Skip to content
Home » சித்தி – 20

சித்தி – 20

    தோட்டத்திலிருந்து வந்த தன் மருமகனின் முகத்தை வைத்தே, இவ்வளவு நேரம் உமா பாரதி பேசியதே கேட்டிருக்கின்றான் என்பதை உணர்ந்து, தான் வெளியே செல்வதாக கூறி அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே சென்றார் மரகதம். 

ஜீவானந்தும் உமா பாரதி இவ்வளவு நாள் அனுபவித்த கஷ்டங்களுக்கு அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான். பின்னர் அவளிடம், “உன் மனதில் உள்ளதை எல்லாம் சொல்லிவிடு. இனிமேல் நீ எக்காரணம் கொண்டும் கவலைப்படுவதை நான் விரும்பவில்லை” என்று அவளது கையில் சிறிது அழுத்தம் கொடுத்து கூறினான்.

கணவன் தன்னை பேச சொன்னதும் தயங்கி தயங்கி தன் மனதில் உள்ளதை அவனிடம் கூறத் தொடங்கினாள் உமா பாரதி. “காலையில் நீங்கள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்டேன். 

பொதுவாக இரண்டாவது மனைவியாக வரும் பெண், தன் கணவனின் முதல் தாரத்து குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை நான் என் சித்தியை வைத்தே அனுபவமாக உணர்ந்தவள். 

ஆகையால் நானும் அஞ்சலியை சரியாக கவனித்துக் கொள்ள மாட்டேன் என்ற சந்தேகம் உங்களுக்கு இருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால்…” என்று சிறிது தயங்கி விட்டு, “நீங்கள் என்னுடன் கணவனாக நடந்து கொண்டதை நினைத்து குற்ற உணர்வாக இருக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா? அதுதான் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

ஒரு பெண் அவளது வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவற்றை அவள் தாங்கிக் கொள்வாள். ஆனால் தன் கணவன் தன்னுடன் விருப்பமில்லாமல் இணைவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

என் கழுத்தில் நீங்கள் தாலி கட்டியவுடன் நான் உங்களை என் கணவனாக மனமாற ஏற்றுக் கொண்டேன். உங்களை கணவனாக ஏற்றுக் கொண்டு விட்டேன் என்றால் உங்கள் சொந்தங்கள் அனைத்தையும் என் சொந்தமாக ஏற்றுக் கொண்டேன் என்று தான் அர்த்தம். 

அது உங்களுக்கு புரிய சற்று காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை. அதுதான் உண்மை. நான் அஞ்சலியை எனது மகளாகத்தான் பார்க்கிறேன். அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை. 

அதேபோல் நீங்கள் என்னை மனைவி என்று ஏற்றுக் கொண்டால் என்னிடம் நெருங்குங்கள். இல்லை என்றால் தயவு செய்து என்னை இப்படியே விட்டு விடுங்கள். நான் அஞ்சலிக்கு அம்மாவாக மட்டும் இந்த வீட்டில் இருந்து கொள்கிறேன். 

எந்த ஒரு குற்ற உணர்வோடும் என்னிடம் வாழ வேண்டும் என்று கட்டாயம் உங்களுக்கு இல்லை” என்று தயக்கமாக ஆரம்பித்து, படபடவென்று பேசி முடித்து மூச்சு வாங்க அமர்ந்திருந்தாள் உமா பாரதி. 

அவளது பேச்சு முழுவதையும் கேட்டு அதிர்ந்து அமர்ந்திருந்தான் ஜீவானந்த். அவளுக்கு புரிய வைத்து விட வேண்டும் என்ற நோக்குடன் அவளை தன் மார்பில் அணைத்துக்கொண்டு, “உன்னை போல் தானடி நானும். 

திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்தாலும், தாலி கட்டியவுடன் உன்னை என் மனைவியாக நான் மனதார ஏற்று கொண்டு விட்டேன்.  

உன்னை மனைவியாக ஏற்றுக் கொண்டதால் தான், உனக்கு தொல்லை கொடுத்த உன் மாமனையும் அவன் பையனையும் அடித்தேன். இனி எப்பொழுதும் நீ கஷ்டமில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து தான், உனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தேன். 

அது மட்டும் அல்ல, உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் பார்க்கும் பெண்ணுடன் குடும்பம் நடத்துபவன் அல்ல உன் புருஷன். உன்னை மனதார மனைவியாக ஏற்றதால் தான் உன்னுடன் குடும்பம் நடத்தினேன்” என்று சொல்லி அவளை இறுக்கி அணைத்து உச்சியில் இதழ் பதித்தான். 

கூற்றில் அதிர்ந்து விழித்து, “அப்படி என்றால் உங்களுக்கு” என்று தயங்க,

“எனக்கு” 

“இல்லை. அன்று அப்படி நடந்ததால் தான் குற்றவுணர்வாக இருப்பதாக சொல்லி வீட்டிற்கு வரவில்லை என்று அம்மாவிடம் சொன்னீர்களே?” என்று அவனை பார்த்தாள். 

அவளின் நாடி பிடித்து ஆட்டி, “என் மக்கு பொண்டாட்டி…. உன் சம்மதம் இல்லாமல் உன்னிடம் அப்படி நடந்து கொண்டதுதான், எனக்கு குற்ற உணர்வாக இருந்தது. அதை தான் சொன்னேன்” என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து தன் முத்த பயணத்தை தொடங்கினான். 

தன் கணவன் தன்னை மனதார மனைவியாக ஏற்றுக் கொண்டதில் மகிழ்ந்த உமா பாரதி ஆசைக்கு இணங்கி, கணவனின் கைப்பாவையானாள். தன் மனைவியை முழுவதும் ஆட்க்கொண்டு, தன் மார்பில் அவளை சாய்ந்து துயில் கொண்டான் ஜீவானந்த். 

நன்கு உறங்கி முதலில் விழித்ததும் ஜீவானந்தம் தன் மனைவியின் துயில் கலையா வண்ணம் படுக்கையில் படுக்க வைத்து விட்டு எழுந்தான். அவன் எழுந்த சிறிது நேரத்திலேயே உமா பாரதியும் எழுந்து விட்டாள். தன் கணவனை தேட, சமையலறையில் தோ சத்தம் கேட்டது. 

தன்னை சரிசெய்து கொண்டு சமையலறை சென்று பார்த்தால், ஜீவானந்த் தோசை ஊற்றிக் கொண்டு இருந்தான். 

வேகமாக அவன் அருகே சென்று, “நீங்க ஏன் தோசை சுடுறீங்க. என்னை எழுப்ப வேண்டியது தானே? தள்ளுங்க” என்று சொல்லி அவன் கையில் இருந்த தோசை திருப்பியை வாங்கினாள். 

“ஏய்… முடிச்சிட்டேன். உனக்கும் பசிக்கும் அல்லவா? வா! இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று அவளுக்கும் வைத்து கொடுத்து விட்டு தானும் மனைவியை ஏக்கமாக பார்த்துக் கொண்டே சாப்பிட்டான். 

என்னங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என்று அவனின் முகத்தை பார்த்துக் கேட்டாள் உமா பாரதி. 

மனைவி கேட்டதும், அது ஒன்றும் இல்லை பாரதி. அஞ்சலிக்கு ஊட்டி விடுவாய் அல்வா. அது போல எனக்கும் ஊட்டி விடுறாயா? என்று ஏக்கமாக கேட்டான். 

அவன் கேட்டதும் சட்டென்று அவனுக்கு ஊட்டிவிட்டாள். அவள் ஊட்டியதும் மகிழ்ச்சியாக சாப்பிடுவதை கண்டதும் தான் அவள் உணர்ந்தாள், அவனும் தன்னைப் போல் தான் பாசத்திற்கு ஏங்கி இருக்கிறான் என்று. 

மகிழ்வாக உண்ட பிறகு, “நான் தோட்டத்துக்கு போயிட்டு அத்தையை அனுப்புகிறேன்” என்று சொல்லி கிளம்பினான். 

அவன் சென்றதும் வேகவேகமாக மதிய உணவை தயாரிக்க ஆரம்பித்தாள். அப்படியே மகிழ்வாக நாட்கள் கடந்தது. 

தந்தையை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்று மரகதத்திடம் பேசிக்கொண்டு இருக்க, அவரும் வார இறுதியில் போய் பார்த்து வருமாறு கூறினார். 

அதன்படி ஞாயிறு அன்று ஜீவானந்த் தன் மகள், மனைவியை அழைத்துக் கொண்டு புல்லட்டில் மாமனார் வீட்டிற்கு கிளம்பினான். 

முதல் முறையாக அவனுடன் புல்லட்டில் பயணிப்பது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பயணம் அப்படியே நீளாதா என்ற ஏக்கம் அவளுள் தோன்றியது. 

தனக்குள் தோன்றும் எண்ணத்தை நினைக்க, அவளின் முகத்தில் தானாக புன்னகை உதித்தது. 

புன்னகையுடன் வீட்டிற்கு வரும் மகளை கண்டு மகிழ்ந்த முத்துராமன், அதே மகிழ்ச்சியுடன் மருமகனை வரவேற்பு, பேத்தியின் கையை பிடித்து தன்னுடன் அழைத்துக் கொண்டார். 

சித்தி அல்லிராணியும் அவர்களை அன்புடன் வரவேற்றார். அதில் அதிசயம் அடைந்த உமா, தன் தந்தையை பார்க்க, அவரும் புன்னகையுடன் அல்லிராணியின் மாற்றத்தை பற்றி கூற, அவரின் கூற்றில் ஆச்சரியமாக  விரிந்தன உமா பாரதி கண்கள்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

2 thoughts on “சித்தி – 20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *