Skip to content
Home » காற்றோடு காற்றாக- 3

காற்றோடு காற்றாக- 3

3
ஒரு விடுமுறை நாளின் மாலைப் பொழுதில் இவர்கள் அந்த நிறுவனத்தின் வளாகத்திற்குள்
இருக்கும் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். சங்கர்
கால்களில் ரீபோக் ஷூவும் தொடைகளைக் கவ்விப் பிடிக்கும் ஷார்ட்சும் கையில்லாத
டீஷர்ட்டுமாக விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டு ரொம்ப மும்மரமாக போய்க்
கொண்டிருந்தது. இவர்கள் டீம் ஜெயிப்பதற்கான கடைசி வாய்ப்பில் இருந்தார்கள்.
திடீரென்று யாரோ சங்கர் என்று பெயர் சொல்லி அழைப்பதாக காதில் விழவே அதை
கவனிக்காமல் வெகு மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தவனை ரமேஷ் தோளில் தட்டி,
“உன்னை கூப்பிடறாங்க பாரு”


“யாரு?” நிற்காமல் பந்தை உதைத்துக் கொண்டிருந்தான்.
“டேய், திரும்பி பாருடா. ஷீலாவும்…..” அவன் முடிப்பதற்குள்
“டேய், விடுறா. விளையாட்டை கவனி”
“எ, பிரியா கூட நிக்கிறாடா”
“சங்கர்” இப்போது ஷீலா கூப்பிடுவதை கவனித்து விட்டதால் வேறு வழியில்லாமல்
அவர்களை நெருங்காமல் இங்கே இருந்தே “என்ன?’ என்று கேட்டான்.
“இங்கே வா” ஷீலா கூப்பிட்டாள். அவளுடைய வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை போலும். இதை
உதைப்பதற்கு நானா ஆளு? ஷீலா பேச்சைக் கேட்டு அன்னைக்கு என்னை முறைத்தாய்
அல்லவா! எவனாவது இளிச்சவாயன் அகப்பட்டால் பார்த்துக் கொள். திரும்பி ஆட்டத்தில்
கவனம் செலுத்த தொடங்கினான்.
“நான் சொன்னேன் இல்லே பிரியா. அவன் சரியான திமிர் பிடித்தவன் என்று” ஷீலா

சொன்னது சங்கர் காதில் விழுந்து விட்டது.
இரு வரேன். இன்னைக்கு இவளை ஒரு காட்டு காட்டினாத் தான் சரிப்படும். தன்னருகே வந்த
பந்தை எட்டி ஒரு உதை உதைத்து விட்டு ஷீலாவை நோக்கிப் போனான்.
“என்ன?”
“கூப்பிட்டா வர மாட்டாயா?”
“நீ கூப்பிட்டதும் வந்து நிக்கறதுக்கு நான் நீ வெச்ச ஆளா?”
“பாரு பிரியா எப்படி பேசறான்னு?”
“ஹல்லோ, என்னை கூப்பிட்டது நீ. உனக்குத் தான் நான் பதில் சொன்னேன். எதுக்கு அவங்க
கிட்ட கோழி சொல்லுவே?”


“ஏன் சங்கர், கூப்பிட்டால் வரக் கூடாதா?” இப்போது கேட்டது ஷீலா இல்லை பிரியா.
“இது டூட்டி நேரம் இல்லை. நீங்க கூப்பிட்டதும் வருவதற்கு” என்றவன் அவளிடம்
நேரிடையாக சொன்னான். ”மேலும் உங்க முன்னாடி வருவதற்கு குறைந்தபட்ச கண்ணியமும்
ஆடையில் ஒரு நேர்த்தியும் வேணும். நான் இப்போது அப்படி இல்லை. அதனால் நான்
எப்போது அதுபோல இருப்பேனோ அப்போது நீங்கள் கூப்பிட்டதும் வருகிறேன். சரியா”
“நான் சொன்னேன் இல்லே.” பிரியாவிடம் சொன்ன ஷீலா, அவனிடம் தன்மையாக “இந்த
வண்டி கிளம்ப மாட்டேங்குது. கொஞ்சம் உதவி செய் சங்கர்”
இன்றைக்கு பிரியாவிற்கு பதிலுக்கு நன்றாக கொடுத்தாயிற்று. அதற்கு மேல் அவளிடம் வம்பு
வேண்டாம் என்று நினைத்தவனாக வண்டியை உதைத்துப் பார்த்தான். ஊஹூம். வண்டி
கிளம்புவதாக இல்லை.


“ஊஹூம், ஒன்னும் முடியாது. ஒன்னு செய்யுங்க. வண்டியை விட்டுட்டு போங்க. நான்
மெக்கானிக் கடைக்குப் போய் சரி பண்ணி உன் வீட்ல விட்டுடறேன்”
“சரி. ஆனால் வண்டி என்னுடையது இல்லை. பிரியாவோடது. நீ சரி பண்ணி அவள் வீட்டில்
விட்டு விடு”


அதேப்போல் வண்டியை சரிப் பண்ணி அவள் வீட்டில் கொண்டு விடப் போன போது
சங்கரையும் அவனோடு வந்திருந்த ரமேஷையும் உள்ளே அழைத்தாள் பிரியா. ஹாலில் உள்ள
சோபாவில் அமர வைத்து டீ வேறு கொடுத்து உபசரித்தாள்.
“ஷீலாவின் பேச்சைக் கேட்டு நம்மளை எல்லாம் சுத்த பொறுக்கிப் பசங்கன்னு
நெனச்சிருப்பாடா. ஆனால் உண்மையில் பரவாயில்லைடா இவள்” என்ற ரமேஷின்
வார்த்தையை சங்கரின் உள்மனது ஆமாம் என்றது.
“நம்ம கூட இத்தனை நாள் வேலைப் பார்த்திருக்காள் இல்லையா. இந்நேரம் நம்மைப் பற்றி
புரிந்து கொண்டிருப்பாள்”


“அதுவும் சரி தான். கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த புத்தியும் எத்தனை
நாளைக்கு உடன் வரும். ஷீலாவின் உபதேசம் மறைந்து போயிருக்கும். நம்மளைப் பத்தி
புரிந்திருக்கும்” என்றான் ரமேஷ்.


“இப்போது நம்மை பார்க்கும் பார்வையே மாறியிருக்கிறது” என்றான் சங்கர்.
“உண்மை. குட் மார்னிங் சொன்னால் முன்பெல்லாம் தலையை மட்டும் ஒப்புக்கு அசைத்து
விட்டு செல்பவள் இப்போதெல்லாம் வாயைத் திறந்து பதிலுக்கு வணக்கம் வைக்கிறாள்”
“நான் தான் சொன்னேனே. நாம் எத்தனை அதிகாரியைப் பார்த்திருக்கிறோம். ஒரு காட்டு
காட்டினால் சரியாப் போகும்”
ஒருநாள் மதிய உணவின் போது அன்று சுகந்தியின் பிறந்த நாள் என்று கேக் வாங்கி வந்து
அவளை வெட்ட வைத்து கைத் தட்டி பாட்டு பாடி ஆரவாரமாக கொண்டாடிக் கொண்டிருந்த
போது தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் பிரியா.
அவளைக் கண்டதும் சட்டென்று அமைதியாக நின்றவர்களைப் பார்த்து மெல்லிய குரலில்
கேட்டாள் அவள்.”ஏன்னா விசேஷம்?”


சந்தானம் சார் தான் முன் வந்து “இன்று நம்ம சுகந்திம்மாவுக்குப் பிறந்த நாள் மேடம். அது
தான்….” என்று இழுத்தார் போல சொன்னார். மற்றவர்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க
சங்கர் வெட்டிய கேக்கில் ஒரு துண்டை எடுத்து வாயில் வைத்து தின்றுக் கொண்டிருந்தான்.
பிரியா முன்னே வந்து சுகந்தியின் கரம் பற்றிக் குலுக்கி “ஹேப்பி பர்த் டே சுகந்திக்கா”
என்றாள்.


நான் சொல்லவில்லை பிரியா ரொம்பவும் தோழமையான பெண் என்று சுகந்தி இவர்கள்
மூவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு பிரியாவிடம் “நன்றி மேடம்” என்றாள்.
அவளுக்கு கொடுத்த கேக்கை வாங்கிக் கொண்டு தன் அறைக்குப் போக திரும்புகையில்
சங்கரைப் பார்த்து தவடையைக் காண்பித்து கேக் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று ஜாடைக்
காட்டி விட்டு சென்றாள். என்னவோ அந்த சின்ன செய்கை அவளுக்கும் தனக்கும் இடையில்
ஏதோ ஒன்று இருப்பதைப் போல சிறு எண்ணம் தோன்றியது அவனுக்கு.


ஒருநாள் காலையில் சங்கர் அலுவலகத்திற்கு வந்ததுமே அவனை பிரியா அழைக்கிறாள் என்று
சொல்லவும் ரமேஷ் அங்கேயிருந்தே வலது கட்டை விரலை உயர்த்தி மெல்ல ஆல் தி பெஸ்ட்
என்றான். பதிலுக்கு சங்கர் பார்த்துக்கலாம் என்று ஜாடை காட்டி விட்டு சென்றான்.
அவள் அறைக்குள் நுழைந்ததுமே,”குட் மார்னிங் மேடம்” என்றான்.
அதுவரை தலையைக் குனிந்து கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தவள் இவனைக்
கண்டதும் இயல்பாக பதிலுக்கு “குட் மார்னிங்” என்றாள். மேற்கொண்டு “உட்காருங்கள்”
என்று வேறு சொன்னாள்.
என்னடா இது உலக மகா அதிசயமாக இருக்கிறது என்று தனக்குள் வியந்து கொண்டான்.
ஈசான மூலையில் மழைக்கு அறிகுறியாக இடி இடிப்பதைப் போல கற்பனை செய்து


கொண்டவனுக்கு இதழ்களில் புன்னகை அரும்பியது. அவன் முகத்தில் விரிந்த புன்னகையை
கவனித்தவளுக்கு அதற்கான காரணத்தை யூகிக்க முடிந்தது. கீழுதட்டை சுழித்துக்
கொண்டவள் அவனை நேருக்கு நேர் ஒரு பார்வைப் பார்த்தாள்.
மை வைக்காமலே வைத்ததைப் போன்ற கண்களில் அந்த பார்வை வீச்சு மின்னலைப் போல
வெட்டி மறைந்தது. என்ன பார்வைடா சாமி. ஆளை உலுக்கி தோலை உரிக்கும் பார்வை.
அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்ததும் அதற்காகவே காத்திருந்ததைப் போல
உடனே கேட்டாள்.”உங்களுக்கு இந்த வட்டார வளர்ச்சி அலுவலரைத் தெரியுமா?” என்று.


சங்கருக்கு தெரியும் என்று சொல்வதா? அல்லது தெரியாது என்று சொல்வதா? என்று
யோசனையாக இருந்தது. பி.டி.ஓ திரு சதாசிவத்தை தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரியும்
தான். எங்கே பார்த்தாலும் “என்னப்பா சங்கர் எப்படி இருக்கே?” என்று அவர் கேட்கும்
அளவிற்கு தங்களுக்குள் பழக்கம் உண்டு தான். ஆனால் இவள் எதற்கு கேட்கிறாள்?
அவன் பதில் சொல்வதற்கு யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள்,”ரொம்ப
யோசிக்காதீங்க. உங்களுக்கு அவரை நன்றாகத் தெரியும் என்பது எனக்கு தெரியும். அது
போகட்டும் அதே அலுவலக வளாகத்தில் இருக்கும் கால்நடை மருத்துவர் டேனியாலையும்
உங்களுக்குத் தெரியும் தானே”


“மேடம், எல்லாரையும் எனக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்குத் தான் என்னைத் தெரியாது ”
என்று நடிகர் விவேக்கின் பாணியில் சொன்னான்.
“ஹா” என்றவளின் பார்வை உன்னை எனக்குத் தெரியாதா என்றது.
இந்த பார்வை தான் தன்னுள் எலும்பு வரை ஊடுருவி அவனை குத்திப் பார்க்கிறது.
எப்போதும் போலவே இப்போதும் அவள் பார்வையின் தீட்சண்யம் தாங்காமல் கண்களைத்
தாழ்த்திக் கொண்டவன் அவள் குரல் கேட்டு நிமிர்ந்தான்.


“சங்கர்” அவள் அழைப்பிற்கு நிமிர்ந்து பார்த்தவன் அவள் எதையோ தீவிரமாக தன்னுடன்
பேசுவதற்கு தயாராக இருக்கவும் அவனும் வெரி மச் அபிசியல் என்பதைப் போல நிமிர்ந்து
உட்கார்ந்தான்.
“நான் ஒரு ப்ரோபோசல் அனுப்பியிருந்தேன். அதற்கான அனுமதியும் நிதியும்
கிடைத்திருக்கிறது”
“வெரி குட்”
“ம்.”சன்னமாக் புன்னகைத்தவள் “அதற்கு உங்கள் எல்லோரின் ஒத்துழைப்பும் எனக்குத்
தேவை.”
“கண்டிப்பா”
“அதற்கு தனியாக ஒரு மீட்டிங் போட்டு இதைப் பற்றி விளக்குகிறேன்”
“சரி…” அதற்கு எதற்கு என்னை மட்டும் அழைத்தாய் என்பதை போல இழுத்தான்.


“அதற்கு முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. முன் ஆயத்தம். பிரி பிரிபரேசன்”
“புரிகிறது. சொல்லுங்கள்”
“என்னுடைய வரைவு அறிக்கையின் சம்பந்தமாக எனக்கு பி.டி.ஓ வையும் கால்நடை
மருத்துவரையும் பார்க்க வேண்டியிருக்கிறது. எனக்கு அவர்களை எல்லாம் பழக்கம் இல்லை.
மேலும் இந்த மாநில அரசு அலுவலகங்களின் நடைமுறைகள் எனக்கு தெரியாது. அதை விட
புரியாது. அதனால் தான்…..நீங்கள் ……..உங்களுக்கு அவர்களை எல்லாம் தெரியும் என்று
அறிந்து கொண்டேன்.”


வேறு யார் சொல்லியிருப்பார்? ஷீலா தானே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்,
“புரிகிறது மேடம். உங்களுக்கு எந்த வகையில் என் உதவி தேவை என்று சொன்னால் அதன்
படி செய்து விடலாம்” என்று உத்திரவாதம் கொடுத்தான்.


“தேங்க்ஸ்” என்று உண்மையாகவே சொன்னாள். அந்த நேரம், இல்லையில்லை, அந்த ஒரு
வினாடி சங்கரின் மனதில் இவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம்
உதித்தது. தான் இது வரை இதைப் போல உணர்ந்ததில்லை என்பது ஏனோ அந்த நேரத்தில்
மனதில் வந்து போனது. அவனும் அவளைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தான்.
பிரியாவின் அழைப்பின் பேரில் அந்த அறையில் எல்லோரும் கூடியிருந்தார்கள். வெளியே
சிலுசிலுவென தூறிக் கொண்டிருந்தது. குளிர்சாதனம் இயங்காமலே குளிராக இருந்தது. காப்பி
இருந்தால் நன்றாக இருக்கும் என்று எல்லோருக்குமே எண்ணம். ஆனால் பிரியாவை
நினைத்துக் கேட்பதற்கு தயக்கம். இப்போது தூறல் சாரலாக வலுத்திருந்தது. அதனால் சூடான
காப்பியின் தேவை அதிகமாக இருந்தது.


சுகந்தி மட்டும் மெல்ல சங்கரிடம் “காப்பி ஏற்பாடு பண்ணியிருந்திருக்கலாம் இல்லே”
என்றாள். சங்கர் எழுந்து போய் தன் பையில் இருந்து காசை எடுத்துக் கொடுத்து அட்டெண்டர்
மணியிடம் பிளாஸ்க் எடுத்துப் போய் காப்பி வாங்கி வா என்று பணித்தான். அவன் போய்
வாங்கிக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுக்கும் முன்பு பிரியா அந்த அறைக்குள் வந்து
விட்டாள்.


“நண்பர்களே, நான் ஒரு வரைவு திட்ட அறிக்கையை அரசாங்கத்திற்கு சமர்பித்திருந்தேன். அது
ஒப்புக் கொள்ளப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது”
எல்லோரும் கையைத் தட்டி கிரேட் என்று பாராட்டினார்கள். மணி அப்போது அறையின்
வெளியே கையில் பிளாஸ்குடன் நிற்கவே “என்ன மணி?” என்று கேட்டாள் பிரியா.
“சங்கர் சார் காப்பி வாங்கி வர சொன்னாரு மேடம்”
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு “சரி எல்லோருக்கும் ஊத்திக் கொடுங்க” என்று சொல்லி
சற்று நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தாள். மணி போனதும் எல்லோரும் “தேங்க்ஸ்
மேடம்” என்று சொல்ல,
சிரித்தவாறே, “நான் தான் காப்பிக்கு அரேன்ஜ் பண்ணியிருக்கணும். மன்னிக்கவும். அடுத்த
மீட்டிங்கில் சரியாக செய்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு “சங்கர் என்னிடம் இதற்கான


காசை வாங்கிக் கொள்ளுங்கள்” என்றாள். அவள் சொல்லி முடிக்கவும் எல்லோரும் ஒரு சேர
சங்கரைத் திரும்பிப் பார்த்தனர். இதையும் கூட அபிசியலாகத் தான் செய்வாள் ராட்சசி என்று
மனதிற்குள் வைத்து கொண்டான்……. செல்லமாக.
“நம்முடைய நிறுவனம் கிராம பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம். நம் நிறுவனத்தின் சார்பாக
“பெண்கள் சுய உதவிக் குழுக்களும் ஒருங்கிணைந்த கிராம பொருளாதார வளர்ச்சி விகிதமும்”
இது தான் தலைப்பு. இந்த அறிக்கையின் படி நாம் முதலில் நம் நிறுவனத்தை சுற்றியுள்ள
பதினைந்து கிராமங்களை எடுத்துக் கொண்டு அதில் எழுத்தறிவுள்ள பெண்களை ஒரு குழுவாக
இணைத்துக் கொள்கிறோம். அவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துவது. அதில் கிராம சுகாதாரம்
சமூக பழக்க வழக்கங்கள் கால்நடைகள் வளர்த்தலும் பராமரிப்பும், வங்கி சேவை
நீர்நிலைகளை பராமரித்தல் வீட்டுத் தோட்டம் அதனுடன் குடும்ப கட்டுப்பாடு, பதின்பருவ
பராமரிப்பு. இவைகளில் பயிற்சி கொடுக்கப் போகிறோம். ஒரு குழுவிற்கு ஐம்பது பெண்கள்.


இதன் தொடர்ச்சியை நம் அருகாமை பெண்கள் கல்லூரி மாணவிகள் பொறுப்பெடுத்து நடத்தி
தருவார்கள். என்.எஸ்.எஸ். திட்டத்தில் மாணவிகளுக்குமான பயிற்சி. டூ இன் ஒன்”
“அருமை” என்று மூத்த ஊழியரான சந்தானம் சொன்னதற்கு மற்ற எல்லோரும் கைத்தட்டி
ஆரவாரம் செய்தார்கள். இவர்களின் ஒத்துழைப்பும் பக்கபலமும் பிரியாவிற்கு ஒரு
உத்வேகத்தைக் கொடுத்தது.
மேலும் தொடர்ந்தாள்.”இதை நாம் ஒவ்வொரு குழுவாக நமக்குள் பிரிந்து செயல் பட
வேண்டும். கல்லூரிக்கு அரசு அலுவலகங்களுக்கு கிராம்களுக்கு என்று ஒவ்வொன்றுக்கும்
பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்”


“செய்துடலாம் மேடம்” சுகந்தி உற்சாகமாக சொன்னாள்.
“அப்புறம் இன்னுமொரு விஷயம்” சொல்லி விட்டு எல்லோரையும் பார்த்தாள் பிரியா. “இதன்
தொடக்க விழாவிற்கு மத்திய இணையமைச்சர் வருவதாக தேதி கொடுத்திருக்கிறார்கள்”
என்றவள். நம் வளாகத்தில் நடக்கப் போவதில்லை” என்றாள்.
“காலாகாலாமாக நம் வளாகத்தில் ஆடிட்டோரியத்தில் நடப்பது தானே வழக்கம். அது தானே
இங்கே பழக்கம்” சந்தானம் கேட்டதற்கு,
“மாமா, பழைய பஞ்சாங்கம் பேசாதீங்க” என்றான் ரமேஷ்.
“பிரேக் தி ரூல்ஸ்” என்றான் சங்கர்.
“அப்படின்னா தொடக்க விழா எங்கே தான் நடக்கப் போவுது.? சஸ்பென்ஸ் தாங்கலையே”
என்றான் பைஜூ.
இவர்களின் அமர்களத்திற்கு சிரித்துக் கொண்டே அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு
கல்யாண மண்டபத்தைக் குறிப்பிட்டு அங்கே மாலையில் விழா தொடங்கும் என்று முடித்தாள்
பிரியா.
“என்ன மேடம், நம்ம டைரக்டர் அனுமதி கொடுத்து விட்டாரா?” என்று சந்தேகமாக கேட்டார்
சந்தானம்.

“சார் கவலைப்படாதீங்க. டைரக்டர் அனுமதியுடன் தான் இந்த ஏற்பாடே”
“அப்படியா?” என்றார் மீண்டும் ஆச்சரியத்துடன்.
“ஆமாம் சார், இதில் கிராமத்துப் பெண்கள் கல்லூரி மாணவிகள் அரசு ஊழியர்கள், பள்ளி
ஆசிரியர்கள் என்று பலதரப்பட்ட பிரிவினர் கலந்து கொள்ளப் போகிறார்கள். முக்கியமாக
கிராமத்துப் பெண்கள். அவர்கள் அனைவரும் இங்கே வருவதில் சங்கடம் இருக்க கூடும்.
அதனால் தான் இந்த ஏற்பாடு.”
“நீங்க சொல்றது சரியாகத் தான் இருக்கு. பரவாயில்லை. நம்ம இடத்தில் அவர்களை
வரவழைக்காமல் அவர்கள் இடத்திற்கு நாம் போவதும் சரி தான்” என்று முடித்துக் கொண்டார்
சந்தானம்.


“அமைச்சருக்கும் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டினால் நம் விஷயம் இன்னும் ஈசியாகி
விடும்” சங்கரின் வார்த்தைக்கு பிரியாவின் இதழோரத்தில் ஒரு சிறு சிரிப்பு விரிந்தது.
அன்றைய மீட்டிங்கிற்குப் பிறகு ஒவ்வொரு குழுவாக பிரிந்து எந்த குழு எந்த வேலையை
செய்வது என்று தங்களுக்குள் திட்டமிட்டுக் கொண்டனர். தொடக்க விழாவிற்கான நாள்
கிட்ட நெருங்க நெருங்க ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒருவருக்கு ஒருவர் இதே
பேச்சாக இருந்ததினால் அவர்களுக்குள் நல்லதொரு புரிதல் இருந்தது. விளைவாக
இப்போதெல்லாம் பிரியா தன்னுடைய அறையில் இல்லாமல் இவர்களுடன் தன்னுடைய
மதிய உணவை பகிர்ந்து உண்ணத் தொடங்கினாள். மொத்தத்தில் இத்தனை மாதங்களாக
பிரியாவிடம் இருட்ன்ஹா அதிகாரி என்ற தன் முனைப்பு இடிந்து மற்றவர்களுடன் அவள்
வயதினருக்கே உரிய துள்ளலும் உற்சாகமுமாக பழக முடிந்தது. சுகந்தி மிகவும்
நெருங்கியவளாகிப் போனாள். ஷீலாவின் கட்டு சோறும் கெட்டு சொல்லிக் கொடுத்த புத்தியும்
தெளிந்து உள்ளதை உள்ளது போல பார்க்கக் முடிந்தது பிரியாவால் என்றால் அது
மிகையல்ல.


சங்கரும் பிரியாவும் எல்லா இடத்திற்கும் சேர்ந்தே போகும் படி ஆனது தற்செயலான விஷயம்
தான். பிரியாவிற்கான ஜீப்பில் போக வேண்டியதால் இவர்களுடன் டிரைவர் ராஜேந்திரனும்
உடன் இருப்பார். பிரியாவிற்கும் சங்கருக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான உரையாடல்
தான் இருக்கும். நல்ல இலக்கியங்களைப் பற்றி தொடங்கி, உலகின் நவீன இலக்கியங்கள்
என்று தொடர்ந்து பொன்னியின் செல்வன் மற்ற கல்கியின் கதைகள், அகிலன், ஜெயகாந்தன்
தி. ஜானகிராமன் என்று பரந்து, பண்டைய கிரேக்க நூல்கள், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்
இன்றைய எழுத்தாளர் டான் பிரௌன் என்று ஒரு சுற்று சுற்றி வரும் பேச்சுக்கள்
ராஜேந்திரனுக்கு தலையும் வாலும் புரியாதது. அத்தோடு நிற்காமல் இந்திய திரைப்படத்தின்
தொடக்க வரலாறு பழைய பல மொழிப் படங்கள் என்று பயணித்து வெளிநாட்டுப் படங்கள்
என்று சிலாகிக்கத் தொடங்கி நல்லதொரு விவாதத்தில் நடந்து நல்ல மனநிறைவைத் தரக்
கூடிய பேச்சுக்கள். இத்தோடு விடாது சங்கரின் விவரங்கள். உள்ளூரில் எந்த கடையில் மசால்
வடை நன்றாக் இருக்கும் என்று ஆரம்பித்து எந்தெந்த ஊரில் எந்த உணவு வகை நன்றாக
இருக்கும் என்று சொல்லி பிரியாவின் வாயில் எச்சல் ஊற வைத்து விடுவான்.
அலுவலகத்தில் எல்லோருமாக கேண்டீனுக்கு போகும் போது கூட இருவரும் எதையாவது
தனியாகப் பேசிக் கொண்டு வருவதைக் கண்டு முதலில் என்னடா இது என்று பார்த்தவர்கள்


இவர்களின் பேச்சின் போக்கைக் கண்டு சரி தான் என்று அவர்கள் பாட்டுக்கு அவர்கள்
வேலையைக் கவனித்தார்கள். இருவரையும் கண்டு கொள்ளவில்லை. கற்றோரை கற்றோரே
காமுறுவர்.
தொடக்க விழா நாளும் வந்தது. கடந்த ஒரு வாரமாக நசநசவென்று தூறிக் கொண்டிருந்த
மழை இன்று காலையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. எல்லாம் திட்டமிட்டப்படி
நன்றாக நடக்க வேண்டும் என்று உள்ளூர ஒரு பதைபதைப்பு இருந்தது. கைப்பேசி
அழைத்தது.
“மேம், கல்யாண மண்டபத்திற்கு கொண்டு போக வேண்டியதை எல்லாம் கொண்டு
போய்ட்டோம்”
“மழையா இருக்கே சங்கர்”
“அதைப் பார்த்தால் முடியுமா? மைக் செட்டுக்காரன் மின்விளக்கு அலங்காரம் என்று
ஓரளவிற்கு பத்திரமாக செய்து முடித்து விட்டோம். நம் கல்லூரி மாணவர்களை ஒருமுறை
கிராமங்களுக்கு போய் பெண்களை எல்லாம் ஞாபகப் படுத்திட சொல்லியிருக்கிறோம்”
“சூப்பர். இதை எல்லாம் நான் யோசிக்கலை”
“நம்ம சிலபஸில் இதெல்லாம் இல்லை” சிரித்தான் சங்கர்.
“ஆமாம்” என்று உடன் நகைத்தாள் பிரியா.
“ஆனால் அமைச்சரின் விழா. இந்த மழையை சாக்கிட்டு உட்கார்ந்து கொண்டு விடக் கூடாது
இல்ல. அதான். அப்புறம், எல்லா அரசு அதிகாரிகளையும் மீண்டும் தொலைப்பேசியில்
தொடர்பு கொண்டாச்சு”
“சாப்பிட்டீங்களா?” மிகவும் பரிவுடன் கேட்டாள்.
“இன்னும் இல்லை”
“சாப்பிட்டு விட்டு வேலையைப் பாருங்கள்”
“மேம், நாங்கள் கல்யாண மண்டபத்தில் தான் இருக்கோம். நீங்கள் மெல்ல வாங்க” சங்கரின்
குரல் பிரியாவின் மனதில் மெல்லிய ஒரு நம்பிக்கையைக் கொண்டு வந்தது. அவன்
சொன்னான் என்பதற்காக இருந்து விடாமல் அவளுமே கிளம்பினாள்.
போகும் வழியில் சுகந்தியாக்காவைக் கூப்பிட்டுக் கொண்டாள். வீட்டை விட்டு வெளியே
வந்த சுகந்தி பிரியாவைப் பார்த்து வெச்ச கண் வாங்காமல் பார்த்தாள். அவள் பார்வையைக்
கண்டு “என்னக்கா?” என்றவளிடம் “பிரியா ஆனாலும் நீ ரொம்ப அழகு” என்று திருஷ்டி
சுத்திப் போட்டாள்.
சுகந்தியின் பார்வையில் இருந்த ரசனையையும் வார்த்தையில் இருந்த உண்மையையும்
பிரியாவை மிகவும் பெண்ணாக உணர வைத்தது. தன்னை ஒருமையில் அழைத்த சுகந்தியின்
அழைப்பு சுகந்திக்கு பிரியாவிடம் இருந்த உண்மையான அன்பை சொல்வதாக இருந்தது.

“சாரி மேம், பேர் சொல்லிக் கூப்பிட்டேன்”
“அக்கா ப்ளீஸ்” பிரியாவின் கெஞ்சிய கண்களைக் கண்டு சுகந்தி புன்னகைத்தாள்.
திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது. அனைவருக்கும் தேனீர் பிஸ்கட் வழங்கப்பட்டிருந்தது.
பெண்களை அழைத்தால் அவர்கள் குடும்பத்துடன் தானே வருவார்கள். கல்லூரி மாணவர்கள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று மண்டபமே நிரம்பி வழிந்ததைக் கண்ட மந்திரிக்கு
மிகவும் மகிழ்ச்சி. நீண்டதொரு சொற்பொழிவாக அந்த திட்டத்தையும் இந்த திட்டம் ஒரு முன்
மாதிரி திட்டமானதால் இதை மக்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்
அதனால் இந்த திட்டம் வெற்றி அடையும் எனவும் அதனால் இதை இந்த தேசம் முழுவதும்
கொண்டு போக முடியும் என்று சொல்லி இந்த திட்டத்தை வரைவு அறிக்கை செய்து நிதியும்
பெற்று நல்ல முறையில் அமுல்படுத்த பிரியாவிற்கும் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்களையும்
பாராட்டுகளையும் சொல்லி விடைப் பெற்றார். பின்பு ஒவ்வொருவராக பேசி இறுதியில்
திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பிரியா எல்லோருக்கும் நன்றி சொல்லி அனுப்பினாள்.


மழை சற்றே நின்றிருக்கவும் இரு சக்கர வாகனத்தில் வந்திருந்த சகாக்கள் ரமேஷ் பைஜூ
சந்தானம் சார் சுகந்தி என்று எல்லோரும் சென்று விட மீதி கணக்கு வழக்குகளை முடித்துக்
கொண்டு டிரைவர் ராஜேந்திரன் வண்டியில் சங்கரும் பிரியாவும் கிளம்பும் போது மணி இரவு
ஒன்பது தான் ஆகியிருந்தது. மழை வலுக்கத் தொடங்கியிருந்தது. இருந்தாலும் அரை மணி
நேரத்தில் போய் விடலாம்.


முதலில் பிரியாவின் வீட்டில் அவளை விட்டு விட்டு பின்பு வளாகத்திற்கு போய் விடலாம்
என்று முடிவு செய்து கிளம்பினார்கள் ராஜேந்திரனின் வண்டியில். சரியான மழை. மழைக்கு
வாய்ப்பிருக்கிறது என்று வானிலை அறிவிப்பில் ஒன்பது மணி செய்தியில் கூட கனமழையாக
இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கனமழையையும் தாண்டி இது எதிர்பாராத
புயல். பலத்த காற்று. வண்டியைப் பின்னோக்கி இழுத்தது காற்று. கொஞ்ச நேரம் எங்கேனும்
ஓதுங்கி நிற்கலாம் என்றாலோ அந்த பிரதேசம் முழுவதும் வயல்காடாகவும் சாலையின்
இருமருங்கிலும் பெரிய பெரிய மரங்களுமாக இருக்கவே மரத்தின் அடியில் நிற்பதற்கு
இயலாது என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னே செலுத்திக் கொண்டிருந்தார் வண்டியை.
ஒரு மைல் தூரத்தில் ஒரு வீட்டின் அருகே போடப்பட்டிருந்த பந்தலில் சற்று நேரம் வண்டியை
நிறுத்தினார் ராஜேந்திரன். ஊளையிட்டுக் கொண்டிருந்த காற்று அடங்க தொடங்கியது.
மீண்டும் வண்டியைக் கிளப்பினார் ராஜேந்திரன். இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் தூரம் தான்.
இந்த வேகத்தில் போனால் கூட மிஞ்சி மிஞ்சி முக்கால் மணி நேரத்தில் போய் விடலாம்.
கொஞ்சம் ஆசுவாசமானார்கள் மூவரும்.


நாம் நினைப்பது எல்லாம் நினைத்ததைப் போலவே நடந்து விடுமா என்ன! ஒரு பெரிய புளிய
மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்திருந்தது. மழைக்குப் பயந்து ஒரு
குளு குஞ்சை வெளியே காணோம். வெளுத்துக் கட்டிய மழைக்கு மக்கள் வீடுகளில் முடங்கிக்
கிடந்தார்கள்.போக்குவரத்து துறையின் பேருந்துகள் கூட இல்லை. சாலையே விரிச்சோ என்று
இருந்தது. மழை விட்டிருந்ததால் வண்டியை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தனர் மூவரும்.
“என்ன ராஜேந்திரன்? இப்ப என்ன பண்ணுவது?” குரலில் சிறு கவலையிருந்தது பிரியாவிற்கு.


“மேம், இப்படியே வண்டியைத் திருப்பி நாம் இப்போது வந்த திசைக்கு எதிர் திசையில்
ஆற்றோடு போனால் போய் விடலாம்” என்றான் சங்கர்.
“போய்டலாம் ராஜேந்திரன்”
“மூணு கிலோ மீட்டர் சுற்று தான். ஆனால் இங்கே நின்று கொண்டிருப்பதை விட சுத்திக்
கொண்டு என்றாலும் பரவாயில்லை. ஆற்றோடு போய் விடலாம்” இப்போது சங்கரும்
பிரியாவுடன் சேர்ந்து சொல்லவும்
“அம்மா……” இழுத்தார் ராஜேந்திரன்.
“சொல்லுங்க”


“ஆத்தாங்கரை ரெண்டு பக்கமும் களிமண் கரை. சாதாரணமாகவே வழுக்கும். அதுவும் இந்த
மழைக்கு எப்படி இருக்குமோ?”
“அப்படியா?” பிரியா சங்கரைப் பார்த்துக் கேட்டாள்.
ராஜேந்திரனின் பயம் நியாயமானது. எனவே சங்கருமே உண்மையை ஒப்புக் கொண்டவனாக
“உண்மை தான் மேம்” என்றான்.


“இப்போ மழை விட்டிருக்கே.” என்றாள் மீண்டும். அவள் நிலை உணர்ந்தவனாக சங்கரும்
ஆமாம் இல்லே என்பதைப் போல ராஜேந்திரனைப் பார்த்தான்.
”இப்போது மழை விட்டிருக்கு. அப்படி இருந்தாலும் ஆத்தாங்கரை வழுக்கும். இதில் மீண்டும்
மழை வந்து விட்டால் என்னாகும்?”
“ஆமாம் மேம். மழை விட்டிருச்சுன்னு நம்பி நாம போக முடியாது”
“இங்கே நிற்பதற்கு போய்த் தான் பார்ப்போமே. மழை வந்து விட்டால் அங்கேயே நின்று
விடுவது. இங்கே நிற்பதை விட அது மேல் அல்லவா?”


“கரை மேலே ரொம்ப நேரம் நிற்க முடியாதும்மா. இந்த பக்கம் ஆறு. களிமன் பாதை என்பதால்
தான் இத்தனை யோசிக்கிறேன்” வயதிலும் அனுபவத்திலும் பெரியவரான ராஜேந்திரன்
சொல்லவும்
சூழ்நிலையை இன்னும் பயமுறுத்தினான் சங்கர்.”வண்டி தண்ணிக்குள்ளே பாய்ந்து மூணு
பேருக்கும் நேரே கபால மோட்சம் தான்”
“இப்போது என்ன பண்ணுவது?” அதிகாரமிக்க அதிகாரியாக அல்லாமல் பெண்ணாக
பயந்திருந்தாள் அவள்.


“காலையில் தான் மேம் நாம் இங்கே இருந்து நகர முடியும்”
“என்ன சங்கர் இப்படி சொல்றீங்க?”
“ஆமாம்மா. திரும்ப போனாலும் ஆத்தாங்கரையில் போய் முட்டிக் கிட்டு நிற்ப்போம். எதுவாக


இருந்தாலும் விடிந்தால் தான் என்ன செய்யலாம்னு புரியும்” ராஜேந்திரன் முடிவெடுத்து
விட்டார். இவர்களுக்காக ஆபத்தை விலை கொடுத்து வாங்க அவர் தாயாரில்லை.
“காலையில் இந்த சாலையில் மரம் விழுந்து கிடக்கிறது என்ற தகவல் போய் ஆட்கள் வந்து
மரத்தை அப்புறப்படுத்தினால் தான் நாம் போக முடியும்” சங்கர் உரக்கவே யோசித்தான்.
“இப்ப என்ன பண்ணலாம்?” சூழ்நிலையை உடனே புரிந்து கொண்டு அடுத்து என்ன செய்ய
வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட தெளிவானாள் பிரியா.


“ம்,…” சுற்றும் முற்றும் பார்த்தான் சங்கர். ச்சை.என்ன ஒரு இடைஞ்சல். எல்லோரும் கிளம்பும்
போதே கிளம்பியிருந்திருக்கலாம். அப்படியும் சொல்வதற்கில்லையே. எல்லோரும் போய்
வெறும் ஒரு மணி நேரம் தான் தாமதமாக கிளம்பினோம். அதற்குள் இப்படி மாட்டிக்
கொண்டோமே. கண்ணைக் கட்டும் இருட்டிற்கு இப்போது சற்றே பழக்கப்பட்டிருந்த கண்கள்
சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது.


வண்டியை விட்டிறங்கி நின்று கொண்டு கைப்பேசியில் வீட்டுக்கு தகவல் தர முயற்சி செய்து
கொண்டிருந்த பிரியாவிற்கு அப்போதே பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது. தண்ணீர்
பாட்டிலை எடுத்துப் பார்த்தாள். ஒரே ஒரு வாய் தண்ணீர் தான் இருந்தது. அதை வாயில்
கவிழ்த்துக் கொண்டவளுக்கு பசி என்பதைப் புரிந்து கொண்டான் சங்கர்.
அந்த கும்மிருட்டில் தொலைவில் ஒரு வெளிச்சப்புள்ளி தெரிந்தது. “அதோ அங்கே ஒரு
வெளிச்சம் தெரிகிறது”
“எங்கே?” என்றாள் பிரியா


அந்த வெளிச்சத்தை நோக்கி “கடவுளே அது வீடாக இருக்க வேண்டும்” என்றான் சங்கர்.
“அங்கே போய் பார்ப்போம்” என்றாள் பிரியா.
ராஜேந்திரன் வண்டியை சாலையின் ஓரத்தில் இறக்கி நிறுத்தி விட்டு மூவரும் அந்த வெளிச்ச
புள்ளியை நோக்கி நடந்தார்கள். மனதிற்குள் வேண்டிக் கொண்டபடி.


நல்லவேளையாக அது ஒரு விவசாயின் வீடு. கிட்ட நெருங்கும் போது அந்த இடத்தின் அருகில்
இன்னும் பத்து பதினைந்து வீடுகள் இருப்பது இருட்டில் நிழல் வடிவாகத் தெரிந்தது. ஒரு
வீட்டிலும் விளக்கு வெளிச்சம் இல்லை. அந்த பிரதேசம் முழுவதும் மின்சாரம் இல்லாமல்
கும்மிருட்டாகத் தான் இருந்தது. மழைக்கு கம்பி அறுந்திருக்கும் போல. மழைக்கு மூடி இருந்த
கதவை தட்டினான் சங்கர். நல்லவேளையாக் ஒரு நடுத்தர வயது ஆண் வந்து கதவைத்
திறந்தார். வீட்டின் உள்ளே மின்சாரம் இல்லை. இன்வேர்டரில் சிறு குண்டு பல்பு மட்டும்
மினுக் மினுக் என்று எரிந்து கொண்டிருந்தது.


“யாரு சார் இந்நேரத்தில?” என்று கேட்டவர் பார்வை சங்கருக்கு கீழே படியில் நின்று
கொண்டிருந்த பிரியாவைக் கண்டது.
“சார் நாங்க வந்த பாதையில மரம் விழுந்திருச்சு. சுத்திக்கிட்டு கூட போக முடியாது.
இன்னைக்கு ராத்திர்க்கு மட்டும் இங்கே தங்கி விட்டு காலையில் போய் விடுகிறோம்”


“உள்ளே வாங்க” அவர் முதுகின் பின்னால் வந்து நின்று இவர்கள் பேசுவதைக் கேட்டுக்
கொண்டிருந்த ஒரு பெண் இவர் மனைவி போலும் அழைத்தாள்.
உள்ளே போனவர்களுக்கு தலையைத் துவட்டிக் கொள்வதற்கு துண்டு கொடுக்கப்பட்டது.
அவர்களின் மகள் தன்னுடைய சுடிதாரை கொண்டு வந்து பிரியாவிற்கு கொடுத்தாள்.
உள்ளறையில் போய் அந்த பெண்ணின் சுடிதாரை அணிந்து தலையைப் பிரித்து விட்டுக்
கொண்டு கையில் சிம்னி விளக்கை ஏந்தியவளாய் வெளியே வந்த பிரியாவைப் பார்த்த சங்கர்
தலையை துவட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்படியே சிலையாகத் தான் நின்று போனான்.
ஒரு அதிகாரியாகவே அவளைப் பார்த்து பழக்கப்பட்டவன், நினைத்து பழக்கப்பட்டவன்
இன்று மதியம் அவளை சேலையில் பெண்ணாகப் பார்த்ததும், இதோ இந்த நிமிடம் அந்த
கிராமத்துப் பெண்ணின் எளிய சுடிதாரில் கிராமத்துப் பெண்ணின் தோற்றத்தில் இப்போது
பிரியாவைப் பார்த்ததும் அவளை தன் இருதயத்தின் அருகாமையில் கொண்டு வந்து
நிறுத்தினான். தான் அவள் கீழ் பணியாற்றக் கூடிய சாதாரண ஆள் என்பதை மறந்து. ஒரு
ஆணாக. ஒரு ஆணின் பார்வையில். ஆணின் நினைப்பாக. ஆணாக மட்டும். அதுவும் இளம்
ஆண்ககளுக்கே உரிய அத்தனை ரசனையுடன்.
“வீட்டுக்குளே படுக்கறதுக்கு வசதியில்லை. தப்பா எடுத்துக்காதீங்க. இந்த பொண்ணு மட்டும்
இங்கே நம்ம பாப்பாவோட படுத்துக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் மாட்டுக் கொட்டாயில
படுத்துக்கங்க” “பொண்ணு” சங்கர் பிரியாவைப் பார்த்து ஜாடையால் சொன்னவரைக்
காண்பித்தான்.


“ஆமாம்” என்று கண்களால் சிரித்தாள் பிரியா.
“எனக்கும் தான்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அவன்.
சுட சுட உணவை உண்டு கொண்டிருந்த போது ராஜேந்திரன் தங்களின் நிலையை முன் கதை
சுருக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்த அந்த வீட்டின் உரிமையாளரின்
தந்தை படுத்திருந்த கயிற்றுக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு சொன்னார்.
“நல்லவேளை உங்களுக்கு இங்கே வர வேண்டும் என்று அந்த கடவுள் தான் காமிச்சுக்
கொடுத்திற்கு. இல்லாட்டா நீங்க சொன்ன மாதிரி அந்த ஆத்தோட போயிருந்தால் நிச்சயம்
ஆத்துக்குள்ள பாஞ்சிருக்கும் உங்க வண்டி” என்று சொல்லி தன் மகனிடம் தொடர்ந்தார்.”தம்பி
போன மழைக்கு நம்ம மேலத்தெரு கணபதி மாட்டு வண்டியோட ஆத்துக்குள்ள விழுந்துடலை”
என்றார்.
“ஆமா. அதுவும் பகல் பொழுதில். உர வண்டியோட தண்ணிக்குள்ள போயி அடுத்த
கிராமத்தில தான் பாடி கிடைச்சது”
“அதுக்குத் தான் நான் வண்டியை எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்” என்றார்
ராஜேந்திரன்.
“சரி தான்” என்று ஆமோதித்தார் அந்த கிழவர்.
வீட்டின் சால்பில் வேயப்பட்டிருந்த மாட்டுக் கொட்டாயில் வைக்கோலைப் பிரித்துப் போட்டு

அதன் மேல் சாக்கை விரித்து இருவருக்கும் படுக்க இடம் கொடுத்தார் அவர். வெளியே விடாது
பெய்த மழைக்கு லேசாக குளிரத் தொடங்கியிருந்த இரவில் கீழே விரித்துப் படுத்திருந்த சாக்கு
அனல் கொடுத்ததைப் போல சங்கரின் கனவுகளுக்கு உயிர் கொடுத்தாள் பிரியா.
காலையில் ஆட்கள் வந்து மரத்தை அப்புறப்படுத்தி சாலையை ஒழுங்கு செய்து பின்பு
இவர்கள் கிளம்பி, பிரியா வீடு வந்து சேர மதியத்திற்கு மேலாகி விட்டது.

4 thoughts on “காற்றோடு காற்றாக- 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *