Skip to content
Home » சித்தி – 16

சித்தி – 16

    மரகதம் கிளம்புவதற்கு, முன் உமா தனியாக இருப்பதால் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடு என்று ஃபோன் செய்து கூறியதாலும் மழை வருவது போல் இருந்ததாலும் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று கிளம்பினான் ஜீவானந்த். வரும் வழியிலேயே மழை நன்றாக பிடித்துக் கொள்ள முழுவதும் நனைந்து வீட்டிற்கு வந்தான். 

வீட்டில் எங்கும் உமா இருக்கும் அறிகுறி இல்லாததால் அவளை தேடிக்கொண்டு பின் வாசலுக்கு வர, சரியா அவள் கன்று குட்டியை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

குட்டியை மழையில் நனையாமல் கட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றாள். உடை முழுவதும் நனைந்து இருந்தால் மாற்றி விடலாம் என்று புடவையை எடுத்துக்கொண்டு அறைக்குள் செல்ல, குளியல் அறையில் சத்தம் கேட்டது. ஜீவானந்த் குளிக்கிறான் என்று நினைத்துக் கொண்டு அவன் வருவதற்குள் அவனின் அறையில் சென்று உடைமாற்றி விடலாம் என்று வேகமாக ஜீவானந்த அறைக்குச் சென்று ஈரப்புடைவையை கழட்டி கொண்டு நிற்கும் பொழுது கதவை திறந்து கொண்டு ஜீவானந்த் உள்ளே வந்தான். 

கதவு சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு தன் கையில் இருந்த புடவையை நழுவ விட்டு விட்டாள். குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டு தன் அறைக்கு வந்த ஜீவானந்தம் கண்களில் பாவாடை சட்டையுடன்  நிற்கும் உமாவே கண்ணுக்குத் தெரிந்தாள்.

சட்றென்று வெளியே செல்லலாம் என்று நினைத்தான் ஜீவானந்த். ஆனால் அவனது கால்களோ மறுப்பாக உமாவை நெருங்கியது. உமாவிற்கு தான் நிற்கும் கோலம் நினைவுக்கு வர தன் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு திரும்பி நின்று கொண்டாள். 

அவளின் பின்புறமாக வந்த ஜீவானந்த் மெதுவாக அவளை அணைக்க தன் கணவனின் முதல் ஸ்பரிசத்தில் உமா பாரதியின் உடல் மின்சாரம் தாக்கியது போல்  நடுங்கி அடங்கியது. அவளுக்குள் ஏற்பட்ட சிலிப்பை தன் அணைப்பின் மூலம்  உணர்ந்த ஜீவானந்த் கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலை இழக்க ஆரம்பித்து அவளின் பின்னங் கழுத்தில் இதழ் பதித்தான். அவ்வளவுதான் அவனுக்கு நினைவிருந்தது. அதன் பிறகு அவளை மஞ்சத்தில் சரித்து முழுவதும் ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டான். 

உமா பாரதிக்கு தன் கணவனின் செயலில் வெட்கமும் கூச்சமும் வந்து அவனை தடுக்க போராடினாலும் ஜீவானந்தம் ஆண்மைக்கு முன் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை  அவனிடம் அடங்கிப் போவதை தவிர.

விடிய விடியம் அவளை நாடி விடியும் தருவாயில் இருவரும் உறங்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்திலேயே கோனாரின் சத்தம் கேட்க முதலில் கண்விழித்தது ஜீவானந்த் தான். எழுந்து வெளியே வர வீட்டின் இருபுற கதவுகளும் திறந்தே இருந்தது.

அப்பொழுது தான் அவனுக்கு நினைவு வந்தது நேற்று வந்ததிலிருந்து உமா பாரதியுடன் தான் இருந்தது. பால் கறப்பதற்கு பாத்திரம் எடுத்து  வைத்துவிட்டு தன் அறைக்கு வந்து பார்க்க  துவண்டு போன கொடி போல் கட்டிலில் கிடந்தாள் உமா பாரதி.

அவளைப் பார்த்ததும் தான் செய்த செயல் ஞாபகம் வர, பின்னந்தலையை அழுத்த கோதி தன்னை சமன்படுத்தினான் ஜீவானந்த். பின்னர் போர்வை எடுத்து, அவளுக்கு மூடிவிட்டு, கதவை சாற்றி விட்டு,  வெளியே வந்து தன் வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டான். 

கோனார் பால் கறந்து தந்ததும் வாங்கி சமையலறையில் வைத்து விட்டு மாட்டு கொட்டகையை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். சற்று நேரத்திற்கெல்லாம் பகலவன் தன் ஒளிக்கதிரை பூமியில் செலுத்த ஆரம்பிக்க பொழுது பளபளவென்று விடிய ஆரம்பித்தது. 

விடிய ஆரம்பித்ததும் மக்களின் வேலை தொடங்க, இரவின் நிசப்தம் மறைந்து பகலின் ஒலி ஆரம்பம் ஆகியது. வெளியே கேட்ட சத்தத்தில் உறக்கம் கலைந்து எழுந்த உமா பாரதி, தான் இருக்கும் நிலையைக் கண்டு,  நேற்று தங்களுக்குள் நடந்ததை நினைத்து, கன்னம் சிவக்க மெதுவா எழுந்து தன் உடையை உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.

வெளிச்சத்தைக் கண்டு, ‘அச்சோ நேரம் ரொம்ப ஆகிவிட்டது போலயே’ என்று அவசரமாக தன் காலை கடனை முடித்துவிட்டு, வாசல் தெளிக்க வர, வீட்டைச் சுற்றி முழுவதும் ஈரமாக இருந்தது. 

மடமடவென்று வாசலில் கோலம் போட்டுவிட்டு உள்ளே வர பார்க்க, பக்கத்து வீட்டு பெண், “என்ன மரகதம் அம்மா மகளுக்கு இன்னைக்கு லேட்டா விடிஞ்சிருக்கு போல இருக்கு” என்று கிண்டல்  செய்தார்.

உமா பாரதியும் எதுவும் பதில் கூறாமல்  மென்னகை புரிந்து கொண்டு  தன் வேலைகளை தொடர ஆரம்பித்தாள். 

பால் காய்ச்சி காஃபி கலந்து ஜீவானந்தை தேட வீட்டிலும் வெளியிலும் எங்கும் அவன் இல்லை. இரவு உணவு உண்ணாதது அவளுக்கும் பசிப்பது போல் இருக்க காஃபியை குடித்து விட்டு குளிக்கலாம் என்று நினைத்து குடித்து விட்டு குளிக்கச் சென்றாள். 

அவள் குளிக்க சென்றதும் வீட்டிற்கு வந்தான் ஜீவானந்த். குளித்துவிட்டு வந்த உமா பாரதி, பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் ஜீவானந்தை பார்த்துவிட்டு வேகமாக அவனுக்கு காஃபி கலந்து கொடுத்து விட்டு, சமையல் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டாள். 

இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. உமா பாரதி எப்பொழுதும் போல் சகஜமாக இருக்க, ஜீவானந்திற்கு தன் செயலை நினைத்து ஒரே குற்ற உணர்வாக இருந்தது. 

முன்பாவது, அவள் பார்க்காத பொழுது,  எப்பொழுதாவது அவளை பார்ப்பான். ஆனால் இப்பொழுது அவள் இருக்கும் திசையை திரும்பி கூட பார்க்க முடியாமல் அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. 

சமையல் முடிந்ததும் அனைத்தையும் அவள் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, குளித்துவிட்டு வந்த ஜீவானந்த் அமைதியாக சாப்பிட்டு விட்டு வெளியே சென்று விட்டான். 

வெளியே சென்ற ஜீவானந்த் மதியம் உணவு உண்ண வீட்டிற்கு வந்தான். வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் வெளியே சென்று விட்டான். அதன் பிறகு இரவு தாமதமாகவே வீட்டிற்கு வர, அதற்குள் உமா பாரதி அவள் எப்பொழுதும் படுக்கும் இடத்தில் படுத்து உறங்கி விட்டாள். 

உறங்கும் அவளை பார்த்துக் கொண்டு கதவை பூட்டிவிட்டு அவனும் தன் அறைக்குள் சென்று படுத்து விட்டான். மறுநாள் வழக்கம் போல் விடிய இருவரும் அவரவர் வேலைகளை செய்தார்கள். சாயங்காலம் மரகதம் வர அஞ்சலியுடன் உமா பாரதிக்கு நேரம் போனது. 

உமாவின் முகத்தில் இருந்த பளபளப்பை பார்க்க மரகதத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அன்று இரவும் தாமதமாகவே வந்த ஜீவானந்த் மரகதத்திடம் பயணத்தை பற்றி லேசாக விசாரித்து விட்டு அமைதியாக உணவு உண்டு விட்டு தன் அறைக்குள் சென்று விட்டான். 

தன் கண்ணைப் பார்த்து பேச தயங்கும் ஜீவானந்தை கேள்வியாக பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தார் மரகதம்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

3 thoughts on “சித்தி – 16”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *