Skip to content
Home » சித்தி – 5

சித்தி – 5

   உமா பாரதிக்கு பார்த்த மாப்பிள்ளையை பற்றி ஊரில் உள்ளவர்கள் நல்ல விதமாக கூறியதில் மகிழ்ந்து தனது வீட்டிற்கு வந்த முத்துராமன் தன் மனைவியிடமும் மகளிடமும் “மாப்பிள்ளையை பற்றி நல்லதாகவே கூறுகிறார்கள் ஊரில் உள்ளவர்கள்” என்று பெருமையாக கூறினார். 

உடனே அல்லிராணி, “ரொம்ப பெருமை படுக்காதீங்க அவர்கள் பையனிடம் கேட்டு விட்டு தான் கூறுவதாக சொல்லி இருக்கிறார்கள். அதற்குள் நீங்கள் மாப்பிள்ளை அது இது என்று பிணத்தாதீர்கள்” என்று விட்டார்.

சட்டென்று அவர் அப்படி கூறியதில் மனம் வருந்திய முத்துராமன் தன் மகளை கவலையுடன் பார்த்தார். அவளின் முகத்தில் எந்தவித உணர்வும் இல்லை. 

கவலையான தனது தந்தையின் முகத்தை பார்த்து, “அப்பா நீங்கள் ஒன்றும் யோசிக்காதீர்கள். எனக்கு திருமணம் நடக்கும் என்று இருந்தால் நிச்சயம் நடக்கும்” என்று கூறிவிட்டு, அவருக்கு  குடிப்பதற்கு சூடாக கசாயம் கொண்டு வந்து கொடுத்தாள். 

“என்னம்மா எப்ப பார்த்தாலும் இப்படி கஷாயத்தையே கொடுக்கிற?” என்று சொன்னாலும் தன் மகள் தன்மேல் வைத்துள்ள பாசத்தைக் கண்டு. புன்னகைத்துக் கொண்டே வாங்கி குடித்தார். 

மறுநாளே மரகதம் தனக்கு இவ்வூரில் தெரிந்த பெண்மணியிடம் திருவிழா முடிந்ததும் திருமண வைத்துக் கொள்ளலாம் என்று தகவல் சொல்லி அனுப்பி இருந்தார். 

அவரும் வந்து அல்லிராணியிடம் கூற, வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டு, “சரி… நான் சொல்லி விடுகிறேன்” என்று அலட்சியமாக சொல்லி விட்டார். 

அல்லிராணியின் மகளோ “என்னம்மா அவளுக்கு கல்யாணம் நடந்துரும் போல இருக்கு?” என்று அவரது கோபத்தை இன்னும் தூண்டி விட்டாள். அனைவரும் கூடி கூடி அமர்ந்து உமாவின் திருமணத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர்.

காளிமுத்துவும் முத்துராமனிடம், “என்னமோ உமது பெண்ணை இரண்டாம் தாரமா கட்டிக் கொடுக்க மாட்டேன்னு சொன்னீரு. இப்போ  எவனோ ஊர் பெயர் தெரியாதவனுக்கு இரண்டாம் தாரமா தானே கட்டிக் கொடுக்கிறீரு. 

எதுக்கு எனக்கே கட்டிக் கொடுத்திருந்தா உமது கண்ணுக்கு முன்னாடியே இருந்திருப்பாள்ல? என்று இளக்காரமாகவும் கோபமாகவும் கேட்டான்.

அவனுக்கு பதில் சொல்ல துவங்கும் முன் முத்துராமனுக்கு இருமல் வந்து விட, அவரின் முதுகை தடவி விட்டுக் கொண்டு, “விடுங்கப்பா ஏதாவது பேசிட்டு போகட்டும். நீங்கள் எதுவும் சொல்லி உங்கள் உடம்பை கெடுத்துக்காதீங்க” என்று வெந்நீர் வைத்து கொடுத்தாள். 

காளிமுத்துவும் அவளை முறைத்து பார்த்து, “முதல்ல இந்த கல்யாணம் நடக்குதான்னு  பார்ப்போம். அதுக்கப்புறம் உங்க மூஞ்ச எங்க கொண்டு வசிக்கிறீங்க என நானும் பார்க்க தான போறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

சொன்னது போல் இரண்டு நாள் கழித்து உமாவிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மரகதம் வந்தார். “அடுத்த வாரம் புதன்கிழமை காலையில் அம்மன் கோயிலில் வைத்து திருமணம். எல்லோரும் எட்டு மணிக்குள் கோயிலுக்கு வந்து விடுங்கள்.  ஒன்பது மணிக்கு முகூர்த்தம் ஆரம்பிக்கும். ஐயர் கிட்ட எல்லாம் பேசி வச்சாச்சு. அங்கேயே மண்டபத்துல காலையில உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஒரு பையை முத்துராமனின் கையில் கொடுத்தார். 

“இதில் உமாவிற்கு தேவையான புடவை இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் சிற்றுண்டியும் காஃபியும் கொடுத்தாள் உமா. 

புன்சிரிப்புடன் வாங்கிய மரகதம், “உமா… அப்பாவிடம் உனக்கு புடவை கொடுத்திருக்கிறேன். உன் அளவிற்கு சட்டை தைத்துக் கொள்” என்று அதற்குரிய பணத்தை உமாவின் கைகளில் கொடுத்தார். 

“இல்லை… இருக்கட்டும் அம்மா” என்று அவள் மறுக்க, 

“இல்லை… இல்லை… இது மாப்பிள்ளை வீட்டின் செலவு தான்” என்று சொல்லிவிட்டார்.

சிறிது நேரம் பேசிக்கொண்டு முத்துராமனிடம் தங்கள் வீட்டு தொலைபேசி எண்ணை கொடுத்து, “எதுவும் தேவை என்றாலும் ஏதேனும் சந்தேகம் என்றாலும் போன் செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, “என் மருமகன் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம். ஆகையால் நேரம் தவறாமல் காலையில் வந்து விடுங்கள்” என்று அறிவுறுத்தி விட்டு கிளம்பினார்கள்.

அவர் தலை மறைந்ததும் வேகமாக முத்துராமன் கையில் இருந்த பையை பிடுங்கினார் அல்லிராணி. அப்படியே ஹாலில் அமர்ந்த இடத்திலேயே தரையில் கொட்டி புடவையை எடுத்துப் பார்த்தார். அவளின் அருகில் வந்த அவளின் மகளும் புடவையை பிரித்துப் பார்த்தாள். 

அழகாக செந்தாமரை வண்ண புடவையில் நீல வண்ண முந்தானையும் பாடரும் ஆங்காங்கே தங்க ஜருகையில்  வட்ட வட்ட பொட்டுகளாய் அழகாய் ஜொலி ஜொலித்தது. 

“அம்மா… எப்படியும் குறைஞ்சது  பதினைந்து ஆயிரம் இருக்கும்மா…!” என்று பொறாமைக் கண்களில் மின்ன கூறினாள் அல்லிராணியின் மகள். 

“அம்மா… ரொம்ப வசதியானவங்கலா இருப்பாங்க போல இருக்கு. ரெண்டாம் கல்யாணத்துக்கு இவ்வளவு அதிக விலையில் பட்டு புடவை வாங்கி இருக்காங்க” என்று இரண்டாம் கல்யாணம் என்பதில் அழுத்திக் கூறினாள் அல்லிராணியின் அருமை மகள். 

தாயும் மகளும் பேசுவதை கண்டு கோபமடைந்த முத்துராமன், “ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? அவங்க வாங்கி கொடுத்த பொருளை இப்படியா தரையில் போட்டு பார்ப்பீங்க” என்று சொல்லிக்கொண்டு தன் மகளை அழைத்தார். 

“உமா எல்லாத்தையும் எடுத்து பையில் போட்டு பத்திரமாக வைமா. நீ சட்டைத்தை கொடுக்கிற இடத்தில போய் சட்டையை இன்னைக்கே தைக்க கொடுத்துடு” என்றார்.  

உமாவும் அவர்களது செயலில் மனம் வருந்தி தான் நின்று கொண்டிருந்தாள்.  தந்தை  இன்றே தைக்க கூறியதும், “சரி அப்பா…” என்று அனைத்தையும் எடுத்து பையில் போட்டு கடைக்கு கிளம்பினாள். 

உடனே அல்லிராணி “புடவையை எங்க எடுத்துட்டு போற? அதை இங்கேயே வச்சுட்டு போ!” என்று சொல்ல, 

இல்ல  சித்தி அவர்களே சட்டை துணியை தனியாக வெட்டி எடுத்துவிட்டு அப்படியே  முந்தானையில் குஞ்சம் போட்டு தந்து விடுவார்கள்” என்று சொல்லிவிட்டு, வழக்கமாக அவள் தைக்கும் அக்காவிடம் வந்து கொடுத்தாள். 

அவர்களும் புடவையை பார்த்து அழகாக இருப்பதாக சொல்லி, “இவ்வளவு காலம் நீ காத்திருந்ததற்கு உன் வாழ்க்கை இனிமேல் சந்தோஷமாக இருக்கும். கவலைப்படாதே உமா” என்று வாழ்த்தினார். 

பின்னர் “அக்கா அடுத்த புதன் கிழமை காலையில் திருமணம் என்று சொன்னாங்க. புடவை வீட்டில் இருப்பது எனக்கு கொஞ்சம் சரியாக படவில்லை. நீங்களே பத்திரமாக வைத்திருந்து காலையில் கொண்டு வந்து தருகிறீர்களா?” என்று தயக்கமாக கேட்டாள். 

அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் குணத்தைப் பற்றி நன்கு அறிந்த தையல்காரப்பெண்ணும். சரி உமா.. நீ கவலைப்படாதே. நான் புதன் கிழமை காலையில் உன்னிடம் கொடுக்கிறேன்” என்று சொல்லி விட்டு “அப்படியே மணப்பெண் தோழியாக நானே உன்னுடன் வருகிறேன். கவலைப்படாதே” என்று புன்கைத்து கூறி, உமாவை மகிழ்வுடன் அனுப்பி வைத்தாள்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

3 thoughts on “சித்தி – 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *