Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 13

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 13


எனக்குச் சந்தேகம் வந்தா நான் அருளாளனுடைய கேஸைத் தோண்டுவேன் இல்லன்னா அருளாளனோட சமாதியையே தோண்டுவேன் அதைக் கேட்க நீ யாருடா? என்றாள்.
சமாதியைத்தோண்டுவேன் என்றதும் ஒருநிமிடம்  ருத்ரனாய் மாறிய அவனது முகத்தில் தெரிந்த ரௌத்திரம் அமிழ்தாவின் முகத்திலேயே பயத்தை வரவழைத்தது.அவளது முதுகுத்தண்டு சில்லிட தன்னையறியாமல் இரண்டடி வைத்தவளை நோக்கி உறுத்து விழித்தவன் சீற்றம் நிறைந்த குரலில் “அந்த அருளாளனே நான்தான்னு சொன்னேன்ல…” என்றபடி முன்னேற முதுகுத்தண்டில் பரவியிருந்த குளிர் அமிழ்தாவின் நெஞ்சிலும் பரவ ஆரம்பித்தது.

அந்தக் குளிரைச் சமாளித்தபடி “என்ன… பயமுறுத்தப்பாக்குறியா? அதெ…ல்லாம் என்கிட்…ட நடக்காது…” தைரியமாகப்பேசமுயன்றாலும் சொற்களை நாவு விட்டு விட்டு தான் தட்டச்சு செய்தது.

அவளுடைய பயத்தைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ,தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி, அமைதியாகவே அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“உன்னை பயமுறுத்தணும்ன்னு நினைச்சுருந்தா எப்பவோ அதை செஞ்சுருப்பேன்…
உன்னைப் பயமுறுத்திற கூடாதுங்கற ஒரே காரணத்துக்காகத்தான் என்னுடைய இன்னொரு ரூபத்தை உனக்குக் காட்டாம இருக்கேன்.
யாருக்கும் காட்டாத இந்த அமைதியை உன்கிட்ட காட்டிட்டும் இருக்கேன்.
நான் இயல்பாவே கோபக்காரன்தான். நான் செத்ததுமே சாதாரணமான முறையில சாகல,
ரொம்பக் கொடூரமான முறையிலதான் என் சாவு இருந்துச்சு. அதனாலதான் அமைதியடையாம இப்படி பேயா சுத்திட்டு இருக்கேன்.
உனக்கு உயிர் மேல ஆசை இருந்தா, ஒழுங்கு மரியாதையா அருளாளன்ங்கிற பேரையே மறந்துட்டு உன்வேலையை மட்டும் பாரு…
இல்லன்னா என்னோட இன்னொரு ரூபத்தையும் நிஜமான கோபத்தையும் பார்க்க வேண்டி வரும்.
அதைப் பார்க்கணும் ன்னு நினைச்சு எனக்குக் கம்பெனி கொடுக்கப் பேயா மாறியிராத…”.

அவன் மிரட்டலே விடுத்தாலும் அவனது அமைதியான குரல் அவளது மனதையும் சாந்தப்படுத்தி அவளுடைய பயத்தை மட்டுப்படுத்தியது.

ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள்,
“இப்ப நீங்க என்ன சொல்றீங்க…நீங்க தான் செத்துப்போன கலெக்டர் அருளாளன்.அப்படிதான?…”என்றாள்.

அவள் என்னதான் கட்டுப்படுத்தியிருந்தாலும் அவளுடைய குரலில் இருந்த பயம் போயிருக்கவில்லை.
தெரியத்தான் செய்தது.

“உனக்கெல்லாம் புரியவே செய்யாதா” என்பது போல அவன் பார்க்க,
“சரி சரி நீங்கதான் செத்துப்போன கலெக்டர் அருளாளன். நான் ஒத்துக்கிறேன்.
ஆனா என்னோட சில சந்தேகங்களைத் தீர்த்து வைச்சிருங்க…நான் முழுசா நம்புறேன்…”

அவன் கேள்வியாக நோக்க,
அவள் தொடர்ந்தாள்.

“நீங்க நிஜமாவே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி டிரக்ஸ் இன்ஜெக்ட் பண்ணிட்டு பைக்ல போன ஆக்ஸிடன்ட்லதான் இறந்தீங்களா?”, அவன் எதனால் இப்படி நடித்துக்கொண்டிருக்கிறான் என்பதைப் போட்டு வாங்குவதாக மனதில் நினைப்பு…

 அவளது கேள்வியில் எங்கேயோ வெற்றிடத்தை வெறிக்கத்தொடங்கியவன், சற்றுநேரம் கழித்து, அமைதியான  உணர்ச்சியற்ற தெளிந்த குரலில் கேட்டான்.
“டிரக்ஸ் இன்ஜெக்ட் பண்ணிருந்ததாதான போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுச்சு…
நானே இன்ஜெக்ட் பண்ணிருந்தேன்னு சொல்லுச்சா?
இன்ஜெக்ஷன் யார்ன்னாலும் போட்டுவிடலாம்ல…”
அவனது கேளவியில் அமிழ்தாவின் இப்பொழுது அதிர்ந்தாள்.
உண்மையாக இருக்குமோ என்று தோன்றியது.
அவன் பேய் என்பதல்ல…
அருளாளனின் மரணத்தைப் பற்றி அவன் கூறியது.
இந்தக் கோணத்தில் அவள் சிந்திக்கவில்லையே…
முதல்முறையாக அந்த அருளாளன் உண்மையாகவே நல்லவனோ என்றும் தோன்றியது.
அவள் இதுநாள் வரை அவனை நல்லவன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
ஏனென்றால் இந்த ஊரில் ப்ரதாப்பையும் அந்த வாட்ச்மேன் தம்பதியினரையும் தவிர யாரும் அருளாளன் நல்லவன் என்று கூறவில்லை.
ஆனால் இப்பொழுது இவன் கூறிய கோணத்தில் சிந்தித்தவளுக்கு, இவன் அருளாளனின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிவதற்காகத்தான் தன்னிடமே இப்படி தைரியமாக நாடகமாடுகிறானோ என்று தோன்றிவிட,
பிரகாசமாகத் தொடங்கிய மனதை அவளது மூளை ஒரு கேள்வியின் வழியாக அடக்கி வைத்தது.
அந்தக் கேள்வியை அவனிடம் கேட்டாள்.

“அப்படியே இன்ஜக்ஷன் வேற யாரோ போட்டுருந்தாலும் அதுக்கப்பறம் அருளாளன் ஐ மீன் அதாவது நீங்க எதுக்கு பைக்  ஓட்டிட்டு வரணும்? ரிப்போர்ட் தெளிவா போதைமருந்து உட்கொண்டு அரைமணிநேரத்துக்குப் பின்னால நடந்த ஆக்ஸிடன்ல தான் உயிர்போச்சுன்னு சொல்லுதே…”

“போதைமருந்து போட்டு அரைமணிநேரம் கழிச்சு உயிர்பிரிஞ்சுருக்குன்னு சொல்லுச்சே தவிர, பைக் ஓட்டிட்டுப் போனேன்னு ரிப்போர்ட் சொல்லுச்சா?” அதே கல்லெறியப்படாத தெளிந்த குளத்தின் அமைதியைப் பிரதிபலிக்கும் குரல்.

அவன் சொல்வது குழப்பிவிடுவது போல இருந்தாலும் ஏதோ தெளிவாவது போல இருந்தது அமிழ்தாவிற்கு.
ஏனோ அவன் அவளெதிரே இல்லாதபோது அவன் ஏமாற்றுக்காரன், சதிகாரன் என்றெல்லாம் தோன்றியபோதும் அவனை நேராகக் கண்ணில் கண்ணிட்டுப் பார்க்கும் போது அந்த விழிகளில் பொய்மையோ கயமையோ எவ்வளவு தேடினாலும் காண இயலவில்லை.
ஆனால் அதற்காக அவன் சொல்லும் பேய்க்கதையையும்  அவள் நம்பத் தயாராக இல்லை.
இவன் அருளாளனுக்கு ஏதோ ஒருவகையில் வேண்டப்பட்டவன், அவனது மரணத்திற்கு நீதி கேட்பதற்காக இப்படி செய்கிறானோ என்று தோன்றியது அவளுக்கு.
அந்த நீதியை அவளே வாங்கிக் கொடுத்துவிட்டால்?
உண்மையில் அந்த அருளாளன் நல்லவனாக இருப்பானேல், இவனுக்காக என்று மட்டுமல்ல, அவனுக்கு நீதி கிடைக்க வைக்க வேண்டியது அவளுடைய தார்மீகக்கடமை என்று தோன்றவே நிஜமாகவே அருளாளனுடைய கேஸைத்தோண்ட வேண்டும் என்று எண்ணியவள் அவனிடம் கேட்டாள்.

“அதாவது அருளாளனை ஐ மீன்…உங்களை யாரோ போதைமருந்து கொடுத்து அதன்பின் ஆக்ஸிடன்ட்ங்கிற போர்வையில கொலை பண்ணிட்டாங்கன்னு சொல்லவர்றீங்களா?”

‘அதை நான் என் வாயால வேற சொல்லணுமா?’ என்கிற ரீதியில் அவன் பார்க்க,

அதைக்கண்டவள் “சரிசரி அப்படியே பண்ணிருந்தாலும் யார் பண்ணது? அதுக்கான மோட்டிவ் என்ன?சொல்லுங்க பேய் சார்…” என

“அது உனக்குத் தேவையில்லாத விஷயம்…” பதில் பட்டென்று வந்தது.

“ப்ச். இங்கதான் எனக்கு இடிக்குது. நீங்கதான் அருளாளன்னு சொல்றீங்க.ஓ.கே.பேய்ங்கிறீங்க, கொலை பண்ணிட்டாங்கங்கறீங்க.எல்லாம் சரி. ஆனா  அப்படி இருந்தா உங்களுடைய கேஸ் ரீஓபன் ஆனா உங்களுக்கு நீதி கிடைக்குதுன்னு நீங்க சந்தோஷம்தான படணும்…
ஆனா நீங்க அதைப் பண்ணலையே…
அதுக்குப் பதிலா இங்க வந்து இப்படி பேய் மாதிரி கத்திகிட்டு இருக்கீங்க…ஓ.சாரி சாரி நீங்க பேய்தானோ, வேற என்ன மாதிரின்னு சொல்லலாம்? ” அவளுடைய குரலில் கிண்டல் கிலோக்கணக்கில் இருந்ததென்றால் ,
“எனக்கு நீதி கிடைக்குமா? எப்படி கிடைக்கும்? எந்தக் கடையில் கிடைக்கும்?” அவனுடைய குரலில் நக்கல் டன்கணக்கில் இருந்தது.

கிண்டலை  விடுத்துத் தீவிரமானவள்,
“அருளாளனுடைய மரணத்துக்குக் காரணமானவங்களுக்குத் தண்டனை கிடைச்சுட்டா அவருக்கு நீதி கிடைச்சிருச்சுன்னுதானே அர்த்தம்?” என்று உறுதி படக் கேட்டாள்.

“அருளாளனுடைய மரணம்…
நீ இன்னமும் நான்தான் அருளாளன்னு நம்பலல்ல.
எக்கேடும் கெட்டுத்தொலை.
ஆனால் தண்டனைன்னா என்ன பெரிய தண்டனை வாங்கிக்கொடுப்ப?”அவனுடைய குரல் அவள் நம்பித்தொலையமாட்டேன் என்கிறாளே என்னும் கடுப்பில் வந்தது.

“ப்ச். நான் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிஸர், கலெக்டர் என்னால அதிகபட்ச தண்டனையை வாங்கிக்கொடுக்க முடியும்.”

“நான் என்ன உன்கிட்ட மனுவா கொடுக்க வந்திருக்கேன்,
நான் கலெக்டர் நான் கலெக்டர்ன்னு திரும்பத்திரும்ப சொல்லிட்டு இருக்க, நானும் ஐ.ஏ.எஸ் ஆபிஸரா இருந்தவன்தான்,
எனக்கும் தெரியும்.
ஆனால் உன்னால என்ன தண்டனை வாங்கிக்கொடுத்துர முடியும்? அதிகபட்சம் மரணதண்டனை? அது உன்னால வாங்கிக்கொடுக்க முடியுற அளவுக்கான அதிகபட்ச தண்டனைதானே தவிர அவங்க பண்ணத் தப்புக்கான அதிகப்பட்ச தண்டனை கிடையாது.
அதுவுமில்லாம அந்த மரணதண்டனையால எதுவும் ஆகாது.
ஒண்ணு என்னை மாதிரி பேயா அலையலாம்.
இல்லன்னா, திரும்ப இன்னொரு பிறவி எடுக்கலாம்.
இது தப்பு செஞ்சாலும் செய்யலன்னாலும் எல்லா மனுஷங்களுக்கும் நடக்குற ஒண்ணு. இது எப்படி தண்டனையா மாறும்?”

“அப்ப என்ன தண்டனை வாங்கிக்கொடுக்கணும்ன்னு சொல்றீங்க” அமிழ்தா புரியாமல் கேட்க,
அவனுடைய முகத்தில் ஒரு மர்மப்புன்னகை பரவியது. “ஒவ்வொருத்தருக்குமே ஒவ்வொரு பலம் பலவீனம் இருக்கும். ஒருசிலருக்குத்தான் அவங்களோட பலமே பலவீனமாவும் இருக்கும். அந்த பலவீனத்தைப் பார்த்து அடிச்சா எழுந்திரிச்சு நிக்கிறதுக்கான பலம் கூட அவங்ககிட்ட இருக்காது.” முகம் புன்னகையில் இருந்தாலும் அருளாளனின் குரல் அதற்கு மாறான நிலையில் வெளிப்பட்டது.

அமிழ்தா இன்னும் குழப்பத்திலேயே இருக்க, “உன்னோட பிரெண்ட் அந்த அரசனா…அமைச்சனா…ம்ம்ம்…ஆங்…சக்தி…சக்தியரசன்…அவனைப் பத்திரமா இருக்கச்சொல்லு… அதைவிட உயிரோட இருக்கணும்ன்னு ஆசையிருந்தா இந்த ஊரைவிட்டே போகச்சொல்லு.
இல்லன்னா இந்த உலகத்தை விட்டே போயிருவான், என்னை மாதிரி…” என்று விட்டுச் சென்றான்.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவள் அவன் கடைசியாகக் கூறிச்சென்ற வார்த்தைகளில் திக்பிரமைப்பிடித்துப்போனவளாய்த் திகைத்து  நின்றாள்…

                                              (தொடரும்…)

2 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *