Skip to content
Home » கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-13 

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-13 

அத்தியாயம்.. 13
காலையில்….
“ஆயா…. இந்த பங்ஷனை எளிமையா வச்சுக்கலாம். சமயலை நான் கவனிச்சுக்கிறேன். நீங்க
நான் சொன்னதையெல்லாம் வாங்கிட்டு வாங்க. ரோஜமாலை நல்ல பெரிசா இருக்கட்டும்.”
சுஜா பணமும் பையும் எடுத்துக் கொடுத்து ஆயாவை துரத்தினாள்.
“என்னம்மா இதெல்லாம்.? நல்லாவா இருக்கு.?” தயங்கினாள் ஆயா. கடைசி நிமிடத்திலாவது
அவள் மனசு மாறுவாள் என்ற நப்பாசையுடன்.
“எல்லாம் நல்ல விஷயம் தானே ஆயா.? சீக்கிரம் போங்க. பத்து மணிக்கு அவர் வந்திடுவார்.”
அடுப்பில் வெந்து கொண்டிருந்த இட்லி போல ஆயாவின் மனம் வெந்து கொண்டிருந்தது.
“நீங்க செய்யறது நல்லாயில்ல மா.” என்று முகத்துக்கு நேரே அறைவது போல் சொன்னாள்
ஆயா.
“சம்பிரதாயங்களை மீற முடியுமா ஆயா.? பாருங்க நீங்களே ஆசீர்வாதம் பண்ணுவீங்க.” சுஜா
நிதானமாக சொல்ல, ஆயா எரிமலை கோபத்துடன் சென்றாள். மகள் போல் பாசம் வைத்த
சுஜா இப்படி முடிவு எடுத்ததில் ஆயாவுக்கு சொல்லொன்னா வருத்தம் ஏற்பட்டது.
சுஜா பரபரப்பாக அதையும் இதையும் எடுத்து துடைத்து ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள்.
இது கொண்டாடப்பட வேண்டிய நாள். எனவே வாழ்வின் பசுமை குறிக்க பச்சை பட்டு நல்ல
சாய்ஸ்….என்று எடுத்து உடுத்திக் கொண்டாள். ரமேஷ் வந்ததும் விளக்கேத்த வேண்டியது
தான். பூமாலையை போட வேண்டியது தான்….அப்பாடா கடைசியில் நல்ல காலம்
பிறந்துவிட்டது……எல்லாவற்றுக்கும் இன்று ஒரு முடிவு வரும்.
ஸ்ரீதர் நம்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். ஆயாம்மா சொன்னத் தகவலை அவனால்
ஜீரணிக்கவே முடியவில்லை.
“கவலைபாடாதீங்க ஆயா. நான் பார்த்துக்கறேன்.” என்று சொல்லி கட் பண்ணிவிட்டான்.
ஆனால் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. திடீர் திடீரென மனசு
மாறுபவளா சுஜா.! அந்த எண்ணம் அவனை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு போனது.
நீறு பூத்த நெருப்பு போல இன்னமும் அவள் மனதில் ரமேஷின் மேல் தான் காதல்
இருக்கிறதா.? தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இப்படியொரு முடிவு எடுக்க
அவளால் எப்படி முடிந்தது.?

Thank you for reading this post, don't forget to subscribe!

ஸ்ரீதர் இரவெல்லாம் தூக்கமின்றி தவித்தான். புரண்டு புரண்டு படுத்தான். சுஜா இல்லாத
வாழ்க்கையை அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. சுஜாவின் செல் ஸ்வீட்ச் ஆப்
என்றே வந்தது. அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. வேண்டுமென்றே தொடர்பை
துண்டித்து விட்டாளா.? இதை எப்படி எடுத்துக் கொள்வது.?
மறுநாள் சிவந்த கண்களும், விரக்தி மனசுமாக, அவன் முகம் பார்க்க கன்றாவியாக இருந்தது.
கனகவல்லி பதறினார்.
“என்னாச்சுப்பா ஸ்ரீதர்.? ஏன் ஒரு மாதிரியா இருக்கே.? முகமே நல்லாயில்லையே.
சொல்லுப்பா….உடம்பு சரயில்லையா.?”
“என்னாச்சு ஸ்ரீதர்.? அம்மா சொன்னா மாதிரி நீ ஏதோ மாதிரி இருக்கே.? இடி விழுந்த மாதிரி
திக்பிரமித்து இருக்கே.” என்று அப்பாவும் கேட்டார்.
“ஒண்ணுமில்லேப் பா.” என்றான் உடந்த குரலில்.
“இல்லே என்னவோ நடந்திருக்கு. சொல்லுடா.” பயந்து போய் கிறீச்சிட்டார் கனகவல்லி.
மகனின் இந்த முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை.
அதற்கு மேல் தாங்க முடியாமல், கண்ணீர் சிந்த சொன்னான் ஸ்ரீதர்.
“அம்மா. ரமேசின் சித்தப்பா, சுஜா வீடு சென்று நீ ரமேஷை தான் கல்யாணம் பண்ணிக்
கொள்ள வேண்டும். டிவோர்ஸ் ஆனாலும் நீ தான் அவன் பொண்சாதி. அதனாலே ஸ்ரீதரோட
உன் கல்யாணம் நடப்பதை கேன்சல் செய்துவிடுன்னு கேட்டுக்கிட்டாராம். சுஜாவும் நாளை
ரமேஷோட வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டு, ஆயாவிடம், நல்ல காரியம் நடக்கப் போவுது,
பூமாலை….சந்தனம், குங்குமம் எல்லாம் வாங்கி வாங்கன்னு சொன்னாளாம்.
அம்மா….என்னால் தாங்க முடியலை.”
“போடா சரியான கிறுக்கனா இருக்கியே. இதுக்கா இப்படி ஒப்பாரி வச்சிட்டு இருக்கே.? சுஜா
ஒரு நாளும் அந்த ரமேஷை திரும்ப கல்யாணம் பண்ணிக் மாட்டா. இதை நான் அடிச்சு
சொல்வேன்.”
“என்னம்மா நீ? பூமாலை சந்தனம் குங்குமம் வாங்க வேண்டிய அவசியம் என்ன.? இதுக்கு
என்ன அர்த்தம்.?”
“டே போடா. நீயாவது மாறுவே. என் மருமக மாறமாட்டா.”
“அப்ப இது பொய்யின்னு சொல்றியா.?”
“ஏண்டா…. பத்து வருஷம் அவளை காதலிச்சிருக்கே, இது தான் நீ அவளைப் பத்தி
தெரிஞ்சுக்கிட்ட லட்சணமா.?”
“ஒரு ஃபோன் கூட அவ பண்ணலை.”
“ஒரு வருஷமாத் தான் அவ உன்னை காதலிச்சிருக்கா. அவ உன் மேல் வச்சிருக்கிற
நம்பிக்கை……உனக்கு அவ மேலே வரலை இல்லே.? அதான்டா ஆம்பிளை புத்தி.”
“அம்மா….”
“கத்தாதே….புறப்படு. இதிலே ஏதோ விஷயமிருக்கு. நீ நேரிலே கிளம்பிப் போ சொல்றேன்.”

ஸ்ரீதர் ஆசுவாசமானான். அம்மா சொல்வது நிஜமா இருக்குமோ.? ஏதோ காய்ச்சலில்
விழுந்தவன் மாதிரி சோர்வா இருந்தான். டென்ஷணும் சேர்ந்து கொண்டது. குளித்து, பேருக்கு
சாப்பிட்டுவிட்டு புறப்பட்டான் ஸ்ரீதர்.

ரமேஷ் கச்சிதமாக உடையணிந்து கிளம்பிவிட்டான். சித்தப்பா மருதுவையும் கூட்டிக்
கொண்டான். இன்பமான எதிர்காலக் கனவுகள் அவனுள் விரிந்தது.
“சுஜா….ஆர்த்தி இவர்களோடு தர்ஷினியின் பணம்….ஆகா என்ன ஒரு காம்பினேஷன்.
அதிர்ஷ்டம் என்பது இது தானோ.! தர்ஷினி மறைந்தது பற்றி அவன் சிறிதும்
கவலைப்படவில்லை; அது அவள் விதி….அவ்வளவு தான். நாம் நம் வாழ்க்கையை பார்த்து
போய்க் கொண்டே இருக்க வேண்டும்.. இது தான் அவன் பாலிசி. சந்தோஷகமாக விசில்
அடித்துக் கொண்டே காரை ஓட்டினான். சுஜா சம்மதித்து விடுவாள் என்பது அவனுக்குத்
தெரியும். அவள் தன் மேல் வைத்திருக்கும் காதல் பற்றி அவனுக்கு மிக பெரிய நம்பிக்கை.
சுஜா வீட்டு முன் வழுக்கிக் கொண்டு நின்றது அவனது கார். சித்தப்பாவும் அவனும்
இறங்கினார்கள். சுஜா ஓடி வந்து வரவேற்றாள்.
“வாங்க….வாங்க…..சந்தனக் கலர் ஷர்ட்டில் புது மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்க ரமேஷ்.”
என்று தாராளமாக புகழ்ந்தாள்.
“வாங்க மாமா வாங்க.” என்று மருதுவையும் வரவேற்றாள்.
ஆமாம்மா….என்ற மருது சிரிப்புடன் ஹாலில் பிரவேசித்தார். அங்கே நடுத்தர வயதுடைய ஒரு
பெண்மணியும் ஒரு நபரும் அமர்ந்திருந்தனர்
.”இவர்கள் யாரும்மா.?” மருது கேட்டார்.
“என் வெல்விஷர்ஸ். என் மனமாற்றம் பற்றி இவங்களுக்கும் தெரியும். வாழ்த்த
வந்திருக்காங்க.”
“ஓ அப்படியா. நல்லது. வணக்கம்.”
கைகுலுக்கிய நபர் தன்னை சுபாஷ் என்றார். வணக்கம் சொன்ன பெண்மணி தன்னை புஷ்பா
என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“ஆயா….சூடா காப்பி கொண்டு வாங்க.” என்றாள் சுஜா.
கொண்டு வந்து இதுங்க தலையில் கொட்டறேன் என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு
அடுக்களை நோக்கிச் சென்றாள் ஆயா.
காப்பியை உருஞ்சிக் கொண்டே ‘சுஜா….எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு. உன்னை
விட்டிட்டு போனது எனக்கு உறுத்திக்கிட்டே இருந்துது.” என்றான் ரமேஷ்.
“ஆமாம் மா. தம்பி புலம்பிட்டே இருந்துது.” என்றார் மருது.
“உண்மை சுஜா. உனக்கு துரோகம் செஞ்சிட்டு, தர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கிட்டது
எல்லாம் ஒரு பயித்தியக்காரத்தனம் தான். அவள்
என்னை மயக்கி விட்டாள். நானும் புத்தி கெட்டுப் போய் சொதப்பிட்டேன். இப்ப ஏதோ
நாடகம் முடிவடைஞ்ச மாதிரி இருக்கு. உன் போல் ஆகுமா.?’

“ஆமா ரமேஷ். புது நாடகம் ஆரம்பமாகப் போகுதில்லே.”
“என்ன சுஜா அப்படி சொல்றே?. இனிமே தான் நீ நிஜமான ரமேஷை பார்க்கப் போற. “
“உண்மை தான். ஆயா பூமாலைகளை கொண்டு வாங்க. அப்படியே சந்தனம், குங்குமம், பழம்
எல்லாம் இங்கே எடுத்து வாங்க.”
ஆயா கொண்டு வந்து வைத்தாள்…சுத்தம் பாயாசம் கொண்டு வரச் சொல்லுவாங்க
போலிருக்கு..ஆயாவின் மனக் குரல்….
“ஆயா….கேசரி பண்ணி வச்சிருக்கேன், அதையும் கொஞ்சம் கொண்டு வந்து வையுங்க. இந்த
நல்ல நேரத்தில் இனிப்பு வேண்டாமா.? ரமேஷுக்கு ரொம்ப பிடிக்கும். இல்லையா ரமேஷ்.?”
ரமேஷ் மகிழ்ச்சியுடன் தலையாட்டினான்.
இதுகளுக்கு கேசரி வேறயா? நான் கடைக்கு போயிருந்த சமயம் அம்மா செஞ்சு வச்சிட்டாங்க
போலிருக்கு…கேசரியை கொண்டு வந்து நக்கென்று வைத்தாள் ஆயா. சுஜாவை கோபமாக
பார்த்தபடி அகன்றாள்.
சுஜா உள்ளே சென்று ஒரு வெள்ளிக் குத்து விளக்கு கொண்டு வந்து வைத்தாள். எண்ணை
ஊற்றி, திரி போட்டாள். விளக்குக்கு குங்குமம் இட்டு, பூ போட்டாள். விளக்கு முன் இலை
பரப்பி, பழம், உடைத்த தேங்காய் வைத்தாள். கேசரி வைத்தாள். ரமேஷுக்கு பிடித்த ஸ்வீட்ஸ்
லட்டு, கார வகைகளில் முறுக்கு, காரச்சேவு, சீடை எல்லாம் வைத்தாள். நாழியில் நெல் நிரப்பி
எடுத்து வந்து வைத்தாள். விளக்கை ஏற்றினாள்.
“ரமேஷ் எல்லாம் உங்களுக்கு பிடித்த அயிட்டம் வச்சிருக்கேன்.” என்றாள்.
ஆயா ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது ஸ்ரீதரின் கார் வந்து நின்றது
தெரிந்தது. நல்ல நேரத்தில் வந்திட்டார்.. இந்த ரமேஷை தலை தெறிக்க ஓட விடணும் என்று
வேண்டினாள்.
“என்ன ரமேஷ். பதிலே சொல்லலை. இதெல்லாம் உங்களுக்கு பிடிச்ச அயிட்டம் தானே.?”
“ஆமாம் சுஜா. பார்த்து பார்த்து செஞ்சிருக்கே. நானும் புதுத் தாலி செஞ்சு கொண்டு
வந்திருக்கேன். சித்தப்பா அதை எடுங்க.”
நகைப் பெட்டியிலிருந்து தாலிச் சங்கலியை எடுத்தார். அதில் தாலி குண்டும்
கோர்க்கப்பட்டிருந்தது. எடுத்துக் கொடுத்தார்.
“பலே….பலே….கல்யாண நிச்சயதார்த்தம் பிரமாதமா நடத்ற மருமகளே.” பாராட்டினார் மருது.
அவர்கள் முகத்தில் மகிழச்சி பொங்கியது.
“இது நிச்சயதார்த்த பங்ஷன் இல்லே மிஸ்டர் ரமேஷ். புரியலை….இது உங்க கருமாதி
பங்ஷன். இதோ அய்யரே வந்திட்டார். பக்காவா ஏற்பாடு பண்ணிட்டேன். எல்லாம்
முறைப்படி நடக்க வேண்டாமா.?”
இந்த நேரம் ஸ்ரீதர் உள்ளே நுழைந்தான். சுஜா உள்ளே சென்று பெருது பண்ணப்பட்ட
ரமேஷின் படம் எடுத்து வந்து வைத்தாள். அவன் படத்துக்கு ரோஜா மாலைகளை
அணிவித்தாள். படத்தில் அவன் நெற்றியில் குங்குமம் சந்தனம் வைத்தாள். பத்தி கொளுத்தி
வைத்தாள். ரமேஷ் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். என்ன நடக்கிறது இங்கே.!

“மிஸ்டர் ரமேஷ்….உங்க கருமாதியை நீங்களே பார்க்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு
கிடச்சிருக்கு. நான் உங்களை வரச் சொன்னதுக்கு இது தான் காரணம். உங்களை மறு
கல்யாணம் பண்ணிக் கொள்ள அல்ல. எனக்கு இந்த சந்தர்ப்பத்தை கொடுத்ததுக்கு ரொம்ப
நன்றி. என் மனநிலை என்ன? என் வலி என்ன? என்பதை உங்களுக்கு எப்படி புரிய
வைக்கிறதுன்னு குழம்பிட்டு இருந்தேன். சந்தர்ப்பம் கொடுத்ததுக்கு மீண்டும் நன்றி. என்னை
வெளிப்படுத்திக்கிட்டேன். போர் முடிந்த போர்க்களத்தை பார்த்து ஒரு மன்னன் தான் செஞ்ச
தவறை உணருவானா.? வெட்டுண்ட மனித தலைகள். கையற்ற காலற்ற வலியால் துடிக்கும்
சிப்பாய்கள் வலி பற்றி நினைப்பானா? அல்லது ரத்த வாடையும், ஒப்பாரி ஒலியும்
பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் வெற்றியை மட்டும் கொண்டாடுவானா.?..” மூச்சு
வாங்க நிறுத்தினாள். ஸ்தமித்து பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும். ஒரு பெண்ணின்
சீற்றம் முன் அவர்கள் வாயடைத்து போய். பேச வாயில்லாமல் மௌனமாயினர். தொடர்ந்தாள்
சுஜா.
“அதிகார வெறி பிடித்த மன்னன் கொண்டாடுவான். நீங்களும் அந்த அதிகார வர்க்கம்
தானே.? எனக்கு அவ்வளவு வலி ஏற்படுத்தி, நான் குற்றுயிரும் கொலையுயிருமா
இருக்கும்போது, கூசாமல் மீண்டும் வாழலாம் வான்னு கூப்பிடுறீங்க. நான் பொம்மையா.?
ரணகிளரியாக என் மனசை ஆக்கிவிட்டு. இப்ப பூபாளம் பாடச் சொல்றீங்க. என்னைப்
பொறுத்தவரை நீங்க எப்பவோ செத்திட்டீங்க மிஸ்டர் ரமேஷ். பிணத்தோட வாழ என்னால்
முடியாது. நாக்கிலே நரம்பில்லாம மிஸ்டர் மருது இவரை கட்டிக்கச் சொல்லி வறீங்க.!
எப்படி….எப்படி? டிவோர்ஸ் ஆனாலும் நான் அவர் மனைவின்னு சொல்றீங்க. தர்ஷினி
இறந்து நாலு நாள் கூட ஆகலை. ஒரு சொட்டு கண்ணீர் விடலை. கல்யாணம் பேச எப்படி
மனசு வருது.? ச்சே….அருவருப்பா இருக்கு. கல்யாணத்தை அவமதிக்கறது, காதலை
அவமதிக்கிறது, ஏன் ஆண் இணத்திற்கே ஒரு புல்லுருவியா இருந்து, கம்பீரத்தை
அவமதிக்கிறது….இது தான் நீங்க வாழ்க்கைக்கு கொடுக்கிற மரியாதையா.? வெக்கமா
இல்லே.? உங்க பணத்தை கட்டிக்கிட்டு நீங்களே அழுங்க. இப்ப எழுந்து போங்கடா
முண்டங்களா….”
சுஜா தடுமாற்றமின்றி சொல்லி முடித்தாள். அவள் மனம் அமைதி பெற்றது. இவர்கள் வீசிய
சேறு, இது நாள்வரை அப்பிக் கொண்டிருந்தது. இன்று அதை சுத்தமாக கழுவி தன்னை
மீட்டெடுத்துக் கொண்டாள்.
ஒரு விஸ்வரூப அவதாரம் முன் பேச்சற்று கிடந்த ரமேஷ், அவள் முடித்ததும், அதிலிருந்து
விடுபட்டு சிலிர்த்து எழுந்தான்.
“ஏய்….என்னடி ரொம்ப ஓவராப் போறே.! பொட்டச்சிக்கு இவ்வளவு திமிரா.? நான் ஒரு
மாதிரியான ஆளு…..ரமேஷ் எப்படி அவமானப்படுத்திட்டா. பார்த்திட்டு சும்மா இருக்கே.
நாலு சாத்து சாத்து..” மருது சத்தம் போட, ரமேஷ் ஆவேசம் வந்து எழுந்தான். சுஜாவை கண்
மண் தெரியாமல் அடித்துவிட்டான். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்துவிட்டது.
மப்டியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்….லாயர் புஷ்பா இருவரும் பாயிந்து வந்து
தடுத்தனர். அதற்குள் சுஜாவை சுவற்றில் மோதி நெற்றியில் ரத்தக் காயம் ஏற்படுத்திவிட்டான்
ரமேஷ். அய்யரையும் தாக்கி தள்ளிவிட்டான். அவர் எழுந்து. அய்யய்யோ என்று கத்தினார்.
சுஜா நெற்றியில் ரத்தம் வழிந்தது. ஆயா பஞ்சு எடுத்து வர ஓடினாள். ஆர்த்தி மாடியிலிருந்து
ஓடி வந்து அம்மாவை கட்டிக் கொண்டாள்.

“போங்க நீங்கெல்லாம் போங்க….” என்று ரமேஷ், மருதுவைப் பார்த்து கத்தினாள். அம்மா
அம்மா என்று அரற்றினாள்.
“தெரியும்டி….நீ இந்தப் பய ஸ்ரீதர் கொடுக்கிற திமிரிலே தானே, இப்படி ஆடற.? அவன் ஒரு
பொறுக்கி. அடுத்தவன் பொண்டாட்டியை கல்யாணம் பண்ண துடிக்கிறான் பாரு. ராஸ்கல்.”
கத்தினான் ரமேஷ்.
“அவர் கால தூசு பெற மாட்டேடா நீ. “ என்று பதிலுக்கு கத்தினாள் சுஜா.
“ரிலாக்ஸ் சுஜா. ரிலாக்ஸ். நான் இருக்கேன்லே….” என்றான் ஸ்ரீதர்.
“மேடம்….ஒரு கம்பிலேண்ட் எழுதிக் கொடுத்திடுங்க. மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்.
அய்யர்வாள் நீங்களும் இங்க நடந்த அடி தடிக்கு சாட்சியா கம்பிலேண்ட் எழுதணும்.
ஸ்டேஷன் வரை வாங்க.” என்றார் சுபாஷ். வெலவெலத்து நின்ற ஆயா, தைரியமாக வாய்
திறந்து “நானும் சாட்சி. சொல்றேன்.” என்றாள்.
“குட். சுஜா….உங்க கல்யாணம் நல்லபடியாக நடக்கணும்னா, இவங்களை லாடம் கட்டி
உள்ளே தள்ளறது தான் சரியான வழியா இருக்கும். “
சுஜாவின் முன்னேற்பாடால் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் இழுத்து செல்லப் பட்டனர்.

ஒரு யுத்தம் முடிந்த களைப்பும், விடுதலை உணர்வுமாக சுஜா மெள்ள தன் நிலை அடைந்தாள்.
கண்ணீர் மௌனமாக இறங்கியது. துக்கத்தை எல்லாம் வெளியேற்றிக் கொண்டிருந்தாள்.
அதற்கு மரியாதை கொடுப்பது போல் ஸ்ரீதர் மௌனமாக இருந்தான். அர்த்தமுள்ள இந்த
மௌனம் தான் அவர்கள் காதலின் மிகப் பெரிய வெற்றி.
ஸ்ரீதர் பிரமித்துப் போயிருந்தான். அம்மா சொன்னது தான் சரி. சுஜா தன்னை மட்டும்
நேசிப்பது நிஜம். எப்படி போராடி விட்டாள்.! ஒரு பூவுக்குள் மெள்ள மெள்ள பூகம்பம் வந்தது
எப்படி? வெடித்துவிட்டாள். தனக்காக தானே கம்பீரமாக நின்று பெண்மையின் சக்தியை
நிருபித்து விட்டாள். “ஸ்ரீதர் நான் செஞ்சது தப்பா.?” என்று கலவரமாக கேட்டாள்.
“சுஜா இதில் தப்பேதும் இல்லை. தீமை, அவமானம் கண்டு கொதித்து சாடுகிற தன்மை,
பாதிக்கப்படுகிற ஒவ்வொரு பெண்ணின் உள்ளேயும் பொங்கிப் பீறிட வேண்டும். உன்னிடம்
நான் இதத்தான் எதிர்பார்த்தேன். எல்லா அவமானத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும்
என்று என்ன அவசியம்.? பதுக்கி வைக்கிற வலி உன்னையே அழிச்சிடும். இப்ப உன் மனசு
பிரீ ஆயிடுச்சு. அவனுக்கும் இந்த அவமானம் காலம் முழுக்க மறக்காது. ஐ ஆம் ப்ரவுட் ஆப் யூ
சுஜா.”
ஸ்ரீதரின் மனம் திறந்த பேச்சு. அவள் மனசை மலர்வித்தது.
“தேங்க்ஸ்.” என்றாள்
“எனக்கெதுக்கு தேங்க்ஸ்.?’
“நீங்க என் மேல் வச்சிருக்கும் பிரியம் தான் இப்படி கம்பீரமாக நடக்க எனக்கு தைரியத்தை
கொடுத்தது.” ‘ஸ்ரீதர் அவளை முதல் முதலாக தொட்டு, நெஞ்சோடு அணைத்து கொண்டான்
உரிமையுடன்.

திருமணம் இனிதே முடிந்தது. சுஜா சீதனமாக புகுந்த வீட்டுக்கு கொண்டு வந்தது
ஆர்த்தியையும் ஆயாவையும் தான். அவள் நற்பண்பும், சாந்தமான பெண்மையுமே மிகப்
பெரிய சீதனமாக அவள் மாமனார் மாமியார் ஏற்றுக் கொண்டனர். சுஜாவின் அம்மா முகத்தில்
சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. “தம்பி ஸ்ரீதர் நீங்க நல்லாயிருக்கணும். எனக்கு என்ன
சொல்றதுன்னே தெரியலை. நன்றிப்பா….” என்றார்.
“என்ன இது பெரியவங்க நீங்க. எனக்கு போய் நன்றி சொல்லிக்கிட்டு. நான் தான்
அதிர்ஷ்டசாலி.” என்றான். கண்ணில்லாத அந்தத் தாயின் பரவச சந்தோஷ நிம்மதி பார்த்து.,
நம்மால் இந்த சந்தோஷத்தை கொடுக்க முடிந்ததே என்று மகிழ்ந்தான்.
தேன்நிலவுக்கு அவர்கள் ஆரத்தியோடு போனது தான் விஷேசம். அவர்களுக்கு விருந்தும்
வரவேற்பும் கொடுத்து அசத்தினார் குப்தா.
“தெரியுமா ஸ்ரீதர்….தர்ஷினியின் வீடு அவள் அம்மாவுக்கு போய் சேர்க்கிறது. ரமேஷ் குணம்
தெரிந்தோ என்னவோ தர்ஷினி அப்பா ஏற்கனவே உயிரோடு இருக்கும் போதே, உயில் எழுதி
வச்சிட்டார். தர்ஷினி உயிரோடு இருக்கும் வரை எல்லா சொத்தும் அவளுக்கு, ஏதாவது
அசம்பாவிதம் நடந்தால், எல்லாம் தர்ஷினி அம்மாவுக்கு என்று உள்ளது. துபையிலுள்ள
ஓட்டல் இன்சார்ஜ் எல்லாம் தர்ஷினி அம்மாவின் தம்பியிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.
ரமேஷ் மனப்பால் குடித்தபடி, அது அவனுக்குப் போய் சேரவில்லை. சொத்தில் ஒரு பைசா
கூட அவனுக்கு இல்லை. அங்கே ஓட்டலில் மானேஜராக வேலை பார்த்து கொண்டிருக்கான்.
மிக குறைவான சம்பளம். நாலு பேர் தங்கும் ஒற்றை அறையில் தங்கி, தானே சமைத்துச்
சாப்பிட்டுக் கொண்டு ஒரு வேலைக்காரனைப் போல் நடத்தப்பட்டு அங்கு இருக்கானாம்…..’
“பரிதாபம் தான்….அப்போது கூட அவனுக்கு படித்து பட்டம் பெற்ற தான், சுயமா வேலை
பார்த்து கவுரவமாக வாழணும்ன்னு தோணலை…. அடிமையாகவே இருக்கிறான்.” என்றான்
ஸ்ரீதர்.
“அவன் முடிவை அவனே தேடிக் கொண்டான். தர்ஷினியை அவன் பணத்துக்காக
காதலித்திருக்கிறான். சுஜாவுக்கு அவன் செய்த துரோகம் தான் தர்ஷினியை அவனிடமிருந்து
பிரித்து வைத்தது விதி. செய்கிற தவறுகளுக்கு தண்டனை இல்லாமல் போகாது.” என்றார்
குப்தா.

அன்று பௌர்ணமி. கைகோர்த்தபடி இனிமையான உரையாடலுடன் சுஜாவும் ஸ்ரீதரும்
மொட்டை மாடித் தனிமையில் நின்றிருந்தனர்.
உங்கள் வாழ்க்கையில் முப்பது நாளும் நான் முழு தேஜஸ்சுடன் ஒளிர்வேன் என்று சொல்வது
போல் நிலா அவர்களை தன் பால் ஒளியால் குளிப்பாட்டியது. கானல் நீராக ரமேஷ் சுஜாவின்
வாழ்விலிருந்து காணாமல் போய்விட்டான். பௌர்ணமியாக ஸ்ரீதர் அந்த இடத்தைப் பிடித்துக்
கொண்டான்.

சுபம்.
சங்கரி அப்பன்.

கதைகளை வாசிக்கும் ரீடர்ஸ் உங்க கருத்தை தெரிவிக்கவும். நன்றி!

4 thoughts on “கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-13 ”

  1. Semma ending…. Oru ponnuku sec mrg romba mukkiyam… Vittutu ponavana nenachu vaalakai mudakama adutha step yeduthu vaikirathulatha ponnungaloda sec innings start aaguthu….. Nice…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *