அவளை ஆழ நோக்கிய அருளாளனின் குரல் புயலுக்கு முந்தைய கடலின் அமைதியோடு வந்தது.
“என்னைக் கோபப்படுத்தாத…அது உனக்கு நல்லதில்ல…நான் எதைப் பத்திப் பேசுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும்.”
ஆம்.அவன் எதைப் பற்றிப் பேசுகிறான் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது…
“ “குட் மார்னிங் மேடம்… பிளீஸ் பீ சீட்டட்…” அமிழ்தாவிற்கு வணக்கம் தெரிவித்து அமரும்படி வேண்டினார் அந்த கமிஷனர்.
“குட்மார்னிங் சார்.”
“சொல்லுங்க மேடம்,ஆபிஸ் வரை வந்திருக்கீங்க எனிதிங் சீரியஸ்? “
“நத்திங் சார்.பட் எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு…அதை நீங்க தான் கிளியர் பண்ணனும்…”
“என்ன சந்தேகம் மேடம்?
இந்த ஊருல இறந்துபோனகலெக்டர் மிஸ்டர். அருளாளன் ஐ.ஏ.எஸ்,அம் ஐ கரெக்ட்?”
“எஸ் மேடம்.”
“நீங்க 4வருசமா இந்த ஊருல போஸ்டிங்கில் இருந்துருக்கீங்க…அப்பவுமே அருளாளனுடைய கேஸை விசாரிக்கலையே, நான் உங்களுடைய வேலைகளில் தலையிடுறேன்னு நினைக்காதீங்க, அஸ் அ கலெக்டர் மக்கள் கிட்ட இருக்குற தேவையற்ற பீதியைப் போக்குறது என் பொறுப்பு.
அதுக்காகத்தான் கேக்குறேன். கலெக்டர் அருளாளனுடைய மரணம் ஏன் சரியா விசாரிக்கப்படல்ல…”
“விசாரிக்கப்படல்லன்னுலாம் சொல்ல முடியாது மேடம்,அதுல விசாரிக்கறதுக்கு ஒண்ணுமில்ல,அது ஒரு விபத்து…கலெக்டர் அருளாளன் அன்னைக்கு ராத்திரி வேகமா தன்னுடைய இருசக்கரவண்டியை ஓட்டிட்டுப் போயிருக்காரு. அவர் மிகுந்த போதையில இருந்ததனால கவனம் தவறி மரத்தில மோதி அருகில இருந்த பள்ளத்துல விழுந்துருக்காரு, அது பாறைகள் நிறைஞ்ச இடம்ங்கறதால, தலையில அடிபட்டு இறந்துருக்காரு. அதோட விபத்துல தீப்பிடிச்ச அவருடைய வண்டியும் அவர் மேலேயே விழுந்து எரிய ஆரம்பிச்சுருக்கு, மிதமிஞ்சுன போதையில இருந்ததால அவரால எழுந்திருக்கமுடியல. அவருடைய உடலே கருகிய நிலையில்தான் கண்டெடுக்கப்பட்டிருக்கு”
“கருகுன உடலை வச்சு எப்படி அவர்தான்னு உறுதி செஞ்சீங்க?அதுவுமில்லாம என்னதான் குடிச்சிருந்தாலும் உடல் எரியறது கூடவா தெரியாது. எல்லாத்துக்கும் மேல ஒரு கலெக்டர் எதுக்கு நைட்டு பதினொரு மணிக்கு எந்த கார்ட்ஸ்ம் இல்லாம, தனியா அதுவும் பைக்கில வெளிய போகணும்?” கேள்விகளை அடுக்கினாள் அமிழ்தா.
அவளுடைய அடுக்கடுக்கான கேள்விகளிலும் அது கேட்கப்பட்ட வேகத்திலும் திணறினாலும் அவளுக்குப் பொறுமையாகவே பதிலளித்தார் காவல் ஆணையர்.
“மற்ற பாகங்கள் கருகி இருந்தாலும் அவருடைய முகம் கருகாமல்தான் இருந்தது.அடுத்து அவர் போதையில இருந்தார்ன்னுதான் நான் சொன்னேன்.குடிபோதையில இருந்தார்ன்னு சொல்லல,”
“யூ மீன், அவர் டிரக்ஸ் ஏதாவது… “
“எஸ் மேடம், அவர் டிரக்ஸைத் தன்னுடைய உடம்புல இன்ஜக்ட் பண்ணியிருந்துருக்காரு. தென், அவர் ஏன் பைக்ல போனாருன்னு அவர்ட்ட தான் கேக்கணும்.பட் அவர் எப்படி அவ்வளவு போதையோட பைக் ஓட்டிட்டுப் போனாருங்கறது தான் மருத்துவரோட கேள்வி”
“வாட்…சை…இர்ரெஸ்பான்ஸ்பில் இடியட்” வாய்விட்டே திட்டிவிட, “மேடம்? ” பிரதாப் தாங்க முடியாமல் குறுக்கிட்டு விட்டார்.
அமிழ்தா கேள்வியாக நோக்க,
“அருள் சார் அப்படிப்பட்டவரெல்லாம் கிடையாது மேடம். அவரும் பர்சனல் விஷயங்களுக்கு உங்களை மாதிரியே அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தமாட்டாரு, அதுனால அவர் தனிப்பட்ட விஷயமா எங்க போறதா இருந்தாலும் தன்னுடைய பைக்கதான் பயன்படுத்துவாரு. அன்னைக்கும் அப்படிதான் போயிருப்பாருன்னு நினைக்குறேன். அருள் சார் ரொம்ப நல்லவர் மேடம். அருள் சாருக்கு போதை மட்டுமல்ல,எந்த விதமான கெட்டப்பழக்கமும் கிடையாது.”
“அப்படின்னு நீங்க மட்டும்தான் சொல்றீங்க மிஸ்டர் பிரதாப் நீங்க அருளாளன் கூட நாள் முழுக்க இருந்திருக்க மாட்டீங்கள்ல…
அப்பறம் அவருடைய தனிப்பட்டப் பழக்கவழக்கங்கள் உங்களுக்கு எப்படி தெரியும்?
அருளாளனுக்குப் போதைப் பழக்கம் இருந்துருக்குங்கறத அவரோட பிரன்ட்ஸ்,ஏன் பேரன்ட்ஸே ஒத்துகிட்டு இருக்காங்க. எப்பவுமே போதையில தலையில ஹெல்மெட் இல்லாம வண்டியை ஸ்பீடா ஓட்டிட்டுப் போறதில்ல இருக்கத் திரில் அவருக்கு ரொம்பப்பிடிக்கும்மாம். அவருடைய காலேஜ் பிரன்ட்ஸ் கொடுத்த ஸ்டேட்மென்ட் இது…”கமிஷனர் சொல்ல, அமிழ்தாவிற்கு வாயில் நன்றாக வந்தது.
“ஓகே சார்,இதுக்குமேல பேசி உங்க நேரத்தையும் என்னுடைய நேரத்தையும் வீணடிக்க நான் விரும்பல,இதெல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்டது தான்…”என்று எழுந்தவள்
திடீரென என்ன நினைத்தாளோ, கமிஷனரிடம் “சார் நீங்க எதுக்கும் அருளாளன் கேஸைத் திரும்ப எடுத்து விசாரிக்க முடியுமா?” என்றாள்.
கிளம்பப்போவது போல் எழுந்தவள் திடீரென இப்படி கேட்கவும் திகைத்த கமிஷனர்,
“ம்ம் பண்ணலாம் மேம். ஆனால் அதுக்கு அருளாளன் மரணம் விபத்து இல்லைங்கறது நிரூபணம் ஆகணும் இல்லன்னா அட்லீஸ்ட் சந்தேகமாவது படுற மாதிரி இருக்கணும். அதை அவருடைய குடும்பத்தார் யாராவது கோர்ட்டுல கேஸ் பைல் பண்ணாங்கன்னா பார்க்கலாம். நாங்களா ரீ ஓபன் பண்றதுக்கு வேலிட் ரீசன் வேணும் மேம்.சும்மான்னா பரவால்ல,அவர் ஒரு ஐ. ஏ. எஸ் ஆபிசர்ஙகறதால நிறைய பேருக்குப் பதில் சொல்ல வேண்டி வரும்…” என்று இழுத்தார்.
“சரி சார் அதுக்குரிய ஏற்பாடுகளைப் பண்ணுறதுக்கு வழி செய்யுறேன்.நீங்க எதுக்கும் அருளாளன் சம்பந்தப்பட்ட பைல்ஸ தூசுதட்டி வைங்க…”
“மேம் எதுக்காக அவருடைய கேஸை ரீஓபன் பண்ணனும்ன்னு இவ்வளவு ஆர்வமா இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”
அவரைக் கூர்ந்துப் பார்த்தவள் “எனக்கு அவருடைய மரணம் கொலையா இருக்கும்மோன்னு ஒரு சந்தேகம்?”என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
உண்மையில் கமிஷனரைச் சந்திக்;க வரும்போதே இறந்துபோன கலெக்டர் அருளாளனின் மரணத்தில் அவளுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.விபத்து என்பதில் உறுதியாகத் தான் இருந்தாள்.
ஆனால் அருளாளன் என்று சொல்லி தன்னைச் சந்தித்தவனின் மீது சந்தேகம் இருந்தது….
அருளாளனுடைய மரணம் பற்றி மீண்டும் தோண்டினால் அவனுடைய பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களுக்குத் தான் பாதிப்பு வருமேயானால்….
ஒருவேளை அந்த அவன் ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பானேயானால்…
அவன் தன்னைச் சதியின் ஓர் அங்கமாகத் திட்டமிட்டுச் சந்தித்து இருப்பானேயானால்…
நிச்சயமாக அவளைச் சந்தித்து இதைப்பற்றி கேட்க வரக்கூடும் என இரவிற்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் அவளுடைய மனதின் ஓர் ஓரமோ இவன் அவளைச் சந்தித்து இதனைப் பற்றிக் கேட்டுவிடக்கூடாது; விளையாட்டிற்காகவே தன்னிடம் அப்படிச்சொல்லியிருக்க வேண்டும் என மருகிக்கொண்டே இருந்தது.
ஆனால் இரவில் வரக்கூடும் என்று எதிர்பார்த்தவன் இப்படி பட்டப்பகலில் அவளுடைய அலுவலகத்திற்கே வந்து நின்றதோடு அவளையே அதட்டவும் அவளுடைய நம்பிக்கைப் பொய்த்துப்போனதில் அவளுக்குக் கோபம் மட்டுமல்ல கொலைவெறியே வந்தது…
அதை அடக்கிக்கொண்டுதான், அடக்கிக்கொண்டதாகக் காட்டிக் கொண்டு தான் பேசிக்கொண்டிருந்தாள்.
“யாரைக்கேட்டு என்னுடைய கேஸ் கொலைக்கேஸா இருக்கலாம்ன்னு சந்தேகமா இருக்குன்னு கமிஷனர்கிட்ட பேசித் திரும்ப அதைத் திரும்ப விசாரிக்கணும்ன்னு சொல்லிருப்ப…”அருளாளனுடைய குரலில் கோபம் இருக்க,
“கொலைக்கேஸா…நான் உங்கமேல வெறும் ஆள்மாறாட்டவழக்கு மட்டும்தான் போடலாம்ன்னு நினைச்சேன்.நீங்க கொலையெல்லாம் பண்ணியிருக்கீங்களா?” அமிழ்தாவினுடைய குரலிலோ கோபத்தோடு நக்கலும் கலந்திருந்தது.
“ப்ச் நான் எதைப் பத்தி பேசிகிட்டு இருக்கேன் நீ எதைப்பத்தி பேசிட்டு இருக்க லூசாடி நீ?”
“மிஸ்டர்….”
அமிழ்தாவின் குரல் உயர்ந்திருந்தது.
“யார்கிட்ட என்ன பேசறோம்ன்னு மனசுல வச்சுகிட்டுப் பேசுங்க. நான் இந்த மாவட்டத்தோட ஆட்சியர்… அமிழ்தா ஞானசேகரன் ஐ.ஏ.எஸ்.”
கோபத்தை உள்ளடக்கி நிறுத்தி நிதானமாக வந்த அந்தக்குரலில் இருந்த எச்சரிக்கைக்கு யாராக இருந்தாலும் நிச்சயம் சர்வ நாடியும் அடங்கியிருக்கும்…
ஆனால் அவள் எதிரில் நின்றவன் அருளாளன் ஆயிற்றே…
அவளது எச்சரிக்கையைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவன், புருவம் தூக்கி “இருந்துட்டுப் போ அதுக்கென்ன இப்ப…” என்றான் அலட்சியமாக.
அவனது அந்த அலட்சியத்தில் அமிழ்தாவின் பொறுமையோடு அவள் அவனுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த மரியாதையும் காற்றில் பறந்தது.
“டேய் ரெண்டு தடவை ஹெல்ப் பண்ணுனங்கற ஒரே காரணத்துக்காக, உன்கிட்ட இப்படி பொறுமையா பேசிட்டு இருக்கேன்.அதுக்காக நீ என்ன பண்ணாலும் பொறுமையாக இருப்பேன்னு நினைக்காத…”
“இதெல்லாம் நான் உங்கிட்ட சொல்லவேண்டிய வார்த்தைகள்…நீ எங்கிட்ட சொல்லிட்டு இருக்க…
நானும் பாவம் சின்னபொண்ணுன்னு ரொம்ப பொறுமையா இருக்கேன். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட அதாவது அருளாளனுடைய மரணத்தில சந்தேகம் இருக்குன்னு திரும்ப அந்த வழக்கத் தோண்டுவ…”
‘எனக்கு ஒண்ணும் அந்த விளங்காதவனோட மரணத்துலஎல்லாம் சந்தேகம் இல்ல .அதைப்பத்தி தெளிவா விசாரிச்சுட்டேன் என் சந்தேகம் எல்லாம் உன்மேலதான்.’ என மனதில் நினைத்தவள், “எனக்கு சந்தேகம் வந்தா நான் அந்த அருளாளனுடைய கேஸைத் தோண்டுவேன் இல்லன்னா அருளாளனோட சமாதியையே தோண்டுவேன் அதைக் கேட்க நீ யாருடா?” என்றாள்.
சமாதியைத்தோண்டுவேன் என்றதும் ஒருநிமிடம் ருத்ரனாய் மாறிய அவனது முகத்தில் தெரிந்த ரௌத்திரம் யாருக்கும் பயந்தறியாத அமிழ்தாவின் முகத்திலேயே பயத்தை வரவழைத்தது.
அவளது முதுகுத்தண்டு சில்லிட தன்னையறியாமல் பின்னோக்கி இரண்டடி வைத்தவளை உறுத்து விழித்தவன்,
சீற்றம் நிறைந்த குரலில் “அந்த அருளாளனே நான்தான்னு சொன்னேன்ல…” என்றபடி அவளை நோக்கி முன்னேற முதுகுத்தண்டில் பரவியிருந்த குளிர் அமிழ்தாவின் நெஞ்சிலும் பரவ ஆரம்பித்தது.
(வருவான்…)
Ena marmam iruku ivan savu la avanukaga thana ava file reopen panra athuku Yen ivan ivlo kova padanum
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super