Skip to content
Home » கானல் பொய்கை 11

கானல் பொய்கை 11

மருத்துவர் பிரியம்வதாவின் முன்னே அமைதியாக அமர்ந்திருந்தாள் பாரதி. அவள் மீண்டும் சிகிச்சையைத் தொடர முன்வந்ததில் அவருக்குச் சந்தோசம். கூடவே ஒரு மருத்துவராக அவளுக்கு வந்த பாதிப்பை நினைத்து அவள் தன்னையே குறைவாக எண்ணிவிடக்கூடாது என்று அறிவுறுத்தும் கடமையும், அவள் மீண்டும் அதே தவறை செய்துவிடக்கூடாதென எச்சரிக்கும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறதே! அதை தான் செய்து கொண்டிருந்தார் பிரியம்வதா.

“உன் சூழ்நிலைய என்னால புரிஞ்சிக்க முடியுது பாரதி… என்ன மாதிரி நிலமைல நீ பார்ன் வீடியோஸ் பாக்குறது, பார்ன் கண்டெண்ட் வச்சு எழுதுறதுக்கு அடிமையானனு புரியுது… இதை ஒழுக்கரீதியான பிரச்சனையா பாக்காம சட்டப்பூர்வமா அணுகலாம்… இந்தியன் பீனல் கோட் 292, 293 அண்ட் 294படி ஆபாசமான கண்டெண்ட் வச்சு எழுதப்படுற புத்தகங்கள், இல்ல வேற மெட்டீரியல்சை பப்ளிஷ் பண்ணுறது, டிஸ்ட்ரிப்யூட் பண்ணுறது, விக்குறது எல்லாம் கடுமையான குற்றம்… நான் ஒன்னும் புக்கா போடலையே மேம்னு நீ கேக்கலாம்… அதுக்கும் இந்தியால சட்டம் இருக்கும்மா… இன்ஃபர்மேசன் டெக்னாலஜி ஆக்ட் 2000படி எலக்ட்ரானிக் ஃபார்மட்ல ஈபுக்காவோ, தளங்கள்லயோ ஆபாசமான கண்டெண்ட்களை எழுதுறது பெரிய குற்றம்… ஆதாரத்தோட பிடிபட்டா மூனு வருசம் வரை ஜெயில் தண்டனையும் ஃபைவ் லேக்ஸ் வரைக்கும் அபராதமும் உண்டு… என்னடா இவங்க சைக்யாட்ரிஷ்ட்னு போர்ட் மாட்டிக்கிட்டு லாயர் மாதிரி பேசுறாங்களேனு யோசிக்குறியா? நீ செஞ்ச காரியம் சட்டப்படி குற்றம்னு உனக்குப் புரியவைக்க வேண்டியது என்னோட கடமைம்மா… அதுக்காக கலெக்ட் பண்னுன டீடெய்ல்ஸ் இதுல்லாம்”

பாரதி அனைத்தையும் கேட்ட பிறகு மிரண்டுபோனாள். அதீதமான கட்டிலறை காட்சிகளை வைத்து கதை எழுதினால் சுலபமாக சம்பாதிக்கலாம், கடனை அடைக்கலாம். கூடவே பிரபலமும் ஆகிவிடலாம். இவ்வளவு தான் அவளுக்குத் தெரியும். இந்தச் சட்டங்கள் பற்றி எல்லாம் அவளுக்கு யாரும் சொல்லவில்லையே!

“ஆனா மேடம் எனக்குத் தெரிஞ்சு ரெண்டு மூனு சைட்ல அப்பிடிப்பட்ட கதைகள் இப்பவும் வருது… அவங்களை எல்லாம் போலீஸ் அரெஸ்ட் பண்ணலையே?” என தனது சந்தேகத்தைக் கேட்டாள் பாரதி.

“ஒருவேளை அவங்க சைட்டை யாரும் சைபர் க்ரைம்ல கம்ப்ளைன்ட் பண்ணாததால போலீஸ் கவனத்துக்கு இதெல்லாம் போகாம இருக்கலாம் பாரதி… மாட்டுற வரைக்கும் அவங்க எழுதலாம், சம்பாதிக்கலாம்… பட் மாட்டிக்கிட்டா சட்டப்படி விளைவுகளைச் சந்திக்க தயாராகணும்மா… இந்தியால சட்டங்கள் கடுமையா இருக்குற மாதிரி அந்தச் சட்டங்களை வளைச்சு தப்பிக்க நினைக்குற ஆளுங்களும் அதிகம்… அதனால கூட ஆபாசமான கண்டெண்ட் வச்சு சைட் நடத்துறவங்க சட்டத்தை ஏமாத்தி தப்பிக்கலாம்” என பொறுமையாக விளக்கம் அளித்தார் பிரியம்வதா.

பாரதிக்கு எப்பேர்ப்பட்ட புதைக்குழியிலிருந்து மீண்டிருக்கிறோம் என அப்போது தான் புரிந்தது. ஒருவேளை யாரேனும் வானவில் தளத்தை சைபர் க்ரைமில் புகார் செய்திருந்தால் தானும் தானே மாட்டியிருப்போம்! காவல்நிலையம் வழக்கு என்று போனால் தாயும் தந்தையும் உடைந்து போவார்களே! நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நிம்மதியுற்றாள் அவள்.

 “ஒவ்வொரு மனுசனுக்கும் செக்ஸ் எஜுகேசன் ரொம்ப முக்கியம் பாரதி.. அதோட அவசியம் பத்தி இங்க அவேர்னெஸ் இல்லாததால தான் யங்ஸ்டர்ஸ் பார்ன் சைட், ஆபாச கதைனு படிச்சு மனரீதியா பாதிக்கப்படுறாங்க… பார்ன் பாத்து அதுல உள்ள மாதிரி என் லைஃப் பார்ட்னர் என் கூட செக்ஸ் வச்சுக்கலனு எத்தனை பேர் டிப்ரசன் ஆகி என் கிட்ட கவுன்சலிங் வர்றாங்க தெரியுமா? அது ஆபாசகதைகளுக்கும் பொருந்தும்… இந்த ஆபாச வீடியோக்களும் கதைகளும் தாம்பத்தியம் பத்தி ஆரோக்கியமான கருத்துகளை ஆடியன்ஸுக்கு உண்டாக்காது… அதுல எல்லாமே அதீதமா இருக்குறதால இது தான் ரியாலிட்டி போலனு தப்பான புரிதலுக்குள்ள ஆடியன்ஸ் தள்ளப்படுவாங்க,… இயல்பான குடும்ப வாழ்க்கை, தாம்பத்தியம் எல்லாம் ஒரு கட்டத்துல அவங்களுக்குக் கசக்க ஆரம்பிச்சிடும்… இப்பிடிப்பட்ட கேஸஸ் நிறைய நான் ஹேண்டில் பண்ணிருக்கேன்… இந்தியா சுதந்திர நாடு… இங்க யார் வேணும்னாலும் தன்னோட கருத்தை சொல்லலாம், எழுதலாம்… ஆனா ஒழுக்க விழுமியம்னு ஒன்னு இருக்கு, அதை மீறி செய்யுற காரியங்களால உண்டாகுற விளைவை சமாளிக்குற மனோதிடம் தனக்கு இருக்குதானு யோசிச்சுட்டு எழுதணும்… உனக்கு இவ்ளோ தூரம் நான் ஏன் விளக்கம் சொல்லுறேன்னா நீ மறுபடியும் அந்த வகை எழுத்துகள்ல மூழ்கிடக்கூடாது”

“ஒரு தடவை செஞ்ச தப்புக்கான தண்டனைய அனுபவிச்சிட்டிருக்கேன் மேம்,.. இன்னொரு தடவை அந்தப் பக்கம் என் கவனம் போகாது” என தீர்மானமாகக் கூறினாள் பாரதி.

அவளுக்கு இருந்த பயமே தனது குறைபாட்டை எப்படி சரிசெய்வது என்பது தான். பிரியம்வதா அவளுக்குச் சில மருந்துகளை எழுதிக்கொடுத்தார்.

“வீக்லி கவுன்சலிங்குக்கு வரணும்… பாலாவும் உன் கூட வந்தா மச் பெட்டர்” என்றார் அவர்.

பாரதி சமாளிப்பு புன்னகையோடு அவரை ஏறிட்டாள்.

“அது நடக்காத காரியம் மேம்… இனி எந்தக் காரணத்துக்காகவும் அவர் கிட்ட உதவினு போய் நிக்குறதா இல்ல மேம்”

பாரதியின் குரலில் தெரிந்த பிடிவாதம் நல்லதற்கான அறிகுறியாக பிரியம்வதாவுக்குத் தோன்றவில்லை. கவுன்சலிங்குக்கு பாலா வந்தால் அவனிடம் நிலமையைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவர்களிடம் நல்ல முறையில் குடும்பவாழ்க்கையை நடத்தும்படி அறிவுறுத்த வேண்டுமென தீர்மானித்திருந்தார் அவர்.

பாரதிக்கோ அவன் வருவான் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை. பிரியம்வதாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியவள் வீட்டுக்கு வந்ததும் கோபத்தில் முகம் சிவக்க அமர்ந்திருந்த பாலா அவளை அச்சத்தில் ஆழ்த்தினான்.

“எங்கடி போன இவ்ளோ நேரம்?”

எடுத்ததும் ஏகவசனத்தில் அவன் எகிறவும் பாரதிக்குப் பயத்தில் இதயம் தொண்டையைத் தீண்டிவிட்டு மீண்டும் மார்புக்கூட்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டது.

“ஏய் உன்னை தானே கேக்குறேன்… பதில் சொல்ல மாட்டியாடி? நான் மடையன் மாதிரி கத்திக்கிட்டிருக்கேன்… நீ சைலண்டா இருக்க… எங்கடி போயிட்டு வந்த? எவன் கூட சுத்திட்டுச் சாவகாசமா வீட்டுக்கு வர்ற?”

அவன் அடுத்தடுத்து கேட்ட கேள்விகள் பாரதியின் இதயத்தின் துப்பாக்கி தோட்டாவாய் துளைத்தன. பதில் சொல்ல கூட முடியாமல் தேகம் நடுங்கியது. அவளை மீறி வெளிவரத் துடித்த கண்ணீர்த்துளிகளை விழுங்கிக்கொண்டு உதடுகள் நடுங்க கணவனைப் பார்த்தாள்.

எதுவும் பேசாமல் பிரியம்வதாவிடம் சிகிச்சைக்குச் சென்றதன் அடையாளமாக மருத்துவ அறிக்கை அடங்கிய கோப்பு மற்றும் மருந்துகள் அடங்கிய கவரை டீபாய் மீது வைத்தவள் “யார் கூடவும்… போகல… டாக்டர்…” என தொடங்கிய வார்த்தையை முடிக்க முடியாமல் கதறியழ ஆரம்பித்தாள்.

பாலா கோப்பு மற்றும் மருந்துகளைப் பார்த்ததும் அதிர்ந்தே போனான். அன்று கவுன்சலிங் செல்வதற்கான நாள் இல்லை என்பதால் தான் அவள் இல்லாத வீடு அவனை என்னென்னவோ சிந்திக்க வைத்துவிட்டது.

காரணமின்றி அவளை வார்த்தைகளால் குத்திக் குதறிவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி எழுந்த நேரம் பாரதி அழுதபடி அவர்களின் அறைக்குள் ஓடிவிட்டாள்.

தலையில் கை வைத்தபடி பாலா சோபாவில் அமர்ந்துவிட்டான்.

“என்னடா பண்ணி வச்சிருக்க? டாக்டரை பாக்க போனவளை இப்பிடி தப்பா நினைச்சு திட்டிட்டியே? பைத்தியக்காரன்டா நீ” என்று அவனது மனசாட்சி அவனைக் காறி உமிழ்ந்தது.

படுக்கையறைக்குள் பாரதி விம்மியழும் சத்தம் வேறு அவனது செவியில் விழுந்து குற்றவுணர்ச்சியைக் கிளப்பியது.

அவளைச் சமாதானப்படுத்தும் எண்ணம் அவனுக்கு இல்லை. ஆனால் தப்பு செய்தவன் மன்னிப்பு கேட்க வேண்டுமே! அதுதானே நியாயமும் கூட! எனவே எழுந்து படுக்கையறைக்குள் சென்றவன் அவனைக் கண்டதும் அவள் வெளியேற எத்தனிக்கவே தடுத்தான்.

முகமெல்லாம் அழுகையில் சிவந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தாள் பாரதி. அவளது தேகத்தின் நடுக்கம் இன்னும் தீரவில்லை. வேறு ஒருவனோடு சென்றாயா என்ற கேள்விக்கு அவள் நடுங்கவில்லை என்றால் தானே தவறு!

கிட்டத்தட்ட அவளது நடத்தையைச் சந்தேகத்துக்குள்ளாக்கும் கேள்வியல்லவா அது! கேட்ட பிற்பாடு பாலாவுக்கே தன்னை எண்ணி அவமானமாக இருந்தது என்றால் பாரதியின் நிலை பரிதாபம் தானே!

கணவன் தன்னை வெளியே செல்ல விடாமல் தடுத்ததை மீண்டும் சண்டை போட வருகிறான் என்று எண்ணி பதறியவள் கை கூப்பினாள்.

“ப்ளீஸ் இன்னொரு தடவை அசிங்கமா பேசி என்னை உயிரோட கொல்லாதிங்க… உங்களுக்கு என்னைப் பாத்தாலே பிடிக்கலனு தெரியும்… கொஞ்சம் பொறுத்துக்கோங்க… அடுத்த மாசம் நான் ஏதாச்சும் பி.ஜி பாத்துட்டுப் போயிடுறேன்… அதுவரைக்கும் வார்த்தையால என்னை சித்திரவதை பண்ணாதிங்க பாலா… ஏற்கெனவே நான் செஞ்ச தப்பை நினைச்சு எனக்குள்ள நொறுங்கிட்டிருக்கேன்.. இதுல நீங்க வேற என்னைக் காயப்படுத்தாதிங்க… ரொம்ப வலிக்குதுங்க… என்னால முடியல”

வாய் விட்டு அரற்றியவளின் பேச்சில் பாலாவின் கண்களும் கலங்க ஆரம்பித்தன. இதற்காகவா ஆசையாக அவளை மணமுடித்தான்? இப்படி கரங்கூப்பி என்னை காயப்படுத்தாதே என்று சொந்த மனைவியே ஒரு கணவனைப் பார்த்து சொல்வது அந்தக் கணவனின் குரூர குணத்தைத் தானே காட்டுகிறது!

அப்படி என்றால் நான் குரூர குணமுள்ளவனா? கொடுமைக்காரனா? பி.ஜிக்கு சென்றுவிடும் முடிவை எடுக்கும் தூரத்திற்கு அவளைத் தள்ளிவிட்ட பாவியா நான்?

கேள்விகளுடன் மெத்தையில் அவன் அமர பாரதியோ பால்கனிக்குச் சென்றுவிட்டாள்.

பின்னர் நேரம் அப்படியே கடந்தது. பாரதி பால்கனியிலிருந்து வந்து முகம் கழுவிவிட்டு தனக்கு மட்டும் இரவுணவைச் சமைத்துக்கொண்டாள்.

பாலாவோ அலுவலகத்திலிருந்து வந்த கோலத்திலேயே சோபாவில் அமர்ந்து தொலைகாட்சியில் பெயருக்குக் கண்ணைப் பதித்திருந்தான்.

பாரதி சம்பா ரவை உப்புமா செய்யும் மணம் நாசியை நிரடியதும் எழுந்து போய் முகம் கழுவி உடை மாற்றி வெளியே சாப்பிடப்போய்விட்டான்.

அவன் திரும்பி வந்த போது பாரதி சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களைக் கழுவி முடித்திருந்தாள்.

வீட்டுக்கு வந்தவனுக்கு உறக்கம் வரவில்லை. தொலைகாட்சியில் நெட்ஃபிளிக்சில் ஆங்கில சீரிஸ் ஒன்றை போட்டுவிட்டவன் அதில் ஆழ்ந்துவிட்டான்.

தாராளமான காதல் காட்சிகளும், கட்டிலறை காட்சிகளும் கொண்ட தொடர் அது. ஓ.டி.டிக்கு சென்சார் இல்லாததால் இப்படிப்பட்ட காட்சிகள் அங்கே தண்ணீர் பட்ட பாடு.

சமையலறையிலிருந்து வெளியேறிய பாரதியின் கண்ணிலா அக்காட்சி படவேண்டும்? பாவம்! பாலாவின் வார்த்தைகள் அவளுக்குள் இருந்த தெளிவைச் சுத்தமாகத் துடைத்தெறிந்ததால் மனம் குழம்பிப்போனவள் மீண்டும் உணர்வுக்கலவரத்துக்குள் சிக்கிக்கொண்டாள். ஆழிப்பேரலையாய் அவளுக்குள் எழுந்த வேட்கையைத் தடுக்கும் வழியறியாதவளாக வேகமாக எழுந்து பிரியவம்தா கொடுத்த மாத்திரைகளை விழுங்கினாள்.

இம்மாதிரி மனநல பாதிப்புகளுக்கு ஆரம்ப கட்டத்தில் கம்மியான டோசேஜ் மருந்துகளே கொடுப்பார்கள். அவை நோயின் பாதிப்புகளால் உண்டாகும் விளைவுகளை உடனே சரிசெய்யாது. குறைந்தது மூன்று முதல் நான்கு வாரங்கள் தொடர்ந்து உட்கொண்டால் மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு குறையும்.

எனவே மருந்து உள்ளே போனாலும் பாரதியால் உடலில் தீயாய் எரியும் உணர்வுகளை அடக்க முடியவில்லை. அழுகையை அடக்கிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தவள் கதவைக் கூட தாளிடாமல் வென்னீர் விசையை அழுத்தினாள்.

கொதிக்க கொதிக்க தூவிய நீர்த்துளிகள் அவளது மேனியைப் புண்ணாக்க ஆரம்பிக்க தனக்குள் உண்டாகும் உணர்வுக்கொந்தளிப்போடு பாலாவின் வார்த்தைகள் கொடுத்த காயத்தின் வலியையும் அதில் மறக்க ஆரம்பித்தாள் பாரதி.

குளியலறை கதவு மூடாததால் தண்ணீர் விழும் சத்தம் பாலாவின் காதுகளில் விழுந்தது. வெகுநேரம் ஆகியும் சத்தம் நிற்கவில்லை என்றதும் வேகமாக அங்கே வந்தவன் ஷவரின் அடியில் மடங்கி அமர்ந்து கொதிநீரில் குளித்துக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் அதிர்ந்து போனான்.

“ஏய் பாரதி” என்றபடி உள்ளே வந்தவன் தண்ணீரில் கால் பட்டதும் சுட்டுவிடவே “அவுச்… என்னடி இவ்ளோ சூடான தண்ணில குளிக்குற? உடம்புல காயம் வரும்டி” என்று விசையை மூடினான். விசையில் கை வைக்க முடியவில்லை. அவ்வளவு சூடு!

இந்தச் சூட்டோடு விழுந்த தண்ணீரிலா இவ்வளவு நேரம் நனைந்து கொண்டிருந்தாள்! என்னவாயிற்று இவளுக்கு என யோசித்தவனுக்கு மருத்துவர் பிரியம்வதாவின் பேச்சு நினைவுக்கு வந்தது.

“உங்க ஒய்ப் ஆல்ரெடி உங்களுக்குத் தகுதியில்லாத மனைவிங்கிற குற்றவுணர்ச்சில இருக்காங்க மிஸ்டர் பாலா… அதோட விளைவா தற்கொலை வரைக்கும் போனாங்கங்கிறதை மறந்துட்டிங்களா? அவங்க செஞ்சது தப்பு, அது அவங்களுக்கும் தெரியுது… அந்தத் தப்பால வந்த பாதிப்பை வாழ்நாள் முழுக்க தூக்கிச் சுமக்குற மனவலிமை அவங்களுக்கு இல்ல… என்ன தான் தெரபி, மருந்துனு குடுத்தாலும் ஒரு கணவனா உங்களோட ஆதரவு இல்லனா ஷீ வில் ப்ரேக்… ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் த சிச்சுவேசன்”

தனது வார்த்தைகள் அவளை இந்தளவுக்குக் காயப்படுத்தியிருக்கின்றன என்று எண்ணி மனம் குமைந்த பாலா மனைவியைக் கைத்தாங்கலாக அங்கிருந்து படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான்.

8 thoughts on “கானல் பொய்கை 11”

 1. CRVS2797

  இப்பவாவது அவளோட உடல்நிலை மற்றும் மனநிலையை புரிஞ்சுக்கிட்டு ஆதரவும், அரவணைப்பும், அனுசரிப்பும் கொடுத்தா தேவியில்லை.

 2. Fellik

  Omg இந்த எபி எனக்கு பிடிக்கல அழ வச்சீட்டீங்க. இப்படி எல்லாம் பேசுவான் எதிர்பாக்கல ச்சை அவள் பண்ணது தப்பு தான் அதுக்காக இப்படியா குத்தி கிழிப்பான்.

 3. Fellik

  உண்மையில் இந்த சட்டங்கள் எல்லாம் நடைமுறை படுத்தபட்டா ரொம்ப நல்லா இருக்கும் நல்ல தகவல்கள் சேமித்து வைக்கனும்

 4. Avatar

  எல்லா ஆண்கள் தாங்கள் தவறு செய்தால் தவறில்லை அதே பெண்கள் செய்தால் ஒழுக்கம் கெட்ட பெண்களாக நினைப்பதை மாற்றனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *