Skip to content
Home » சித்தி – 3

சித்தி – 3

      இப்படியே நாட்கள் கடக்க அந்த வருடம் கோயில் திருவிழாவும்  வந்தது. திருவிழா என்பதால் அனைவரையும் அழைத்து இருந்தாள் அல்லிராணி.  காளிமுத்துவின் வீட்டில் இருவர் திருமணம் முடிந்து, ஆளுக்கு ஒரு  பிள்ளைகள். 

அதேபோல் உமாவின் தங்கை தம்பிக்கும் திருமணம் முடிந்து ஆளுக்கு ஒரு  பிள்ளைகள் என்று வீடு திருவிழா போல் காட்சி அளித்தது. அவளின் தங்கை மீண்டும் கருவுற்றிருந்தாள். அவளை தாங்கு தாங்கென்று தாங்கினார் அவளின் தாய். 

அனைவருக்கும் புத்தாண்டை துணிமணிகள் வாங்கி அசத்தியிருந்தார் அல்லிராணி. வழக்கம்போல் காலையில் எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து, ஓய்விருக்கும் நேரத்தில் கோயிலுக்கு சென்று வருகிறேன் என்று சித்தியிடம் அனுமதி கேட்டாள் உமா.  

“இரவு உணவு யார் செய்வது? ஒழுங்காக வீட்டில் இருந்து வேலை செய்!” என்று அவளை மிரட்டினார் அல்லிராணி. அதைக் கேட்டுக் கொண்டிருந்த முத்துராமன் தன் மனைவியிடம், “அவள் தான் எல்லா வேலையும் முடித்து விட்டாளே, கோயிலுக்கு போயிட்டு வந்து மற்ற வேலைகளை செய்வாள்” என்று சொல்லிவிட்டு, “நீ போயிட்டு வாம்மா” என்று மகளை அனுப்பி வைத்தார். 

அவளும் சித்தியைப் பார்த்து. “ஆமாம் சித்தி… நான் போய்விட்டு விரைவாக வந்து சமைத்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு கோயிலுக்கு சென்றாள். 

வெகு நாள் கழித்து வீட்டை விட்டு வெளியே வருவதால், சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள். 

கோயில் செல்லும் வழி எல்லாம் புது புது கடைகள் முளைத்திருந்தன. ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே கோயிலுக்குச் சென்று, அம்மனிடம் மனம் உருக தன் தந்தைக்கு சீக்கிரம் குணமாக வேண்டும் என்று வேண்டினாள். 

பூசாரி கொடுத்த விபூதியை வாங்கி வைத்துக்கொண்டு வெளியே வந்து ராட்டினத்தையும் கடைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒரு மேடையில் அமர்ந்திருந்தாள். 

அவளின் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி உமாவிடம், “தனியாகவா கோயிலுக்கு வந்தாய்” என்று கேட்டார். 

“ஆமாம் அம்மா… அப்பாவிற்கு கொஞ்சம் உடம்பு முடியல. அதனால் நான் மட்டும் வந்தேன்” என்றாள். 

“வீட்டில் அப்பா மட்டும் தானா? அம்மா இல்லையா?” என்று அவளைப் பற்றி அறிந்து கொள்ள கேள்வி கேட்க ஆரம்பித்தார் அந்த பெண்மணி. 

“நான் சிறுவயதாய் இருக்கும் பொழுதே அம்மா இறந்து விட்டார்கள். சித்தி இருக்கிறார்கள். தம்பி, தங்கை என்று அனைவரும் இருக்கிறார்கள்” என்று புன்னகைத்துக் கொண்டே சொல்லிவிட்டு, இன்னும் இங்கு அமர்ந்திருந்தால் அவர் நிறைய கேள்வி கேட்பார் என்பதை உணர்ந்து, “சரி அம்மா… நான் வீட்டிற்கு செல்கிறேன். அப்பாவிற்கு மருந்து கொடுக்க வேண்டும்” என்று அங்கிருந்து நகன்றாள். 

அந்த பெண்மணியின் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்மணி, உமாவை பற்றி கூறினார். அனைத்தையும் கேட்டு கொண்ட அந்த பெண்மணி அவர்கள் வீடு எங்கு இருக்கிறது என்றும் கேட்டு அறிந்து கொண்டார். 

மறுநாள் காலையில் அனைவரும் வீட்டில் இருந்தனர். வழக்கம்போல் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள் உமா. அந்த நேரம் கோயிலில் பார்த்த பெண்மணி உமாவின் வீட்டிற்குள் இரண்டு பெண்மணிகளுடன் வந்தார். 

அங்கு வந்த பெண்மணியில் ஒருவர் அல்லிராணியை அழைத்து, வந்திருக்கும் பெண்மணியை காண்பித்து, இவர் பெயர் மரகதம் என்றும், பக்கத்து ஊரிலிருந்து நம் கோயில் திருவிழாவிற்கு வந்திருக்கின்றார் என்றும் கூறினார். 

பின்னர் அவர் அவரது அண்ணன் மகனுக்கு திருமணம் முடிக்க பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், நம் உமாவை அவனுக்கு கேட்டு வந்திருப்பதாகவும் தெரிவிக்க, அல்லிராணியின் முகம் இறுகியது.

இதுவரையில் வீடுவரை யாரையும் உமாவை பெண் கேட்டு வர விட்டதில்லை அல்லிராணி. முதல் முறையாக முத்துராமன் காதில் தன் மகளை பெண் கேட்டது விழ, மகிழ்ந்து அவரை வரவேற்று அமரவைத்து பேசினார். 

தன் சின்ன மகளிடம் அக்காவை வந்தவர்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்து வர சொல் என்று சொன்னார். அவளோ அலட்சியமாக என்னால் எழுந்து போக முடியாது என்று விட்டாள். 

வந்திருந்தவர்கள் முன் எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்த முத்துராமன், நேராக சமையலறை சென்று மூவருக்கு குடிப்பதற்கு ஏதாவது எடுத்து வரச் சொல்லிவிட்டு வேகமாக அவரிடம் சென்று அமர்ந்து தன் பெண்ணை பற்றி கூறினார்.

தன் தந்தையின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்டு, அப்படி யார் வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு, குடிப்பதற்கு மோர் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் உமா. 

அங்கு நேற்று கோயிலில் பார்த்த பெண்மணி அமர்ந்திருப்பதை கண்டு யோசனை செய்து கொண்டே வந்து அவரிடம் மோர் டம்ளரை நீட்டினார். 

அவர் உமாவின் கையை பிடித்து பக்கத்தில் அமர வைத்து கொண்டு, “என் மருமகனுக்கு திருமணம் செய்ய பெண் தேடிக் கொண்டிருக்கின்றேன். உங்கள் பெண்ணை மணமுடிக்க கேட்டு வந்தேன்” என்று முத்துராமனிடம் கூறினார். 

“உங்கள் மகளைப் பற்றி நான் நான் இவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்” என்று பக்கத்தில் இருந்த பெண்மணியை காண்பித்தார். “என் மருமகன் பற்றி கூற வேண்டும்” என்று சொல்லிவிட்டு சிறிது தயங்கி “அவனுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது” என்று நிறுத்தினார். 

அதில் அதிர்ந்த முத்துராம் இரண்டாம் தாரமாக கேட்டு வந்திருக்கிறீர்களா என்று சற்று சங்கடமாக கேட்டார். அவரும் ஆமாம் என்று தலையாட்டி தன்னை பற்றி கூற ஆரம்பித்தார்.

“பக்கத்து ஊரின் பஞ்சாயத்து தலைவராக இருந்தவரின் மனைவிதான் நான். என் கணவரின் தங்கையை என் அண்ணனுக்கு மணமுடித்து இருந்தோம். எங்களுக்கு ஒரு மகள் என் அண்ணனுக்கு மகன். அவன் நான்கு வயதாக இருக்கும் பொழுது என் அண்ணனும் அண்ணியும் என் கணவரும் ஒரு விபத்தில் மரணம் அடைந்து விட்டனர். அன்றிலிருந்து அவனையும் நான்தான் வளர்த்துக்கொண்டு இருக்கிறேன். அவன் என் மேலும் என் மகள் மேலும் பாசமாக இருந்தான். சொந்தம் விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக, அவர்களது திருமண வயது வந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தேன். இருவரும் சம்மதித்தே திருமணம் செய்து மகிழ்வாக வாழ்ந்தனர். யார் கண் பட்டதோ என்னவோ? என் மகள் பிரசவத்தில்  அவளைப் போலவே ஒரு பெண் குழந்தையை பெற்று கொடுத்து விட்டு இறந்து விட்டாள். அன்றிலிருந்து இன்று வரை எந்தக் குறையும் இல்லாமல் என் பேத்தியை வளர்த்துக் கொண்டு இருக்கிறான் என் மருமகன். எனக்கும் வயதாவதால் பெண் பிள்ளையை பார்த்துக் கொள்ள ஒரு தாய் வேண்டும் என்று அவனிடம் எவ்வளவோ கூறியும் மணம் முடிக்க மறுத்துவிட்டான். 

இப்பொழுதுதான் கொஞ்சம் மிரட்டி சம்மதிக்க வைத்துள்ளேன்.

நேற்று உங்கள் மகளை கோயிலில் பார்க்கும் பொழுது ஏதோ என் மனதிற்கு என் மகளை பார்ப்பது போலையே இருந்தது. அவளைப் பற்றி விசாரித்ததில் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தது. ஆனால் என் மருமகனை திருமணம் செய்ய ஒத்துக் கொள்வாளோ என்று தயக்கமாகவும் இருந்தது. பின்னல் தான் அவளது வயது அதிகமாகியும் ஏதோ காரணங்களால் திருமணம் தள்ளிப் போய் இருப்பது தெரிந்தது” என்று அல்லிராணியை பார்த்து முத்துராமனையும் பார்த்தார்.

“என் மருமகனுக்கு அப்படி ஒன்றும் வயது அதிகம் அல்ல முப்பத்தைந்து வயது தான் ஆகிறது. உங்கள் மகளுக்கு எப்படியும் முப்பதுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? நீங்கள் சம்மதித்தால் திருவிழா முடிந்து வரும் அடுத்த நல்ல முகூர்த்தத்தில் எளிமையாகவே திருமணத்தை நடத்தி விடலாம்” என்று முத்துராமனை பார்த்தார்.

அவர் பேசி முடித்ததும் முத்துராமனுக்கு சிறிது தயக்கமாக இருந்தது. தன் மகளை இரண்டாம் தரமாக கட்டிக் கொடுக்க வேண்டுமா? என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். 

அதே நேரம் அல்லிராணியின் மனதில் வேறொரு கணக்கு ஓடிக்கொண்டிருந்தது. எங்கே திருமணம் என்றால் அதிக செலவு இழுத்து வைத்து விடுவார்களோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களே எளிமையாக முடித்து விடலாம் என்று கூறியதால் சற்று கராராக பேச ஆரம்பித்து விட்டார்.  

உங்கள் அளவிற்கு எங்களிடம் அதிக பணம் எல்லாம் இல்லை. இப்பொழுது தான் மற்ற பிள்ளைகள் திருமணம், பிரசவம் என்று அதிக செலவு. அதற்காக நாங்கள் நிறைய கடனில் இருக்கிறோம். எங்களால் இப்பொழுது சல்லி பைசா கூட செலவு செய்ய முடியாது என்றார் அல்லிராணி. 

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்….

2 thoughts on “சித்தி – 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *