Skip to content
Home » காற்றோடு காற்றாக-2

காற்றோடு காற்றாக-2

அத்தியாயம் – 2


சங்கர் பணிபுரியும் கிராம பொருளாதார மற்றும் குடும்ப நல ஆராய்ச்சி மையம்
அமைந்திருக்கும் அனுமார்பட்டி கிராமத்தை கடந்து பயணித்துக் கொண்டிருந்தது, அவன் சென்னையில் இருந்து கிளம்பிய அந்த விரைவு ரயில். விரைவு ரயில்கள் அங்கே நிற்பதில்லை.
இந்த மத்திய அரசு நிறுவனத்தின் சார்பாக எத்தனையோ கடிதம் எழுதியாயிற்று ரயில்
வண்டிகள் இங்கே நின்று போக வேண்டும் என்று. ஆனாலும் செவிசாய்க்கப்படவில்லை
அவர்கள் கோரிக்கை.


இந்த நிறுவனம் இருக்கும் அனுமார்ப்பட்டி கிராமம் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் சிறு
மலையின் மடியில் அமைந்திருக்கும் சிற்றூரும் இல்லாமல் நகரமாகவும் இல்லாமல்,
கிராமத்தின் அமைதியும் நகரத்தின் தேவைகளையும் ஒரு சேர பெற்றிருக்கும் நடுத்தர நகரம்.
அஞ்சலக கட்டிடம் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மின்சார துணை மின்நிலையம் தேசிய
வங்கியின் கிளை என்று அத்துணையும் அமையப் பெற்ற வசதிகள் நிறைந்த ஆனால் கிராமம்.
ரயில் பாதையின் இருபுறமும் மஞ்சள் மஞ்ஜேரென்று சாமந்திப் பூக்களும் சூரியகாந்திப்
பூக்களுமாக அந்த பிரதேசத்தை மஞ்சள் பிரதேசமாக அடித்திருந்தது. வயல்களில்
விளைந்திருந்த மரிக்கொழுந்தோ அந்த பகுதி மொத்தத்தையும் தன் சுகந்த வாசனையால்
நிரப்பியிருந்தது. அதிலும் கடந்து போன கோடை வெய்யிலுக்கு மொத்தமும் கருகி கருத்துப்
போயிருந்த ஊர் ஒரே ஒரு மழைக்குப் பின்பு நாடக மேடையில் அப்படியே யாரோ
திரைசீலையை இழுத்து விட்டதைப் போன்று காட்சி மாறிப் போயிருந்தது மனதிற்கு
ரம்மியமாக இருந்தது.


மாநில நெடுஞ்சாலையில் இடது புறம் சுமார் இருநூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட
விஸ்தீரணமான இடத்தில் கிராம பொருளாதார கல்லூரி பலகலைக்கழகம் என்றும்
மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் பணியாளர்கள் என்று தனித்தனியாக குடியிருப்புகள்
நிறைந்திருந்த வளாகம் அது.


கடந்த ஐந்து வருடங்களாக இங்கே களப்பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும்
சங்கருக்கு இந்த வசந்த காலம் மனதை மயக்கும் காலம். அவனுக்கு மட்டுமல்ல அங்கே
பணியாற்றும் அநேகருக்கும் அப்படியே. அதனால் இங்கே பணிக்கு வரும் ஊழியர்கள்
திருமணம் முடிக்காதவர்களாக இருந்தால் இந்த பருவநிலையில் இதைப் போன்ற இயற்கை
எழில் கொஞ்சும் நிலையில் ஒருவருக்கு ஒருவர் காதல் வயப்பட்டு விடுவது இயல்பான
ஒன்றாகவே இருந்தது. அதனாலேயே அனுமார்ப்பட்டிக்கு காதல் கிராமம் என்றொரு பட்டப்
பெயரும் உண்டு.


ஏற்கனவே ரயில் இரண்டு மணி நேர தாமதம். இதில் அடுத்த நகரத்தில் இந்த வண்டி நின்று
அவன் ஆட்டோவைப் பிடித்து பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தன்
குடியிருப்பிற்குப் போய் குளித்து ரெடியாகி கிளம்ப வேண்டும். பாதி நாளைக்கு மேல் ஆகி
விடும். அடக் கடவுளே.
அவனுடைய அலுவலகத்தில் களப்பணியாளனாக பணியாற்றிக் கொண்டிருக்கும் சங்கருக்கு
மூன்று மாதம் பயிற்சிக்கு சென்னைக்கு சென்று விட்டு இன்று மீண்டும் பணியில் சேருவதற்கு
வந்து கொண்டிருக்கிறான்.


விரைவு ரயில் ரெண்டு மணி நேரம் தாமதம் என்றால் ஒப்ப வேண்டுமே! இதற்கு முன்பு
இதேப்போல நடந்த போது அதை இயல்பாக எடுத்துக் கொண்ட அதிகாரிகள் இப்போது
இல்லை. ரெண்டு மாதம் முன்பே ரமேஷ் சொல்லி விட்டான்.


“மச்சான், நம்ம சதாசிவம் சார் ரிடையர் ஆயிட்டாரு இல்ல. அந்த இடத்துக்கு வேற அதிகாரி
வந்துட்டாங்க”
“அப்படியா பரவாயில்லை. உடனே காலி இடத்தை நிரப்பிட்டான்களே. யாரு நம்ம நசீமா
மேடத்துக்குத் தானே போஸ்டிங் ஆயிருக்கு.”
“இல்லைடா”
“ஏண்டா அவுங்க தானே சீனியர்”
“வெளியிலே இருந்து வந்திருக்காங்க”
“அடப்பாவமே. நசீமா மேடம் தான் வருவாங்கன்னு சொல்லிட்டு இப்போ வெளியே இருந்து
ஆள் வந்தா எப்படி?”
“ரொம்ப படிச்ச ஆளு. நேரிடையாக பரிச்சை எழுதி தேர்வாயிருக்காங்க. கிட்டத்தட்ட ஆயிரம்
பேர் பரீட்சை எழுதினதில் இவுங்க தான் முதலிடம். அதனால் கோர்ட்டுக்குப் போனாலும்
செல்லாது”
“நசீமா மேடத்தை நெனச்சா பாவமா இருக்குடா”
“ரொம்ப பாவப்பட என்னடா இருக்கு.? ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
நமக்கென்ன மச்சான்”
“அதுவும் சரி தான்” என்று ரமேஷுடன் ஒப்பியவன் மேற்கொண்டு விவரம் அறிய முற்பட்டு
“அது போகட்டும். புது அதிகாரி எப்படிடா?” என்று கேட்டான்.
“அதிகாரி…..அம்மா”
“ஓ…….” ஆச்சரியமாகிப் போனான்.
“அதுவும் சின்ன வயசு” ரசனையுடன் சொன்னான் ரமேஷ்.
“அப்படியா……..”
“ரொ…….ம்……..ப அழகு”
“ஓ, ஓஹோ……ஓ”
“அதுலயும் கல்யாணம் ஆகலை”
“டேய், மச்சான்.ம். அப்புறம். என்னடா ஒன்னொன்னா சொல்றே?”
“என்னெத்த சொல்றது?” அது நேரம் வரை சங்கரின் பல்சை எகிற வைத்துக் கொண்டிருந்தவன்
சொத்தென்று சுருதி குறைந்தவனாக சலித்துக் கொண்டான்.
“ஏண்டா? இப்படி சலிச்சிக்கிறே?”


“பின்னே என்னடா?” என்று எப்படி சொல்வது என்று யோசித்திருப்பான் போலும். பிறகு
தொடர்ந்தான். “ரொம்ப கெடுபிடிடா. சந்தானம் சார் தான் வேலை கத்துக் கொடுத்தார்.
அவரிடம் கூட பவியமா இருக்காது. அவரே கொஞ்சம் பயந்தார் போலத் தான் இருப்பார்
என்றால் பார்த்துக்கோயேன்”


“அடப்பாவமே. ஜாலியான மனுஷன் அவரு.”
“சுகந்தியக்கா கூட இப்போவெல்லாம் டைம்முக்கு வந்துடறாங்க. லேட்டானால் ரொம்ப
கோபப்படறாங்கடா அந்த மேடம்”
“சுகந்தி அக்கா வா……….” சிரித்தான். “யாரா இருந்தாலும் டபாயிப்பாங்க. அவுங்களுக்கும்
ஆப்பா?” விழுந்து விழுந்து சிரித்தான்.


“ரொம்ப சிரிக்காதே. இனி முன்னே போல அப்படி இப்படின்னு அஞ்சு நிமிஷம் பத்து
நிமிஷமெல்லாம் தாமதமாக வரும் வேலை ஆகாது. அதனாலே மவனே நீயும் நேரத்துக்கு
வந்து சேரு” எச்சரிக்கும் குரலில் முடித்தான்.


“விட்றா. விட்றா. நாங்களும் எத்தனைப் பேரைப் பாத்திருப்பம்”
“விளையாட்டா எடுத்துக்காதே. அவ்வளவு தான் சொல்லிட்டேன்”
“புது தொடப்பம் நல்லாத் தான் பெருக்கும்”
“எனக்கு அப்படித் தோணலைடா”
“போக போக சரியாயிரும். நான் வரதுக்குள்ள பழைய மாதிரி ஆயிரும்டா.”
பின்னொரு நாளில் சுகந்தியக்கா என்று இவர்களால் அன்புடன் அழைக்கப்படும் சீனியரை
இவன் தொடர்பு கொண்ட போது அவள் கணவர் தான் செல்பேசியை எடுத்தவர் ரமேஷ்
சொன்னதை விடவும் அதிகமாகவே சலித்துக் கொண்டார்.”என்னப்பா, இந்த குட்டிப்பயல்
ராத்திரி எல்லாம் தூங்காமல் அழுது தூக்கத்தைக் கெடுக்கிறான். விடியல் காலையில் அசந்து
தூங்கிப் போயிடறோம். ஒரு அஞ்சு பத்து நிமிஷம் லேட்டா போக முடியலை”
“ஏன் மாமா?”
“லேட்டா போனா அரை நாள் லீவு எழுதி வாங்கிடுதுப்பா அந்த பொண்ணு”
“விடுங்க மாமா. எங்கேயாவது அடி வாங்கினா சரியா போயிடும்”
“நானும் அதைத் தான் சொல்வேன் சங்கரு”
“நமக்கும் ஒரு காலம் வரும் இல்ல. அப்ப பாத்துக்கலாம்”
“எதா இருந்தாலும் அவுங்க நமக்கு அதிகாரிப்பா. நிர்வாகம் அவர்களுக்குத் தான் சப்போர்ட்
பண்ணும். நமக்கு எதுக்கு வீண் பொல்லாப்பு. வந்தோமா வேலையை செஞ்ஜோமான்னு
இருந்துட்டு போயிரனும். சரியா நான் சொல்றது”
“ரொம்ப சரி மாமா”


தன்னுடைய குடியிருப்பிற்கு வந்து அவசர அவசரமாக குளித்து கிளம்பியவன் தன்னுடைய
வண்டியைக் கிளப்ப முயன்ற போது அது சண்டித்தனம் செய்தது. நகர மறுத்த அதை
எத்தனையோ தாஜா செய்தாலும் ஊஹூம். கிளம்பவில்லை. அசையக்கூட இல்லை. அதற்கும்
மேல் அதனுடன் மல்லுக் கட்டாமல் பரபரக்க கிளம்பி வந்தவன் தன்னுடைய பகுதியில்
நுழைந்த போது மிகவும் தாமதமாகித் தான் போயிற்று.
இவன் உள்ளே நுழையவும் எதிரே இருந்த பைஜ் கண்களால் சிரித்து கட்டை விரலை தனக்குப்
பின்னால் இருந்த கதவைக் காட்டினான். வருகைப் பதிவேடு உள்ளே இருக்கிறது என்று
பொருள். சங்கர் அதற்கு மேல் தாமதிக்காமல் சட்டென்று அந்த கதவைத் திறந்து கொண்டு
உள்ளே சென்றான்.


உள்ளே சங்கர் பார்த்த முதல் காட்சியே அவன் கண்களில் சின்ன கோபத்தை உண்டாக்கியது.
அவனுடைய செக்சன் ஆபிசர் சந்தானம் சார் நின்று கொண்டிருந்தார். ரொம்ப சர்வீஸ்
ஆனவர். வயதானவர். இவள் வயதுள்ள இரு பெண்களுக்கு தந்தை. அதற்காக என்றில்லா
விட்டாலும் அவளுக்கு இந்த அலுவலக நடைமுறைகளை சொல்லிக் கொடுத்தவர் என்ற
முறைக்காவது அவரை உட்கார வைத்திருக்கலாம். ஆனால் இந்த சந்தானம் சாரும் தான்
ஆகட்டும் எதற்காக அவள் முன்னால் சிறு பையனைப் போல இவ்வளவு பணிவோடு நிற்பது
என்றில்லை. இப்போது கோபம் அவளிடமிருந்து அவரிடம் இடம் மாறியிருந்தது. அவரும்
அவனைப் பார்த்து பொருள் விளங்கி கொள்ள இயலாத ஒரு பார்வைப் பார்த்தார். அவரைப்
பார்த்த அவன் கண்களில் கோபம் அப்பட்டமாக இருந்தது.


ஆனாலும் தன் பிரியத்திற்குரிய மனிதர் ஆதலால் “குட் மார்னிங் சார்” என்று வணக்கம்
வைத்தான். அவர் வாயைத் திறந்து பதில் வணக்கம் வைக்காமல் லேசாக தலையை
அசைத்தார். அதே வேகத்தில் வேறு புறம் தலையைத் திருப்பிக் கொண்டார். ஓஹோ, அந்த
அளவிற்கு ஆச்சா? கோபத்தோடு வருகைப் பதிவேட்டிற்காக அவளிடம் கையை நீட்டினான்.
அவள், அது தான் மலைமுழுங்கி மகாதேவி இவனுடைய பார்வை நின்று கொண்டிருந்த
சந்தானத்திடம் இருந்து தன்னிடம் திரும்பிய விதத்தில் அவன் மனதில் என்ன ஓடுகிறது
என்பதை புரியாமலா இருப்பாள்? ஆனால் குனிந்த தலை நிமிராமல் சங்கரை சற்றும்
கண்டுக்கொள்ளாமல் தன் வேலையில் கண்ணாக இருந்தாள். தன்னைக் கண்டதும்
தாமதாமாக வந்ததற்கு காரணம் ஏதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவளுடைய
கண்டுக் கொள்ளாத பாவனை எரிச்சலைக் கொடுத்தது. ஆனாலும் காட்டிக் கொள்ள
முடியாதே. அதிகாரி ஆயிற்றே. அவள் அருகில் இருந்தது பதிவேடு.

இவனாக எடுப்பதென்றால் மேஜையின் குறுக்கே படுத்தார் போல எட்டி எடுக்க வேண்டும். முதன்
முதலில் பார்க்கும் அதிகாரியிடம் அதுவும் ஒரு பெண்ணிடம் அதைப் போல நாகரீகமில்லாமல்
நடந்து கொள்ள முடியாது. அவளாக கொடுத்தால் தான் உண்டு. கேட்டுத் தான் ஆக வேண்டும்
நம்மை பார்த்தும் பாராதவளைப் போல இருக்கும் இவளிடமும் நாமும் அதைப் போல இருக்க
முடியாது. ஏனெனில் அவள் எனக்கு அதிகாரி என்று தனக்குத் தானே நூறு முறை சொல்லிக்
கொண்டு தன்னை அடக்கிக் கொண்டவன்.
“குட் மார்னிங் மேடம். வருகை பதிவேடு வேண்டும்”


அவன் உள்ளே வந்த போதே அவனைப் பார்த்து விட்டவள், பிறகும் அவன் பார்வை
சந்தானத்தைப் பார்த்ததும் பிறகு தன்னிடம் திரும்பியதையும் கண்டு விட்டிருந்தவள்,
அப்போது தான் அவனை முதன் முதலாக பார்ப்பதைப் போல நிமிர்ந்து ஆழமாகப் பார்த்தாள்.
அவள் தன்னைப் பார்த்ததும் மீண்டும் அவளை நோக்கி தன் கையை நோக்கினான்.
“யார் நீங்கள்?”


“எ…என்ன…? எது? என்ன?” தடுமாறினான் சங்கர்.
“யார் நீங்கன்னு கேட்டேன்” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
சந்தானம் சார் என்னவோ சொல்ல வந்தவரை வலது கரம் நீட்டி தடுத்தவள் சங்கரைப் பார்த்து
இரு புருவத்தையும் ஒரு சேர உயர்த்தினாள். தப்பு தான். உணர்ந்தான் சங்கர். இன்று தான்
தன்னை முதன் முதலில் பார்க்கிறாள். அவளுக்குத் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்
கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து என்னவோ அதிகாரமாக பதிவேட்டிற்கு கையை
நீட்டியது தவறு தான். அதற்காக இத்தனை அலட்சியமா? என்று ஒரு புறம் கோபம் வந்தாலும்
தன் தவறு உணர்ந்து அடக்கிக் கொண்டவனாக இயல்பாகவே அவளிடம் பேச முனைந்தான்
அவன்.


“சாரி மேடம், என் பெயர் சங்கர், நான் பயிற்சிக்காக மூன்று மாதம் சென்னைக்குப்
போயிருந்தேன். இன்னைக்குத் தான் டூட்டியில் சேரனும். ரயில் ரெண்டு மணி நேரம் தாமதம்.
அதனால் தான் டைமுக்கு வர முடியவில்லை”
“நீங்க தாமதமாக வந்தது சரி. ஆனால்……” சொன்னவள் அவனை மேலிருந்து கீழ் வரை
ஒருமுறை முழுதுமாகப் பார்த்தாள். எதிரே நிற்பவன் தன் கீழே வேலை செய்பவனாக
இருந்தாலும் ஒரு ஆண். தான் என்ன தான் அதிகாரியாக இருந்தாலும் பெண். எப்படி
சொல்வது என்ற தயக்கம் ஜஸ்ட் ஒரே ஒரு வினாடி தான் அவளுடைய நீள விழிகளில் தோன்றி
மறைந்தது. சுதாரித்துக் கொண்டவள் “ஆனால்……அலுவலகத்திற்கு வருவதற்கு என்று முறை
அதாவது ஆபிஸ் டேகோரம் இருக்கிறது. குறைந்த பட்ச கண்ணியமும் உடையில் ஒரு
நேர்த்தியும் வேண்டாமா? அதை கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம் இல்லையா?’”
என்றாள்.


அவள் பார்வை தன்னை அளவிட்டதைக் கண்டவன் அவள் இப்படி சொல்லவும் தானும்
தன்னைத் தானே குனிந்து பார்த்தான். நீர் ஒழுகும் தலை. அதுவும் சரியாக வாரப்படாமல்
முகத்தில் விழுந்து முகத்திற்கு முரட்டுத்தனத்தைக் கொடுத்திருந்தது. இரவு ரயிலில் சரியான
உறக்கம் இல்லாததால் சிவப்பு ஏறியிருந்த கடைக்கண்கள். கொஞ்சமாக கசங்கியிருந்த
சட்டை. அதுவும் முன் பக்கம் பேண்ட்டுக்குள் செருகப்பட்டும், பின்புறம் செருகப்படாமலும்,
சட்டையின் கைகள் மடித்து விடப்பட்டிருந்த விதமும்…! கால்களில் வீட்டுக்குப் போடும்
ஹவாய் செப்பல்….! அடடா…! அவசரத்திற்கு அண்டாவிற்குள் கையை விட்டாலும் போகாது
என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் அவசரமாக கிளம்பி வந்ததின் விளைவு.


அதிகாரியாக மட்டுமல்லாமல் அழகியான அவளின் முதல் பார்வையிலேயே அவள் மதிப்பில்
தான் ஏகத்திற்கும் சரிக்கி விட்டதை உணர்ந்தான் இளைஞனாக. அவமானமாக இருந்தது.
இதே இடத்தில் பழைய அதிகாரி இருந்திருந்தால் அவனோடு அவனுடைய தோற்றத்தை
ஜாலியாக கிண்டலடித்து எதையாவது சொல்லி அவனை வம்பிழுத்து வெட்கப்பட
வைத்திருப்பார். இவளைப் போல அவனை அவமானமாக உணர வைத்திருக்க மாட்டார்.
ச்சை. ஆனால் அவளை சொல்லியும் தப்பில்லை. அவன் இன்றைக்கு இருந்த நிலையில் வேறு
எந்த பெண்ணாக இருந்தாலும் இப்படித் தான் நடந்து கொண்டிருப்பாள் என்று நியாய
புத்தியுடன் யோசித்தான். தலையைக் குனிந்து கொண்டான்.


அவள் கொடுத்த பதிவேட்டை வாங்கி கையெழுத்திட்டு வந்தவன் வெளியே வந்தவன்
சுகந்தியாக்காவைப் பார்த்து அவளருகில் போக எத்தனிக்கையில் அவள் ஜாடையில் டீக்
குடிக்க போகும் போது பேசலாம் என்றாள். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று
அலுத்துக் கொண்டு தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான்.


வெளியே வந்த சந்தானம் சார் வரும் போதே ரமேஷையும் பைஜூவையும் அழைத்துக்
கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தார். அவர்கள் மூவரும் ஏதேதோ பேசிக்
கொண்டிருந்தவர்கள் இவனைப் பார்த்ததில் இருந்து, அறையின் உள்ளே நடந்ததை சந்தானம்
சார் அவர்களிடம் சொல்லியிருப்பார் என்று நிச்சயமாயிற்று. அவர்களின் பார்வையில், சிறு
கோபம் எழுந்தது. அந்த கோபம், இவர்களிடம் நடந்ததை நடந்தது போல சொன்ன
சந்தானத்தின் மீதா அல்லது அப்படி நடந்து கொண்ட அவள் மீதா அல்லது எல்லாவற்றுக்கும்
மேலாக தன் மீதா என்று புரியவில்லை.


சுகந்தி டீக்கு அழைத்த போதும் அதே சிறு எரிச்சலுடன் சென்றவனுடன் ரமேஷும்
பைஜூவும் சேர்ந்து கொண்டார்கள்.
“என்னடா மச்சான், வந்ததும் வராததுமாய் சரியான மண்டகப்படி போல” ரமேஷ் தான்
முதலில் ஆரம்பித்தான்.


“நாங்கள் எல்லாம், அம்மையார் வேலைக்கு வந்ததுமே வாங்கிட்டோம். நீ தான் லேட்” பைஜூ
அவன் வாங்கியதை மனதிற்குள் அன்றைய நிகழ்ச்சியை ரிவைண்ட் பண்ணிப் பார்த்து
அடக்கமாட்டாத ஆத்திரத்துடன் சொல்லிக் கொண்டான்.


“டேய், நீ பேசாதே. அன்னைக்கு நீ எப்படி நடந்து கொண்டே?” சுகந்தியக்கா கேட்டாள்.
“எப்படி நடந்து கொண்டேன்?”
“ம்……..டேய், நானும் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்”
“என்ன செஞ்சிட்டாங்களாம்?” என்று எதிர் கேள்வி கேட்டவன் சங்கரிடம் “மச்சான் நீயே
சொல்லு. ஒரு பொண்ணு அழகா இருந்தால் நாம பார்ப்போமா? மாட்டோமா? அதை தான்
நானும் செஞ்சேன்”


“அதுக்குன்னு…ஒரு பெண்ணை இப்படியா பார்க்கிறது?”
“அக்காவே கோபப்படனும்னா அப்படி என்ன தாண்டா பார்த்தே?”
“குடிக்க மாட்டேன். அப்படியே சாப்பிடுவேன். என்று ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் அந்த குட்டிப்
பையன் சொல்வதைப் போல கண்ணாலேயே அவளை சாப்பிட்டு விட்டான்” ரமேஷ் அந்த குட்டிப்பையனைப் போல மிமிக்கிரி செய்து காண்பித்தான்.
“என்னடா உன் பஞ்சாயத்தே பெரிசா இருக்கும் போல”
“அதோடு நிறுத்தியிருந்தால் தேவலையே. சும்மா இருந்தானா?”
“என்னடா செஞ்சே?”
“மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு ரகசியமா அவள் கிட்டே போய் வழிந்து
கொண்டு நின்றான்”
“அக்கா, அதை ரகசியமா கிட்டப் போய்த் தானே சொன்னான். எல்லாருக்கும் எதிரில்
சொல்லியிருந்தால் தப்பு தான்”
“கரெக்ட் சங்கர். ஆனால் அதுக்குன்னு எப்படி பேசியது தெரியுமா அந்த ராட்சசி”
“யக்கா, சொம்பு ரொம்ப அடி வாங்கியிருக்கும் போல” சங்கர் பைஜூவைப் பார்த்து சிரித்தான்.
“செம அடி” அடக்க மாட்டாமல் சிரித்தான் ரமேஷ்.
“அதுக்குன்னு, ஹல்லோ மிஸ்டர், இந்த வேலை எல்லாம் இங்கே வேண்டாம். வந்தோமா
வேலையைப் பார்த்தோமான்னு இருக்கணும். என்று மூஞ்சில அடிச்சிட்டாளே. அப்புறம்
என்ன?” என்று அன்றைய அவமானத்தில் இன்றும் அதே கோபம் மாறாமல் சொன்னான்
பைஜூ.
“நீ பொதுவாக எல்லா பெண்களையும் இப்படித் தான் கடலைப் போட ஆரம்பிப்பேன்னு
அவளுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு” என்றாள் சுகந்தி.
அவள் சொன்னதற்கு ரமேஷும் சங்கரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.”சரியா சொன்னீங்க”
என்று.


அவர்களுடன் சேர்ந்து சிரித்தவன் “அது தான் எப்படின்னு தெரியலைக்கா” என்று
உண்மையாகவே ஆச்சரியப்பட்டான் பைஜூ.
“சரி விடுடா” அவன் தோளில் கைப் போட்டு தன்னோடு சேர்த்து இழுத்துக் கொண்டான்
சங்கர்.
“அக்கா, நம்ம கதையை விடுங்க. மச்சான் நீ சொல்லுடா என்ன ஆச்சு?” ரமேஷின் கேள்விக்கு,
“அது தான் மண்டகப்படி நடந்தது என்று சந்தானம் சார் சொன்னாரே” பைஜூக்கு மனசு
ஆறியது.
“அப்படியாடா?” கேட்ட சுகந்திக்கு பதில் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டான்.
“அக்கா, இன்னைக்கு அய்யா வந்திருக்கும் அழகைப் பாரேன்” ரமேஷுக்கு சிரிப்பு
தாங்கவில்லை.
“ச்சை. சும்மா இருடா”


“என்கிட்டே கோபித்துக் கொண்டால் ஆச்சா?” மீண்டும் அவனைப் பார்த்து சிரித்தான். அவன்
சிரிப்பு சுகந்திக்கும் தொடரவே சங்கர் “அக்கா என்னக்கா?” என்று சிணுங்கினான்.
“பின்னே என்ன சங்கர் நீயும் தான்? இப்படி வந்திருக்கிறாயே. எப்போதும் நன்றாக
டிப்டாப்பாக வருவாய். இன்னைக்கு இந்த கோலத்தைப் பார்த்தால் யாருக்குத் தான் திட்ட
தோன்றாது.? அதுவும் முதன்முதலாக ஒரு அதிகாரியைப் பார்க்கப் போகிறோமே என்று
கொஞ்சமாவது நெனப்பு இருக்கா உனக்கு?”
“ரயில் ரெண்டு மணி நேரம் தாமதம். அதை தொடர்ந்து எல்லாமே இன்று சொதப்பல் தான்”
“ஆனாலும் அதற்காக இப்படி அவனிடம் மூஞ்சி காட்டியிருக்க கூடாது” என்று பைஜூ
அவனுக்காக வக்காலத்து வாங்கினான்.
“ராட்சசி………” அவள் பார்வையின் தீட்சண்யத்தையும் அதன் அலட்சியத்தையும் மீண்டும் கண்
முன் கொண்டு வந்து அதன் தாக்கத்தில் தன்னை மறந்து உடலைக் குலுக்கிக்
கொண்டான்.”யப்பா…..என்ன பார்வைடா சாமி”
“ஆனாலும் ஒரு பொம்பிளைக்கு இவ்வளவு திமிரு கூடாது” பைஜூ.
“பொம்பிளன்னா அவ்வளவு இளக்காரமா? சீறினாள் சுகந்தி.
“ஹோல்ட் ஆன். அக்கா நீயும் தான் பொம்பளை. நீ எப்படி இருக்கே. உன்ன சொல்வோமா?”
மூவரும் ஒரு சேர கோரசாக சொன்னார்கள்.
“இப்படிப் பேசி என் வாயை அடச்சிருங்கடா”
“ஏன் அக்கா, இவளை எல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா?” சங்கரின் கேள்விக்கு,
“ஏண்டா, பெத்து பேரும் வெச்சிருக்காங்க மைத்திரேயி பாகம்பிரியா என்று” பதில் சொன்னது
ரமேஷ்.
“அய்யே, பாகம்பிரியா..? என்ன பேரு இது அக்கா?”
“அது பார்வதியின் பெயர். சிவனின் இடது பாகம் விட்டு பிரியாதவள் என்று அர்த்தம்.
மைத்திரேயி வேத காலத்தில் இருந்த புத்திசாலி பெண்களில் ஒருத்தி என்று அவளே
சொல்லியிருக்கிறாள்.”
“ஏன் அக்கா, இவளை எதிரில் பார்க்கும் போதே தாங்கலையே. இவளை இடது பாகத்தில்
வைத்துக் கொண்டு விட்டாலும்…….யே…அப்பா…தாங்காதுடா சாமி” தலையை சிலுப்பிக்
கொண்டான் சங்கர்.
“மச்சான் நீ ஒன்னும் அதற்கு கவலைப்படத் தேவையில்லை. அதுக்கு ஆள் வந்தாச்சு” பைஜூ,
“உம் . அப்படியா…..! ஐயோ பாவமே, யாருடா அந்த மகானுபாவன்?”
“நம்ம வங்கியில ஒருத்தன் இருப்பானே உதவி மேனேஜர் என்று” சுகந்தியக்கா.
“சிவப்பா அழகா அஜித் மாதிரி” ரமேஷ்.

“பழைய கமலஹாசன் மாதிரி” என்று மேலும் கூட்டினான் ரமேஷ்.
“ஓ, அவனா….?”
“ஆமாம்” என்றாள் சுகந்தி.
“பாவம்டா அவன்” என்றான் சங்கர். பின்னாளில் தான் அவளிடம் பாவப்படப் போவதை
அறியாமல்.
“இன்னாருக்கு இன்னார் என்று கடவுள் முடிச்சுப் போட்டு வைத்திருப்பார். நாம யார் அதை
வியாக்கியானம் செய்ய?” என்று பெரியவளாக இந்த பேச்சை முடித்து வைத்தாள் சுகந்தி.
“அதெல்லாம் சரிக்கா. இந்த அம்மா கொஞ்சம் எல்லோரிடம் தன்மையா நடந்து கொள்ளலாம்
இல்லையா?” என்று விட்ட இடத்தில் வந்து நின்றான் சங்கர்.
“உண்மையில் சொல்லனும்னா அவள் அப்படி ஒன்றும் மோசம் இல்லை சங்கர். கொஞ்சம்
ஜாக்கிரதையாக இருக்கிறாள். மற்றப்படி என்னிடம் நல்லா தோழமையாகத் தான் நடந்து
கொள்கிறாள்”
“உன்னிடம் எல்லோருமே நல்லாத் தான் இருப்பாங்க. ஏன்னா நீ பாசக்காரி ஆச்சே”
“நம்ம அக்கவுண்ட்ஸ் ஷீலா தான் ரொம்ப பிரென்ட். ப்ரியா வீட்டருகே தான் ஷீலா
குடியிருக்கிறாள்”
“ஓஹோ….அதுசரி. ஷீலாவுடன் தான் வருவாளா? சரி தான்” என்று தலையை ஆட்டிக்
கொண்டான்.
“ஏண்டா மச்சான், ஷீலா உன்னைப் பத்தி அவளிடம் ஏற்கனவே சொல்லியிருப்பாளோ?”
ரமேஷ் சந்தேகத்துடன் கேட்டான்.
“கரெக்ட். சந்தேகமே இல்லாமல். என்னடா இது, இன்னைக்குத் தான் முதன் முதலில் நம்மைப்
பார்க்கிறாள். அதற்குள் இந்த வாங்கு வாங்கறாளேன்னு நெனச்சேன். சரி தான். அது
ஷீலாவின் கைங்கரியம் தான்”
“இன்னுமாடா?” என்றாள் சுகந்தி கவலையுடன்.


“சரியாகியிருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் மாறவில்லை அக்கா”
பொதுவாக சங்கர் எல்லோரிடமுமே சகஜமாகவும் மிகவும் தோழைமையுடன் பழகக்
கூடியவன். அவன் இயல்பிற்கு அதிகாரிகள் முதல் தோட்டவேலை செய்பவர்கள் கூட
சிநேகமாகி விடுவர். கருப்பாக இருந்தாலும் களையான முகத்துடன் நறுவிசான நடையுடை
பாவனையுடன் இருக்கும் ஷீலாவும் இவனிடம் மிகவும் நட்பாகவே பழகியவள். சங்கரின்
அக்கா லாவண்யாவிற்கு குழந்தைப் பிறந்த போது அவளைப் பார்ப்பதற்கு இவனுடைய
வீட்டிற்கு வந்த ஷீலா அவன் வீட்டின் நிலையறிந்து பின்பு அவளுடைய நட்பு ஒரு கட்டத்தில்
அடுத்த லெவலுக்கு போக எத்தனிப்பதைப் புரிந்து கொண்டவன் மெல்ல சூதானமாக
அவளிடமிருந்து நகர்ந்து கொண்டான். ஆனால் அவ்வளவு சுலபத்தில் அவனை விட்டு
விலகிட இயலாமல் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவனை வறுத்தெடுப்பாள்.

இப்போது கூட பயிற்சிக்காக சென்னைக்குப் போய் வந்த ரசீதுகளை அவ்வளவு சுலபத்தில் போட்டுக்
கொடுக்க மாட்டாள். சங்கர் நேரிலே போய் அவளிடம் பேசினால் தான் காரியம் ஆகும்.
நட்பாக பேசுவதில் சங்கருக்கும் எந்த கஷ்டமும் இல்லை. ஆனால் அதற்கும் மேலான அவள்
எதிர்பார்ப்புத் தான் அவனை அவளிடம் நெருங்க விடாது.
எல்லோரிடமும் அது பெண்களாக இருந்தாலும் சரி மிகவும் நட்புடன் பேசும் சங்கரை
பெண்களுமே மிகவும் உரிமையுடன், நட்புடன், ஏன் அதற்கும் மேலாக சொந்தம்
பாராட்டுவார்கள். இப்போது ஷீலா தன்னைப் பற்றி என்னவெல்லாம் அவளிடம் சொல்லி
வைத்திருக்கிறாள் என்று தெரியவில்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லி வைக்கட்டு
ஷீலாவின் பேச்சைக் கேட்டு இந்த பிரியாவும் என்னை நடத்தட்டும். அதை நான் சரி செய்ய
முயல மாட்டேன். பார்ப்போம். சுகந்தியின் கணவர் சொன்னதைப் போல என்ன தான்
செய்தாலும் பிரியா இந்த நிறுவனத்தில் அதிகாரி. அவளுக்கு தான் பக்கபலமாக இருக்கும்
இந்த நிறுவனம். நான் எதுக்கு இங்கே வந்திருக்கிறேன். வேலை செய்ய? வந்தோமா
வேலையை செஞ்சோமா என்று இருப்பது தான் நமக்கு நல்லது என்று மனதிற்குள் உறுதியாக
நினைத்துக் கொண்டான்.

5 thoughts on “காற்றோடு காற்றாக-2”

  1. Avatar

    நல்ல நடை. கதாபாத்திரங்களின் இயல்பான பேச்சு . Going good and quite interesting. Waiting for the next chapter. 👍👏

    1. Avatar
      G.சியாமளா கோபு

      மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்

    2. Avatar

      நல்ல நடை. கதாபாத்திரங்களின் இயல்பான பேச்சு. நன்றாக உள்ளது. அடுத்த அத்தியாத்திற்கு காத்திருக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *