Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை?-4

கால் கிலோ காதல் என்ன விலை?-4

அத்தியாயம்-4

‘ஏதாவது ஒரு பையன் ஒரு பொண்ணை பார்த்துட்டா போதும். என்னவோ உலகத்துலயே தான் அழகினு ஒரு லுக்ல இருப்பாளுங்க. சை, இதுக்கு தான் படிக்காத அப்பிராணி புள்ளயா பார்த்திடணும். மரியாதை முக்கியம் பிகிலு.’ என்று எண்ணிக்கொண்டான்.

ஒரு மனமோ அங்கிருந்த குரங்கு போலவே, படிச்ச பொண்ணு மட்டும் தான் திமிர் பிடிச்சதா இருக்குமா. படிக்காத பொண்ணும் திமிரா இருக்காளுங்க.’ என்று தன் அனுபவத்தில் எட்டுக்கட்டையில் தெருகுழாயில் சண்டையிடும் பெண்கள் கண்ணுக்கு வந்து சென்றனர்.

பெண்களை எந்த ரகத்திலும் சேர்க்க இயலாது. நாம் ஒன்று நினைக்க அவர்கள் வேறு மாதிரி நடப்பார்கள். என்றவனுக்கு ‘பச் எப்பவும் இல்லாம பொண்ணுங்களை பத்தி என்ன நினைப்பு’ என்று வெறுப்பாக தரகருக்கு கைப்பேசியிலிருந்து அழைத்தான்.

“தரகர் அண்ணன் எங்கயிருக்க? இங்க வந்து எம்புட்டு நேரமாகுது தெரியுமா? அங்க கடையை அடைச்சிட்டு வந்திருக்கேன்.” என்று கடுகடுப்பாய் பொரிய ஆரம்பித்தான்.

“தம்பி தம்பி படியேறிட்டு இருக்கேன் தம்பி மூச்சு வாங்குது. அங்க தான் பொண்ணு வீட்டுகாரங்க இருக்காங்க. இப்ப தான் அம்மா போன் போட்டு எங்கயிருக்கிங்க அண்ண பையன் கத்துவான் கொஞ்சம் சீக்கிரம் வாங்கன்னு சொல்லுச்சு. பொண்ணு வீட்டுலயும் பொண்ணு அப்பா வந்துட்டதா சொன்னார். எல்லாம் அங்கனகுள்ள இருப்பாங்க. வயசானவன் தம்பி பொறுமையா ஏறி வர்றேன். கோச்சிக்காதிங்க” என்று கூறவும் ஆர்ஜுன் ‘சரி வாங்க’ என்று அணைத்தான்.

அப்பா வயது கொண்டவராக இருக்கலாம். இந்த படிக்கட்டை ஏறி மேலே வர தாமதமாகும்.

எப்படியும் இங்கே தான் பொண்ணு வீட்டு ஆட்கள் இருக்கின்றார்கள் என்றால் தன்னை கவனிக்க கூட வாய்ப்புண்டு என்று எந்த பெண்ணையும் பாராமல் நல்லபையனாக அமர்ந்தான்.

“அய்யோ என் செயின் என் செயின்” என்று அமிழ்தினி கத்தவும் அர்ஜுன் திரும்பினான்.
அங்கே ஒரு குரங்கு கையில் அவளது பிளாக் மெட்டல் செயினை அறுத்து ஓடியது. மரத்தில் அமர்ந்து, செயினை ஆராய ஆரம்பித்தது.

நொடியில் அவ்விடம் கலவரமாக, ஆங்காங்கே குரங்கிடம் செயினை தூக்கி போட கூறி என்னென்னவோ கூறினார்கள்.
தேவராஜ் ஓரு பக்கம் திட்டினார். குரங்கு வந்து பறிக்கிற வரை என்ன பராக்கு பார்த்துட்டு இருக்க? எதுலையும் கவனமில்லை. எல்லாம் இவளை சொல்லணும்.” என்றார்.

“நீ என்ன பண்ணிட்டு இருந்த அஞ்சனா ஜாக்கிரதையா இருக்க கூடாது” என்று அதட்டினான் சரவணன்.

‘குரங்கு தூக்கிட்டு போயிடும் திருப்பி தராது.’ என்று போவோர் வருவார் கூறிவிட்டு குரங்கு கழுத்தில் செயினை போட முயன்று கையில் சுற்றிக்கொண்டிருப்பதை மற்றவர்கள் போனில் போட்டோ எடுத்தார்கள்.

யாராவது நெருங்க நெருங்க குரங்கு கிளைகளில் தாண்டி எட்டாத உயரத்தில் நின்றது.

“போதுமாடி உங்கப்பாவிடம் பேச்சு வாங்க வச்சிட்ட, இந்த நேரம் பார்த்து” என்று கலங்கினார்.

அமிழ்தினிக்கே கஷ்டமாக போனது. பொதுயிடத்தில் வந்து, அதுவும் பெண் பார்க்கும் தருணம் வீட்டு ஆட்கள் திட்டினாள். போவோர் வருவோர் வேறு தன்னை பார்த்து செல்லும் பார்வையில் கலங்கிவிட்டாள்.

“ஏங்க ஆளாளுக்கு திட்டறிங்க. ஏதோ விற்கற செயின்னு சந்தோஷப்படுங்க. இதுவே அதோ இந்த அக்கா போட்டிருக்கற மாதிரி தங்க நகையா இருந்தா என்னாகறது. கொஞ்சம் யோசித்து பாருங்க. இத்தனை நாள் உழைச்ச உழைப்புக்கு தங்கம் போனா வாங்க முடியுமா? அதை விடுங்க செயின் இழுப்படலைனு குரங்கு கையை கீறியோ, கடிச்சியோ விட்டிருந்தா? ஏதோ தலைக்கு வந்தது தலைபாகையோட போனது மாதிரி, விற்கற செயினோட போச்சுனு சந்தோஷப்படுங்க.” என்று அர்ஜுன் கூறவும் தேவராஜோ “நீங்க சொல்லறதும் சரிங்க தம்பி” என்று நிம்மதியடைந்தார்.

உண்மை தானே, காலையிலிருந்து விற்கின்ற நகை போட்டிருப்பதால் அதிருப்தியடைந்தவருக்கு, தற்போது குரங்கு நகை எடுத்து ஓடிடவும் சாதாரண விற்கும் நகை போட்டது நல்லதாகவே எடுத்துக் கொண்டார்.

அமிழ்தினி கண் கலங்கும் நேரம் அர்ஜுன் எதிரே நிற்க அவசரமாய் கண்ணை துடைத்தாள். கொஞ்ச நேரம் முன் தன்னையே பார்த்தவன் முன் அழுவதா. அது தான் தங்க நகை போடவில்லையே என்ற நிம்மதி.

இளவழகியோ “என்ன அர்ஜுன் பிரச்சனையா? என்னாச்சு?” என்று தன் மைந்தன் பக்கத்திலிருக்கும் பெண் கண்கலங்க, கூட்டமாக நின்றதை வைத்து பதறி வந்து கேட்டார்.

“ஒன்னுமில்லைம்மா. குரங்கு இந்த பொண்ணோட கழுத்துலயிருந்த செயினை பறிச்சிட்டு போயிடுச்சு. அவங்க திட்டவும் தங்க நகையா இல்லைனு சந்தோஷப்பட்டுக்க சொன்னேன்.” என்று கூறவும், “வேறவொன்னுமில்லையே” என்றதும் சரவணன் “இல்லிங்க” என்றார்.

“இப்ப எல்லாம் குரங்குங்க பழத்தை பொரியை தேங்காயை விட்டுட்டு கையிலருக்கற போனு, கழுத்துல இருக்கற செயின், பர்ஸ்னு பறிச்சிட்டு போயிடுதுங்க. அப்பறம் திங்கறது இல்லைனு எங்கயாவது தூக்கி போட்டுடும்.” என்று இரண்டடி நகர, அர்ஜுனும் அவ்விடம் விட்டு நகர பார்த்தான்.

“எல்லாம் ஒன்னா தான் இருக்கிங்களா? வேலை மிச்சம். அறிமுகமாகிட்டிங்களா?” என்று தரகர் மூர்த்தி வந்தார்.

தேவராஜனோ புரியாமல் பார்க்க அர்ஜுனும் அவர் பேசியதை வைத்து அதிர்ந்தான். அப்ப இதான் பொண்ணா?’ என்பது போல சட்டென பார்வையிட்டு தரகரை உற்று நோக்கினான்.

சரவணன் மடமடவென நடந்தவையை காட்சியாக வார்த்தையால் சித்தரிக்க தரகரோ “அட அறிமுகம் ஆகாமலேயே பேசியிருக்கிங்க நல்லது நல்லது. இதான் மாப்பிள்ளை தம்பி அர்ஜுன். உங்க பொண்ணை பார்க்க வந்தவரு. இவங்க இளவழகி. அர்ஜுனோட அம்மா. அர்ஜுனோட அப்பா தவறிட்டார். அக்கா மாமா சென்னை பட்டனத்துல கட்டி கொடுத்திருக்காங்க. அதனால உடனடியா வரமுடியலை.” என்று அமிழ்தினி வீட்டு ஆட்களிடம் உரைத்தார்.

“அர்ஜுன் தம்பி இது தான் நீங்க பார்க்க வந்த குடும்பம். இவர் பொண்ணு அப்பா தேவராஜ், அம்மா சந்திரிகா. இவங்க பொண்ணோட அக்கா அஞ்சனா அவங்க தான் ஆரணில இருக்கற சரவணன் இந்தா இவருக்கு கட்டிக்கொடுத்திருக்கு. சரவணன் ஹார்டுவோர்ட்ஸ் கடை வச்சிருக்காப்ள. இது நீங்க பார்க்க வந்தப்பொண்ணு. படிப்பு பிளஸ் டூ வரை தான் படிச்சிருக்கா.” என்று அறிமுகப்படுத்த அர்ஜுன் தேவராஜ், சந்திரிகா, சரவணன், அஞ்சனா என்று வரிசையாய் வணக்கத்தை வைத்தான். அவன் அமிழ்தினியிடம் வணக்கம் வைக்கவும், அவளுமே, இளவழகியை காணவும் வணக்கம் வைக்க கைகள் எழும்பியது.

“அப்பறம் உட்காருங்க சவகாசமா பேசுவோம்” என்றதும் நின்றிருந்தவர்கள் சற்று எல்லாரும் அமர தோதான இடத்தில் வீற்றிருக்கொண்டனர்.

அமிழ்தினி பக்கம் இளவழகி அமரவும் மறுபக்கம் அர்ஜுன் என்று இருந்தார்கள்.

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று எல்லாவிதமான பண்புகளை கொண்டவளாக அமிழ்தினி அமைதியானாள்.

இளவழகியோ, “பொண்ணு தானே பார்க்க போறோம் யாரும் கூப்பிட வேண்டாம்னு அர்ஜுன் சொல்லிட்டான். அவ அக்காவும் சென்னையிலருந்து உடனடியாக வரமுடியலை. அவர் இருந்தா முன்னாடி நிற்பார் அவர் இல்லாததால நான் முன்னாடியும் நிற்க முடியலை.” என்று வருத்தமாய் கூறினார்.

“என்னடா பொண்ணு பார்க்க கூட வேற யாரும் வரலைனு தப்பா எடுத்துக்காதிங்க. வரப்போற மருமகளோட கூட வாழப்போறது நாங்க மட்டும் தான். எங்க விருப்பம் மட்டும் போதும்னு வந்தோம். பேச்சு அடுத்த கட்டத்துக்கு போனா மகள் ரஞ்சிதா மருமகன் கர்ணா அவரையும் கூட்டிட்டு வர்றோம்.” என்று முடித்து கொண்டார். இனி பேசுவது அமிழ்தினி பக்கம் மட்டுமே.

“அட மாப்பிள்ளை கூட நீங்க மட்டும் போங்க மாமானு சொன்னார். நாங்க தான் வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை மூத்த மகனுக்கு சமம்னு கூப்பிட்டது.
அதோட பெரிய மாப்பிள்ளை தம்பியை ஏற்கனவே பார்த்திருக்கார்.

தம்பியை பத்தி ஏற்கனவே சொல்லிருக்காங்க. சொந்த வியாபாரம், நறுக்கு தெரித்த பேச்சு, நல்ல சுபாவம்னு” என்று பேசவும் சரவணன் பவ்யமாய் நின்றிருந்தார்.

தரகர் கூறிய அன்றே ஒரெட்டு சென்று பார்க்க, காய்கறி பெட்டியை வாங்கியதற்கு பணத்தை எண்ணி கொடுத்தான். ‘நாளைக்கு கொடுங்க இன்னிக்கே என்ன அவசரம்’ என்று சீட்டு எடுத்து கொடுத்தவுடன் அங்கே மார்க்கெட்டில் கேட்டதற்கு, “பணம் இருக்கறப்ப கொடுத்துடணும் அண்ணாச்சி. கடன் யாரிடமும் வச்சிக்க கூடாது.” என்று பேசிவிட்டு சென்றான். அக்கணம் அதை அப்படியே தேவராஜிடம் பகிர்ந்தான் சரவணன்.

‘ஆளு நல்லாயிருக்கான். தாடி மீசை தான் இறுக்கமா காட்டுது. அதை மீறி ஒரு தேஜஸ் தெரியுது. பழக நல்ல குணம்னு இங்க பழகினவங்க சொன்னாங்க.’ என்று பாராட்டு பத்திரம் வாசித்திருந்தாலும் அஞ்சனாவை விட அமிழ்தினி கொஞ்சம் செல்லம் என்பதால் ஆள் பார்த்தே எடைப்போட வந்தவருக்கு, குரங்கு செயினை பறித்து சென்றதும் அர்ஜுன் பேசியது எல்லாம் மனதிற்கு சுகந்தமாக இருந்தது.

யாரோ ஒரு பெண் திட்டு வாங்கி அழவே அப்படி பதிலை கூறி ஏச்சுக்களை தவிர்க்க முன் வந்தான்.
தன்மகள் அர்ஜுனின் மனைவியாக இருந்தால் எப்படி பார்த்துக் கொள்வானென்ற எண்ணமே அர்ஜுனை பிடிக்க ஆரம்பித்து விட்டது.

“மாப்பிள்ளை தம்பி பேசமாட்டாரா?” என்றதும் தான் தலை நிமிர்ந்தான். அதுவரை தன் மோதிர விரலில் இருந்த மோதிரத்தை சுற்றிக் கொண்டிருந்தான்.

“அம்மா தான் பொண்ணு பார்க்க வரச்சொன்னாங்க. அவங்களுக்கு பிடிச்சிருந்தா போதும்னு வீட்லயே சொல்லிட்டேன்.” என்றவன் பார்வை அன்னையிடம் முடிவு எடுக்கும் பொறுப்பை தந்தான்.

வீட்டில் ‘எனக்கு எல்லாம் இப்ப அவசியமா? வேண்டாம்னா புலம்பறிங்க. என்னவோ பண்ணி தொலைங்க. எவளாவது என்னை பிடிக்கலைனு சொல்லட்டும் அப்பறம் இன்னொரு முறை பொண்ணு பார்க்க வாடானு என்னை கூப்பிடக்கூடாது.’ என்று திடமாய் தெரிவித்திருந்தான். இங்கு இப்படி கூறவும் இளவழகிக்கு என்ன முடிவெடுக்க என்று மகனை பார்த்து விழித்தார்.

தேவராஜோ “வாங்க தம்பி பேசலாம். அம்மா என் பொண்ணோட பேசி பார்க்கட்டும்” என்று அர்ஜுனை அழைத்துக்கொண்டார்.

அர்ஜுன் எழுந்தப்போது சட்டையை சரிசெய்து அமிழ்தினியை ஒர் பார்வையிட்டான். அவளும் ஏறிட்டு முடிக்க, இரு விழிகள் கலந்து முடித்து நின்றது.

சந்திரிகா இளவழகி இருவரும் பொதுவாக பேசினார். அடிக்கடி அமிழ்தினி கையை பிடித்து பேசவும் அசௌவுகரியம் அடைந்தாலும் இளவழகி சிரித்து தீண்டி பேசவும் அர்ஜுனை காண, அவனும் அடிக்கடி சரவணன் தேவராஜிடம் பேசிக்கொண்டே அமிழ்தினியை கண்டான்.
அடிக்கடி சிக்கிமுக்கி கற்களாய் பார்வைகள் உரசி சென்றது.

சந்திரிகாவோ அஞ்சனாவிடம் “அவளை கூட்டிட்டு போய் பையனை பிடிச்சிருக்கானு கேளுடி” என்று கிசுகிசுத்தார்.

அஞ்சனாவும் எழுந்து தங்கையை தனியாக அழைத்து, “என்ன பேசறப்ப வாயை பார்த்துட்டு இருக்க? அவரை பிடிச்சிருக்கா இல்லையா?” என்று கேட்டு சீண்டினாள்.

“என்ன என் சம்மதம் எல்லாம் கேட்கறிங்க, இங்க வர்றதுக்கு முன்னவே அப்பா ஒரு முடிவோட வந்துட்டார். நான் பிடிக்கலைனு சொன்னாலும் இங்க யாரும் என் பதிலை பொருட்படுத்தவே மாட்டாங்க. ஒரே ஆப்ஷன்” என்றவள் பார்வை அர்ஜுனை தழுவியது.

“அப்பா பேசற டோனே சொல்லுது. இந்த தாடிக்காரனை என் தலையில கட்டப்போறார்.” என்று அஞ்சனாவிடம், கூறிவிட்டு அர்ஜுனையும் இளவழகியையும் கண்டவளுக்குள் என் மீதி வாழ்க்கை இந்த இருவரிடமா? என்ற மலைப்பு தோன்றியது.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்

18 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை?-4”

  1. CRVS2797

    இது என்ன..? அம்மு நம்ம அர்ஜூனை அன்டர் எஸ்டிமேட்டாவே பண்ணிட்டிருக்கா…?
    ஒய்… என்ன ? உடம்பு எப்படி இருக்கு..?

  2. Avatar

    அர்ஜுன் கொஞ்சம் முசுடு தான் ஆனா அவன் ஒண்ணும் கெட்டவன் கிடையாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *