தன்னை மணம் முடித்து வரும் பெண் தன் மகளுக்கு நல்ல தாயாக இருப்பாளா? இல்லை இதுவரை அவன் கேள்விப்பட்டது போலவே சித்தியாக நடந்து கொண்டு தன் மகளை துன்புறுத்துவாளா? என்ற யோசனையிலேயே தன் மகளுடன் நடந்து வரும் உமாவை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தவன் ஜீவானந்த்.
சட்டென்று அவளது கையைத் தட்டி விட்டு ஓடி வந்து தன்னை அணைத்த தன் மகளை தூக்கியவாறு, நான் இருக்கும் வரை என் மகளுக்கு எந்த தீங்கும் யாராலையும் நிகழ விடமாட்டேன் என்ற உறுதியுடன் மணமேடையை நோக்கி சென்றான்.
அஞ்சலி தன் கையை உதறிவிட்டுச் சென்றதும் அப்படியே அதிர்ந்து நின்ற உமாவை சரசு மணமேடையை நோக்கி நகர்த்தினாள்.
ஜீவானந்த் பக்கத்தில் உமா பாரதியை அமர வைத்தாள் சரசு. தன் அருகில் ஒரு மனிதன் அமர்ந்து கொண்டு இருப்பது, ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டு குனிந்து அக்னியில் பொருட்களை போடும் பொழுது அவளின் தோளில் அவனின் தோள் உரசியது அவளுக்குள் ஒரு புது விதமான குறுகுறுப்பை ஏற்படுத்தியது. அவனின் குரலில் நிரம்பி வழிந்த மிடுக்கு அவளின் மனதில் பதிந்தது.
ஐயர் மாங்கல்யத்தை பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் வாங்க சரசுவிடம் கொடுத்தார். இன்னும் சிறிது நேரத்தில் தன் கழுத்தில் தாலி கட்டி தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்வான் தன் அருகில் அமர்ந்திருந்தவன் என்ற எண்ணம் தோன்றியதும் மெதுவாய் நிமிர்ந்து தன் தந்தையை தேடினாள்.
அவளுக்கு எதிரிலேயே தனியாக நின்று கொண்டிருந்த தந்தையிடம் தன் வீட்டில் இருந்து தம்பி தங்கையர் சித்தி யாருமே வராமல் இருப்பதைக் கண்டு வருந்தினாள்.
அவளின் வருத்தத்தை அறிந்த முத்துராமன் அவளின் அருகில் வந்து “எதையும் நினைத்துக் கவலை படாதே மா. எல்லாமே நல்லபடியாக நடக்கும்” என்று ஆறுதல் சொல்ல மௌனமாய் தலை குனிந்து அமர்ந்தாள்.
முத்து முத்துராமன் அழைத்த அக்கம் அக்கம் பக்கத்தினர் மட்டுமே அவளது திருமணத்திற்கு வந்திருந்தனர். அவளின் சித்தியும் தம்பி தங்கை யாருமே வரவில்லை.
அவளின் மனதை அவர்கள் இல்லாதது சிறிது வருத்தத்தை ஏற்படுத்தியது. நல்ல நேரம் நெருங்க ஐயர் கெட்டிமேளம் கெட்டி மேளம் என்றதும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஐயர் கொடுத்த மஞ்சள் கயிற்றை வாங்கி தன் அருகில் அமர்ந்திருக்கும் மங்கையின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு மனைவியாக ஏற்றுக் கொண்டான் ஜீவானந்த்.
பின்னர் ஐயர் சொல்லிய ஒவ்வொரு சடங்குகளாக செய்து முடிக்க அரை மணி நேரம் ஆகியது. அப்பொழுதும் முத்துராமனின் குடும்பத்திலிருந்து ஒருவரும் கோயிலுக்கு வராமல் இருக்க வாசலையும் தன் மகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்று இருந்தார் முத்துராமன்.
அவரிடம் அந்த மரகதம் “இது உங்கள் ஊர் என்பதால் முதலில் உங்கள் வீட்டிற்கு தான் அழைத்துச் செல்ல வேண்டும். ஆனாலோ உங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட இங்கு வராதது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆகையால் நான் உங்கள் மகளை அழைத்துக் கொண்டு எங்கள் ஊருக்கு செல்கிறோம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
முத்துராமனுக்கு தன் மகளை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு ஆசைதான். ஆனால் இப்படிப்பட்ட ஒரு மனைவி தனக்கு அமைந்திருக்கும் பொழுது எந்த முகத்தை வைத்து தன் மகளின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு செல்வார்.
அவரோ மௌனமாக “சரிங்கம்மா உங்கள் விருப்பம் போலவே என் மகளை அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நான் என்னால் முடிந்த அளவு சீர் உடன் பின்னால் வருகிறேன்” என்று கண்களில் நீருடன் கூறினார்.
அவரைப் பார்த்த மரகதம் எங்களுக்கு எந்த சீர்செனத்தியும் வேண்டாம். உங்கள் மகள் மட்டும் போதும். நீங்கள் எதைப் பற்றியும் நினைத்து வருந்தாதீர்கள்” என்று கூறினார்.
பின்னர் தன் மருமகனிடம் சென்று “ஆனந்த் நாம் நம் வீட்டிற்கு உமாவை அழைத்துக் கொண்டு செல்வோம்” என்று கூற “உமாவா…?” என்று அவன் வினவினான்.
“உமா… உன் மனைவியின் பெயர் உமா பாரதி” என்று அவனை முறைத்து படி கூறிவிட்டு, “அவளின் தந்தை மட்டும் தான் இங்கு இருக்கிறார். அவர்கள் வீட்டில் இருந்து ஒருவரும் வரவில்லை ஆகையால் நாம் வீட்டிற்கு செல்லலாம்” என்று விளக்கமாக கூறினார் மரகதம்.
அவர் கூறியதும் அலட்சியமாக உமா பாரதியை பார்த்தான் ஜீவானந்த். ஏற்கனவே தன் தந்தையை விட்டு பிரிகிறோம் என்ற சோகத்தில் நின்றிருந்தவள், மரகதம் கூறக் கூற தன்னை வீட்டிற்கு வரவேற்க கூட ஒருவரும் விரும்பவில்லை போல என்று மனம் அழுத்த, கண் கலங்க நிமிர்ந்து தன் தந்தையை பார்க்கும் பொழுது, சரியாய் சற்று முன் தன் கழுத்தில் தாலி கட்டிய கணவனின் அலட்சிய பார்வையையும் கண்டு கண்களில் தண்ணீர் தானாய் வடிந்தது.
அவளின் அருகில் வேகமாக வந்த முத்துராமன். அவளின் கண்களை துடைத்து விட்டு, “இப்பதான் உனக்கு திருமணம் முடிந்திருக்கிறது. இப்பொழுது அழலாமா?” என்று கேட்டார்.
தந்தை தன் கண்ணீரை துடைத்ததும் அவரின் தோளில் சாய்ந்து “உங்களை விட்டு விட்டு எப்படி இருப்பேன் அப்பா” என்று வாய்விட்டு அழ ஆரம்பித்து விட்டாள் உமா.
அவளின் அருகில் வந்த சரசு “இப்ப எதுக்கு அழுகுற. கல்யாணம் பண்ணி பக்கத்து ஊருக்கு தான போற. நீ நெனச்சா அப்பாவ இங்க வந்து பாத்துக்கோ. இல்லன்னா உங்க அப்பாக்கு போன் பண்ணு. அவரு வந்து உன்ன பாக்க போறாரு. இதுக்கு ஏன் இந்நேரத்தில் அழுதுகிட்டு இருக்க?” என்று மிரட்டிக்கொண்டு அவளின் கண்களை துடைத்து ஆறுதல் கூறினாள்.
சரசுவின் மிரட்டலில் சற்று தெளிந்த “உமா இல்லை அக்கா. இப்படிப்பட்டவர்களின் மத்தியில் அப்பாவை தனியாக விட்டுச் செல்வதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று கண்களை துடைத்துக் கொண்டே கூறினாள்.
இவர்களின் சம்பாசனையை கேட்டுக் கொண்டிருந்த ஜீவானந்திற்கு இவள் தனக்கு இரண்டாம் மனைவியாக திருமணம் செய்ய வந்ததில் இவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு விருப்பமில்லை என்று தவறாக நினைத்துக் கொண்டான்.
பின்னர் தம்பதியர், தம்பதி சமேதமாக அம்பாளின் முன் வணங்கி விட்டு ,அங்கு ஏற்பாடு செய்திருந்த காலை உணவை முடித்துக் கொண்டு ஊருக்கு கிளம்புவதாக முடிவு செய்தனர்.
கோயிலில் தாலி கட்டி முடித்த நிமிடத்தில் இருந்து தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த அஞ்சலி ஒரு நொடி கூட அவனை விட்டு அகலவில்லை. சாமி கும்பிடும் பொழுதும் சரி, கோயிலை சுற்றி வரும் பொழுதும் சரி, பின்னர் காலை உணவிற்கு அமரும்பொழுதும் சரி தன் தந்தையின் அருகிலேயே இருந்து கொண்டாள்.
தன் மகளை கைப்பற்றி அழைத்துக் கொண்டே, தன் அத்தை சொன்ன அனைத்தையும் செய்து, சற்று முன் தனக்கு திருமணம் முடிந்து விட்டது என்றும் யோசனை அன்றி, உமாவை சிறிது கூட கவனிக்காமல் சாப்பிட உட்கார்ந்தான் ஜீவானந்த்.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
Nice epi
ஈமா பாவம்
உமா பாவம்