வரும் வழியில் பார்ப்பவர்கள் அனைவருக்கும் குமாரசாமியின் மகனை விசாரித்து விட்டும், அவரின் இரண்டாவது மனைவியை வசைபாடி விட்டும், கொசுறாக அஞ்சலியை பத்திரமாக பார்த்துக்கோ. உன் இரண்டாவது மனைவி உமா பாரதியும் பின்னாளில் இப்படி மாறிவிட போகிறாள் என்றும் போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றார்கள்.
அதை பற்றியே யோசித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவனின் மனம் முழுவதும், என் பாரதி அப்படிப்பட்டவள் அல்ல என்ற எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருக்க, உமா பாரதி சாப்பிட கூப்பிட்டது கூட கேட்காமல் தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டான்.
தான் அழைத்ததை காதில் வாங்காமல் சென்ற கணவனை யோசனையாக பார்த்தாள் உமா.
அஞ்சலியை படுக்கையில் படுக்க வைத்து விட்டு, கணவனின் அறைக்கு சென்று கதவை திறக்க முயன்றாள். கதவு உள்புறம் தாழ்ப்பாள் போட்டு இருக்க, யோசனையுடனே கதவை தட்டினாள்.
கதவு திறக்காமல் இருக்க, சிறிது நேரம் காத்திருந்து விட்டு, கதவு திறக்கப்படாததால், ஹாலில் முன்பு படுக்கும் இடத்தில் படுத்துக் கொண்டாள். சமீபகாலமாக கணவனின் கைவளைவில் உறங்கி பழகியதால் தூக்கம் வராமல் வெகு நேரம் கழித்து தன்னையும் மறந்து தூங்கினாள்.
மறுநாள் வழக்கம் போல் விடிய, ஜீவானந்த் சிறுவனை தேடி கிளம்பிவிட்டான். நாட்கள் வாரமாக திருச்சிக்கு அருகில் போலீஸ் சிறுவனை கண்டுபிடித்தனர். குமாரசாமியுடன் சென்று சிறுவனை அழைத்து வந்து, இனிமேல் கவனமாக பார்த்துக் கொள்ள அறிவுறுத்தினான்.
ஒரு வாரமாக தோட்டத்தையும் வயலையும் சரியாக கவனிக்காமல் இருந்ததால், வீட்டில் ஒரு ஜீவன் அவனுக்காக காத்திருப்பதை மறந்து, நேராக வயலுக்கு சென்று வேலையை தொடங்கினான்.
ஒரு வாரமாக கணவனின் பாராமுகமும், அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஜாடை பேச்சும் மனதை அழுத்த, உணர்வுகள் தொலைத்து வெறும் ஜடம் போல வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தாள் உமா பாரதி.
இரண்டு நாள் கழித்து அஞ்சலி பள்ளிக்கூடம் சென்ற பிறகு, மரகதத்திடம் ஆண்டாள் கோயிலுக்கு சென்று வருவதாக கூறி கிளம்பிவிட்டாள். மரகதமும் ஊரார் பேச்சுகளால் உமா வாட்டமாக இருப்பதை அறிந்து, கோயிலுக்கு சென்று வந்தால் அவளுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று நினைத்து போய் வர சொல்லிவிட்டார்.
ஜீவானந்துக்கும் ஃபோன் செய்து உமா ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுள்ளாள் என்று தெரிவித்து விட்டார். அவனும் உரம் வாங்க சிவகாசி வந்துள்தாகவும், வேலை முடிந்ததும் அவனே கோயிலுக்குச் சென்று பாரதியை அழைத்து வருவதாகவும் சொல்லிவிட்டான்.
பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கடைக்கு செல்லும் போது, அங்கு சரசு யாருக்காகவோ காத்திருப்பதை கவனித்து, அவரிடம் பேசலாம் என்று செல்ல, அப்பொழுது வந்த பஸ்ஸில் இருந்து இறங்கி வந்தாள் உமா பாரதி.
ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருப்பதாக அத்தை சொன்ன தன் மனைவியை சிவகாசியில். பார்த்ததில் அதிர்ந்தான் ஜீவானந்த்.
பஸ்ஸில் இருந்து இறங்கிய உமா வேகமாக சரசுவிடம் நெருங்கி பேச, சரசு உமாவிடம் ஏதோ கோவமாக பேசுவது போல் தெரிந்தது. பின்னர் இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
அவர்களை பின்தொடர்ந்தான் ஜீவானந்த். வழி முழுவதும் சரசு உமாவை திட்டிக்கொண்டே வருவது போல் இருந்தது. அவர்கள் அரசு மருத்துவமனைக்குள் சென்றதில் சற்று பதட்டமானான்.
மேலும் அவர்களை தொடர, அவர்கள் சென்ற பிரிவை கண்டு அதிர்ச்சியா? ஆச்சரியமா? ஆனந்தமா? என்று சொல்ல முடியாத உணர்வுக்கு உட்பட்டான்.
சிறிது நேர காத்திருப்புக்கு பின் உள்ளே சென்று விட்டார்கள் இருவரும். அவர்கள் வெளியே வரும் வரையில் பதட்டமாகவே நின்றிருந்தான் ஜீவானந்த்.
நேரம் கடக்க அவர்கள் வெளியே வரும் போது மறைந்து கொண்டு, அவர்கள் அங்கிருந்து நகன்றதும் வேகமாக மருத்துவரைப் பார்க்க உள்ளே சென்றான்.
அனுமதி இன்றி உள்ளே வந்த ஜீவானந்தை, “இது பெண்கள் பிரிவு. காரணம் இல்லாமல் இங்கு வரகூடாது” என்று தடுத்தார் செவிலி.
அவரிடம் சற்று முன் வந்தது தன் மனைவி என்றும், அவளின் உடல் நிலை பற்றி மருத்துவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறி, மருத்துவரை காணச் சென்றான்.
மருத்துவர் சொன்ன செய்தியில் மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து, தன் மனைவியின் மேல் கோவம் கொண்டு, வேகமாக அவளைத் தேடிச் சென்றான்.
ஒரு மரத்தடியில் சரசுவுடன் அமர்ந்திருந்த உமா பாரதி, தங்களை நோக்கி வரும் கணவனைக் கண்டு அதிர்ந்து எழுந்து நின்றாள். அழுத்தமாக பார்த்த வண்ணம் அவளிடம் நெருங்கினான் ஜீவானந்த்.
அவனின் அழுத்தமான பார்வையை வைத்தே அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது என்று உணர்ந்த பெண்கள் இருவரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
“என்ன சரசு அக்கா… இந்த பக்கம்?” என்று கேள்வி சரசுவை பார்த்து இருந்தாலும் பார்வை தன் மனைவியின் மீது அழுத்தமாக படிந்திருந்தது.
அவர் பதில் கூற முன், “சரி வாங்க. உங்களை பஸ் ஏத்தி விடுகிறேன்” என்று முன்னால் நடக்க ஆரம்பித்து விட்டான்.
இருவரும் வேறு வழி இன்றி அவனின் பின்னால் நடக்க, பேருந்து நிலையம் அருகில் இருந்த கடையில் இருவருக்கும் ஜூஸ் வாங்கி கொடுத்துவிட்டு, அவர்கள் குடித்ததும் சரசுவை, அவர்கள் ஊருக்கு பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு, சரசு கிளம்பியதும் தன் புல்லட் வண்டியை ஸ்டார்ட் செய்து அப்படியே எதுவும் பேசாமல் நின்றான்.
உமா பாரதியும் எதுவும் கூறாமல் மெதுவாக அவனது வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் வண்டியை தங்களது ஊர் நோக்கி செலுத்தினால் ஜீவானந்த்.
மிதமான வேகத்தில், பள்ளம் மேடு பார்த்து மெதுவாக ஓட்டிக்கொண்டு தங்களது தோட்ட வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்தினான்.
கணவனிடம் தன் நிலையை பற்றி எப்படி பேசுவது என்று புரியாமல் குழம்பிக் கொண்டே வந்து கொண்டிருந்தவள் வண்டி நின்றதும் இறங்கி நிமிர்ந்து பார்க்க, தாங்கள் வேறு எங்கோ வந்து இருப்பதை உணர்ந்து குழப்பமாக அவனைப் பார்த்தாள்.
ஜீவானந்த் எதுவும் பேசாமல் தன்னிடம் இருந்த சாவியை வைத்து கதவைத் திறந்து உள்ளே சென்றான். அவனின் பின்னாடியே சாவி கொடுத்த பொம்மை போல் உள்ளே சென்றாள் உமா பாரதி.
உமா பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை. இது யார் வீடு என்று நினைத்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க, நான்கு பிளாஸ்டிக் சேர்கள். ஒரு கட்டில்மெத்தை. ஒரு ஓரத்தில் கழிவறை. மறுபக்கம் திண்டில் அடுப்பும் சில பாத்திரங்களும் என்று ஒருவர் தனியாக வாழ்வதற்கு உரிய இடம் போல் இருந்தது.
அவளின் குழப்பமான முகத்தை பார்த்த ஜீவானந்த், “இது நம் தோட்ட வீடு” என்றான். அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது இங்கு தான் வந்து தங்கி இருக்கின்றான் என்று.
அங்கிருந்த கட்டிலில் அவளை உட்கார வைத்து அவளின் எதிரில் ஒரு சேரை எடுத்து போட்டு அதில் அமர்ந்து, மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு, அழுத்தமாக அவளை பார்த்தான்.
அவளோ அவனின் பார்வையை தாங்க முடியாமல், அங்கும் இங்கும் வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு, அவனின் பார்வை சற்றும் மாறாததை உணர்ந்து, தலை குனிந்து, கை விரல் நகங்களை ஆராய்ந்து கொண்டு இருந்தாள்.
தன்னை பார்ப்பதை தவிர்ப்பதற்காக மனைவி செய்யும் செய்கையில் உதட்டினுள் புன்னகை உதித்தது.
அதே சமயம் இன்று அவள் மருத்துவமனையில் செய்ய இருந்த செயலில் கோவம் உண்டாக, தொண்டையை செருமி, “பாரதி…” என்று அழுத்தமாக அழைத்தான் ஜீவானந்த்.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
Nice epi👍
Interesting