Skip to content
Home » சித்தி – 1

சித்தி – 1

    அதிகாலை ஐந்து மணி சூரியன் தன் வேலையை தொடங்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று  கருக்கல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சமாவதிலேயே தெரிய ஆரம்பித்தது. 

அலாரம் அடிக்காமலேயே எழும் பழக்கம் உள்ள உமா. தன் கைகளை உரசி கண்களில் வைத்து மெதுவாய் கண்களை திறந்தவாறு படுக்கையில் இருந்து எழுந்தாள்.

நேராக பின்பக்க கதவை திறந்து கொல்லைப்புரம் சென்று கிணற்றில் தண்ணீரை வைத்து முகம் கழுவி விட்டு தண்ணீர் எடுத்துக் கொண்டு வீட்டைச் சுற்றி முன் வாசலுக்கு வந்து வீட்டைச் சுற்றியும் வாசலையும் பெருக்கி தெளித்து கோலம் போட்டு முடிய வானம் வெளுக்க ஆரம்பித்து இருந்தது.

மீண்டும் கிணற்றடிக்கு வந்து குளிப்பதற்கு தண்ணீர் இறைத்து மூலையில் தனியாக இருந்த குளியல் அறையில் வைத்து விட்டு மாற்றுடை எடுப்பதற்கு வீட்டிற்குள் செல்வதற்கு திரும்ப அவளை உரசியவாறு வந்து நின்றான் அவள் சித்தியின் தம்பி காளிமுத்து. 

அவள் சித்தியை விட இரண்டு வயது சிறியவன். இவளை விட இருபது வயது பெரியவன். 

மனைவி இறந்ததால் தன்னை மணக்கும் படி கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கின்றான். உமாவின் தந்தை இருப்பதால் அவளின் சித்தியும் காளிமுத்துவும் கொஞ்சம் அடங்கி இருக்கின்றார்கள். இல்லை என்றால் இந்நேரம் காளிமுத்துவின் மனைவியாகிய இருப்பாள் உமா என்ற உமா பாரதி.

தன் மகள் பாரதி கண்ட புதுமை பெண் போல்  இருக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக பெயர் வைத்தாள் அவளை ஈன்ற தாய் சரசு. உமா பாரதிக்கு நான்கு வயது இருக்கும் போது, என்ன நோய் என்று கண்டு பிடிக்க முடியாமலேயே திடீரென்று இறந்து விட்டாள் அவளின் தாய்.  

தாய் தந்தைய இழந்த முத்துராமன், சிறு பெண்ணான உமா பாரதியை தனியாக வளர்க்க கஷ்டப்படுவதை கண்டு, அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவனை மறுமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினர். முதலில் மறுத்த முத்துராமனும் சில மாதத்திலேயே பக்கத்து ஊரில் உள்ள அல்லிராணி என்ற பெண்ணை மணந்து கொண்டு, தன் வீட்டிற்கு வந்து தன் மகளிடம் இது உன் சித்தி என்று அறிமுகப்படுத்தினான். 

அல்லிராணியுடன் இலவச இணைப்பாக வந்தவன் தான் காளிமுத்து இருபத்தைந்து  வயது இளைஞன். அவர்களும் தாய் தந்தையற்றவர்கள் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கிடைத்த வேலைகளை செய்து தன்  வயிற்றையும் தன் தம்பியையும் வயிற்றையும் நிரப்பி வந்தாள் அல்லிராணி. 

நல்ல பெண் என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் சொன்னதை கேட்டு, அவளும் தனியாக இருப்பதால் தன் மகளை நன்றாக கவனித்துக் கொள்வாள் என்று மனம் முடித்து அழைத்து வந்தார். 

அல்லிராணியும் உமா பாரதியை மிகவும் அன்பாகவே கவனித்துக் கொண்டாள், ஊரார் கண்களுக்கும் முத்துராமன் இருக்கும் போதும். ஆனால் முத்துராமன் இல்லாத நேரங்களில் அவளை ஐந்து வயது சிறு பெண் என்றும் பார்க்காமல் வீட்டு வேலைகளை செய்ய வைத்து விட்டு ஜம்பமாக அமர்ந்து விடுவாள். 

அல்லிராணி தன் மகளை நன்றாக கவனித்துக் கொண்டிருக்கின்றாள்  என்ற மாயையில் இருந்த முத்துராமனுக்கு, தன் மகள் படும் கஷ்டம் ஒரு நேரம் தெரிய வர தன் மனைவியை அடிக்க கை வாங்கி விட்டான். 

அவளோ நீலிக்கண்ணீர் வடித்து, “நான் என்ன செய்வேன், உங்கள் பிள்ளை என் வயிற்றிலிருந்து என்னை ஒரு வேலையும் செய்யவிடாமல் பாடாய்படுத்துகிறான். அதனால் தான் அவளிடம் சின்ன சின்ன வேலைகளை செய்யச் சொன்னேன்” என்று கண்களை கசக்க, அவ்வளவுதான் முத்துராமன் அவளை அணைத்து அமர வைத்து “உண்மையா?” என்று கேட்டார். 

அவளும் ஆமாம் என்று தலையாட்டி தலைகுனிய, அதில் மகிழ்ந்து தன் மகள் உமா பாரதியை அழைத்தார் முத்துராமன். 

தன் தந்தை கோபமாக சித்தியிடம் பேசுவதைக் கண்டு, இனிமேல் தன்னிடம் சித்தி அன்பாக நடந்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் புன்னகைத்துக் கொண்டே தந்தையின் அருகில் சென்ற உமா பாரதியை, தனது மறுபக்கம் அணைத்துக் கொண்டு, “உன் சித்தியின் வயிற்றுக்குள் குட்டி பாப்பா இருக்கு. அதனாலதான் சித்தியால வேலை செய்ய முடியவில்லை”

“நீ சித்திக்கு உதவியா வீட்டு வேலைகளை செய்துவிடு, சரியா?” என்று தலையை ஆதுர்யமாக தடவி விட்டார். தன் தோழியின் வீட்டில் உள்ள குட்டிக் குழந்தை போல் தங்கள் வீட்டிலும் தம்பி பாப்பா வரப்போகிறது என்று மகிழ்ந்து, “சரிங்க அப்பா” என்று தலையாட்டினாள் உமா பாரதி. 

மகள் பள்ளிக்கூடம் செல்வதில் எந்த தடை வந்துவிடக் கூடாது என்று தன் மனைவி அல்லிராணியிடம் தெளிவாக கூறிவிட்டார் முத்துராமன். அந்த ஒரு தெளிவில் சிறிது தப்பினாள் உமா பாரதி. 

மதிய உணவு பள்ளியில் என்பதால் வயிறு நிறைய உண்டு விடுவாள் உமா பாரதி. காலையும் இரவும் அரை வயிறு உணவுதான் அவளுக்கு. 

அன்றாடம் கூலி வேலை தான் என்றாலும் ஒருபொழுதும் சோம்பல் இல்லாமல் வேலைக்குச் சென்று தன் குடும்பத்தை காக்க மாடாய் உழைத்தார் முத்துராமன். 

அதில் சுகமாக வாழ்ந்தனர் அல்லிராணியும் காளிமுத்துவும். 

நாட்கள் கடக்க அல்லிராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதில் மகிழ்ந்த முத்துராமன் கொஞ்சம் கொஞ்சமாக உமாவின் கவனிக்க தவறினார். 

அதற்குள் காளிமுத்துவிற்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று அல்லிராணி வற்புறுத்த, ஏதாவது வேலை செய்தால் தானே பெண் கொடுப்பார்கள் என்று முத்துராமன் கூற, அவனும் கிடைக்கும் வேலைகளை செய்ய ஆரம்பித்தான். அல்லிராணிக்கு குழந்தை பிறந்து ஆறு மாதத்தில் காளிமுத்துவுக்கு திருமணம் நடந்தது. 

இரு ஆண்கள் வேலைக்கு செல்வதால் வருமானம் சற்று அதிகரிக்க, பக்கத்தில் வெறுமையாய் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி, ஓலை குடிசை வீடமைத்து தம்பியை தனியாக இருக்க வைத்தார் அல்லிராணி. 

அதன் பிறகு சற்று வேலை உமாவிற்கு குறைந்தாலும், அல்லிராணி அடுத்த குழந்தை உண்டாகி விட்டதால், தம்பியை கவனிக்கும் வேலையும் உமாவிற்கு வந்தது. 

காளிமுத்துவுக்கும் ஆண் குழந்தை பிறந்தது சிறிது மாதங்களுக்கு பிறகு அல்லிராணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இப்படியே அடுத்தடுத்து பிள்ளைகள் இருக்க முத்துராமனிடம், தன்னால் தனியாக பிள்ளைகளை பார்த்துக் கொள்ள இயலாது என்று உமா பாரதியின் நாலாம் வகுப்பு படிப்பிற்கு முழுக்கு போட வைத்துவிட்டாள் அல்லிராணி. 

படிப்பின் அருமை அவ்வளவாக தெரியாத சிறு பிள்ளையான உமா பாரதிக்கு மதியம் உண்ணும் ஒரு வேலையும் குறைந்தது தான் வருத்தமாக இருந்தது. தன் தந்தையிடம் கெஞ்சி, “நம் ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் மட்டுமாவது படிக்கிறேன்” என்று அடம் பிடித்தாள். 

அவரும் சரி என்று தன் மனைவியிடம், “ஐந்தாம் வகுப்பு வரை தானே நம்ம ஊர்ல பள்ளிக்கூடம் இருக்கு. அதுவரைக்கும் பிள்ளை பள்ளிக்கூடம் போய் வரட்டும்” என்று கூறிவிட்டார். 

ஒரு வருட படிப்பு தப்பியது உமா பாரதிக்கு. ஐந்தாம் வகுப்பு படித்து முடிக்க காளிமுத்துவிற்கு அடுத்து பெண் குழந்தையும் பிறந்திருந்தது.  அன்றிலிருந்து வீட்டு வேலைகளை மட்டுமே செய்ய ஆரம்பித்தாள் உமா பாரதி. 

தன் சித்தி அடிப்பதையோ உணவுக்கு தர மறுப்பதையோ தந்தையிடம் தெரிவித்தால் தந்தை அல்லிராணியை கண்டிப்பார். அதன் பிறகு வேலை இருமடங்காகவும் உணவு பாதியாகவும் குறைக்கப்பட, தன் தந்தையிடம் தன் கஷ்டங்களை கூறுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விட்டாள் உமா பாரதி. 

கொஞ்சம் கொஞ்சம் உலகம் புரிய ஆரம்பித்தது. இனிமேல் தன் வாழ்க்கை இந்த வீட்டில் தான். இங்கு வாழ தன் சித்தியை அனுசரித்து தான் ஆக வேண்டும். தந்தையால் தன்னை காப்பாற்ற முடியாது, என்பது புரிய ஆரம்பித்தது. 

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கலகலப்பாக இருந்த சிறு பெண் உமா பாரதி, மௌன உமா பாரதியாக மாற ஆரம்பித்தாள்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

6 thoughts on “சித்தி – 1”

  1. CRVS2797

    அச்சோ பாவம் தான் உமா பாரதி…! அப்பன் பண்ணுன தப்பு இவ பாதிக்கப்படுறாளோ…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *