Skip to content
Home » கானல் பொய்கை 4

கானல் பொய்கை 4

 “காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறப்ப இருந்து இந்தப் பிரச்சனை இருக்கு மேம்”

ஓரளவுக்கு அமைதியான பாரதி கூற பிரியம்வதா அவளது பேச்சைக் கவனித்தபடியே நோட்பேடில் குறித்துக்கொண்டார்.

“அப்பவும் இதை கண்ட்ரோல் பண்ணிக்க நீ ஏதாச்சும் விபரீதமா ட்ரை பண்ணிருக்கணும்ங்கிறது என்னோட கெஸ்… என்ன சரியா சொல்லிட்டேனா?” என அவர் கேட்டதும் தலையைக் குனிந்துகொண்டாள்.

மெல்லிய குரலில் “அப்ப இந்த மாதிரிலாம் தோணுச்சுனா ஒயிட்னர் பாட்டிலை எடுத்து இன்ஹேல் பண்ணுவேன்…. அதுக்கும் அடங்கலனா என் தலைய சுவத்துல முட்டிப்பேன்… நிறைய தடவை நெத்தி புடைச்சு பொறி கலங்குற அளவுக்கு வலிச்சதுக்கு அப்புறமா என் உணர்வுகள் அடங்கிப்போறதை புரிஞ்சிக்கிட்டேன்… அப்ப இருந்து அதையே தடுப்பு முறையா யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்” என அவள் சொல்ல தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ளும் குணம் எப்போதிருந்து ஆரம்பித்தது என பிரியம்வதாவுக்குப் புரிந்துவிட்டது.

அடுத்து இந்த மாதிரி உணர்வுகள் ஏற்படக் காரணகர்த்தாவாக அமைந்த சூழ்நிலை பற்றி வினவியாகவேண்டிய நிலை. மற்ற கேள்விகளுக்கே அழுது துடித்தவள் அதை எப்படி விளக்கப்போகிறாள் என்ற கேள்வி பிரியம்வதாவின் முன்னே பூதாகரமாக நின்றது.

வேறு வழியில்லை. பாரதியின் தற்காலிக மனக்குமுறலை எண்ணி இப்போது விட்டுவிட்டால் அவளது குறைபாடு என்னவென கண்டறிவதும், தகுந்த சிகிச்சை கொடுப்பதும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும்.

அவள் இப்போது இருக்கும் நிலமையில் சிகிச்சை தாமதமானால் பாரதியின் உயிருக்கே அது ஆபத்தாகப் போய் முடியவும் வாய்ப்புள்ளது. எனவே தாமதிக்காமல் மேற்கொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார் பிரியம்வதா.

“எப்ப இருந்து இந்த பிரச்சனை உனக்கு ஆரம்பிச்சுது?”

குனிந்திருந்தவளின் உடல் இறுகுவதைப் பிரியம்வதாவால் கண்கூடாக காண முடிந்தது. புடவையின் முந்தானையை அழுத்தமாகப் பற்றியவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு பிரச்சனைக்கு வழிவகுத்த சூழல் என்னவென விளக்க ஆரம்பித்தாள்.

அது அவள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த காலகட்டம். பாரதி ஆங்கில நாவல்களுக்குத் தீவிர வாசகி. அதிலும் காதல் கதைகள் என்றால் கொள்ளைப்பிரியம்.

அரசாங்கம் கொடுத்த இலவச மடிக்கணினியைப் படிப்புக்குப் பயன்படுத்தினாளோ இல்லையோ இணையத்தில் பி.டி.எஃப் வடிவத்தில் கிடைக்கும் நாவல்களை தரவிறக்கம் செய்து படிப்பதற்கு தவறாது பயன்படுத்தினாள்.

மில்ஸ் அண்ட் பூன்ஸ் கதைகளில் ஆரம்பித்து அகதா கிறிஸ்டி வரை அனைத்தையும் படிப்பவளுக்கு மனதில் சிலிர்ப்பை உண்டாக்கியவை என்னவோ காதல் சார்ந்த நாவல்கள் தான்.

அவளுடன் படித்த நெருங்கிய தோழி கல்பனாவுக்கும் நாவல் படிக்கும் பழக்கம் உண்டு. கூடுதலாக அவள் நாவல்களை எழுதவும் ஆரம்பித்திருப்பதாகச் சொன்னாள்.

பாரதியால் முதலில் நம்பவே முடியவில்லை.

“நீயே எழுதுவியா? பொய் சொல்லாத கல்பு… உனக்கு எப்பிடி எழுத வரும்?” என நம்பாமல் கேட்டவளிடம் தான் எழுதிக்கொண்டிருக்கும் ராகம் நாவல்கள் என்ற இணையத்தளத்தின் இணைப்பை வாட்சப்பில் அனுப்பிவைத்தாள் கல்பனா.

“போய்ப் பாரு… அங்க எனக்கு எவ்ளோ வியூஸ் போயிருக்குனு தெரியும்”

அவள் நன்றாகப் படிக்கவேண்டுமென எண்ணி அவளது அன்னை மனோகரியும் தந்தை பகலவனும் வாங்கி கொடுத்த மொபைலில் தோழி கொடுத்த இணையதளத்தைப் பார்க்க ஆரம்பித்தாள் பாரதி.

கல்பனா கலிவரதன் என்ற பெயரில் அவளது கதைகள் சில அங்கே இருந்தன. யாரென தெரியாத ஆங்கில நாவலாசிரியைகளின் கதையைப் படித்தவளுக்குத் தோழியின் கதைகளைப் படிக்கக் கசக்கவா செய்யும்!

ஆவலோடு கல்பனாவின் கதைகளை ஒவ்வொன்றாகப் படித்தவள் அவளது எழுத்து நடையிலும், காதல் சொட்டிய வசனங்களிலும் மெய்மறந்து மூழ்கிப்போனாள்.

“கல்புவா இப்பிடிலாம் எழுதிருக்கா? அவளுக்கு எப்பிடி ரொமான்ஸ் இவ்ளோ அழகா எழுத தெரிஞ்சுது?” என ஆச்சரியமாகக் கேட்டபடி முழு நாவலை ஒரே இரவில் படித்துமுடித்தவள் மறுநாள் கல்லூரிக்குப் போனதும் தோழியிடம் அதே கேள்வியைக் கேட்டாள்.

கல்பனாவோ இது என்ன கேள்வி என்ற ரீதியில் அசட்டையாகப் பார்த்தாள்.

“அது இல்லடி…” எனத் தடுமாறியவளின் கவனத்தில் விழுந்தது அவர்களின் கல்லூரி கேண்டீன்.

அதைக் காட்டியவள் “நம்ம கேண்டீன் சமோசா ரொம்ப டேஸ்டா இருக்கும்… அதை பத்தி யாராச்சும் என் கிட்ட விசாரிச்சா என்னால சொல்ல முடியும்… ஏன்னா அதோட ருசிய நான் அனுபவிச்சிருக்கேன்… இதை அப்பிடியே உன் ரொமான்ஸ் நாவல் கூட கம்பேர் பண்ணிப் பாரு… நான் என்ன கேக்க வர்றேன்னு உனக்குப் புரியும்” என்றாள்.

கல்பனா ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டவளைப் போல வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

“ஏன்டி சிரிக்குற?”

சிடுசிடுத்தாள் பாரதி. கல்பனாவும் சிரிப்பை நிறுத்தினாள்.

“ரொமான்ஸ் எழுதணும்னா கட்டாயம் முன்அனுபவம் இருக்கணுமாடி மக்கு? எத்தனை மூவி பாக்குறோம்? எவ்ளோ சீரீஸ் பாக்குறோம்? எத்தனை கதை படிக்குறோம்? அதெல்லாம் மனசுல வச்சு எழுத வேண்டியது தான்” என்றாள்.

“அது எப்பிடி பாசிபிள்?”

“நீ கேக்குற கேள்வி எப்பிடி இருக்கு தெரியுமா? முன்ன பின்ன கொலை பண்ணாத நீ எப்பிடி க்ரைம் கதை எழுதுறனு கேக்குற மாதிரி இருக்கு… எல்லாமே நம்ம மனசுல உறைஞ்சிருக்குற கற்பனை தான் எழுத்தா வரும் பாரதி… ஏன் உனக்கு லைஃப் பார்ட்னர் இப்பிடி தான் வரணும்னு கற்பனை இல்லையா? அதை மனசுல வச்சு ரொமான்ஸ் எழுதுனா போச்சு”

கல்பனா என்னவோ சாதாரணமாகச் சொல்லிவிட்டாள். ஆனால் பாரதியால் தான் அவ்வளவு எளிதில் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்படியே நாட்கள் கடக்க கடக்க கல்பனாவின் கதைகளைப் படித்த பாரதிக்குத் தானும் எழுதினால் என்ன என்ற ஆசை துளிர் விட்டது.

அதை பற்றி கல்பனாவிடம் சொன்னபோது அவளும் சந்தோசப்பட்டாள்.

“எழுதுடி… உனக்கு ரைட்டிங் சம்பந்தமா என்ன டவுட் வந்தாலும் என் கிட்ட கேளு… நான் எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லித் தர்றேன்… சரி நீ எந்த சைட்ல எழுதப்போற? ஸ்டோரி ப்ளாட் ரெடி பண்ணிட்டியா?” என அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டாள்.

“நான் எங்க எழுதணும்னு இன்னும் யோசிக்கவேல்லடி” என நகம் கடித்தவளிடம்

“நான் எழுதுற சைட்ல எழுதுறியா? என்று கேட்டு வைத்தாள் கல்பனா.

உடனே மறுப்பாகத் தலையசைத்தாள் பாரதி.

“வேண்டாம்டி”

“ஏன்? நான் எழுதுற சைட்ல நியூ ரைட்டர்சை நல்லா என்கரேஜ் பண்ணுவாங்க… ஒரு கதை எழுதிப் பாரு பாரதி”

“இல்ல கல்பு… அது சரியா வராது”

“சரி வேண்டாம்… அப்ப வேற சைட் எதுவும் யோசிச்சு வச்சிருக்கியா?”

ஆம் என்பது போல் தலையாட்டியவள் “சாகரம் சைட் அட்மினுக்கு மெயில் அனுப்பிருக்கேன்” என்றாள்.

“சூப்பர்… அந்த அட்மினும் ரைட்டர் தான்… அவங்க கதை எல்லாம் நல்லா இருக்கும்” என்றாள் கல்பனா.

“அப்பிடியா? ஏன்டி என் கிட்ட சொல்லவேல்ல? நீ எழுதுற சைட்ல உள்ள ரைட்டர்ஸ் கதையை மட்டும் அடிக்கடி அப்பிடி இப்பிடினு புகழுவ”

பாரதி குறைபடவும் கல்பனா திருதிருவென விழித்தாள்.

ஒரு தளத்தில் எழுதிக்கொண்டு இன்னொரு தளத்தில் எழுதுபவரின் கதைகளுக்குப் பின்னூட்டம் எழுதுவது ஒன்றும் தவறில்லை. சிலர் அதை செய்வதும் உண்டு. ஆனால் “நம்ம சைட்லயே எவ்ளோ கதைகள் ரீடர்ஸ் பார்வைக்குப் போகாம இருக்கு… அதை படிச்சு ரிவியூ போட்டிங்கனா நம்ம சைட் ரைட்டர்சுக்கு ஊக்கமா இருக்கும்ல” என்ற அறிவுரை வருமே!

அதை பாரதியிடம் சொல்ல கல்பனாவுக்குப் பிரியமில்லை.

“அதான் இப்ப சொல்லிட்டேன்ல… அவங்க உனக்கு ரிப்ளை அனுப்புனதும் யோசிக்காம எழுத ஆரம்பி… கவர் பிக் க்ரியேட் பண்ணுறதுக்கு ஒரு ஆப் இருக்கு… நான் ப்ளேஸ்டோர் லிங் அனுப்புறேன்… டவுன்லோட் பண்ணிக்க… ஆங், உனக்குத் தமிழ் டைப்பிங் வராதுல்ல… அதுக்கு ஒரு சாப்ட்வேர் இருக்கு… அதை லேப்டாப்ல டவுன்லோட் பண்ணிக்க”

தோழிக்கு எழுத்து சம்பந்தப்பட்ட எல்லாவித உதவிகளையும் செய்தாள் கல்பனா. அவளிடம் பாரதி இன்னொரு உதவியையும் கேட்டாள்.

“என் பேரண்ட்சுக்கு நான் எழுதுறது தெரியவேண்டாம் கல்பு… அவங்க கிட்ட சொல்லிடாத… இதுல்லாம் அவங்களுக்குப் பிடிக்காது”

“ஏன்டி இப்பிடி நினைக்குற பாரதி? எழுதுறதுலாம் பெரிய விசயம்டி… உன் திறமைய தெரிஞ்சுக்கிட்டா அவங்க சந்தோசப்படுவாங்க” என்ற கல்பனாவுக்கு, ஒரு காதல் பாடலை ஆர்வமாகப் பார்த்தற்காக அன்னையிடம் நான்கு நாட்கள் பாரதி வாங்கிய திட்டு பற்றி எதுவும் தெரியாது.

இங்கே காதலும், காதல் சார்ந்த உணர்வுகளும் திருமணத்திற்கு முன்னர் மறைக்கப்படவேண்டியவை என்பது ஒவ்வொரு பெற்றோரின் கருத்து. அப்படி இருக்கையில் கதை எழுதுவதெல்லாம் தெரிய வந்தால் இந்த ஜென்மம் முழுவதும் பேச்சு வாங்க வேண்டியதாக இருக்கும். நிலமையை எடுத்துச் சொன்ன பிற்பாடு கல்பனாவும் புரிந்துகொண்டாள்.

பாரதி தனக்கான புனைப்பெயரைத் தேர்வு செய்திருந்தாள்.

‘வர்ணிகா’

எழுத்துலகம் வர்ணமயமானது என்ற எண்ணத்தோடு அப்பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தாள் அவள்.

அதோடு சாகரம் தளத்தில் தனது மின்னஞ்சலை வைத்து வர்ணிகா என்ற பெயரில் பயனர் ஐடி ஒன்றும் ஓப்பன் செய்துகொண்டாள்.

சாகரம் தளத்திலிருந்து வரும் பதில் மின்னஞ்சலுக்காகக் காத்திருந்தாள் பாரதி. அவளது பயனர் ஐடிக்கு அப்ரூவல் கிடைத்துவிட்டது.  மேற்படி தகவல்களுக்கு வாட்சப் எண்ணை  அணுகுமாறு மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்கள்.  அந்த வாட்சப் எண்ணைத் தாமதிக்காமல் தொடர்பு கொண்டாள் அவள்.

“ஹாய் அக்கா, நான் வர்ணிகா!  நான் கொஞ்சநேரம் முன்னாடி உங்க சைட்ல எழுதலாமானு மெயில் பண்ணுனேனே”

“ஹாய்மா! வெல்கம் டூ சாகரம் சைட்…  உங்களுக்கு ரைட்டர் ஆக்சஸ் குடுத்திருக்கேன்மா..  நாளையில இருந்து நீங்க கதை அத்தியாயங்கள் போடலாம்”

“நன்றிக்கா…  எனக்கு இது முதல் கதை…  கொஞ்சம் டென்சனா இருக்கு”

“டென்சன் எதுக்குமா? ரிலாக்சா எழுதுங்க…  ஃபேஸ்புக்ல ரெக்வஸ்ட் குடுங்க. அங்க சில குரூப்ஸ் இருக்கு… அதுல கதை லிங் ஷேர் பண்ணுனா புது ரீடர்ஸ் கிடைப்பாங்க”

“சரிக்கா…  நான் ரெக்வஸ்ட் குடுக்குறேன்”

“ஒரு சின்ன அட்வைஸ்மா… ஃபோரம்ல எழுதுறப்ப கவனமா எழுதுங்க…  உங்க எழுத்துநடையை யாருக்காகவும் மாத்திக்காதிங்க… ரொமான்ஸ் அதிகம் எழுதுங்கனு கேப்பாங்க… அப்ப கொஞ்சம் கவனமா எழுதுங்க… முகம் சுளிக்கிற மாதிரி எழுதவேண்டாம்மா… நீங்க வேற அன்மேரீட்னு சொல்லுறிங்க… நம்ம வீட்டைச் சேர்ந்தவங்க கிட்ட தைரியமா படிக்க சொல்லுற மாதிரி கதை எழுதுங்க”

“சரிக்கா”

உடனடியாக தனது முகப்புத்தக ஐடியிலிருந்து சாகரம் தளத்தின் அட்மினுக்கு  நட்புகோரிக்கை விடுத்தாள் பாரதி.

அவர் மீண்டும் வாட்சப்பில் வந்தார்.

“வர்ணிகா  உங்க  பென்நேமா? ஃபேஸ்புக்ல பாரதிபகலவன்னு இருக்குதே?”

“ஆமாக்கா… நான் எழுதப்போறது வீட்டுல இருக்குற யாருக்கும் தெரியாது… தெரிஞ்சா எழுதவிடமாட்டாங்க… அதான் புனைப்பெயருல எழுதலாம்னு இருக்கேன்”

“சரிம்மா! அப்ப புனைப்பெயர்ல எஃப்.பி ஐடி ஒன்னு ஓப்பன் பண்ணிக்கோங்க… கதை டைட்டில் சொன்னிங்கனா த்ரெட் ஓப்பன் பண்ணி குடுத்துடுவேன்”

இப்படிதான் பாரதியின் எழுத்துப்பயணம் சாகரம் தளத்தில் தொடங்கியது. வர்ணிகா என்ற புனைப்பெயரில் முதல்கதையை நிறைய ஆர்வத்தோடு எழுதினாள்.

முகப்புத்தககுழுக்களில் சேர்ந்து தினமும் கதையின் இணைப்புகளைப் பகிர்ந்துகொண்டாள். அங்கே கதை முடிந்ததும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வரும் விமர்சனங்களைப் பார்த்து தனது கதைக்கும் யாரேனும் விமர்சனம் தருவார்களா என்று ஆவலோடு ஒவ்வொரு அத்தியாயத்தையும் பதிந்தாள். தளத்தின் அட்மினும் ஒரு எழுத்தாளர் என்பதால் அவர் சொன்னபடி வாக்கிய அமைப்பு,  வசனம், வர்ணனையில் பிழையின்றி எழுத முயற்சித்தாள்.

இப்படியாக ஐந்து அத்தியாயங்களை பதிவிட்டுவிட்டு எத்தனை வாசகர்கள் தனது கதையைப் படித்திருக்கிறார்கள் என்று பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஐந்து அத்தியாயங்களுக்கும் சேர்த்து மொத்தம் நூறு பார்வைகள்கூட இல்லை.

தினமும் முகப்புத்தகத்தில் இணைப்புகளைப் பகிர்ந்தும் ஏன் வாசகர்கள் தன் கதையைப் படிக்கவில்லை என்று யோசித்து யோசித்துச் சோர்ந்து போனாள் பாரதி.

எழுதப்படும் கதைகள் அனைத்தும் வாசகர்கள் பார்வைக்குப் போவதில்லை. குறிப்பாக புதிய எழுத்தாளர்களின் கதைகளை அவ்வளவு எளிதில் வாசகர்கள் வாசிக்கமாட்டார்கள். எழுத்துநடை, அடுத்தடுத்த அத்தியாயங்களை பதிவிடும் வேகம், அத்தியாயங்களின் பதிவு இணைப்பை முகப்புத்தகத்தில் பகிரும் முறை என ஒவ்வொன்றையும் கவனித்து, அதில் ஏதோ ஒன்றால் கவரப்பட்டுத் தான் வாசகர்கள் வருவார்கள்.

அதற்கு நேரம் எடுக்கும். கொஞ்சம் தீர்க்கமாக யோசிக்கும் திறன் கொண்டவர்கள் வாசகர்கள் தனது கதைகளைப் படித்து கருத்து சொல்லும்வரை பொறுமையைக் கடைபிடிப்பார்கள்.

ஆனால் கஷ்டப்பட்டு எதையும் ஜெயிக்கும் விருப்பமற்றவர்கள் அச்சமயத்தில் யார் பிரபல எழுத்தாளராக வாசகர்களால் கொண்டாடப்படுகிறார்களோ அவர்கள் பக்கம் ஒதுங்கிவிடுவார்கள். அப்படியாவது அவரது வாசகர்களின் கவனம் நம் கதை பக்கம் வரட்டுமே என்ற நப்பாசை. இரண்டு முறையுமே தவறில்லை.

ஆனால் பயங்கர ‘இன்ட்ரோவெர்ட்டான’ பாரதிக்கு சமூக வலைதள கமெண்டுகளில் துள்ளி விளையாடும் ‘டியர்’ ‘பேபி’ என்ற நட்புரீதியான அழைப்புகள் என்றாலே அலர்ஜி. அவளால் வாசகர்களிடம் அவ்வளவு எளிதில் நட்பாக முடியவில்லை. எனவே தனது கதைக்கான வாசகர்கள் வரும்வரை அமைதியாக எழுத மட்டும் செய்யலாமென்ற முடிவுக்கு வந்தாள் பாரதி.

9 thoughts on “கானல் பொய்கை 4”

 1. CRVS2797

  ஓ… இப்படித்தான் ஆரம்பிச்சதா… அவ கதை எழுதிற பழக்கம்…?

 2. Fellik

  ஹா ஹா ஹா இப்ப நிறைய பேர் இப்படி தான் கமெண்ட் வரல ரிவியு வரலனு ஆன்டி ஹீரோவ ஹீரோவா கொண்டாடிகிட்டு இருகாங்க. நைஸ் அப்டேட்

 3. Avatar

  Ava friend than ava ezhudha arambika karanama
  Veetula love songs keka restrictions OK Ana story ezhuda kuda va restricts varum?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *