Skip to content
Home » கானல் பொய்கை 8

கானல் பொய்கை 8

பிரியம்வதாவின் அறையில் முகம் இறுக அமர்ந்திருந்தான் பாலா. அவனருகே குளிரில் நடுங்கிய ஆட்டுக்குட்டி போல இருந்த பாரதியின் தேகத்தில் வெடவெடப்பு அடங்கவில்லை.

பாரதியின் தற்கொலை எண்ணம், தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் குணத்திற்கான காரணமென்ன என்பதை அவனிடம் ஒளிவுமறைவின்றி சொல்லிவிட்டார் பிரியம்வதா.

“நான் கேட்ட கேள்விக்கு பாரதி சொன்ன பதில்களை அனலைஸ் பண்ணி டயக்னைஸ் பண்ணுறதுக்கு எனக்குக் கொஞ்சம் டைம் தேவை பாலா… அடுத்தடுத்து தெரபி, மெடிகேசன்ஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு கணவரா அவளோட பிரச்சனைய நீங்க தெரிஞ்சிக்கணும், அதோட தீவிரம் என்னனு புரிஞ்சிக்கணும்… அதனால தான் இன்னைக்குக் கவுன்சலிங்ல அவ சொன்ன எல்லா விவரத்தையும் உங்க கிட்ட நான் ஓப்பனா சொல்லிருக்கேன்.. இந்த மாதிரி சைக்காலஜிக்கல் ப்ராப்ளம்ஸ்ல சிக்குனவங்களுக்கும் அவங்க ஃபேமிலிக்கும் ஃபேமிலி தெரபி மஸ்ட்… உங்க மனைவியோட பிரச்சனைய அருவருப்பு, கோவம் இல்லாம நீங்க புரிஞ்சிக்க உங்களையும் நான் பக்குவப்படுத்தியே ஆகணும்… அப்ப தான் நம்மளால பாரதிய முழுசா இந்த ப்ராப்ளம்ல இருந்து வேளிய கொண்டு வரமுடியும்… ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் த சிச்சுவேசன்”

பாலாவின் முகம் கருங்கல்லாய் இறுகியிருந்தது. திடீரென கல்லுக்கு உயிர் வந்ததை போல “புரியுது மேடம்” என உதடு பிரித்து வார்த்தைகளை உதிர்த்தவன் “நாங்க கிளம்பலாமா?” என்று கேட்க

“ஷ்யூர்” என்றார் பிரியம்வதா.

இருவரும் எழுந்து அங்கிருந்து வெளியேறியதிலிருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட காரில் அமர்ந்தது வரை பாலா ஒரு வார்த்தை கூட மனைவியிடம் பேசவில்லை.

மருத்துவரிடம் தன்னைப் பற்றிய உண்மைகளை மறைக்காமல் உரைத்த பிறகு நியாயப்படி பாரதியின் மனபாரம் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவளுக்கோ பன்மடங்கு பாரம் ஏறிய உணர்வு. காரணம் பாலாவின் முகமாற்றம்.

எதுவாயினும் வீட்டுக்குப் போன பின்னர் பேசிக்கொள்ளலாமென எண்ணி அமைதி காத்தாள் பாரதி.

ஐந்தாவது தளத்திற்கு செல்ல மின்தூக்கிக்குள் நுழைந்தபோது “பாலா ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு?” என மென்மையாக வினவினாள் அவள்.

அவள் கணவனோ கற்சிலையாக மாறியிருந்தான். இறங்க வேண்டிய தளத்தின் எண்ணுள்ள பொத்தானை அழுத்திவிட்டு மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டவன் தப்பித் தவறி கூட மனையாளிடம் தன் பார்வையைத் திருப்பவில்லை.

தளம் வந்ததும் வெளியேறி அவர்களது ஃப்ளாட்டுக்குள் நுழைந்து சோபாவில் சரிந்தவன் தான். பாரதி அவனுக்காக போட்டு எடுத்து வந்த காபியைக் கூட பருகாமல் ஏடு படிய விட்டு கண்களை மூடிக் கிடந்தான்.

இங்கே பாரதியோ துடித்துப்போனாள். தன்னைப் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டதும் பாலாவுக்குத் தன்னிடம் பேசப் பிடிக்கவில்லை என்றே அவனது நடத்தைகளுக்கு அர்த்தம் எடுத்துக்கொண்டாள் அவள்.

“பாரதி” என்று அவன் அழைத்துக்கொண்டு அறைக்குள் வந்து அவள் முன்னே நிற்கும் வரை ஒரு மணி நேரம் பூலோக நரகத்தில் வாசம் செய்திருந்தாள் பெண்ணவள்.

கணவன் பெயர் சொல்லி அழைத்ததும் “என்னங்க?” என படுக்கையிலிருந்து எழுந்தவளை அமரும்படி பணித்தவன் வெகு கவனமாக தள்ளி அமர்ந்தான்.

அவன் தன்னை விலக்கி வைக்குறான் என்று ஊமையாய் மனம் குமுறியபோது கண்களும் மனதிற்கு துணை போகவா என பாரதியிடம் கேட்டன.

பாலா தலையை உலுக்கி கண் கலங்க அமர்ந்திருந்த மனைவியை ஏறிட்டான்.

அவன் முகத்தில் வழக்கமாக இருக்கும் காதல், கனிவு, அக்கறை இது எதுவுமில்லை. மாறாக அங்கே இருந்தது ஒருவித அசூயை மட்டுமே! விரும்பத்தகாத நபரைப் பார்த்தால் வருகிற அசூயை அது! அப்படி என்றால் என் கணவனுக்கு நான் விரும்பத்தகாதவள் ஆகிவிட்டேனா? சூடாய் கண்ணீர்த்துளி ஒன்று உருண்டோடியது பாரதியின் கன்னத்தில்.

“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஏன் சம்மதிச்சேன் தெரியுமா?” என்று அவளிடம் கேட்டான் பாலா.

தெரியாது என்று தலையாட்டினாள் அவள்.

“நான் ஒர்க் பண்ணுற ஃபீல்ட்ல நிறைய பொண்ணுங்களைப் பாத்திருக்கேன்… பொண்ணுங்களுக்குனு சில குணங்கள் இருக்கணும்னு நான் யோசிச்சு வச்ச எந்தக் குணமும் அவங்கள்ல மேக்சிமம் கேர்ள்சுக்குக் கிடையாது… ஐ அம் நாட் டாக்கிங் அபவுட் தெயர் இண்டிபெண்டண்ட் நேச்சர்… அவங்களோட பழக்கவழக்கம், வாழ்க்கை முறை இதுல கலந்திருக்குற வெஸ்டர்ன் கல்சரோட பாதிப்பைப் பத்தி சொல்லுறேன்… ஐ.டினு இல்ல, இப்ப மேக்சிமம் பொண்ணுங்க லிபரலா வாழ ஆரம்பிச்சிட்டாங்க… ஒரு ஆணோட சுதந்திர மனப்பான்மை அவனை என்னென்ன காரியத்தைச் செய்ய வைக்குமோ அதெல்லாம் இப்ப அவங்களும் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க… ப்ரீ-மேரீட்டல் செக்ஸ்ல ஆரம்பிச்சு, ஆல்கஹால் கன்ஸ்யூம் பண்ணுறது, ஸ்மோக்கிங், ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட், பார்ன் அடிக்சன்னு எல்லாமே இப்ப பொண்ணுங்களுக்குச் சாதாரணமா ஆகிடுச்சு… நம்ம ஊர்ப்பொண்ணுங்களோட சுதந்திர போக்கை ஏத்துக்குற அளவுக்கு எந்தப் பையனுக்கும் இப்ப வரை மனப்பக்குவம் கிடையாது… நானும் அப்பிடிப்பட்டவங்கல்ல ஒருத்தன் பாரதி… எனக்கு வரப்போற மனைவி நம்ம கலாச்சாரத்துல ஊறிப்போன இன்னசண்ட் கேர்ளா இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்… உன்னைப் பாத்தப்ப நீ அப்பிடிப்பட்டவனு தான் என் மனசு சொல்லுச்சு… ஆனா நீ..”

ஏனோ அவனால் முழுதாக முடிக்க முடியவில்லை. வார்த்தையைச் சிதறடித்தால் அவள் மனம் நொந்துபோவாளே என இப்போதும் அவளுக்காக யோசித்தான். ஆனால் அவன் மனைவி புத்திசாலி. கணவன் கோடிட்ட இடத்தை அவளே நிரப்பிக்கொண்டாள் அவனது முந்தைய பேச்சின் சாராம்சத்தை வைத்து.

கண்களை இறுக மூடிக்கொண்டவள் “எனக்குப் புரியுதுங்க… கல்பனா சொல்லுவா, ஆம்பளைங்களுக்குத் தன்னோட ஒய்ப் தாம்பத்திய விசயத்துல இன்னசண்டா இருந்தா தான் பிடிக்கும்… வாய் விட்டு அதை பத்தி பேசுனா கூட உனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியும்னு சந்தேகப்பட ஆரம்பிச்சிடுவாங்கனு… இப்ப என்னைப் பத்தி தெரிஞ்சதும் உங்களுக்கு என் மேல இருந்த மரியாதை போயிடுச்சு… கண்ட வீடியோ பாத்து கண்ட மாதிரி கதை எழுதுனவ நம்ம கிட்ட ஒவ்வொரு விசயத்துக்கும் வெக்கப்படுற மாதிரி நடிச்சிருக்கானு நினைக்குறிங்க… அதானே?” என்று வேதனையோடு கேட்கவும் பாலாவின் முகம் இறுகிப்போனது.

அவனது எண்ணமும் அது தானே! சொல்லித் தெரிவதில்லை மன்மத கலை என்பார்கள். அதைச் சொல்லித் தரவேண்டியவன் கணவனே என்பது பாலாவின் அழுத்தமான நம்பிக்கை. ஆனால் அவன் மனைவியோ அக்கலையில் திருமணத்திற்கு முன்னரே தேர்ச்சி பெற்றவள் என்ற எண்ணம் அவனுக்கு அருவருப்பைக் கொடுத்தது.

அந்த அருவருப்பு பாரதியின் வெளிப்படையான பேச்சால் கோபமாக உருவெடுத்தது.

“நான் அப்பிடி நினைச்சதுல என்ன தப்பு? உனக்கு இந்த விசயத்துல ஏ டூ இசட் தெரிஞ்சிருந்தும் உன்னை ஒவ்வொரு தடவை நான் நெருங்குறப்பவும் எதுவும் தெரியாத முழிச்சு ஏமாத்திருக்க… நீ செஞ்சு வச்ச காரியம் எவ்ளோ கேவலமானதுனு உனக்குப் புரியுதா? காசு வருதுனு கண்டபடி எழுதிருக்க… அதை எழுதுறப்ப ஒரு தடவை கூட கற்பனைல அந்த ஹீரோயின் இடத்துல நீ உன்னை வச்சு பாத்தது இல்லையா? நினைச்சாலே அருவருப்பா இருக்கு… சீ!”

அதற்கு மேல் உட்காரப் பிடிக்காமல் எழுந்து போய்விட்டான் பாலா.

எவ்வளவு முற்போக்கு சிந்தனை கொண்ட ஆணாக இருந்தாலும் தாம்பத்திய விவகாரத்தில் அவன் கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகத் தான் இருப்பான். பாலா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

இதெல்லாம் நடந்துவிடுமோ, தன்னைப் பற்றி கணவன் தவறாக எண்ணுவானோ என்று பயந்து தான் பாரதி இந்த உண்மைகளை அவனிடம் மறைத்திருந்தாள்.

உண்மை தெரிந்து கொண்ட பிற்பாடு அவன் தன் மீது கோபம் கொள்வான் என்பது அவள் எதிர்பார்த்தது தான். ஆனால் அவனது முகத்தில் தெரிந்த அருவருப்பு தான் பாரதிக்கு ஆயிரம் கத்திகளால் குத்தியது போன்ற வலியைக் கொடுத்தது.

இப்படி தன்னைக் கேவலமாக எண்ணுபவனிடம் என்னவென விளக்கம் அளிப்பாள் அவள்?

அதன் பின் இருவரிடையேயும் நிலவியது மௌனம் மட்டுமே! தன்னை அருவருப்பாகப் பார்க்கும் கணவனிடையே பேசத் தயக்கம் பாரதிக்கு.

பாலாவுக்கோ மனைவியிடம் பேசவே பிடிக்கவில்லை. தன்னை அவள் ஏமாற்றிவிட்டதாகவே எண்ணினான் அவன். அவளது பிரச்சனையின் தீவிரத்தைக் குறைத்து சிகிச்சை அளிப்பதைவிட அவனது எதிர்பார்ப்பு பொய்த்துவிட்ட வருத்தமே பாலாவை வியாபித்திருந்தது.

பாரதிக்குத் தேவை கணவனின் அன்பும் அக்கறையும் என படித்து படித்து பிரியம்வதா சொன்ன அறிவுரைகள் எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகிவிட அடுத்த கவுன்சலிங்குக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிற நிலையில் கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதை பேசுவதைச் சுத்தமாகத் தவிர்த்துவிட்டனர்.

இந்நிலையில் பாலாவின் அன்னை மருமகளும் மகனும் புதுக்குடித்தனத்தில் பொருந்திவிட்டார்களா என அறியும் பொருட்டு பாரதியின் மொபைலுக்கு அழைத்துப் பேசியபோது மருமகளின் குரலில் இருந்த வெறுமை அவரது மனதை உறுத்தியது.

“உனக்கும் பாலாக்கும் எதுவும் பிரச்சனையாம்மா? உன் குரல் ஒரு மாதிரி இருக்குதே?”

“அப்பிடிலாம் எதுவுமில்ல அத்தை… நீங்க கால் பண்ணுறதுக்கு முன்னாடி நான் தூங்கிட்டிருந்தேன்… அதான் என் குரல் டல்லா இருக்கு… நீங்களும் மாமாவும் நல்லா இருக்கிங்களா?” என பேச்சை மாற்றி குசலம் விசாரித்தாள் பாரதி.

மருமகள் நலம் விசாரித்ததில் அந்த மாமியாரின் மனம் குளிர மறுத்தது. ஊரார் பிள்ளையாக இருந்தாலும் இப்போது பாரதியும் அவர்களின் குடும்பத்தில் ஒருத்தி. தனக்குப் பிறகு குடும்ப பொறுப்பைச் சுமக்கப் போகிறவள். அவள் சந்தோசமாக வாழவில்லை என்றால் எத்துணை பெரிய அனர்த்தம்!

“உங்க கிட்ட வேலை பாத்தவரு மகளையே மருமகளாக்கிட்டிங்க… நிஜமாவே உங்களுக்குப் பெரிய மனசு தான்” என்று முகத்துக்கு நேரே புகழ்மாலை பாடியவர்கள் முதுகுக்குப் பின்னே “இவங்க மகனுக்குக் கோவம் அதிகமா வருமாம்… நம்ம வீட்டுப் பிள்ளைங்களை மருமகளா ஆக்குனா அவன் இஷ்டத்துக்கு ஆட்டிவைக்க முடியாதுனு இல்லாதபட்ட வீட்டுல அதுவும் வேலைக்காரன் மகளையே கட்டி வச்சிருக்காங்க… இதுல அந்தப் பொண்ணுக்கு வாழ்க்கை குடுத்த மாதிரி பெருமை வேற பீத்திக்கிறாங்க” என்று கிண்டலடித்த செய்திகள் எல்லாம் அவரும் அறிவாரே!

அவர்கள் வார்த்தையை மெய்ப்பிப்பது போல எதுவும் நடந்து மருமகள் மனதை மகன் நோகடித்திருப்பானோ என பதறியது பாலாவின் அன்னை நங்கை.

அவரது மருமகளோ தானும் பாலாவும் சந்தோசமாக வாழ்வதாகச் சொல்லி வேறு கேள்விகள் எதுவும் கேட்க விடாதபடி பேச்சை முடித்துக்கொண்டாள்.

சந்தோசமாக வாழ்வது என்பது ‘சந்தோசமாக வாழ்கிறோம்’ என்று ஊருக்குக் காட்டிக்கொள்வதும், தண்டோரா போடாத குறையாக அனைவரிடமும் சொல்வதும் அல்ல; பேசும் பேச்சில், செயலில் அந்தச் சந்தோசத்தின் சாயல் தெரியவேண்டும். அந்தச் சந்தோசம் இனிப்பு மீது படிந்திருக்கும் சீனிப்பாகு போல தெரியவேண்டும்.

இனிப்பை உண்ணும் முன்னரே சீனிப்பாகைப் பார்த்து அதன் தித்திப்பை உணர்வோமே அதே போல தம்பதிகளின் உடல்மொழியிலும் பார்வை பரிமாற்றத்தில் வெளிப்படும் உற்சாகமும் துள்ளலும் அவர்களின் சந்தோசமான வாழ்க்கையின் அடையாளம் ஆகும்.

ஏனோ நங்கைக்கு அந்த உற்சாகம் மருமகளின் பேச்சில் தெரியவில்லை. அந்தக் காலத்து மனுசி அல்லவா! சொல்லாமலேயே சில உணர்வுகளை கிரகித்துக்கொண்டார்.

விளைவு பாலாவிற்கு அடுத்த நொடியே அழைப்பு பறந்தது.

அவனோ ஒப்படைக்கப்பட்ட ப்ராஜெக்ட் க்ளையண்ட் கொடுத்த குடைச்சலைச் சமாளித்துவிட்டுத் தலைவலியோடு அமர்ந்திருந்தான். அன்னையிடமிருந்து இரவில் வரக்கூடிய மொபைல் சற்று சீக்கிரமே வந்ததும் என்னவோ ஏதோ என்று எண்ணி அழைப்பை ஏற்றான்.

பாலாவின் ‘ஹலோ’வைக் கேட்டதும் நங்கை கண்டிப்பான தொனியில் பேச ஆரம்பித்தார்.

“பாரதிக்கு உடம்பு சரியில்லையாப்பா?”

“இல்லம்மா… அவ நல்லா தான் இருக்கா… திடீர்னு ஏன் இந்த நேரத்துல கால் பண்ணி விசாரிக்குற?”

“நான் இப்ப தான் அவ கிட்ட பேசுனேன்… அவ குரலே சரியில்ல… விட்டேத்தியா பேசுறா… எதுவும் பிரச்சனையானு கேட்டதுக்கு இல்லத்தைனு சொல்லுறா… அவ பொய் சொல்லுறானு புரியாத அளவுக்கு உன் அம்மா ஒன்னும் முட்டாள் இல்ல… நீ அவளை எதுவும் சத்தம் போட்டியா பாலா?”

என் மகன் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் அன்னை இப்படி கேட்டதும் பாலாவுக்குச் சுருக்கென வலித்தது. இந்தப் பாரதி தான் அன்னையிடம் ஒழுங்காக பேசவேண்டியது தானே என்று மனதுக்குள் கறுவிக்கொண்டான்.

“என்னைப் பத்தி உனக்குத் தெரியாதாமா? நீ பாரதி போட்டோவ காட்டுனதும் பிடிச்சிருக்குனு சொன்னவன்மா… நான் ஏன் அவளைத் திட்டப்போறேன்? எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லம்மா… எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு… அப்புறமா பேசுறேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

வேலையிலிருந்த அழுத்தம், அன்னையின் சந்தேகம் கொடுத்த அதிருப்தியை வீட்டுக்குப் போனதும் பாரதியிடம் தான் கொட்டினான்.

“ஏய் பாரதி என்னடி நினைச்சுட்டுருக்க உன் மனசுல?”

கதவைத் திறந்ததும் கத்தியபடியே உள்ளே வந்து சோபாவில் பேக்கை வீசிய கணவனின் பேச்சில் திடுக்கிட்டுக் கதவை அடைத்தவள் புரியாமல் விழித்தாள்.

“முதல்ல ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வச்சுக்கிறதை நிறுத்து… உனக்கு இருக்குற தெளிவுக்கு நீ ஊரையே வித்துடுவனு எனக்கு இப்ப நல்லா தெரியும்” என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு அவன் பேசவும் வேதனையில் சுணங்கியது பாரதியின் முகம்.

இத்தனை நாட்கள் மௌனவிரதம் இருந்த கணவன் வாய் திறந்து அன்பாக இரண்டு வார்த்தை பேசுவான் என்ற அவளது எதிர்பார்ப்பில் ஒரு லாரி மண்ணை அள்ளிப் போடுவது போல பாலாவின் அடுத்தடுத்த பேச்சுகள் அமைந்தன.

“அம்மா கால் பண்ணுனப்ப விட்டேத்தியா பேசுனியாம்… அவங்க எனக்குக் கால் பண்ணி உன் பொண்டாட்டிய நீ எதுவும் திட்டுனியாடானு கேக்குறாங்க… கடைசில நான் தான் உங்க எல்லாருக்கும் இளிச்சவாயனா போயிட்டேன்ல… எப்பவும் அத்தை நொத்தைனு சிரிச்சு சிரிச்சு பேசுவல்ல… இன்னைக்கும் அப்பிடி பேசித் தொலையவேண்டியது தானே?”

“அப்ப நான் சந்தோசமா இருந்தேன்… அந்தச் சந்தோசம் என் குரல்ல அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்… இப்ப என் மனசு முழுக்க சோகம் மட்டும் தான் நிரம்பிருக்கு… அதை என் குரல் காட்டிக் குடுத்துடுச்சு”

“எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி என் கிட்ட நாடகம் போட்டல்ல, அதே மாதிரி சந்தோசமா இருக்குறேன்னு நடிச்சு அவங்களை நம்ப வைக்குறது உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே? என்ன பழிவாங்குறியா நீ?”

இவனைப் பழிவாங்க எனக்கு என்ன காரணம் இருக்கப்போகிறது? விண்விண்னென்று வலித்த நெற்றியைத் தடவிக்கொண்டாள் பாரதி. அவள் பார்வை வேறு பக்கம் திரும்பவும் “ஏய் என்னை பாத்து பேசு” என அதட்டினான் அவன்.

“என்ன பேசணும்? நான் இப்பிடி தான்னு நீங்களே உங்க மனசுல உருவக்கப்படுத்தி வச்சிட்டிங்க… இனி நான் என்ன செஞ்சாலும் உங்களுக்குத் தப்பா தான் தோணும்… முதல்ல நான் ஏன் உங்களைப் பழிவாங்கணும்? நீங்க புரிஞ்சு தான் பேசுறிங்களா?”

“எல்லாம் புரிஞ்சதால தான் பேசுறேன்… ரெண்டு நாளா மேடமைத் தொடாம தள்ளி வச்சிருக்கேன்ல… அதுக்குப் பழிவாங்க தான் நீ இப்பிடி பண்ணிருக்க.. உன்னால தான் அந்த ஃபீலிங்கை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாதே”

ஏளனமும் கோபமுமாக பாலா பேசியதும் பாரதி நிலைகுலைந்து போனாள். இந்த வார்த்தையை யாரும் சொல்லி தனது நடத்தையைத் தவறாகப் பேசிவிடக்கூடாது, உடலின்பத்துக்கு அலைபவள் என யாரும் தன்னைச் சொல்லிவிடக்கூடாதென்பதற்காக தன்னையே காயப்படுத்தி அந்த உணர்வுகளை மரத்துப்போகச் செய்பவளைத் தான் பாலா வார்த்தைகளால் நோகடித்துவிட்டான்.

இதற்கு மேல் அவனிடம் பேசி என்னைப் புரிந்துகொள் என்று சொல்வதில் பயனில்லை என்று பாரதிக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. அவள் செய்ததை நியாயப்படுத்த நினைக்கவில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட தவறுக்கும் மன்னிப்பு உண்டே! இத்தனைக்கும் பாரதி செய்த ஒழுக்க விழுமியத் தவறால் பாலாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

பாதிப்பு இல்லையா? கலாச்சாரக் காவலனான உன் கணவனின் எதிர்பார்ப்புகள் உன்னால் பொய்த்துப்போனதாம்! அது பாதிப்பு இல்லையா பெண்ணே? போதாக்குறைக்கு உனக்கு கவுன்சலிங்குக்கு வேறு பணம் கொடுக்கிறான். பிடிக்காத மனைவிக்குக் குண்டூசி வாங்கிக் கொடுத்தாலும் கணவனுக்கு அது மாபெரும் பாதிப்பு தான், என்றது பாரதியின் மனசாட்சி.

“நீங்க ரொமான்ஸ் சூப்பரா எழுதுறிங்க மேம், உங்க ரொமான்சுக்காகவே நான் அமேசான்ல உங்க எல்லா கதையையும் ரீட் பண்ணுவேன்” என்று வாசகர்கள் சொன்னதற்காக மாய்ந்து மாய்ந்து ஆபாச வீடியோக்கள் பார்த்து படுக்கையறை காட்சிகளை ஆர்வமாக எழுதிய தருணங்கள் பாரதியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன.

பாலா எரிச்சலோடு அங்கிருந்து அவர்களின் அறைக்குப் போய்விட பாரதி பால்கனிப்பக்கம் சென்றுவிட்டாள். அங்கே கிடந்த நாற்காலியைப் புறக்கணித்தவள் மடங்கி தரையில் அமர்ந்து காலைக் கட்டிக்கொண்டாள். கண்ணீர் ஒரு புறம் வழிந்தாலும் கணவனின் சொற்கள் கொடுத்த அதிர்ச்சியில் அழத்தோன்றவில்லை. கண்கள் இலக்கில்லாமல் முன்னே தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போல அடுக்குமாடி குடியிருப்புகளை வெறிக்க ஆரம்பித்தன.

7 thoughts on “கானல் பொய்கை 8”

 1. Kalidevi

  Ippadi ninaikirathu romba thappu bala doctor alo solli anupi nee Bharati kitta ippadi kova patutu iruka nallathuku illa bala

 2. CRVS 2797

  உண்மையை மறைக்கிறவரை தான் சந்தோஷம், நிம்மதி எல்லாமே… குட்டு வெளிப்பட்டுட்டா…. மட்டும் இல்லை, மரியாதையும் இல்லை.

 3. Fellik

  அவ்வளவு தூரம் சொல்லியும் இவன் இப்படி பேசிட்டானே. பாரதி மீண்டு வந்திடுவாளா. எழுத்துலகில் இத்தனை விஷயங்கள் நிஜத்திலும் நடக்கிறதா

 4. Avatar

  ஆண்கள் தவறு செய்தால் தவறில்லை அதை பெண்கள் செய்தால் அவள் கேடு கெட்டவள் பெண்களுக்கு உணர்வுகள் இல்லாத ஜடமாக இருக்கனும் நினைக்கும் சமூகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *