எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்..
சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான அந்த மருத்துவமனையின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் பாலா. பாலமுருகன் என்ற பெயரை ‘பாலா’வாகப் பள்ளிப்பருவத்தில் சுருக்கிக்கொண்டதன் பலனை மென்பொருள் நிறுவனத்தில் இணைந்த பிற்பாடு உணர்ந்துகொண்ட இருபத்து ஒன்பது வயது இளைஞன். அதோடு இருபத்தைந்து நாட்கள் வயதான குடும்பஸ்தனும் கூட.
ஆஹா ஓஹோ வர்ணனைகள் எதுவும் தேவையற்ற திருத்தமான தோற்றமும், அணிந்திருந்த உடையும் ‘பாய் ஃப்ரம் நெக்ஸ்ட் டோர்’ என்ற அடைமொழியை வாங்கி தரும் அவனுக்கு.
காரிலிருந்து இறங்கியவன் கதவைத் திறந்துவிட அதிலிருந்து சோகமே உருவாக இறங்கினாள் பாரதி. அவனது மனைவி. இருபத்தைந்து வயதுக்கு மிகவும் மெல்லிய மேனி அவளுடையது. அணிந்திருந்த காட்டன் புடவையை ஒற்றை மடிப்பில் குத்தி முழங்கையில் அடக்கியபடி இறங்கியவளின் பெரிய கண்களில் தான் அத்துணை சோகம்! புதுமணப்பெண்ணுக்கு இருக்கவே கூடாத சோகம்!
துன்பியல் ஓவியமாக அன்னநடை பயின்றவளின் கரம் பற்றிய பாலாவின் வதனத்திலும் சோகத்தின் ரேகைகள் நீக்கமற நிறைந்திருந்தன.
இருவரும் மருத்துவமனைக்குள் நுழைந்து வரவேற்பிலிருந்த பெண்ணிடம் தாங்கள் போகவேண்டிய ‘மனநலப்பிரிவை’ பற்றி விசாரித்தார்கள்.
“ஸ்ட்ரெய்டா போய் லெஃப்ட்ல செகண்ட் கட் சார்… அங்க தான் சைக்யாட்ரி வார்ட் இருக்கு… பிரியம்வதா மேம் ரூம் ஃபர்ஸ்டே வந்துடும்” என்றாள் வரவேற்பிலிருந்த பெண். அவளது கண்கள் பாலாவின் அருகே நின்று கொண்டிருந்த பாரதியின் கழுத்தையே வெறித்தன.
அதை அவன் கண்டுகொண்டான். உடனே மனைவியின் கரம் பற்றி வேகமாக அங்கிருந்து மனநலப்பிரிவை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அவனது வேகநடைக்கு அவளால் ஈடு கொடுக்க முடியாமல் போனது.
“ஏன் இவ்ளோ வேகம்?” என மெதுவானக் குரலில் கேட்டாள்.
“ரிசப்சனிஷ்ட் உன் கழுத்தைப் பாத்துட்டாங்க” என்று அவன் சொல்லவும் மெல்லிய அதிர்ச்சி அவளது பெரிய விழிகளில்.
வேகமாகக் கழுத்தைத் தடவியவள் “அப்ப டாக்டரும் கண்டுபிடிச்சிருவாங்கல்ல?” என்றாள் மிரட்சியோடு.
பாலா நடப்பதை நிறுத்திவிட்டு மனைவியின் முகத்தைப் பார்த்தான்.
“உனக்கு என் மேல நம்பிக்கை இருக்குல்ல?” என்று அவன் கேட்டதும்
“ஏன் இப்பிடி கேக்குறிங்க? உங்களை நம்பலனா இவ்ளோ தூரம் வந்திருப்பேனா?” என அழுகை எட்டிப் பார்த்தது அவளது குரலில்.
அவன் அதிகம் யோசிக்கவில்லை. தனது பெரிய கரத்தால் அவள் கன்னத்தில் அழுத்தியவன் “சைக்யாட்ரிஷ்டை பாக்க வர்றவங்க அவங்க கிட்ட எல்லா உண்மையையும் மறைக்காம சொல்லணும் குட்டிமா… இல்லனா ட்ரீட்மெண்ட் வேலை செய்யாது… புரியுதுல்ல?” என்று ஆதரவாகச் சொல்லவும் சரியென தலையாட்டினாள் அவள்.
இருவரும் மருத்துவரின் அறைக்குப் போன போது அங்கே அவர்களைத் தவிர வேறு யாருமில்லை.
அறையின் ‘சேஜ்’ பச்சைவண்ண சுவர்ப்பூச்சு அலைபாயும் மனதுக்கு அமைதியைக் கொடுத்தது. ஆலிவ் பச்சையில் இருந்த இருக்கைகள் எங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அவர்களை அழைக்க இருவரும் அங்கே அமர்ந்தனர்.
மருத்துவரின் மேஜை மீது ‘Dr.Priyamvatha, MBBS, DFM, MD Psychiatry’ என்ற பெயர்ப்பலகை அடக்கமாக அமர்ந்திருந்தது.
பளீர் புன்னகையோடு அங்கே இருந்த சின்ன அறையிலிருந்து வெளிப்பட்டார் மருத்துவர் பிரியம்வதா. பின் முப்பதுகளில் ஏதோ ஒன்று அவரது வயதென பாரதி அனுமானித்தபோதே “மிஸ்டர் அண்ட் மிசஸ் பாலா, ஆம் ஐ ரைட்?” என்று கேட்டபடி தனது இருக்கையில் அமர்ந்தார் அவர்.
ஆமென தலையாட்டினான் பாலா.
“குட்… ரெண்டு பெரும் நெர்வசா இருக்கிங்களா?”
ஏ.சியின் குளிரை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு பாரதியின் மேலுதட்டில் முளைத்திருந்த வியர்வை முத்துகளைப் பிரியம்வதா கவனித்துவிட்டுத் தான் இக்கேள்வியைக் கேட்டார்.
“ஃபர்ஸ்ட் டைம் சைக்யாட்ரிஷ்டை மீட் பண்ண வந்திருக்கோம்… சோ கொஞ்சம் டென்சா இருக்கோம் டாக்டர்” என்றான் பாலா.
“எதுக்கு டென்சன்? ரிலாக்ஸ்” என்றவர் பாரதியிடம் திரும்பினார்.
“பாரதி, ரொம்ப அழகான பேர்… அந்தப் பேருக்குச் சொந்தக்காரரோட தைரியம் உங்களுக்கும் இருக்க வேண்டாமா?” என்று கேட்கவும் அவளது இதழில் மெல்லிய புன்னகை.
அவள் புன்னகைத்ததும் “நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க பாலா… நான் இனிமே பாத்துக்குறேன்” என்றார் அவர்.
பாலா எழுந்ததும் பாரதியின் கண்களில் மெல்லிய மிரட்சி. தனது பெரிய விழிகளால் என்னைத் தனியே விட்டுப் போகாதே என்று கெஞ்சினாள். கிண்டர்கார்டனுக்கு முதல் நாள் செல்லும் குழந்தை வகுப்புக்குள் போனதும் தாயைப் பார்க்குமே, அதே பார்வை!
அவனுக்கு மனைவியின் மனம் புரிந்தது.
தோளில் மென்மையாகத் தட்டிக்கொடுத்தவன் “மேம் கேக்குறதுக்கு நிதானமா பதில் சொல்லு… நான் வெளிய தான் இருப்பேன்… சரியா? பயப்படக்கூடாது” என்று தைரியம் கொடுத்துவிட்டுப் போனான்.
பாரதி பிரியம்வதாவை மிரட்சியோடு பார்த்தாள்.
“ரிலாக்ஸ் பாரதி… ஊசி போடுற டாக்டரைப் பாத்ததுமே குழந்தை பயப்படுமே, அதே மாதிரி இருக்கு உங்களைப் பாக்குறதுக்கு… நீங்க ரிலாக்சா இருந்தா மட்டும் தான் நான் கேக்குற கேள்விகளுக்கு உங்களால தடங்கல் இல்லாம பதில் சொல்ல முடியும்” என்றார் அவர்.
பாரதியும் மெதுவாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள். கண்களை இறுக மூடி “நான் தைரியமா இருக்கணும்… நான் எந்தத் தப்பும் பண்ணல” என பத்து முறை சொல்லி தைரியத்தை வரவழைத்துக்கொண்டவளிடம் மிரட்சி அகன்றது.
பிரியம்வதாவிடம் அவளை பாலா அழைத்து வந்திருப்பது ‘கவுன்சலிங்குக்காக’. அதற்கான காரணம் இனி தான் தெரியப்போகிறது.
“உங்களுக்கும் பாலாவுக்கும் மேரேஜ் ஆகி ட்வெண்டி ஃபைவ் டேய்ஸ் ஆகுதுல்ல?”
“ம்ம்”
“இந்த இருபத்தைஞ்சு நாள்ல பாலா பத்தி உங்களுக்கு என்ன தெரிய வந்துச்சு? சொல்லுங்க”
பாரதி அவரைக் குழப்பத்தோடு பார்த்தாள். கவுன்சலிங் என்றால் என்னவென தெரியாதவளுக்கு இது புதிய அனுபவமல்லவா! ஒருமணி நேரம் இப்படிதான் கடக்குமென பிரியம்வதா சொல்லவும் குழப்பம் அகன்றது. தன் கணவனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
“எங்களோடது அரேஞ்ச்ட் மேரேஜ் மேம்… பட் அவரோட போட்டோவ பாத்ததுமே எனக்குப் பிடிச்சிருந்துச்சு… அவர் ரொம்ப அன்பான மனுசன்… என் மேல நிறைய கேர் எடுத்துக்குறார்… ஒரு நிமிசம் என் முகம் வாடுனாலும் எதாவது சொல்லி சிரிக்க வச்சிடுவார்… இந்த இருபத்தைஞ்சு நாள்ல பத்து நாள் நான் சோகமா தான் கழிச்சிருக்கேன்… அவர் இடத்துல வேற யாரும் இருந்திருந்தா இந்நேரம் ரெண்டு வீட்டாளுங்களையும் கூப்பிட்டுப் பஞ்சாயத்து பேசிருப்பாங்க… என்னை நோகடிச்சிருப்பாங்க… ஆனா பாலா… ப்ச்… அவர் அப்பிடி பண்ணல… என்னைப் புரிஞ்சிக்கிட்டு எனக்கான ஸ்பேசைக் குடுத்திருக்கார்”
அவள் சொல்வதைக் கவனமாகக் கேட்ட பிரியம்வதா “ஸ்பேஸ் மீன்ஸ்?” என்று நிறுத்தவும்
“நான் கொஞ்சம் தனிமைவிரும்பி மேம்… புதுசா கல்யாணம் ஆனதைச் சாக்கா வச்சு எல்லா நேரமும் உரசிக்கிட்டே இருக்குற டைப் இல்ல அவர்… என் மனசைப் புரிஞ்சிக்கிட்டு நடந்துப்பார்… அவர் கூட அன்னியோன்யம் ஆக எனக்கு நாள் எடுக்கும்ங்கிற உண்மைய அவர் ஏத்துக்கிட்டார்” என்றாள் பாரதி.
புதுமணப்பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் கணவன்மார்கள் எத்தனை பேர் உள்ளார்கள் இங்கே? பாலா உண்மையிலேயே பெருந்தன்மையானவன் தான் போல.
அடுத்தக் கேள்வியைக் கேட்டார் பிரியம்வதா.
“மேரேஜ் லைஃப் பத்தி உங்களுக்கு என்ன மாதிரியான எதிர்பார்ப்புகள் இருந்துச்சு?”
பிரியம்வதா கேட்டதும் பாரதியின் முகத்திலிருந்த புன்சிரிப்பும் தெளிவும் கொஞ்சம் கொஞ்சமாகத் துணி போட்டுத் துடைத்ததை போல மறைய ஆரம்பித்தது.
மெல்லிய பதற்றம், முகமோ கறுத்துப் போனது. தனக்குள் பரிதவிக்க ஆரம்பித்தவளுக்குக் கண்ணீர் முட்டியது. விட்டால் ஓவென அழுதுவிடுவாள் போல.
நிலமை புரிந்து தண்ணீர் தம்ளரை அவள் பக்கம் நகர்த்தினார் பிரியம்வதா.
பதற்றத்தில் கை நடுங்க தம்ளரை எடுத்தவள் தண்ணீரைக் குடிக்க அவ்வளவு கஷ்டப்பட்டாள்.
அவளது பதற்றத்தைக் குறித்துக்கொண்டார் பிரியம்வதா.
தம்ளரை வைத்தவள் கண்கள் கலங்க “நான் பாலாவ பாக்கணும்” என்றாள் அழுகுரலில்.
“பாலா வெளிய தான் வெயிட் பண்ணுறார். அவர் உங்களை இங்க அழைச்சிட்டு வந்தது உங்களுக்குள்ள இருக்குற இனம்புரியாத பயத்துக்கான காரணத்தைத் தெரிஞ்சுகிட்டு அதுக்காக ட்ரீட்மெண்ட் எடுக்கத் தான்… அதை செய்யாம விட்டா அவர் உங்களை அழைச்சிட்டு வந்ததோட பலன் பூஜ்ஜியமாகிடும்மா”
மெதுவாகப் பேசிப் புரியவைக்க முயன்றார் அவர்.
பாரதியோ கண்ணீர் வழிய “அதை சொன்னா நீங்க என்னைத் தப்பா நினைப்பிங்க” என்று சொல்லவும் முறுவலித்தார் அவர்.
மெதுவாக எழுந்து பாரதியின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தார். அவளது தோளில் தட்டி தோழமையாய் புன்னகைத்தார்.
“என் கிட்ட வர்ற பேஷண்ட்ஸ் யாரையும் நான் தப்பா நினைச்சதில்ல… உன்னைப் பத்தி நீ ஏதோ ஒரு விதத்துல ரொம்ப மோசமா நினைக்குற… நீ மோசம்னு நினைக்குற விசயம் எனக்கு ஒன்னுமே இல்லாததா கூட இருக்கலாம் பாரதி… ஒன்னு மட்டும் புரிஞ்சிக்க… ஒவ்வொரு மனுசனோட மனசுக்குள்ளவும் வெளிய தெரியாத, வெளிக்காட்டிக்காத ஆசாபாசம், ரசனை, விருப்பு வெறுப்புகள் ஒளிஞ்சிருக்கும்… அந்த விசயங்கள் எல்லை மீறி நம்மளை ஆக்கிரமிக்கிறப்ப தான் நம்ம இயல்பான மனநிலை சிதையுது… உன் மனசை அழுத்துற விசயம் என்னனு சொன்னா மட்டுமே உனக்கான ட்ரீட்மெண்டை நான் ஆரம்பிக்க முடியும்”
பாரதி அழுவதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தாள்.
“உன் ஹஸ்பெண்ட் ரொம்ப அன்பானவர்னு சொல்லுற.. உன் மனசறிஞ்சு நடந்துக்குறார்னும் சொல்லுற… உனக்கான ஸ்பேசைக் குடுக்குறார்னு கூட சொல்லுற… இதெல்லாம் வச்சு பாத்தா பாலாவ நீ உன் மனசுல ரொம்ப உயர்வான இடத்துல வச்சிருக்கனு புரியுது… பட் உன்னைப் பத்தி உன் மனசுல நல்ல எண்ணங்கள் இல்லனு நான் யூகிச்சேன்… அம் ஐ ரைட்?”
பிரியம்வதா கேட்டதும் “அவருக்கு எந்த விதத்துலயும் நான் தகுதியானவ இல்ல மேம்” என்று சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டாள் பாரதி.
“இப்பிடி பாலா சொன்னாரா?”
இல்லையென்று மறுப்பாய் தலையசைத்தாள்.
“அப்ப உன்னோட இன்-லாஸ் சொன்னாங்களா?”
“இல்ல மேம்… மாமா அத்தை ரெண்டு பேரும் என்னை அவங்க பொண்ணா தான் நினைக்குறாங்க”
“பாலாக்கு எந்த விதத்துலயும் நீ தகுதியானவ இல்லனு சொன்னது யார்?”
பாரதியின் முகம் கசங்கியது.
“என் மனசாட்சி” என்று வேதனைக்குரலில் சொன்னவள் இடப்பக்க நெஞ்சைக் குத்திக் காட்டியபோது அப்பட்டமான குற்றவுணர்ச்சி அவளது முகத்தில்.
அதையும் மருத்துவர் குறித்துக்கொண்டார்.
“ஏன் அப்பிடி நினைக்குறம்மா? அப்பியரன்ஸ் வச்சு பாக்குறப்ப நீங்க பொருத்தமான தம்பதிகள்… நீ ஃபில்-அப் பண்ணிக் குடுத்த ஷீட் பாத்தேன்… யூ ஆர் அ போஸ்ட் க்ராஜுவேட்… அது போக உனக்குனு சில தனித்திறமைகளும் இருக்குது… யூ ஆர் சூப்பர் டேலண்டட் பாரதி”
அவளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார் அவர்.
“உனக்கு எப்ப இருந்து இந்த எண்ணம் வருது?”
“சென்னைக்கு வந்ததுல இருந்து… கடந்த பதினைஞ்சு நாளா”
“அதுக்கு முன்னாடி வரலையா?”
இல்லை என மறுப்பாய் தலையசைத்தாள் அவள்.
“அதுக்கு என்ன காரணம்னு யோசிச்சியா?”
மௌனம் அவளிடம்.
“சோ இந்த எண்ணம் தான் உன்னைத் தற்கொலைக்குத் தூண்டிருக்கு” கழுத்திலிருந்த கன்றிச் சிவந்த தடத்தைப் பார்த்தபடி கேட்டார் பிரியம்வதா.
இப்போதும் மௌனம் தான். ஆனால் வேதனையோடு தலையாட்டினாள் பாரதி.
தொடர்ந்து அவளுக்குத் தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதைப் பேசிப் புரியவைத்தார் பிரியம்வதா.
ஒரு தனிமனிதனின் தற்கொலை முடிவு அவனுக்கு வேண்டுமானால் பிரச்சனைகளிலிருந்து கிடைக்கும் விடுதலையாகத் தோன்றலாம். ஆனால் அவன் மீது அன்பும் நேசமும் வைத்திருப்பவர்களுக்கு அந்தத் தற்கொலை சொல்லவொண்ணா வேதனையைக் கொடுக்கும்
பிள்ளைகளின் தற்கொலைக்குப் பிறகு மனமுடைந்து குறுகிய காலத்தில் மரணித்த பெற்றோர்கள், மனைவியின் தற்கொலையால் கொடுமைக்காரன் பட்டத்தோடு விரக்தியாய் வாழும் ஆண்கள், மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சமுதாயத்தால் பழிக்கப்படும் கணவன்மார்களைப் பற்றி எடுத்துச் சொன்னார் பிரியம்வதா.
“பாலாவ எல்லாரும் கொடுமைக்காரன், பொண்டாட்டிய சாவடிச்சவன்னு பழிச்சுப் பேசணும்னு நீ நினைக்குறியா?”
“இல்ல மேம்… இல்ல.. என்னால அவருக்கு எந்தக் கெட்டப்பேரும் வந்துடக்கூடாது… அவர் தங்கமான மனுசன்… நான் இனிமே சூசைட் பத்தி யோசிக்கமாட்டேன்” எனப் பதறி துடித்து கூறினாள் அவள்.
இன்றைய கவுன்சலிங்கை பொறுத்தவரை இது வெற்றியே. பாலாவை உள்ளே அழைத்தார் பிரியம்வதா. பாரதியை வெளியே சென்று அமரும்படி கூறினார்.
அவள் தயக்கத்துடன் போகவும் பாலா பிரியம்வதாவிடம் என்ன பிரச்சனை என விசாரித்தான்.
“உங்களை பத்தி உங்க ஒய்ப் ரொம்ப உயர்வா நினைக்குறாங்க பாலா… ஆனா உங்க தகுதிக்கு அவங்க பொருத்தமில்லாத மனைவினு யோசிக்குறாங்க… தாழ்வுமனப்பான்மை இருக்கு அவங்களுக்கு… அது போக உங்களுக்குத் தகுதியானவ இல்லனு அவங்களை அவங்களே ப்ளேம் பண்ணிக்கிறாங்க… குற்றவுணர்ச்சியும் அவங்க கிட்ட இருக்கு… பட் என்ன காரணத்துக்காகனு இப்ப வரைக்கும் பாரதி சொல்லல… முதல் கவுன்சலிங் செஷன்ல எல்லா உண்மையையும் சொல்லியாகணும்னு எதிர்பாக்க முடியாது… சிலருக்கு டைம் எடுக்கும்…. அடுத்த செஷனுக்கு வர்றதுக்குள்ள பாரதி கிட்ட இருக்குற தாழ்வு மனப்பான்மைய போக்க ஏதாச்சும் பண்ணுங்க… ஷீ இஸ் வெரி டேலண்டட்… இந்த ஷீட் பாருங்க… அவங்களோட திறமை பத்தி எழுதிருக்காங்க… நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ஒன்னே ஒன்னு தான்… அவங்களோட திறமைய ஊக்குவிக்கணும்… இன்னும் நல்லவிதமா அந்த திறமைய வளர்த்துக்க ஹெல்ப் பண்ணணும்… இதெல்லாம் செஞ்சு பாருங்க… அடுத்த செஷன்ல கண்டிப்பா பாரதி கிட்ட முன்னேற்றம் தெரியும்… அவங்க மனசுல இருக்குற பிரச்சனையும் வெளிய வரும்”
பிரியம்வதா நம்பிக்கையுடன் கூற அவரிடமிருந்து விடைபெற்றான் பாலா.
வெளியே காத்திருந்த அவனது மனைவி மிரட்சி நிரம்பிய விழிகளுடன் “டாக்டர் மேம் என்ன சொன்னாங்க?” என்று கேட்க அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்தவன்
“உன் பொண்டாட்டி ஆஹா ஓஹோனு புகழுறாய்யா… அவ மனசு கோணாம சந்தோசமா வச்சுக்கனு சொன்னாங்க” என்று சொன்னபடி அவளை அங்கிருந்து நம்பிக்கையோடு அழைத்துச் சென்றான்.
மருத்துவர் சொன்ன அறிவுரையைச் செயல்படுத்தினால் மனைவியின் மனதிலுள்ள அழுத்தம் குறையுமென்ற நம்பிக்கையோடு செல்லும் அவனுக்கு அந்த அறிவுரையைச் செயல்படுத்தினால் வெளிவரப்போகும் கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு வலுவான மனதைக் கடவுள் தான் கொடுக்க வேண்டும்.
Story started nice
thank you sis
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
thank you sis
ஆரம்பம் வெரி நைஸ் அப்படி என்ன உண்மை
Nice starting
Expectation increases.
Nice starting
Good start
Quite interesting
Bala nd Barathi
Ennavam irukum avaluku 🤔🤔
அருமை
Wow awesome
❤️❤️❤️❤️❤️❤️
கல்யாணம் ஆகி 25 நாள் மட்டுமே இருக்க அந்த பொண்ணுக்கு தற்கொலை செஞ்சுக்கிற அளவுக்கு என்ன அப்படி ஒரு பிரச்சனை.
GOOD START,WAITING FOR NEXT.🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡