Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை-1

கால் கிலோ காதல் என்ன விலை-1

  💟 ¼ கிலோ காதல் என்ன விலை?💟

அத்தியாயம்-1

    பேருந்தின் பலத்த குலுக்கலில் தக்காளி பெட்டியிலிருந்து தக்காளி கீழே உருண்டது.

      காலையிலேயே ஐந்து ஐந்தரைக்கு பேருந்தில் கூட்டமில்லாத காரணத்தால் குறிப்பிட்ட சிலரே இருக்க, தக்காளி உருண்டப்போது ஒரு முதியவர் தக்காளி பெட்டிக்கு சொந்தமானவனை அழைத்தார்.

  “தம்பி தம்பி. தக்காளி பெட்டி சரியுது பாரு” என்று தோளைத்தட்டவும், மெதுவாக கண்ணை திறந்து தன்னிரு கைகளால் முகத்தை அழுத்த துடைத்து தன்னை அழைத்த பெரியவரை ஏறிட்டான்.

    கண்டெக்டர் விசில் ஊதவும் காதில் ‘கொய்’யென்று சப்தம் கேட்க, “யோவ் யாருமே ஏறாத இடத்துல எதுக்குயா ‘உய்உய்னு ஊதிட்டு இருக்க? உன்னால காது செவிடாகுது.” என்று கூறிவிட்டு பெரியவரிடம் இனி தக்காளி பெட்டியை பார்த்துக்கொள்வதாக செய்கையில் பதிலளித்தான்.

   “ஏறும் போதே காய்கறி பெட்டியை ஏத்தாதனு சொன்னேன். பெரிய மசிறாட்டம் ஏத்திட்டு விசில் ஊதாதனு சொன்னா வண்டியை எப்படி நிறுத்தறது வந்துட்டானுங்க காய்கறி பெட்டி மூட்டை லக்கேஜை எல்லாம் பஸ்ல ஏத்திட்டு” என்று கண்டெக்டரும் பதிலுக்கு சூடாக வார்த்தையை விட்டார்.

   எதிரே இருந்தவன் அசராமல் முறைக்க, அவன் தாடியும் மீசையும்,  பேசின பேச்சிற்கு அடித்திடுவானோ என்று திகைத்தார் டிக்கெட் கொடுத்தவர்.

   அதற்குள் செய்யாறு பாலம் தாண்டி ஆவனியாபுரத்தில் வண்டி நிற்கவும், தக்காளி பெட்டியை இறக்கிவிட்டு, உருளை காய்கறி வெங்காயமென்ற  மேலும் இரண்டு பெட்டியையும் கீழே தூக்கி அலுங்காமல் வைத்தான்.
   கடைசியாக கையில் பேருந்து டயருக்கு பஞ்சரை ஏற்படுத்தும் விதமாக ஆணிகள் அடங்கிய மரகட்டை கருணை கிழங்கில் அடித்திருக்க அதையும் எடுத்தான்.

   அவன் எடுக்கும் போதே முகத்தில் நான்கு கோடு இழுத்து விடுவானோயென்ற பயம் கண்டெக்டருக்கு லேசாய் துளிர்விட்டது.

   “அதெதுக்கு தம்பி?” என்று கூடவே இறங்கிய பெரியவர் கேட்க, அவனது  சிம்ம குரலில் “அதுவொன்னும் தாத்தா. இதுக்கு முன்ன என்னை தாண்டி போன பஸ்ஸை இந்த டிரைவர் ஓவர் டேக் பண்ணிட்டார். அந்த பஸ் வரும்ல. அப்ப இதை போட்டு அது பஞ்சர் ஆகவும் நிதானமா பார்த்துட்டு போக எடுத்தாந்தேன்.

   ஒரு காய்கறி பெட்டியை எடுத்தாந்தா வண்டில ஏத்தமாட்டானா அவன்? அவன் அப்பன் வீட்டு வண்டியா?
 
  பயணிகள் வண்டி , ஆட்கள் இருந்தா மேல ஏத்தியிருப்பேன்ல. பயணிகள் இல்லாம ஈ உலாத்துற இடத்துல என் காய்கறி பெட்டியை ஏத்தமாட்டானா? இந்தா என்னை ஏத்தாம போனதுக்கு இப்ப செலவு இழுத்து வைப்பேன்ல” என்று கூறி அடுத்து வரும் பேருந்திற்கு காத்திருப்பதாக கூறவும், தற்போது கண்டெக்டருக்கு இந்த அதிகாலை வேளை நல்ல காற்றோட்டமான சூழலிலும் வேர்த்தது.

   ”எனக்கு நல்ல மூடு. நீ தப்பிச்சிட்ட மகனே” என்று கண்டெக்டரை பார்த்து கூறியவன் அடுத்து வரவிருக்கும் வண்டியின் தடத்தை வைத்து ஆணியை போட்டுவிட்டு அங்கே போடப்பட்ட டீக்கடையில் டீயை சொல்லிவிட்டு மரபெஞ்சில் அமர்ந்தான்.
  
    ‘எமபாதகனா இருக்கானே. நல்லவேளை நான் பஸ்ல ஏத்திட்டேன்.’ என்று கண்டெக்டர் ‘விடு ஜூட்’ என்ற விதத்தில் விசில் சப்தத்தை குறைத்தே ஊதி பேருந்தை விரட்டினார்.

   பின்னால் வந்த பஸ் பஞ்சராகும் சப்தம் கேட்டதும், டீயை மொத்தமாய் தொண்டையில் நனைத்துவிட்டு, பணத்தை தந்து, அங்கே நிறுத்தியிருந்த TVS xl 100 comfort எடுத்து இரண்டு பெட்டியை பின்னால் கட்டினான்
  தக்காளி பெட்டியை முன்னால் வைத்து வண்டியை இயக்கினான்.

   ”எவன்யா இவன் வண்டி பஞ்சராகும்னு சாபம் போட்டான். அவன் இறங்கின இடத்துலயே பஞ்சராகிடுச்சு.” என்று அவன் நிறுத்த கூறியும் நிற்காமல் வந்து பின்னால் தங்கி, தற்போது இவனால் ஆணி டயரால் பஞ்சராகிய பேருந்தின் கண்டெக்டர் புலம்பினார்.

   ‘தலைக்கணம்’ என்று கூறுவார்கள் இவன் முடியே இவன் தலைக்கு கணத்தை தருவிக்கும். இவன் தலைமுடியை ஒட்டி வெட்டி காண்பதெல்லாம் அரிதான விஷயம்.

  அடர்த்தியா புருவம், ஆளை துளைக்கும் கழுகு கண்கள், விடைக்கு மூக்கு, என்று அழுத்தமான ஆளும் கோபக்காரனும் என்று பழகாமலேயே கூறிடலாம்.  அழுத்தமான உதடு மட்டும் முட்புதர் போன்ற தாடி மீசைக்குள் ஒளிந்து கொண்டுள்ளது.

  இத்தனைக்கும் மளிகைக்கடையில் அவன் யாரிடமும் எரிந்து விழமாட்டான். அத்தனை கனிவான முகம்.
  
பெயர் :அர்ஜுன்
வயது :27
உயரம்:6 அடிக்கு இரண்டு இஞ்ச் குறைவு
நிறம்: மாநிறம்
பெற்றோர்: பொன்வண்ணன்-இளவழகி
படிப்பு : டிப்ளமோ இன்ஞினியரிங்
மேற்கொண்டவைகள் ராசி நட்சத்திரம் எல்லாம் கோவில் குருக்களிடம் கூறிவிட்டு இறைவனை துதிக்க ஆரம்பித்தார் இளவழகி அர்ஜுனின் அம்மா.

   “என்னம்மா அர்ஜுன் ஜாதகம் மாதிரியிருக்கு?” என்று பூசாரி கேட்க, “ஆமா பூசாரி கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்திருக்கு. அந்த பொண்ணு ஜாதகம் அர்ஜுனோட பொருந்தியிருக்கு. வர்ற சனி ஞாயிறுல பொண்ணு பார்த்துட்டு முடிச்சிட்டா, அடுத்து அவனுக்குனு ஒரு வாழ்க்கை அமைஞ்சிடும்.
  
   இப்ப பார்த்தா தானே ஜாதகம் 28 குள்ள முடிக்க முடியும்.
   அங்கங்க இர்ணடு மூன்று வருஷம் ஜாதகம் பார்க்கவும், பொண்ணு தேடவுமே நேரம் கழியுது. பொண்ணு பார்க்க போனதும் அவங்க எதிர்பார்ப்பு குறைந்திடக்கூடாது” என்று இளவழகி பேசினார்.

பூசாரியோ “அட அர்ஜுனுக்கு என்ன குறை?” என்று கர்ப்பகத்திற்குள் சென்று அர்ச்சனை செய்து ஆராதனை நடத்தினார்.

   இளவழகி முனுக்கு முனுக்கென்று வேண்டவும், குங்குமம் ஆராதனை விபூதி என்று வரிசையாக தரவும், “அர்ஜூன் ஒன்னும் பெரிய கம்பியூட்டர் உத்தியோகம் இல்லையே பூசாரிய்யா. மளிகைக்கடையை நடத்தறான் இப்ப படிக்காத பொண்ணுங்க கூட மளிகைக்கடைக்காரனை கட்டறது இல்லை. மாசசம்பளம் வாங்கறவனை தானே கேட்கறாங்க.

    அர்ஜுனுக்கு இதுவரை ஜாதகம் பார்க்காமலே நிறைய வரன் தட்டி கழிஞ்சிடுச்சு. இந்த வரன் தான் ஜாதகம் செட்டாகியிருக்கு, அதோட பொண்ணு பார்க்கற வரை போகுது.
 
   இவன் வேற ஒடிசலா இருக்கான். மளிகைக்கடை வேற, போதாதுக்கு முடிவெட்டுடா, தாடி எடுடானா மூக்குக்கு மேல கோபம் வருது.

   அவங்க அப்பா இருந்தா இரண்டு தட்டு தட்டி சொல் பேச்சை கேட்க வச்சிருப்பார். அவர் பாட்டுக்கு என் மேல பாரத்தை போட்டுட்டு போயிட்டார்.
 
   தோளுக்கு மேல வளர்ந்தவனை அடிக்கவா முடியும்?” என்று எங்கோ ஆரம்பித்து எதிலோ புலம்பிக் கொண்டிருந்தார்.
  
   பூசாரியோ சத்தமாய் சிரித்து “அதுக்கு உங்களால அடிக்க முடியலைனு மருமகளை கட்டி வைக்கறிங்க. பேஷ் பேஷ் வர்ற வரன் அமோகமா பொருந்தி அர்ஜுன் கல்யாணப் பத்திரிக்கையை வைக்க கோவிலுக்கு வருவிங்க” என்று அருள்பாலித்தார்.

   பத்து ரூபாய் தாளை தட்டில் வைத்து “உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் பூசாரிய்யா” என்று கூறி கடவுளை மீண்டும் கண்ணுக்குள் நிரப்பி தரிசித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் இளவழகி.

   அர்ஜுன் காய்கறி பெட்டியிலிருந்து தனிதனி காய்கறியாக, தனது கடையில் பார்வைக்கு கொட்டி கொண்டிருந்தான்.

  மணி ஏழானது கடைக்கு ஆட்கள் சீனி, தக்காளி, கடுகு, டீத்தூள், உப்பு புளி, மிளகாய் என்று வியாபாரத்திற்குள் இழுத்துக் கொண்டது. அவனுமே வந்ததும் வியாபாரத்தை பார்க்கும் ஆவல் கொண்டவனே.

      அர்ஜூன் நூறு கிராம் புளியை பிய்த்து போட்டு வியாபாரம் பார்க்கும் நேரம் இளவழகி அவன் நெற்றியில் திருநீற்றை பூச வந்தார்.

   ஒரு நிமிடம் திருநீர் வைக்காமல் யோசனையாய் கையை அந்தரத்தில் நிறுத்தி “குளிக்கலையா டா நீ. நேத்து போட்ட சட்டையே மாத்தியிருக்க?” என்று சந்தேகமாய் கேட்டார்.

   அவனோ சந்தேகமே வேண்டாம் நான் இன்னும் குளிக்கலை என்றதை அவன் பாணியில் கூறினான். “வேலையை பாரும்மா. குளிச்சிட்டாலும் அப்படியே கடவுள் பணத்தை அள்ளி கொடுத்திடப் போறார்.” என்று திருநீற்றை தட்டி விட்டான்.

   “டேய் உதப்படபோற, குளிச்சிட்டு சொல்லு வச்சி விடறேன். இப்படி சாமி திருநீறை தட்டிவிடாதே” என்று அதட்டிவிட்டு அறைக்குள் சென்றார்.

   கடைக்கு பக்கத்தில் தான் வீடு. ஏதோ பொன்வண்ணன் புண்ணியம் சொந்த வீடு, கடை என்றிருந்தது.
  
   அர்ஜூன் இன்னமும் தானாக எதையும் உருவாக்கவில்லை. படித்தது டிப்ளமோ என்பதால் கல்லூரி படிக்க வைக்கவில்லையென்ற கோபம் இன்னமும் இருக்கின்றது. ஆனால் என்ன செய்வது தந்தையால் அப்பொழுது அதை தான் படிக்க வைக்க முடிந்தது.

  படிப்பு முடியவும் பார்ட் டைம் வேலை பார்த்து படிக்கலாமென்ற கனவில் இருந்தவனின் கோட்டைக்குள் தந்தையை பறித்து கொண்டு இடியை இறக்கிவிட்டார் கடவுள். அதிலிருந்து கடவுள் என்றாலே அர்ஜுனுக்கு வேண்டாதவராக போனார்.

   தனியாக அன்னையை எப்படி கவனிப்பது? நல்லவேளை தந்தை இருந்த போதே அக்கா ரஞ்சிதாவை தந்தை கர்ணாவுக்கு மணமுடித்து வைத்திருந்தார். அதனால் அந்த சுமையும் இல்லை.
  
   மளிகைக்கடையை பார்த்து கொண்டு தன் தாயை கவனித்தாலே போதுமென்ற குறுகிய மனபான்மைக்குள் அர்ஜுன் நீண்ட நாட்களுக்குள் புதைந்துவிட்டான்.

  இனி மாற வேண்டுமென்றால் மணக்க வருபவளுக்கான முன்னுரிமையாக மாறலாம்.

   கடை வியாபாரம் காலையில் பத்து பத்தரைக்கு குறையும். பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு காலையில் சமைக்க செய்வோர் காய்கறி வாங்குவார்கள், அதே போல டீ காபி போடும் வழக்கமெல்லாம் முடிந்ததால் கடைக்கு ஆட்கள் குறைந்தது. இதோடு மதியம் சமைக்கும் ஆட்கள் மட்டும் இனி வருவார்கள்.

  பீடி சிகரேட் எல்லாம் கடையில் விற்பதில்லை. அது உடல்நலத்திற்கு கேடு என்று தவிர்த்துவிட்டான். அதனால் குளித்து வர சரியான நேரமாக இருக்க, கடையை அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்குள் சென்றான்.

    கடையில் திருடிவிடுவாரென்ற பயம் தேவையற்றது. யாராவது கடைக்கு வந்தால் ‘கடைக்காரரே’ ‘அண்ணா’ ‘அர்ஜுன் தம்பி’ என்று நாயகனை அழைப்பார்கள். இல்லையேல் ‘அழகிக்கா’ ‘நாட்டாரம்மா’ ‘கடைக்காரம்மா’ என்று கூவி அழைத்து பொருட்களை வாங்குவார்கள்.

   அர்ஜுன் குளித்து தலைத் துவட்டி வரவும் இளவழகி விபூதியை நெற்றியில் வைத்தார்.

   ஈரம் கொண்ட வெறும் நெற்றியில் விபூதி அழுத்தமாய் பதிந்தது.

   கடவுளை புறக்கணிப்பவனுக்கு கடவுளே வந்து அருள் பாலிப்பது தான் வழக்கமோ என்னவோ? பாந்தமாய் திருநீறு அவன் முகத்தில் அழுத்தம் பெற்றிருந்தது.

    “அம்மா ஞானப்பழம் மாதிரி இருக்கு” என்று அணியவிருக்கும் பனியனால் துடைத்துவிட்டான்.

   “ஏன்டா அம்மா வைக்கிறதுக்காகவாது விபூதி வச்சிக்கலாமே. உடனே கலைச்சிட்ட” என்று வருத்தம் கொண்டார் இளவழகி.

   “இந்த செண்டிமெண்ட் ஈரவெங்காயம் எதுவும் வேண்டாம் இந்த அர்ஜுனுக்கு” என்று கடைக்கு வந்து அமர்ந்தான்.
    கடையில் ரேடியோவை போட்டுவிட்டு, பருப்பு, சர்க்கரை, புளி எல்லாம் கால்கிலோ பேக்கெட்டாக தாராசில் எடைப்போட்டு அடுக்கினான்.

   “ஏன்டா யாராவது கேட்டா அப்ப எடைப்போட்டுக்கலாமே? இப்ப செத்த நேரம் உட்கார்ந்து சாப்பிடலாமே” என்று இளவழகி மகனுக்கு பழையசோறும் மோர் மிளகாயும் கொண்டு வர, “அம்மா புளி, சர்க்கரை போடறப்ப கையில ஒட்டுது. இப்ப போட்டுட்டா மத்த நேரம் ஈஸியா இருக்கும்.” என்றவன் உணவு தட்டை எட்டிபார்த்து, “பழையசோறு தானே, அப்படியே கையில கரைச்சி உப்பு போட்டு சொம்புல கொண்டாந்துடு. அப்படியே கஞ்சிதண்ணியா குடிச்சிடறேன்” என்று கடுகு, சீரகம் எல்லாம் நூறு, ஐம்பது கிராம் என்று எடைப்போட்டான்.

  நடுநடுவே வந்த வியாபாரத்தையும் சேர்த்தே கவனித்தான்.

  எப்படியும் அவன் எடைப்போட்டு முடிக்கும் வரை உட்கார மாட்டானென்று அறிந்து இளவழகியே கரைத்து கொடுத்தார்.

   காலையிலேயே எழுந்து சென்ற போது வீட்டில் ஒரு டீ, பேருந்து நிறுத்தத்தில் வந்ததும் ஒரு டீ கடையிலும் டீ குடித்தான். அதன் பின்  வேலையை பார்த்து குளித்து முடித்து வந்ததும் பசிவயிற்றை கிள்ளியது.  தற்போது தொண்டைக்குள் சில்லென்ற பழையச்சோறு இறங்க மோர் வத்தலை காரமாய் கடித்தவன் மென்று விழுங்கவும் பசியடங்கியது.

   “நம்ம தரகர் மூர்த்தி இருக்கார்ல, அவர் சொன்ன பொண்ணு ஜாதகம் உனக்கு அமோகமா பொருந்தியிருக்கு.” என்றதும் “எந்த காலத்துலம்மா இருக்க? ஜாதகம் ஜோசியம்னு” என்று சலித்துக் கொண்டான்.

  “இங்க பாருடா எதுவும் பார்க்காம கட்டிக்கணும்னா நீ காதலிச்சு கல்யாணம் கட்டிக்கணும். நீ காதலிப்பியா? உன் முகறகட்டையை எவ காதலிப்பா. லவ் பண்ணறேன்னு வந்தப் பொண்ணிடம் வள்ளுனு எரிந்து விழுந்துட்ட” என்றதும் தாயை மூக்குமுட்ட முறைத்தான்.

   “இப்ப எதுக்கு பழசை ஆரம்பிக்கறிங்க. ஏதோ ஆர்வகோளாறுல என்னை விரும்பறேன்னு சொன்ன பொண்ணை கத்திவிட்டேன். அதை காலமுழுக்க சொல்லிக்காட்டுங்க.

   இதுக்கு அந்த பொண்ணுக்கு ஓகே சொல்லி மதம் மாறியிருக்கணும். அப்ப பீல் பண்ணிட்டு இருப்பிங்க. இப்படி என்னை நக்கல் பண்ணிருக்க மாட்டிங்க” என்று பேசவும் இளவழகி நமுட்டு சிரிப்பை வழங்கினார்.

    “அந்த பொண்ணை விடுடா. ஜாதகம் பொருந்தியிருக்கே அந்த பொண்ணு பெயர் கேட்க மாட்டியா?” என்று மகனாக கேட்பானா என்று ஆவலாய் இருந்தார்.

    “சொல்லலைனா விடவா போறிங்க?” என்று உணர்ச்சி துடைத்து கேட்டான்.

  “பொண்ணு பேர் அமிழ்தினி. அவங்க அப்பா அம்மாவுக்கு இரண்டாவது பொண்ணு.
திருவண்ணாமலையில இருக்காங்க, முதல் பொண்ணை ஆரணில கட்டிக் கொடுத்திருக்காங்க.

   இப்ப சின்னவளுக்கு வரன் தேடறாங்க.” என்று அடுக்கிக்கொண்டே போனார்.

  பேப்பரில் காது குடைய செய்தவன் நேக்காய் காதுக்குள் குடைந்து “படிச்ச பொண்ணு எனக்கு வேண்டாம். நாளைப்பின்ன நீ மளிகைக்கடைக்காரன், நான் படிச்ச மேதாவினு என்னை கீழே மிதிச்சு தள்ளுவா. தயவு செய்து படிச்ச பொண்ணாயிருந்தா எந்த பொருத்தம் இருந்தாலும் வேண்டாம். கண்ணை மூடி வேண்டாம்னு சொல்லிடுங்க. நாளைப்பின்ன சபையில என்னை பிடிக்கலைனு தேங்காய் உடைக்கிற மாதிரி சொல்லி என் மானம் போக வேண்டியதிருக்காது.” என்று கூறவும் இளவழகி முகமலர்ந்து “அந்தபிள்ளை பன்னிரெண்டாவதோட நின்னுடுச்சாம் டா. அதனால தானே மூர்த்தி அண்ணன் பொண்ணு பார்க்கற வரை பேசியிருக்கார்.
 
   இங்க பாரு, வர்ற சனி ஞாயிறுல எது தோதுபடுதுனு கேட்டுயிருக்காங்க. உனக்கு எது சௌவுரியமோ சொல்லு. பெரும்பாலும் சனிக்கிழமையில நல்லது பண்ண மாட்டாங்க. அதனால ஞாயிறே பொண்ணு பார்க்க போனா நல்லாயிருக்கும்.” என்று இளவழகியே வரும் ஞாயிறு பொண்ணு பார்க்கலாமென்றதை முடிவாக உரைத்தார்.

  “நான் கடையை விட்டு திருவண்ணாமலைக்கு வரமுடியாது. வேறயேதாவது பக்கமா இருந்தா சொல்லுங்க, அதுவும் பொதுவான இடமா இருக்கணும். அப்ப தான் பொண்ணு பார்த்தது மாதிரி வெளியே தெரியாது.” என்று திட்டமெல்லாம் விளக்கினான்.

   ‘அப்பன் புத்தி கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டக்கூடாது’ என்று முனங்கினார்.

   மகனிடம்  “நீ ஒன்னும் திருவண்ணாமலைக்கு வரவேண்டாம். இங்கன இருக்கற ஆவனியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு வந்தா போதும். ஏன்னா பெரிய பொண்ணு வீட்டுக்கு வந்துட்டு, அப்படியே இங்க உன்னை பொண்ணு  பார்க்க வைக்கலாம்னு மூர்த்தி அண்ணன் சொன்னார் நானும் சரினு சொல்லிட்டேன்.” என்று இளவழகி நாள் நேரம் எல்லாம் பார்த்து வைத்ததை உரைத்தார்.

   “உன்னை யாரு வர்ற ஞாயிறு வரச்சொன்னது. எனக்கு ஏதாவது வேலையிருக்கானு கேட்டியா?” என்று அர்ஜுன் அலும்பல் செய்யவும் இளவழகியோ இடுப்பில் கைவைக்க, “அர்ஜுனே உங்கம்மாவிடம் அப்பறம் கதைப்பேசு, அடுப்பு பத்தவைக்க வத்திப்பொட்டி கொடு” என்று அவசரமாய் ஒர் பெண்மணி கேட்கவும் அதனை எடுத்து கொடுத்து அனுப்பினான்.

“என்னவோ கேட்காம முடிவெடுத்திட்டிங்க. வர்றேன் ரொம்ப கெஞ்சாதிங்க” என்று கொண்டு வந்த செம்பை அன்னையின் கையில் திணித்தான்.

    “ரொம்ப தான்டா, கெஞ்சறாங்களாமே, நாளைக்கு ஒருத்தி வந்து நின்னு கேட்பா அப்ப நீ என்னயென்ன கதை விடறனு நானும் பார்க்க தானே போறேன்.” என்று நடையை கட்டினார்.

   “எவ வந்தாலும் இந்த அர்ஜுனிடம் கெஞ்சினா தான் வேலைக்கு ஆகும். இல்லைனா வீட்டுக்கு போடினு துரத்திவிட்டுடுவேன்.” என்றவன் தாடையை தேய்த்தான்.

  தாடி ‘சொரசொர’வென இருக்க, ‘ஷேவ் செய்யணுமா? பச் அதை எடுத்துட்டா அழகு போயிடும். வர்ற பொண்ணுக்கு தாடியோட பிடிச்சிருந்தா போதும். இல்லைனா வேற பொண்ணை பார்த்துக்கலாம்’ என்று கணக்குப்போட்டான்.

   அவனவன் பெண்பார்க்க ப்யூட்டிபார்லர் சென்று அழகாக மாற, எத்தனை குரங்கு வித்தை செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய, இவனோ ‘இதான் நான் இப்படியே என்னை பிடிச்சா போதும் அதை மீறி பிடிக்கலையா போயிட்டே இருக்கட்டும்’ என்ற ரீதியில் இருந்தான்.

    இளவழகியோ பட்டன் போனில், தரகர் மூர்த்திக்கு அழைத்து, “ஆஹ் அண்ண, அர்ஜுனிடம் சொல்லிட்டேன். ஞாயிறு பொண்ணு பார்க்க சம்மதிச்சிட்டான். நீங்க எந்த நேரம்னு கேட்டுக்கோங்க. பொண்ணு வீட்லையும் விஷயத்தை சொல்லிடுங்க.

  அண்ண பொண்ணு பிளஸ்டூ தானே? மளிகைக்கடைக்காரன்னு வேண்டாம்னு சொல்ல மாட்டாங்களே?” என்று எதற்கும் கேட்டு வைப்போமென பேசிட, தரகரோ “அதெல்லாம் தலையாட்டி சம்மதிச்சு தான் மாப்பிள்ளை பார்க்க வர்றாங்க தங்கச்சி, நம்ம அர்ஜுனுக்கு போய் பொய் சொல்லி ஏமாத்துவேனா? பிளஸ்டூ தான். மளிகைக்கடைக்காரன் என்றாலும் பரவாயில்லைனு சொல்லியிருந்தாங்க” என்று ஆறுதலாய் உரைத்தார்.

  ”அப்ப சரிண்ணா” என்று நிம்மதியானார். மகன் கனவு காண்கின்றானோ இல்லையோ, ஞாயிறு வருகையில் வய்பபோகும் மருமகளை வெகுவாய் எதிர்பார்த்தார் இளவழகி.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 

47 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை-1”

 1. Avatar

  நமக்கு ஏத்த இடமா, நா இப்படி தான், இது தான் நான்னு ரொம்ப கறாரா இருக்கான் இந்த பையன் 😉😀🤩 பாக்கலாம் இவன் கெத்த 😉😉😉😉😉

 2. VRVS2797

  அர்ஜுன் & அமிழ்தினி….
  ஆஹா.. பேரி பொருத்தமே ரொம்ப ஜோரா இருக்கே..!

 3. Avatar

  புதிய தொடர் கதைக்கு வாழ்த்துக்கள் சகி💐💐
  நம்ம ஹீரோ ரொம்ப தான் பண்றாரு அவர அடக்குவதற்கு என்று கண்டிப்பாக ஒருத்தி வருவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *