Skip to content
Home » சித்தி – 13

சித்தி – 13

     வழக்கத்தை விட தாமதமாக விழித்த ஜீவானந்த் தன் மேல் தூங்கும் தன் மகள் அஞ்சலியை உறக்கம் கலையாதவாறு மெத்தையில் படுக்க வைத்து விட்டு சோம்பல் முறித்தவாறு எழுந்து வெளியே வந்தான். 

என்றைக்கும் விட இன்று வீடு மங்கலகரமாக இருப்பது போல் தோன்றியது. எங்கும் புது மணம் வீசுவது போல் இருந்தது. பூஜை அறையில் விளக்கு ஒளியும், ஊதுவத்தியின் மணமும் நிறைந்த இருந்தது. 

ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டே கொல்லைப்புரம் சென்று தன் காலை வேலைகளை முடித்து வர, மரகதம் தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டு காஃபி குடித்துக் கொண்டிருந்தார். 

“என்ன அத்தை காலையிலையே கால் நீட்டி உட்கார்ந்து இருக்கீங்க. வழக்கமா அங்கேயும் இங்கேயும் ஓடியாடி வேலை செய்து கொண்டு தானே இருப்பீங்க” என்று கேட்டவாறே ஷோபாவில் அமர்ந்து செய்தித்தாளை எடுத்து படிக்க ஆரம்பித்தான். 

மரகதத்தின் அருகில் வந்த உமா, “அம்மா அவுங்களுக்கு காஃபி கொடுங்க” என்று அவருக்கு மட்டும் கேட்கும் படி கூறி  ஒரு டம்ளரை கொடுத்தாள். 

“நான் கீழ உக்காந்து இருக்கேன் இல்ல. நீயே போய் கொடு” என்று சொல்லிவிட்டு தன் காபியை குடி த்தார் மரகதம். 

உமாவும் தயங்கியபடியே அவனின் அருகில் சென்று நிற்க, ஜீவானந்த் செய்தித்தாளில் இருந்து தன் கண்களை அகற்றாமல் இருந்தான். 

“காஃபி” என்று அவள் காதுகளிலேயே விழாத அளவிற்கு பேசினாள்.

ஆனால் அது அவனது காதில் தெளிவாக விழுந்தது போல, நிமிர்ந்து உமாவை பார்த்தான்.

அவன் பார்த்ததும் கைகள் தானாய் நடுங்க, அவனுக்கு எதிரில் இருந்த டீபாயில் காஃபியை வைத்துவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். 

அதன் பிறகு காலை உணவு தயாரிப்பது, அஞ்சலியை எழுப்பி கிளப்பி உணவு ஊட்டுவது, என்று அவளது பொழுது இனிமையாக சென்றது. 

திருமணத்திற்கு வராதவர்கள் அன்றும் ஒவ்வொருவராக வந்து உமாவை பார்த்து சென்றனர். அன்றைய பொழுது அப்படியே நகர ஜீவானந்த் உணவு உண்ணும் நேரம் மட்டும் வீட்டிற்கு வந்தான். 

மரகதத்திடமும் அஞ்சலியிடமும் மட்டுமே அவனுடைய பேச்சுக்கள் இருந்தது. உமா என்ற ஒரு ஜீவன் அங்கு இருப்பதை அவன் சுத்தமாக கண்டு கொள்ளவே இல்லை. 

அன்று சாயங்காலம் முத்துராமன் ஃபோன் செய்து மரகதிடம், வரும் ஞாயிறு அன்று அனைவரும் தங்கள் வீட்டிற்கு வருமாறு கூறினார். மரகதமும் சரி என்று பேசிவிட்டு உமாவிடம் போனை கொடுக்க, 

தந்தை கூறியதை கேட்டு “அப்பா.. சித்தி முழுமனதாக தானே கூப்பிட்டார்கள்” என்று தயக்கமாக கேட்டாள். 

“ஆமாம் உன் சித்தி உண்மையாகத்தான் மறு வீட்டுக்கு வர கூறினாள். நான் நாளை காலை நேரில் வந்து மாப்பிள்ளை இடம் பேசுகிறேன்” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

நேற்று திருமணம் முடித்து உமாவை ஜீவானந்தம் வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்ற முத்துராமன் தன் மனைவியை பிடி என்று பிடித்துக் கொண்டார். “என் மகள் திருமணத்திற்கு கூட வராமல் நீங்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள்? என் மகள் திருமணம் என்று கூட நீங்க நினைத்திருக்க வேண்டாம். 

இந்த வீட்டில் இத்தனை வருட வளர்ந்த, உங்களுக்கு இத்தனை காலம் வேலை பார்த்த ஒரு பெண்ணின் திருமணம் என்று நினைத்தாவது வந்திருக்கலாம் அல்லவா?” என்று பொதுவாக பார்த்து சொல்லிவிட்டு தன் மனைவியை பார்த்து, “பணம்.. பணம்.. என்று பேயாய் அலைந்தாய் அல்லவா! இனிமேல் என் பணத்தில் உனக்கு ஒரு சல்லி காசு கூட கிடையாது. நான் சம்பாதித்த சம்பாதிக்கும் எல்லா சொத்துக்களையும் என் மகள் உமா பேரில் எழுதி வைக்கிறேன். 

இவ்வளவு காலம் நீயும் உன் தம்பியும் என் உழைப்பையும் பணத்தையும் அனுபவித்தீர்கள் அல்லவா அவற்றில் நீங்கள் உங்கள் பெயரில் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கின்றீர்கள் என்று எனக்கு தெரியாது என்று நினைத்தீர்களா? 

எல்லாம் எனக்குத் தெரியும்.  தெரிந்திருந்தும் ஏன் சும்மா இருந்தேன். தாலி கட்டி விட்டேன். இரண்டு பிள்ளைகளும் ஆகிவிட்டது என்று பொறுத்து பொறுத்து போனால் இன்று என் மகள் திருமணத்திற்கு நீங்கள் யாரும் வரவில்லை. 

என் மகளுக்கு உரிமையில்லை என்று நீங்கள் நினைத்த வீட்டில் இனி உங்களுக்கு உரிமை கிடையாது. என் மகளை வேண்டாம் என்று நினைத்தவர்கள் யாரும் இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது. 

இன்னும் அரை மணி நேரத்தில் எல்லோரும் இங்கிருந்து கிளம்பி விடுங்கள். என் மகளுக்கு இனி என்ன, எப்படி, எப்பொழுது, செய்ய வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும். இனி அவளை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று காட்டு கத்தல் கத்தினார். 

இத்தனை காலம் பொறுமையாக இருந்த முத்துராமனின் குரல் தெரு முழுவதும் கேட்க, ஊர்மக்கள் அவரின் வீட்டு வாசலில் ஒன்று கூடினர். 

இன்று காலையில் உமாவின் திருமணத்திற்கு இந்த வீட்டில் இருந்து ஒருவரும் செல்லாதது ஊர் முழுவதும் பரவி இருக்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அல்லிராணியையும் அவளது பிள்ளைகளையும் திட்ட ஆரம்பித்து விட்டார்கள். 

சிலர் முத்துராமனையும் திட்டினார்கள். இத்தனை வருடம் அந்த பிள்ளை இங்கே இருக்கும்பொழுது அவளுக்காக ஒரு வார்த்தை கூட பேசாமல், காலம் கடந்து இன்று பேசுகிறாயே என்று.

சித்தப்பா மாமா என்று சுற்றமும் நட்புமாய் சூழ்ந்து நின்று கேள்வி கேட்க, “நான் உமாவுக்காக ஏதாவது பேசினால் அவளை கொல்லவும் துணிந்து விடுவார்கள், இவளும் இவள் தம்பியும்” என்று அல்லிராணியை பார்த்து சொன்னார். 

அதனால் தான் என் மகள் உயிரோடு ஆவது இருக்கட்டும் என்று இதுவரை அவளுக்கும் எனக்கும் நடந்த அவமானங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன். 

இப்பொழுது என் மகள் திருமணம் முடித்து இங்கிருந்து சென்று விட்டாள். இனி அவளை இவர்கள் ஒன்றும் செய்ய இயலாது. அதனால் தான் இப்பொழுது நான் என் கோபத்தை வெளிப்படுத்துகிறேன்” என்றார்.

இனிமேல் இவர்கள் இங்கு இருக்க அவசியம் இல்லை. நான் அனைத்தையும் என் மகள் உமாவிற்கு எழுதி வைத்துவிட்ட போகிறேன் என்று தெளிவாக கூறி நிமிர்ந்து அமர்ந்து கொண்டிருந்தவரை பயந்தவாறு பார்த்தார் அல்லிராணி. 

இதுவரை பெட்டி பாம்பாய் அமைதியாக இருந்த முத்துராமன் இன்று சீறும் நாகமாக இருப்பதைக் கண்டு பயந்து விட்டார் அல்லிராணி. இத்தனை நாள் பாடுபட்டு சேர்த்த அனைத்தும் உமாவிற்கு சென்று விட்டால் தன் பிள்ளைகளின் கதி என்ன ஆவது என்று பயந்தார். 

இங்கிருந்து வெளியே சென்றால் ஒரு வேளை உணவுக்கு கூட தின்டாடும் நிலைமை தான். இதிலிருந்து தன்னையும் தன் பிள்ளைகளையும் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி தன் கணவனிடம் இணக்கமாக இருத்தல் தான் என்று அல்லிராணியின் மூளை வேகமாக வேலை செய்தது. 

அதை உடனே நிறைவேற்ற  முத்துராமனின் காலில் விழுந்து விட்டார். “என்னை மன்னித்து விடுங்கள். நான் ஏதோ ஆசையில் தெரியாமல் இப்படி பண்ணி விட்டேன். அதற்காக என்னை வெளியே அனுப்பி விடாதீர்கள். 

இனிமேல் உமா பாரதியையும் என் மகள் போல் கவனித்துக் கொள்கிறேன். அவள் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். தயவுசெய்து என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சி கதறினார்.

ஏற்கனவே  திடீரென விஸ்வரூபம் எடுத்து நிற்கும் முத்துராமனை கண்டு அதிர்ச்சியில் நின்றிருந்த காளிமுத்து, அவன் மகன், அல்லிராணியின் மகன், மகள் எல்லோருக்கும் அல்லிராணியின் செயலில் மேலும் அதிர்ந்து போய் நின்றார்கள்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

2 thoughts on “சித்தி – 13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *