Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை -15

கால் கிலோ காதல் என்ன விலை -15

அத்தியாயம்-15

 அர்ஜுன் விடும் தாப பார்வையும் மோக மொட்டுக்களும், சரியாக தவறாய் அர்த்தம் பொதிந்து அமிழ்தினியிடம் கோபத்தை விதைத்தது. 

இளவழகியின் போன் பேச்சை ஒட்டு கேட்பது போல தனது பேச்சையும் செவியில் விழுவதற்கு இந்த நாடகமா? என்று அனலை விழுங்கினாள்.

அந்தோ பாவம் அர்ஜுனுக்கு காதல் பார்வையை கூட சரியாக வீச தெரியாத கல்லாப் பெட்டிகாரனாக இருந்ததற்கு அவன் தாடியும் பார்வையும் கூட ஒரு விதத்தில் காரணமாய் இருக்கும்.

அந்த முகறகட்டையில் முகபாவனையை தேடுவது அத்தனை சுலபமில்லை. அழுத்தக்காரனின் அழுத்தமான தோற்றம் பெண்ணவளின் நெஞ்சில் இன்னமும் சரியாக கணிக்கவில்லை.

அந்த எண்ணம் உதிக்கவும் சிம்மை எடுத்துவிட்டு போனை அவனிடம் நீட்ட தந்தாள், “நான் என்‌போன் வந்ததும் எங்க வீட்டுக்கு பேசிக்கறேன் செம்மை எடுத்து தாங்க ” என்றாள்‌.

சணலால் மிளகாய் பொட்டலம் போட்டு கட்டி, "ஏன் இதுல பேச என்ன? உன் போன் வர்ற வரை உபயோகப்படுத்து" என்று அதட்டலாய் உரைத்தான். 

"எனக்கு இதுல பேச பிடிக்கலை. எங்க பேசறது வெளியே கேட்குமோனு சந்தேகத்தோட பேசணும்." என்றதும் சணலை முடிச்சிட்டவன் அதனை துண்டித்து கடைக்கு வந்தவரிடம் கொடுத்துவிட்டு, "எங்கம்மா போனை வச்சி என் போனை மதிப்பிடறியா? இது அப்படி இல்லை. பேசறது வெளியே கேட்காது. அதோட அதுல ஸ்பீக்கர் காது கிட்ட வச்சி கேட்கணும்" என்றான். 

அதனை கூறிமுடித்த பிறகே தன்னை மட்டமாய் எண்ணுவாளோ என்று சிந்தித்தான்.

"எனக்கு என் போன்ல பேசணும். வேற வேண்டாம்" என்று அறைக்கு திரும்பினாள். 

மட்டமாய்…. தன் போனை… ஏன் தன்னை மட்டமாய் எண்ணி தன் போனை கூட தவிர்க்ககன்றாளா? என்றதும் நறநறவென பல்லை கடித்தான்.

சட்டென செல்லவா முடியும்? மளிகைசாமான் பில் போட்டுக் கொண்டிருந்தான். எப்படியும் இந்த ஊரில் இப்படி கணிசமான பொருட்களை வாங்குபவர் குறைவு. அவ்வியாபாரத்தை பாழாக்குவானேன்?!

எப்படியும் மாதத்தில் பிறந்து ஒரீ வாரமாக மளிகை பில் போட்டு முடிக்க நேரமெடுக்கும். கிணற்று தண்ணியை ஆத்து நீரா அள்ளி செல்லும். இங்கு தானே இருப்பாள் கேட்போமென விட்டான்.‌

அர்ஜுன் விட்டாலும் அவனது அக்கா ரஞ்சிதா விடமாட்டேன் என்பது போல இளவழகிக்கு மதியம் போல அழைத்தாள்.
அதுவும் உணவு உண்ணும் நேரம், இளவழகி சாப்பிட்டுவிட்டு கடையில் இருக்க, கணவன் அர்ஜுனுக்கு மனைவி அமிழ்தினி பரிமாறினாள்.

எப்படி ஆரம்பிப்பது என்று மெதுவாக அடியெடுத்து பேசும் நேரம், இளவழகி ரஞ்சிதா அக்காவின் அலைப்பேசி உரையாடல் வீட்டுக்குள் வரை கேட்டது. 

“ஏம்மா நேத்துலயிருந்து அர்ஜுனுக்கு போன் போடறேன் லைன்னே கிடைக்கலை. அவன் போன் என்னாச்சு?” என்று கேட்டார்.‌

இளவழகியோ ”அவன் போனுக்கு ஒன்னுமாகலை. மருமக போன் தான் கீழே போட்டு உடைச்சிட்டா. அது விரிசல் பட்டு கடைக்கு எடீத்துட்டு போய் உன் தம்பி செலுவு பார்க்கறான்.‌ அதனால் அவன் போன்ல மருமக அவ அப்பா அம்மாவிடம் அக்காவிடம் பேச தந்திருக்கான்.” என்றார்.

இளவழகி பொதுவாய் நடந்ததை விவரிக்க, “ஏம்மா… போனை உடைச்சிட்டாளா? இதென்ன விளையாட்டா போச்சு? அவ போன் போனதுக்கு என்‌தம்பி போன் மாத்தி தந்தானா? உன் போன் ரிப்பேர்னு அவன் ஒருவாரமா வீட்டுல வச்சிருந்தான். இந்த பொண்ணுக்கு மட்டும் என்ன? அவன்‌சிம்மை கழட்டி அவளோடதுல பேச தந்திருக்கான்.

அம்மா… இதெல்லாம் சரியில்லை. படிக்காத பொண்ணாயிருந்தாலும் மூக்கும் முழியுமா இருக்கா. பார்த்து இரும்மா.. தம்பியை சேலையில் முடிச்சிக்க போறா.” என்று பேச ஒன்று விடாமல் அர்ஜுன் அமிழ்தினி கேட்க நேர்ந்தது.

அர்ஜுனுக்கு லேசான எரிச்சலாய் மனைவி முந்தானையில் கை துடைக்க சென்றான்.‌

அமிழ்தினியோ “நான் ஒன்னும் உங்களை என்‌ சேலையில முடிச்சிக்க விரும்பலை. இதுக்கு தான் எனக்கு இந்த போனை தள்ளனிங்களா? எனக்கு உங்க போனும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்.” என்று சிப்பை மடமடவென தன் தாலியில் இருந்த சேப்டி பின்னால் குத்தி சிம்மை எடுத்து போனை அவன் முன் வைத்தாள்.

மீண்டும் அறைக்குள் பதுங்கினாள்.

அர்ஜுனோ, “ஏய் இப்ப என்ன உனக்கு..?” என்று கடிந்தாலும் அக்கா பேச்சு இங்கு வரை கேட்டு அதற்கு அமிழ்தினி மனம் வருந்துவது சரிதானே என்றது நியாய உள்ளம்.

அவன்‌கடையில் எவ்வாறு தராசில் சரியான எடைப்போட்டு விற்பானோ அதே போல தன் மனதிலும் நியாயத்தை தாராசிட்டான்.

அடுத்த நொடி அவள் அம்மாவை போல அவளை நோட்டமிடுவதாக எண்ணி வருந்துவதும் புரித்தது.

கையோடு சமாதானம் செய்ய அறைக்கு அடியெடுத்து வைக்க, “டேய் அர்ஜுனு… சாப்பிட்டேன்னா விரசா வாடா. உங்கக்கா பேசணுமாம்” என்றதும் கடைக்கு தான் கால்கள் சென்றது.

போனை வெடுக்கென பிடுங்கி “என்ன நொய்யு நொய்யுன்னு போனை போடுற‌.” என்று எடுத்த எடுப்பிலே கத்தினான்.‌

ரஞ்சிததிற்கு தம்பியின் கத்தல் புதிதா என்ன? “டேய்… உங்க மாமா விருந்துக்கு கூப்பிட்டார். எப்ப வர்றது கேட்கலாம்னா போன் போட்டா உன் போன்ல தான் அமிழ்தினி நம்பரை போட்டு வச்சிருக்கியாம்.” என்றார்.

”விருந்துக்கா…. இப்ப என்ன அவசரம்? கல்யாணத்துக்குன்னு கடையை மூடிவச்சி வியாபாரம் டல்லாயிடுச்சு தெரியுமா? இரண்டு மூன்று பேர் எப்பவும் நம்ம கடையில் வாங்குவாங்க. இப்ப பக்கத்து தெரு அண்ணாச்சி கிட்ட வாங்கிட்டு இருக்காங்க.
கடையை அடிக்கடி மூடினா வியாபாரம் படுத்துக்கும்” என்று மறுக்க பார்த்தான்‌.
கறிச்சோறு சாப்பிட சென்னை வரை அலைய வேண்டுமா? என்பது கடைக்காரன் புத்தி.

ரஞ்சிதமோ, “படுத்துக்கும் தூங்கும்னு… ஏன்டா… ஒருத்திக்கு தாலி கட்டனியே அவளை அக்கா வீட்டுக்கு கூட்டியாறனும்னு அறிவிருக்கா? அவளை எங்கயாவது கூட்டிட்டு போறியா? பெரிசா வியாபாரம் படுத்துக்கும் வாய் கிழிய பேசற. இப்படியே அழுகிய தக்காளி வெங்காயம்னு, உப்பு புளி வாடைனு இருந்தா எப்படி?
விருந்தை விடுடா… ஒரு படத்துக்காவது அவளை கூட்டிட்டு போனியா? கடை கடைனு இருக்காத. அவளையும் கவனி. அந்த கோபத்துல கூட போனை உடைச்சிருப்பா” என்று எதுக்கும் எதுக்கோ சம்பந்தப்படுத்தி உரைத்தாள்‌.

“அக்கா… சும்மா தப்பு தப்பா உலறாத. அவ போனை உடைச்சது நான். கூப்பிட்டேன் அவ அக்கா கூட பேசிட்டு கவனிக்கலை. அந்த கோபத்துல தட்டினேன்.‌ அது உடைஞ்சிடுச்சு. அவ ஒன்னும் அவ போனை உடைக்கலை. புரிதா” என்றான் கணீர் குரலில்.

“அதானே பார்த்தேன் நம்ம வீட்டுல இருக்குற குரங்குக்கு தான் கை துறுதுறுன்னு இருக்கும். பாரு டி… உன் தம்பியை அவன் தான் உசத்தியான போனை உடைச்சிருக்கான்.” என்று இளவழகி பக்கத்திலிருந்து வேகமாய் வந்து அங்கலாய்த்தார்.

“அடப்பாவி.. அந்த பொண்ணுகிட்டயும் அம்மாவிடம் பழகற மாதிரி தான் பழகறியா. என்னமோ முந்தானையில முடிஞ்சிட்டான்னு‌ நினைச்சேன்” என்று ரஞ்சிதா ஒருபக்கம் கேட்டார்.

அர்ஜுனோ “உங்க இரண்டு பேருக்கும் என்ன‌பிரச்சனை.‌ எனக்கு கல்யாணம் பண்ணணும்னு அம்மா குதிச்சது. இப்ப கல்யாணம் பண்ணி முடிச்சாச்சு.

உனக்கென்ன உங்க வீட்டுக்கு விருந்துக்கு வரணும். நான் எப்பன்னு பார்த்து சொல்லறேன். இப்ப போனை வை.” என்றான்.‌

“தம்பி தம்பி” என்று‌ ரஞ்சிதம் குரல் துண்டிக்கப்பட்டது.

இளவழகியோ, “ஏன்டா அந்த பிள்ளை போனை தான் உடைச்சியா? இல்லை கையை ஓங்கிட்டியா? அவ மூஞ்சியும் ஒரு மாதிரி உற்றுன்னு கிடக்கு” என்று மைந்தனை பார்த்து சந்தேகத்தை கேட்டு நின்றார்.

“ஆஹ்… அடிச்சி கடிச்சி வச்சிருக்கேன். அடுத்து பேசினா பல்லை உடைப்பேன்னு‌ சொல்லிருக்கேன்… ஏன்மா… என்‌ உசுரை வாங்கற.” என்றதும் கடைக்கு ஆட்கள் வர வியாபாரத்தை பார்த்தான்.‌

இளவழகியோ மருமகளை தேடி அறைக்கு வர, அங்கே மெத்தையில் சம்மணமிட்டு மடியில் தலையணை வைத்து, கண்ணீரை உகுத்தினாள் அமிழ்தினி.‌

அர்ஜுன் வருவான் அவனுக்காக அழாமல் இருக்க முடியுமா‌. அழுவதை பார்த்தால் பார்க்கட்டும் என்றிருக்க, இளவழகி வரவும் சட்டென கண்ணீரை துடைத்து மறைக்க முயன்றாள்.

“அய்யோ அய்யோ… கல்யாணம் பண்ணினா இனிக்க இனிக்க பேசி வாழ்வான்னு பார்த்தா. உன்னை அழ வச்சி பார்த்ததுண்டுயிருக்கானே. பாவி… இவனுக்கு உன்னை மாதிரி அழகான பொண்ணா, கல்யாணம் பண்ணி என்ன‌ பிரோஜனம்? எதுக்கும் வளையாம இருக்கானே.
உன் போனை உடைச்சிட்டானா? அடிச்சிட்டானா? அடிச்சியிருந்தா அவனை மன்னிச்சிடு கண்ணு. கோபம் மட்டும் அப்பனை கணக்கா வரும்‌. மனசுல ஒன்னும் இருக்காது‌.” என்று கன்னத்தை கவனித்தார்.

அடித்திருந்தால் கன்னம் சிவந்திருக்குமேயென, அப்படியொன்றும் அடித்ததாக தென்படவில்லை.

வலது பக்கம் ஜாக்கெட் அணிந்து தோளில் லேசான சிவப்பு தடிப்பு இருக்க, கண்கள் அங்கே சென்றது.

 இளவழகிக்கு பகீரென்ற கவலை. ஆனால் அமிழ்தினிக்கோ வெட்கமானது. 

‘அச்சோ இது அவர் சேட்டை பிடிச்சி முத்தம் கொடுத்தது இப்படி சிவந்து போயிருக்கு. இவங்க என்ன நினைச்சிட்டு என்னை பார்க்கறாங்களோ?!’ என்று தவிக்க, “அம்மு…‌ உங்க வீட்ல உன்னை அப்படி தானே கூப்பிடுவாங்க? நானும் உன்னோட அம்மா மாதிரி தான். அர்ஜுன் உன்னை அடிச்சிட்டானா?” என்று சுட்டி காட்டி கேட்டார்.

“அய்யோ அத்தை… அவர் என்னை அடிக்கலாம் மாட்டார். இது வேற… போனை பேசறப்ப என்னை இழுத்தார் போன் தட்டி விழுந்து சிதறி உடைஞ்சுடுச்சு.

வேண்டீமின்னே தட்டி விடுவாரா?” என்று நாணி கோடி பதில் தந்தாள்.

"நிஜமா அவனோட உனக்கு சண்டையில்லை?" என்று கேட்டார் அன்னையாக பரிதவிப்பான மனதோடு.

“இல்லிங்க அத்தை.” என்று சத்தியம் செய்யாத குறையாக கூறினாள் அம்முவும்‌.

“இப்ப என்ன பிரச்சனை? என்று அர்ஜுன் வரவும், இளவழகி ‘எங்களுக்கு என்ன பிரச்சனை. பிரச்சனையே நீ தான்’ என்று முனங்கினார்.

அமிழ்தினிக்கு சிரிப்பு வர அளவான முல்லை சிரிப்பை வீசினாள்.

"அக்கா என்னன்னா விருந்துக்கு வா, அங்க போனியா இங்க போறியா சினிமாவாது போனியான்னு சுரை வாங்குற. நீ என்னனா இவக்கிட்ட என்னை அடிச்சானா திட்டினானா? நீயா கோபக்காரன்னு பட்டம் வழங்கி ஆராதிக்கற. இவயென்னனா வாயை திறக்காளா?" என்று கணீர் கணீர் என்ற குரலால் கேட்க அது அதட்டுவதும் மிரட்டுவதும் பாவடை காட்டியது‌.

“இந்த பிள்ளையை சினிமாவுக்கு கூட்டிட்டு போ.” என்றார் இளவழகி‌.

“நான் என்ன பேசறேன். நீ என்ன சொல்லற அம்மா” என்று நெற்றி சுருக்கினான்.

“அதான்டா… மதியம் போன் வாங்கிக்க சொன்னானானு சொன்னியா. இப்ப கிளம்பி வாங்கிட்டு நைட்ஷோ முடிச்சிட்டு வா” என்றார்.

“கடையை எங்கப்பன் பார்ப்பாரா?” என்றான்.

“இல்லை‌ உங்கம்மா நான் பார்க்கறேன் போடா. நீ டிப்ளமோ படிக்கறச்ச தினமும் நான் தான் பார்த்தேன். பார்த்துக்க தெரியாது.” என்று வசனம் உதிர்க்க, அர்ஜுனுக்கும் அமிழ்தினியோடு போக ஆசையுண்டானது‌. அவள் வேறு முல்லை சிரிப்பை உதிர்த்திருக்க, இவன் பார்க்கும் நேரம் முகத்தை உற்றென்று மாற்றவும் அவளோடு பேசிட எண்ணம் எழுந்தது‌.

எப்பவும் போல என்னவோ பண்ணுங்க. ஏய்.. நேரத்துக்கு கிளம்பு." என்று கூறிவிட்டு கடைக்கு சென்றான்.‌

இ..இப்ப..இப்பவா? நைட் ஷோ எதுக்கு போன் காலையில் வாங்கிக்கலாம். யார் பேசப்போறா.” என்று அமிழ்தினி திணற, அவன் கூப்பிடும் போதே கிளம்பிடணும். இல்லை எங்கயும் போகமுடியாது.” என்றார் இளவழகி.

உங்களை விட்டுட்டு.‌ இல்லைங்கத்தை” என்று மறுக்க “இவயொருத்தி அவன் திரும்ப மனசு மாறுறதுக்குள்ள கிளம்பிடு.” என்று நெருங்கினார்‌.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

14 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை -15”

 1. Avatar

  Ama ammu avan kupudra appavae kelambi po ilana marupadiyum mala yerida poran….veliya poitu ellam pesi sari agi varumbodhu happy ah vango….super super ka😍😍….. Waiting for next ud….

 2. Avatar

  Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr sis 👌👌👌👌👌👌

 3. Avatar

  அமிழ்தினிக்கு நல்ல மாமியார் தான் கிடைச்சிருக்காங்க

 4. CRVS2797

  கிளம்புன்னா… கிளம்ப வேண்டியது தானே…?
  இவ என்ன அத்தை சொத்தைன்னுக்கிட்டு..
  நின்னுட்டிருக்கா..?
  அவனுக்கு மூடு இருக்கிறச்சவே கிளம்பிடனும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *