“பாரதி” என்ற ஜீவானந்தின் அழுத்தமான அழைப்பில் திடுக்கிட்டு எழுந்து அவனைப் பார்த்தாள் உமா பாரதி.
அவளின் திடுக்கிட்ட பார்வையில், “ஏன் இப்ப பயப்படுற? நான் உன் புருஷன் தானே!” என்று சற்று மிரட்டலாகவே கேட்டு அவளின் கையைப் பிடித்து கட்டிலில் அமர வைத்தான்.
அவளும் ‘ஆமாம்’ என்று தலையாட்டி விழி விரித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சரி… இப்பவாவது சொல்லப் போகிறாயா? இல்லையா?” என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் தயங்கியபடியே, “அது…” என்று இழுக்க
“எதுக்கு ஹாஸ்பிடல் போன?”
எப்படி சொல்வது என்று தெரியாமல், அவனின் கைகளுக்குள் இருந்த தன் கையை உருவி, அவனின் கையைப் பிடித்து அவளின் வயிற்றில் வைத்து அவனின் முகத்தை ஏக்கமாகப் பார்த்தாள்.
புடவைக்கு மேல் அவனின் கையை வைத்து சிறிது அழுத்தி, “நான் குழந்தை உண்டாகி இருக்கிறேன்” என்று அவனின் முகம் பார்த்து சொல்லிவிட்டு, தலையை குனிந்து கொண்டாள்.
“ஓ…” என்று சொல்லிவிட்டு, “ஆமாம்.. இது என் குழந்தை தானே?”
அவன் அப்படி கேட்டதும் சட்டென்று நிமிர்ந்து, கண்களில் நீருடன் அவனைப் பார்க்க, அவனின் உதட்டுக்குள் இருந்த சிரிப்பை கண்டு கொண்டாள். பின்னர் லேசாக முறைத்தாள்.
“என்னடி முறைக்கிற?” என்று அவளைப் பார்த்து சொல்லிக் கொண்டே, அவனின் கையை அவளின் புடவையை விலக்கிவிட்டு வெறும் வயிற்றில் மேல் வைத்து சிறிது அழுத்தினான் .
அதில் கூச்சமடைந்த உமா பாரதி, அவனின் கையை பிடித்துக் கொண்டு, “பின்ன இப்படி கேட்டீர்கள் என்றால், முறைக்காம என்ன பண்றதாம்?” என்று ஒரு வழியாக சொல்லி முடித்தாள்.
“ஓ…. நாங்க கேட்ட உடனே உங்களுக்கு கோவம் வருதோ? பின்ன என்கிட்ட ஏன் முதலிலேயே சொல்லல”
அவன் அப்படி கேட்டதும் அவளது மனம் பின்னோக்கி ஓடியது.
அன்று காலையில் எழும்பொழுதே லேசாக தலையை சுற்றியது. அப்படியே சமாளித்து எழுந்து அமர்ந்து குளியல் அறைக்குள் சென்றாள். குமட்டுவது போல் இருக்க, என்ன என்று யோசிப்பதற்குள் வாந்தியும் எடுத்து விட்டாள்.
மரகதமும் நல்ல தூக்கத்தில் இருந்ததால், அவருக்கும் அவள் வாந்தி எடுத்த சத்தம் கேட்கவில்லை.
பின்னர் யோசிக்க அவளுக்கு நாட்கள் தள்ளிப் போயிருப்பது தெரிந்தது. ஒருவேளை குழந்தையாக இருக்குமோ என்று நினைத்து உள்ளம் மகிழ்ந்தாலும், பரிசோதிக்காமல் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்று நினைத்துக் கொண்டாள்.
இருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றியது. முதலில் கணவனிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு வீட்டிற்குள் வர, ஜீவானந்த் அவசர அவசரமாக சட்டையை அணிந்து கொண்டு வெளியே சென்றான்.
அன்றுதான் குமாரசாமியின் மகன் காணாமல் போனது. அன்றிலிருந்து குளிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே வீட்டிற்கு வந்தான் ஜீவானந்த்.
நேற்று அவன் வந்ததும் நேராக அவனது அறைக்குள் சென்று விட்டான். அவன் குடிப்பதற்கு காபியை எடுத்துக்கொண்டு அவனது அறைக்குள் சென்றாள். அப்பொழுது அவன் யாரிடமோ போன் பேசிக்கொண்டு இருந்தான்.
அந்தப் பக்கம் என்ன சொன்னதோ அவளுக்கு தெரியவில்லை. ஆனால் இவனோ, “என் மகள் அஞ்சலியைத் தவிர எனக்கு யாரும் முக்கியமில்லை. அவளைத் தவிர வேறு எந்த குழந்தையும் எனக்கு அவசியம் இல்லை. என்னைப் பற்றி நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம். என் பொண்ணை நான் நல்லா பார்த்துக்குவேன்” என்று கோபமாக சொல்லிவிட்டு வைத்து விட்டான்.
ஒரு வார காலமாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் அனைவரும் ஜாடை மாடையாக பேசியதும், குமாரசாமியின் மகன் காணாமல் போனதிலிருந்து ஜீவானந்தின் பாராமுகமும் அவளை பலவாறு யோசிக்க வைத்தது.
எல்லோரும் சொல்வது போல தனக்கென்று ஒரு குழந்தை வந்து விட்டால், அஞ்சலியை தான் கவனித்துக் கொள்ள மாட்டோம் என்று எல்லோரும் சொல்லுவதை தன் கணவனும் நினைக்கிறார் போல் என்று நினைத்து, அவளே முடிவு எடுத்து விட்டாள்.
அவள் வயிற்றில் இருப்பது குழந்தை என்றால் அதை பெற்றெடுக்காமலேயே இருந்து விடலாம் என்று. அதை நினைக்கும் பொழுது அவளது மனது அவ்வளவு பாரமானது. அவளின் வயிற்றை தடவிக் கொண்டே ஒரு குழந்தையை கருவிலேயே அழிக்கத் துணிந்த தன்னை நினைத்து மிகவும் வருந்தினாள்.
அன்று ஒரு நாள் மட்டுமே தலை சுற்றலும், வாந்தியும் இருந்தது. ஆகையால் தன் வயிற்றில் இருப்பது குழந்தையா என்ற சந்தேகமும் இருந்தது. கடவுளிடம் தயவு செய்து இது குழந்தையாக இருக்கக் கூடாது என்று தன் வயிற்றை தடவி வேண்டிக் கொண்டே இருந்தாள்.
சாயங்காலம் சரசுவுக்கு போன் செய்து நாளை சிவகாசி வரை துணைக்கு வரும்படி கேட்டுக் கொண்டாள். அவரும் எதற்கு என்று கேட்க நாட்கள் தள்ளி இருப்பதாக கூறினாள்.
அவளும் மிகவும் மகிழ்ந்து, “ஆனந்த் தம்பி கிட்ட சொல்லிட்டியா?” என்று கேட்க,
“இல்லை அக்கா. முதலில் மருத்துவரிடம் காண்பித்து, உண்மையில் குழந்தையா என்று பரிசோதித்துக் கொள்ளலாம். பின்னர் அவரிடம் தெரிவித்துக் கொள்ளலாம் என்றாள்.
அவரோ “மெடிக்கல் ஷாப்பிலேயே கிட் கிடைக்குமே, அதை வாங்கி பரிசோதனை செய்து கொள்ளேன்” என்று கூற, எப்படியும் அதை வாங்கி வர நான் அவரிடம் தான் சொல்ல வேண்டும். வேண்டாம் முதலில் டாக்டரை பாப்போம். அவர்கள் குழந்தை தான் என்று உறுதியாக சொன்னால், அதன் பிறகு அவரிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நீ அதுவரை நீங்கள் அப்பாவிடமும் எதுவும் சொல்லாதீர்கள். நாளை சொல்லிவிடலாம்” என்று கூறி விட்டாள்.
குழந்தை என்றால் கலைத்து விடலாம் என்று முடிவெடுத்ததில் இருந்து அவள் பட்டபாடு அப்பப்பப்பா. வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
தன் கேள்விக்கு பதில் கூறாமல். ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த மனைவியின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை பார்த்துக் கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தான் ஜீவானந்த்.
இறுதியில் அவளின் முகம் இறுக்கமாக மாற அவளின் தோளை தொட்டு, “கேள்வி கேட்டா பதில் சொல்லணும்” என்று அவள் சிந்தனையை கலைத்தான்.
“அது…” என்று மீண்டும் தயங்க
“ஏய்… சும்மா அது இதுன்னு இழுத்துக்கிட்டே இருக்காத” என்று கோபமாக “ஆரம்பித்து உன் வயிற்றில் நம் குழந்தை உருவானதை என்னிடம் சொல்ல வேண்டும் என்று உனக்கு ஏண்டி தோணவில்லை” என்றான் ஆதங்கமாக.
“எதேர்ச்சையாக நான் உங்களை அங்கு பார்த்தேன். நீங்க ஹாஸ்பிடலுக்கு உள்ள போனதும் ஏதோ உடம்புக்கு முடியவில்லை. ஏன்? என்னிடம் சொல்லவில்லை என்ற கோபத்தில் தான் உன்னை பின் தொடர்ந்தேன்.
ஆனால் நீ லேடி டாக்டர் கிட்ட போனதும் கொஞ்சம் சந்தேகம் வந்தது. என்னிடம் சொல்லாமல் தனியாக வந்ததில் எனக்கு தெரியாமல் ஏதோ செய்வதாக தோன்றியது.
அதனால் தான் நான் மறைந்திருந்து, நீங்கள் சென்ற பிறகு டாக்டர்கிட்ட போய் கேட்டேன். அவர்கள் முதலில் என்னிடம் சொல்ல மறுத்தாலும் நான் தான் உன் கணவன் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு தான் சொன்னாங்க.
நீ குழந்தை உண்டாகி இருப்பதாகவும், குழந்தை இப்பொழுது வேண்டாம் என்று கலைப்பதாக வந்திருப்பதற்காகவும் சொன்னாங்க”
மருத்துவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்று விட்டான் ஜீவானந்த்.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
Nice epi👍
Interesting