கோபாலய்யங்காரின் மனைவி
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
1
(பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’ என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் – ஏன் பிரமை என்றும் கூறலாம் – முடிவடைகிறது. முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ, என்னவோ? மனிதன், ‘காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே’ அனலை விழுங்கலாம், புளித்த குழம்பையும் குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின் கதையை என் போக்கில் எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை)
டெப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் தமது மனைவி மீனாட்சியை யழைத்துக் கொண்டு தஞ்சைக்கு வந்து ஒரு மாத காலமாகிறது. ஊரில் எல்லாம் பரபரப்பு, ஒரே பேச்சு, கோபாலய்யங்கார் இடைச்சியைக் கலியாணம் செய்து கொண்டார் என்பதுதான். எல்லாம் கிசுகிசு என்ற பேச்சு. எதிரில் பேச முடியுமா? அதுவும் அந்தக் காலத்தில்; அதுவும் தஞ்சாவூரில். சிலர் போயும் போயும் இடைச்சிதானா அகப்பட்டாள் என்று பேசிக் கொண்டார்கள். படியாதவர்கள், யாரோ இடைச்சியை இழுத்து வந்து வைப்பாக வைத்திருக்கிறார் என்று அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமான் செய்தி என்பதால் வேறு வழியின்றி நம்பிக் கொண்டார்கள். பியூன்களுக்கு அய்யங்கார் என்றால் சிறிது இளக்காரம்; அவர் முதுகுப்புறம் சிரிப்பார்கள்.
இவ்வளவும் கோபாலய்யங்காருக்குத் தெரியாது. அதாவது தெரிய சந்தர்ப்பம் வைத்துக் கொள்ளவில்லை. வீட்டிலே மீனாட்சிக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்க ஒரு கிறிஸ்துவ உபாத்தினி. முன்பிருந்த பிராமணப் பரிசாரகன் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டான். ஒரு நாள் மீனாட்சி சமைத்தாள். அதாவது அவள் குலாசாரப்படி சமைத்தாள். லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் இத்தியாதி பொருள்களுடன் தன் கைப்பாகமாக மிகுந்த ஜாக்கிரதையுடன் வைத்திருந்தாள்.
கோபாலய்யங்கார் குடிகாரர் தான்; ஆனால் மாமிச பட்சணியல்ல. மீனாளின் கண்களைப் பார்த்துக் கொண்டு இரண்டு கவளம் வாயில் போட்டார். அவ்வளவுதான். குடலைப் பிடுங்கியது போல் ஓங்கரித்து வாந்தி எடுத்தார். மாமிச உணவின் பாகம் என்ற நினைப்பில் ஏற்பட்டது. மீனாள் பதறித் தன் கணவன் தலையைத் தாங்கினாள். கோபாலய்யங்கார் போஜனப் பிரியர். பசி காதலை வென்றது. அவளை உதறித் தள்ளிவிட்டு வெளியே சென்று சேவகனைக் கூப்பிட்டு, பிராமண குமாஸ்தாவசம் ஹோட்டலில் இருந்து சாப்பாடு தருவித்தார்.
போஜனமான பிறகுதான் கோபாலய்யங்காருக்குத் தமது காதல் திரும்பியும் வந்தது.
“மீனா” என்று கூப்பிட்டுக்கொண்டு உள்ளே வந்தார்.
“சாமீ” என்று எழுந்தாள் மூலையில் உட்கார்ந்திருந்த காதலி. அவள் கண்களில் இரண்டு துளிகள் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அகழியை எடுத்துக் காண்பித்தது.
மீனாட்சி பணிப்பெண்; அதிலும் பயந்த பெண். மருண்ட பார்வை. கணவன் என்ற ஸ்தானத்தில் அவரை வைக்கவில்லை. தனது தெய்வம் என்ற ஸ்தானத்தில், அதாவது தனக்கு எட்டாத ஒரு ஸ்தானத்தில் இருக்கும் ஒரு இலட்சியம் என்று கருதியவள். எட்டாதது என்ற நினைப்பில் பிறந்த பயம் கணவன் இஷ்டப்படி நடக்கத் தூண்டியதேயல்லாது அவரிடம் தன்னை மறந்த பாசம், லயம் பிறப்பித்ததே கிடையாது.
“என்ன மீனா! உனக்கு எத்தனை தரம் அப்படிக் கூப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். கண்ணா! இப்படி வா! என்ன இப்படி கறிக்குழம்பு வைத்தாய்?” என்றார்.
“இல்லிங்களே, இப்படித்தான் எங்க வீட்டிலே பருப்புக் கொளம்பு வைப்பாங்க” என்றாள்.
“அதை அப்பொழுதே சொல்லி இருக்கக் கூடாதா? ஹோட்டலில் சாப்பாடு எடுத்து வரச் சொன்னால் போகிறது. அது கிடக்கட்டும். இப்படி வா!”
அவளை ஆரத்தழுவி தமது மடிமீதிருத்தி முத்தங்களைச் சொரிந்தார். மீனாள் செயலற்ற பாவைபோல் இடங்கொடுத்தாள். கணவன், கலெக்டர் என்ற பயம். அவர் இஷ்டம் போல் இருக்க வேண்டும் என்பதில் ஏற்பட்ட பயம்.
“என்ன மீனா! நீ ஒரு முத்தமிடு.”
மீனாள் தயங்கினாள். ஒரு பயந்த முத்தம் கோபாலய்யங்காரின் கன்னத்தை ஸ்பரிசித்தது.
“என்ன மீனா, இன்னும் பயமா? உன் பயத்தைப் போக்குகிறேன் பார், உனக்கு இரத்தமே இல்லையே. இந்த மருந்தை குடி” என்று ஒரு கிளாசில் ஒயினை ஊற்றிக் கொடுத்தார். குடித்தாள். சிறிது இனிப்பும் காரமும் தான் தெரிந்தது. மறு நிமிஷம் உடல் பூராவாகவும் ஏதோ ஒன்று பரவுவது போல் பட்டது.
“என்னமாக இருக்கிறது?”
“கொஞ்சம் இனிச்சுக்கிட்டு காரமா இருந்துச்சு. என்னமோ மாதிரியா இருக்குதே?”
“என்னமாக இருக்கிறது?”
“நல்லாத்தான் இருக்குது” என்றாள்.
அவளும் வாலிபப் பெண்தானே. அதுவும் ஒயின் உதவியும் கூட இருக்கும்பொழுது அன்று சிறிது பயத்தை மறந்தாள். அன்று அவளுக்குக் கோபாலய்யங்காரின் மீது ஏற்பட்ட பாசம், வாலிபத்தின் கூறு. கோபாலய்யங்கார் மீனா தன்னைக் காதலிப்பதாக எண்ணி மகிழ்ந்தார்.
2
கோபாலய்யங்கார் சிறிது கஷ்டப்பட்டு ஒரு பிராமணப் பரிசாரகனை நியமித்தார். சம்பளம் இருபத்தைந்து ரூபாய் என்ற ஆசையும், கலெக்டர் அய்யங்கார் என்ற பயமும் இருந்தால் ஒரு ஏழைப் பிராமணன் அகப்படாமலா போகிறான்?
ஆனால் கலெக்டருக்கும் பரிசாரகனுக்கும் ஒரு சமரச ஒப்பந்தம். கோபாலய்யங்கார் தஞ்சை ஜில்லாவிற்குப் பூராவாகவும் எதேச்சாதிகாரியாக இருப்பது என்றும், சமயலறையைப் பொறுத்தமட்டில் பரிசாரகன் சுப்புவய்யர் தான் எதேச்சாதிகாரி என்றும், சமயலறைப் பக்கம் கலெக்டர் அய்யங்காரோ கலெக்டர் அம்மாளோ வரக்கூடாது, பாத்திரங்களைத் தொடக்கூடாது, இருவருக்கும் பரிமாறுவதும் சமையல் செய்வதும் சுப்புவைய்யரின் வேலை என்றும் திட்டமாயிற்று.
சாப்பாட்டுப் பிரச்சனை ஒருவாறு முடிந்ததும், கோபாலய்யங்கார் தமது கலெக்டர் தொழிலையும் காதல் கனவையும் அனுபவிக்க முயன்றார். கலெக்டர் வேலை பரிச்சயமானது. ஆனால் காதல்…
மீனாளுக்குப் பயமும், கோபாலய்யங்காரின் மீது மோகமும் தான் இருந்து வந்தன. அதிலும், அவர் பயிற்சி செய்வித்த மருந்தில் கொஞ்சம் பிரேமையும் விழுந்திருந்தது.
ஒருநாள் சாயங்காலம்.
கோபாலய்யங்கார் ஆபீஸிலிருந்து வந்து, தமது ஆங்கில வேஷத்தைக் களைந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது மீனாள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அய்யங்கார் ‘டிரஸ்’ செய்வதைப் பார்ப்பதில் அவளுக்கு ஒரு பிரேமை. ஆச்சரியம்.
கோபாலய்யங்கார் ஒரு முத்தத்தை எதிர்பார்த்தார். ஆசை இருந்தாலல்லவோ, பாசம் இருந்தால் அல்லவோ?
கோபாலய்யங்காருக்குச் சிறிது ஏமாற்றமாகவிருந்தது.
“மீனா! என் பேரில் உனக்குக் காதல் இருக்கிறதா?” என்றார்.
மீனாவுக்கு அர்த்தமாகவில்லை. சிறிது தயங்கினாள்.
“அப்படிண்ணா?”
கோபாலய்யங்காருடைய ஏமாற்றம் சிறிது கோபமாக மாறியது.
“என் பேரில் பிரியமில்லை போலிருக்கிறது!” என்றார்.
“என்ன சா… என்னாங்க அப்புடிச் சொல்லுறிய? உங்க மேலே புரியமில்லாமலா?” என்று சிரித்தாள் மீனாள்.
“வந்து இவ்வளவு நேரமாக ஒரு முத்தமாவது நீயாகத் தரவில்லையே?”
“எங்க ஜாதியிலே அது ஒண்ணும் கெடையாது இப்போ?” என்றாள்.
கோபாலய்யங்காருக்குச் சுறுக்கென்று தைத்தது. நல்ல காலமாக சுப்புவைய்யர் காப்பியைக் கொண்டு வந்து கொடுக்க உள்ளே நுழைந்தார். கோபம் அவர் மேல் பாய்ந்தது.
“தடியா! காப்பியை வைத்துவிட்டுப் போ!” என்று இரைந்தார்.
அய்யங்காருக்கு கொஞ்சம் ‘டோஸ்’ ஜாஸ்தி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு போய்விட்டார் பரிசாரகர்.
நாட்களும் வெகுவாக ஓடின. கோபாலய்யங்கார் ஒரு பொம்மைக்குக் காதலுயிர் எழுப்ப பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார். இதில் தோல்வி இயற்கையாகையால் மது என்ற மோகனாங்கியின் காதல் அதிகமாக வளர ஆரம்பித்தது.
மீனாளுக்கு இந்தச் சாப்பாட்டுத் திட்டம் வெகு நாட்களாகப் பிடிக்கவில்லை. தான் பணிப்பெண்ணாக இருக்கும்பொழுது வேளா வேளைகளில் கிடைக்கும் பிராமண உணவு இப்போது வெறுப்பைத் தருவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தகப்பனார் வீட்டில் நடக்கும் சமையலைப் பற்றி ஏங்கவாரம்பித்தாள். தனக்குத் தானே சமைத்துக் கொள்ள அனுமதி கேட்கப் பயம். ஆபீஸ் பியூன் கோபாலக்கோனார் கலெக்டர் வீட்டு வேலைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்ட கிழவன். அவன் வேளாவேளைகளில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் சாப்பிடும்பொழுது அவளுக்கு நாவில் ஜலம் ஊறும்.
வீட்டினுள் இருந்து கண்ணீர் விடுவாள். அவளுக்குக் குழந்தையுள்ளம்; கேட்கவும் பயம்.
கோபாலக் கோனார் அனுபவம் உள்ள கிழவன். இதை எப்படியோ குறிப்பால் உணர்ந்து கொண்டான். ஒருநாள் ரகஸியமாக மாமிச உணவு தயாரித்து வந்து, அவளுக்குக் கொடுத்தான். அவளுக்கு அவன் மீது ஒரு மகளின் அன்பு ஏற்பட்டது. கோபாலக் கோனாருக்கு ஒரு குழந்தையின் மீது ஏற்படும் வாத்ஸல்யம் ஏற்பட்டது.
ரகஸியமாகக் கொஞ்ச நாள் கொடுத்து வந்தான். ரகஸியம் பரமகேட்டை விளைவிக்கும் என்று உணர்ந்து மீனாளுக்கு ஒரு தந்திரம் கற்பித்தான். அய்யங்கார் போதையிலிருக்கும் பொழுது மாமிச உணவைப் பழக்கப்படுத்த வழி சொல்லிக் கொடுத்தான்.
மீனாள் பிராமணப் பெண் ஆவது போய், கோபாலய்யங்கார் இடையனானார்.
3
கோபாலய்யங்கார் மாமிசப்பட்சணியான பிறகு சுப்புவைய்யரின் எதேச்சாதிகாரம் தொலைந்தது. மீனாள் உண்மையில் கிரகலட்சுமியானாள்.
இரண்டு வருஷ காலம் அவர்களுக்கு சிட்டாகப் பறந்தது. மீனாளின் துணைக்கருவியாக கோபாலய்யங்காரின் மேல்நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப்பட்டன.
தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு என்பது வயதைக் கவனியாமலே வந்தது. மீனாளின் அழகு மறைந்து அவள் ஸ்தூல சரீரியானாள். கோபாலய்யங்கார் தலை நரைத்து வழுக்கை விழுந்து கிழப்பருவம் எய்தினார்.
இதை மறப்பதற்குக் குடி.
ஆபீஸிற்கு போகுமுன் தைரியம் கொடுக்கக் குடி.
வந்ததும் மீனாளின் சௌந்தரியத்தை மறக்கக் குடி.
இப்பொழுது அவர்கள் தென்னாற்காட்டு ஜில்லாவில் இருக்கிறார்கள். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியிலே.
இரவு பத்து மணிக்கு அப்பக்கம் யாராவது போனால் கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம்.
“ஏ! பாப்பான்!” என்று மீனாள் கொஞ்சுவாள்.
“என்னடி எடச்சிறுக்கி!” என்று கோபாலய்யங்கார் காதலுரை பகருவார்.
இருவரும் சேர்ந்து தெம்மாங்கு பாடுவார்கள்.
மீனாளின் ‘டிரியோ, டிரியோ’ பாட்டில் கோபாலய்யங்காருக்கு – அந்த ஸ்தாயிகளில் – பிரியமதிகம்.
புதுமைப்பித்தன் அவர்களின் கதை அல்லவா? ஆசிரியர் பெயரில் அது இல்லையே..?
@Madhu_dr_cool forumல புதுமைப்பித்தன் பெயருக்கு கீழே கதைகள் பதிவிட்டு உள்ளேன் கவனிக்கலையா? https://praveenathangarajnovels.com/community/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/
No, because the link appeared spontaneously on my feed. I didn’t go through the forum and all for that. It is best to add the Authors’ name in the title as well the end of the post.