Skip to content
Home » சித்தி – 6

சித்தி – 6

    இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் அஞ்சலி. நாளை தன் அப்பாவிற்கு திருமணம். தோழிகளிடம் மகிழ்சியாக சொல்லிக் கொண்டு இருந்தாள். 

பள்ளிக்கூடம் தொடங்கும் மணி அடித்ததும் பிள்ளைகள் அனைவரும் அவரவர் இடத்தில் சென்று அமர்ந்தனர். மழை மெலிதாக தூரிக் கொண்டு இருந்ததால் அனைவரையும் வகுப்பறையிலேயே இருக்கும் படி தலைமை ஆசிரியர் சொல்லி இருந்தார். 

வகுப்பு ஆசிரியர் வந்ததும் தமிழ் தாய் வாழ்த்து பள்ளி ஒலிபெருக்கியில் ஒலித்தது. அதன் பிறகு பள்ளி உறுதிமொழி எடுத்து முடித்ததும் வகுப்பு தொடங்கியது.

விடுமுறை கடிதத்தை எடுத்துக்கொண்டு தனது ஆசிரியையிடம் சென்றாள் அஞ்சலி. டீச்சர் எனக்கு மூன்று நாள் லீவு வேணும் என்று கேட்டாள். 

கடிதத்தை வாங்கி படித்துக் கொண்டு, எதற்கு என்று கேட்டார் ஆசிரியை.

“நாளைக்கு எங்க அப்பாவுக்கு கல்யாணம் டீச்சர். இனிமே நான் திங்கட்கிழமை தான் வருவேன்” என்று மகிழ்வாக கூறிய அஞ்சலியை ஆசிரியை பாவமாக பார்த்தார். 

‘அழகு பிள்ளை. இவளின் அப்பாவை கல்யாணம் பண்ணி வரப்போகும் பெண் இவளை என்ன பாடுபடுத்த போகிறாளே தெரியவில்லை’ மனதினுள் அறிமுகம் இல்லாத பெண்ணைப் பற்றி தவறாக நினைத்தார். 

தன் வகுப்பு ஆசிரியை தன்னை பாவமாக பார்பதையும் அதன் பிறகு அவளிடம் பேசியதையும் வைத்து அவளுக்கு ஏதோ ஒருவித பயம் தோன்ற ஆரம்பித்தது. 

அதன் பிறகு வந்த ஒவ்வொரு ஆசிரியர்களும் அவளிடம் பாவம் போல் நலம் விசாரித்து குடும்பத்தை பற்றி விசாரிக்க ஒன்னாவது படிக்கும் அஞ்சலிக்கு உண்மையில் தன் அப்பாவை திருமணம் செய்து கொண்டு தங்கள் வீட்டிற்கு வரும் சித்தி என்னை கொடுமைப்படுத்தி விடுவாளோ என்ற பயம் வந்துவிட்டது. 

அதே பயத்துடனே வீட்டிற்கு வந்து பாட்டியிடம், “பாட்டி.. நாளைக்கு அப்பாவ கல்யாணம் பண்ணி இங்கு வரும் சித்தி என்னை கொடுமைப்படுத்துவார்களா?” என்று அழுது கொண்டே கேட்டாள். 

பதறிய பாட்டி, “என்ன கண்ணு சொல்லுற” என்று அவளின் கண்ணீரை துடைத்துக் கொண்டு கேட்க, “என் பிரெண்ட்ஸ், டீச்சர் எல்லாருமே சொல்றாங்க. சித்தி என்ன கொடுமை படுத்துவாங்க என்று” என தேம்பி கொண்டு கூறினாள். 

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவள் உனக்கு சித்தி இல்லை. நல்ல அம்மாவா உன்னை கவனிச்சுக்குவா!” என்று தன் பேத்தியை சமாதானப்படுத்தினார்  மரகதம்.

வயல் வேலையை முடித்துக் கொண்டு தனது புல்லட்டில் வீட்டிற்கு வந்த  ஜீவானந்த் தன் மகள் அழுவதை கண்டு, “எதுக்கு அஞ்சலி பாப்பா அழுகிறார்களாம்” என்று அவளை தூக்கி ஒரு சுத்து சுத்தினான். 

தன் தந்தை தன்னை சுற்றியதில் அவளும் சிரித்துக் கொண்டு, சொல்ல வந்ததை மறந்து, “அப்பா நான் நாளைக்கு நான் போட போற பட்டு பாவாடை சட்டைக்கு கண்ணாடி வளையல் வேணும் அப்பா. பாட்டி இன்னும் வாங்கி தரல” என்று தன் பாட்டியை பற்றி குறை கூற, 

ஆனந்தம் வளையல் கேட்டு தான் அழுதிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு, “இதோ.. இப்போவே போய் வாங்கி வந்துவிடலாம்” என்று வண்டியில் அவளை உட்கார வைத்தான். 

அதைப் பார்த்த மரகதமும், “இப்போ தானே வீட்டுக்கு வந்த. முதல்ல காபி தண்ணி குடிச்சிட்டு அப்புறமா போ” என்று அவனிடம் சொல்லிவிட்டு, தன் பேத்தியை பார்த்து, “அப்பா வந்தவுடனே வெளியே கூட்டிட்டு போக சொல்லுவியா?” என்று முறைத்தார். 

“பாருங்க அப்பா… எப்ப பார்த்தாலும் இந்த பாட்டி என்னை திட்டிக்கொண்டே இருக்காங்க” என்று சிணுங்கிக் கொண்டு வண்டியில் அமர்ந்தவாறே தன் தந்தையும் தோளில் தொற்றிக் கொண்டாள் அஞ்சலி. 

தன் மகளின் சிணுங்களை ரசித்துப் பார்த்தவாறு தன் அத்தையிடம் திரும்பி, “ஏன் அத்தை அவளை திட்றீங்க? சின்ன பிள்ளை தானே. வந்து காபி குடிக்கிறேன்” என்று கிளம்புவதில் குறியாக நின்றான். 

அவன் கையில் காஃபி டம்பரை கொடுத்துவிட்டு, “முதலில் குடி அப்புறம் போகலாம்” என்று தன் மருமகனை முறைத்தார் மரகதம். 

அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவர் கொடுத்த காபியை வாங்கி குடித்தான். 

அதற்குள் மரகதம் தன் பேத்தியை அழைத்துச் சென்று கை கால் கழுவி வேருடை அணிவித்து அவளுக்கும் குடிப்பதற்கு பால் கொடுத்து அழைத்து வந்தார். வண்டியில் சாய்ந்து அமர்ந்தவாறே தன் போனை நோண்டிக் கொண்டிருந்த ஆனந்தின் முன் “போகலாம் அப்பா” என்று வந்து நின்றாள் அஞ்சலி. 

“அழகு குட்டி… அழகா தயாராகி வந்துட்டீங்களா?” என்று திருஷ்டி கழித்து வண்டியில் தூக்கி அமர வைத்து தன் அத்தை இடம் சென்று வருவதாக தலையசைத்து தனது புல்லட்டை ஸ்டார்ட் செய்தான். 

தன் மகள் கேட்ட பொருட்களை வாங்க தங்கள் கிராமத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று. அவள் கேட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்து, அவள் விரும்பி சாப்பிடும் கடையிலேயே பரோட்டாவும் இருவரும் சாப்பிட்டுவிட்டு, பால்கோவாவும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினார்கள். 

நேரம் அதிகமாக இருவரையும் தேடி வாசலிலேயே காத்திருந்தாள் மரகதம். அலுப்பில் வண்டியிலேயே தன் தந்தையை அனைத்துவாரு உறங்கிய அஞ்சலியை சுமந்து கொண்டே வீட்டிற்குள் மெதுவாக நுழைந்தது புல்லட். 

“என்ன தம்பி இவ்வளவு நேரம்?” என்று தன் மருமகனிடம் குறைபட்டுக் கொண்டே, உறங்கும் தன் பேத்தியே தூக்கிக்கொண்டு வீட்டினுள் சென்றார் மரகதம். அவரின் பின்னே வாங்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் ஜீவானந்த். 

அழகான சிறிய வீடு நுழைந்ததும் பத்து பேர் அமரக்கூடிய  சின்ன ஹால். அதை ஒட்டி வலது பக்கம் சிறிய படுக்கை அறை. அதில் தான் ஜீவானந்த் தற்போது இருக்கிறான். மழை தண்ணீர் நடுவில் விழுவது போல் முத்தம் வைத்த வீடு. அதன் ஒரு மூலையில் சமையல் அறை மறு மூலையில் படுக்கையறை உள்ளேயே குளியலறையும் அடக்கம். படுக்கையில் அஞ்சலியை படுக்க வைத்தார் மரகதம்.

இரண்டுக்கும் நடுவில் பின்பக்க செல்வதற்குரிய வாசல் ஒரு பின்பக்கம் ஒரு பக்கம் மாட்டு தொழுவம் மறுபக்கம் கிணறு வைக்கோல் போர் மற்றும் குளியல் அறையும் மாடிக்கு செல்ல படிக்கட்டும் இருந்தது. 

மாட்டுத் தொழுவத்தில் நான்கு கரவை மாடுகள் இருந்தது. அதில் ஒரு கரவை மாடு தற்போது தான் குட்டி போட்டு ஒரு மாத குட்டியும் அங்கே விளையாடி கொண்டிருக்கும் மற்றும் ஒரு மாடு இன்னும் ஒரு மாதத்தில் குட்டி ஈனும். 

இந்த அழகான குட்டி வீட்டை தன் மனைவிக்காக பார்த்து பார்த்து கட்டினான் ஜீவானந்த் ஆனால் அவள் தான் அவனுடன் வாழ வில்லை. 

பேத்தியை கட்டிலில் போட்டுவிட்டு தன் மருமகனிடம் வந்த மரகதம், “சாப்பிடுகிறாயா?” என்று கேட்க, “இல்லையத்தை… வெளியேவே சாப்பிட்டு விட்டோம். நீங்க சாப்பிட்டீங்களா?” என்று தன் அத்தையையும் கேட்டான். 

அவரும் தலையாட்டி விட்டு “நாளைக்கு காலையிலேயே முகூர்த்தம். இவ்வளவு நேரம் கழித்து வந்திருக்கிறாயே. சீக்கிரம் சென்று உறங்கு” என்று அவனை உறங்க அனுப்ப, அவன் அந்த சின்ன அறைக்குள் நுழைந்தான். 

அவனை நிறுத்தி “இனிமேலாவது நீ உன் அறையில் படுக்கலாமே” என்று கேட்டார். 

விரக்தியாக புன்னகைத்தான் ஜீவானந்த் தன் அத்தையை பார்த்து

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

3 thoughts on “சித்தி – 6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *