ஞாயிறு அன்று தன் மகளையும் மருமகனையும் குடும்பத்துடன் மறு வீடு வருவதற்கு அழைப்பதற்காக நேரில் வந்து விட்டார் முத்துராமன்.
வந்தவரை வரவேற்று உபசரித்தாள் உமா பாரதி. ஜீவானந்திடம் மறு வீடு பற்றி கூற, “இதெல்லாம் இப்பொழுது அவசியமா” என்று அமைதியாக கேட்டான்.
அதில் சற்று வருந்திய முத்துராமன், “எல்லாம் முறை தானே மாப்பிள்ளை” என்று சற்று தயக்கமாக கூறினார்.
“சரி… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு நான் தாமதமாக வருகிறேன். முதலில் அத்தையுடன் அவளை அனுப்பி வைக்கிறேன்” என்றான் ஜீவா ஆனந்த்.
“இல்லை மாப்பிள்ளை. உங்கள் வேலையை முடித்துவிட்டு ஒன்று போலவே வாருங்கள். அப்பொழுதுதான் நன்றாக இருக்கும்” என்றார் முத்துராமன்.
“சரி.. எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வர முயற்சி செய்கிறோம்” என்று சொல்லிவிட்டு “நான் வயலுக்கு போக வேண்டும்” என்று பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.
மரகதமும் “இருவரையும் கண்டிப்பாக சீக்கிரம் அனுப்பி வைக்கின்றேன்” என்று கூற,
“அவர்கள் மட்டுமல்ல நீங்களும் வர வேண்டும்” என்று கண்டிப்பாக கூறினார் முத்துராமன்.
“நான் எதற்கு” என்று தயங்கிய மரகதத்தை, “எல்லோரும் சேர்ந்து குடும்பமாக வந்தால் எனக்கு மகிழ்வாக இருக்கும்” என்று கூறினார் முத்துராமன்.
“சரி, கண்டிப்பாக வருகிறேன்” என்று சொல்லிவிட்டு “நீ அப்பாவுடன் பேசிக்கொண்டு இருமா. எனக்கு கொஞ்சம் தொழுவத்தில் வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டு பின்னால் சென்று விட்டார் மரகதம்.
அவர் சென்றதும் தன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்து, “அப்பா மறு வீட்டிற்கு நாங்கள் வருவதில் சித்திக்கு வருத்தம் இல்லையே? அவர்கள் என்னை ஏதாவது பேசினால் பரவாயில்லை நான் தாங்கிக் கொள்வேன். ஆனால் என்னை வைத்து அவரை ஏதாவது பேசினால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது அப்பா. அவர்களுக்கு விருப்பமில்லாமல் நான் அங்கு வருவது சரியாக இருக்குமா? என்று சந்தேகமாகவும் கவலையாகவும் கேட்டாள் உமா பாரதி.
தன் மகளின் தலையை ஆதுர்யமாக தடவி, “இனிமேல் நீ அங்கு வரும் பொழுது உனக்கும் சரி, மாப்பிள்ளைக்கும் சரி எந்த மரியாதை குறைவும் நடக்காது மா! அதற்கு நான் உறுதி கூறுகிறேன், தைரியமாக வா” என்று அழைத்தார்.
அதன் பிறகு அன்றைய நாள் அப்படியே செல்ல அஞ்சலியை கவனிக்கும் பொறுப்பை முழுவதுமாக உமாவை ஏற்றுக் கொண்டாள்.
உமாவுடன் இருக்கும் நேரம் அஞ்சலிக்கு மகிழ்வாக இருந்தாலும், தன் தோழிகளும் ஆசிரியரும் கூறியது அவ்வப்போது ஞாபகம் வந்து சற்று விலகியே இருந்தாள்.
வீட்டை ஒதுங்க வைப்பது. மாட்டு கொட்டகையை சுத்தம் செய்வது, சமையல் செய்வது என்று நாள் முழுவதும் ஏதாவது ஒரு வேலை உமா பாரதிக்கு இருந்து கொண்டே இருந்தது.
மிகவும் மகிழ்ச்சியாகவே அனைத்தையும் செய்து கொண்டு இருந்தாள். அவளுக்கு இருக்கும் ஒரே கவலை அஞ்சலியின் விலகல் மட்டுமே.
வீட்டில் மரகதம் மட்டும் அவளுடன் சகஜமாக பேசி பேசிக்கொண்டார். அஞ்சலி சில நேரங்களில் அவளுடன் ஒன்றினாலும் சில நேரங்களில் அவளை விலக்கினாள்.
உமா என்று ஒரு பெண் அங்கு இல்லவே இல்லை என்பது போல் ஜீவானந்தின் நடவடிக்கைகள் இருந்தது. மறந்தும் கூட அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை அவன். ஜீவானந்த வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் அஞ்சலி அவனுடனையே இருந்தாள். அப்படியே அன்றைய நாள் செல்ல மறு வீடு செல்ல மறுநாள் விடிந்தது.
எப்போது முத்துராமன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று இதுவரை வாயைத் திறக்காமல் இருந்த ஜீவானந்த், ஞாயிறு அன்று வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து வயலுக்குச் சென்று விட்டான்.
மரகதமும் “இவன் என்ன? ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டானே! எப்பொழுது உங்கள் ஊருக்கு போகணும் என்று தெரியவில்லையே?” என்று உமாவிடம் குறைபட்டுக் கொண்டார்.
“விடுங்கம்மா. அவங்க தான் அன்னைக்கே சொன்னாங்க இல்ல. வேலையை முடித்துவிட்டு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அப்படி வருவதாக. அதனால் எப்படியும் வந்து விடுவார்கள்” என்று பேசிக்கொண்டு வேலைகளை விரைவாக முடித்தாள்.
அஞ்சலியையும் குளிக்கவைத்து காலை உணவு கொடுத்து தயாராகி விட்டு தானும் குளித்து தயாராகி ஜீவானந்த் வருகைக்காக காத்திருந்தாள்.
பத்து மணி அளவில் புல்லட் சத்தம் கேட்டது. அஞ்சலி, “அப்பா வந்து விட்டார்கள். நாம் தாத்தா வீட்டிற்கு செல்லலாம்” என்று துள்ளி குதித்தாள்.
அஞ்சலியின் இந்த செயல் உமா பாரதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தன் தந்தையை தாத்தா என்று அவள் கூறியது கண்டு ஆனந்தக் கண்ணீரை வந்துவிட்டது. அஞ்சலியை அணைத்துக்கொண்டு மரகதத்தை பார்த்தாள்.
மரகதமும் ‘நான்தான் சொன்னேனே’ என்ற பாவனையில் உமாவை பார்த்துக் கொண்டு இருந்தார்.
மரகதமும் உமாவும் பேசிக்கொள்ளும் பொழுதெல்லாம் அஞ்சலி என்னுடன் நெருக்கமாக பழக மாட்டேங்குறாள் என்று வருத்தப்பட்டு கொண்டே இருந்த உமாவை, போகப் போக உன்னிடம் அன்பாக நன்றாக பழகுவாள். கவலைப்படாதே என்று ஆறுதல் படுத்திக் கொண்டே இருப்பார்.
அதே போல இன்று தன்னை ஏற்காவிட்டாலும் தன் தந்தையை தாத்தா என்று ஏற்றுக் கொண்டு, அவரின் வீட்டிற்கு செல்வதை மகிழ்வதில் உமா பாரதிக்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது.
வீட்டிற்கு வந்த ஜீவானந்த் மூவரும் தயாராகி இருப்பதை கண்டு மரகதத்திடம் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன் அத்தை என்று கொல்லைப் புறம் சென்று விட்டான்.
குளித்துவிட்டு வந்ததும் உமா பாரதி எடுத்து வைத்திருந்த காலை உணவை உண்டு விட்டு மூவரையும், ஆட்டோ பிடித்து அனுப்பிவிட்டு, தன் புல்லட்டில் பின் தொடர்ந்தான். கால் மணி நேரத்தில் முத்துராமனின் வீட்டு வாசலில் ஆட்டோவும் புல்லட்டும் வந்து நின்றது.
வண்டி சத்தம் கேட்டதும் வேகமாக வெளியே வந்த முத்துராமன் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.
ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்துவிட்டு தன் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்த ஜீவானந்தை வரவேற்ற முத்துராமன், “ஒரு நிமிடம் அப்படியே நில்லுங்க மாப்பிள்ளை” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் திரும்பி “அல்லி…” என்று குரல் கொடுத்தார்.
அவர் குரல் கொடுத்த மறுநிமிடம் அங்கு ஆரத்தி தட்டுடன் வந்து நின்றார் அல்லிராணி. ஆரத்தி தட்டுடன் வந்து நின்ற தன் சித்தியை கண்டு ஆச்சரியமாக அடைந்த உமா, விழி விரித்து அப்படியே நின்று விட்டாள்.
ஆச்சரியப்பட்டு அப்படியே நின்றிருந்த உமா பாரதியை “மாப்பிள்ளையின் அருகில் வந்து நில்லுமா” என்ற தந்தையின் குரல் சுயநிலைக்கு கொண்டு வந்தது.
மெதுவாய் வந்து அஞ்சலியின் மறுகையை பிடித்துக் கொண்டு நின்றாள் உமா பாரதி. மூவரையும் ஆரத்தி எடுத்து உள்ளே வரும்படி அழைத்த அல்லிராணி, மரகதத்தையும் “வாங்க” என்று சொல்லிவிட்டு ஆரத்தியை வெளியே கொட்டி விட்டு வந்தார்.
வீட்டில் இருந்த உமாவின் தம்பி, தம்பி மனைவி, தங்கை, அவளது கணவன் என்று அனைவரும் தன்னுடன் சகஜமாக பேசுவதை கண்டு மேலும் ஆச்சரியமாக அமர்ந்திருந்தாள் உமா பாரதி.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
Interesting
நன்றி 😊😊
Interesting