Skip to content
Home » சித்தி – 7

சித்தி – 7

     புதன்கிழமை காலை மங்கலகரமாக விடிந்தது உமா பாரதியின் வாழ்க்கையில். 

எப்பொழுதும் எழும் நேரத்தை விட சீக்கிரமே எழுந்து வீட்டைச் சுற்றி முழுவதும்  பெருக்கி சாணம் தெளித்து வண்ணக் கோலங்கள் போட்டு முடித்தாள். அதற்குள் நேரம் விடிந்து விட்டது. 

ஒவ்வொருவராக எழுந்து வந்து காபி கேட்க, வேகமாக  சமையலறை சென்று காபி போட ஆரம்பித்து விட்டாள் உமா. 

அனைவருக்கும் காபி கலந்து கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த தையல்கார பெண்மணி,  “என்ன உமா.. நேரம் ஆகிறது இன்னும் நீ தயாராகவில்லையா? மணி பார் ஏழு ஆகப்போகிறது” என்று அதிர்ந்து அவளை பார்த்தாள். 

அங்கு வந்த அல்லிராணி “என்ன சரசு… காலையிலேயே கிளம்பி வந்துட்ட?” என்று கேலியாக அவளை பார்த்து கேட்டார். 

அந்த பெண்ணும் புன்னகைத்து கொண்டே, “உமாவை அலங்கரிக்க இந்த வீட்டில் உள்ளவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் அல்லவா. அதனால் தான் நான் வந்து விட்டேன்” என்று அவருக்கு தகுந்தார் போல் நக்கலாக சொல்லிவிட்டு உமாவை பார்த்து நீ சீக்கிரம் குளித்துவிட்டு வா என்று அவளை விரட்டினாள். 

அவளோ “இன்னும் கொஞ்சம் பொறுங்க அக்கா. தங்கைக்கு காபி கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன்” என்று சொல்ல, அவள் கையில் இருந்தது டம்ளரை பிடுங்கி அல்லிராணியின் அருகில் வைத்து விட்டு, “இனிமேல் இந்த வேலை எல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க” என்று அவளை இழுத்துச் சென்றாள். 

உமாவின் தந்தை அங்கு புதிதாக வெள்ளை வேஷ்டி சட்டை கட்டி தயாராக நின்றார். அங்கு வந்த மகளை கண்டு “என்னம்மா நீ இன்னும் தயாராகவில்லையா? என்று அதிர்ந்து கேட்டார். 

அவளின் கூடவே வந்த தையல்கார பெண்ணும் “ஆமாம்…உங்கள் வீட்டில் அவளை தயாராக விட்டுவிட்டாலும்….” என்று சலித்துக் கொண்டு சொன்னாள். 

வேதனை அடைந்த முத்துராமன் மகளிடம், “சீக்கிரம் கிளம்புமா..? என்று வேதனையை மறைத்து சொல்லிவிட்டு வெளியே சென்றார். 

உமாவும் வேகமாக சென்று குளித்து வந்தாள். ஜாக்கெட்டை காண்பித்து, “என்னக்கா…? இவ்ளோ கிராண்டா தைச்சு இருக்கீங்க” என்று சங்கோஜப்பட்டு,  சாதாரணமாக தைத்து இருக்கலாம் என்று கேட்டாள். 

“சாதாரணமாக தைப்பதற்கும் கல்யாண புடவைக்கு தைப்பதற்கு வித்தியாசம் இருக்கு. சும்மா போடு…”என்றாள். 

அந்நேரம் கதவைத் தட்டிய முத்துராமன் உமாவிடம் ஒரு பையை, “கொடுத்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்” என்றார். 

அதில் தலையாரங்காரத்திற்கு தேவையான பூக்கள் இருந்தன. வேகவேகமாக தலையை துவட்டி காயவைத்து அறையும் குறையுமாக காய்ந்த முடியில் பின்னலை பின்னி விட்டாள். 

அதிலிருந்த ஜடையை வைத்து தலையை பின்னி, சுற்றி பூ முடித்து, மணமகளை அலங்காரம் செய்தாள் சரசு. வீட்டில் இருந்தவர்கள் ஒரு உதவியும் அவளுக்கு செய்யவில்லை. 

அவர்களும் மெதுவாக கிளம்பிக் கொண்டிருக்க, நேரமாவதை உணர்ந்த முத்துராமன் அல்லிராணியை அழைத்து விரைவாக அனைவரையும் கிளம்பக் கூறினார். 

அதற்குள் அவர்களை அழைக்க இரு பெண்மணிகளுடன் கார் வந்துவிட்டது அதை பார்த்த அல்லிராணியின் மகள் நாங்கள் இன்னும் ரெடியாகவில்லை. சிறிது நேரம் உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு தனதறைக்குச் சென்றுவிட்டாள். 

அவர்களும் காத்திருக்க தற்செயலாக அங்கு வந்த முத்துராமன் அவர்களை வரவேற்று, தன் மகளை அழைத்து கூறினார்.

அவளும் அவர்களுக்கு வணக்கம் சொல்லி, குடிக்க காஃபி கலந்து கொடுத்தாள். அவர்களும் நேரம் ஆவதை உணர்ந்து முத்துராமனிடம் தெரிவிக்க, அவரும் தன் மனைவியை அழைத்து நேரம் ஆகிவிட்டது. கிளம்பளாமா என்று கேட்டார். 

அவரோ இன்னும் பிள்ளைகள் தயாராகவில்லை. இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று விட்டேத்தியாக கூறினார். 

முத்துராமன் செய்வதறியாது முழிக்க, உடனே சரசு, “சரி நீங்க பொறுமையாக வாங்க. நாங்க உமாவை அழைத்துக் கொண்டு இப்போ கிளம்புறோம்” என்று கூறிவிட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காமல்,  உமாவை அழைத்து, அவளின் அம்மாவின் புகைப்படத்தின் முன் விளக்கேற்றி சாமி கும்பிட வைத்து, “போகலாம்” என்று சொல்லி, அவர்கள் வந்த காரில் ஏற சொன்னாள். 

உமாவோ தயங்கி நிற்க, முத்துராமனும் “ஆமாம் உமா நேரம் ஆகிறது. நீ காரில் முன்னாடி போமா…. அப்பா வண்டியில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லி விட்டு, அல்லிராணியை பார்த்து, “சீக்கிரம் கிளம்பி வாங்க. நான் முன்னாடி போகிறேன்” என்று முறைத்தவாறு சொல்லி விட்டு கிளம்பினார். 

உமாவை அழைத்துச் சென்ற கார் கோயில் வாசலில் நின்றதும் மரகதம் வேகமாக வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். 

அங்கு உமாவின் புடவையின் வண்ணத்திலேயே உடை அணிந்த சிறுமியை அழைத்துக் கொண்டு வந்த மரகதம், உமாவிடம், “இதுதான் அஞ்சலி. என் பேத்தி” என்று அறிமுகப்படுத்தினார். 

உமாவும் அஞ்சலியின் உயரத்திற்கு முட்டி போட்டு அமர்ந்து அவளின் கன்னங்களை பிடித்து கொஞ்சி நெற்றியில் முத்தமிட்டாள். 

அஞ்சலியும் மிரட்சியாக உமாவை பார்த்து, “நீங்கள் தான் என் சித்தியா?” என்று கேட்டாள். 

அதற்கு உமாவும் புன்னகைத்துக் கொண்டு, மறுப்பாக தலையாட்டிவிட்டு, “உனது அம்மா” என்றாள். 

அஞ்சலியும் லேசாக சிரித்துக்கொண்டே  உமாவின் அருகில் அமைதியாக நின்றாள். 

அப்பொழுது ஐயர் மணப்பெண் மணமகன் இருவரையும் அழைத்து வருமாறு சொல்ல, மரகதம் உமாவை அழைத்துக் கொண்டு மணமேடையை நோக்கி சென்றார். 

உமாவும் ஒரு கையில் அஞ்சலியை பிடித்துக் கொண்டு தலை குனிந்து மெதுவாக நடந்து சென்றாள். 

அங்கு மரகதத்தின் நெருங்கிய சொந்தக்காரர்கள் பத்து பதினைந்து பேர் மட்டுமே இருக்க ஓரமாக நின்று கொண்டிருந்த ஜீவானந்த் தன் மகளை அழைத்து வரும் உமாவை  தன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அழுத்தமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். 

அவனுக்கு இது விருப்பமில்லாத கல்யாணம். மரகதத்தின் வற்புறுத்தலினால் இன்று மணமகன் வேடம் பூண்டு நிற்கிறான். 

தந்தையை கண்டதும் அஞ்சலி உமாவின் கையை உதறிவிட்டு ஓடிச் சென்று தன் தந்தையின் காலை கட்டிக்கொண்டாள். 

அஞ்சலி தன் கையை உதவியதும் அப்படியே அசையாமல் ஒரு நொடி அவ்விடத்தில் நின்று விட்டாள் உமா. அவளைப் பொருத்தவரை இந்த திருமணம் தன் தந்தை என் மனதை புண்படுத்தாமல் இருப்பதற்காக தான். 

இந்த வயதில் தனக்கு திருமணம் அவசியமா என்று யோசனையில் இதுவரை இருந்தவள், அஞ்சலியை பார்த்ததும் தன்னை சிறுவயதில் பார்த்தது போலையே தோன்ற, அவளுக்கு அவளின் தாயாகவே இருக்க முடிவு செய்து அவள் கையை இறுகப்பற்றிக் கொண்டு நடந்தாள். ஆனால் அஞ்சலியோ சட்டு என்று அவளின் கைகளை உதவியதும் ஒரு நொடி என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள் உமா.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

2 thoughts on “சித்தி – 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *