Skip to content
Home » சித்தி – 25 இறுதி அத்தியாயம்

சித்தி – 25 இறுதி அத்தியாயம்

       ஜீவானந்த் சொன்னதும் மகிழ்ந்த மரகதம் இருவரையும் அணைத்து, உமா பாரதியின் நெற்றியில் முத்தம் கொடுத்து, “ரொம்ப சந்தோசம் உமா” என்று சொல்லி, இருவரையும் அழைத்துக் கொண்டு பூஜை அறை சென்று, இருவருக்கும் திருநீர் பூசி விட்டு, அந்த கடவுள் உங்களுடன் எப்பொழுதும் இருப்பார்” என்று ஆசீர் வழங்கினார். 

மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு கிளம்பிய ஜீவானந்தை, மரகதம், “இப்பொழுது தானே  வீட்டிற்கு வந்தாய். சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு சாயங்காலமாக போ” என்று கூறினார். 

அவனும் புன்னகையுடன் நல்ல பிள்ளையாக மனைவியை அழைத்துக் கொண்டு தனது அறைக்குள் சென்றான்.

அப்படியே அவர்கள் வாழ்க்கை இனிமையாக கடக்க, அவளின் வயிறு லேசாக வெளியே தெரிய ஆரம்பித்தது. அதன் பிறகு தான் ஊரில் உள்ளவர்களுக்கு அவள் குழந்தை உண்டாகி இருப்பது தெரிய வர, மீண்டும் சிலர் அவளின் மனது புண்படும்படி பேச ஆரம்பித்தார்கள்.

அதில் உமா பாரதி சற்று கலக்கமடைய, அவளை பார்க்க வந்த முத்துராமனும் அல்லிராணியும் அவளின் சோர்ந்த முகத்தை கண்டு வருந்தினர்.

அவளின் முகத்தில் இருந்த கலக்கத்தின் காரணம் தெரிந்த அல்லிராணி, “நீ ஏன் கவலைப்படுகிறாய். இவர்கள் இப்படித்தான் ஏதாவது ஒன்று பேசிக்கொண்டே இருப்பார்கள். அதை நினைத்து நீ உன்னை வருத்திக் கொள்ளாதே. நிச்சயம் நீ அவர்கள் சொல்லுவது போல் எதுவும் நட்கபோவது இல்லையே” என்று ஆறுதல் படுத்திவிட்டு சென்றார்கள். 

அல்லிராணியே இப்படி கூறுவதில் அகம் மகிழ்ந்தார் மரகதம். ஜீவானந்திடம் அக்கம் பக்கம் உள்ளவர்கள் பேசும் பேச்சில்  மனம் வருந்துகிறாள் உமா பாரதி என்று கவலையாக சொல்லிக் கொண்டு இருந்தார். 

பெரியவர்கள் அனைவரும் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த அஞ்சலி, உமா பாரதியின் அருகில் சென்று “அம்மா” என்று அவளை அணைத்துக் கொண்டாள். 

“எனக்கு தம்பி பாப்பா தான் வேண்டும்” என்று உமா பாரதியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு, “என் பிரண்டு சுலோ வீட்ல தம்பி பாப்பா இருக்குதும்மா. நான் போய் தூக்குனா, அவங்க தூக்கவே விட மாட்டேங்கிறாங்க. கீழ போட்டுடுவேன்னு தம்பி பாப்பாவ என்கிட்ட தரவே மாட்டேங்கிறாங்க. 

இப்ப நம்ம வீட்டிலயும் இப்போ தம்பி பாப்பா வர போகுது இல்லம்மா. நான் நல்லா தூக்குவேன்” என்று வரப்போகும் புதிய உறவை அன்புடன் வரவேற்க காத்திருந்தாள் அஞ்சலி. 

அவளின் பேச்சைக் கேட்டு அகம் குளிர்ந்த உமா பாரதி தம்பி பாப்பாவ  எப்ப வேணாலும் தூக்கலாம். நீ தான் அவனை வளர்க்க போற” என்று அவளிடம் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொண்டு, தன் கவலைகளை மறக்க ஆரம்பித்தாள். 

நாட்கள் கடக்க ஏழாம் மாதத்தில் வளைகாப்பு செய்ய வேண்டும் என்று கேட்ட முத்துராமனிடம், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி மறுத்து விட்டான்.

உமா பாரதியை எங்கும் அனுப்ப மாட்டேன். என்றும் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான். மரகதமும் அவனின் செயலில் சிரித்துக்கொண்டே, “சரி அப்படி என்றால் ஒன்பதாம் மாதம் வைத்துக் கொள்ளலாம்” என்று முத்துராமனிடம் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். 

ஒன்பதாம் மாத துவக்கத்தில் வளைகாப்பு பண்ணலாம் மீண்டும் கேட்டார் முத்துராமன். அப்போதும் என் மனைவிக்கு இங்கேயே  பிரசவம் பார்த்துக் கொள்வேன் என்று அடம் பிடித்தான்.

கணவனின் பிடிவாதத்தை உணர்ந்த உமா பாரதி தந்தையிடம் தான் இங்கே இருந்து கொள்கிறேன் என்று கேட்டாள்.

அங்கு இருந்தால் தானே உன்னை நன்கு கவனித்துக் கொள்ள முடியும் என்று கூறிய அல்லிராணியிடம், நீங்களும் அப்பாவும் இங்கேயே தங்கி இருந்து என்னை கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாள். 

முதலில் மறுத்த முத்துராமனும் அல்லிராணியும், ஜீவானந்தின் பிடிவாதத்தை கண்டு இறங்கி வந்தார்கள். வளைகாப்பு முடிந்ததும் ஒரு நாள் மட்டுமாவது அழைப்பைச் சென்று, மறுநாள் இங்கு அழைத்து வந்துவிடலாம் என்று சொல்ல, அரை மனதாக ஒத்துக் கொண்டான் ஜீவானந்த். 

அதன்படி அடுத்த இரண்டு நாட்களிலேயே வளைகாப்பு என்று முடிவு செய்து அக்கம் பக்கம் உள்ளவர்களையும் சொந்தம் பந்தம் அனைத்தையும் அழைத்து மிகவும் சிறப்பாக வளைகாப்பை நடத்தினார் முத்துராமன். 

வளைகாப்பு முடிந்ததும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். மறுநாள் காலை விடியும் பொழுதே வந்துவிட்டான் ஜீவானந்த். 

அவனின் செயலில் முத்துராமன் சிரித்துக் கொண்டு, “என்ன மாப்பிள்ளை? கோழி கூவும் முன்னாடியே வந்துட்டீங்க!” என்று கிண்டல் செய்தார். 

அவனும் சிரித்துக்கொண்டே, காதலாக மனைவியை பார்த்தான். பின்னர் காலை உணவை முடித்துவிட்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்து விட்டான்.

மருத்துவர் சொன்ன நாளில் தன் அன்னையை அதிகம் சிரமப்படுத்தாமல் பிறந்து விட்டான் ஜீவானந்த் உமா பாரதியின் அழகான அன்பான மகன்.  

மூன்று நாள் கழித்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். வீட்டிற்கு வந்ததிலிருந்து உமா பாரதியையும் குழந்தையையும் தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள் மரகதமும் ஜீவானந்தம். 

இவர்கள் இருவருக்கும் போட்டியாக, கொஞ்சமும் குறையாமல் அஞ்சலியும் என் தம்பி என் தம்பி என்று கொஞ்சிக் கொண்டு திரிந்தாள். 

இப்படியே நாட்கள் அழகாக நகர ஒரு மாதம் கழித்து  குழந்தைக்கு “பரத்” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். மூன்று மாதம் கழித்து  அல்லிராணியும் முத்துராமனும் அவர்களது வீட்டிற்கு சென்று விட, வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் உமா பாரதி. 

எத்தனை வேலைகள் இருந்தாலும், அஞ்சலியை கிளப்பி பள்ளிக்கு அனுப்புவது, உணவு ஊட்டுவது என்று அனைத்தையும் உமா பாரதி தான் செய்தாள். 

அஞ்சலியும் அம்மா… அம்மா… என்று எதற்கெடுத்தாலும் உமாவையே நாடினாள். சித்தியாக வந்து அம்மாவாக மாறிய இவர்களின் அன்பு பிணைப்பை பார்த்து ஊரே வியந்தது. 

ஊரார் சொன்னதற்கு மாறாக உமா பாரதி அஞ்சலியின் மேல் மிகவும் பாசமாக இருப்பதை கண்டு ஜீவானந்தும் மகிழ்வாக, தன்னிடம் குறை கூறியவர்களிடம் தன் பாரதியைப் பற்றி பெருமையாக பேசினான். 

ஜீவானந்த் தன் மனைவி உமா பாரதியின் மேல் உயிரையே வைத்திருந்தான். 

நாட்கள் வருடங்களாக கடக்க மூன்று வருடம் கழித்து மீண்டும் ஜீவிதா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் உமா பாரதி. 

மரகதம், ஜீவானந்த், உமா பாரதி, அஞ்சலி, பரத் மற்றும் ஜீவிதா என்று இவர்களது குடும்பம் அன்பாலும் பாசத்தாலும் நிரம்பி வழிந்தது.

சுபம்.

– அருள்மொழி மணவாளன்.

13 thoughts on “சித்தி – 25 இறுதி அத்தியாயம்”

    1. Arulmozhi Manavalan

      மிக்க நன்றி 😊😊
      முழுவதும் படித்து விமர்சனம் எழுதியதற்கு நன்றி நன்றி 😊😊😍

  1. முழுக் கதையும் முடிந்த பிறகு தான் படிக்க ஆரம்பித்தேன்.ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.வழக்கமான கதைதான் என்றாலும் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *