Skip to content
Home » காதலை கண்ட நொடி -14

காதலை கண்ட நொடி -14

அத்தியாயம் – 14

வானளவு ஆசை

 இருந்தும் கடுகளவு கூட 

உன்னை நெருங்காமல் 

கட்டிக்காத்த என் காதல் 

கலங்கி நிற்கிறதடா..

உன் காதல் மழை என்மேல் 

பொழியாதா? – டைரியில்.

இவ்வளவும் நடந்தது தன் மகளது காதில் எட்டாதவாறு பார்த்துக்கொண்டார் சங்கராச்சாரியார்.

அதுவரை எதனால் அந்த ஊர்மக்கள் இப்படி நடந்துகொள்கின்றனர் என அறியாமல் நொந்து போய் ஊரைவிட்டு போகும் சமயம் அவர்கள் எதிரில் வந்து நின்றார் சங்கராச்சாரியார்..

அவரை பார்த்ததும் இனியன் “அப்பா” என்று அழைக்க..

“ச்சீ..யாருக்கு யார் அப்பா.. வேசி குலத்தில பொறந்திட்டு நோக்கு உயர்ஜாதியில பிறந்த என்பேர்ல அப்பாங்குற அடையாளம் வேற தேவைபடுதோ? அன்னைக்கு போதைக்கு நானு அதுக்கு முன்னமும் அப்புறமும் எத்தனைபேரோ? வசதியா தனியாளா நான் இருக்கவும் என்னான்ட வந்து ஒட்டிக்க நினைக்கிறீங்களா? உங்ககிட்ட பேசுறது கூட தீட்டுனு நினைக்கிறவன் நான்..என்னை அப்பானு சொல்றியாடா தாசி மகனே” என்று கூற 

“ஏய்ய்ய்” என்று கோவமாய் இனியன் அவரை அடிக்கப்பாய அவரது ஆட்கள் இனியனை பிடித்து அடித்து மிதித்தனர்.. அவமான பேச்சு மற்றவர்களால் வந்தபோதும் இவர் தன்னை நம்புவார் என்று எண்ணிய மீனாட்சியின் தலையில் இடியாய் இறங்கியது அவரது பேச்சு கண்கள் கலங்க கைகால் நடுங்க அவரை ஒரே ஒரு பார்வை பார்த்தவர் அருவருப்பாய் தன் முகத்தை திருப்பிக்கொண்டார்..அதுவரை அமைதியாய் இருந்த மதுமிதா கோவத்தில் கொத்தித்துவிட்டார்..

“ச்சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா? உன்கிட்ட போய் நியாயம் கிடைக்கும்னு நம்பினாங்க பாரு இவங்களை சொல்லனும் உன்கிட்ட நியாயப்படி பேசி பிரயோஜனமே இல்ல நாங்க சட்டப்படி சந்திச்சிக்கிறோம்..கோர்ட்ல டாக்டர் வெச்சு செக் பண்ணுவாங்கல்ல அப்போ தெரிஞ்சுடும் உங்க சுயரூபம்..” என்று கோவமாய் பேச அவளது கழுத்தை நெறிப்பது போல் பிடித்தவர்..

“தாசி குலத்துல பிறந்த உங்களுக்கே இவ்வளவு திமிர் இருக்கும்போது உயர்குல ப்ராமணாளா பிறந்த எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.. என்ன சொன்ன கோர்ட்ல சொல்ல போறியா? நானும் சொல்லுவேன் இவ ஒரு தாசி இவளுக்கு பொறந்தவன் அதான் உன் புது புருஷன் அவன் ஒரு தாசிமகன்.. நீயும் இந்த கூட்டத்தை சேர்ந்தவதான் புருஷன் பொண்டாட்டினு சொல்லி ஊரை ஏமாத்தி சம்பாதிக்கிறானு சொல்லுவேன்..ஆனா எதுக்கு இந்த வெட்டிப்பேச்சு இவ்வளவும் நீங்க செய்யுறவரைக்கும் நான் வேடிக்கை பார்ப்பேனா?.. என்னை எதிர்க்க நினைச்சாலே அவங்கள குழிக்குள்ள தள்ளிடுவேன்..என்னான்டயே அவ்வளவு திமிரா உனக்கு.. நீங்கலாம் என் முன்ன நிக்க கூட தகுதி இல்லாதவங்க..இங்கிருந்து உயிரோட போனாதானே நீங்க சொல்றதெல்லாம் செய்வீங்க” என்றபடி அவர் கண்காட்ட அவர்களை அடிக்க ஆரம்பித்தனர்.. நாலைந்து பேர் இனியனை பிடித்து இருந்ததால் அவன் திமிரதிமிர அவனை அடித்தனர்.. ஒருவன் ஓங்கி மீனாட்சியின் மண்டையில் அடிக்க அவர் ஆஆவென அலறியபடி ரத்தம் வழிய அங்கேயே மடிந்து விழ இன்னொருவன் அடித்த அடியில் மதுமிதாவும் மயங்கி விழ இனியனும் மயங்கி போனான்.. அடிப்பதை நிறுத்த சொல்லிய சங்கராச்சாரியார்..

மீனாட்சியின் அருகில் சென்று உயிர் இருக்கிறதா என பார்க்க அவரது உயிரும் பிரிந்து இருந்தது..

“இவா மூனு பேரையும் ஏதாவது ரோட்டுல போட்டு விடுங்கோ..ஏதாவது வண்டில அடிபட்டு மொத்தமா சாகட்டும் இவங்களோட பெட்டியைலாம் செக் பண்ணி ஏதாவது இருந்தா அதை என்கிட்ட கொண்டு வந்துடுங்கோ..எதுவும் மிஸ் ஆகக்கூடாது.. இனி என் பொண்ணு கல்யாணத்தை நான் ஷேமமா நடத்திடுவேன்.. எனக்கு இருந்த பெரிய அவமானம் இன்னையோட ஒழிஞ்சது” என்று கூற அரைமயக்கத்தில் இருந்த இனியனின் காதிலும் மதுமிதாவின் காதிலும் அந்த பேச்சுக்கள் விழ, ‘இவரோட பொண்ணு வாழ்க்கைக்காகவா நம்மள இப்படி செஞ்சார் அப்போ இவர விட பெரிய துரோகி அவதானா? நல்லவ மாதிரி நடிச்சு ஏமாத்தினாளா?’என மனதில் மீராவின் மேல் வஞ்சம் வளர்த்துக்கொண்டார் மதுமிதா..அப்படியே அவர்களும் மயங்கிவிட அவர்களை தூக்கி சென்றவர்கள் நெடுஞ்சாலையில் போட்டுவிட்டு அவர்களின் உடைமைகளை ஆராய அதில் கிடைத்தது கொஞ்சம் பணம் மட்டுமே. அதனால் இறந்துபோன மீனாட்சியை மட்டும் வேறு ஒரு ஊரில் கொண்டு சென்று போட்டுவிட்டு அவரது உடைமைகளை ஆராய அதில் ஒரே ஒரு கடிதம் மட்டுமே கிடைத்தது..அதை எடுத்தவர்கள் இவர்களை அப்படியே விட்டுவிட்டு சென்றனர்..அந்த கடிதமும் பணமும் சங்கராச்சாரியாரிடம் ஒப்படைக்கப்பட்டது..அந்த பணத்தை அவர்களையே எடுத்துக்கொள்ள சொன்னவர் அந்த கடிதத்தை ஸ்டோர் ரூமில் தூக்கி எறிந்தார்..

சிறிது நேரத்தில் அவ்வழியே வந்த வாகனத்தில் வந்த பெரியவர் ஒருவர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தார்.. 

இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது அந்த அடிப்பட்டது இருவரின் இதயத்திலும் ஆறாத வடுவாக படிந்து போனது தனது தாய்க்கு கடைசி நேர கிரியைகள் கூட செய்யமுடியாத தன் கையறு நிலையை எண்ணி கூனிக்குறுகி போனார் இனியன்..

அவர்களை விசாரிக்க வந்த போலிஸிடமும் தவறுதலாக வண்டி வரும்போது ரோட்டை கடந்துவிட்டோம் எனக்கூறி கேஸை முடித்துவிட்டனர்.. அவர்களை காப்பாற்றிய பெரியவர் அவர்களுக்கு உதவுகிறேன் என்று கூற அவருடன் சென்னை பயணமாகினர்.. மீனாட்சியை அநாதை பிணமாக எண்ணி கவர்மெண்ட்டே அவரது உடலை தகணம் செய்தது..தாங்கள் யார் என்ன என்பதை யாரிடமும் சொல்லாமல் தங்களது குடும்பத்தை நடத்த ஆரம்பித்தனர்..

இதற்கிடையில் ஸ்டீவ்விற்கு மீராவை மணம் முடிக்க சம்மதம் கூறியவர் மீராவின்  சம்மதத்தை கேட்க அவருக்கும் பிடித்து இருந்ததால் சரியென கூற அவர்களின் திருமணம் நிச்சயம் ஆனது.. தனது தந்தையின் நண்பர் மூலம் இவர்களை தேடிய மீராவிற்கு கிடைத்தது அனைவரும் ஏதோ ஆக்ஸிடென்ட்டில் இறந்து போயினர் என்ற தகவலே.. அந்த விஷயத்தை கூட தந்தையிடம் பகிராமல் தனக்குள்ளேயே வைத்து மருகி போனார் மீரா.. தனக்கு ஒரு தமயன் கிடைத்தான் அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்த மீராவிற்கு அவர்கள் மரணச்செய்தி பெரும் வருத்தமாய் இருந்தது..

அந்த வருத்தத்தில் இருந்தவரை தந்தையை விட்டு பிரியதான் வருத்தம் என எண்ணி அமைதியாகிவிட்டார் சங்கராச்சாரியார்.. ஸ்டீவ்வும் அதே என எண்ணியதால் அவரும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை..திருமணம் முடிய தன்னுடன் வருமாறு ஸ்டீவ் அழைக்க இல்லையென மறுத்துவிட்டார் சங்கராச்சாரியார்..

சரியென ஸ்டீவ்வும் கிளம்பிவிட மீராவும் அங்கே சென்று கணவனின் அன்பில் தன் துயரங்களை மறக்க ஆரம்பித்தார்.. இடையே ஏதோ ஒரு பொருளை தேட ஸ்டோர் ரூமுக்கு சென்ற சங்கராச்சாரியாரின் கண்ணில் பட்டது அந்த லெட்டர் அதை எடுத்தவர் கிழிக்க முற்பட சட்டென நிறுத்தியவர் அப்படி என்னத்த எழுதி இருக்கப்போறா? என்றபடி படிக்க ஆரம்பித்தவர் தலையில் இடியே விழுந்தது அதில் அவர் எழுதி இருந்த செய்திகள்..

அதில் மீனாட்சி கைபட எழுதி இருந்தது இதுதான்.

‘நான் மீனாட்சி.. ஆச்சாரமான ப்ராமண பெண் வாய்பேச முடியாதவள்..என் தாய்தந்தை இறந்ததற்கு நான்தான் காரணம்னு சொல்லி என்னை ஊரைவிட்டு அடிச்சு துரத்திட்டாங்க ஊர் எல்லையில் இருந்த தாசிங்க தான் என்னை யாராவது ஒரு நல்ல மனுஷங்ககிட்ட ஒப்படைக்கிறேன்னு அவங்களோட என்னை அழைச்சிட்டு வந்தாங்கோ என்னோட அப்போதைய சூழ்நிலை அவங்களதான் நம்ப வேண்டி இருந்தது.. அதனால் தான் அவங்களோட தங்கி இருந்தேன்..யாரா இருந்தாலும் என்னை நெருங்காம பாதுகாத்தாங்க அவங்க தாசிக்குலமா இருந்தாலும் என் கற்பை காப்பாத்தி எனக்கு வாழ்க்கை அமைச்சு கொடுக்க முயற்சி செஞ்சாங்க அன்னைக்கு நேக்கு உடம்பு சரியில்லைனு நான் யாரும் தொந்தரவு செய்யக்கூடாதுனு வழக்கமா படுக்குற அறையில இருந்து வேற அறைக்கு போய் படுத்தேன், அப்போதான் நீங்க வந்தேள், என்னை என் சம்மதமே இல்லாம எடுத்துண்டேள்.. மாத்திரை போட்டு உடம்பும் சரியில்லாத நிலையில என்னால உங்களை தடுக்கவும் முடியல.. அப்போதான் உங்க பேர் ஊரெல்லாம் சொன்னீங்க..ஆனா விடியும்போது தான் நீங்க இடம் மாறி வந்ததாவும் என்னையும் தாசினு நினைச்சீங்கனும் தெரிஞ்சது..இல்லனு சொல்ல முயற்சி பண்ணேன் ஆனா நீங்க கண்டுக்காமல் போய்ட்டேள்..அப்புறம் என்னையும் வேற ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டாங்கோ.. அதனால் உங்களை சந்திக்கிற வாய்ப்பே கிடைக்கல நேக்கு வேற ஊர் போய் இரண்டு மாசத்தில நேக்கு கருதரிச்சது அதனால அவங்க என்னை விசாரிச்சப்ப தான் எனக்கும் உங்களுக்கும் நடந்ததை சொன்னேன், சொல்லிட்டு நான் உங்கள தேடி வர்றதா சொல்லிட்டு அவங்கள விட்டு பிரிஞ்சு கிளம்பினேன்.. ஆனா உங்கள தேடுற அளவுக்கு தெம்பும் இல்ல காசும் இல்ல ஏன்னா அப்போ நான் வடநாட்டில இருந்தேன்..அப்போதான் அங்கிருந்த ஒரு தமிழ்காரர் எனக்கு அடைக்கலம் கொடுத்து வேலையும் கொடுத்து பார்த்துக்கிட்டாங்கோ.. இனியனும் பிறந்தான்.. உங்கள மாதிரியே அதே மாதிரி இருந்தான்.. உங்கள பார்க்கனும் போல தோணித்து அப்போ.. ஆனா உடனே என்னால உங்கள கண்டு பிடிக்க முடியல..இனியனும் வளர்ந்து இசையில ஆர்வமா இருந்ததால அவனும் இசையை கத்துண்டான் எல்லாரும் அவனை அப்பா இல்லாதவன்னு சொல்லி கிண்டல் செய்யவும் என்கிட்ட வந்து சண்டை போடுவான் அடிக்கடி ஆனால் அவனோட பத்து வயசுல அப்பா வேணும்னு ரொம்ப அடம் பண்ணி பெருசா சண்டை போட்டு செத்துடுவேன்னு மிரட்டி தான் உங்கள பார்க்க கூட்டிட்டு வந்தான்..அவனும் சின்ன பையன்தானே எனக்குத்தான் சொந்தம்னு மனுஷாள் யாரும் இல்ல அவனுக்கு நீங்க இருக்கேள்தானே அதான் நானும் கிளம்பி வந்தோம் ஊருக்கே போய்டுறோம்னு என் முதலாளிகிட்ட சொல்லிட்டு வந்துட்டோம்.. அப்படி இப்படினு அலைஞ்சு உங்கள கண்டுபிடிச்சு வீட்டுக்கு வந்தா ஒரு பொண்ணுதான் இருந்தா.. அவகிட்ட இனியனை சொல்ல சொன்னேன் இனியன பார்த்த மாத்தரமே அவா கண்டுன்டா எங்களை அதனால தான் அவ எங்கள உங்காத்துக்குள்ள விட்டா..உங்க மகள்க்கு எல்லாம் தெரியும் அதான் அவ எங்களை எப்படியாவது பாதுகாக்கனும்னு  முடிவு பண்ணிதான் இங்கேயே தங்க வைச்சா.. ஆனா நீங்க எங்களை பார்த்த பார்வை என்னை தாசியாவும் இனியனை தாசிகுலமகனாவும் தான் பார்த்தேள்..எனக்கு அப்போகூட உங்ககிட்ட சொல்ல தோணலை.. ஆனா முதல் பார்வையிலேயே உங்க பொண்ணு எங்கள நம்மவானு கண்டுண்டா..நீங்க எங்களை விரும்பல அதான் நாங்க கிளம்பிடலாம்னு இருக்கோம்..நீங்க உங்க பொண்ணோட சந்தோஷமா ஷேமமா இருங்க நாங்க உங்க வாழ்க்கையில குறுக்கிடமாட்டோம்…எப்பவாச்சும் எங்கனயாச்சும் பார்த்தா உங்க மகனாண்ட மட்டும் கொஞ்சம் பேசுங்கோ..அவன்தான் அப்பா அப்பானு உங்க பாசத்துக்காக ஏங்கினான்..போறோம்..’

என்று இருந்தது அதில் படித்தவர் தலையை பிடித்துக்கொண்டு அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தார்..

“எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன்..என் முன்கோபத்தால எவ்வளவு பெரிய அநியாயம் செஞ்சு இருக்கேன் ஒரு பொண்ணோட வாழ்க்கையை என் தப்பான கணிப்பால பாழாக்கிட்டேனே..நான் பாவி நான் பாவி நேக்கு பாவ விமோசனமே இல்ல..ஐயோ பகவானே என்னை இப்படி ஒரு பாவியா மாத்திட்டியே இதுக்கு நான் பிறக்காமலே இருந்து இருக்கலாமே..எந்த கங்கையில இந்த பாவத்தை தொலைப்பேன்..இந்த பாவிக்கு பாவமன்னிப்பு கொடுமா மீனாட்சி எங்க இருக்கமா? நான் தேடி வர்றேன்.. உன் காலை கழுவியாவது என் பாவத்தை துடைச்சுக்கறேன்” என்று அழுது புலம்பியவர் அந்த அடியாட்கள் சொன்ன இடத்திற்கு சென்று மீனாட்சியை பற்றி விசாரிக்க அவர் இறந்தது தெரியவர மனம் உடைந்து போனார்.. மீண்டும் இனியன் மற்றும் அவரது மனைவியை விட்டு சென்ற இடம் தேடிப்போக அங்கே அவர்களை அட்மிட் செய்த ஹாஸ்பிடல் விவரம் சொல்ல அங்கே ஓடியவருக்கு அவர்கள் எங்கோ சென்று விட்டனர் என்ற தகவல் கிடைக்க அவர்களை தீவிரமாக தேட மருத்துவமனையில் அவருக்கு கிடைத்த தகவல் அவர்களை இங்கு சேர்த்தவர் சென்னையை சேர்ந்தவர் என்ற விவரம் கிடைக்க சென்னை செல்வதாக இருந்த சங்கராச்சாரியார் கைகால் முடமாகி படுக்கையில் விழுந்தார்..இடையில் அவரது நலம் விசாரிக்க ஃபோன் செய்த ஸ்டீவ்விடம் எல்லாம் சொல்லி இருக்க அவர்தான் இரண்டு முறை வந்து அவரது பலம் வைத்து அவர்களை பற்றி விசாரித்தார்.. அவர்கள் சென்னையில் இருப்பது தெரிந்தது ஆனால் எங்கே என தெரியாததால் சங்கராச்சாரியாரின் சொத்தில் தான் எஃப் எம் கம்பெனியை நிறுவினார்.. 

7 thoughts on “காதலை கண்ட நொடி -14”

  1. CRVS2797

    ஆமா..! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம். கோபம் இருக்கிற இடத்துலத்தான் குணம் இருக்கும்ன்னு சொல்லுவா…ஆனா, இவர் மண்டைக்குள்ள அப்படி எதுவும் இல்லை போலயிருக்கு.

  2. Kalidevi

    Unga avasara pithila oru uyir ponathu tha Micham ipp iniyan amma vum illama irupan vanthavangala ena ethunu visarikanum athu illa eduthathum adichi thurathitu ipo feel pana onu agarathku illa

  3. Avatar

    சங்கராச்சாரியார் பண்ணது துரோகம் பாவம் அதே மாதிரி மதுமிதாவும் பண்ணது தவறு தான்

    1. Jayalakshmi S

      அதை அவங்க தெரிஞ்சு செய்யலை ..தெரிஞ்ச அப்புறம் திருந்திட்டாங்க❤️🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *