Skip to content
Home » காற்றோடு காற்றாக -5

காற்றோடு காற்றாக -5

அத்தியாயம்-5


அரவிந்தனின் தாத்தா ராஜா சூரப்ப பூபதியின் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இப்போது கஜநாதன் வசித்து வரும் கிராமம் உள்ளடக்கிய பகுதியின் பாளையக்காரர்கள் அவர்கள். ராஜா
கட்டபொம்முவின் சமகாலத்தில் இருந்தே அவர்களும் தங்கள் குடிமக்களிடம் வரி வசூலித்து
ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி அங்கே ஜமீந்தார்களாக ஆண்டு வந்த பரம்பரையினர்.
ராஜா சூரப்ப பூபதி தன் காலத்தில் அநேக பள்ளிக்கட்டிடங்கள் கட்டினார். பராமரித்தார்.
அதில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் தான் இவர்களின் தந்தை ராமநாதன்.
சகோதரர்கள் இருவரும் அரண்மனையின் உபகார சம்பளம் பெற்று இந்த பள்ளியில் படித்து
மேல்படிப்பையும் உபகார சம்பளத்தின் உபயத்தினால் முடித்தவர்கள். அதனால் சகோதரர்
இருவருக்கும் இந்த குடும்பத்தினரிடம் தேவதா விசுவாசம் அதிகம். அதன் வெளிப்பாடு தான்
இத்தனை பவியம்.
தேவனாதனுக்கோ தன் சின்ன வயதில் தன் கல்லூரியில் படித்த ராஜா மாரப்ப பூபதியைக்
கண்டு எப்போதுமே ஒரு பெரும் வியப்பு தான். அவருடைய உயரமும் நிறமும் தோரணையும்
கம்பீரமும் உடல்வாகும் மட்டுமல்லாமல் அவர் அவ்வப்போது பவனி வரும் சாராத் வண்டியும்
தினம் வரும் செவர்லெட் காரும் பெரும் பிரமிப்பு தான். அதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக
அவருக்கு நடந்த திருமணம் தான் இன்றைக்கும் திரைப்படத்தில் வரும் கனவு காட்சியைப்
போல மனதின் அடி ஆழத்தில் தங்கி விட்டிருந்த அரிய பொக்கிஷம்.
இவர்களைப் போன்றே அருகில் இருக்கும் ஒரு பாளையக்காரரின் மகள் மிருனாளிநிக்கும்
இவருக்கும் நடந்த திருமணம் இன்று வரை அந்த பிரதேசத்தில் பேசப்படும் பேசு பொருளாக
இருக்கிறது என்றால் அந்த திருமணம் எத்தகைய தாக்கத்தை இன்றைய அங்கத்தி சமூகத்தில்
உண்டு பண்ணியிருக்கும்…?
ஒரு வார காலம் ஊரை அடைத்து பந்தலிட்டு தினந்தோறும் இசைக்கச்சேரி நடனக்கச்சேரி
வாண வேடிக்கை, பேன்ட் வாத்தியக் கச்சேரி என்று அமர்க்களப்பட்டது. ஊரே
திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. அரண்மனையில் வேலை செய்தவர்கள் அனைவருமே
அவர்களே ஜமீன்தார்கள் போல நினைப்புடன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பணிவுடன்


வந்திருந்த விருந்தினர்களை உபசரித்த பாங்கு பல நாள் பேசப்பட்டது. அதுவும் திருநெல்வேலி
சீமையில் இருந்து வந்திருந்த துரைமார்களும் துரைசானிகளும் அவர்கள் நிறமும் ஆடை
அலங்காரமும் வந்து இறங்கிய வண்டியும் பார்க்க பார்க்க திகட்டவில்லை அந்த ஊர்
மக்களுக்கு.
திருமணத்தன்று நடந்த பெண் அழைப்பு ஆஹா,,..!.ஆஹா… ! எத்தனை ஜனங்கள், எத்தனை
வகையான சீர்வரிசை பொய்க்கால் குதிரை படாரன் படாரச்சி பொம்மைகள் நாதஸ்வர
கோஷ்டி, பேன்ட் வாத்திய கோஷ்டி என்று ஊரே அலமலந்து தான் போயிற்று. ஊர் மக்கள்
அனைவருக்கும் ஒரு வாரமும் அரண்மனையில் தான் பந்தி இட்டு மூன்று வேளையும் வடை
பாயசத்துடன் அரிசி சோறு விருந்து. இன்றைக்கு நினைத்தாலும் பால்பாயசத்தின் சுவை
அண்ணன் தம்பி இருவருக்கும் நாக்கின் அடியில் இனித்துக் கொண்டுதானிருக்கிறது.
அதனால் எப்போது தம் மக்களுக்கு தங்கள் சிறுவயது கதை சொல்ல நேர்ந்தாலும் கண்டிப்பாக
அதில் இந்த பாளையக்காரரின் குடும்பமும் அவர்கள் வீட்டில் நடந்த திருமணமும் கண்டிப்பாக
இடம் பெற்றிருக்கும்.
இப்போது அந்த வீட்டில் இருந்து தான் பிரியாவிற்கு சம்பந்தம் வந்திருக்கிறது. கேட்கவா
வேண்டும் அண்ணன் தம்பி இருவருக்கும். தேன் உண்ட மந்திகள் போல தலைகால் புரியாது
பரபரத்து தான் கிடந்தார்கள்.
ஜமீனிளிருந்து அழைப்பு வந்திருந்தது அன்று மாலை அவர்களை வர சொல்லி. எனவே அதற்கு
முன்பு வீட்டினருடன் கலந்து பேசிக் கொள்வது என்று குடும்பத்தினரை அழைத்து அமர
வைத்திருந்தனர் இருவரும்.
கஜநாதன் தான் ஆரம்பித்தார்.”அரண்மனையில் இருந்து முறைப்படி அழைப்பு வந்திருக்கு
மாலை எங்களை வர சொல்லி”
“இது என்னங்க புதுசா இருக்கு? பெண் வீட்டினாரா போவது அங்கே?” என்ற விமலாச்சியை
“அது தானே அத்தான். அவர்கள் இங்கே வந்திருக்க வேண்டாமா?’ ஒத்து பேசினாள் மாதவி.
“ஹேய், நீங்க என்ன, அவர்களை சாதாரணமா நெனச்சிட்டீங்க?” என்றார் தேவநாதன்.
“விமலா, நாங்கள் சொல்லுவோமே எங்களுடைய சின்ன வயசில்……” என்று அவர்
தொடங்குவதற்கு முன்பே
“அப்பா, இந்த கதையை எத்தனை வாட்டி கேட்டிருக்கிறோம்” என்றான் ரிஷி.
“இல்லப்பா. அவர் தான் மாரப்பா பூபதி…..” என்று தேவநாதனே தொடரவும்
“இன்னொரு வாட்டி அவுங்க கதையை ஆரம்பிச்சீங்கன்னா” என்று ஒற்றை விரலை
காட்டினான் ரிஷி.
“அழுதுடுவோம்” என்று வடிவேல் பாணியில் முடித்தாள் மது.
மாலையில் அரண்மனையின் வாயிலுக்கு வண்டியில் வந்தவர்கள் வண்டியை ஒரு ஓரமாக
நிறுத்தி விட்டு பெரிய வாயில் வழியாக நுழையாமல் அவர்கள் எப்போதும் நுழையும் சிறு
திட்டி வாசல் வழியாக உள்ளே நுழைந்தவர்களுக்கு சிறுவயதில் இருக்கும் பணிவும் பாவியமும்
இப்போதும் மனதிற்குள் நுழைந்து கொண்டது. சற்றே பம்மினார் போல உள்ளே
நுழைந்தவர்களின் கண்களில் முன்னறையில் அதாவது ஒருகாலத்தில் தர்பார் மண்டபமாக
இருந்த இடத்தில் அமர்ந்திருந்த ராஜா சூரப்ப பூபதி கண்களில் பட்டார். இவர்கள் இருவரும்
தயங்கி தயங்கி படிகளில் எறிக் கொண்டிருக்கும் போதே உள்ளேயிருந்து மாரப்பர் வந்து
விட்டவர் இவர்களை வரவேற்று அமர வைத்தார். அவர்கள் முன்னே அமர்ந்து கொள்வதற்கு
தயங்கியவர்களை சூரப்பர் வற்புறுத்தி உட்கார வைக்கவும் உள்ளேயிருந்து இரு
பணியாளர்கள் வெள்ளி தம்ளர்களில் பழச்சாறும் இலகு பட்சணமுமாக பின் தொடர மிகுந்த
தோரணையுடன் வந்தார் மிருனாளினி நாச்சியார்.
சேம லாபங்களை விசாரித்து முடித்து விட்டு மாரப்பர் “உங்கள் மகள் பிரியாவை எங்கள் மகன்
அரவிந்தனுக்கு எடுக்கலாம் என்று எங்கள் எண்ணம்” என்றார்.
நேரிடையாகவே மிருனாளினி பேச்சை ஆரம்பித்தார். ”இருவரும் ஒரே வளாகத்தில் வேலை
செய்கிறார்கள். உங்களுக்கே தெரியும் எங்களைப் போன்ற பாளையக்காரர்களின்
வாரிசுகளுக்கு எங்களைப் போன்ற ஜமீன் குடும்பங்களில் நீ நான் என்று பெண் கொடுக்க
போட்டி இருக்கும் என்று”
“‘அதிலும் எங்கள் அரவிந்தன் வங்கியில் உதவி மேனேஜராக பனி புரிகிறான்”
“நம்மளை மாதிரி பாரம்பரியமான பாளையக்காரவுங்க வீட்ல பெண் எடுக்கலாம் என்றால்
மாரப்பன் ஒத்துக் கொள்ள மாட்டேங்கிறான்” சூரப்பர் சொல்ல,
“அப்பா, இவுகளை நமக்கு எத்தனை வருஷமா தெரியும். அதுவும் இவுங்க அப்பா நம்ம
பள்ளிகூடத்தில வேலை பார்த்தவுங்க. நல்ல குடும்பம். அதனால் இவுங்க வீட்ல தானே பெண்
எடுக்கணும்”
“பிரியாவும் நம்ம அரவிந்தனுக்கு பொருத்தமா இருக்கிறாள். படிப்பும் இருக்கு. நமக்கு
பாரம்பரியத்தை விட பெண் நல்ல குணமானவளா இருக்கணும். அது தான் முக்கியம்”
நாச்சியார் சொல்ல.
“நாங்கள் உங்க வீட்டுக்கு வந்து பெண் கேட்பது தான் முறை. ஆனால் உங்கள் மனநிலை
என்னவென்று தெரிந்து கொண்டு பிறகு முறைப்படி பெண் கேட்டு வரலாம் என்று
நினைத்திருக்கிறோம்” சூரப்பர் சொல்ல,
‘நாங்கள் கேட்டு நீங்கள் மறுக்கவா போறீங்க?” என்று மாரப்பர் முடித்தார்.
அவர்கள் மூவரும் மாறி மாறி பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சகோதரர்களுக்கு இன்னும்
திகைப்பு நீங்கவில்லை. படிக்கும் காலங்களில் உபகார சம்பளம் பெற்று செல்வதற்காக எந்த
தர்பார் மண்டபத்தில் ஒரு ஓரத்தில் பவ்வியமாக கால் கடுக்க காத்திருந்து நின்றார்களோ அதே
மண்டபத்தில் இன்று சோபாவில் அவர்களுக்கு சமதையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்
என்ற நினைப்பே ஒருவித பரவசத்தைக் கொடுத்திருந்தது.
இதை…இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பதைப் போல ஒரு வெற்றி புன்முறுவலுடன்


மாரப்பர் பார்த்துக் கொண்டிருக்க சகோதரர்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கு ஒரு வார்த்தை
சொல்லி விட்டு இவர்கள் முறைப்படி கேட்டு வர தகவல் தருவதாக சொல்லி வந்தனர்.
தங்கள் வீட்டு முன்னறையில் இத்தனையையும் ஒரு கோர்வையாக சொல்லி முடித்த கஜநாதன்
“உங்க அபிப்பிராயம் கேட்டுக் கொண்டு சொல்வதாக சொல்லி வந்தோம்” என்று முடித்தார்.
குடும்பத் தலைவனாக நான் சொல்றேன் நீங்க செய்யணும் என்ற தோரனையின்றி இவர்களின்
அபிப்பிராயம் கேட்கும் ஒரு நல்ல தந்தையாக அவர் கேட்கவும் அதையே அவருடைய தம்பி
தேவநாதனும் வழி மொழியவும் அந்த இடமே சற்று நேரம் அமைதியாக இருந்தது.
இதுப்போல திருமண வீடுகளுக்கு வந்தால் தங்கள் மக்களுக்கும் நல்லதொரு சம்பந்தம்
கிட்டக்கூடும் என்று நினைத்தவர்கள் தான் விமலாவும் மாதவியும். அவர்கள் இதை
எதிர்பார்த்திருந்ததால் மிகவும் மகிழ்ச்சியாகவே ஒப்புக் கொண்டார்கள் என்பதை அவர்களின்
மௌனம் சொல்லியது.
யாருடையோ திருமணத்திற்கு வந்து வந்த இடத்தில் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்படுவது
பிரியாவிற்கு மலைப்பாக இருந்தது. அவள் இவ்வளவு சீக்கிரத்தில் தனக்கு திருமணம் முடிக்க
கூடிய நேரம் வரும் என்று எதிர்பாராத திகைப்பு தான் அவளுக்கு.
திருமணமே திகைப்பானால் மணமகனைப் பற்றி என்ன நினைக்கப் போகிறாள்?
“வாவ்.அக்கா, நீ ரொம்ப கிரேட்”
“ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்னு இதைத் தான் சொல்வது போல” ரிஷியும் மதுவைப்
போலவே வியந்து கொண்டான்.
ஆனால் மகேஷ் பெரிய அண்ணனுக்கே உண்டான பொறுப்புடன் யோசித்துக்
கொண்டிருந்தான். அவனுடைய மௌனத்தை கண்டு தேவநாதன் “என்னய்யா, நீ என்ன
சொல்றே?” என்று கவலையுடன் கேட்டார்.
அவனோ தலையைக் குலுக்கிக் கொண்டு “ம்…ஒண்ணுமில்லை” என்று இழுத்தான்.
“அய்யா, உனக்கு மனசுல என்ன இருந்தாலும் சொல்லுப்பா” விமலா சொல்ல
“உனக்கு இஷ்டமில்லைன்னா இந்த பேச்சே வேண்டாம் தம்பி” என்று முடித்தாள் மாதவி.
மாரப்பனின் குடும்பத்தைக் கண்டு அலமலந்து போய் கிடக்கும் அப்பாக்களுக்கு மகேஷின்
யோசனை நிகழ்கால நடப்பை மனதிற்குள் கொண்டு வந்தது.
“ஏன் தம்பி, அந்த பையன் அரவிந்தன் உன்னுடன் படித்தவன் தானே. அதுக்காக
யோசிக்கிறாயா?” என்று கஜநாதன் கேட்க,
“ம். ஆமாம்ப்பா” என்றான் மகேஷ்.
“ஏனப்பா மாப்பிள்ளை பையன் எப்படி?” என்று நேரிடையாகவே கேட்டார் தேவநாதன்.
“குறைன்னு சொல்றதுக்கு ஒண்ணுமில்லைப்பா. அது தான் யோசிக்கிறேன்”

“விளக்கமாகத் தான் சொல்லேன்”
“அரவிந்தன் அதிகமாக பேசும் இயல்பினன் அல்ல. கொஞ்சம் அதிகப்படி ஈகோ வேறு”
“பெரிய வீட்டு பையன் என்று கொஞ்சம் ஈகோ இருக்கத் தானே செய்யும்” கஜநாதன்
“ஆளும் அம்சமா இருப்பான்” அவன் சொல்லி முடிக்கும் முன்பு மது துள்ளினாள் “ஓஹோ, நம்ம
அக்காவுக்கு பொருத்தமா இருப்பான்னு சொல்லு”
“அவன் இவன் என்று பேசக் கூடாது மதும்மா” கஜநாதனின் சொல்லுக்கு
“இன்னும் திருமணம் நிச்சயிக்க கூட இல்லையே பெரியப்பா” என்று சிணுங்கினாள்.
“அவனுக்குன்னு ஒரு நெருங்கிய வட்டம். அவர்களுடன் மட்டும் தான் பேசுவான். மொத்தத்தில்
அவன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன்”
“நல்லது தானே” என்று முடித்தனர் அண்ணன் தம்பி இருவரும்.
“நாமாக போய் எங்கள் வீட்டுப் பெண்ணை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம்
நிற்கவில்லையே” என்று ரிஷியும் விளையாட்டுத்தனைத்தை விட்டு விட்டு அண்ணனாக
பொறுப்புடன் சொன்னான்.
“அதானே. அவர்களாகத் தானே வந்து கேட்கிறார்கள். வரட்டும். பார்ப்போம்” என்று
தேவநாதனும் மகேஷை ஒத்து சொன்னார்.
இன்று மாலை மாரப்பர் குடும்பம் பிரியாவை கேட்டு வரப் போகிறார்கள். தேவனாதனுக்கும்
கஜநாதனுக்கும் இருக்கும் பரபரப்பில் ஆர்வ மிகுதியில் திருமணத்தை இன்றே முடித்து
விடுவார்கள். மாதவிக்கும் விமலாவுக்கும் பிரியாவிற்கு திருமணம், நம் வீட்டின் முதல்
திருமணம் அதை எப்படி சிறப்பாக செய்வது என்று மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அதுவும் இன்று முதன் முதலாக தங்கள் வீட்டிற்கு வரும் சம்பந்திகளை எப்படி எல்லாம்
வரவேற்பது, இன்றைய நிகழ்ச்சியை சிறப்பாக நடந்தேற வேண்டுமே என்று தீவிர திட்டமிடல்
இருந்தது.
அழகு நிலையத்தில் இருந்து யாரையாவது வரவழைப்போமா என்று கேட்டதற்கு மறுத்து
விட்டாள் பிரியா. அவளுடைய எளிமையான அலங்காரத்தைக் கண்டு “என்ன பிரியா
இத்தனை எளிமையாக இருக்கிறாய்?” என்று அங்கலாய்த்துக் கொள்ளத் தான் முடிந்தது
அவளால்.
“ஏன் அவளுக்கென்ன? குத்து விளக்கு மாதிரி எவ்வளவு பளிச்சென்று இருக்கிறாள். எவ்வளவு
நேர்த்தியாக அலங்காரம் செய்து கொண்டு எத்தனை அம்சமாக இருக்கிறாள்” என்று
வக்காலத்து வாங்கினாள் பெரியம்மா.
“குத்து விளக்கா…….ஆஹா…அக்கா..பார்த்து பத்திரமா இருந்துக்கோ. திரி போட்டு விளக்கு
ஏற்றி விடப் போறாங்க”
இத்தனை ஆர்ப்பாட்டத்திற்கு நடுவில் உள்ளே வந்த கஜநாதன் பிரியாவைக் கண்கள் கசியப்
பார்த்துக் கொண்டிருந்தவர் அருகில் நெருங்கி அவள் தலையை தொட்டு தடவி ஆசிர்வதித்து


“ம்..” என்று கண்களை துடைத்துக் கொண்டு விட்டு அப்போது பின்னால் வந்து நின்ற தன்
தம்பியைப் பார்த்து “நம் அம்மா மாதிரி நிறைஞ்சு இருக்கா இல்ல” என்றார்.
அதே உணர்வுடன் அவரும் “ஆமாம்” என்று ஆமோதித்தார். விமலா பிரியாவின் கன்னம்
வழித்து நெட்டி முறித்தாள்.
கூடம் நிறைய எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். பேச்ச்சு பொதுவானதாகப் போய்க்
கொண்டிருந்தது. அரவிந்தன் மிருனாளினியின் காதில் ஏதோ சொல்ல அவள்
வெளிப்படையாக அதை சொன்னாள்.”பிரியாவிடம் பத்து நிமிஷம் தனியா பேசனுமாம்”என்று.
அதையே மனதிற்குள் எதிர்பார்த்திருந்த பிரியாவிற்கு இந்த ஏற்பாடு மனதிற்குள் ஒரு
எதிர்பார்ப்பைக் கொடுத்தது. அவன், அந்த அரவிந்தன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவள்
ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள். ஒரு இளம் பெண்ணை பார்க்கும் எந்த ஒரு
இளைஞனுக்கு இருக்கும் ரசாயன உந்துதல்கள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் தான்
திருமணம் முடிக்க போகும் பெண்ணை தனியாக சந்திக்கிறோம் என்ற எக்ஸ்சைட்மென்ட்டும்
இல்லை. வெரி மச் அபீசியல் எனபதைப் போல இருந்தது அரவிந்தனின் தோரணை.
ஆகையினால் பிரியாவும் எந்தவித சென்டிமென்ட்டுக்கும் இடம் கொடுக்காமல் ஏதோ
இன்டர்வியூவில் தேர்வர்களின் கேள்விக்கு பதில் சொல்ல தயாராக இருக்கும் தேர்வாளரைப்
போல இருந்தாள்.
“உன் பேர் என்ன? என்ன படிச்சிருக்கே?” அவன் தான் தொடங்கினான். அவன் தானே பேச
வேண்டும் என்று கேட்டான். அதனால் அவனே தொடங்கட்டும் என்று காத்திருந்தவள் இந்த
கேள்விகள் “ஜஸ்ட் பார் ஐஸ் பிரேக்கிங்” என்று புரிந்து தன்மையாகவே பதிலும் சொன்னாள்.
“நாம் இருவரும் ஒரே வளாகத்தில் தான் பணிபுரிகிறோம். ஆனால் நான் இதுவரை உன்னைப்
பார்த்ததோ கேள்விப்பட்டதோ இல்லை”
“நான் உங்களைப் பார்த்திருக்கிறேன்.”
“அப்படியா?”
“ம்..பேசிக் கூட இருக்கிறேன்” பேச்சு சரளமாக இருக்கட்டும் என்று மென்மையாகவே பதில்
சொன்னாள் அவள்.
“எப்போ?’ கண்களை சுருக்கி யோசித்தவனாக கேட்டான்.
ரொம்பத் தான் யோசிக்கிறான். “உங்கள் வங்கியில் கணக்குத் தொடங்க வந்து போது”
உதட்டுக்குள் நாக்கை சுழித்துக் கொண்டாள்.
“அப்படியா…. கவனத்தைக் கவர்ந்திருக்காது. நிறைய பெண்கள் வந்து பேசுவார்கள், நான்
அதையெல்லாம் கண்டுப்பதில்லை”
முகத்தில் அறை வாங்கியதைப் போல தான் இருந்தது அவளுக்கு. என்னவொரு இறுமாப்பு.
முகம் இறுக பார்வையை ஜன்னலின் வெளியே திருப்பினாள். கொஞ்ச நேரம் அவள்
அமைதியாக இருக்கவே அவனாகவே மீண்டும் பேச்சை ஆரம்பித்தான். தன்னுடைய் படிப்பு
உத்தியோகம், அவனுடைய பொழுதுபோக்கு என்று ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தான்.


கிட்டத்தட்ட தம்பட்டம் எடுத்து அவள் காது ஜவ்வைக் கிழித்து விட்டான் என்றால் சரியாக
இருக்கும். அத்தனை ஒரு பீத்தல். அவன் பேச்சை முடித்த போது இவ்வளவு நேரமும் அதைக்
கேட்டுக் கொண்டிருந்த அவள் நீண்டதொரு பெருமூச்சை விட்டாள். கொஞ்சம்
அடுத்தவர்களையும் நினைத்துப் பார்க்க கூடிய இயல்பிருந்தால் அவளுடைய பெருமூச்சிற்கு,
தான் அவளை அத்தனை நேரமும் போர் அடித்திருக்கிறோம் என்று எளிதாக பொருள்
கொண்டிருப்பான். இவனுக்கு அதுபோல எல்லாம் பொருள் விளங்காது. விளங்கிக் கொள்ள
முடியாது. ஏனெனில் தன்னைத் தவிர அவனுக்கு பேசுவதற்கும் யோசிப்பதற்கும் வேறு எதுவும்
இல்லை.
பிறகு எதையோ நினைத்துக் கொண்டார் போல அவளிடம் விவரம் கேட்டான். இத்தனை
நேரமும் என் காது ஜவ்வைக் கிழித்தாய் அல்லவா இரு உன் காதை அறுத்து தொங்க
விடுகிறேன் என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டாள். அவளுக்கும் அவன்
அளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சமேனும் தானும் பீத்திக் கொள்ள வேண்டும் என்று
மனதிற்குள் சிறு அவா ஒன்று உண்டாயிற்று. ஆனால் சாதாரணம் போல குரலில் இயல்பாக
சொன்னாள்.
“நான் எம் எஸ்சி எம்பில் முடிச்சிட்டேன். பி.ஹ்ச்டி க்கு பதிவு பண்ணியிருக்கிறேன். இப்போது
அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்”
“நான் இப்போது உதவி மேனேஜராகத் தான் இருக்கிறேன். நானும் பிரமோசனுக்காக
படித்துக் கொண்டிருக்கிறேன்.”
“நானும் டி.என்.பி.சி குரூப் ஒன் தேர்வு எழுதியிருக்கிறேன். தேர்வு முடிவிற்காக
காத்திருக்கிறேன்”
“வருடா வருடம் எத்தனையோ லட்சம் பேர் அந்த தேர்வை எழுதுகிறார்கள். ஆனால் அதில்
தேர்ச்சி அடைவது அத்துனை சுலபமல்ல”
“எனக்கு தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் திரும்ப திரும்ப எழுதிக் கொண்டு தான்
இருக்கிறார்கள்.”
“பரீட்சை எழுதி விட்டாலே தேர்வாகி விட்டதாக நினைக்க கூடாது” என்று ஒரு குத்து
குத்தினான்.
என்னடா இவன்! எப்படி பந்தைப் போட்டாலும் அடித்து பவுண்டரிக்கு அனுப்புகிறானே
என்று நீண்ட தூரம் ஓடிய சலிப்பு ஏற்பட்டது அவளுக்கு.
மேற்கொண்டு அவனுடைய பதவி உயர்வு அதனால் அவனுக்கு கிடைக்க கூடிய அந்தஸ்து
அப்படி இப்படி என்று மேலும் ஒரு பத்து நிமிஷம் அவனே பேசிக் கொண்டிருந்து விட்டு
சொன்னான். ”ஓகே பிரியா, நான் என் பெற்றோரிடம் சொல்லி விடுகிறேன். உன்னை எனக்கு
பிடித்திருக்கிறது என்று”
ஒரு வினாடி, ஒரே ஒரு கேள்வி, “பிரியா உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?” என்று
கேட்கவில்லையே இவன். என்னவொரு தன் முனைப்பு. அவளுள் ஒரு சின்ன ஏமாற்றம்
பரவியது. தான் அதிகப்படியாக எதிர்பார்த்து விட்டோமோ என்று தன்னைத் தானே

ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் அவள்.
அறையை விட்டு வெளியே வந்த போது எதிரில் அமர்ந்திருந்த தேவநாதன் தான் முதலில்
கண்களில் பட்டார். மிகவும் சந்தோஷமாக இருந்தார். கண்களின் பக்கவாட்டில் பார்த்த போது
கஜனாதானோ நெடுஞ்சான் கிடையாக தெண்டனிடாத குறை தான்.
தன்னுடைய ஏமாற்றம் அவளுடைய அறிவிற்கு போகும் முன் அவள் கண்கள் கண்ட காட்சி
இதயத்திற்குப் போனது. ஆம். இந்த திருமணம் இவர்களின் சிறுவயது கனவு கௌரவம் சமூக
அங்கீகாரம் மனநிறைவு சந்தோஷம் என்று எத்தனை. போகட்டும். நம் ஏமாற்றம் பெரிதல்ல.
இதோ இவர்களின் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம். அது நம் திருமணத்தால் இவர்களுக்கு
கிடைக்குமெனில் நம் ஏமாற்றம் ஒரு பொருட்டே அல்ல.
தேவநாதன் தன் சக்திக்கு மீறி திருமண செலவு செய்ய ஒப்புக் கொண்டதோ, அதீத
ஆடம்பரமாக அதிக பொருட் செலவில் நிச்சயதார்த்தம் நடத்தியதோ பிரியாவிற்கு
ஆச்சரியத்தை தரவில்லை. இது இப்படித் தான் போகும் என்று முன்கூட்டியே
எதிர்பார்த்திருந்ததால் அவளும் அமைதியாகவே இருந்தாள்.
பெரியவர்களின் ஒரே தாரக மந்திரம் ஒன்றே ஒன்று தான்.”நம் மகள் ராணி மாதிரி வாழப்
போகிறாள் “எனபது மட்டும் தான்.

-G.shyamala Gopu

1 thought on “காற்றோடு காற்றாக -5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *