Skip to content
Home » கானல் பொய்கை 5

கானல் பொய்கை 5


பாரதி வெற்றிகரமாக அவளது முதல் கதையை முடித்துவிட்டாள். பெரிதாக கருத்து எதுவும் சொல்லவில்லை. அவள் இதுவரை படித்துச் சலித்த ஆயிரம் கதைகளின் பாதிப்பில் ஆயிரத்து ஒன்றாவதாக அவள் எழுதிய கதை அது. பெரிதாகத் திருப்பம் இல்லாம அமைதியான நீரோடை போன்ற கதையை எழுதிவிட்டு முகப்புத்தகத்தில் பிரபலமான வாசகர்கள் யாரேனும் பின்னூட்டம் இடுவார்கள் எனக் காத்திருந்தாள் அவள்.


கதையைப் படிக்கவும், அதை முகப்புத்தகத்தில் விமர்சித்து இன்னும் பல வாசகர்களிடம் அக்கதையை அறிமுகப்படுத்தவும் நிலவும் எழுத்து மற்றும் தள அரசியல் பற்றி அவளுக்குத் தெரியாதல்லவா!


கிட்டத்தட்ட பத்து நாட்கள் தளத்திலேயே கதை இருந்தாலும், மௌனமாக வாசகர்கள் படித்தாலும் பின்னூட்டம் என்ற ஒன்று மட்டும் வரவேயில்லை. அதற்காக பாரதி எழுதிய கதையைக் குறை சொல்ல முடியாது. முதல் கதை என்பதால் சில இடங்களில் தடுமாறியிருந்தாள். உணர்வுகளைச் சரிவர வார்த்தைகளில் கொண்டு வரத் தெரியவில்லை. கூடவே எழுத்துலகத்தில் புழங்கும் ‘மில்ஸ் அண்ட் பூன்ஸ்’ ஆங்கில நாவல் டெம்ப்ளேட்களின் பாதிப்பில் எழுதிய கதை வேறு!


அதனால் தான் தனது கதையை யாரும் பெரிதாகப் பேசவில்லை போல என்று எண்ணியிருந்தவள் கல்பனா எழுதிக்கொண்டிருந்த ராகம் தளத்தில் யாரோ ஒரு எழுத்தாளர் முடித்த கதைக்கு வந்த பின்னூட்டத்தை முகப்புத்தகத்தில் படிக்க நேர்ந்தது.


பின்னூட்டம் சுவாரசியமாக இருக்கவும் கதையைப் படித்தவளுக்கு ஏமாற்றமோ ஏமாற்றம். அந்த எழுத்தாளரும் அவளைப் போல புதுமுக எழுத்தாளர் தான். சொல்லப்போனால் பாரதி கதையை ஆரம்பித்து சில நாட்கள் கழித்து தான் அப்பெண் எழுத ஆரம்பித்திருந்தாள் என்பதை பதிவுகள் வந்த தேதி சொல்லாமல் சொன்னது.


ஆனால் அந்தப் பெண்ணுக்கு அடுத்தடுத்து ரிவியூக்கள் முகப்புத்தகத்தில் வந்து குவிந்தவண்ணம் இருக்கவும் பாரதிக்குக் குழப்பம். ஏனெனில் எழுத்துநடையில் ஆரம்பித்து கதை சொல்லும் போக்கு வரை எதிலுமே தெளிவில்லை. போதாக்குறைக்கு வரிக்கு வரி எழுத்துப்பிழை. புதிய எழுத்தாளருக்கு இத்தகைய தடுமாற்றங்கள் இருக்கத் தான் செய்யும். அதை தவறு சொல்ல முடியாது. அங்கே பாரதி குழம்ப காரணம் பின்னூட்டம் இட்ட யாருமே அந்தப் பெண்ணின் கதையிலிருந்த கோர்வையற்ற தன்மை, எழுத்துப்பிழையைச் சுட்டிக் காட்டவில்லை என்பதுதான்.


யோசித்துப் பார்த்தவள் கல்பனாவிடமே கேட்டுவிட்டாள்.
“நீ எழுதுற ராகம் நாவல்கள் சைட்ல இப்ப புதுசா ஒரு ரைட்டர் கதை முடிச்சாங்கல்ல, அந்தக் கதைல எவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் தெரியுமா கல்பு?”


கல்பனாவிடம் வாட்சப்பில் பேசியபடி குறிப்பிட்ட கதையின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்தாள் பாரதி.


குறில் நெடில் வித்தியாசங்கள், லகரளகரழகர பயன்பாடுகளில் ஆரம்பித்து ணகரம் வரும் இடங்களில் எல்லாம் னகரம் எட்டிப் பார்த்தது. றகரமும் ரகரமும் தப்பான இடங்களில் வந்து தமிழைக் கொல்லாமல் கொன்றன.


கதையின் போக்கு கூட ஆங்கிலமும் தமிழும் கலந்து இருந்தது.


கல்பனா அதை வாசித்துப் பார்த்துவிட்டு ‘ஹாஹா’ எமோஜி போட்டாள்.
“சிரிக்காத பக்கி. நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடாம எழுதுறேன்… என் கதை முடிஞ்சு பதினைஞ்சு நாளாகுது… இந்த ரீடர் என் கதையும் படிச்சாங்க… முதல் கதை மாதிரியே இல்ல, சூப்பரா எழுதிருக்கங்கனு சொன்னாங்க… ஆனா அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் கதைக்கு மட்டும் இவ்ளோ பெருசா ரிவியூ போட்டிருக்காங்க பாரு”


பாரதி சோகமாகக் கூற “எழுத்துலக அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்றாள் கல்பனா தோழியைத் தேற்றும் விதமாக.
பாரதி இன்னும் சோக எமோஜியை அனுப்பவும் “அதுக்குத்தான் உன்னையும் எங்க சைட்டுல எழுதக் கூப்பிட்டேன்… அங்க நிறைய ரீடர்ஸ் வருவாங்க… கதை முடிஞ்சதும் ரிவியூஸ் நிறைய வரும்… நீதான் என் பேச்சைக் கேக்காம சாகரம் சைட்ல போய் சேர்ந்த… இட்ஸ் யுவர் மிஸ்டேக்” என்றாள் கல்பனா.


“இதுக்கும் அதுக்கும் என்னடி சம்பந்தம் இருக்கு?”


“அதுல்லாம் இருக்கு… ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்க பாரதி, நம்ம ரீடரா இருந்தப்ப மூனு நாலு சைட் மட்டும் தான் இருந்துச்சு… இப்ப அப்பிடி இல்ல… திரும்புன பக்கமெல்லாம் சைட் இருக்கு… எங்க எழுதுனா நம்ம சீக்கிரம் ரீச் ஆவோம்னு யோசிச்சுட்டு நீ எழுத ஆரம்பிச்சிருக்கணும்… நான் சொல்ல சொல்ல கேக்காம சாகரம் சைட்டுக்கு நீ ஏன் போன?”


“ஏன்டி அது என்ன தீண்டத்தகாத சைட்டா?” ஆதங்கமாக உயர்ந்தது பாரதியின் குரல்.


“அப்பிடி இல்ல பக்கி… ஃபேஸ்புக் ரீடர்ஸ் மத்தில கதைனா அது எங்க சைட்ல மட்டும் தான் நல்லா இருக்கும்னு ஒரு எண்ணம் பதிஞ்சு போயிருக்கு… சோ எங்க சைட்ல எழுதுற ரைட்டர்ஸ் கதைய படிக்க, ரிவியூ போட ரீடர்ஸ் ஆவலா வருவாங்க… சாகரம் சைட்லயும் நல்ல கதை இருக்கு… ஆனா ரீடர்ஸ் மனசுல அந்த சைட் ரிஜிஸ்டர் ஆக இன்னும் நாள் ஆகும்டி… அதுவரை அங்கயே இருக்கப் போறியா? இல்ல புத்திசாலித்தனமா எங்க சைட்ல எழுத வர்றீயா? இட்ஸ் யுவர் சாய்ஸ்… அப்பிடி எழுத வரப்போறனா சாகரம் சைட்ல இருக்குற உன் கதைய ரிமூவ் பண்ணச் சொல்லிட்டு வா”


கல்பனா தோளைக் குலுக்கி கூறிவிட்டாள். பாரதி வெகுவாய் குழம்பிப்போனாள்.


ஆசையாய் எழுதிய கதை ஆளற்ற கடையில் டீ ஆற்றியது போல படிப்பாரின்றி கிடப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இரவெல்லாம் நன்கு யோசித்தாள். பின்னர் ராகம் தள அட்மினிடம் வாட்சப்பில் மெசேஜ் செய்தாள்.


“நான் இனிமே ராகம் சைட்ல எழுதலாம்னு இருக்கேன் அக்கா… என் கதை த்ரெட்டை ரிமூவ் பண்ணிடுங்க”


தட்டச்சு செய்யும்போதே மனதில் இனம்புரியாத உணர்வு கூடு கட்டியது. இதற்கு பெயர் தான் குற்றவுணர்ச்சியா என அவள் திகைக்கும்போதே “சரிம்மா… நான் ரிமூவ் பண்ணிடுறேன்” என்று அட்மினிடமிருந்து பதில் வந்தது.


தளத்தில் எப்படி கதை போடுவது என்பதில் ஆரம்பித்து எப்படி குழுக்களில் கதைக்கான இணைப்பைப் பகிர்வது என்பது வரை குழந்தைக்குக் கைப்பிடித்து எழுதச் சொல்லித் தருவது போல கற்றுக்கொடுத்தவர் சாகரம் தளத்தின் அட்மின். தனது சுயநலத்திற்காக தளத்தை விட்டு இன்னொரு தளத்துக்குத் தாவுகிறோமோ என்று கலங்கிப்போனவள் முகப்புத்தகத்தில் பிரவேசித்துத் தனது கலக்கத்தைப் போக்க நினைத்தாள்.


அங்கேயோ ராகம் தளத்தில் எழுதப்பட்ட எழுத்துப்பிழை கதைக்கு ஆஹா ஓஹோ என்ற பின்னூட்டம், அதில் ‘link please’ என ஐம்பது கமெண்டுகள், ‘amazing story… new writer polave theriiala…’ , ‘இந்த ரைட்டரோட வேற கதை லிங் இருக்கா?’ என தமிழிலும், ஆங்கிலத்திலும், தங்கிலீஷிலும் ஏகப்பட்ட பாராட்டுகளும் மற்ற கதைகளுக்கான தேடல்களும் பாரதியின் மனதிலிருந்த கலக்கத்தைத் துடைத்தெறிந்தன.


மறுநாள் கல்லூரியிலிருக்கும்போது கல்பனா ராகம் தளத்தின் அட்மினிடம் பேசி பாரதிக்கு அவர்கள் தளத்தில் எழுதுவதற்கான அனுமதியை வாங்கிக்கொடுத்தாள்.


அட்மினிடம் நன்றி கூறிய பாரதியும் மகிழ்ச்சியோடு தனது அடுத்த கதையை அங்கே பதிவிட ஆரம்பித்தாள்.


ஆச்சரியம் என்னவென்றால் பதிவிட்ட ஒரே நாளில் ஒரு அத்தியாயத்திற்கான வியூ மட்டும் ஐநூறைத் தாண்டியிருந்தது.
ராகம் தளத்தின் முகப்புத்தகக் குழுவிலும் அவளது கதை இணைப்புக்கான பதிவில் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கமெண்டுகள். எழுத வந்ததிலிருந்து இதெல்லாம் அனுபவித்தறியாதவளுக்கு வானத்தில் பறப்பது போன்ற உணர்வு.
அதில் ஒரு வாசகியின் பதிலைப் பார்த்ததும் பாரதி பறப்பதை நிறுத்திவிட்டுப் பூமிக்கு இறங்கிவந்தாள்.


“உங்க ஃபர்ஸ்ட் கதைய விட இதுல எழுத்து மெருகேறியிருக்கு… வாழ்த்துகள்”


அந்த வாசகியை அவள் சாகரம் தளத்தில் பார்த்திருக்கிறாள். அதாவது இரவு உறக்கம் வராமல் இருக்கையில் தளத்தில் தன் கதையை யார் வாசிக்கிறார்கள் என்று பார்க்க விரும்புவாள்.


அப்போதெல்லாம் நள்ளிரவில் அந்த வாசகி பாரதியின் கதை திரியைப் படிப்பதைப் பார்த்திருக்கிறாள்.


சாகரம் தளத்தில் அவரும் உறுப்பினரே. ஆனால் அங்கே கதை பற்றி மூச்சு கூட விடவில்லை. ஆனால் ராகம் தளத்தில் பதிவிட்டதும் முதல் கதையைக் குறிப்பிட்டு கமெண்ட் செய்திருக்கிறார். இது என்ன மாதிரி மனநிலை என அவளுக்குப் புரியவில்லை.


“எங்களுக்குப் பிடிச்ச இடத்துல எழுதுனா உனக்குக் கமெண்ட் போடுவோம்… இல்லனா சைலண்டா படிப்போம்ங்கிற எண்ணமா கல்பு?” நகம் கடித்தபடி தனது சந்தேகத்தைக் கல்பனாவிடமே கேட்டுவிட்டாள்.
அவளோ தோழியின் தலையில் குட்டினாள்.


“ரொம்ப யோசிக்காத… பார்சியாலிட்டி பாக்காத ஆளுங்க எங்க இருக்காங்க? நீ கூட பார்சியாலிட்டி பாத்தியே… மறந்துட்டியா?” என்று சொல்லி பாரதியை அதிர வைத்தாள் அவள்.


“நானா? நான் எப்ப?”


பாரதி திக்கித் திணறவும் “போன மாசம் நீ என் கதை படிச்ச்சு ஃபேஸ்புக்ல ரிவியூ போட்ட… ஞாபகம் இருக்குதா?” என்று கேட்டாள் அவள்.


“ஆமா… அதுல என்ன பார்சியாலிட்டி இருக்கு?” என மிடுக்காகக் கேட்டாள் பாரதி.


“அராம்சே பேட்டி… நீ நம்ம சைட்ல நிறைய கதைகள் படிக்குற… ஆனா எனக்கு மட்டும் தானே ரிவியூ போட்ட… ஏன்னா நான் உன்னோட ஃப்ரெண்ட், நம்ம ரெண்டு பேரும் ஒரே ஊர்… என் எழுத்தை நீ படிச்சா நான் சந்தோசப்படுவேன்… அதனால நீ என் கதைய மிஸ் பண்ணாம படிக்குற… ரிவியூவும் போடுற… இதையே சில ரீடர்சும் பண்ணுறாங்க… அவ்ளோ தான்… எதுக்கெடுத்தாலும் ரொம்ப யோசிக்காத பாரதி”


கல்பனா ஒப்பிட்டுக் கூறியதும் பாரதியும் அமைதியானாள்.
அவளது எதிர்பார்ப்புபடி இரண்டாவது கதை முடிந்ததும் முகப்புத்தகத்தில் பின்னூட்டங்கள் வந்தன. அனைத்து பின்னூட்டங்களிலும் இடம்பெற்ற வார்த்தை ‘முதல் கதையை விட இந்தக் கதையில் எழுத்துநடை மெருகேறியிருக்கிறது’ என்பதே.


பின்னூட்டமிட்ட அனைவருமே சாகரம் தளத்தில் எழுதப்பட்ட கதையையும் படித்திருக்கிறார்கள். ஆனால் மௌனமாகக் கடந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டாள் அவள்.


இரண்டாவது கதைக்குப் பாராட்டுகள் முகநூலில் வந்ததும் “உன்னோட ஃபர்ஸ்ட் கதைய அமேசான்ல போடு பாரதி… ரீடர்ஸ் கட்டாயம் உன்னோட வேற கதை லிங் வேணும்னு கேப்பாங்க… அப்ப அமேசான் லிங்கை குடு… அங்கயும் நமக்கு ரீடர்ஸ் கிடைப்பாங்க… அது மட்டுமில்ல அங்க ராயல்டியும் வரும்” என்று சொன்ன கல்பனா பாரதிக்கு அமேசானில் கதை பதிவிடுவதற்கான கணக்கையும் உருவாக்கிக்கொடுத்தாள்.


பள்ளியில் உதவித்தொகைக்காக திறந்த வங்கிக்கணக்கு எண்ணை அமேசானில் இணைத்து முடித்ததும் பெரிய சாதனை புரிந்துவிட்ட எண்ணம் இருவருக்கும்.


“அமேசான்ல கதை போட்டதும் நம்ம சைட்ல அமேசான் கதைக்குனு இருக்குற த்ரெட்ல அனவுன்ஸ் பண்ணிடு பாரதி… நம்ம ரீடர்ஸ் அங்க ரேட்டிங் குடுப்பாங்க” என்று நினைவுறுத்தவும் கல்பனா தவறவில்லை.
எழுத்துலகம் பற்றிய ஒவ்வொரு விசயத்தையும் சொல்லித் தந்த கல்பனாவின் பேச்சை பாரதி தட்டாமல் கேட்டுக்கொண்டாள். அதன் பலனை இரு மாதங்கள் கழித்து தான் தெரிந்துகொண்டாள்.


ஆம்! அமேசான் கிண்டிலில் இருந்து முதல் முறையாகத் தனது வங்கிக் கணக்கில் ஏறிய ராயல்டி தொகையை அமேசான் கணக்கில் பார்த்துப் பிரமித்தாள் பாரதி.


அவளது கதைகளை அமேசானில் விரும்பிப் படிக்கிறார்கள் என்பதற்கு சான்று அந்தத் தொகை. தள அரசியலால் நொந்து போயிருந்த அந்தச் சிறுபெண் அமேசான் வாசகர்களிடம் அத்தகைய அரசியல் இல்லையென எண்ணிக் குதூகலித்தாள்.


இதுவரை வீட்டில் யாருக்கும் அவள் கதை எழுதுவது பற்றி தெரியாது. முதல் ராயல்டி தொகை அனைத்து மார்க்கெட் ப்ளேஸ்களிலும் சேர்த்து பதினைந்தாயிரம் ரூபாய் வந்திருந்தது.


சும்மா ஒன்றும் இந்தத் தொகை கிடைத்து விடவில்லையே!


கல்லூரி காலத்தில் கிடைத்த மடிக்கணினியில் முதுகு ஒடியயா ரும் கவனிக்கிறார்களா என்று பதறி பதறி தட்டச்சு செய்த கதையாயிற்றே! உழைப்பில் பலனைப் பார்க்கும்போது யாருக்குத்தான் மகிழ்ச்சி வராது!
பாரதியும் மகிழ்ந்தாள்! தான் எழுதுவது பற்றி வீட்டில் சொல்லலாம் என முடிவும் செய்தாள்.


கல்பனாவிடம் அதைச் சொன்னபோது அவளும் பாரதியின் முடிவே சரியென்றாள்.


“உன் திறமைய கேள்விப்பட்டு உன்னோட பேரண்ட்ஸ் சந்தோசப்படுவாங்கடி… இந்த ராயல்டிய உன்னோட முதல் மாச சேலரினு நினைச்சுக்கச் சொல்லு”


“அப்ப மாசமாசம் இப்பிடி ராயல்டி வரணும்னா ஒவ்வொரு மாசமும் நான் கதை எழுதி அங்க போடாலாம்ல?”


பாரதி கண்களில் ஆர்வம் மின்னக் கேட்டாள்.


“ஆப்வியஸ்லி! நீ கதைய எழுதி முதல்ல அமேசான்ல போட்டுட்டு அப்புறம் சைட்ல ரீரன் கூட பண்ணலாம்… அப்பிடி செஞ்சா இதை விட அதிகமா ராயல்டி உனக்குக் கிடைக்கும்… அட்மின் அக்கா அதுக்கு ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்றாள் கல்பனா.


தனது மூன்றாவது கதையை அமேசானில் நேரடியாகப் பதிவிடும் எண்ணத்தோடும், பெற்றோரிடம் தனது நாவலாசிரியை அவதாரத்தைப் பற்றியும், அமேசான் வருமானத்தைப் பற்றியும் கூறும் ஆசையோடும் வீட்டுக்கு வந்தவள் பக்கத்து வீட்டுப்பெண்மணி அவளது தந்தையை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகச் சொன்னதும் நொறுங்கிப்போனாள்.

11 thoughts on “கானல் பொய்கை 5”

  1. CRVS2797

    அச்சச்சோ..! இதுக்குத்தான் அதிர்ஷ்டம் கதவை தட்டும்போது, கூடவே துரதிர்ஷ்டமும் கையை கோர்த்துக்கிட்டு வருமாம்.

  2. Fellik

    ஓ பண தேவை அதிகம் ஆகும் போது வழி மாறிட்டாளோ பாவம் பாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *