலாம்.
மகள்: அது எப்படி, அப்பா! ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட பிற்பாடு, நான் திரும்பவும் இங்கே வந்து சந்தோஷமாக இருக்க முடியுமா?
தந்தை: இந்த அரண்மனையில் உன்னுடைய சந்தோஷத்துக்கு என்ன குறைவு, மாணிக்கம்?
மகள்: பெண்ணாய்ப் பிறந்தவர்கள் புருஷன் வீட்டுக்குப் போவதுதானே முறைமை, அப்பா!
தந்தை: அது முறைமைதான், கண்ணே! ஆனால் தகப்பனார் பார்த்துக் கலியாணம் செய்து கொடுக்கிற போது, அப்படிக் கொடுக்கிற புருஷனுடைய வீட்டுக்கு மகள் போக வேண்டும். நாமெல்லாம் மானம் ஈனம் அற்ற வெள்ளைக்கார சாதியல்ல. வெள்ளைக்கார சாதியில் பெண்கள் தாங்களே புருஷர்களைத் தேடிக் கொள்வார்களாம் மோதிரம் மாற்றிக்கொண்டால் அவர்களுக்குக் கலியாணம் ஆகிவிட்டது போலவாம்.
இப்படிச் சொல்லிவிட்டு சோலைமலை மகாராஜா ‘ஹா ஹா ஹா!’ என்று சிரித்தார். அவருடைய சிரிப்பு ஒருவாறு அடங்கிய பிறகு மறுபடியும் சம்பாஷணை தொடர்ந்தது.
மகள்: அப்பா! வெள்ளைக்கார சாதியைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து பெருமைப்படுத்திப் பேசுவீர்களே? இன்றைக்கு ஏன் இந்த மாதிரி பேசுகிறீர்கள்?
தந்தை: நானா வெள்ளைக்காரர்களைப் புகழ்ந்து பேசினேன்? அதற்கென்ன அவர்கள் சண்டையில் கெட்டிக்காரர்கள். துப்பாக்கியும் பீரங்கியும் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருப்பேன். மற்றபடி, அவர்களைப் போல் கலியாணம் முதலிய காரியங்களில் வியவஸ்தை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லையே?
மகள்: அப்பா! கலியாண விஷயத்தில் வெள்ளைக்காரர்கள் வியவஸ்தை இல்லாதவர்கள் என்று எப்படிச் சொல்லலாம்? நம்முடைய தேசத்திலும் பழைய காலத்தில் அவ்விதந்தானே நடந்தது. இராஜகுமாரிகள் சுயம்வரத்தில் தங்கள் மனத்துக்கு உகந்த புருஷணைத் தேர்ந்தெடுத்து மாலையிடவில்லையா? தமயந்தியும், சாவித்திரியும் வியவஸ்தை இல்லாதவர்களா?
இதைக்கேட்ட சோலைமலை மகாராஜா சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றார். பிறகு, “மாணிக்கம்! வெளி உலகம் இன்னதென்று தெரியாமல் இந்த அரண்மனையில் அடைபட்டுக் கிடக்கும்போதே நீ இவ்வளவு கெட்டிக்காரியாக இருக்கிறாயே? உனக்குத் தகுந்த புருஷனை நான் எங்கிருந்து பிடிக்கப்போகிறேன்? பழைய நாட்களிலே போல, மதுரைப் பட்டணத்தில் பாண்டிய ராஜ்யத்தை ஸ்தாபித்துவிட்டு எந்த மறவர் குலத்து வீரன் உன்னைப் பட்டத்து ராணியாக்குகிறேன் என்று வருகிறானோ, அவனுக்குத்தான் உன்னைக் கட்டிக் கொடுப்பேன். வேறு எந்தக் கழுதையாவது வந்தால் அடித்துத் துரத்துவேன்!” என்று சொல்லிவிட்டு ‘இடி இடி’யென்று சிரித்தார்.
மறுபடியும், “அதெல்லாம் கிடக்கட்டும், மாணிக்கம்! நீ உன் உடம்பைச் சரியாகப் பார்த்துக்கொள். இராத்திரியில் வெகுநேரம் வரையில் தோட்டத்தில் சுற்றிவிட்டு வருகிறாயாமே? அது நல்லதல்ல. இளம் பெண்கள் இராத்திரியில் சீக்கிரம் படுத்துத் தூங்க வேண்டும். இன்றைக்காவது சீக்கிரமாகப் போய்ப் படுத்துக்கொள்!” என்றார்.
“இராத்திரியில் எனக்குச் சீக்கிரமாகத் தூக்கம் வருகிறதில்லை அப்பா! அதனால் தான் நிலா நாட்களில் சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் தோட்டத்தில் உலாவிவிட்டு வருகிறேன்” என்றாள் மாணிக்கவல்லி.
“அடடே! அதுதான் கூடாது! சிறு பெண்கள் நிலாவில் இருக்கவே கூடாது; சந்திரனையே பார்க்கக் கூடாது. அப்படிச் சந்திரனையே பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் சிலருக்குச் சித்தப்பிரமை பிடித்திருக்கிறது!” என்று சொல்லி வந்த மகாராஜா, திடீரென்று பேச்சை நிறுத்தி, “அது என்ன சத்தம்!” என்று கேட்டுக்கொண்டு பலகணியின் வழியாக வெளியே பார்த்தார்.
மாணிக்கவல்லியின் முகத்தில் பெருங் கிளர்ச்சியுடன், “ஒன்றுமில்லையே, அப்பா! வெளியில் ஒரு சத்தமும் கேட்கவில்லையே?” என்றாள்.
உண்மை என்னவென்றால், சற்று முன்னால் மகாராஜா அங்கிருந்து போவதற்காக எழுந்ததைப் பார்த்தவுடனே, தோட்டத்தில் செடிகளின் மறைவில் நின்று கொண்டிருந்த உலகநாதத்தேவர் இன்னும் சிறிது பின்னால் நகர்ந்தார். அப்போது செடிகளின் இலைகள் அசைந்ததனால் உண்டான சலசலப்பைக் கேட்டுவிட்டுத் தான், “அது என்ன சத்தம்” என்று சோலைமலை மகாராஜா கேட்டார்.
மேற்படி கேள்வி உலகநாதத் தேவரின் காதில் விழுந்த போது, அவருடைய குடலும் நெஞ்சும் நுரை ஈரலும் மேலே கிளம்பித் தொண்டைக்குள் வந்து அடைத்துக் கொண்டது போலேயிருந்தது.
அப்போது நினைத்துப் பார்த்தாலும் குமாரலிங்கத்துக்கு மேலே சொன்னது போன்ற தொண்டையை அடைக்கும் உணர்ச்சி ஏற்பட்டது. எப்படியோ சமாளித்துக் கொண்டு தட்டுத்தடுமாறி நடந்தான். ‘சலசல’வென்று சத்தத்துடன் ஓடிய தெளிந்த நீரையுடைய சின்னஞ்சிறு கால்வாயின் கரையை அடைந்தான். குளிர்ந்த தண்ணீரினால் முகத்தை நன்றாய் அலம்பிக்கொண்ட பிறகு, தலையிலும் தண்ணீரை வாரி வாரி ஊற்றிக் கொண்டான்.
“ஓஹோ இங்கேயா வந்திருக்கிறீர்கள்?” என்ற இனிய குரலைக் கேட்டு குமாரலிங்கம் தலை நிமிர்ந்து பார்த்தான்.
கையில் ஒரு சிறு சட்டியுடன் பொன்னம்மாள் கரை மீது நின்று கொண்டிருந்தாள்.
குமாரலிங்கத்தின் வாயிலிருந்து அவனை அறியாமல், “மாணிக்கவல்லி, வந்துவிட்டாயா?” என்ற வார்த்தைகள் வெளிவந்தன.
12. அப்பாவின் கோபம்
பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
குமாரலிங்கம் தன்னுடைய தவறை உணர்ந்தவனாய்க் கரைமீது ஏறிப் பொன்னம்மாளின் அருகில் வந்தான்.
“பொன்னம்மா! சட்டியில் என்ன? சோறு கொண்டு வந்திருக்கிறாயா? அப்படியானால் கொடு; நீ நன்றாயிருப்பாய்! பசி பிராணன் போகிறது!” என்றான்.
பொன்னம்மாள் அதற்குப் பதில் சொல்லாமல் “சற்று முன்னால் ஒரு பெண்பிள்ளையின் பெயர் சொன்னாயே? அந்தப் பெண் யார்?” என்று கேட்டாள்.
“என்னமோ பைத்தியக்காரத்தனமாய்த்தான் சொன்னேன். அது யாராயிருந்தால் இப்போது என்ன? அந்தச் சட்டியை இப்படிக்கொடு. நான் சாப்பிட வேண்டும்!”
“முடியாது! நீ நிஜத்தைச் சொன்னால்தான் கொடுப்பேன்; இல்லாவிட்டால் இதைத் திரும்பக் கொண்டுபோய் விடுவேன்.
“என்ன சொல்ல வேண்டும் என்கிறாய்?”
“ஏதோ ஒரு பெயர் சொன்னாயே அதுதான்!”
“மாணிக்கவல்லி என்று சொன்னேன்.”
“அவள் யார்? அப்படி ஒருத்தியை ஊரிலே விட்டு விட்டு வந்திருக்கிறாயா? உனக்கு கலியாணம் ஆகிவிட்டதா?”
“இல்லை பொன்னம்மா, இல்லை! கலியாணம் என்ற பேச்சையே நான் காதில் போட்டுக் கொள்வதில்லை. சுவாமி விவேகானந்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘இந்த நாட்டில் ஒவ்வொரு மூடனும் கலியாணம் செய்து கொண்டிருக்கிறான்!’ என்றார். நம்முடைய தேசம் சுதந்திரம் அடையும் வரை நான் கலியாணம் செய்துகொள்ளப் போவதில்லை.”
“தேசம், தேசம், தேசம்? உனக்குத் தேசம் நன்றாய் இருந்தால் போதும்; வேறு யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை!”
“ஆமாம், பொன்னம்மா! அது நிஜம். தேசம் நன்றாயிருந்தால் தானே நாமெல்லோரும் நன்றாயிருக்கலாம்?”
“தேசமும் ஆச்சு! நாசமத்துப் போனதும் ஆச்சு!”
“சரி; அந்தச் சட்டியை இப்படிக் கொடு!”
“அதெல்லாம் முடியாது. நான் கேட்டதற்குப் பதில் சொன்னால்தான் தருவேன்.”
“எதற்குப் பதில் சொல்ல வேண்டும்?”
“யாரோ ஒருத்தியின் பெயரைச் சொன்னாயே இப்போது – அவள் யார்?”
பொன்னம்மாள் ரொம்பப் பொல்லாதவள்
பொய் என்ற வார்த்தையே சொல்லாதவள்
அன்னம் படைக்க மறுத்திடுவாள்
சொன்னதைச் சொன்னதைச் சொல்லிடுவாள்!என்று கேலிக் குரலில் பாடினான் குமாரலிங்கம்.
“ஆமாம்; விவசாயக் கடன் சட்டம் என்று ஒரு சட்டம் வந்திருக்கிறது. அதனால் கடன் வாங்கியிருந்த எத்தனையோ விவசாயிகளுக்கு நன்மை ஏற்பட்டது. உன் தகப்பனாருக்கு மட்டும் நஷ்டம் போலிருக்கிறது.”
“அது மட்டுமில்லை. காங்கிரஸ்காரனுங்க கள்ளு சாராயக்கடைகளையெல்லாம் மூடணும் என்கிறார்களாமே!”
“ஆமாம்; அது ஜனங்களுக்கு நல்லது தானே? உங்க அப்பா தண்ணி போடுகிறவராக்கும்!”
“இந்தக் காலத்திலே தண்ணி போடாதவங்க யார் இருக்கிறாங்க? ஊரிலே முக்காலு மூணு வீசம் பேர் பொழுது சாய்ந்ததும் கள்ளுக்கடை, சாராயக்கடை போறவங்கதான். அதோடு இல்லை. எங்க அப்பா ஒரு சாராயக் கடையைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்.”
“ஓஹோ, அப்படியானால் சரிதான்! கோபத்துக்குக் காரணம் இருக்கிறது. ஆனால் என் பேரில் அவருக்குத் தனிப்பட எதற்காகக் கோபம்? நான் என்ன செய்தேன்?”
“கோட்டை, மூட்டை செவ்வாய்க்கிழமை எல்லாம் சேர்ந்து கொண்டது போல் ஆகியிருக்கிறது. கோர்ட்டிலே அவர் தாவாப் போட்டிருந்தாராம். சனங்கள் கோர்ட்டைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டார்களாம். அதனாலே அவருடைய பத்திரம் ஏதோ எரிந்து போய்விட்டதாம்! உன்னாலே, உன்னுடைய பிரசங்கத்தைக் கேட்டதனாலே தான், சனங்கள் அப்படி வெறிபிடித்துக் கோர்ட்டைக் கொளுத்தினாங்க என்று சொல்லிவிட்டு, உன்னைத் திட்டு திட்டு என்று திட்டினார். ஆனால் நீ இங்கே இருக்கிறது அவருக்குத் தெரியாது. அவர் கையிலே மட்டும் நீ அகப்பட்டால் உன் முதுகுத் தோலை உரித்து விடப் போவதாக அவர் கத்தின போது எனக்கு ரொம்பப் பயமாயிருந்தது. அதனாலேதான் காலங்காத்தாலே உன்னைப் பார்ப்பதற்கு வந்தேன்.”
குமாரலிங்கத்துக்குப் பளிச்சென்று ஒரு காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அன்று காலையில் அந்தப் பக்கம் போன கடுகடுப்பான முகத்தைக் கனவிலே சோலைமலை அரண்மனையிலே மட்டுமல்ல – வேறு ஓர் இடத்திலும் அவன் பார்த்ததுண்டு. அவனுடைய வீராவேசப் பிரசங்கத்தைக் கேட்டு ஜனங்கள் சிறைக் கதவை உடைத்துத் தேசபக்தர்களை விடுதலை செய்த அன்று பொதுக்கூட்டம் ஒன்று நடந்ததல்லவா? கூட்டம் ஆரம்பமாகும் சமயத்தில் ஒரு சின்ன கலாட்டா நடந்தது. அதற்குக் காரணம், அன்று காலையில் அந்தப் பக்கமாக ஒற்றையடிப் பாதையில் போன மனிதன் தான். அவன் அன்றைக்குப் போதை மயக்கத்தில் இருந்தான். “இங்கிலீஷ்காரனுகளிடத்தில் துப்பாக்கி, பீரங்கி, ஏரோப்ளேன், வெடி குண்டு எல்லாம் இருக்கிறது. காங்கிரஸ்காரனுங்களிடத்தில் துருப்பிடித்த கத்தி கபடா கூடக் கிடையாது. சவரம் பண்ணுகிற கத்திகூட ஒரு பயல்கிட்டேயும் இல்லை! இந்தச் சூரன்கள் தான் இங்கிலீஷ்காரனை விரட்டியடிச்சுடப் போறான்களாம்! போங்கடா, போக்கடாப் பயல்களா!” என்று இந்த மாதிரி அவன் இரைந்து கத்தினான். பக்கத்திலிருந்தவர்கள் அவனிடம் சண்டைக்குப் போனார்கள். தொண்டர்கள் சண்டையை விலக்கிச் சமாதானம் செய்து அவனைக் கூட்டத்திலிருந்து வெளியேற்றினார்கள். இவ்வளவும் ஒரு நிமிஷத்துக்குள் குமாரலிங்கத்துக்கு ஞாபகம் வந்தது.
பொன்னம்மாள் கடுமையான கோபங் கொண்டவள் போல் நடித்து, “அப்படியானால் நான் போகிறேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
“பொன்னம்மா! உனக்குப் புண்ணியம் உண்டு. கொண்டு வந்த சோற்றைக் கொடு! சாப்பிட்ட பிறகு, நீ கேட்டதற்குப் பதில் நிச்சயமாகச் சொல்லுகிறேன்.”
“முன்னாலேயே அப்படிச் சொல்வதுதானே? வீண் பொழுது போக்க எனக்கு இப்போது நேரம் இல்லை, அப்பா வேறு ஊரிலேயிருந்து வந்துவிட்டார்!”
இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது.
“பொன்னம்மா! உன் தகப்பனார் வந்து விட்டாரா? அவர் எப்படியிருப்பார்?” என்று கேட்டான்.
“எப்படியிருப்பார்? இரண்டு கால், இரண்டு கையோடு தான் இருப்பார்!” என்று சொல்லிக்கொண்டே பொன்னம்மாள் கால்வாய்க் கரையில் உட்கார்ந்து சட்டியைக் குமாரலிங்கத்திடம் நீட்டினாள்.
“இது சோறு இல்லை; பலகாரம். இலை கொண்டு வர மறந்து போனேன். சட்டியோடுதான் சாப்பிட வேண்டும்” என்றாள்.
“ஆகட்டும்; இந்த மட்டும் ஏதோ கொண்டு வந்தாயே, அதுவே பெரிய காரியம்!” என்று சொல்லிக் குமாரலிங்கம் சட்டியைக் கையில் வாங்கிக் கொண்டு அதிலே இருந்த பலகாரத்தைச் சாப்பிட ஆரம்பித்தான்.
“எங்க அப்பாவுக்கு உன் பேரில் ரொம்பக் கோபம்!” என்று பொன்னம்மாள் திடீரென்று சொன்னதும், குமாரலிங்கத்துக்குப் பலகாரம் தொண்டையில் அடைத்துக் கொண்டு புரையேறிவிட்டது.
பொன்னம்மாள் சிரித்துக் கொண்டே அவனுடைய தலையிலும் முதுகிலும் தடவிக் கொடுத்தாள். இருமல் நின்றதும், “நல்ல வேளை! பிழைத்தாய்! உன்னைத்தான் நம்பியிருக்கிறேன்!” என்றாள்.
“என்னை எதற்காக நம்பியிருக்கிறாய்?”
“எல்லாவற்றுக்குந்தான். வீட்டிலே எனக்குக் கஷ்டம் தாங்க முடியவில்லை. அப்பாவோ ரொம்பக் கோபக்காரர். சின்னாயி என்னைத் தினம் தினம் வதைத்து எடுத்து விடுகிறாள்!”
“ஐயோ! பாவம்! ஆனால் உன் அப்பாவுக்கு என் பேரில் கோபம் என்கிறாயே, அது ஏன்? என்னை அவருக்குத் தெரியாவே தெரியாதே?”
“எப்படியோ அவருக்கு உன்னைத் தெரிந்திருக்கிறது; நேற்று ராத்திரி உன் பெயரைச் சொல்லித் திட்டினார்!”
“இது என்ன கூத்து? என்னை எதற்காகத் திட்டினார்?”
“ஏற்கெனவே அவருக்கு காங்கிரஸ்காரன் என்றாலே ஆகாது. ‘கதர்’ கட்டிய காவாலிப் பயல்கள்’ என்று அடிக்கடி திட்டுவார். நேற்று ராத்திரி பேச்சு வாக்கில் அதன் காரணத்தை விசாரித்தேன். எங்க அப்பா நில ஒத்தியின் பேரில் நிறையப் பணம் கடன் கொடுத்திருந்தார். காங்கிரஸ் கவர்ன்மெண்டு நடந்தபோது, கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்று சட்டம் செய்துவிட்டார்களாமே? அதனால் அப்பாவுக்கு ரொம்பப் பணம் நஷ்டம்.”
13. உல்லாச வாழ்க்கை!
அன்று மத்தியானம் மறுபடியும் பொன்னம்மாள் சாப்பாடு கொண்டு வந்தாள். இலையைப் போட்டுப் பரிமாறினாள். குமாரலிங்கம் மௌனமாகச் சாப்பிட்டான்.
“காலையில் கலகலப்பாக இருந்தாயே? இப்போது ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று பொன்னம்மாள் கேட்டாள்.
“ஒன்றுமில்லை, பொன்னம்மா! காலையில் நீ சொன்ன விஷயங்களைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றான் குமாரலிங்கம்.
“என்ன யோசித்துக் கொண்டிருந்தாய்?” என்று பொன்னம்மாள் திரும்பவும் கேட்டாள்.
“உன் தகப்பனார் என்னிடம் இவ்வளவு கோபமாயிருக்கும் போது நான் இங்கே இருக்கலாமா என்று யோசனையாயிருக்கிறது. காலையிலே உன்னை ஒன்று கேட்கவேண்டுமென்றிருந்தேன், மறந்துவிட்டேன்…”
“உனக்கு மறதி ரொம்ப அதிகம் போலிருக்கிறது!” என்றாள் பொன்னம்மாள்.
“அப்படி ஒன்றும் நான் மறதிக்காரன் அல்ல. உன் முகத்தைப் பார்த்தால் தான் பல விஷயங்கள் மறந்து போகின்றன!…”
“வயிற்றுப் பசியைத் தவிர…” என்று குறுக்கிட்டுச் சொன்னாள் பொன்னம்மாள்.
“ஆமாம்! வயிற்றுப் பசியைத் தவிரத்தான். ‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்’ என்று பெரியோர் வாக்கு இருக்கிறதே!”
“போகட்டும்! காலையில் என்னை என்ன கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தாய்?”
“சூரியன் உதித்து ஒரு நாழிகைப் பொழுதுக்கு இந்தப் பக்கமாக ஒரு பெரிய மனுஷர் போனார். அவர் முகத்தைப் பார்த்தால் ரொம்பக் கோபக்காரர் என்று தோன்றியது. ஒரு வேளை அவர்தான் மணியக்காரரோ என்று கேட்க எண்ணினேன்.”
“இருந்தாலும் இருக்கும். அவர் பின்னோடு ஒரு நாய் வந்ததா?”
“ஆமாம்; பெரிய வேட்டை நாய் ஒன்று வந்தது. இங்கே வந்ததும் அது குரைத்தது; அந்தப் பெரிய மனுஷர் கையிலிருந்த தடியினால் அதன் மண்டையில் ஒரு அடி போட்டார்!”
“அப்படியானால் நிச்சயமாக அப்பாதான்! உன்னை அவர் பார்த்துவிட்டாரோ?” என்று பொன்னம்மாள் திகிலுடன் கேட்டாள்.
“இல்லை, பார்க்கவில்லை! அந்த மொட்டைச் சுவருக்குப் பின்னால் நான் மறைந்து கொண்டிருந்தேன். நாய்க்கு மோப்பம் தெரிந்து குரைத்திருக்கிறது. அதற்குப் பலன் தலையில் ஓங்கி அடி விழுந்தது!”
“நல்ல வேளை! கரும்புத் தோட்டத்துக்கு இந்த வழியாகத்தான் அப்பா நிதம் போவார். தப்பித் தவறி அவர் கண்ணிலே மட்டும் நீ பட்டுவிடாதே!”
“அவர் கண்ணிலே படாமல் இருப்பதென்ன? இந்த இடத்திலிருந்தே கிளம்பிப் போய்விட உத்தேசித்திருக்கிறேன், பொன்னம்மா!”
“அதுதான் சரி! உடனே போய்விடு! முன்பின் தெரியாத ஒரு ஆண்பிள்ளையை நான் நம்பினேனே! என்னுடைய புத்தியை விறகுக் கட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும்!”
இவ்விதம் பொன்னம்மாள் சொன்னபோது அவளுடைய கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிக்கும் நிலையில் இருப்பதைக் குமாரலிங்கம் கவனித்தான். சற்று முன்னால் அவன் யோசித்து முடிவு செய்திருந்த தீர்மானங்களெல்லாம் காற்றிலே பறந்து போயின. இந்தக் கள்ளங்கபடமற்ற பெண்ணை முதன் முதலில் தான் சந்தித்து இன்னும் இருபத்து நாலு மணி நேரங்கூட ஆகவில்லையென்பதை அவனால் நம்ப முடியவில்லை.
“உன்னைப் பிரிந்து போவதற்கு எனக்கும் கஷ்டமாய்த்தானிருக்கிறது. ஆனாலும் வேறு என்ன செய்யட்டும்? நீதான் சொல்லேன்?” என்று குமாரலிங்கம் உருக்கமான குரலில் கூறினான்.
“நீ இப்போது சொன்னது நெசமாயிருந்தால் என்னையும் உன்னோடு இட்டுக்கொண்டு போ!” என்று மணியக்காரர் மகள் கூறிய பதில், குமாரலிங்கத்தை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. சற்று நிதானித்துவிட்டு அவன் சொன்னான்:
“பொன்னம்மா! உன்னையும் என்னோடு அழைத்துப் போகவல்லவா சொல்லுகிறாய்? அதற்கு எனக்குப் பூரண சம்மதம். உன்னைப் பார்த்த பிறகு, ‘கலியாணம் செய்து கொள்ளவில்லை’ என்ற தீர்மானத்தைக் கூடக் கைவிட்டு விட்டேன். ஆனால் சமய சந்தர்ப்பம் தற்போது சரியாயில்லையே? நானோ போலீஸ் புலிகளிடம் அகப்படக்கூடாதென்று தப்பி ஓடி வந்தவன் என்னை நான் காப்பாற்றிக் கொள்வதே பெருங் கஷ்டம். உன்னையும் கூட அழைத்துக் கொண்டு எங்கே போக? என்னத்தைச் செய்ய?”
“என்னை உன்னோடு அழைத்துக் கொண்டு போவது கல்லைக் கட்டிக்கொண்டு கேணியிலே விழுகிற மாதிரி தான். அது எனக்குத் தெரியாமலில்லை. அதனாலே தான் உன்னை இங்கேயே இருக்கச் சொல்கிறேன்!” என்றாள் பொன்னம்மாள்.
“அது எப்படி முடியும்? நீதானே சொன்னாய், உன் அப்பா என்னைப் பார்த்துவிட்டால் கடித்து விழுங்கி விடுவார் என்று?”
“அது மெய்தான். ஆனால் இந்தப் பாழுங் கோட்டையிலும் இதைச் சேர்ந்த காடுகளிலும் நீ யார் கண்ணிலும் படாமல் எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கலாமே! சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பதற்கு நான் இருக்கிறேன். உனக்கு என்ன பயம்?”
“எனக்கு ஒரு பயமும் இல்லை, பொன்னம்மா! ஆனால் எத்தனை நாள் உனக்கு இம்மாதிரி சிரமம் கொடுத்துக் கொண்டிருப்பது? என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தினந்தினம் நீ சாப்பாடு கொண்டு வருவாய்? வேண்டாம், பொன்னம்மா! நான் எங்கேயாவது போய்த் தொலைகிறேன். உனக்குக் கஷ்டம் கொடுக்க நான் விரும்பவில்லை.”
பொன்னம்மாள் பரிகாசத்துக்கு அறிகுறியாகக் கழுத்தை வளைத்துத் தலையைத் தோளில் இடித்துக் கொண்டு கூறினாள்:
“பேச்சைப் பார் பேச்சை! எனக்குக் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லையாம்! நான் தான் சொன்னேனே, நீ இவ்விடத்தை விட்டுப் போனால்தான் எனக்கு மனக்கஷ்டம் உண்டாகும் என்று. நானோ பெண் ஜன்மம் எடுத்தவள். உயிர் இருக்கும் வரையில் யாருக்காவது சோறு படைத்துத் தானே ஆக வேண்டும்? உனக்கு சில நாள் சோறு கொண்டு வந்து கொடுப்பதில் எனக்கு என்ன கஷ்டம்? ஒன்றுமில்லை. தோட்டத்தில் கரும்பு வெட்டி வெல்லம் காய்ச்சி முடிவதற்குப் பதினைந்து நாள் ஆகும். அதுவரையில் நான் இந்த வழியாக நிதநிதம் போக வேண்டியிருக்கும். அப்பாவுக்குச் சாப்பாடு கொண்டு போவேன். அப்போது உனக்கும் கொண்டு வருகிறேன்…”
குமாரலிங்கம் குறுக்கிட்டு, “பொன்னம்மா! உன் தகப்பனாரை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது. அவரை பார்க்கும்போதே முன் கோபக்காரர் என்று தோன்றுகிறது. என் பேரில் வேறே அவருக்கு விசேஷமான கோபம். அதற்குக் காரணம் இல்லாமலும் போகவில்லை. தப்பித்தவறி என்றைக்காவது ஒருநாள் நாம் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை அவர் பார்த்துவிட்டால் என்ன கதி? என்னைப்பற்றியே நான் சொல்லவில்லை; உனக்காகத்தான் நான் பயப்படுகிறேன்” என்றான்.
“ஐயா எங்க அப்பா பொல்லாத மனிதர்தான். ஆனால் ஊருக்குத்தான் அவர் பொல்லாதவர். எனக்கு நல்லவர். சின்னாயி ஒருநாள் என்னைப் பாடாய்ப் படுத்தியதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டார். அதற்காக அவளை மொத்து மொத்து என்று மொத்திவிட்டார்!…”
“அதாவது உங்க அப்பாவினால் உனக்கு ஒன்றும் அபாயம் இல்லை; வந்தால் எனக்குத்தான் வரும் என்று சொல்லுகிறாயா?”
அந்தக் கேலியை விரும்பாத பொன்னம்மாள் முகத்தைச் சிணுக்கிக்கொண்டு சொன்னாள்:
“அப்படி ஒன்றும் சொல்லவில்லை. எங்க அப்பாவுக்கு நான் செல்லப் பெண். சமயம் பார்த்துப் பேசி உன் விஷயத்தில் அவருடைய மனத்தை மாற்றிவிடலாம் என்றிருக்கிறேன்.”
முதல் நாளிரவு சோலைமலை மகாராஜாவும் இளவரசியும் பேசிக்கொண்டிருந்த காட்சியையும், தான் பலகணியின் அருகில் மறைந்திருந்து ஒட்டுக் கேட்ட வார்த்தைகளையும் குமாரலிங்கம் நினைவு கூர்ந்தான்.
“பொன்னம்மா நீ என்னதான் பிரயத்தனம் செய்தாலுங்கூட உன் தகப்பனாரின் மனத்தை மாற்ற முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை!” என்றான்.
“ஏன் நீ இவ்வளவு அவநம்பிக்கைப்படுகிறாய்? கொஞ்சம் பொறுத்திருந்து என்னுடைய சாமர்த்தியத்தைப் பாரேன்!” என்றாள் பொன்னம்மாள்.
“நீ சாமர்த்தியக்காரிதான்; அதைப்பற்றிச் சந்தேகமில்லை. ஆனால் என் விஷயத்தில் எதற்காக நீ இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறாய்? இன்றைக்கோ நாளைக்கோ என்னைப் போலீஸார் வேட்டையாடிப் பிடித்து விடலாம். அப்புறம் இந்த ஜன்மத்தில் நாம் ஒருவரையொருவர் பார்க்கவே முடியாது. என் உடம்பில் இருக்கும் உயிர் ஒரு மெல்லிய கயிற்றின் முனையிலே தொங்கிக் கொண்டிருக்கிறது! எந்த நிமிஷத்திலே இந்தக் கழுத்திலே சுருக்கு விழுமோ தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் உள்ள என்னை நீ நம்ப வேண்டாம்; நம்பி ஏமாற்றமடைய வேண்டாம்!” என்று குமாரலிங்கம் இரங்கிய குரலில் சொன்னான்.
பொன்னம்மாள் உணர்ச்சி மிகுதியினால் ஒன்றும் பேசாமல் சற்று நேரம் சும்மா இருந்தாள். பின்னர் கூறினாள்:
“ஐயா! விதி அப்படி இருக்குமானால் அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் சோலைமலை முருகன் அருளால் அப்படி ஒரு நாளும் நடக்காது என்று எனக்குத் தைரியம் இருக்கிறது. என் தகப்பனாருடைய மனத்தை மாற்றுவதற்கு என்னுடைய சாமர்த்தியத்தை மட்டும் நான் நம்பியிருக்கவில்லை. சோலைமலை முருகனுடைய திருவருளையுந்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நேற்றிரவு அப்பா இன்னொரு விஷயமும் சொன்னார். ‘இந்த இங்கிலீஸ்காரப் பய மவனுங்களையும் பூராவும் நம்பிவிடக் கூடாது. குனிந்தால் முதுகில் உட்காருவார்கள்; நிமிர்ந்தால் காலில் விழுவார்கள். இவர்களை இந்தப் பாடுபடுத்தி வைக்கிற காங்கிரஸ்காரன்களின் கையிலேயே மறுபடியும் கவர்ன்மெண்டைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள். இன்றைக்குத் தலைமறைவாய் ஒளிந்து திரிகிற குமாரலிங்கம் நாளைக்கு ஒருவேளை ஜில்லாக் கலெக்டராகவோ, மாகாண மந்திரியாகவோ வந்தாலும் வருவான். அப்படி வந்தால் சோலைமலை முருகன் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். காங்கிரஸ்காரனுங்க மறுபடியும் அதிகாரத்துக்கு வந்தால், என்னென்ன அக்கிரமம் செய்வான்களோ தெரியாது!’ என்று அப்பா ரொம்ப ஆத்திரமாய்ப் பேசினார். அதோடு காங்கிரஸுக்கும் சர்க்காருக்கும் ஏதோ ராஜிப் பேச்சு நடக்கிறதாகக் கேள்வி என்றும் சொன்னார். ஐயா! நீ ஒருவேளை மந்திரியாகவோ ஜில்லாக் கலெக்டராகவோ வந்தால், அக்கிரமம் ஒன்றும் செய்ய மாட்டாயல்லவா? அப்பாவைக் கஷ்டத்துக்கு உள்ளாக்க மாட்டாயல்ல்வா?” என்று பொன்னம்மாள் கண்ணில் நீர் ததும்பக் கேட்டாள்.
“மாட்டேன், பொன்னம்மா! மாட்டேன்! பிராணன் போய்க் கொண்டிருந்த சமயத்தில் சோறு கொண்டு வந்து போட்டு உயிர்ப் பிச்சை கொடுத்த பொன்னம்மாளின் தகப்பனாரை ஒரு நாளும் கஷ்டப்படுத்த மாட்டேன். அவர் மேல் ஒரு சின்ன ஈ எறும்பு உட்கார்ந்து கடிப்பதற்குக் கூட இடங்கொடுக்க மாட்டேன்” என்றான் குமாரலிங்கம்.
மேலே கண்ட சம்பாஷணை நடந்த பிறகு ஏழெட்டுத் தினங்கள் வரை அந்தப் பாழடைந்த சோலைமலைக் கோட்டையிலேயே குமாரலிங்கத்தின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனந்தமாகவும், குதூகலமாகவும் சென்று கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.
மணியக்காரர் மகளிடம் அவனுடைய நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பொன்னம்மாள் சாப்பாடு கொண்டு வந்த போது குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் கூடக் கொண்டு வந்தாள். பிரதி தினமும் அவளுடைய கால்மெட்டியின் சத்தத்தோடு ‘கலகல’வென்ற சிரிப்பின் ஒலியும் சேர்ந்து வந்தது. எனவே அந்தப் பாழுங் கோட்டையில் ஒளிந்திருந்து கழித்த ஒவ்வொரு நாளும் ஓர் உற்சவ தினமாகவே குமாரலிங்கத்துக்குச் சென்று வந்தது.
சோலைமலைக் கோட்டைக்கு அவன் வந்து சேர்ந்த அன்று பகலிலும் இரவிலும் கண்ட அதிசயக் காட்சிகளைப் பிற்பாடு அவன் காணவில்லை. அவையெல்லாம் பல இரவுகள் சேர்ந்தாற்போல் தூக்கமில்லாதிருந்த காரணத்தினால் ஏற்பட்ட உள்ளக் கோளாறுகள் என்று குமாரலிங்கம் தேறித் தெளிந்தான்.
ஆனால் இந்த விஷயத்தில் அவனுக்கு எவ்வளவுக் கெவ்வளவு தெளிவு ஏற்பட்டதோ, அவ்வளவுக்குப் பொன்னம்மாளுக்குப் பிரமை அதிகமாகி வருவதை அவன் கண்டான்.
சோலைமலை இளவரசியைப் பற்றியும் மாறனேந்தல் மகாராஜாவைப் பற்றியும் குமாரலிங்கம் கனவிலே கண்ட காட்சிகளைத் திரும்பத் திரும்ப அவனைச் சொல்ல வைத்துப் பொன்னம்மாள் அடங்காத ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அதோடு, அவன் கண்டதெல்லாம் வெறும் கனவல்லவென்றும், சுமார் நூறு வருஷத்துக்கு முன்னால் உண்மையாக நடந்தவையென்றும் பொன்னம்மாள் சாதித்து வந்தாள். அவள் கொண்டிருந்த இந்தக் குருட்டு நம்பிக்கைகூடக் குமாரலிங்கத்தின் உல்லாசம் அதிகமாவதற்கே காரணமாயிருந்தது. சில சமயம் அவன், “மாறனேந்தல் மகாராஜாதான் குமாரலிங்கமாகப் பிறந்திருக்கிறேன்! சோலைமலை இளவரசிதான் பொன்னம்மாளாகப் பிறந்திருக்கிறாய்!” என்று தமாஷாகச் சொல்லுவான். வேறு சில சமயம், பொன்னம்மாளைப் பார்த்ததும், “இளவரசி! வருக!” என்பான். “மாணிக்கவல்லி! அரண்மனையில் எல்லாரும் சௌக்கியமா?” என்று கேட்பான்.
குமாரலிங்கம் இப்படியெல்லாம் பரிகாசமாகப் பேசிய போதிலும், பொன்னம்மாளின் கபடமற்ற உள்ளத்தில் அவ்வளவும் ஆழ்ந்து பதிந்து கொண்டு வந்தன.
14. ஆனந்த சுதந்திரம்
குமாரலிங்கம் அந்த இடிந்த கட்டிடங்களுக்கு மத்தியில் அவ்வளவு உற்சாகமாகவும் உல்லாசமாகவும் நாட்களைக் கழித்து வந்ததற்குப் பொன்னம்மாளின் நேசம் மட்டுமல்லாமல் வேறொரு காரணமும் இருந்தது. அரசியல் நிலைமையைப் பற்றி மணியக்காரர் சொன்னதாகப் பொன்னம்மாள் அன்று சொன்ன செய்திதான் அது. பிரிட்டிஷ் சர்க்காருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் ராஜிப் பேச்சு நடந்து வருகிறது என்பதைப் பரிபூரணமாய் அவன் நம்பினான். அதைப் பற்றிச் சந்தேகிக்கவே அவனுக்குத் தோன்றவில்லை. ‘அன்று தளவாய்ப் பட்டணத்தில் நடந்தது போலத்தானே இமய மலையிலிருந்து குமரி முனை வரையில் எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் சூறாவளிப் புரட்சி நடந்திருக்கும்? அந்தப் புரடிசியைப் பிரிட்டிஷ் சர்க்காரால் எப்படி எதிர்த்து நிற்க முடியும்? ஜப்பான்காரனோ பர்மா எல்லைப் புறத்தில் வந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறான். பிரிட்டிஷ் சர்க்கார் காங்கிரஸுக்குச் சரணாகதி அடையாமல் வேறு என்ன செய்ய முடியும்?’ என்னும் கேள்வி அடிக்கடி அவன் மனத்தில் எழுந்து கொண்டிருந்தது. தளவாய் பட்டணம் சரித்திரப் பிரசித்தி அடைந்த விசேஷ தினத்தில் அவன் காதில் விழுந்த ஒரு சம்பாஷ்ணையும் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வந்து கொண்டிருந்தது.
சப் ஜெயிலின் கதவுகளை உடைத்துக் கைதிகளை விடுதலை செய்துவிட்டு வீர முழக்கத்துடன் சுதந்திர கோஷங்களுடனும் திரும்பிய ஜனங்களில், கிராமவாசிகள் இருவர் பின்வருமாறு பேசிக் கொண்டார்கள்:
“ஆமாம்! இந்தியா சுதந்திரம் அடைஞ்சு விட்டால்…” என்று ஒருவர் ஏதோ கேட்க ஆரம்பித்தார்.
“அடைஞ்சுவிட்டால் என்ன? அதுதான் அடைஞ்சாகிவிட்டதே!” என்றார் இன்னொருவர் வெகு உற்சாகத்துடன்.
“சரி, இந்தியா சுதந்திரம் அடைஞ்சுட்டுது! இனிமே யாரு நமக்கு ராசா என்று கேட்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேருவா? நேதாஜி சுபாஷ் போசா?” என்று கேட்டார் முதலில் பேசியவர்.
“இரண்டு பேரிலே யார் ராசாவானால் என்ன? நேருஜி ராசா ஆனால், நேதாஜி மந்திரி ஆகிறாரு! நேதாஜி ராசா ஆனால், நேருஜி மந்திரி ஆகிறாரு!” என்றார் இரண்டாவது பேசியவர்.
படிப்பில்லாத பட்டிக்காட்டு ஆசாமிகளின் மேற்படி பேச்சை அன்றைக்கு குமாரலிங்கம் கேட்டபோது அவன் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான். ஆனால் இப்போது அதைப்பற்றி எண்ணியபோது அவர்கள் பேச்சு ஏன் உண்மையாகக் கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திரபோஸும் இந்தியாவின் ராஜாவாகவும் மந்திரியாகவும் வராவிடாலும், குடியரசின் அக்கிராசனராகவும் முதன் மந்திரியாகவும் வரக்கூடுந்தானே? அப்படி வரும்போது மணியக்காரர் சொன்னதுபோல் இந்தியக் குடியரசு சர்க்காரில் தனக்கும் ஒரு பதவி ஏன் கிடைக்கக்கூடாது? கிடைக்காமலிருந்தால் தான் ஆச்சரியமே தவிர கிடைத்தால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இராது!
இப்படிப்பட்ட எண்ணங்கள் குமாரலிங்கத்துக்குக் குதூகலத்தை அளித்ததோடு, ஓரளவு பரபரப்பையும் உண்டாக்கி வந்தன. பொன்னம்மாளைத் தினம் பார்த்த உடனே, “இன்றைகு ஏதாவது விசேஷம் உண்டா? காங்கிரஸ் விஷயமாக அப்பா ஏதாவது சொன்னாரா?” என்று அவன் கேட்டுக் கொண்டு வந்தான். ஆனால் முதல் நாள் சொன்ன செய்திக்குப் பிறகு பொன்னம்மாள் புதிய செய்தி எதுவும் கொண்டு வரவில்லை.
“உங்கள் ஊருக்குப் பத்திரிகை வருவதில்லையா?” என்று ஒரு நாள் குமாரலிங்கம் கேட்டதற்கு, பொன்னம்மாள், “வராமல் என்ன? எங்கள் வீட்டுக்கே பத்திரிகை வந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் மகாத்மா காந்தி சொல்லிவிட்டார் என்று எல்லாப் பத்திரிகைகளையும் நிறுத்தி விட்டார்களாமே? அதற்கப்புறந்தான் வருகிறதில்லை” என்றாள்.
“புரட்சித் திட்டத்தில் மற்றதெல்லாம் சரிதான்! ஆனால் பத்திரிகை நிறுத்துகிற காரியம் மட்டும் சுத்தப் பிசகு!” என்று குமாரலிங்கம் தன் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.
குமாரலிங்கம் சோலைமலைக் கோட்டைக்கு வந்து ஒளிந்து கொண்டு பத்து நாளைக்குப் பிறகு சோலைமலைக் கிராமத்தில் ஓர் அதிசய சம்பவம் நடந்தது. அதைப் பார்த்து அந்தக் கிராம வாசிகள் எல்லாரும் திடுக்கிட்டுத் திகைத்துப் போனார்கள். கதைகளிலே அடிக்கடி எழுதுகிறார்களே அதைப்போல, அவர்களால் தங்களுடைய கண்களையே நம்ப முடியவில்லை. அந்தச் சம்பவம் என்னவென்றால், காந்திக் குல்லா தரித்த இரண்டு காங்கிரஸ்காரர்கள் பகிரங்கமாகவும் தைரியமாகவும் அந்தக் கிராமத்துக்குள்ளே பிரவேசம் செய்ததுதான்.
காந்திக்குல்லா மட்டுந்தானா அவர்கள் தரித்திருந்தார்கள், பம்பாய்க்காரர்களைப் போல் கதர்க் கால்சட்டையும் கதர் ஜிப்பாவும் அணிந்திருந்தார்கள். கதர் ஜிப்பாவின் பேரில் ஜவாஹர் வெயிஸ்ட் கோட்டுப் போட்டிருந்தார்கள். வெயிஸ்ட் கோட்டில் ஒரு சின்னஞ் சிறு மூவர்ண தேசியக் கொடி தைக்கப்பட்டிருந்தது.
அவர்களில் ஒருவர் கையிலேயும் பெரிய மூவர்ண தேசியக் கொடி ஒன்று கொண்டு வந்திருந்தார்கள். அதைக் கிராமச் சாவடிக்கு எதிரிலே இருந்த பிரம்மாண்டமான இலுப்ப மரத்தின் உச்சியில் கட்டிப் பறக்க விட்டார்.
கொடி பறக்கத் தொடங்கியதும் இரண்டு பேருமாக மாற்றி மாற்றி, “வந்தே மாதரம்!” “பாரத மாதாவுக்கு ஜே!”, “புரட்சி வாழ்க!” முதலிய கோஷங்களைக் கிளப்பினார்கள்.
இதையெல்லாம் பார்த்துச் சோலைமலைக் கிராமவாசிகள் ஒரேயடியாக ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள்.
காங்கிரஸ் கலகத்தை வெள்ளைக்காரச் சர்க்கார் அடியோடு அடக்கிவிட்டார்கள் என்றும், சிறையில் அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்றும், கலகம் நடந்த ஊர்களில் புகுந்து ஒன்றும் அறியாத ஜனங்களைக் கூட அடித்து இம்சிக்கிறார்கள் என்றும், போலீஸாரிடம் அகப்படாமல் கலகம் செய்த காங்கிரஸ்காரர்கள் பலர், ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், இம்மாதிரியான செய்திகளையே இதுவரையில் அந்தக் கிராமத்து ஜனங்கள் கேள்விப் பட்டிருந்தார்கள்.
அப்படியிருக்கும் போது இரண்டு கதர்க் குல்லாக்காரர்கள் திடீரென்று எங்கிருந்தோ வந்து, பட்டப்பகலில் பகிரங்கமாகக் கதர்க்கொடியை உயர்த்திக் கோஷங்களைக் கிளப்பி கூப்பாடு போட்டதும் கிராமவாசிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அந்தக் காந்திக் குல்லாக்காரர்களின் அருகில் நெருங்கவே முதலில் கிராமத்தார் தயங்கினார்கள். அவரவர்கள் தத்தம் வீட்டு வாசலிலிருந்தே பயத்துடன் அவர்களை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் கதர்க் குல்லா ஆசாமிகள் அவர்களை விடுகிற வழியாயில்லை. கிராமத்துக்குள்ளே அவர்கள் வந்து, “மணியக்காரர் வீடு எது?” என்று விசாரித்ததும், கிராமத்தாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. காந்தி குல்லாக்காரர்களின் அருகில் நெருங்கி அவர்கள் யார், எதற்கு வந்திருக்கிறார்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். அதற்குப் பதிலாகக் காந்திக் குல்லாக்காரர்கள் சொன்ன சமாசாரம் அவர்களை ஒரேயடியாக பிரமிக்கச் செய்துவிட்டது. வெள்ளைக்காரச் சர்க்கார் தோற்றுப் போய்க் காங்கிரஸிடம் இராஜ்யத்தை ஒப்புவித்து விட்டார்கள் என்றும், அந்த ஜில்லாவுக்கு மேலதிகாரிகளாகத் தங்களைக் காங்கிரஸ் நியமித்திருக்கிறதென்றும், கலெக்டர்கள், தாசில்தார்கள் எல்லாரும் இனிமேல் தங்கள் கட்டளைப்படிதான் நடக்க வேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். இதையெல்லாம் அதிசயத்தோடு கேட்டுக் கொண்டே ஜனக் கூட்டம் காந்திக் குல்லாக்காரர்களைப் பின் தொடர்ந்து சென்று மணியக்காரரின் வீட்டு வாசலை அடைந்தது.
அப்போதுதான் கரும்புத் தோட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த மணியக்காரரும் முதலில் சிறிது திகைத்துப் போனார். என்ன ஏது என்று விசாரித்தார். விஷயத்தைக் கேட்டதும் அவருக்கு நம்பிக்கைப் படவில்லை. “சரிதான், என்னிடம் எதற்காக வந்தீர்கள்? ஏதாவது காரியம் உண்டா?” என்று கொஞ்சம் அலட்சியமாகவே கேட்டார்.
“காரியம் இருக்கிறது. இல்லாமலா உங்களிடம் வருவோம். ‘சுயராஜ்யம் வந்துவிட்டது. இனிமேல் காங்கிரஸ் சர்க்கார்தான் அரசாங்கம் நடத்துவார்கள்’ என்பதாகச் சுற்று வட்டாரத்துக் கிராமங்களிலெல்லாம் தண்டோ ராப் போடவேண்டும். தலையாரியை உடனே கூப்பிட்டு விடுங்கள்!” என்று வந்தவர்களில் ஒருவர் சொன்னார்.
மணியக்காரர் தமது அவநம்பிக்கை நன்கு வெளிப்படும்படியாக, “அதெல்லாம் என்னால் முடியாது. மேலாவிலிருந்து எனக்குத் தகவல் ஒன்றும் வரவில்லை!” என்றார்.
அதைக் கேட்ட கதர்க்குல்லாக்காரர்கள் சிரித்தார்கள்.
“இப்போது இப்படித்தான் சொல்வீர்! சற்று நேரம் போனால் வேறு பாடம் படிப்பீர்!” என்றார் அவர்களில் ஒருவர்.
இவ்விதம் பேசிக் கொண்டிருக்கையிலே இரண்டு போலீஸ் ஜவான்கள் அங்கு வந்து நின்று மேற்படி காந்திக் குல்லாக்காரர்களுக்கு ஸலாம் வைத்தார்கள். “எஜமான், கலெக்டர் கடிதம் கொடுத்திருக்கிறார்!” என்றார் ஜவான்களில் ஒருவர். அதை வாங்கிக் கொண்டு கதர்க்குல்லாக்காரர் கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, “சரி நீங்கள் போகலாம்!” என்றதும், போலீஸ் ஜவான்கள் மறுபடியும் ஒரு பெரிய ஸலாம் வைத்துவிட்டுப் போனார்கள்.
இதைப் பார்த்த பிறகு சோலைமலைக் கிராம ஜனங்களுக்கும் மணியக்காரருக்குங்கூட நம்பிக்கை பிறந்துவிட்டது.
“அதற்கென்ன, தண்டோ ரா போடச் சொன்னால் போகிறது!” என்றார் மணியக்காரர்.
“உடனே தலையாரியைக் கூப்பிட்டு அனுப்புங்கள். தண்டோ ரா போடும் போது இன்னொரு விஷயமும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புரட்சி வீரர் குமாரலிங்கத் தேவர் இந்தப் பக்கத்துக் காடுகளில் எங்கேயோ மறைந்திருப்பதாகத் தெரிகிறது. அவரை உடனே கண்டு பிடித்துப் புதுடில்லிக்கு அனுப்பி வைக்கும்படி தலைவர் ஜவஹர்லால் நேருவிடமிருந்து கட்டளை வந்திருக்கிறது. குமாரலிங்கத்தேவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லுகிறவர்களுக்கு ஆயிரம் ரூபாய் காங்கிரஸ் சர்க்கார் இனாம் கொடுப்பார்கள் என்பதையும் சேர்த்துத் தண்டோ ரா போடச் செய்ய வேண்டும்!” என்று ஒரு காந்திக் குல்லாக்காரர் சொன்னார்.
வாசல் திண்ணையில் நடந்த இந்தப் பேச்சையெல்லாம் வீட்டு நடையில் கதவோரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த பொன்னம்மாளுக்கு அப்போது எப்படியிருந்திருக்கும் என்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். உடனே வாசற்புறம் ஓடிப்போய்க் குமாரலிங்கத் தேவர் இருக்குமிடத்தைச் சொல்லிவிடலாமா என்று அவள் உள்ளம் துடிதுடித்தது. ஆனால் பெண்மைக்குரிய அடக்கமும் பெரிய குலத்துக்கு உரிய பண்பும் அவ்விதம் செய்ய முடியாமல் அவளைத் தடை செய்தன.
பொன்னம்மாளின் தந்தை சிறிது நேரத்துக்கெல்லாம் வீட்டுக்குள்ளே வந்தார். பொன்னம்மாளும் விரைந்து உள்ளே போய் வீட்டுக் கூடத்தின் தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
“பார்த்தாயா, பொன்னம்மா! கடைசியில் நான் சொன்னபடிதான் ஆச்சு! அந்த வெள்ளக்காரப் பய மவனுகள் கடைசியில் காங்கிரஸ்காரன் காலிலே விழுந்துட்டானுக! மொத்தத்திலே, மானம் ரோசம் இல்லாதவனுங்க! நான் மட்டும் இங்கிலீஷ்காரனாயிருந்தால், என்ன ஆனாலும் ஆவட்டும் என்று கடைசிவரைக்கும் ஒரு கை பார்த்திருப்பேன்! ஜப்பான்காரன் கையிலாவது ராச்சியத்தைக் கொடுத்திருந்தாலும் கொடுத்திருப்பேனே தவிர, காங்கிரஸ்காரன் கையிலே கொடுத்திருக்க மாட்டேன்! அது போனால் போவட்டும்! இங்கிலீஷ்காரன் கொடுத்து வைச்சது அம்மட்டுந்தான்! நாம் என்னத்துக்கு அதைப்பத்திக் கவலைப்பட வேணும்? காங்கிரஸ் ராச்சியந்தான் இனிமேல் என்று ஏற்பட்டுப் போச்சு! நாளைக்கு ஒரு கண்டிராக்டோ , கிண்டிராக்டோ எல்லாம் இவங்களிடத்திலேதான் கேட்டு வாங்கும்படியிருக்கும். வந்திருக்கிறவங்க இரண்டு பேரும் ரொம்பப் பெரிய மனுஷங்க என்று தோணுது. நல்ல விருந்து செய்து அனுப்ப வேண்டும். உன் சின்னாயிகிட்டச் சொல்லு; இல்லாட்டி சின்னாயியை இங்கே கூப்பிடு; நானே சொல்லிடறேன்!” என்று மணியக்காரர் மூச்சு விடாமல் பொழிந்து தள்ளினார். வாசல் திண்ணையிலே உட்கார்ந்திருந்த மேற்படி காந்திக் குல்லாக்காரர்களின் காதிலே விழப் போகிறதே என்று கூட மணியக்காரர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ஏற்கனவே உணர்ச்சி மிகுதியால் உள்ளம் தத்தளித்துக் கொண்டிருந்த பொன்னம்மாளோ, மணியக்காரர் பேசும் போது நடுவில் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாதவளாய், திறந்த வாய் மூடாமல் அடங்கா ஆவலுடன் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு நின்றாள். அவர் கடைசியில் சொன்னபடி சின்னாயியைக் கூப்பிடக் கூட அவளுக்கு நா எழவில்லை.
நல்ல வேளையாகப் பொன்னம்மாளின் சின்னாயி, அதாவது மணியக்காரரின் இரண்டாவது மனைவி, தானாகவே அப்போது அங்கு வந்து விட்டாள். மறுபடியும் ஒரு தடவை அவளிடம் மணியக்காரர் பாடம் ஒப்புவித்துவிட்டு, “ஆகையால், இன்றைக்குத் தடபுடலாக விருந்து செய்ய வேணும். இலை நிறையப் பதார்த்தம் படைக்க வேணும். தாயும் மகளுமாய்ச் சேர்ந்து உங்கள் கைவரிசையைச் சீக்கிரமாகக் காட்டுங்கள், பார்க்கலாம்!” என்றார். பிறகு வாசற்பக்கம் சென்றார்.
பொன்னம்மாளின் சின்னம்மாள் அவ்விதமே சமையல் வேலை தொடங்கினாள். ஆனால் பொன்னம்மாளோ, “ஆயா! ஊருணியில் போய்க் குளித்துவிட்டு இதோ ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்!” என்று சொல்லி, வீட்டின் கொல்லை வாசற்படி வழியாகச் சிட்டாய்ப் பறந்து சென்றாள். அவ்வளவு விரைவாக அவள் எங்கே போனாள் என்று நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லையல்லவா?
போகும்போது பொன்னம்மாள் பூமியில் கால் வைத்தே நடக்கவில்லை; காற்று வெளியிலே மிதந்து கொண்டுதான் சென்றாள். கடைசியில் அவள் நினைத்தபடியே நடந்து விட்டதல்லவா? குமாரலிங்கத்துக்கு விடுதலையும் பெரிய பதவியும் வந்துவிட்டன என்னும் எண்ணம் அவளுக்கு எல்லையில்லாக் குதூகலத்தை அளித்தது. இதோடு அவரை அந்தக் கோட்டையை விட்டுப் போகாமல் அங்கேயே இருக்கும்படி தான் வற்புறுத்தியது எவ்வளவு சரியான காரியமாய்ப் போயிற்று என்று நினைவு தோன்றி, அவள் மனத்தில் பெருமிதத்தையும் உற்சாகத்தையும் உண்டு பண்ணியது.
ஆனால் இந்த உற்சாகம், குதூகலம் எல்லாம் சோலைமலைக் கோட்டைக்கு வந்து சேரும் வரையிலே தான் இருந்தன. கோட்டையில் கால் வைத்தவுடனேயே, அவளுடைய உள்ளத்தில் ஒரு சோர்வு உண்டாயிற்று. ‘நாளைக்கு இந்நேரம் குமாரலிங்கத் தேவர் இவ்விடத்தில் இருக்க மாட்டார்!’ என்ற எண்ணம் அவளுக்குச் சொல்ல முடியாத மனவேதனையை உண்டாக்கிற்று.
ஆனால் குமாரலிங்கமோ, பொன்னம்மாளைச் சற்றுத் தூரத்தில் பார்த்ததுமே, “வா, பொன்னம்மா, வா! இன்றைக்கு ஏது இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாய்? வந்தது என்னமோ நல்லதுதான்! வா!” என்று உற்சாகமான குரலில் வரவேற்றான்.
பொன்னம்மாள் சற்று அருகிலே வந்ததும், “என்ன, கையிலே ஒன்றையும் காணோம்? பலகாரம் கிலகாரம் ஒன்றுமில்லையா? போனால் போகட்டும்! ஒரு வேளை சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும் அதற்காக முகத்தை இப்படி ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? – இங்கே வந்து உட்கார்ந்து கொள். பொன்னம்மா இன்றைக்கு என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். என் வாழ்க்கையில் மட்டும் என்ன? நம் இருவர் வாழ்க்கையிலும் இன்று மிக முக்கியமான தினம்!” என்றான்.
பொன்னம்மாளின் முகம் அளவில்லாத அதிசயத்தைக் காட்டியது.
“உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.
“பின்னே, எனக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும்? பாட்டு இட்டுக் கட்டியது நான் தானே?” என்றான் குமாரலிங்கம்.
“பாட்டா? என்ன பாட்டு?” என்று பொன்னம்மாள் வியப்பும் குழப்பமும் கலந்த குரலில் கேட்டாள்.
“இங்கே வந்து என் பக்கத்தில் சற்று உட்கார்ந்து கொள்; சொல்லுகிறேன். என் பாட்டனாருக்குப் பாட்டனார் பெரிய கவிராயர், தெரியுமா பொன்னம்மா! சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துக்குப் போட்டியாக அவர் சாவடிச் சிந்து பாடினாராம். தேசத்தின் அதிர்ஷ்டக் குறைவினால் அந்தச் சாவடிச் சிந்து எழுதியிருந்த ஓலைச் சுவடியைக் கடல் கொண்டு போய்விட்டதாம். அந்தக் கவிராயருடைய வம்சத்தில் பிறந்த என்னுடைய உடம்பிலும் கவியின் இரத்தம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது இத்தனை நாளும் எனக்குத் தெரியாமல் இருந்துவிட்டு, திடீரென்று அன்றைக்கு உன்னைப் பார்த்தவுடன் தான் பீறிக் கொண்டு வெளிவந்தது! உன்னைப் பற்றி அன்றைக்கு ஒரு கவியில் இரண்டு இரண்டு வரியாகப் பாடிக்கொண்டு வந்து இன்றைக்குக் காலையிலேதான் பாட்டைப் பூர்த்தி செய்தேன். கவிதை ரொம்ப அற்புதமாய் அமைந்திருக்கிறது. பாடப்பாட எனக்கே அதில் புதிய புதிய நயங்கள் வெளியாகி வருகின்றன! நின்று கொண்டேயிருக்கிறாயே? உட்கார்ந்து கொள் பொன்னம்மா! பாட்டைக்கேள்!” என்றான் குமாரலிங்கம்.
‘இன்றைக்கு என்ன, எல்லோரும் இப்படி மூச்சு விடாமல் பேசுகிறார்கள்’ என்று பொன்னம்மாள் மனத்தில் நினைத்துக் கொண்டாள்; பிறகு, “பாட்டும் ஆச்சு! கூத்தும் ஆச்சு! எல்லாம் இன்றைக்கு ஒருநாள் வாழ்வு தானே? நாளைக்கு இந்நேரம் நீ எங்கேயோ, நான் எங்கேயோ எனக்கு உட்கார நேரமில்லை. வீட்டில் பெரிய விருந்து நடக்கப் போகிறது. சின்னாயிக்கு நான் ஒத்தாசை செய்ய வேண்டும்!” என்றாள் பொன்னம்மாள்.
அப்போதுதான் குமாரலிங்கம் பொன்னம்மாளைக் கவனித்துப் பார்த்தான். அவளுடைய மனத்தில் ஏதோ பெரிய சமாசாரத்தை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதும், அதை அவள் சொல்லமுடியாதபடி ஏதோ தான் பிதற்றிக் கொண்டிருப்பதும் அவனுக்கு உடனே தெரிய வந்தன.
“பொன்னம்மா! என்ன சமாசாரம்? வீட்டிலே என்ன விசேஷம்? எதற்காக விருந்து? நாளைக்கு நீ எங்கே போகப் போகிறாய்?” என்று திடுக்கிட்ட குரலில் கேட்டான். பொன்னம்மாளின் கல்யாணம் சம்பந்தமாக யாராவது வந்திருக்கிறார்களோ, அதற்காகத்தான் விருந்தோ என்னும் விபரீதமான சந்தேகம் ஒரு நொடிப் பொழுதில் தோன்றி அவன் மனத்தை அலைத்தது.
“நான் எங்கேயும் போகவில்லை. நீதான் போகப் போகிறாய். கடிதாசி உனக்குத்தான் வந்திருக்கு; ஜவஹர்லால் நேரு போட்டிருக்காரு!” என்று பொன்னம்மாள் சொன்னாளோ இல்லையோ, அதுவரையில் உட்கார்ந்திருந்தபடியே பேசிக்கொண்டிருந்த குமாரலிங்கம் துள்ளி குதித்து எழுந்தான்.
“பொன்னம்மா! என்ன சொன்னாய்? நன்றாய்ச் சொல்லு! கடிதாசு வந்திருக்கா? ஜவஹர்லால் நேரு போட்டிருக்காரா? சரியாச் சொல்லு!” என்று பொன்னம்மாளின் இரு கரங்களையும் பற்றிக் கொண்டு மிக்க பரபரப்போடு கேட்டான்.
“கையை விடு, சொல்லுகிறேன்!” என்றாள் பொன்னம்மாள். பிறகு, கதர்க் குல்லா தரித்த இரண்டு ஆட்கள் வந்திருப்பது பற்றியும், அவர்கள் தண்டோ ராப் போடச் சொன்னது பற்றியும் விவரமாகக் கூறினாள்.
“அவர்கள் சொன்னதை எங்க அப்பாகூட முதலில் நம்பவில்லை. ஆனால் இரண்டு போலீஸ் ஜவான்கள் வந்து கதர்க் குல்லாக்காரர்களுக்கு ஸலாம் போட்ட பிறகு அவர்கள் பேச்சை நம்பாமல் வேறு என்ன செய்வது? அவர்களுக்கு வீட்டில் விருந்து வைக்கத் தடபுடலாக ஏற்பாடு நடக்கிறது!” என்றாள்.
குமாரலிங்கத்துக்கு அச்சமயம் பழைய காலேஜ் நாட்களின் வாசனை எப்படியோ வந்து சேர்ந்தது. மேல் துணியை எடுத்து ஆகாசத்தில் வீசி எறிந்து, “ஹிப் ஹிப் ஹுர்ரே!’ என்று சத்தமிட்டான். பிறகு இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வந்திருப்பதைக் கேவலம் அப்படி ஒரு இங்கிலீஷ் கோஷத்தினால் கொண்டாடியது பற்றி வெட்கப்பட்டவனாய்
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ மென்றுஎன்னும் பாரதியார் பாடலைப் பாடி அந்த மகத்தான சம்பவத்தைக் கொண்டாடினான்.
மேற்படி பாரதியார் பாடல் வரிகளைத்தான் எத்தனை நூறு தடவை அவன் ஏற்கனவே பாடியிருக்கிரான்? எத்தனை ஆயிரம் தடவை பிறர் பாடக் கேட்டிருக்கிறான்?
அப்போதெல்லாம் ஏதோ வெறும் வார்த்தைகளாயிருந்த பாட்டு, இப்போது பொருள் ததும்பி விளங்கிற்று. உண்மையாகவே, பாரததேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது! அந்த ஆனந்த சுதந்திரத்தில் தனக்கும் விசேஷமான பங்கு உண்டு; பங்கு கேட்பதற்குத் தனக்கு உரிமை உண்டு; சென்ற ஒரு மாத காலத்திற்குள் தேசத்தின் சுதந்திரத்துக்காகத் தான் செய்திருக்கும் தொண்டானது மேற்படி உரிமையைத் தனக்கு அளித்திருக்கிறது.
ஆகா! வருங்காலம் எவ்வளவு ஆனந்தமயமாக இருக்கப் போகிறது? தேசத்துக்கு எப்படியோ, அப்படியே தனக்குந்தான்!
குமாரலிங்கம் வருங்காலச் சுதந்திர வாழ்க்கையைப் பற்றி ஆனந்தக் கனவு கண்டுகொண்டிருந்த அந்தச் சில நிமிஷங்களில், பொன்னம்மாள் தன்னுடைய ஆகாசக் கோட்டையெல்லாம் தகர்ந்து துகள் துகளாகப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
தன்னைச் சோலைமலை இளவரசியென்றும், குமாரலிங்கத்தை மாறனேந்தல் மகாராஜா என்றும் அவள் கற்பனை செய்து மகிழ்ந்ததெல்லாம் மாயக் கனவாகவே போய்விட்டது! குமாரலிங்கம் இனி ஒரு கணமும் இங்கே தங்கப் போவதில்லை; இவ்விடத்தை விட்டுப் போனபிறகு இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைக் கவனிக்கப் போவதுமில்லை, ‘சீ!’ இது என்ன வீண் ஆசை? இந்த மாய வலையில் நாம் ஏன் சிக்கினோம்?’ என்ற வைராக்கிய உணர்ச்சி அவளுக்கு அப்போது ஏற்பட்டது.
வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் சின்னாயி தன்னைத் திட்டப் போகிறாளே என்பதும் நினைவு வந்தது. ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, “சரி நான் போய் வாரேன்!” என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டாள்.
15. கைமேலே பலன்
இத்தனை நேரமும் கனவு லோகத்தில் சஞ்சாரித்துக் கொண்டிருந்த குமாரலிங்கம், பொன்னம்மாள் “போய் வாரேன்!” என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டதும் இவ்வுலகத்துக்குத் திடும் என்று வந்தான். “போகிறாயா? எங்கே போகிறாய்?” என்று கேட்டுக் கொண்டே பொன்னம்மாளின் கரங்களைப் பிடித்துக் கீழே விழுந்து கிடந்த பழைய அரண்மனைத் தூண் ஒன்றின் பேரில் அவளை உட்கார வைத்தான்.
“நான் சீக்கிரம் போகாவிட்டால் சின்னாயி என்னை வெட்டி அடுப்பிலே வைத்துவிடுவாள்! அந்தக் காந்திக் குல்லாக்காரர்கள் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உன் பெயரைச் சொல்லி ஊரெல்லாம் தமுக்கு அடித்துத் தண்டோ ராப் போடுவானேன்? நீயே போய் ஆஜராகிவிடு! அதோ கிராமச் சாவடியும் இலுப்ப மரமும் தெரிகிறதல்லவா? அங்கேதான் எங்கள் வீடு இருக்கிறது. நான் ஊருணியில் குளித்துவிட்டுச் சற்று நேரம் சென்ற பிறகு வருகிறேன்” என்றாள் பொன்னம்மாள்.
“அதெல்லாம் ரொம்ப சரி; அப்படியே செய்யலாம். ஆனால் என்னுடைய பாட்டை மட்டும் இப்போதே நீ கேட்டுவிட வேண்டும். கேட்டுவிட்டு உடனே போய் விடலாம்!” என்றான் குமாரலிங்கம்.
“சரி, படிக்கிற பாட்டைச் சீக்கிரம் படி!” என்றாள் பொன்னம்மாள்.
குமாரலிங்கம் அவ்விதமே தான் கவனம் செய்திருந்த பாட்டைப் பாடிக் காட்ட ஆரம்பித்தான்.
பொன்னம்மாள் ரொம்பப் பொல்லாதவள் – அவள்
பொய் என்ற வார்த்தையே சொல்லாதவள்
சொன்னதைச் சொல்லும் கிளியினைப் போல் – என்றும்
சொன்னதையே அவள் சொல்லிவிடுவாள்!
மன்னர் குலம் தந்த கன்னியவள் – இந்த
மாநிலத்தில் நிகர் இல்லாதவள்
அன்னம் அவள் நடை அழகு கண்டால் – அது
அக்கணமே தலை கவிழ்ந்துவிடுமே!
பாடும் குயில் அவள் குரல் கேட்டால் – அது
பாட்டை மறந்து பறந்திடுமே!
மாடும் மரங்களும் அவளுடைய – உயர்
மாட்சிமைக்கு வலம் வந்திடுமே!
கூந்தல் முடிப்பிலே சொகு கடையாள் – விழிக்
கோணத்திலே குறுநகையுடையாள்! – அவள்
மாந்தளிர் மேனியைக் கண்டவர்கள் – அந்த
மாமரம் போலவே நின்றிடுவர்!
கற்பக மலர்களோ அவள் கரங்கள் – அந்தக்
கண்களில்தான் என்ன மந்திரமோ?
அற்புதமோ ஒரு சொப்பனமோ? – இங்கு
ஆர் அறி வார் அவள் நீர்மை யெல்லாம்!
பொன்னம்மாள் மிகப் பொல்லாதவள் – அவள்
பொய்சொல்லக் கொஞ்சமும் அஞ்சாதவள்!
அன்னம் படைக்கவே வந்திடுவாள் – எனில்
அமுது படைத்து மகிழ்ந்திடுவாள்!
ஆனதால் என் அருந் தோழர்களே – நீங்கள்
அவளை மணந்திட வந்திடாதீர்!… இத்தனை நேரம்வரை மேற்படி பாடலை முரண்பட்ட உணர்ச்சிகளோடு கேட்டு வந்தாள் பொன்னம்மாள். பாட்டிலே இருப்பது பாராட்டா, பரிகாசமா என்று அவளுக்கு நன்றாய்த் தெரியவில்லை. ஒரு சமயம் புகழ்வது போலிருந்தது; இன்னொரு சமயம் கேலி செய்வது போலவும் இருந்தது. ஆனால் கடைசி வரிகள் இரண்டையும் கேட்டதும், பாட்டு முழுவதும் பரிகாசந்தான் என்ற நிச்சயம் ஏற்பட்டுக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
“சே! போ! போதும். உன் பாட்டு! நிறுத்திக் கொள்! எவன் என்னைக் கண்ணாலம் செய்து கொள்ள வரப்போகிறான் என்று நான் காத்துக் கிடக்கிறேனாக்கும்!” என்று சீறினாள் பொன்னம்மாள்.
“பொன்னம்மா! இன்னும் இரண்டே இரண்டு வரிதான் பாட்டில் பாக்கி இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா, வேண்டாமா? அதற்குள் கோபித்துக் கொண்டுவிட்டாயே?” என்றான் குமாரலிங்கம்.
“சரி! அதையுந்தான் சொல்லிவிடு!” என்று பதில் வந்தது.
குமாரலிங்கம் முதல் இரண்டு வரிகளையும் சேர்த்துப் பாட்டைச் சொல்லி முடித்தான்:
ஆனதால் என் அரும் தோழர்களே – நீங்கள்
அவளை மணந்திட வந்திடாதீர்!
ஏனென்று கேளுங்கள் இயம்பிடுவேன் – இங்கு
யானே அவளை மணந்து கொண்டேன்! கடைசி இரண்டு வரிகளைக் கேட்டதும் பொன்னம்மாள் தன்னையறியாமல் கலீர் என்று நகைத்தாள். உடனே வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள், திரும்பவும் குமாரலிங்கத்தை ஏறிட்டு நோக்கி, “மாறனேந்தல் மகாராஜாவாயிருந்தால் இந்த மாதிரியெல்லாம் கன்னாபின்னா என்று பாடுவாரா? ஒரு நாளும் மாட்டார்!” என்றாள்.
பல தடங்கல்களுக்கும் தயக்கங்களுக்கும் பிறகு பொன்னம்மாள் குமாரலிங்கத்திடம் விடை பெற்றுக் கொண்டு பிரிந்து சென்ற போது மிக்க குதூகலத்துடனேயே சென்றாள்.
அந்தப் பாழடைந்த கோட்டையில் காலடி வைத்தவுடனே அவளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களும் பயங்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றபோது அவளை விட்டு நீங்கியிருந்தன.
குமாரலிங்கத்தின் பாடலில் அவளுடைய ஞாபகத்தில் இருந்த சில வரிகளை வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே போனாள்.
ஊருணியில் போய்ச் சாவகாசமாகக் குளித்தாள். பின்னர் வீட்டை நோக்கிக் கிளம்பினாள். போகும்போது இத்தனை நேரம் குமாரலிங்கத் தேவர் தன் வீட்டுக்குப் போயிருப்பார்; அவரை இப்படி உபசரிப்பார்கள், அப்படி வரவேற்பார்கள் என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு சென்றாள். அவரைக் குதிரைச் சாரட்டில் வைத்து ஊர்வலம் விட்டாலும் விடுவார்கள். ரோஜாப்பூ மாலையும் செவந்தி மலர் மாலையும் பச்சை ஏலக்காய் மாலையும் அவருக்குப் போடுவார்கள். இன்று சாயங்காலம் இலுப்ப மரத்தடியில் மீட்டிங்கி நடந்தாலும் நடக்கும் என்று சிந்தனை செய்து கொண்டு உல்லாசமாக நடந்து சென்றாள்.
ஆனால் சிறிது தூரம் நடந்ததும் அவளுடைய உல்லாசம் குறைவதற்கு முகாந்தரம் ஏற்பட்டது.
அவளுடைய தந்தை வேட்டை நாய் சகிதமாகச் சற்றுத் தூரத்தில் போய்க் கொண்டிருப்பதைக் கண்டதும் அவளுக்குச் சொரேல் என்றது. வீட்டில் விருந்தாளிகளை வைத்துவிட்டு இவர் எங்கே கிளம்பிப் போகிறார்? ஒரு வேளை தன்னைத் தேடிக்கொண்டுதானோ? சின்னாயி கோள் சொல்லிக் கொடுத்துவிட்டாளோ? நடையின் வேகத்தைப் பார்த்தால் மிக்க கோபமாய்ப் போகிறதாகத் தென்படுகிறதே! அப்பாவின் கண்ணில் படாமல் ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றுவிட்டு அவர் போனதும் விரைவாக வீட்டை நோக்கிச் சென்றாள். அவர் வீடு வந்து சேருவதற்குள், தான் போய்ச் சேர்ந்து நல்ல பெண்ணைப் போல் சமையல் வேலையில் ஈடுபட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு நடந்தாள்.
ஊருணியிலிருந்து அவளுடைய வீடு இருந்த வீதிக்குச் சென்று குறுக்குச் சந்தில் திரும்பியதும், படமெடுத்து ஆடும் பாம்பைத் திடீரென்று எதிரில் கண்டவளைப்போல் பயங்கரமும் திகைப்பும் அடைந்து நின்றாள்.
ஐயோ! இது என்ன? இவ்வளவு போலீஸ் ஜவான்கள் எதற்காக வந்தார்கள்? அவர்களுக்கு மத்தியிலே இருப்பவர் யார்? குமாரலிங்கம் போலிருக்கிறதே? ஐயோ! இது என்ன? அவர் இரண்டு கையையும் சேர்த்து – கடவுளே! விலங்கல்லவா போட்டிருக்கிறது?
இதெல்லாம் உண்மைதானா? நாம் பார்க்கும் காட்சி நிஜமான காட்சிதானா? அல்லது ஒரு கொடூரமான துயரக் கனவு காண்கிறோமா?
அந்தக் காந்திக் குல்லாக்காரர்கள் எங்கே? ஆஹா! அவர்கள் இப்போது வேறு உருவத்தில், சிவப்புத் தலைப் பாகையுடன் தோன்றுகிறார்களே? ஆம், அதோ பின்னால் பேசிச் சிரித்துக் கொண்டு வருகிறவர்கள் அவர்கள் தான்! சந்தேகமில்லை.
திகைத்து, ஸ்தம்பித்து, முன்னால் போவதா, பின்னால் போவதா என்று தெரியாமல், கண்ணால் காண்பதை நம்புவதா, இல்லையா என்றும் நிச்சயிக்க முடியாமல் – பொன்னம்மாள் அப்படியே நின்றாள்.
போலீஸ் ஜவான்களின் பேச்சில் சில வார்த்தைகள் காதிலே விழுந்தன.
“எவ்வளவு ஜோராய் மாப்பிள்ளை மாதிரி நேரே வந்து சேர்ந்தான்? வந்ததுமில்லாமல், ‘நான் தான் புரட்சித் தொண்டன் குமாரலிங்கம்! நீங்கள் எங்கே வந்தீர்கள்?’ என்று கேட்டானே என்ன தைரியம் பார்த்தீர்களா?” என்றார் ஒரு போலீஸ்காரர்.
“அந்தத் தைரியத்துக்குத்தான் கைமேல் உடனே பலன் கிடைத்து விட்டதே?” என்று சொன்னார் இன்னொரு போலீஸ்காரர்.
குமாரலிங்கத்தின் கையில் பூட்டியிருந்த விலங்கைத் தான் அவர் அப்படிக் ‘கைமேல் பலன்’ என்று சிலேடையாகச் சொல்கிறார் என்று தெரிந்து கொண்டு மற்றவர்கள் ‘குபீர்’ என்று சிரித்தார்கள்.
அந்தச் சிரிப்புச் சத்தத்தினிடையே ‘வீல்’ என்ற ஒரு சத்தம் – இதயத்தின் அடிவாரத்திலிருந்து உடம்பின் மேலுள்ள ரோமக் கால்கள் வரையில் குலுங்கச் செய்த சொல்லமுடியாத சோகமும் பீதியும் அடங்கிய சத்தம் – கேட்டது. போலீஸ் ஜாவன்களின் பரிகாசப் பேச்சைக் கேட்டுக்கொண்டு தலை குனிந்த வண்ணம் நடந்து வந்த தொண்டன் குமாரலிங்கத்தின் காதிலும் மேற்படி சத்தம் விழுந்தது. சத்தம் வந்த திசையை நோக்கி அவன் ஏறிட்டுப் பார்த்தான்.
பொன்னம்மாளின் முகம் – ஏமாற்றம், துயரம், பீதி, பச்சாதாபம் ஆகிய உணர்ச்சிகள் ஒன்றோடொன்று போட்டியிட்ட முகம் – மின்னல் மின்னுகின்ற நேரத்துக்கு அவன் கண் முன்னால் தெரிந்தது. அடுத்த விநாடி பொன்னம்மாள் தான் வந்த பக்கமே திரும்பினாள். அந்தக் குறுக்குச் சந்தின் வழியாக அலறிக் கொண்டு ஓடினாள்.
போலீஸ் ஜவான்களின் ஒருவர், “பார்த்தீங்களா ஐயா! சிவப்புத் தலைப்பாகையைப் பார்த்துப் பயப்படுகின்றவர்கள் இந்த உலகத்தில் இன்னும் சிலர் இருக்கத்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த வீராதி வீரன் இருக்கிறானே, இவன் மட்டும் போலீஸுக்குப் பயப்பட மாட்டான்; துப்பாக்கி, தூக்குத் தண்டனை ஒன்றுக்கும் பயப்பட மாட்டான்! எதற்கும் பயப்பட மாட்டான்!” என்று சொல்லிக் கொண்டே குமாரலிங்கத்தின் கழுத்திலே கையை வைத்து ஒரு தள்ளுந் தள்ளினார்.
பொன்னம்மா வீறிட்டுக் கதறிய சத்தம் குமாரலிங்கத்தின் காதில் விழுந்ததோ, இல்லையோ, அந்தக் கணத்திலேயே அவன் நூறு வருஷங்களுக்கு முன்னால் சென்று விட்டான்.
இதோ அவன் எதிரில் தெரிவது போன்ற ஒரு பிரம்மாண்டமான இலுப்ப மரந்தான் அது; ஆனால் இன்னும் செழிப்பாக வளர்ந்து நாலாபுறமும் கிளைகள் தழைத்துப் படர்ந்திருந்தன. சோலைமலைக் கோட்டை வாசலுக்கு எதிரே கூப்பிடு தூரத்தில் அந்த மரம் நின்றது. மரத்தின் அடியில் இது போலவே மேடையும் இருந்தது. ஆனால், அந்த மரத்தின் கீழேயும் மரத்தின் அடிக் கிளையிலும் தோன்றிய காட்சிகள்… அம்மம்மா! குமாரலிங்கம் கண்களை மூடிக்கொண்டான். கண்களை மூடிக் கொண்டால் மட்டும் ஆவதென்ன? அவனுடைய மனக் கண்ணின் முன்னால் அந்தக் காட்சிகள் தோன்றத்தான் செய்தன.
இலுப்ப மரத்தின் வயிரம் பாய்ந்த வலுவான அடிக்கிளையில் ஏழெட்டுக் கயிறுகள், ஒவ்வொன்றின் நுனியிலும் ஒரு சுருக்குப் போட்ட வளையத்துடன் தொங்கிக் கொண்டிருந்தன.
தொங்கிய வளையம் ஒவ்வொன்றின் அடியிலும் ஒவ்வொரு மனிதன் நின்று கொண்டிருந்தான்.
அப்படி நின்றவர்களைச் சூழ்ந்து பல சிப்பாய்கள் வட்டமிட்டு நின்றார்கள்.
மரத்தடி மேடையில் ஒரு வெள்ளைக்கார துரை ‘ஜம்’ என்று உட்கார்ந்திருந்தார். அவர் இரண்டு கையிலும் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. அவருடைய வெள்ளை முகம் கோப வெறியினால் சிவப்பாக மாறியிருந்தது.
மேடைக்கு அருகில் சோலைமலை மகாராஜா கீழே நின்று துரையிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தது போலத் தோன்றியது. “அதெல்லாம் முடியாது; முடியவே முடியாது!” என்று துரை மிக விறைப்பாகப் பதில் சொல்லுவது போலும் தெரிந்தது.
மரக்கிளையில் தொங்கிய சுருக்குக் கயிறு ஒன்றின் கீழே மாறனேந்தல் உலகநாதத்தேவர் நின்று கொண்டிருந்தார். துரையிடம் சோலைமலை மகாராஜா ஏதோ கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தம்முடைய உயிரைத் தப்புவிப்பதற்காகத்தான் சோலைமலை மகாராஜா அப்படி மன்றாடுகிறாரோ என்ற சந்தேகம் இவர் மனத்தில் உதித்திருந்தது. அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற ஆவல் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. ஆறிலும் சாவு? நூறிலும் சாவு!” என்னும் பழமொழியை ஆயிரந் தடவை கேட்டிருந்தும், அந்நிய நாட்டான் ஒருவனிடம் போய் எதற்காக உயிர்ப் பிச்சைக் கேட்க வேண்டும்? அதிலும் வீரமறவர் குலத்தில் பிறந்தவர்களுக்கு அடுக்கக்கூடிய காரியமா, அது?
சோலைமலை மகாராஜாவைக் கூப்பிட்டுச் சொல்லி விடலாமா என்று உலகநாதத் தேவர் யோசித்துக் கொண்டிருந்த போது, கோட்டைக்குள்ளே அரண்மனை அந்தப்புரத்தின் மேன்மாடம் தற்செயலாக அவருடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. மேன்மாடம் கவரவில்லை! மேல் மாடத்திலே தோன்றிய ஒரு பெண் உருவந்தான் கவர்ந்தது. வெகு தூரத்திலிருந்தபடியால் உலகநாதத்தேவரின் கூரிய கண்களுக்குக்கூட அந்த உருவம் யாருடையது என்பது நன்றாய்த் தெரியவில்லை. ஆனால் அவருடைய மனத்துக்கு அவள் இளவரசி மாணிக்கவல்லிதான் என்று தெரிந்து விட்டது.
முதலில், இந்தக் கோரக் காட்சியைப் பார்ப்பதற்குச் சோலைமலை இளவரசி அந்தப்புரத்து மேன் மாடத்துக்கு வரவேண்டுமா என்று உலகநாதத் தேவர் எண்ணினார். பின்னர், தம்முடைய வாழ்நாளின் கடைசி நேரத்தில் இளவரசியைப் பார்க்க நேர்ந்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அடுத்த கணத்தில், “ஐயோ! இந்த விவரமெல்லாம் அவளுக்குத் தெரியும்போது என்னமாய் மனந்துடிப்பாளோ?” என்று எண்ணி வேதனையடைந்தார். எனினும், சோலைமலை மகாராஜா தம்மிடம் கொண்டிருந்த விரோதத்தை மாற்றிக் கொண்டது இளவரசிக்கு ஓரளவு ஆறுதல் அளிக்குமல்லவா என்ற எண்ணம் தோன்றியது. தாம் சொல்லி அனுப்பிய செய்தியை மாணிக்கவல்லியிடம் சோலைமலை மகாராஜா சரியாகச் சொல்ல வேண்டுமே என்ற கவலை தொடர்ந்து வந்தது!
ஐயோ! இதென்ன? மாடி முகப்பின் மேல் நின்ற பெண் உருவம் வீல் என்று அலறும் சத்தத்துடனே கீழே விழுகிறதே?
கடவுளே! சோலைமலை இளவரசி அல்லவா அந்தப்புரத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டாள்? ஐயோ! அவள் உயிர் பிழைப்பாளா?
சோலைமலை மகாராஜா துரையிடம் மன்றாடுவதை நிறுத்திவிட்டு “ஓ!” என்று அலறிக் கொண்டு கோட்டை வாசலை நோக்கி ஓடினார்.
மாறனேந்தல் உலகநாதத் தேவரும் தம்முடைய நிலையை மறந்து, கோட்டை வாசலை நோக்கித் தாமும் பறந்து ஓடினார்.
‘டும்’ ‘டும்’ ‘டுடும்’ என்று துப்பாக்கி வேட்டுகள் தீர்ந்தன.
போலீஸ் ஜவனால் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்பட்ட தேசத் தொண்டன் குமாரலிங்கம் தரையிலே விழுந்து மூர்ச்சையானான்!
-கல்கி