காதல் 1
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
மாலை வேளையில் பள்ளி நேரம் முடிந்து மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேறிக் கொண்டிருந்தனர். இன்னும் பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லாமல், அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் கீர்த்தியும் ஆராதனாவும் இருந்தனர்.
இரு குழந்தைகளும் மீதமிருந்த மாலை சிற்றுண்டியைத் தின்றபடி பள்ளியின் வாயிலையே பார்த்து அமர்ந்திருந்தனர். தாய், தந்தையர் வந்து மாணவர்களை அழைத்து போவதைக் கண்ட இரு பிஞ்சுகளின் மனதில், அவர்களே அறியாத ஒரு ஏக்கம் இதயத்தின் மூலையில் முளைக்க தான் செய்தன. ஆனால் அதை பகிர்ந்திட அத்தனை வயது அவர்களுக்கு இல்லை.
பொதி மூட்டையில் சாய்ந்து மடியில் மாலை சிற்றுண்டியை வைத்து கொரித்தவர்கள், காத்திருந்து காத்திருந்து சோர்ந்து தான் போனார்கள். அவர்களை அழைக்கதான் இன்னும் யாரும் வரவில்லை. அடிக்கடி சலித்து வேற கொண்டனர்.
“கீர்த்தி! உன் அம்மா சீக்கிரமா வந்திருவாங்க தான? இன்னும் ஏன் வரல?”
“அதுவா? என் மாமாக்கு மேரேஜ்ல, அதான் அம்மா பிசியா இருக்காங்க, வர லேட்டாகுது.” என்றவள் கையில் வைத்திருந்த கொள்கலனில் சிற்றுண்டி காலியாகிட, அதை உள்ளே வைத்து உணவு பையை பூட்டினாள்.
“உன் அத்தை இன்னும் வரல?”
“அது லேட்டா தான் வரும், உனக்கு தெரியும்ல?” என்றாள் ஆராதனா.
“ப்ச்… எல்லாரும் வீட்டுக்கே போயிருப்பாங்க. நாமதான் ஸ்கூல்லயே இருக்கோம். எப்போ தான் அம்மா வருவாங்களோ?” என்றாள் சலிப்பாக.
“டீச்சர்ஸ் எல்லாரும் போயிட்டாங்க. ஆஃபீஸ்ல இருக்கிறவங்களும் இப்ப கிளம்பிடுவாங்க. அப்போ நாம மட்டும் தனியா இருக்க வேண்டியது தான்…” என்றாள் நன்றாக புத்தக பையில் சாய்ந்தபடி.
“அப்ப நைட் முழுக்க இங்கதான் தனியா இருக்கப் போறோமா?” என கண்களில் கலக்கத்துடன் கீர்த்தி கேட்டிட,
“அட லூசு! அதுக்குள்ள வந்துருவாங்க.” தலையில் அடித்துக் கொண்டு சொன்னாள்.
“வரலன்னா?”
“உனக்கு உன் வீட்டுக்கு வழி தெரியுமா?” ஆராதனா கேட்கவும் வேகமாக தலையை ஆட்டி,
“தெரியும்.” என்றாள் கீரத்தி.
“எனக்கும் என் வீட்டுக்கு வழி தெரியும், போவோமா?” என்று புத்தகப் பையை மாட்டிக் கொண்டு கேட்டாள் ஆராதனா.
பயந்து போன கீர்த்தியோ தலையை சொறிந்தபடி, “எங்க அம்மாவோட வண்டியில போனாத்தான் வீட்டுக்கே போக முடியும். இல்லாட்டி போக முடியாது.” என்றவளை சந்தேகமாக பார்த்த ஆராதனா,
“ஆட்டோ, பஸ் எல்லாம் உங்க வீட்டு பக்கம் போகாதா? உங்க அம்மா வண்டி மட்டும் தான் போகுமா? நீ என்ன காட்டுக்குள்ளவா இருக்க?” எனக் கேட்டிட,
அவளோ, ‘வீட்டுக்கு வழி தெரியாது’ என்று சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு ஏதேதோ சொல்ல, ஆராதானாவும் அவளை கேள்வியால் மடக்கிட மாட்டிக் கொண்டாள் கீர்த்தி.
“பொய்யி! உனக்கு உன் வீட்டுக்கு வழி தெரியாது தான?” என அவளும் கண்டுப்பிடித்து கேட்க, அவளும் ஒத்துக் கொள்ளாமல் பிடித்த பிடியில், “இல்ல, எனக்கு தெரியும்…” என்றாள்.
இருவரும் மாறி மாறி அதையே சொல்லிக் கொண்டு சண்டையை ஆரம்பிக்க, அதற்குள் ஆராதனாவின் அத்தை அங்கு வந்தாள்.
“ஹேய் அத்த வந்துட்டா! இன்னைக்கி நான் தான் ஃப்ர்ஸ்ட்!” என்று குதித்த ஆராதனா, தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு அவளை நோக்கி ஓடினாள்.
கீர்த்திக்கு கலக்கமாக இருந்தது. துணையாக இருந்தவளும் சென்று விட்டால் தனியாக அமர அவளுக்கு பயம். பள்ளி மைதானமே ஆள் அரவமற்று இருக்க, இவர்கள் இருவர் மட்டும் பள்ளியிலுள்ள மேடையில் அமர்ந்து, அவரவர் பெற்றோர்களுக்காக காத்திருந்தனர்.
இப்போது ஆராதனாவும் கிளம்பிவிட, கீர்த்திக்கு அழுகை வந்து விடும் போல இருந்தது. கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன.
“மெதுவா வாடி!” என்ற சைந்தவி ஓடி வந்த தன் அண்ணன் மகளை அணைத்துக் கொண்டாள். குழந்தையின் முதுகில் இருந்த மூட்டையை வாங்கி தோளில் போட்டுக் கொண்டவள், தனியாக அமர்ந்திருக்கும் கீர்த்தியைப் பார்த்தாள்.
“இன்னும் கீர்த்தியோட அம்மா வரலையா?” ஆராதனாவிடம் கேட்டாள்.
“இன்னும் வரல.”
“எப்பவும் அவ அம்மா தான ஃபர்ஸ்ட் வருவாங்கனு சொல்வ, இன்னைக்கி என்ன இவ்வளவு நேரமாகியும் வரல?” எனவும்,
ஆருவோ, “தினமும் ஃபர்ஸ்ட் வர அவங்க அம்மா இன்னும் வரல, செகண்ட் வர நீ இன்னைக்கி ஃபர்ஸ்ட்டா வந்திருக்க. ஆனா ரொம்ப லேட்டா வந்திருக்க.” என்று முறைத்தபடி சொல்ல, சைந்தவியோ அண்ணன் மகளிடம் வழிந்தாள்.
காலேஜ்ல இருந்து கிளம்புற நேரத்துல வொர்க் கொடுத்துட்டாங்க. முடிச்சிட்டு வரதுக்குள்ள லேட் ஆயிடுச்சுடி.” என்றவளை நம்பாமல் பார்த்தாள் ஆராதனா.
“நம்பலனா போடி!” என்றவள் கீர்த்தி அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள். உடன் ஆராதனாவும் அவளை கேள்வியாக பார்த்தபடி நடந்தாள்.
“பாவம் கீர்த்தி! அவங்க அம்மா வர வரைக்கும் கூட இருப்போம்.” என்றாள்.
“அவ மட்டும் தினமும் அவ அம்மா வந்ததும் போயிட்றா தான? நாம மட்டும் அவ அம்மா வர வரைக்கும் கூட இருக்கணுமா?” என முகத்தை சுருக்கியபடி கேட்டாள் ஆராதனா.
“ஆரு, கீர்த்தி அம்மா அவள கூட்டிட்டு போகும் போது, உன் கூட நிறைய ஸ்டூடண்ட்ஸ் இருப்பாங்க. ஆனா இப்போ பாரு, யாருமே இல்ல. அவளை எப்படி தனியா விட்டுட்டு போறது? இதுதான் உங்க ஃப்ரெண்ட்ஷிப்பா?” எனக் கேட்கவும் வாயை மூடிக் கொண்டாள்.
இருவரும் தன்னை நோக்கி வருவதை மலங்க மலங்க பார்த்தாள் கீர்த்தி.
“வீட்டுக்கு போலையா ஆன்ட்டி?”
“உன்னை விட்டு நாங்க எப்படி போறது கீர்த்தி? நீ தனியா இருப்பனு உன் ஃபிரண்ட் தான், கீர்த்தி அம்மா வர வரைக்கும் இருப்போம் அத்தைனு சொல்லி என்னை கூட்டிட்டு வந்தா.” என ஆராதனா கேட்டதை மறைத்து மாற்றிச் சொல்ல, கீர்த்தியின் பயம் அகல தோழியை நன்றியாகப் பார்த்து சிரித்தாள். ஆராதனாவும் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
இருவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படிக்கிறார்கள். குழந்தைகளின் இரண்டு வருட நட்பு இன்று மூன்றாம் வகுப்பிலும் மூன்றாமாண்டாகத் தொடர்கிறது.
குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது பார்த்து சிரிப்பதோடு சரி. மேற்கொண்டு எதுவும் உறவில்லை கீர்த்தியின் தாய்க்கும் ஆராதனாவின் அத்தைக்கும். ஆனால் இன்றிலிருந்து அவர்கள் இருவருக்கும் உறவென்னும் பாலம் அமைக்க, விதி வேலை செய்ய ஆரம்பித்தது.
“ஏன், இன்னும் அம்மா வரல கீர்த்தி?”
“அம்மா, மாமா கல்யாணத்துல பிசியா இருக்காங்க, அதான் லேட்டு.” என்றாள்.
“ஓ… உங்க மாமாக்கு கல்யாணமா? எப்போ? என்னையும் உன் ஃபிரண்டையும் கூப்பிடுவீயா?” என விளையாட்டாக கேட்டாள்.
“ஓ… எங்க அம்மாகிட்ட சொல்லி உங்களுக்கும் இன்விடேசன் தர சொல்றேன்.” என்றாள் புன்னகையுடன்.
அவளது கன்னத்தைக் கிள்ளியவள், “மேரேஜ் டேட் சொல்லு, வர முடிஞ்சா கண்டிப்பா வர்றேன்.” என்றாள் சைந்தவி.
அவளும் தேதியை சொல்ல, “அன்னக்கி உங்களுக்கு குவாடர்லி எக்ஸாம்ல, என்ன லீவா?” என்றாள். அவளும், “ஆம்” என்றாள்.
“அப்போ நீ எக்ஸாமுக்கு வர மாட்டியா?”
“ஆமா ஆரு, எக்ஸாம்கு வர மாட்டேன்.” என்றாள்.
“அப்போ நீ ரேங்க் ஹோல்டர் வர மாட்டல?” ஆராதனா சொல்ல கீர்த்தியின் முகம் ஒருமாதிரி போனது.
“அதனால என்ன ஆரு, அடுத்த எக்ஸாம்ல ரேங்க் ஹோல்டர்ல வந்திடுவா, என்ன கீர்த்தி?” என்க, அவளும், ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள்.
“இல்லை அத்தை, ரேங்க் ஹோல்டர்ல வர ஸ்டூடெண்டஸ் ஆப்சென்ட் ஆகாம, எல்லா எக்ஸாமும் எழுதினா நெக்ஸ்ட் இயர் ஆன்வல்டேல பிரைஸ் குடுப்பாங்க. நானும் கீர்த்தியும் போன வருஷம் வாங்கினோம். இந்த வருஷம் ஆன்வல்டேக்கு வாங்குவோம். அடுத்த வருஷ ஆன்வல்டேக்கு இவளால வாங்க முடியாது. இந்த எக்ஸாம்ல இவ லீவ் போட்டா, அடுத்த வருஷம் ஆன்வல்டேல இவளுக்கு ரேங்க் ஹோல்டர் பிரைஸ் கிடைக்காது.”
“கிடைக்கலைன்னா என்ன? அடுத்த வருஷத்துக்கு அடுத்த வருஷம் வாங்குவா, என்ன கீர்த்தி குட்டி?” என அவளை சமாதானம் செய்ய முயல, அதற்குள் கீர்த்தியின் தாய் மதுமிதா வண்டியை வெளியே நிறுத்தி வைத்து விட்டு, பள்ளி வளாகத்தினுள் நடந்து வந்தாள்.
“கீர்த்தி, உன் அம்மா வந்துட்டாங்க.” என்றாள் ஆராதனா.
கீர்த்தியின் எண்ணமெல்லாம் அடுத்த வருஷம் ரேங்க் ஹோல்டர் பரிசை வாங்க முடியாமல் போவதும், ஆராதனா மட்டும் வாங்க போவதுமே இருக்க, அவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
ஆராதனா, கீர்த்தியும் ஒன்றாம் வகுப்பிலும் இரண்டாம் வகுப்பிலும் முதல் இடத்தையும் இரண்டாம் இடத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் மாணவிகள்.
ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இருவரும் முதல் இடம், இரண்டாம் இடமென மாறி மாறி வருவார்கள். சில நேரம் ஒரே மதிப்பெண்கள் பெற்றும் இருக்கிறார்கள். மற்ற யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை அவ்விரண்டு இடத்தையும்.
வருடக்கணக்கில் எடுக்கும் மொத்த மதிப்பெண்களைக் கூட்டி, வகுப்பில் ஒவ்வொரு பிரிவில் வரும் மூன்று மாணவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசு கொடுப்பார்கள்.
அதில் ஒன்றாம் வகுப்பிற்கு இரண்டாம் வகுப்பில் நடந்த ஆண்டு விழாவில் பரிசு கொடுத்தார்கள். இரண்டாம் வகுப்பில் படித்து முடித்த மாணவர்களில் அவ்வாறு தேர்ந்தெடுத்து, தற்போதைய நடப்பு ஆண்டில் வைக்கும் ஆண்டு விழாவில் பரிசு கொடுப்பார்கள்.
இந்த ஆண்டும் இருவரும் அப்பரிசை வாங்கப் போகிறார்கள். ஆனால் அடுத்த ஆண்டில் கீர்த்தி பரிசு வாங்குவாளா என்பது தான் கேள்வி குறி.
ஆராதனா சொன்னதை மட்டுமே யோசித்துக் கொண்டு அவர்களுடன் நடந்து வந்தாள் கீர்த்தி.
சைந்தவி, மதுமிதாவைப் பார்த்து புன்னகை செய்தபடி கடந்து சென்றாள். அவளும் அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகை செய்தவள், பின்னால் வரும் மகளின் உடமைகளை வாங்கிக் கொண்டாள்.
“சாரி கீர்த்தி! மாமா கல்யாணம் விஷயமா வெளியே போயிட்டேன். அதான் லேட்டு, சாரிடா குட்டி.” என தாடையைப் பிடித்து கொஞ்ச, அவளோ அதைத் தட்டிவிட்டு முன்னே நடந்து சென்றாள்.
மகளின் கோபம் தாமதமாக வந்ததற்கு என்றெண்ணிக் கொண்டு, வீட்டிற்கு சென்று சமாதானம் செய்து கொள்ள நினைத்தாள். ஆனால் அவளது கோபத்திற்கான காரணம் தெரிந்தால், வீட்டில் சாமி ஆடப்போவது இவளாகத்தான் இருக்கும்.
வரும் வழியெல்லாம ஓட்ட ரேடியோவிலிருந்து பேசிக் கொண்டிருப்பது போல, ஓட்ட வாயிலிருந்து நிற்காமல் வார்த்தை மழை கொட்டிக் கொண்டே வரும் கீர்த்தி, இன்றோ அணைத்து வைத்த ரேடியோ போல மௌனமாக வந்தாள். முகம் வேறு சுருங்கி போய் இருந்தது.
இடையில் சமோசா கடையில் வண்டியை நிறுத்தினாள். அந்தக் கடையைப் பார்த்தும் கூட அவள் முகம் மாறவில்லை.
‘என்னவாக இருக்கும்?’ என யோசித்தவள் மகளுக்கு பிடித்த சமோசாவையும் வாங்கிக் கொண்டாள், அதுவும் ஒரு ஆயுதமாக.
வீட்டிற்கு வந்தும் விட்டனர், யாருடனும் அளவளாமல் அறைக்குள் சென்று பட்டென கதவை சாத்தினாள்.
மதுமிதாவிற்கு சுள்ளென கோபம் வந்தது. “ஏய், என்னடி ரொம்ப பண்ணிட்டு இருக்க? அதான் சொன்னேன்ல, மாமா கல்யாண விஷயமா வெளியே போனதால லேட்டாச்சுனு, சாரி கூட கேட்டேன்ல? அதுக்கு மேல உனக்கு என்னடி கோபம்?” என வீடே அதிர மகளிடம் கத்தினாள்.
அவளது கத்தலில் மதுமிதாவின் தாய், தந்தை, தம்பி மூவரும் வெளியே வந்தனர்.
“உனக்கு உன் தம்பி மேலே தான் அக்கறை இருக்கு, என் மேலே இல்லல…” எனக் கதவைத் திறந்து நேருக்கு நேராக நின்று கேட்டாள், அவளுக்கும் குறையாத கோபத்துடன்.
“ஓ… உன் மேலே அக்கறை இல்லையா எனக்கு? எனக்கு வேலை இருந்தும் அதலாம் ஒதுக்கி வச்சிட்டு, ஆராதனா அத்தை வரதுக்குள்ள சீக்கிரம் வந்திடுமானு, நீ சொன்ன ஒரே காரணத்துக்காக இது நாள் வரைக்கும் அப்படி தானடி வர்றேன். உனக்காக ஒவ்வொன்னையும் பார்த்து செய்ற என்கிட்ட சொல்ற வார்த்தைய பாரு?”
“சீக்கிரமா வந்துட்டா மட்டும் அக்கறையாகிடுமா? எனக்காக ஒவ்வொன்னையும் பார்த்து செய்றேன் சொல்ற நீ? அப்போ ஏன் மாமா கல்யாணத்தை என்னோட எக்ஸாம் டைம்ல வச்ச?” என்றதும் அங்கிருக்கும் நால்வருக்கும் அவள் கேள்வி புரியவில்லை.
“எக்ஸாம் டைம்ல வச்சா என்ன? ஒரு நாள் எக்ஸாம் எழுதலைன்னா நீ ஒன்னும் ஃபெயிலாகி அதே கிளாஸ் இருக்க போறதில்ல. இந்த எக்ஸாம் விட்டா அடுத்த எக்ஸாம்ல பார்த்துக்கலாம், இப்போ என்ன?”
“இப்ப என்னன்னு ஈசியா சொல்ற? எனக்குல ரேங்க் ஹோல்டர்ல பெயர் போகுது. அடுத்த வருஷம் ஆன்வல்டேல என்னால பிரைஸ் வாங்க முடியாது. எல்லாம் உன்னால… மத்த நேரத்துல உன் பெயர் ரேங்க் ஹோல்டர்ல வந்தே ஆகணும்னு என்னை படிக்க சொல்லி எவ்வளவு டார்ச்சர் கொடுப்ப? மாமா கல்யாணம், அதனால ஒரு எக்ஸாம் தானேனு ஈசியா சொல்ற?”
“கல்யாண தேதி ஃபிக்ஸ் பண்ணதுக்கு அப்புறம் தான் உங்க ஸ்கூல்ல எக்ஸாம் டைம் டேபிள் குடுத்தாங்க. நாங்க என்ன பண்ண முடியும்?”
“அதுக்காக எங்க எக்ஸாம் டேட் மாத்த முடியுமா?”
“ஓ… அப்ப கல்யாண தேதிய மட்டும் மாத்த முடியுமா?”
“முடியலனா நிறுத்திடு.” என கீர்த்தியின் வாயிலிருந்து வந்துவிட, அவ்வுளவு தான், மதுமிதாவின் ஐந்து விரல்களும் கீர்த்தியின் கன்னத்தில் பதிந்தன.
வேகமாக சென்று அம்மழலையைத் தூக்கிக் கொண்டான் மிதுல் கிருஷ்ணா
“லூசா அக்கா நீ? குழந்தை ஏதோ கோபத்துல வார்த்தைய விட்டா, அடிப்பீயா நீ?” என்றவன் மருமகளின் கன்னத்தைத் திருப்பி பார்த்தான். வெள்ளை நிறத்திற்கு அவளது விரல்கள் பதிந்து சிவப்பாக மாறியிருந்தது.
“என்ன பேச்சு பேசறா பார்த்தியாடா? கல்யாணத்தை நிறுத்திடுங்கறா, ஒரு எக்ஸாமுக்காக? அந்த எக்ஸாம் எழுதலனா என்ன குடி மூழ்கிட போகுது? உனக்கு ஒரு நல்லது நடக்க போகுது, நாங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கோம். ஒரு பரிட்சைக்காக இவ விட்ட வார்த்தைய பார்த்தீயா?” தீராத ஆதங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தாள் மது.
“சரி விடு மது, அது குழந்தை. கல்யாணத்தை பத்தின விவரம் தெரியாம ஏதோ வார்த்தைய விட்டுடுச்சி. கோபப்படாம பொறுமையா சொல்லி புரிய வைமா.” என்றார் மூர்த்தி. மது, மிதுலின் தந்தை.
“அப்பா, இவகிட்ட நான் பேசலனு நினைக்கறீங்களா? புரியற மாதிரி சொன்னேன் ப்பா. மாமா கல்யாணம் டேட் ஃபிக்ஸ் பண்ணினதுக்கு அப்புறம் தான் உன் எக்சாம் டேட் வந்திருக்கு. அன்னிக்கி ஒரு நாள் எக்சாம் எழுத முடியாது. அடுத்த முறை பார்த்துக்கலாம் பாப்பானு இவக்கிட்ட சொன்னதும் இல்லாம, இவ மிஸ்ஸுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. இவ்வளவு பொறுமையா சொல்லியும் இவ வார்த்தை எப்படி வந்தது பார்த்தீங்களா?” என்றதும் அவரும் கீர்த்தியை தான் பார்த்தார்.
“கிருஷ்ணா ! அவளை இறக்கி விடு.” அவ்வாறு சொன்னதும் பயத்தில் மேலும் மாமனை கட்டிக் கொண்டு இறங்க மறுத்தாள் கீர்த்தி.
“விடுக்கா! பாப்பா பயப்பட்றா… போதும்… தெரியாம வார்த்தை விட்டுட்டா, அதுக்கு தான் அடிச்சிட்டல? இன்னும் ஏன்கா விடாம படுத்தற? குழந்தை தன்னை அறியாம விட்ட வார்த்தைக்கு நீ நிறைய பேசிட்ட… போதும் விடேன்…” என அவன் கெஞ்சி பார்த்தும் மது இறங்கி வருவதாக தெரியவில்லை.
“இல்லடா, என்னைக்கும் இல்லாம இன்னைக்கி இவ கோபப்பட காரணம் தெரிஞ்சாகணும்.” என்றவள் கீர்த்தியின் முகம் பார்த்து, “சொல்லுடி, மிஸ் எதுவும் சொன்னாங்களா? திட்டுனாங்களா? எதுக்கு நீ கோபப்பட்ட? யார் என்ன சொன்னா?” என விடாமல் அவளை கேட்டிட,
பயத்தில் மாமனை ஒன்றியவள், “ஆரு இருக்காள…” என அவர்கள் பேசிக் கொண்டதை, அப்படியே வார்த்தை மாறாமல் சொல்லி முடித்தாள் குழந்தை.
“அப்போ அவ மட்டும் ரேங்க் ஹோல்டர் வருவா, என்னால வர முடியாது. என்னால ரேங்க் ஹோல்டர் பிரைஸ் வாங்க முடியாது. அவ மட்டும் வாங்குவான்ற கோபத்துல கத்தினேன். சாரி! சாரி மாமா!” என இருவரிடமும் மன்னிப்பு கேட்க,
மிதுல் மருமகள் கன்னத்தில் முத்தம் வைத்தவன்,
“ஒன்னுமில்ல கீர்து குட்டி, மாமாக்கு உன் மேல கோபமே இல்ல. நீங்க அழக் கூடாது.” என கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்து விட்டான்.
“அடியே! குழந்தைங்களுக்குள்ள ஏதோ பேசி இருக்காங்க. அதுக்கு போய் இந்த ஆட்டம் ஆடுறீயே? குழந்தை வேற பசியில இருப்பா. போய் சாப்பாடு குடு, மயங்கிட போறா.” என்றார் ஜோதி.
“என்ன குழந்தைகளுக்குள்ள பேசி இருக்காங்க? அவ, இவளை தூண்டிவிட்டு இருக்கா. அமைதியா இருந்தவ, இப்படி பேசுவாளா? நாளைக்கு இருக்கு அவளுக்கு…” என்றதும் மூவரும் பதறி போனார்கள்.
“அக்கா! இது சரியில்ல… நம்ம குழந்தையைக் கண்டிக்க மட்டும் தான் நமக்கு உரிமை இருக்கு. அடுத்தவங்க குழந்தையை கண்டிக்க கூடாது. இது தப்புக்கா! அவங்களுக்குள்ள தப்பா எதுவும் பேசிக்கல. இது நார்மல் பேச்சுதான். இதுக்கு நீ ஒவர் ரியாக்ட் பண்ணாத. இத்தோட இந்த பேச்சை விடு. என் கல்யாணம் நிக்க போறதில்ல, அது நடக்கும். ஏதோ குழந்தைங்க குள்ள பேசிட்டாங்க அதோட விட்டுடு. இன்னொரு குழந்தைகிட்ட கேக்குறது தப்பு, வேணாம்.” என்று எச்சரித்தான் மிதுல்.
அவள் கேட்டாள் தானே? “எனக்கு தெரியும்டா, நான் பார்த்துக்கிறேன்.” என்று மகளைக் கூட்டிக் கொண்டு உள்ளே சென்றுவிட, செல்லும் அவளை மூவரும் கலக்கத்துடன் பார்த்தனர்.
கண்ணீருடன் மது முன் ஆராதனா நிற்க, அவளைக் கண்டித்து பேசுவதை தூரத்திலிருந்து கண்டுகொண்ட சைந்தவி வேகமாக ஓடி வந்தாள்.
Mithun sonnathu correct than ah yetho kozhandhai ga puriyama pesikitaga athuku ivanga keerthana ah va kandikavum seiyuthu taga apadi irundhu ivanga aaru kita enna pesuraga ava azhara alavuku
Thanks ma thanks for you big support…
Super start sis and nice epi👍👍
Thanks maa
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thanks maa
Started nice . Thappu thana ithukaga antha papa va kekurathu namma kilanthaiya thira tha urimai iruku ithu pasangalukulla normal ah pesurathu than
Nice starting waiting for nxt epi😍😍😍
மது ரொம்ப பண்ணறா சின்ன குழந்தைகள் தெரியாம பேசறதுக்கு இப்படியா