Skip to content
Home » கானல் பொய்கை 7

கானல் பொய்கை 7

சுசரிதாவின் வானவில் தளத்தில் எழுத ஆரம்பித்திருந்தாள் பாரதி. அதுவும் சுசரிதா என்ற புனைப்பெயரிலேயே. அவளோடு சேர்ந்து கிட்டத்தட்ட பதினான்கு எழுத்தாளர்கள் அதே புனைப்பெயரில் வெவ்வேறு கதைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள்.

சிலருக்குப் பணத்தேவை, சிலருக்கோ இல்லத்தரசி தானே என்று தன்னைக் குறைத்து எடைபோடும் உறவுகளுக்கு நானும் சம்பாதிக்கிறேன், எனக்கும் பெயர் இருக்கிறது பாருங்கள் எனக் காட்டும் வெறி, ஆனால் பலருக்கு இத்தகைய அதீத ரொமான்ஸ் கதைகள் மூலம் இலகுவாகப் பிரபலமாகி நல்ல பணம் ஈட்டும் எண்ணம் மட்டுமே பிரதானமாக இருந்தது.

அவர்கள் அனைவருமே தங்களது சொந்தப்பெயரில் நல்லவிதமான குடும்பக்கதைகள் எழுதி வாசகர்கள் மத்தியில் நல்லப் பெயருடன் இருப்பவர்களே! பின் ஏன் இந்த புனைப்பெயரின் கீழ் மறைந்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

கல்பனாவும் அப்படி எழுதுபவர்களில் ஒருத்தியே! அவளிடம் பாரதி இது குறித்துக் கேட்ட போதெல்லாம் மழுப்பலாகப் பதில் சொல்லிவிட்டுக் கடந்துவிடுவாள்.

“எனக்குக் குடும்ப கஷ்டம்… நான் இந்தக் கதை எழுதி அமேசான், சைட்ல காசு சம்பாதிக்கணும்னு நினைக்குறேன்… உனக்கு என்னடி?”

“ப்ச்… ஏன் இதையே அடிக்கடி கேக்குற?” என சலிப்போடு கடப்பவள் ஒருநாள் காரணத்தைச் சொல்லியும் விட்டாள்.

“இதை வச்சு என் கேரக்டரை ஜட்ஜ் பண்ணிடாத பாரதி… எனக்கு இப்பிடி எழுத பிடிச்சிருக்கு… சும்மா பூவும் பூவும் உரசுற மாதிரி ரொமான்ஸ் சீன் வச்ச தமிழ் சினிமா இப்ப ப்ரெஞ்ச் கிஸ்சை ஸ்க்ரீன்ல காட்டுற அளவுக்கு முன்னேறியாச்சு.. ஆனா நாவல்கள்ல மட்டும் இனிய இல்லறம் மலர்ந்ததோட ரொமான்ஸ் சீனுக்கு ஃபுல்ஸ்டாப் வச்சிடுறது இன்னும் மாறல… எனக்கு அதுல இருந்து ஒரு சேஞ்சா தெரிஞ்சது தான் சுசரிதாவோட கதை… ஒன்னு மட்டும் புரிஞ்சிக்க லவ்வும் லஸ்டும் ஒன்னும் கேவலமானது இல்ல… வாழ்க்கைல அதை கொண்டாடுற நம்ம எழுத்துனு வர்றப்ப மட்டும் ஏன் அருவருப்பா பாக்கணும்? எனக்கு என் பேரைச் சொல்லி எக்ஸ்ட்ரீம் ரொமான்ஸ் கதை எழுத பயம்… ஏன்னா அப்பிடி எழுதுனா என்னோட கேரக்டரை மோசமா பேசுவாங்க… என் பேரண்ட்சுக்குத் தெரிஞ்சா என்னை எழுதவிடாம பண்ணிடுவாங்க… அதனால இந்த நேமுக்குப் பின்னாடி மறைஞ்சு இருந்து எழுதுறேன்… இப்ப சொல்லுறேன் கேட்டுக்க, என் கதைக்கு எக்ஸ்ட்ரீம் ரொமான்ஸ் சீன் எழுதுறப்ப ஐ என்ஜாய்… அதே போல எக்ஸ்ட்ரீம் ரொமான்ஸ் கதைகள் படிக்கிறப்ப எனக்குள்ள ஒரு சந்தோசம்… இது தான் இந்த சுசரிதா புனைப்பெயருல நான் எழுதக் காரணம்… கூடவே இந்த மாதிரி கதைகளுக்கு அமேசான்ல வரவேற்பு இருக்கு… நல்ல காசு வர்றப்ப நான் ஏன்டி அதை விட்டுட்டு சாமியாரிணி மாதிரி எழுதணும்? சொல்லு”

கல்பனா என்னவோ அவளது பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொன்னாள். ஆனால் பாரதிக்கோ அதீத ரொமான்ஸ் என்ற பெயரில் காமத்தை கடை பரப்பும் கதைகளை எழுதுவது தவறில்லை என்று அவள் வாதிடுவதாகத் தோன்றிவிட்டது.

தன்னை விட வயதில் பெரியவர்கள் எழுதுகையில் தான் எழுதுவது மட்டும் எப்படி தவறாகும் என்று கல்பனா கேட்டது நியாயமாகத் தோன்றியது பாரதிக்கு.

எனவே பாரதி குற்றவுணர்ச்சி இல்லாமல் அதீத ரொமான்ஸ் கதைகளை எழுத ஆரம்பித்தாள். அவளது கதையில் ரொமான்ஸ் பகுதியை மட்டும் இன்னொரு எழுத்தாளர் எழுதிக்கொடுப்பார். ஒருமுறை எழுத்துப்பிழை சரி பார்த்து அவரே தளத்தில் பதிவிட்டும் விடுவார்.

வாசகர்களின் பார்வைக்கோ சுசரிதா என்ற ஒரு எழுத்தாளரின் கதை என்றே அங்கிருக்கும் அத்தனை கதைகளும் தோன்றும். ஆனால் அந்தப் பெயரின் பின்னே ஒரு குழுவே வேலை செய்வதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.

“வாவ்! உங்க ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமா இருக்கு மேம்… ரொமான்ஸ்லாம் வேற லெவல்” என்பவர்களுக்கு ஒவ்வொரு கதையும் வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்டதென தெரியவா போகிறது!

எனவே வானவில் தளத்தில் அத்தியாத்திற்கு அத்தியாயம் படுக்கையறையையும் உடல் வேட்கையையும் மட்டுமே காட்டும் கதைகள் மிகுதியாகத் தொடங்கின.

பணம் அதிகம் வரவும் எழுதுபவர்களின் ஆர்வமும் அதிகரித்தது. அந்த இடத்தில் தான் பாரதி வழிதவறிய நிகழ்வும் நடந்தேறியது.

என்ன தான் பாரதி கதை எழுதினாலும் ரொமான்ஸ் பகுதியை அவளுக்கு எழுதி கொடுக்கும் பெண்ணுக்கும் அந்தக் கதையில் பங்கு இருப்பதால் அவளது கதைத்திரியிலுள்ள பார்வை மூலம் தளத்தில் வரும் வருமானத்தில் சரிபாதியை அப்பெண்மணிக்கும் கொடுத்துவிடுவார் தளத்தின் அட்மின். அவளால் எழுதப்பட்டு அமேசானில் பதிவிடப்படும் கதை வருமானத்திலும் பாதி அப்பெண்மணிக்குச் சென்றுவிடும்.

“நான் ரொமான்ஸ் எழுதுறதால தான் உன் கதைக்கு இவ்ளோ வரவேற்பு… நீயெல்லாம் நினைச்சாலும் என்னை மாதிரி உன்னால எழுத முடியாது” என அப்பெண்மணி வேறு போதாக்குறைக்கு அவளைச் சீண்டிவிட பாரதிக்கோ தனது உழைப்பின்(?) பலனை அப்பெண்மணியோடு பகிர்ந்துகொள்ள விருப்பமில்லை.

விளைவு அவள் கல்பனாவிடம் ஐடியா கொடு என்று வந்து நின்றாள். அதற்கு கல்பனாவும் உபாயம் சொன்னாள். அந்த உபாயம் தன்னை மீள முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்போவதை அறியாமல் பாரதியும் அதை கடைபிடிக்கத் தொடங்கினாள்.

“உன் கதைக்கு ரொமான்ஸ் போர்சன், லவ் மேக்கிங் சீன்சை நீயே எழுதுடி… நீ என்ன ஃபீடிங் பாட்டில் பேபியா? உனக்கும் உலகம் தெரியும் தானே? இந்த மாதிரி கதைகள் கொட்டிக் கிடக்கு… அதை படி… உனக்கு ஒரு அளவுக்கு லவ் மேக்கிங்கை எப்பிடி எழுதலாம்னு ஐடியா கிடைக்கும்… அதுவும் இல்லனா இருக்கவே இருக்கு வீடியோஸ்” கல்பனா முதலில் சொன்னதும் பாரதி பதறிப்போனாள்.

“ஐயோ சீச்சீ! இதுல்லாம் தப்பு… அந்த மாதிரி வீடியோலாம் விளம்பரத்துல வந்தா கூட நான் அருவருப்பு பட்டு லேப்டாப்பைக் குளோஸ் பண்ணிடுவேன்… நான் எப்பிடி அதை பாப்பேன்?” என முகம் சுளித்தாள்.

“நீ ஏன் இவ்ளோ யோசிக்குற? இதெல்லாம் பாத்தா மோசமானவங்களா? அப்ப நம்ம ஜெனரேசன் பசங்க எல்லாரும் மோசமானவங்க தான்… இந்த வீடியோ பாக்காம ஒரு பையன் கூட இருக்கமாட்டான்… கதைக்காக தான் நானே பாக்குறேன்… நீ இப்பிடிலாம் பேசுனா எழுதுறது கஷ்டம்டி… அப்புறம் உன் இஷ்டம்”

பிடிக்காத ஒன்றை தினந்தோறும் செய்யும்போது அது நமது அன்றாட பழக்கமாகிவிடும். அதை நம்மால் விடவே முடியாது. அப்படி தான் ஆரம்பித்தது பாரதியின் பாலியல் ஆபாச காணொளிகளைப் பார்க்கும் பழக்கம்.

முதலில் அருவருப்பாகவும், பின்னர் பழக்கமாகவும் மாறிவிட்டது. விளைவு அவளாலும் கட்டிலறை காட்சிகளை வரைமுறையின்றி கற்பனை கலந்து எழுத முடிந்தது. அவளது கதைத்திரியில் கிடைக்கும் முழு வருமானமும், அவளது அமேசான் கதையின் முழு ராயல்டியும் அவளுக்கு மட்டுமே!

மகள் கதை எழுதுகிறாள் என்ற நம்பிக்கையில் அவள் கொடுத்த பணத்தை வைத்து செமஸ்டரின் முடிவில் சொந்தக்காரர்களிடம் வாங்கிய கடனை அடைத்துவிட்டார் மனோகரி.

பின்னர் மாதாமாதம் வரும் பணத்தை அவளது திருமணத்திற்காக சேமிக்கத் தொடங்கினார்.

காதல் பாடல்கள் பார்த்தாலே தவறு என்று குதிக்கும் மனோகரிக்கு மகள் தன் கண் மறைவாக காம எண்ணங்களை தூண்டும் கதைகளை எழுதி தான் பணம் ஈட்டுகிறாள் என்பது மட்டும் தெரியவந்தால் கட்டாயம் மனம் உடைந்து போவார்.

ஏனெனில் நமது நாட்டில் கலாச்சாரம் மற்றும் ஒழுக்க விழுமியங்களைக் கட்டிக்காப்பாற்றுவது பெண்பிள்ளைகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட கடமை. கூடவே பாலியல் சம்பந்தப்பட்ட பேச்சுகள், பாலியல் கல்வியே இங்கே அருவருப்பாக பார்க்கப்படுகையில் காமம் என்பது எல்லாம் மறைபொருளாக அறியா உணர்வாக ஒரு பெண்ணால் பார்க்கப்படும் போது மட்டுமே அவள் ஒழுக்கமான நல்ல குடும்பத்துப்பெண் என்று சொல்கிறது சமுதாயம்.

கலாச்சாரம் பற்றி மேலைநாட்டினருக்கே வகுப்பெடுக்கும் இந்தியாவில் தான் பாலியல் வறட்சியும் அதிகம். பாலியல் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இதில் பாலின வேறுபாடு எல்லாம் கிடையாது என்பது தான் நிதர்சனம்.

இதெல்லாம் பாரதி, தான் எழுதும் கதைகளுக்காகத் தனக்குத் தானே சொல்லிக்கொண்ட சமாளிப்புகள். அவளுக்குத் தெரியாத ஒன்று என்னவென்றால் அவள் பார்க்கிற ஆபாச காணொளிகள் அவளுக்குள் உண்டாக்கும் மனரீதியான உடல்ரீதியான வேறுபாடுகள் தான்.

இந்த மாதிரி காணோளிகள், கதைகளைத் தொடர்ந்து படிப்பவர்களில் சிலருக்கு அதீத பாலியல் உணர்வு தோன்றுவதுண்டு. அதைத் தணித்துக்கொள்ள மீண்டும் மீண்டும் அவற்றிலேயே மூழ்குவார்கள். அவர்களால் அந்த மாதிரி காணொளிகளை பார்க்க முடியாத சூழல், கதைகளைப் படிக்க முடியாத சூழல் உருவாகுமென்றால் ஒருவித மன அழுத்தம் அவர்களுக்குள் உருவாகும். அனைவருக்கும் அந்த மன அழுத்தத்தைக் கையாளும் பக்குவம் இருக்காது.

பாலியல் உணர்வுகள் இயல்பானவை. ஆனால் அவை வெளிப்புறக்காரணிகளால் தூண்டப்படுமாயின் கட்டுப்பாடு என்பது இல்லாமல் போய், அது ஒரு மனநோயாக மாறிவிடும். கிட்டத்தட்ட மது போதைக்கு அடிமையானவர்கள் எப்படியோ அதே போல தான் இவர்களும்.

நமது உடலில் உள்ள சுரப்பிகளான ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி மற்றும் அட்ரினல் சுரப்பிகள் தான் மனிதர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தைக் குறைத்து உடலின் உணர்வுகளைச் சீராக்குகின்றன. ஒரு மனிதன் தொடர்ந்து ஆபாசமான காணொளிகள் மற்றும் கதைகளில் மூழ்குகிற போது அவனுக்குள் உண்டாகும் மன அழுத்தம் இந்தச் சுரப்பிகளின் செயல்பாட்டைப் பாதிக்கிறது.

ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி, கொனாடல் சுரப்பிகள் தான் பாலியல் உணர்வுகளைத் தூண்டுகிற ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இவற்றின் செயல்பாடுகள் மாறுவது ஒரு மனிதனுக்குள் அதீதமான பாலியல் உணர்வுகளைத் தூண்டும். இந்தத் தூண்டுதலுக்கான காரணி அவன் பார்க்கிற காணொளிகளும், கதைகளும் இன்ன பிற ஆபாச கண்டெண்டுகளும்.

விளைவு அவர்களது சிந்தனையில் பாலியல் உறவு பற்றிய எண்ணங்கள் மட்டுமே நிறைய ஆரம்பிக்கும். இது தீவிரமான மனப்பிறழ்வுக்குறைபாடான ‘கட்டாய பாலியல் நடத்தை கோளாறு எனப்படும் Compulsive Sexual Behaviour Disorder’க்கு வழிவகுக்கும்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் தாங்கள் பாதிக்கப்பட்டதே தெரியாது என்பது தான் பரிதாபம். பாலியல் கதைகளைப் படிப்பதும், காணொளிகளைக் காண்பதும் தங்களுக்குச் சந்தோசத்தைக் கொடுக்கிறது என்று நம்பி அவர்கள் தொடர்ந்து அதை செய்வார்கள்.

ஒரு கட்டத்தில் அவை இல்லை என்றால் அவர்களால் இயல்பாக இயங்க முடியாத நிலை உருவாகும். சின்ன சின்ன விசயங்கள் கூட அவர்களுக்குள் பாலியல் உணர்வுகளை தூண்டும். இம்மாதிரி சூழல்களில் தான் பாதிப்பின் தீவிரத்தை அவர்கள் உணர்வார்கள்.

அந்த மாதிரி உணர்வுகள் தோன்றும்போது அவர்களால் கதை படித்தோ காணொளி பார்த்தோ தங்களது உணர்வுகளைத் தணித்துக்கொள்ள முடியாத நிலையும் உருவாகும்.

அந்தச் சூழலில் அவர்களது சிந்தனை பாலியல் உணர்வைத் தாண்டி வேறு பக்கம் போயே ஆகவேண்டும் என்பதற்காக சிலர் மது போதையில் தங்களை மூழ்கடித்துக்கொள்வார்கள். சிலரோ தவறான உறவுகளில் சிக்கிக்ககொள்வார்கள்.

இன்னும் சிலரோ குற்றவுணர்ச்சி, தற்கொலை எண்ணத்தில் மாட்டிக்கொள்வார்கள்.

அப்படி மாட்டிக்கொண்டவர்களில் பாரதியும் ஒருத்தி. வீட்டின் நலனுக்காக எழுத ஆரம்பித்தவள் பின்னர் தனது மன இச்சைக்காக அதே வகை எழுத்துகளைத் தொடர்ந்ததன் விளைவு மெதுவாக ‘கட்டாய பாலியல் நடத்தை கோளாறு எனப்படும் Compulsive Sexual Behaviour Disorder’ எனும் மனரீதியான குறைபாட்டால் பாதிக்கப்பட்டாள்.

அவள் சுதாரிக்கும்போது மீள்வதற்கான வழி தெரியவில்லை. தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டு தனக்குள் எதிர்பாரா நேரத்தில் எழும் பாலியல் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவாள். இராட்சசத்தனமாக ஆட்டம் போடும் உணர்வுகள் அவள் உடலில் வலி வந்து விட்டால் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போய்விடும்.

மனோகரி கேட்டார் என்றால் “தெரியாம கதவு நிலைல இடிச்சிட்டேன்மா”, “பாத்திரம் கழுவுற இடத்துல பாசி இருந்ததைக் கவனிக்காம வழுக்கி விழுந்துட்டேன்மா”, “காய்கறி நறுக்குறப்ப அரிவாள்மனை விரல்ல வெட்டிருச்சுமா” என சொல்லி சமாளித்தாள்.

தனது இப்பாதிப்பைப் பற்றி அவள் கல்பனாவிடம் பேசியபோது பாரதியை விட அதிக குற்றவுணர்ச்சி கல்பனாவுக்கு உருவானது.

ஏனெனில் அம்மாதிரியான கதைகளை எழுத, படிக்க செய்தபோதும், கதைக்காக ஆபாச காணொளிகளைப் பார்த்த போதும் அவளுக்கு எந்த மனரீதியான பாதிப்பும் நேரவில்லை.

ஆனால் தோழிக்கு வழிகாட்டுகிறேன் என அவள் செய்த காரியம் அந்தத் தோழியைப் புதைக்குழியில் தள்ளிவிட்டதே என்ற குற்றவுணர்ச்சி கல்பனாவுக்கு.

“எனக்கு அந்த மாதிரி எதுவும் தோணலடி… உனக்கு மட்டும் ஏன்?…” என யோசித்தவள் “நம்ம டாக்டர் கிட்ட போகலாமா பாரதி?” என்று கண்ணீருடன் கேட்டாள் அவள்.

பாரதியோ முடியவே முடியாது என்றாள்.

“அந்த மாதிரி கதை எழுதுனேன்னு சொன்னா என்னை பத்தி அசிங்கமா நினைப்பாங்க… பார்ன் வீடியோ பாத்தவனு என் கேரக்டரை மோசமா பேசுவாங்க… நான் எந்த டாக்டரையும் பாக்கமாட்டேன் கல்பு… எனக்கு இதை யார் கிட்ட ஷேர் பண்ணணும்னு தெரியல… அம்மா கிட்ட சொன்னா..”

விசித்தபடி நிறுத்தினாள் பாரதி. பின்னர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

“ஆழம் தெரியாம காலை விடக்கூடாதுனு சொல்லுவாங்க… நான் காலை விட்டுட்டேன்… இனி இதோட விளைவுகளை நான் தானே ஃபேஸ் பண்ணியாகணும்”

அடுத்த செமஸ்டர் முழுவதும் பாரதிக்கு நரகமாகவே கழிந்தது. எழுத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டுப் படிப்பில் மூழ்க நினைத்தவளை அவ்வபோது குதறியெடுக்கும் அவளது மனபாதிப்பு.

பேனாவின் முனையால் உள்ளங்கையில் குத்திக்கொள்வது, ஒயிட்னர் போதையில் திளைப்பதென ஒரு பாதிப்பின் தீவிரத்தைக் குறைப்பதாக எண்ணிக்கொண்டு இன்னொருவிதமான மன அழுத்தத்திற்குள் நுழைந்தவளின் வாழ்க்கையில் அதிரடியாக நுழைந்தவன் பாலா.

தந்தையின் முதலாளியுடைய மைந்தன். அவனது அன்னையும் தந்தையும் பொருளாதார ரீதியான வேறுபாடைக் கருத்தில் கொள்ளாது பாரதியின் நற்குணத்திற்காகவே அவளைப் பெண் கேட்டார்கள். அப்போது அவள் எத்தகைய குற்றவுணர்ச்சிக்கு ஆளானாள் என்பதை பாரதி மட்டுமே அறிவாள்.

ஆனால் பாலாவை எப்போது நேரில் பார்த்தாளோ அப்போதே தனக்குள் பேயாட்டம் போடும் உணர்வுகள் அடங்கி ஒரு இதம் பரவுவதை உணர்ந்தாள்.

இத்திருமணம் என்னை எனது பாதிப்பிலிருந்து வெளிக்கொண்டுவருமென தீர்க்கமாக நம்பினாள்.

திருமணப்பேச்சு வெற்றிகரமாக முடிந்து மொபைல் எண்ணைப் பரிமாறிக்கொண்ட இருவருக்கும் பேசிக்கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருந்தன. பாலாவின் பேச்சும், அவனது அன்பும் கொடுத்த இதத்தால் பாரதியின் மனரீதியான பாதிப்புகள் அடங்கிப்போயின. தனக்குள் வந்த பாதிப்பு போய்விட்டதாக எண்ணியே அவள் திருமணவுறவுக்குள் நுழைந்தாள்.

அழகான திருமணவுறவை அர்த்தமுள்ளதாக்கும் தாம்பத்தியம் எத்துணை பவித்திரமானது என்பதை அவளுக்கு அனுபவப்பூர்வமாக உணர்த்தியவன் பாலா. ஆணும் பெண்ணும் மனதளவில் காதலில் திளைத்து உடலளவில் இணையும்போது உண்டாகும் உணர்வுகளின் தாத்பரியத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தாள். அமைதியான நீரோடை கடலில் கலப்பது போல இயல்பாக அவ்வுணர்வுகள் எழும்போது உண்டாகும் சிலிர்ப்பில் இலயிக்க ஆரம்பித்தாள்.

பாலியல் ரீதியான கதைகளை எழுதுகையில், படிக்கையில், காணொளிகளைக் காணும்போது கிளர்ந்த அருவருப்பான சிந்தனைகள், அதை பணமாக்கி இது தான் புத்திச்சாலித்தனம் என குதூகலித்த பொழுதுகள் எல்லாம் எத்துணை அபத்தமானவை என்பது புரிய ஆரம்பித்தது பாரதிக்கு.

அந்தப் புரிதல் ஆரம்பித்தபோது தான் அவளுக்குள் மாபெரும் போராட்டம் ஆரம்பித்தது. தன்னை அப்பாவியென கருதும் கணவனுக்கு இதெல்லாம் தெரியவந்தால் என்னவாகுமென யோசிக்க ஆரம்பித்தாள். குற்றவுணர்ச்சி எழுந்தது அவளுக்குள். தான் பாலாவிற்கு தகுதியானவள் இல்லையென நினைத்தாள். மன அழுத்தத்தில் ஆழ்ந்தாள். உடலின் சுரப்பிகள் தாறுமாறாக இயங்க ஆரம்பித்த அந்த தருணத்தில் தான் உறங்கிக்கொண்டிருந்த ‘கட்டாய பாலியல் நடத்தை கோளாறு எனப்படும் Compulsive Sexual Behaviour Disorder’ மீண்டும் விழித்துக்கொண்டு தற்கொலை முடிவுக்கு அவளைத் தள்ளியது.

தனக்கு இருப்பது என்ன மாதிரி பாதிப்பு என்று அவளுக்குத் தெரியாது. அதன் பெயர் கூட அறியாதவள் பாரதி. பாலா என்ற ஒருவனுக்காக அதை அறியவும் குணப்படுத்தவும் முற்பட்டாள். தன்னைப் பற்றி மருத்துவர் தவறாக எண்ணுவாரே என்ற எண்ணத்தை விடுத்து தைரியமாக அவரிடம் தன்னைப் பற்றிய இரகசியத்தைச் சொல்லியும் முடித்தாள்.

தலையைக் குனிந்தபடி அனைத்தையும் பிரியம்வதாவிடம் சொன்ன பிறகு “உங்களுக்கு என்னைப் பாக்க அருவருப்பா இருக்குல்ல டாக்டர்?” என்று அழுகுரலில் கேட்டாள் பாரதி.

பிரியம்வதாவோ “இல்ல! முட்டாள்கள் அருவருப்புக்கு அப்பாற்பட்டவங்க பாரதி” என்றார் அமைதியாக.

9 thoughts on “கானல் பொய்கை 7”

  1. Kalidevi

    Nee panathu thappu tha Bharathi but itha nee bala kitta sollala nalum ipo doctor kitta sollita avanga oru solution solluvanga kavala padatha

  2. CRVS2797

    உண்மை தான்..! டாக்டர்
    ப்ரியம்வதா சொல்வது. முட்டாள்கள் அருவறுப்புக்கு அப்பாற்பட்டவர்கள்.

  3. Fellik

    ஆண்களுக்கு சமமா பெண்களும் பாக்றாங்கனு சொல்றது ஆச்சரியமா அதிர்ச்சியா இருக்கு. சிலருக்கு ஜஸ்ட் இது ஒரு கதை வீடியோ ஆனால் கட்டுப்பெட்டியா வளந்தவளுக்கு குற்றவுணர்வு வித் மன அழுத்த நோயும் தாக்கிடுச்சி. பாலாவோட ரிப்ளக்ஷன் என்னவாக இருக்கும்னு பாக்க ஆவல்

  4. Avatar

    இப்படிலாம் இருக்கு தோழியின் தவறான வழிகாட்டுதலின் படி இவள் கஷ்டப்படுவதும் இல்லாம பாலாவை கஷ்டப்படுத்தப்போறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *