Skip to content
Home » கானல் பொய்கை 6

கானல் பொய்கை 6

பகலவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து அன்றோடு இரு நாட்கள் கடந்திருந்தது. அவர் டவுன் மார்க்கெட்டிலிருக்கும் அரிசி மண்டியில் பொறுப்பாளாராக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.

வருகிற சம்பளத்தில் வீட்டு வாடகை, இதர செலவுகள், மளிகை என அனைத்துமே சரியாய் போய்விடும். கூடவே பெண்பிள்ளையைப் பெற்றிருக்கிறாரே!

எனவே நகைச்சீட்டு, வங்கி சேமிப்புக்கு எனப் பெருமளவு பணம் ஒதுக்கிவிடுவார் பகலவன். அதனால் தானோ என்னவோ பெண் திருமணத்திற்கு என சேர்த்து வைத்த பணத்தில் வைத்தியம் பார்த்துகொள்ள மறுத்துவிட்டார்.

மனோகரி பாளையங்கோட்டை மார்க்கெட்டிலிருக்கும் முறுக்கு வியாபாரம் செய்யும் கடையில் முறுக்கு சுற்றும் வேலை பார்ப்பவர். கணவரின் சிகிச்சைக்காக முதலாளியிடம் கடன் வாங்கியிருந்தார்.

சிகிச்சைக்கு ஆன செலவில் அதன் பங்கு சொற்பமே. மிச்சமீதி பணத்திற்கு சொந்தக்காரர்களிடம் கடன் வாங்கினார் மனோகரி.

இரத்த அழுத்தம் தாறுமாறாக உயர்ந்து உயிருக்கே ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் பகலவன்.

சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால் முடக்குவாதத்தில் அவரது கால்கள் முடங்கிவிட சக்கர நாற்காலி நிரந்தமாகிப்போனது அவருக்கு.

மனோகரி தனி மனுசியாகக் குடும்பத்தை நடத்த மூச்சு திணறிப்போனார்.

தான் எழுதிச் சம்பாதித்த பணத்தை வங்கிக்கணக்கிலிருந்து எடுத்துக் கொடுத்தபோது பாரதிக்குக் கொஞ்சம் பயம் தான். ஆனால் வீட்டின் நிலமை காரணமாக மனோகரி அவளைத் திட்டவில்லை.

“உன்னைப் படிக்க வச்சதுக்கான பலன் இது… இதுக்கு நான் ஏன் திட்டப்போறேன் கண்ணு” என்று சிகையை வருடிக்கொடுத்துவிட்டுக் கண்ணீரோடு ஒதுங்கிக்கொண்டார் மனோகரி.

என் முதல் சம்பாத்தியம் என் வீட்டுக்குப் பயன்படுகிறது. சோகத்திலும் சிறு சந்தோசம் பாரதிக்கு.

கல்லூரிக்குச் சென்றதும் கல்பனாவிடம் இதைப் பகிர்ந்துகொண்டாள். பாதி பேச்சில் உணர்ச்சிவசப்பட்டு அழுதேவிட்டாள்.

“அப்பாக்கு கை கால் வராம போனதும் நைட்டெல்லாம் தூங்காம அம்மா புலம்புனதை பாத்தப்ப எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? அந்தப் பதினஞ்சாயிரத்தை அம்மா கிட்ட குடுத்தப்ப அவ்ளோ சந்தோசம்டி கல்பு… இதுக்கு நீ மட்டும் தான் காரணம்… தேங்க்ஸ் கல்பு”

“என்னடி தேங்க்ஸ் அது இதுனு பெரிய வார்த்தை பேசுற? பல்லை உடைச்சிடுவேன் பாத்துக்க… உனக்கு எழுதுற திறமை இருக்கு… எழுதுன, அமேசான்ல சம்பாதிச்ச… இதுல என்னோட பங்கு ரொம்ப சின்னதுடி… இனிமே நீ விடாம எழுது… குடும்பத்துக்கு உதவியா இரு”

கல்பனாவின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டு தொடர்ந்து அமேசானில் கதை பதிவிட ஆரம்பித்தாள் பாரதி. அவளுக்குக் கிடைத்த அமேசான் ராயல்டியை வைத்து பகலவனுக்கு பிசியோதெரபிக்கு ஏற்பாடு செய்திருந்தார் மனோகரி.

இந்நிலையில்தான் ஒருநாள் மனோகரியின் உறவுக்காரர் ஒருவர் பகலவனுக்காக வாங்கிய கடனுக்கு வட்டி தரவில்லை என்று வீட்டு வாசலில் நின்று திட்டித் தீர்த்தார்.

“கடன் வாங்குறப்ப இனிச்சுது… இப்ப வட்டி கட்ட கசக்குதோ? இதுக்குத் தான் சொந்தக்காரங்களுக்குக் கடன் குடுக்காதிங்கனு என் பொண்டாட்டி தலைதலையா அடிச்சிக்கிட்டா… பாவம், பகல்வன் போய் சேர்ந்துட்டா பொட்டப்புள்ளைய வச்சு நீ கஷ்டப்படுவனு இரக்கப்பட்டு பணம் குடுத்தேன்… உன் மேல பரிதாபப்பட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்”

அவர் போட்ட கூப்பாட்டில் மொத்த தெருவும் ஒன்று கூடிவிட்டது.

மனோகரி கூனிக்குறுகி நின்று கண்ணீர் வடித்தார்.

“முறுக்கு சுடப்போன இடத்துல கையில எண்ணை கொட்டிருச்சுண்ணே… நான் வேலைக்குப் போய் பத்து நாளாகுது… எப்பிடியாவது அடுத்த மாசம் உங்க வட்டிய கட்டிடுறேன்”

ஊரார் பார்க்கிறார்களே என்ற அவமானம் பிடுங்கித் தின்றது மனோகரியை.

இவ்வளவையும் வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பாரதியின் மனம் தங்கள் குடும்பத்தின் நிலையை எண்ணி ஊமைக்கண்ணீர் வடித்தது.

இங்கே பணம் தான் உறவுகளைக் கூட தீர்மானிக்கிறது. வாங்கிய பணத்தை இவர் முகத்தில் விசிறியடிக்க வேண்டுமென்ற வெறி பிறந்தது பாரதிக்கு.

அமேசானில் எவ்வளவு எழுதினாலும் பதினைந்து அல்லது இருபதாயிரத்தைத் தாண்டி ராயல்டி வருவதில்லை. கல்லூரிப்படிப்பு முடிந்தாலாவது ஏதாவது பள்ளியில் தற்காலிக ஆங்கில ஆசிரியை பணிக்குப் போகலாம். படிப்பும் அந்தரத்தில் நிற்கிறது.

எப்போதும் தனக்கு வழிகாட்டும் கல்பனாவிடமே போய் நின்றாள் அவள்.

கல்பனாவுக்குத் தோழியின் நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது.

கொஞ்சம் தயங்கியவள் தனது மொபைலில் அமேசான் செயலியை எடுத்துக் காட்டினாள். அதில் ‘பெஸ்ட் செல்லர்’ நாவலாக அடுத்தடுத்து வந்திருந்த நாவல்களைக் காட்டினாள்.

சுசரிதா என்ற பெயரில் எழுதப்பட்ட நாவல்கள் அடுத்தடுத்து பெஸ்ட் செல்லர்களில் இருந்தன. மாதம் முழுவதும் முதல் ஐம்பது இடங்களில் அந்த எழுத்தாளரின் நாவல் இடம்பெறுவது வழக்கம்.

அதைக் காட்டியதும் அனிச்சையாகப் பாரதியின் முகம் அஷ்டகோணலானது.

“என்னடி மூஞ்சி வடக்கு பக்கம் சைடு வாங்குது?”

“இதுல்லாம் ‘அந்த’ மாதிரி கதைடி”

கல்பனா இடையில் கையூன்றி அவளை முறைத்தாள்.

“அது என்ன அந்த மாதிரினு அருவருப்பா சொல்லுற? எக்ஸ்ட்ரீம் ரொமான்ஸ் கதை… அவ்ளோ தான்” என்றாள் அவள் சாதாரணமாக.

“சீச்சீ” என மீண்டும் அருவருப்பு பாரதியின் முகத்தில்.

“இங்க பாரு, ரொம்ப சீன் போடாத… இது எல்லாம் பதினெட்டு வயசுக்கு மேல உள்ளவங்க படிக்குற கதை தான்… நீயும் நானும் பதினெட்டை க்ராஸ் பண்ணி ரெண்டு வருசம் ஆகுது… நம்ம இந்தக் கதைய படிக்கலாம்.. இந்த மாதிரி எழுதவும் செய்யலாம்… சொல்லப்போனா இப்பிடி எழுதுனா அமேசான்ல நல்ல ராயல்டி வரும்… யோசிச்சுப் பாரு… எழுதுறியா?”

பாரதி ஒரு நொடி தடுமாறிப்போனாள். அவளும் காதல் கதைகள் எழுதுகிறாள் தான். ஆனால் அதில் ரொமான்சுக்கு என ஒரு வரையறையைத் தீர்மானித்திருந்தாள். இந்த எழுத்தாளர் சுசரிதாவும் ஒரு தளத்தின் அட்மினே. அவரது தளத்தின் பெயர் வானவில் நாவல்கள். எழுதும் கதைகள் காதலோடு காமத்தையும் இணைத்து எழுதப்படுபவை. ஒருவேளை அதை அழகியலோடு சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாமோ என்னமோ!

அனைத்தும் கட்டிலறை பாடம் பற்றிய ‘லைவ் டெமான்ஸ்ட்ரேசன்களாக’ எழுதப்பட்டதால் பாரதியால் அதை ரசிக்க முடியவில்லை. ஒருவித ஒவ்வாமை உணர்வும், குமட்டலும் வந்துவிடும் அந்தக் கதைகளைப் படித்துவிட்டால். ஆனால் கல்பனாவோ அப்படிப்பட்ட கதைகளை எழுதினால் நன்றாக அமேசானில் சம்பாதிக்கலாம் என்கிறாள். இது என்ன பாரதிக்கு வந்த சோதனை?

“இந்த ரைட்டரை ஃபேஸ்புக்ல எல்லாரும் கழுவி ஊத்துவாங்கடி… நான் இப்பிடி எழுதுனா என்னையும் அசிங்கமா தானே பேசுவாங்க?”

“அசிங்கமா பேசுற யாரும் உங்கம்மா வாங்குன கடனைக் கட்டப்போறதில்ல பாரதி”

நிதர்சனம் கல்பனாவின் உருவத்தில் வந்து பாரதியின் கன்னத்தில் அறைந்தது.

சில நொடிகள் யோசனை சில நிமிடங்களாக நீண்டது.

காலையில் வீட்டின் முன்னே நின்று ஊரே பார்க்கும்படி திட்டித் தீர்த்த உறவினர் நினைவுக்கு வந்தார். பாரதி ஏதோ தீர்மானித்தவளாக “நான் எழுதுறேன் கல்பு” என்றாள்.

அடுத்த நொடியே “நான் அந்த ரொமான்ஸ், பெட்ரூம் சீன்ஸ்… அதுல்லாம் எனக்கு எழுத… எப்பிடி எழுதுவேன்?” என நாசி விடைக்க திகைத்தாள்.

கல்பனா அவள் முன்னே தனது கரத்தை நீட்டினாள்.

“எனக்கு ப்ராமிஸ் பண்ணு”

“எதுக்குடி?” சத்தியமெல்லாம் ஏன் கேட்கிறாள் என்று புரியவில்லை பாரதிக்கு.

“முதல்ல பண்ணு”

பாரதியும் சத்தியம் செய்தாள். பின்னர் “இப்பவாச்சும் சொல்லுடி” என்றாள்.

“ரைட்டர் சுசரிதாவோட சைட்ல எழுதப்போறதை நீ யார் கிட்டவும் சொல்லக்கூடாது… அதுக்குத் தான் இந்த ப்ராமிஸ்”

“அவங்க சைட்ல அவங்க மட்டும் தானே எழுதுறாங்க… வேற யாரோட கதையும் இருக்காதே?”

“ஏய் கள்ளி! அப்ப நீ அங்க போய் பாத்திருக்க” என கல்பனா சொல்லவும்

“ஒரு காலத்துல தமிழ் நாவல்ஸ் ஆன்லைன்ல எந்தெந்த சைட்ல கிடைக்கும்னு தேடுனப்ப அந்த சைட்டும் வந்துச்சு கல்பு… அப்ப பாத்தேன்” என்றாள் பாரதி.

“எல்லாம் சொல்லுறேன்… இன்னைக்கு நைட் ரைட்டர் சுசரிதா கிட்ட பேசிட்டு அவங்க ஓ.கே சொன்னாங்கனா அவங்களோட வாட்சப் நம்பரைத் தர்றேன்… நீ அவங்க கிட்ட டேரக்டா பேசு… உன்னை அவங்க சைட்ல எழுத சேர்த்துக்கிட்டாங்கனா வாட்சப் குரூப்ல சேர்த்துப்பாங்க… அப்பிடி சேர்த்துக்கலனா நீ இன்னொரு பென் நேம்ல அமேசான்ல எக்ஸ்ட்ரீம் ரொமான்ஸ் கதைகளை எழுது… ஒரு வருசத்துல உன்னால கடனை அடைச்சுட முடியும்டி”

“என்னவோ சொல்லுற… இதெல்லாம் பாசிபிளானு தெரியல… நான் எக்ஸ்ட்ரீம் ரொமான்ஸ் எழுதுனாலும் தொடர்ந்து எழுதமாட்டேன்… எனக்கு எப்ப நல்ல வேலை கிடைக்குதோ அப்ப இதை நிறுத்திடுவேன்” என்ற தீர்மானத்தோடு எழுத்தாளர் சுசரிதாவோடு பேசும் தருணத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தாள் பாரதி.

இரவே கல்பனா எழுத்தாளர் சுசரிதாவின் எண்ணை வாட்சப்பில் அனுப்பி வைத்தாள்.

பாரதியும் தயக்கத்தோடு அவரது எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள். அழைப்பும் ஏற்கப்பட்டது. ஒரு நடுத்தரவயது பெண்மணியின் குரல் இனிமையாக ஒலித்தது.

“சொல்லுங்க வர்ணிகா… ஹோப் யூ டூயிங் குட்”

“யெஸ் மேம்… அது …”

பாரதி தனது நிலமையைக் கூறவும் அவரும் பதிலளித்தார்.

“எழுத்தை கலையா பாத்த காலமெல்லாம் மலையேறிப் போயாச்சு… இப்ப அது காசு கொட்டுற பிசினஸ்மா… ஒரு காலத்துல எழுத்தாளர்னா ஜோல்னாபை, கண்ணாடி, சீப்புபடாத தலைனு ஒரு பிம்பம் சமுதாயத்துல இருந்துச்சுனு சொல்லுவாங்க… இப்படி ஜிட்டலைசேஷனால நமக்கு நிறைய சோர்ச் ஆப் ரெவன்யூஸ் இருக்கு… ஆடியோ நாவல், அமேசான் கிண்டில், அது போக நீ சொந்தமா சைட் நடத்துனா ஆட்சென்ஸ்ல கிடைக்குற வருமானம்னு புத்திசாலித்தனமான எழுத்தாளர்கள் அவங்களுக்கான அடையாளத்தோட பணத்தையும் சம்பாதிக்கத்தான் செய்யுறாங்க.. நீ புத்திசாலியா லூசரானு நீயே முடிவு பண்ணிக்க”

பாரதி ஒரு நொடி தயங்கினாள். தொடர்ந்து அவர் சொன்ன செய்தியில் தான் அவள் திகைத்துப்போனாள்.

“சுசரிதாங்கிறது தனியொரு ஆள் இல்லம்மா… கிட்டத்தட்ட பதினைஞ்சு பேர் சேர்ந்து சுசரிதாங்கிற புனைப்பெயர்ல எழுதிட்டிருக்கோம்… எங்களுக்குனு எழுத்துலகத்துல இருக்குற அடையாளத்தை இந்தப் பேருக்குக் கீழ மறைச்சு எழுதுறோம்… இங்கிலீஸ் நாவல்கள் போல தமிழ்ல ரொமான்ஸ் நாவல்களை எழுத முயற்சி பண்ணிட்டிருக்கோம்… இதுல உன்னைச் சேர்த்துக்குறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல… ஃபேஸ்புக்ல வர்ற வசைமொழிகள், மாரல் போலிசிங் போஸ்டுகளை தைரியமா கடந்துவரமுடியும்னு உனக்கு நம்பிக்கை இருந்துச்சுனா நீயும் எங்க கூட சேர்ந்துக்கலாம்… உன் ஃப்ரெண்ட் கல்பனா மாதிரி சுசரிதாங்கிற பேருக்குக் கீழ நீயும் கதை எழுதலாம்.. என்ன சொல்லுற?”

“எனக்கு எழுதுறதுல தயக்கமில்ல மேடம்… ஆனா இப்பிடி எழுத எனக்கு வராது… வ…” என்றவள்  ‘வல்கர்’  என்றவா ர்த்தையை விழுங்கிக்கொண்டுஅ தற்கு பதிலாக  “எக்ஸ்ட்ரீம் ரொமான்ஸ் எனக்கு எழுதத் தெரியாது”  என்றாள்.

அதை கேட்டுச் சிரித்தார் வானவில் தளத்தின் அட்மின்.

“நீ நார்மல் போர்சன் மட்டும் எழுதுடா… ரொமான்ஸ் போர்சன் எழுத தனியா ஒரு ரைட்டர் இருக்காங்க… அவங்க ரொமான்ஸை மட்டும் எழுதி குடுத்துடுவாங்க… அதனால நீ சங்கடப்படவேண்டாம்”

“ஆனா என் கதைய நானே முழுசா எழுதுனா தான மேம் திருப்தி இருக்கும்?”

“உனக்கு அந்தத் திருப்தி வேணுமா?  இல்ல எழுதி நிறைய காசு சம்பாதிக்கணுமா? நீ தான் முடிவு பண்ணணும் வர்ணிகா… என் கூட ரொம்ப வருசம் பயணிச்சவங்களை மட்டும்தான் நான் இந்த சைட்ல ‘சுசரிதா’ங்கிற புனைப்பெயருல எழுதுறதுக்காக சேர்த்திருக்கேன்… நீயும் கல்பனாவும் மட்டும்தான் புது ஆளுங்க…  கல்பனா நான் சொன்ன ரூல்சை இப்ப வரைக்கும் ஃபாலோ பண்ணி நல்லா சம்பாதிக்குறா… எங்க கூட சேருறதும் சேராததும் உன் விருப்பம்… ஆனா இங்க நம்ம பேசுன எதுவும் வெளிய யார் காதுக்கும் போகக்கூடாதுடா… உனக்கு ஓ.கேனா என்னை இதே நம்பர்ல கான்டாக்ட் பண்ணலாம்…  பைடா”

அழைப்பு துண்டிக்கப்பட்டது. பாரதி இருதலைக்கொள்ளி எறும்பானாள்.

அவளுக்கு எழுதப் பிடிக்கும். ஆனால்  ‘எப்படியும்’ எழுதி பெயர் புகழைச் சம்பாதிக்கலாம் எனும் ரகமல்ல அவள். இப்போதைய சூழலில் இதை விட்டால் வேறு வழியில்லையே!

எதை எழுதினால் காசு வரும் என்று யோசிக்கும் நிலையில் இருந்தவள் வானவில் தளமும், சுசரிதா என்ற அடையாளமும் அவளைக் கொண்டு போய் நிறுத்தப்போகும் இக்கட்டுநிலையைப் பற்றி அறியாமல் அந்தத் தளத்தில் எழுத முடிவெடுத்தாள் பாரதி.

10 thoughts on “கானல் பொய்கை 6”

  1. CRVS2797

    அதாவது வாலன்ட்ரியா போய் வான்டட் ஆகுறான்னு சொல்றிங்க.. அப்படித்
    தானே …!!!

  2. Fellik

    விதி வலியது. அவளுக்கான பிரச்சினையை அவளாவே தேடிகிட்டா

  3. Avatar

    Oo ithula intha madri ellam kuda irukka
    Intha site la ezhutha start panna aprm than problem varudha
    Romba extreme a ezhudarathala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *