சமையலறைக்குள் என்றும் தன்னாட்சி தானென்று, ஜோதி அவ்வறைக்குள்ளே சுழன்று கொண்டிருந்தார். பேத்தியைப் பள்ளிக்கு கிளப்பும் செப்பணியைச் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார் மூர்த்தி. நேற்றிருந்த இறுகிய சூழ்நிலையைக் கடந்து காலையின் பரபரப்பைக் கொண்டிருந்தது அந்த வீடு.
மிதுல் தன் அறையில் கல்லூரிக்கு தயாராகினான். அவன்தான் கீர்த்தியை பள்ளிக்கு அழைத்து செல்லும் சாரதி, அதுவும் காலையில் மட்டும்.
இரவெல்லாம் கோசிகம் போல விழித்து வேலை பார்க்கும் மதுமிதா, விடியற்காலையில் தான் உறங்கச் செல்வாள். ஐடி துறையில் பெரிய பதவியில் இருப்பவள், வொர்க் ஃபிரம் ஹோம் கேட்டு வாங்கிக் கொண்டு வீட்டிலே வேலை செய்கிறாள்.
மூர்த்தியின் செல்ல மகளான மதுமிதா, கட்டிக் கொண்டவனால் இல்லற வாழ்க்கை கசந்து போனதால், மகளைத் தூக்கிக் கொண்டு தாய் வீட்டிற்கு விவாகரத்துடன் வந்து விட்டாள்.
இருப்பத்தேழு வயதில் வசீகரிக்கும் அழகுடன் இருக்கும் மிதுல் கிருஷ்ணனோ, கல்லூரியில் ஆங்கில பேராசிரியாராகப் பணியாற்றி, பல பெண்கள் மனதில் கனவு நாயகனாக வலம் வருகிறான்.
மூர்த்தி, ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். இப்போது பேத்திக்கு மாலையில் பாடம் சொல்லித் தரும் டியூஷன் டீச்சராக இருக்கிறார். ஜோதி இல்லத்தரசி. வீட்டையும் அவரை நம்பியுள்ள இம்மக்களையும் பேணி காக்கும் வீட்டரசி.
இதுவே இவர்களது குடும்பம்!
மூர்த்தி, பேத்தியை சீருடை அணிய வைத்தவர், காலில் காலுறை அணியச் சொல்லிவிட்டு காலணியை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
மதுவின் அறைக் கதவு மூடி இருப்பதால் தைரியம் கொண்ட கீரித்தியோ மூர்த்தியின் தொடையை சொறிந்து, “தாத்தா…” என்றழைத்தாள்.
அவளது அழைப்பை உணர்ந்தவர் காலணியை துடைத்தபடி, “ம்…” என்றார். அவருக்கு பேத்தியின் ஒவ்வொரு அழைப்புக்கு பின்னான தேவைகள் என்ன என்பது தெரியும்.
“தாத்தா, ஈவினிங் அம்மாவ சமாளிச்சி நீ வந்து கூட்டிட்டு போறீயா? அம்மா வர வேணாம் ப்ளீஸ்… வந்தா ஆருவ திட்டுவா. அப்புறம் ஆரு என்கிட்ட பேசவே மாட்டா. ப்ளீஸ் தாத்தா… அவங்க வரவே வேணாம், நீ வா.” என்று மூர்த்தியின் தாடையைப் பிடித்து கெஞ்சினாள் கீர்த்தி.
அவரோ பேத்தியின் அழகான கெஞ்சலை ரசிக்க, உள்ளிருந்து காலை உணவை தட்டில் போட்டுக்கொண்டு ஊட்டிவிட வந்த ஜோதியும் பேத்தியின் கெஞ்சலைக் கவனிக்கத் தவறவில்லை.
“என்ன கேக்குறா உங்க பேத்தி?” என சுடச்சுட இருந்த உணவை ஊதி ஊதி பேத்திக்கு ஊட்டி விட்டார்.
“என்ன கேட்க போறா? சாய்ந்தரம் நான் வந்து அழைச்சிட்டு போகணுமாம்…” என்றார் பேத்தியைப் பார்த்து சிரித்துக் கொண்டு.
“உன் அம்மா பண்ற உருப்படியான ஒரே வேலை உன்னைய ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு வர்றதுதான். அதையும் என் புருஷனையே செய்ய சொல்வீங்களோ…? அதெல்லாம் என் புருஷன் வர மாட்டார். உன் அம்மா தான் வருவா…” என சன்னமாக சொல்லிவிட, பிஞ்சு முகம் வாடிப் போனது.
“சும்மா இரு ஜோதி, என் பேத்தி முகம் வாடிப்போச்சி பாரு. அம்மாச்சி கிடக்கிறா, நான் வர்றேன்டா… என் கீர்த்து குட்டி கேட்டதும் வர மாட்டேன்னு சொல்வேனா நானு? தாத்தா வர்றேன்டா…” என்றார் அவளைக் கொஞ்சியபடி.
“ஏங்க சொன்னா கேளுங்க, நீங்க மாத்திரைய போட்டுட்டா ரொம்ப நேரம் தூங்குவீங்க. நீங்க தூங்கிட்டா, அப்புறம் இவ அம்மாதான் அவளை கூப்பிட போவா… எதுக்கு வர்றேன் சொல்லிட்டு போக முடியாம தவிக்கணும்? அதுக்கு வர முடியாதுனு சொல்றதே ரொம்ப நல்லது.”
“இன்னைக்கி ஒரு நாள் தூங்காம இருக்க வேண்டியது தான் ஜோதி.”
“அப்போ மாத்திரை போடாம இருக்க போறீங்களா?” பதிலுக்கு கேட்டார்.
மூர்த்தி மாத்திரையின் தயவால் தான் இன்றளவும் உறங்கிக் கொண்டிருக்கிறார். மாத்திரை விழுங்கிய கணத்திலே கண்களில் உறக்கம் சொருகி வரும், நன்றாகத் தூங்குவார். அதனால் தான் பள்ளியிலிருந்து கீர்த்தியை அழைத்து வரும் பொறுப்பு அவரிடம் இல்லை. இல்லையென்றால் அதையும் அவர் செய்திருப்பார்.
கீர்த்தியைப் பாவமாகப் பார்த்தார் மூர்த்தி. கீர்த்தியும் ஜோதியைப் பாவமாகப் பார்க்க, அவரோ அதையெல்லாம் கண்டுகொள்ளாது ஊட்டுவதில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தினார்.
அறையிலிருந்தவாறே அவர்கள் மூவரும் பேசிக் கொள்வதை கேட்ட மிதுலோ, தனது கல்லூரி பையை மாட்டியபடி வெளியே வந்தான். “என்ன டிஸ்கஷன் போகுது இங்க?” என்றவன் அன்னைக்கு அருகே வந்து அமர, அவனுக்கு காலை உணவு அன்னையின் கரங்களால் ஊட்டப்பட்டது.
காலுறையை போட்டு, காலணியை சுத்தம் செய்தபடி உணவையும் ஒவ்வொரு விள்ளலாக வாங்கினான். இருவருக்கும் சேர்த்துதான் ஊட்டினார்.
“வேறென்ன, மேடமுக்கு அவங்க தாத்தா வந்து கூட்டிட்டு வரணுமாம்? அம்மாவ அனுப்பாதீங்கங்கறா!” என்றதுமே அவன் சிரித்து விட்டான்.
“சிரிக்காத மாமா, அம்மா சரியான சண்டைக்கோழி… உனக்கு தெரியும்ல? அம்மா வந்தா, ஆருவ கொத்தி கொத்தி சண்டை போட்டு எங்க ஃப்ரெண்ட்ஷிப் பிரிச்சிடுவா. வேணாம்… அவ வரவே வேணாம்… ப்ளீஸ்… தாத்தாவ அனுப்பி வை அம்மாச்சி…” ஜோதியின் தாடையைப் பிடித்து விடாமல் கொஞ்சினாள்.
“முடியாதுடி… எனக்கு என் புருஷன்தான் முக்கியம். அப்புறம் தான் நீங்களாம்… அவர் வர மாட்டார்.” என்று ஆணித்தரமாக சொல்லிவிட, கீர்த்தியின் அடுத்த ஆயுதம் வெளிப்பட்டது.
“ஆரம்பிச்சுட்டா…” என்று முனங்கினார் ஜோதி. மூர்த்தி சமாதானம் செய்தும் நிற்கவில்லை அவளது அழுகை. அவளது அழுகையைக் காண உள்ளுக்குள் பிசைந்தாலும், கணவனின் உறக்கம் முக்கியம் என்பதிலே இருக்க, அவர்களுக்கு தீர்வு தந்தான் மிதுல்.
“டாலு குட்டி! அழக் கூடாது… இப்படியே ஸ்கூலுக்கு போனா, உன்னை இன்னைக்கி அழுமூஞ்சி ஆஃப் தி கிளாஸ்னு சொல்லிடுவாங்க.” என்று முகத்தை நன்றாகத் துடைத்து மீண்டும் அலங்காரம் செய்தான்.
“ஐ பிராமிஸ் யூ! இன்னைக்கி என் டாலை நான்தான் வந்து கூப்பிட போறேன்.” என்றான் இன்ப அதிர்ச்சியாக.
“நீயா? காலேஜ்ல இருப்பீயேடா? எப்போ போய் பாப்பாவ கூப்பிடுவ?”
“ஹாஃப் டே லீவ் கேட்டு இருக்கேன்மா, ஃப்ரெண்ட்ஸ்க்கு இன்விடேசன் கொடுக்கணும். கொடுத்துட்டு அப்படியே என் டாலை அழைச்சிட்டு வர்றேன்.” என்றான்.
“மறந்திட மாட்டீயே?” என விரல் நீட்டி கேட்கவும், அதை பிடித்துக் கொண்டவன், “பிராமிஸ்! கண்டிப்பா வந்து உன்னை கூட்டிட்டு போறேன். இப்போ ஸ்மைல் பண்ணுங்க…” என்று வாயருகே விரலை விரித்து சிரிக்கச் சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டு மாமனைக் கட்டித் தழுவினாள்.
“போலாமா?” என்றான். அவளும், “போலாமே…” என்று குதூகலத்துடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். பெரியவர்கள் இருவரும் செல்லும் இருவரையும் சிரிப்புடன் பார்த்துவிட்டு, அவரவர் வேலையைப் பார்க்க சென்று விட்டனர்.
“அப்பத்தா, என் ஸ்நாக்ஸ் காணோம். எனக்கு இந்த அத்தைகாரி மேலே தான் சந்தேகமா இருக்கு…” என தனது சிற்றுண்டி கொள்கலனைத் திறந்து பார்த்துவிட்டு, எதுவுமில்லாது போக சத்தம் போட்டு கத்தினாள் ஆராதனா.
கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த சைந்தவியும் துப்பட்டாவை குத்தியபடி வெளியே வந்து, அவளுடன் மல்லுக்கு நின்றாள். “ஆமா, நான்தான் எடுத்து எனக்கு வச்சிக்கிட்டேன். இப்போ என்ன?” என நிதானமாக ஆரம்பித்தாள்.
“அப்ப நான் மத்தவங்க சாப்பிடுறத வாய் பார்த்திட்டு உட்காரணுமா?” என தன் வயதுக்கு மீறி அவளும் பேச,
“ஏன் மேடமோட வாய் ஹனி கேக்கை மட்டுந்தான் சாப்பிடுமா? மிக்சர், முறுக்கெல்லாம் சாப்பிடாதோ? உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சீன் போட, என் பங்கு தான் உனக்கு கிடச்சதா? போடி. நேத்து என்னை பார்க்க வச்சி வடிய வடிய தின்ன இல்ல. உன் பங்குல ஒழுங்கா கொஞ்சம் எடுத்து வச்சி நாளைக்கு ஸ்நாக்ஸ் கொண்டு போன்னு சொன்னேனா இல்லையா? எல்லா கேக்கையும் தின்னுட்டு இப்ப என் பங்கையும் உனக்கு எடுத்து வச்சிப்பீயா? தரமாட்டேன் போடி!” என்றவள், சமையலறைக்குள் புகுந்து இருவருக்கும் சேர்த்து கொள்கலனில் உணவை அடைத்து வெளியே மேசையிலிருந்த உணவு பையில் எடுத்து வைத்தாள்.
அவளை பாவம் போல பார்த்து நின்றாள் ஆரு. சைந்தவியோ, ‘இன்று இறங்கி விடவே கூடாது’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, பிடித்த பிடியில் நின்றாள்.
“என்ன பிரச்சனை இங்க?” என உள்ளே நுழைந்தார் அமுதா, சைந்தவியின் தாய்.
“அப்பத்தா, அத்தை என் ஹனி கேக்கை தர மாட்றா. நான் என் ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல எடுத்து வச்சதை எடுத்து வச்சிக்கிட்டா.”
“சின்ன பிள்ளையோடத தான் எடுத்து திங்கணுமா? ஏன் இங்க வேற ஸ்நாக்ஸ் இல்லையா? உங்களோட காலையில மல்லுக்கட்றதே எனக்கு பெரும் வேலையா போச்சி” என தலையில் அடித்தார்.
“அமு, இவளோடதை நான் ஒன்னும் பிடுங்கி தின்னல. இவ இவளோட பங்க தின்னதும் இல்லாம என் பங்க சேர்ந்து அவ ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல வச்சிக்கிட்டா. இது தப்பு தான? சொல்லு உன் பேத்தி கிட்ட. என்னால தர முடியாது வேணும்னா வேற எடுத்து வச்சுக்க சொல்லு” என தட்டில் இரண்டு இட்லியை எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.
“வேற ஸ்நாக்ஸ் வைக்கிறேன் ஆரு. நீ வந்து சாப்பிடு” என இன்னொரு தட்டில் இட்லியை வைக்க, ஆராதனாவோ பிடிவாதம் கொண்டு, “எனக்கு ஹனி கேக்கு தான் வேணும், இல்லேனா நான் சாப்பிட மாட்டேன்” என்று வீம்பாக நின்றாள்.
“நீ ஒன்னும் சாப்பிட வேண்டாம் ப்பே!” என்று இட்லியை விழுங்கினாள் சைந்தவி.
இருவர் இடையில் நின்று யாருக்கு பேசுவதென்று விழித்தார் அமுதா.
“சைத்து, நீ தான் இறங்கி வாயேன். உனக்கு வேணும்னா அப்பாவை வாங்கி வைக்கச் சொல்றேன். அவளுக்கு இதை கொடுடி. தாயில்லாத பிள்ளைய ஏங்க வைக்காதடி!” என்ற வார்த்தைகளை விட அவளுக்கு சுள்ளென கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“அம்ம்மா!” என அழுத்தமாக அழைத்து சராலென எழுந்தாள்.
“இன்னொரு வாட்டி அந்த வார்த்தைய சொன்னீங்க, நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். என்ன தாயில்லாத பிள்ளை? ஆங்… தாய் இல்லேனா என்ன இப்போ? அதான் நாம இருக்கோமே சும்மா சும்மா தாயில்லாத பிள்ளை தாயில்லாத பிள்ளைனு சொல்லாதீங்க. அந்த வார்த்தைய சொல்லி பாவம் பார்க்கிறத முதல்ல நிறுத்துங்க.
நீங்க சொல்ல சொல்ல அதே அவளும் அட்வான்டேஜ் எடுத்து காரியத்தை சாதிச்சிப்பா. இவளுக்கு அம்மா இல்ல தான். அதுக்காக அம்மா இல்லாத குறையோட தான் நாம இவள வளர்க்கிறோமா? அண்ணி இருந்தா எப்படி இவள பார்த்துப்பாங்களோ, அப்படி தான பாத்து பாத்து இவளுக்கு செய்றோம்… என்ன குறைஞ்சது இவளுக்கு நாம காட்ற பாசத்துல? அத்தையா இருந்தாலும் இவளுக்கு அம்மாவா தான நான் இருக்கேன்?
சின்ன விஷயத்துக்காக கூட தாயில்லாத பிள்ளைன்னு அவ முன்னாடியோ, என் முன்னாடியோ சொல்லாதீங்க! உனக்கு ஹனி கேக்கு தானடி வேணும் இந்தா எடுத்துக்கோ” என தனது கல்லூரி பையிலிருந்து எடுத்தவள் அவள் பக்கம் வேகமாக தள்ளிவிட்டு பாதி உணவுடன் எழுந்து உள்ளே செல்ல, அமுதாவிற்கு தனது தவறு புரிந்தது. கண்கள் கலங்கிப் போனது அவருக்கு.
மகள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சரி தான். தாயை எண்ணி ஏங்க விடாமல் தாய்க்கு தாயாக ஆராதனாவை பார்த்துக் கொள்வது சைந்தவி தான்.
ஆருவின் ஐந்து வயதிலேயே நோயுடன் அகப்பட்டு இறந்து போய் விட்டாள் ஆராதனாவின் தாய் ரம்யா. அதன் பின் ஆருவிற்கு தாயாகிப் போனது என்னவோ சைந்தவி தான்.
அமுதா, சக்திவேலின் ஒரே மகள் சைந்தவி. முதுகலை அறிவியல் கணிதம் முதலாமாண்டு படிக்கிறாள். சக்திவேல் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறார்.
சக்திவேலின் அண்ணான வெற்றிவேல் அமுதாவின் அக்காவான குமுதா தம்பதியருக்கு பிறந்தவன் தான் வசீகரன். வெற்றிவேலும் சக்திவேலும் ஒத்துமையாக ஒரே வீட்டில் தான் இருந்தனர். வசீகரன் வேலூரில் வங்கியில் மேனேஜராக இருக்கிறான்.
காதலித்து பெரியவர்களின் சம்மதத்துடன் ரம்யாவை திருமணம் முடித்து வேலூருக்கு ரம்யாவை அழைத்துக் கொண்டு போய் விட்டான்.
குழந்தை ஆராதனாவும் பிறக்க, ரம்யாவையும் குழந்தையும் மதுரைக்கு அழைத்து வந்து விட்டனர். வேலூரில் அவன் மட்டும் இருந்தான். விடுமுறை நாளில் வந்து விட்டு போவான்.
ரம்யாவிற்கு இரத்தப்புற்று நோய் இருப்பது தெரிய வர எவ்வளவு முயற்சி செய்தும் காப்பாற்ற முடியாத நிலையில் தள்ளப்பட்டு இறந்து தான் போனாள்.
அவள் நோய் வாய்ப்பட்ட கணத்திலிருந்தே, ஆருவிற்கு தாயாகி போனாள் சைந்தவி. மருமகள் இறந்த அடுத்த இரண்டு வருடத்தில் வெற்றிவேலும் இறந்து விட்டார். குமுதா மகனுக்கு துணையாக வேலூரில் இருக்க, ஆருவை இவர்களே பார்த்துக் கொண்டனர்.
இரண்டு வருடங்கள் ஆருவை தாய் போல வளர்த்து வந்தது சைந்தவி தான். சில நேரம் இருவரும் தாய் மகளாக இருந்து பாசத்தை பொழிவார்கள். சில நேரம் மாமியார் மருமகளை போல சண்டை பிடித்துக் கொள்வார்கள். ஆருவிற்கு முதலில் அத்தை தான், பின் தான் அவளது தந்தை வசீகரன்.
மகளுக்காக மாற்றல் வேண்டி கேட்டு இருக்க, இன்னும் அதற்கு வழி அமைந்தபாடில்லை அவனுக்கு.
இருவரிடமும் எதுவும் பேசாது கிளம்பிய கொண்டிருந்தவளின் முன் வந்து நின்ற ஆரு, “சாரி சைத்து!” என சிற்றுண்டி கொள்கலன் நீட்டி, “நீயே வச்சுக்கோ” என்றாள்.
அதற்கு மேல் அவளாலும் தான் முறுக்கி கொண்டு இருக்க முடியுமா? அவளை அணைத்துக் கொண்டாள்.
“எப்பவுமே தனக்கே எல்லா வேணும் நினைக்க கூடாது ஆரு. அது தப்பு. எல்லாருக்கும் எல்லாம் வேணும் நினைக்கணும் சரியா? ஷேரிங் ரொம்ப முக்கியம் ஆரு. நீ ஷேர் பண்ணினா தான் மத்தவங்களும் உன்கிட்ட ஷேர் பண்ணுவாங்க. ஸ்நாக்ஸ் மட்டும் சொல்லல அன்பையும் ஷேர் பண்ணனும். நீ அன்பு காட்டினா தான் திரும்ப உன் மேல அன்பு காட்டுவாங்கன்றத நீ ஞாபகத்துல வச்சுக்கணும் ஆரு” என்றவள் ஆருவின் பையிலே அதை வைத்துவிட்டு பள்ளிக்கு அழைத்துச் சென்றாள்.
பார்வையாளராக இருந்த சக்திவேலும் அமுதாவைப் பார்க்க, அவர் தான் தலைகுனிந்தார்.
“நம்ம பொண்ண குழந்தைன்னு நினைச்சா, அவ இன்னொரு குழந்தைக்கு அம்மாவா இருக்கா. பார்க்க ஆச்சர்யமா இருக்கு அமுதா!”
“ம்… ஆமாங்க, அம்மாவா தான் இருக்கா. அதான் தாயில்லாத பிள்ளைனு ஒரு பேச்சுக்கு சொன்னதும் பத்ரகாளியா மாறி கத்தினா. இனி அந்த வார்த்தை சொல்லக்கூடாது. ஆனா நம்ம பொண்ணுக்கு ஒரு நல்லது பண்ணனுமேங்க. அதுக்கு அப்புறம் ஆருவோட நிலமை? அவ அத்தை இல்லாம இருப்பாளா?” பின்னாடி வரப் போகும் நாளுக்காகப் பயந்தார்.
“அதுக்குள்ள ஆருவ சைத்து தயார் பண்ணிடுவா அமுதா. வசீயும் மாற்றல் வாங்கி வந்திடுவான். நாம ஆரு கூட இருப்போம், அவ அத்தை அளவுக்கு இல்லைனாலும் நம்மால ஆருவ வளர்த்திட முடியாத என்ன? பின்னாடி வர போற நாளுக்கு இப்போ ஏன் பயப்பட்ற? விடு” என்று உள்ளே சென்றுவிட, அவரும் அவ்வாறே பயத்தை ஒதுக்கி வைத்து சென்றார்.
பள்ளியில் கீர்த்தி, வீட்டில் நடந்த விஷயத்தை ஆருவிடம் சொல்லாமல் எப்பவும் போலவே பேசி, சிரித்து , மகிழ்ந்து விளையாடி பாடம் படித்து என அன்றைய நாளை கழித்தனர் இருவரும்.
வழக்கம் போல பள்ளி முடிந்ததும், ‘யார் வீட்டிலிருந்து முதலில் வருகிறார்கள்?’ என்ற போட்டி மைதானத்தில் இருவருக்கும் தொடங்கியது.
கீர்த்தி இன்று தன் தாய் வர மாட்டாள் என்ற நம்பிக்கையில் ஆருவுடன் விளையாட, கீர்த்தியின் தாய் தன் மீது கோபத்தில் இருப்பதைத் தெரியாத ஆருவும் கீர்த்தியுடன் விளையாடினாள். இருவரது சந்தோஷத்தை பறிக்கவே உண்மை அறியாது கிளம்பி வந்து கொண்டிருந்தாள் மதுமிதா.
Quite interesting
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️