Skip to content
Home » காற்றோடு காற்றாக-4

காற்றோடு காற்றாக-4

அத்தியாயம்- 4


பேராசிரியர் தேவநாதனுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம். தாமிரபரணி
ஆற்றங்கரையோரம் உள்ள சிறு கிராமம். உள்ளூர் பள்ளியில் சாதாரண ஆசிரியர் தந்தை
ராமநாதன். அவருக்கு மகன்கள் கஜநாதனும் தேவநாதனும்.


கஜநாதனுக்கு ரெண்டுமே மகன்கள். இருவரும் தூத்துக்குடியிலும் திருநெல்வேலி
மாவட்டித்திலும் அரசுப் பணியில் உள்ளனர். கஜநாதனும் அவர் மனைவி விமலாட்சியும் அந்த
கிராமத்துப் பூர்விக வீட்டில் வசித்து வருகின்றனர்.


தேவநாதனுக்கு தன்னுடைய சொந்த ஊரின் மீது அலாதியான பற்று. எனவே விடுமுறை
தோறும் தவறாமல் தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு வந்து விடுவார். ஆங்கில
பேராசிரியரான அவரும் தமிழ் பேராசிரியையான அவர் மனைவி மாதவியும் அரசு கல்லூரியில்
ஒன்றாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களின் இரு மகள்களான மைத்திரேயி
பாகம்பிரியாவும் வைதேகி மதுப்பிரியாவும் என தெளிந்த நீரோடையான இனிமையான
வாழ்க்கை. மூத்தவள் எம்.எஸ்சி எம்பில் முடித்து விட்டு மத்திய அரசு அலுவலகத்தில் பணியில்
இருக்கிறாள். சின்ன்னவள் அருகாமை கல்லூரியில் எம் எஸ்சி படித்துக் கொண்டிருக்கிறாள்.
மூத்தவள் பிரியா தன் மறைந்த தாயாரைப் போல இருப்பதால் அவளிடத்தில் அலாதியான
பிரியம் அண்ணன் தம்பி இருவருக்கும்.

பிரியாவின் அடக்கமான அழகு அதில் ஒரு நிமிர்வு,
அமைதியான போக்கு, தெளிந்த புத்தி, எதையும் ஆராய்ந்து பேசும் சுபாவம். இயல்பிலேயே
இலக்கிய ஆர்வம் மிகுதி. தந்தையிடமிருந்து ஆங்கில இலக்கியமும் தாயிடமிருந்து தமிழ்
இலக்கியமும் அவளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது. இலக்கியங்களை படிப்பதோடு நின்று
விடாமல் அதைப் பற்றி பெற்றோரிடம் தர்கித்து தெளிவு பெறக் கூடிய புத்திசாலிப் பெண்.
அவளுடைய உயரமும் புத்தி கூர்மையும் தெளிவான பேச்சும் கம்பீரமும் ஆளப் பிறந்தவளைப்
போன்ற தோற்றமும் அவளை நேரில் காணும் யாருக்குமே ஒரு பயம் கலந்த மரியாதையைக்
கொடுக்கும்.


சின்னவள் வைதேகி மதுப்பிரியா மூத்தவளுக்கு நேர்மாறானவள். அவளுடைய தாய்
மாதவியைப் போன்று சற்று உயரம் குறைவாக ஆனால் நல்ல கலராக சுருட்டை முடியும்
துருதுருவென அலையும் கண்களுடன் சதாகாலமும் சுறுசுறுப்பாக எல்லாரையும் வம்பிழுத்து
கலகலவென அரட்டை அடித்துக் கொண்டு உற்சாகமான பெண். அவளை சுற்றி எப்போதும்
உற்சாகம் கரை புரண்டு ஓடும். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் தன் மனதிற்கு எது சரி
என்று படுகிறதோ அதை உள்ளது உள்ளபடி சொல்லி விடும் இயல்புடையவள். அது
பெரியவர்களாக இருந்தாலும் தயங்க மாட்டாள். அவள் வார்த்தைகளிலும் எண்ணத்திலும்
எப்போதும் ஒரு துணிச்சலும் உண்மையும் இருக்குமாதலால் அவளை சிறு பெண் என்றோ
அல்லது விளையாட்டுப் பிள்ளை என்றோ ஓரங்கட்டி விட முடியாது.


தேவநாதனுக்கு தன் சொந்த ஊரின் மீது அலாதி பற்று. எல்லா கோடை விடுமுறைக்கும்
குடும்பத்துடன் தன் அண்ணன் வீட்டுக்கு வந்து விடுவார். அண்ணனுக்கு ரெண்டும்
ஆண்பிள்ளைகள் தனக்கோ ரெண்டும் பெண் பிள்ளைகள். இவர்கள் அனைவரும் ஒரே
குடும்பத்தினராக கலந்து உறவாடுவார்கள். காரணம் கஜநாதனின் மனைவி விமலாச்சி
மாதவியையும் பெண்களையும் தாயைப் போன்று அணைப்பது தான்.


இப்போதும் தேவநாதனின் பங்காளி முறை அண்ணன் மகன் திருமணத்திற்குத் தான்
அனைவரும் குடும்பத்துடன் வந்திருப்பது. அந்த அண்ணன் தன் மனைவியுடன் நேரில் வந்து
திருமணத்திற்கு அழைத்திருந்தார். விமலாச்சி மகள்களையும் அழைத்து வர சொல்லியிருந்தாள்.
மாதவிக்கும் இதைப் போன்று மிகவும் நெருங்கிய உறவினர் திருமணங்களுக்குப் போனால்
தன் மகள் பிரியாவிற்கும் ஏற்ற வரன் கிடைக்கும் என்ற எண்ணம்.


திருமணத்திற்கு அண்ணன் தம்பி குடும்பம் மிகவும் உற்சாகமாவே கிளம்பினார்கள்.
கிராமங்களில் நடக்கும் கல்யாணங்களுக்கு ஏற்ப பிரியாவும் மதுவும் நகைகள் போட்டு பட்டு
உடுத்தி, தலையைப் பின்னி பூ வைத்து தேர் போல அலங்காரமாகக் கிளம்பியிருந்தார்கள்.
இவர்கள் இனோவா காரில் போய் இறங்கிய போது திருமண வீட்டாருக்கு முன்பு வரவேற்றது
தேவநாதனின் பெரியப்பா மகள் சகோதரி சுந்தரவல்லி தான்.
“என்ன சின்னண்ணே, எப்போ ஊர்லே இருந்து வந்தீங்க?”


“நேத்தி காலையில தான் வந்தோம்”
“ஒரு எட்டு என் வீட்டுக்கு வந்திருக்கலாம் இல்லே” நேரிடை தாக்குதல் தான் சுந்தரவல்லியின்
சிறப்பு.
“அது தான் இப்போ பாத்துக்கப் போறோம் இல்லே”
“அது ஒரு பேச்சா?”
“சரி விடு. அடுத்த தடவை வரும் போது கண்டிப்பா உன் வீட்டுக்கு வாறன்”
“ஆம்பிள்ளைகளுக்கு பல சோலி இருக்கும். வீட்டில இருக்கிற மதனிமாருங்களுக்கு
தெரியனும்”


“ஏன் அத்தை எங்க அம்மாவை வம்பு இழுக்கிறீங்க” சின்னவன் தான் துடுக்கா கேட்டான்.
“உனக்கு அம்மாவாகரதுக்கு முன்னாடி எனக்கு மதனி”
“சரி விடு சுந்தரி. டேய் சும்மா இருக்க மாட்டே?” விமலாச்சி சுந்தரியின் வாயை அடக்க மகனை
அடங்கிப் போக சொன்னாள்.
இப்போது அம்பு அவள் புறம் திரும்பி விட்டது.”நீங்க என் வீட்டுக்கு வருவது இருக்கட்டும்.
நாங்க எப்போது உங்க வீட்டுக்கு வருவது?”
“இது என்ன புது கேள்வி சுந்தரி? நீ உன் அண்ணன் வீட்டுக்கு கேட்டுக்கிட்டு தான் வரணுமா
என்ன?”


“புரியாத மாதிரி பேசாதீங்க மதனி. என் மவனுக்கு பெண் கேட்டு வரணும். எப்போ வரணும்னு
சொல்லுங்க” நேரிடை தாக்குதல் தான் மீண்டும்.
“ஏற்கனவே சொல்லியிருக்கு சொந்தத்தில பெண்ணை கொடுப்பதில்லை என்று”.
“பிரியாவுக்கு சடங்கு சுத்தினேனே”
“அப்பமே உங்க அண்ணன் சொன்னாங்களே”
“இது என்ன அதிசயமா இருக்கு. உங்க மகளை எம் மவனுக்கு கொடுக்காமல் வேறு யாருக்கு
கொடுப்பீங்களாம்?”


“சுந்தரி இங்கே வழியில நின்னுக்கிட்டு பேசற பேச்சா இது?” கஜநாதன் குரல் கொஞ்சம்
அழுத்தமாக இருக்கவும் சுந்தரியின் குரல் கொஞ்சம் தாழ்ந்தது.
“அங்கே பாருங்கண்ணே. உன் மகளும் என் மகனும் எம்புட்டு நல்லா பேசிக்கிட்டு இருக்காங்க”
இவள் வாயைத் திறந்ததுமே மாதவியிடம் போகிறோம் என்று கண்ணைக் காட்டி விட்டு
நகர்ந்து விட்டிருந்த பிரியாவையும் அவளுடன் நின்று பேசிக் கொண்டிருந்த சுந்தரியின் மகன்
ராஜாவையும் காட்டினாள்.


சுந்தரியின் வார்த்தைக்கு நேர்மாறாக அவள் மகன் ராஜா பிரியாவிடம் வழிந்து
கொண்டிருந்தான். மதுவோ எப்போதும் போல இப்போதும் அவனைக் கலாய்த்துக்
கொண்டிருந்தாள்.


திருமணத்திற்கு வந்திருந்த மிகவும் நெருங்கிய உறவினர்களின் இவர்கள் வயதொத்த
பெண்களுடன் ஆனந்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர் அக்காவும் தங்கையும். நடுநடுவே
ராஜாவை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர் உள்ளூர் உறவுக்காரப் பெண்கள்.
எல்லாவற்றுக்கும் இளித்துக் கொண்டு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ராஜா.
பிரியாவும் மதுவம் உணவை முடித்துக் கொண்டு சாப்பாட்டுக் கூடத்தில் இருந்து கீழே படியில்
இறங்கிக் கொண்டிருந்த போது அவர்களின் எதிரில் ஏறி வந்து கொண்டிருந்தனர் அந்த
மூவரும். நல்ல உயரம், ரொம்ப கெத்தாக, ஹா….நீங்கள் எல்லோரும் எனக்குக் கீழே
என்பதைப் போல ஒரு பார்வை. தகப்பனையும் தாயையும் பார்க்கும் போது பழைய
திரைப்படங்களில் வரும் பண்ணையாரம்மா பண்ணையார் போன்று ஒரு தோற்றம்.
நல்லவேளையாக அவர்கள் மகன், அப்படித் தானிருக்க வேண்டும், மட்டும் இந்த கால
நாகரிகத்திற்கு ஏற்றார் போல் ஆடையில் வந்திருந்தான்.


இவர்களைக் கண்டதும் படிக்கட்டில் சற்றே ஒதுங்கினார் போல நின்றிருந்தார்கள் அவர்கள்
தங்களை கடந்து போவதற்கு. படிக்கட்டின் மேலே நின்று கொண்டிருந்த கஜநாதனும்
தேவநாதனும் இவர்களைக் கண்டதும் மிகவும் பவ்யமாக வணக்கம்
தெரிவித்தார்கள்.அவர்கலியன் பின்னால் நின்று கொண்டிருந்த தாய்மார்களும் இவர்களைக்
கண்டதும் வணக்கம் சொல்லவே பிரியாவின் காதில் “யாருக்கா இவங்க? நம்ம அப்பாவும்
பெரியப்பாவும் இந்த கும்பிடு கும்பிடராங்களே” என்று கிசுகிசுத்தாள்.
பிரியா பதில் சொல்லும் முன் தேவநாதன் கண்ணசைவில் அவர்களை தங்களருகே வரும்படி


ஜாடைக் காட்டவும் இவர்கள் மீண்டும் படியில் ஏறி தந்தையின் அருகில் நின்றார்கள். மீண்டும்
ஜாடையில் வணக்கம் வைக்க சொல்லவும் இவர்களும் தட்டாது அவர்களைப் பார்த்து
கைகளைக் கூப்பினார்கள்.


அவர்கள் பொதுவாக இவர்களை நலம் விசாரித்து விட்டு பிரியாவிடம் மட்டும் விசேஷமாக
யார்? என்ன? படிப்பு? வேலை போன்றவற்றைக் கேட்டாள் அந்த பண்ணையாரம்மா.
மன்னிக்கவும். அந்த அம்மாள். பிரியாவும் அவளுடைய சுபாவத்தின்படி எல்லாக் கேள்விக்கும்
மிகவும் தன்மையாகவும் இனிமையாகவும் பதில் சொன்னாள்.


அவர்கள் யார்? என்ன? ஏது? என்று அவர்களும் தங்கலிய இவர்களிடம் அறிமுகப்படுத்திக்
கொள்ளவில்லை. அவளுடைய பெற்றோரும் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை.அப்போது
தான் படியிறங்கி வந்து கொண்டிருந்த அண்ணன்களுக்கு முன்பே இவர்களைத் தெரியும்
போலும். அவர்களும் அவர்களைப் பார்த்து வணக்கம் வைத்தார்கள்.


இவர்கள் கல்யாண மண்டபத்திற்கு வெளியே வந்து காரில் ஏறப் போன போது மீண்டும்
அங்கே தோன்றினாள் சுந்தரி. “அண்ணா, நான் சொன்னதை மனதில் வைத்துக்
கொள்ளுங்கள். நீங்கள் எப்போது வர சொன்னாலும் நாங்கள் முறைப்படி பொண்ணுக் கேட்டு
வரோம்” என்றவள் பிரியாவை இரு கன்னத்தையும் அழுத்தி பிடித்து முத்தமிட்டாள்.
“மா……”
“ஷ்…..சும்மாயிரு”
“சின்னக்குட்டி, அத்தை உன்னிடம் ஆசையா இல்லேன்னு நெனச்சுக்காதே தங்கம். அக்கா
கல்யாணத்துக்கு உனக்கு நல்ல கையகல ஜரிகை வெச்சி அரக்கு கலர்ல பட்டுப்புடவை எடுத்து
தரேன்”


“ஏன்மா இந்த அத்தை இப்படி ரோதனை பண்ணுது” வாய் முணுமுணுத்தாலும் உதடு விரிந்து
கன்னம் தாண்டி காது வரை நீண்டது மதுவுக்கு.
“ஷ். மது சித்த சும்மாயிரு. அதுக்கு பாம்பு செவி. காதில் விழுந்துடப் போவுது” மேற்கொண்டு
வண்டியை நிப்பாட்டி வைக்காமல் பெரிய அண்ணன் மகேஷ் நகர்த்த தொடங்கினான்.
“அப்பாடா ஒருவழியா தப்பினோம்” பிரியா மாதவியின் காதோடு கிசுகிசுத்தாள்.
“பெரியம்மா, எப்ப பார்த்தாலும் இந்த பாடு படுத்துதே. நம்ம அக்காவைக் கொடுத்தால்
அவ்வளவு தான்”


“அதுக்குத் தான் இனி வழியில்லையே” கஜநாதன் உற்சாகமாக சொன்னார்.
“ஏன் அப்பா?” வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவன் தன்னருகில் அமர்ந்திருந்த அப்பாவைக்
கேட்டான்.
“பிரியாவுக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னா சுந்தரி தொந்திரவு இருக்காது. அதுக்கு சொன்னேன்”
“அது தான் தெரியுமே.”என்றான் பெரியவன்.


“நானும் சொல்லிக் கிட்டே இருக்கேன். பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கணும்னு”
விமலாச்சி சொல்லவும்
“நானும் இன்னைக்கு அதைத் தான் நெனச்சேன் அக்கா” என்றாள் மாதவி.
“வருகிற அமாவாசை அன்னைக்கு நல்ல சுப முகூர்த்தம். அன்னைக்கு பிரியாவின் ஜாதக
கட்டை எடுத்து வெச்சி சாமியைக் கும்பிட்டால் அப்புறம் மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிக்க
வேண்டியது தான் “ என்று முடித்தாள் விமலாச்சி.


“அய். அக்கா உனக்கு கல்யாணமா? சூப்பர். எனக்கு கையகல ஜரிகை வெச்ச அரக்கு கலர்
பட்டுப்புடவை” என்று சுந்தரியைப் போல சொல்லி தன்னருகில் அமர்ந்திருந்த அக்காவை
தோளில் இடித்தாள் மது.
“ச்சே, சும்மாயிரு” தங்கையைப் பார்த்து புன்னகைத்தாள் அவள்.
“வீட்டுக்குப் போனதும் ஒரு விஷயம் சொல்றேன்” கஜநாதன் சொல்ல
“சஸ்பென்ஸ் உடம்புக்கு ஆகாது பெரியப்பா. இப்பவே சொல்லுங்க” என்று கொஞ்சினாள்
மது.
அவளைப் போலவே குறும்புக்காரனான சின்னவன் ரிஷி “எப்பா, நம்ம பிரியாவுக்கு ஏதேனும்
சம்பந்தம் வந்ததாப்பா?” என்றான்.
“கரெக்ட் ரிஷிண்ணா. இதை நான் யோசிக்கலை. அப்படியா பெரிப்பா”
“ஏ அப்பா, ஈரை பேனாக்கி, பேனை பெருமாலாக்கிடுவீங்க அண்ணனும் தங்கையும்”
விமலாச்சி சொல்ல
“மாமா, இவுங்க வம்பே வேண்டாம். என்ன விஷயம்னு சொல்லுங்களேன்” என்று மாதவியும்
அவர்களை கிண்டல் செய்வதைப் போல விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆவலை
வெளிப்படுத்தினாள்.


“வீட்டுக்குப் போனதும் சொல்றேனே” என்றார் மீண்டும்.
“அய்யே பெரிப்பா.” சிணுங்கினாள் மது.
“அண்ணா சொல்லுங்கண்ணா.” தேவநாதனும் சேர்ந்து கொண்டார்.
“வண்டியில சொல்ற விஷயமா இது?”
“நாம மட்டும் தானே இருக்கோம்”
“பாரு. நம்ம பிரியாவை”
“அவ உம்மணாமூஞ்சி. அவளுக்கென்ன?”
“விஷயமே பிரியாவைப் பத்தியது தான். ஆனால் அவள் எவ்வளவு அமைதியா இருக்கிறா?”
“அவளைப் புகழ்ந்தது போதும். என்ன விஷயம்னு சொல்லுங்க பெரிப்பா”


“ம்………” என்று கனைத்துக் கொண்டு எல்லோர் முகத்தையும் பார்த்தவர் அவர்களின் முகத்தில்
இருந்த ஆர்வத்தைக் கண்டு மனதிற்குள் திருப்தி உற்றவராக சொன்னார்.”நம்ம பிரியாவை
பெண் கேட்டார்கள் என்னிடம்”
“ஆஹா…..ஹா” என்று கூச்சலிட்டாள் மது.”ஓஹோ அப்படியா விஷயம்”
“ஏய் சித்த சும்மாயிரு. மாமா நீங்க விவரம் சொல்லுங்க” என்றாள் மாதவி.
“யாருண்ணா அது?” என்று கஜநாதனின் முகத்தில் படர்ந்திருந்த சந்தோஷத்தைக் கண்டு
தேவநாதனும் ஆர்வம் மிகக் கொண்டவராக “யாருண்ணா?” என்று கேட்டார்.
“நம்ம பூபதி குடும்பத்தில் தான் தம்பி”


“என்ன……? என்ன சொன்னீங்க?” ஆச்சரியத்தில் பதறினார் தேவநாதன்.
“ஆமாம். பெரியவர் தான் என்னிடம் கேட்டார் தம்பி”
“யாரு பெரிப்பா அது?”
“நாம சாப்பிட்டு விட்டு கீழே இரம்கும் போது படிக்கட்டில் பார்த்தோமே….”
“அந்த பண்ணையார் குடும்பம்…?”
“மது நீ கிண்டலுக்கு சொன்னாலும் உண்மை அது தான்”
“அவுங்க பண்ணையாராப்பா?”
“ஜமீன்தார் குடும்பம் அம்மா அவுங்க. அந்த அய்யா தான் ராஜா மாரப்ப பூபதி. அந்த அம்மாள்
மிருனாளினி நாச்சியார். அந்த பையன் பேர் ராஜா சோமப்ப பூபதி”
“எது………?” ஆச்சரியத்தில் கண்கள் அகல கேட்டவள்,”சோ……….மப்பா………பூ.பதி..யா?”
விழுந்து விழுந்து சிரித்தாள் மது. “இந்த காலத்தில் கூட இப்படி பேர் வைப்பாங்களா?”
“ஏய் வாலு” அவள் காதைப் பிடித்து திருகிய ரிஷி “அவனுடைய பட்டப்பெயர் தான் அது”
“ஓஹோ…அப்படின்னா நெசப் பெயர் சூ..ர…. ..ப்ப…..பூபதியா…?’” எல்லோரையும் வம்பிழுத்து
வெறும் வாயை மெல்லும் அவளுக்கு இப்போது அவல் கிடைத்தால் விடுபவளா அவள்?
“அது அவுங்க தாத்தாப் பெயர்” என்று கூடவே சிரித்தாள் விமலாச்சி.
“இவனுடைய பெயர் அரவிந்தன். என் கூட படிச்சவன்” என்றான் வண்டியோட்டிக்
கொண்டிருந்த மகேஷ்.


“அது தானே பார்த்தேன்” என்று நெஞ்சை நீவி விட்டுக் கொண்டவளைப் போல நடித்த மது
”அக்கா நல்லவேளை தப்பிச்சே” என்று சொல்லி “இப்படி சொல்லிப் பாரேன் மைத்திரேயி
பாகம்பிரியா ராஜா சோமப்ப பூபதி..” என்று இழுத்து முடித்தாள். அவள் செய்த செய்கையில்
சிரிப்பு வந்தது எல்லோருக்கும். அடக்க மாட்டாமல் சிரித்தார்கள்.
“ஏய், எதுல விளையாடுவதுன்னு இல்ல?” தேவநாதன் கோபப்பட்டார்.


“தம்பி அவுங்களுக்கு என்ன தெரியும் இந்த குடும்பத்தின் பெருமையை?’ குரலில் சிறு வருத்தம்
எட்டிப் பார்த்தது கஜநாதனுக்கு.
அந்த சிறு வருத்தம் அவ்வளவு நேரமும் சேட்டை செய்து கொண்டிருந்த ரிஷியையும்
மதுவையும் வாயை அடைத்தது. வண்டி மிகவும் கனத்து மௌனமானது. வீட்டின் முகப்பில்
வந்து நின்று கீழே இறங்கிய தேவநாதனும் கஜநாதனும் தங்களுக்குள் என்னவோ
யோசித்தவாறு அமைதியாக இருக்கவே மற்றவர்களும் அமைதியாகவே வீட்டின் உள்ளே
போனார்கள்.


எந்த குடும்பத்தைப் பற்றி பேசிய முதல் நொடியிலேயே சந்தோஷமான அந்த குடும்பம்
அமைதியானதோ அந்த குடும்பத்துடன் தான் பிரியாவிற்கு சம்பந்தம் செய்தார்கள் அண்ணன்
தம்பி இருவரும்.
ஆனால் கடவுள் வேறு ஒன்று நினைத்திருக்க மனிதர்கள் நினைப்பது நடந்து விடுமா என்ன?

3 thoughts on “காற்றோடு காற்றாக-4”

  1. Avatar

    தெளிவான இயல்பான உரையாடல்கள். பெயர்கள் எல்லாம் எங்கிருந்து பெற்றீர்கள், மிகவும் நன்றாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *