Skip to content
Home » சித்தி – 24

சித்தி – 24

      ஜீவானந்தின் அதிர்ந்த முகத்தை கண்டு, “உங்களுக்கு இந்தக் குழந்தையை கலைப்பதில் விருப்பம் இல்லையா? என்று கேட்டார் மருத்துவர். 

அவனும் ‘ஆமாம்’ என்று தலையாட்டி விட்டு, “நீங்கள் எதுவும் அவளுக்கு மாத்திரை…” என்று தயங்கி, “என் குழந்தையை கலைப்பதற்கு மாத்திரை எதுவும் கொடுத்து விட்டீர்களா?” என்று கவலையாக கேட்டான். 

உடனே மருத்துவர், “அப்படி எல்லாம் நினைத்தவுடன் கருக்கலைப்பு செய்ய முடியாது. நீங்கள் பயப்படாதீர்கள். கணவனின் அனுமதியுடன் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி, உங்களை அழைத்து வரச் சொல்லி இருக்கிறேன். 

இப்போதைக்கு சத்து மாத்திரை தான் கொடுத்து அனுப்பி இருக்கிறேன்.

எதற்காக குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தாள் என்று அவளிடம் பேசி தெரிந்து கொண்டு அவளின் குழப்பத்தை போக்குங்கள்” என்று அறிவுரை கூறி அனுப்பினார் மருத்துவர்.

“இப்ப சொல்லு. ஏன் நம் குழந்தையை கலைக்க முடிவு செய்தாய்?” என்று மீண்டும் அவளிடம் கேள்வி கேட்டு அவள் பதிலுக்காக அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். 

ஆரம்பத்தில் கோபமாக பேச ஆரம்பித்து கடைசியில் கவலையாக முடித்ததில் வருந்திய உமா பாரதி, அவன் பேச பேச அவள் கண்களில் தோன்றிய கண்ணீர் வடிந்த படியே இருக்க, “நீங்கள் அன்று ஃபோனில் யாரிடமும் எனக்கு அஞ்சலி மட்டும் போதும் என்று பேசினீர்கள் அல்லவா?” என்று கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவனிடம் கேட்டாள். 

அவனும் யோசனையுடனே ‘ஆமாம்’ என்று தலையாட்டி “அதுக்கு”

“அதான். ஒரு வேளை என் வயிற்றில் இருப்பது குழந்தையாக இருந்தால், அந்த குழந்தை பிறந்ததும், ராமசாமியின் இரண்டாவது மனைவி குழந்தையை கவனிக்காதது போல் அஞ்சலியை நானும் கவனிக்க மாட்டேனோ? என்று நீங்களும் நினைக்கிறீர்களோ? என்று குழந்தையை கலைத்து விடலாம் என்று முடிவு செய்து, மருத்துவமனைக்கு சென்றேன்” என்று கண்களில் கண்ணீர் வடிய கூறினாள் உமா பாரதி. 

அவளின் பேச்சைக் கேட்டு அவளை அடிக்கும் அளவுக்கு கோபம் கொண்ட ஜீவானந்த், அவளின் கண்ணீரைக் கண்டு தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, “ஏன்டி…  இப்படி எல்லாம் யோசிக்கிற. உன்னை பற்றி அப்படித்தான் என் மனதில் உள்ளதாக நீ நினைத்துக் கொண்டு என்னுடன் வாழ்கிறாயா? என்று விரக்தியாக கேட்டான். 

அவனின் பேச்சில் இருந்த விரக்தியை கண்டு, “அச்சோ.. அப்படி இல்லைங்க.   அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் என்னிடம் பேசும் பொது, நீயும் ராமசாமி பொண்டாட்டி போல உனக்கு புள்ள பொறந்தா அஞ்சலியை கொடுமைப் படுத்தாத, என்றுதான் சொன்னார்கள். 

அது மட்டும் அல்லாமல் நீங்களும் சிறுவன் காணாமல் போன நாளிலிருந்து என்னிடம் சரியாக பேசவே இல்லை.

மரகதம் அம்மா மட்டும், நீ எப்படி பட்டவள் என்று எங்களுக்கு தெரியும் ஆகையால் யார் என்ன சொன்னாலும் அதையெல்லாம் மனதில் வைத்து யோசித்துக் கொண்டிருக்காதே என்று எனக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

நீங்கள் மட்டும் என்னுடன் சாதாரணமாக பேசி இருந்தீர்கள் என்றால், நான் நிச்சியமாக இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டேன்.

முதலில் லேசாக தலைசுற்றி வாந்தி எடுத்தேன். அப்பொழுதே உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்து தான் உள்ளே வந்தேன். ஆனால் நீங்கள் அவசரமாக குமாரசாமி அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டீர்கள். 

உங்களிடம் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று, அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் உங்களிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தேன் தெரியுமா?

ஆனால் நீங்கள் என் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க மாட்டீர்கள். இத்தனை நாளில் ஒருமுறையாவது என் முகத்தை பார்த்து இருந்தீர்கள் என்றால் கூட என் தவிப்பை நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.

அன்று நீங்கள் ஃபோனில் பேசிய பிறகு தான்,  நான்  இப்படி  ஒரு முடிவெடுத்தேன். 

உங்களிடம் சொல்லாமல், சரசு அக்காவிடம் சொல்லும் பொழுது என் மனது எப்படி தவித்தது தெரியுமா? அதை உங்களுக்கு என்னால் புரிய வைக்க முடியாது” என்று உடைந்து அழ ஆரம்பித்து விட்டாள். 

அவளை இறுக அனைத்து, அவளின் முதுகை தடவி, “சாரி டி. என் மேல் தான் தவறு.  சின்ன பையண்டி. காணும் என்றதும் மனது தவித்தது. குமாரசாமி அண்ணனை பார்க்கும் பொழுது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. 

எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று ஒரே அலைச்சல். உன்னிடம் பேசியது போல் தான் என்னிடமும் எல்லோரும் அறிவுரை என்ற பெயரில் ஏதேதோ சொன்னாங்க. 

அஞ்சலியை நீ கவனித்துக் கொள்ள மாட்டாய் என்று. எனக்கு உன் மேல் அப்படி பட்ட எண்ணம் சிறிதளவு கூட இல்லை. ஆனால் அவர்கள் பேசும் பொது, ஏற்கனவே பிள்ளையை காணோம் என்று தேடி அலைந்து வரும் பொது, இவர்களும் இப்படி பேசும்பொழுது அவர்களுக்கு உன்னை பற்றி சொல்லி புரிய வைக்கவும் விருப்பமில்லை. அப்படி சொல்வதை விட, தெம்பில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

எப்படியாவது பையனை கண்டுபிடிக்க வேண்டும். அடுத்து என்ன செய்ய, அடுத்து எங்கே தேட என்ற யோசனை மட்டும் தான் என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது.

நிச்சயமாக அவர்கள் உன்னிடமும் இப்படி பேசி இருப்பார்கள், அதனால் நீ கவலையாக இருப்பாய் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லைடி. அப்படி இருந்தால் உன்னை இப்படி விட்டிருக்க மாட்டேனே!” என்று அவளை மேலும் இறுக்கமாக அணைத்தான். 

அவனின் அணைப்பிலும் அவனின் விளக்கத்திலும் மனம் மகிழ்ந்த உமா பாரதி அவனின்  அணைப்புக்கு இணங்கி அவளும் அவனை அணைத்து  அவனது மார்பில் இதழ் பதித்தாள். 

மனைவியின் இதழ் ஒற்றலில் மகிழ்ந்த ஜீவானந்த அவளின் கழுத்தில் முகம் புதைத்து தன் முத்த ஊர்வலத்தை தொடங்க, தேடலை ஆரம்பித்து கூடலில் முடித்தான்.

தன் மனைவியை மார்பில் சாய்த்து, அவளின் தலையை கோதி மீண்டும் அவளின் உச்சந்தலையில் இதழ் பதித்து, “எதுவா என்றாலும் என்னிடம் சொல்லு டி. நீயே மனதிற்குள் போட்டு குழப்பி ஏதாவது ஏடாகூடமாக செய்யாதே!” என்று மென்மையாக கூறி அவளை தன்னிடம் இருந்து விலக்கி விட்டு எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான். 

அவன் வந்ததும் அவளும் தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றாள். குளித்து முடித்து வெளியே வர அவளுக்கு தட்டில் உணவை வைத்து கொடுத்தான். 

அவள் காலையில் சமைத்து வைத்து விட்டு சென்ற உணவு தான் இது. ‘எப்படி’ என்று அவனைப் பார்க்க, “அத்தை கிட்ட ஃபோன் பண்ணி சாப்பாடு கொடுத்து விட சொன்னேன். இருவருக்கும்” என்று சாப்பிட ஆரம்பித்தான். 

“அச்சோ.. அம்மா கிட்ட நான் சொல்லவே இல்லையே!” என்று கவலையாக சொல்ல, 

“முதலில் சாப்பிடு. இருவரும்  நேராகவே சென்று சொல்லலாம்” என்றான்.

அதன்படி தோட்ட வீட்டிலேயே உணவை முடித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். 

இருவரும் சேர்ந்து வருவதை கண்ட மரகதம், இத்தனை நாள் சோகமாக இருந்த உமா பாரதியின் சோர்ந்த முகத்தில் தெரிந்த பிரகாசத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். 

வீட்டுக்குள் வந்த ஜீவானந்த் தன் மனைவியின் கையைப் பிடித்து தன் அத்தையின் காலில் சேர்ந்து விழுந்து, “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்கள் அத்தை” என்று கூறினான். 

அவரும், “நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக, எந்த பிணக்கும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வாழ்த்தி விட்டு இருவரையும் தூக்கினார். 

அவரிடம் “உங்கள் மகள், என் பாரதி மீண்டும் குழந்தை உண்டாகி இருக்கிறாள்” என்று சொன்னான் ஜீவானந்த்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

4 thoughts on “சித்தி – 24”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *