Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 14

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 14

“மேடம்…மேடம்….அமிழ்தா மேடம்…”  ஏற்கனவே கதவருகே நின்று அனுமதி கேட்டுக் கேட்டுப் பதில் வராமல் போனதில் பதறியடித்து உள்ளே நுழைந்திருந்த பிரதாப் பலமுறை அழைத்தும் பதிலளிக்காமல் அமிழ்தா பேயடித்தாற்போலவே (பேய்தானே அரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.) அரண்டு நிற்க, மெல்ல அவளது கையைத் தட்டினார்.

“உன்னோட பிரெண்ட் அந்த அரசனா அமைச்சனா…ஆங்…சக்தி…சக்தியரசன்…அவனைப் பத்திரமா இருக்கச்சொல்லு… அதைவிட உயிரோட இருக்கணும்ன்னு ஆசையிருந்தா இந்த ஊரைவிட்டே போகச்சொல்லு. இல்லன்னா இந்த உலகத்தை விட்டே போயிருவான், என்னை மாதிரி…” அருளாளனின் சொற்கள் மீண்டும் மீண்டும் காதுகளில் எதிரொலிக்க, வெளியுலகத் தொடர்பைத் துண்டித்து விட்டு மனம் அதையே மீண்டும் மீண்டும் உருப்போட்டுக் கொண்டிருந்தது.

ப்ரதாப் கையைத் தட்டியதும் தொடர்பு எல்லைக்குள் வந்தவளுக்கு உடனே சக்தியைத் தொடர்புகொள்ள வேண்டும் எனத் தோன்ற, சக்தியின் எண்ணிற்கு முயற்சி செய்தாள்.
அது எந்தவித பதிலையும் அளிக்காமல் இருக்க, ‘ஒருவருசமா எடுக்காதவன் இப்பவா எடுத்துரப்போறான் நான் ஒருத்தி,’ எனத் தலையிலடித்தவாறு ‘நேரிலேயே போய்ப் பார்த்து விடலாம்’என்று கிளம்பினாள்.

அழைக்க அழைக்கப் பதில் தன்னிடம் பேசாமல் இருந்துவிட்டு யாருக்கோ பேசப் போனடித்து பின் தன் தலையில் தானே அடித்து வெளியே கிளம்பப்போன அமிழ்தாவை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்த ப்ரதாப், மேடம்? என்றார் வியப்பாக.

அப்பொழுதுதான் அவர் இருப்பதையே நினைவுக்குக் கொண்டுவந்தவள் ஒருவிதமாக விழித்துவிட்டு “சாரி ப்ரதாப் சார்.நான் இப்ப முக்கியமா ஒரு இடத்துக்குப் போகணும்.” என,
“அதைத்தான் மேடம் நானும் சொல்ல வந்தேன். இப்ப எம்.எல்.ஏ கூட மீட்டிங் இருக்கே மேடம். ” என்று பிரதாப் சொன்னார்.

“எம்.எல்.ஏ கூட மீட்டிங்கா? “அமிழ்தா நெற்றியை விரல்களால் அழுத்திவிட, “ஆமாம் மேடம். குறைதீர்ப்புக்கூட்டத்துல மக்கள் கொடுத்த மனுக்களை எம்.எல்.ஏ ஆபிஸ்க்கு அனுப்பியும் எந்த ஆக்ஷனும் எடுக்கலன்னு நேர்ல போய்ப்பேசுனாதான் சரியா வரும்ன்னு அப்பாயின்மென்ட் வாங்க சொன்னீங்களே மேடம். நேத்தே சொன்னேனே மேடம்.இப்ப அதை நினைவுபடுத்த தான் வந்தேன்.12 மணிக்கு மீட்டிங் மேடம். மணி இப்ப 11.35… கிளம்புனாதான் மேடம் சரியா இருக்கும்.கிளம்பலாமா மேடம்?” என்று விளக்கினார் பிரதாப்.

‘ம்ம்’ என்றவள் அவருடன் சென்றாலும் “உன்னோட பிரெண்ட் அந்த அரசனா அமைச்சரா…ஆங்…சக்தி…சக்தியரசன்…அவனைப் பத்திரமா இருக்கச்சொல்லு… அதைவிட உயிரோட இருக்கணும்ன்னு ஆசையிருந்தா இந்த ஊரைவிட்டே போகச்சொல்லு. இல்லன்னா இந்த உலகத்தை விட்டே போயிருவான், என்னை மாதிரி…” அவன் குரல் காதில் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது.

அதையே யோசித்துக்கொண்டு இருந்தவள், ப்ரதாப் அவளை யோசனையுடன் பார்ப்பதைப் பார்த்து விட்டு “இல்லை பர்சனல் விஷயத்தை வேலைநேரத்தில் யோசித்து மனதை உழப்பக்கூடாது.

ஆனால் சக்தி…” என்று எண்ணியவள் ஒருபெருமூச்சொன்றை விட்டு’ சக்தியிடம் கவனமாக இருக்கும்படி எச்சரித்துவைக்க வேண்டும்தான்.ஆனால் தனக்கு வரும் பிரச்சனையை சமாளிக்கத் தெரியாதவன் அல்ல. அதோடு அவளை மிரட்டிவிட்டுப் போனவனும் எதற்காக அப்படி மிரட்டினான் என்று தெரியாவிட்டாலும் கொலைகிலை என்று இறங்குகிறவன் அல்ல, அப்படியே அவன் இறங்கினாலும் அவனை நினைத்துப் பயப்படுவதற்கு அவன் என்ன உண்மையான பேயா என்ன?’ என்று தோன்றவும் ப்ரதாப்பிடம் எம்.எல்.ஏ கவனத்திற்குக் கொண்டுபோக வேண்டிய முக்கியமான மனுக்களைப் பற்றிக் குறிப்பெடுக்கச் சொல்லத்தொடங்கினாள்.


‘ஓ.கே மேடம்.
சரிங்க மேடம்.”
அவள் சொல்லிய எல்லாவற்றையும் தெளிவாக குறித்து வைத்துக்கொண்டு, பிரதாப்பின் முகமும் தெளிந்திருந்தது.

அதற்குள் அந்த சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகமும் வந்துவிட, இறங்கிச்சென்றனர் இருவரும்.
சரியாகப் 11.57க்கு அந்த அலுவலகத்தினுள் இருந்தாள் அமிழ்தா.
காத்திருக்கச் சொல்லி தகவல் வர, அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
பிரதாப் ரிசப்சன் அருகே நிற்க, அமிழ்தாவின் அருகில் டபாலி நின்றிருந்தார்.
அவரைப் பார்த்தவள் “நீங்க ஏன்ண்ணா நின்னுட்டே இருக்கீங்க.உட்காருங்கண்ணா” என்று அருகிலிருந்த நாற்காலியைக் காட்டினாள்.
“இல்ல மேடம்…நான் எப்படி உங்களுக்குச் சமமா” என்று அவர் இழுக்க,
“சும்மா உட்காருங்கண்ணா. அரசியல்வாதிங்கல்லாம் எவ்வளவு நேரம் காக்க வைப்பாங்கன்னு சொல்ல முடியாது. எவ்வளவு நேரம் இப்படியே நிப்பீங்க உட்காருங்கண்ணா” என்றாள்.

“இல்லங்கம்மா ப்ரதாப்  சார்  வரவும் வேணும்னா நான் அந்தப்பக்கமா போய் உட்கார்ந்துகிறேன் மேடம்” என்று அவர் மீண்டும் தயங்க,
“அண்ணா நான் உங்களை உட்காரச்சொன்னேன்”  என்று அழுத்திச்சொன்னாள் அமிழ்தா.

அந்த அழுத்தத்தில் அவரையறியாமல் அமர்ந்துவிட அங்குவந்த ப்ரதாப்பும் இதையே தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வரவும் டபாலி எழப் போக, அவரைக் கண்களால் தடுத்து பிரதாப்பிடமும் அவளுக்கு மறுபுறமிருந்த நாற்காலியைக் காட்டியவள்
“என்ன பிரதாப் சார்.12 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுத்துட்டு நம்மளை எதுக்காக வெயிட் பண்ண வைக்கிறாங்களாம்” என்றாள்.

“இல்ல மேடம் வேற யாரோ முக்கியமானவங்களோட எம்.எல்.ஏ பேசிட்டு இருக்காராம். அதனால நம்மை ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணச்சொன்னாங்க.”

‘பத்…து நிமிஷம் ப்ச் ‘என்று எரிச்சலுடன் திரும்பியவள் அங்கு அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவனைக் கண்டதும் அந்தப் பத்து நிமிஷத்திற்காக எம்.எல்.ஏவிற்கு மானசீகமாக நன்றி சொல்லியவள், பிரதாப்பிடமும் டபாலியிடமும் ‘ஒரு நிமிடம். வந்துவிடுகிறேன்.’ என்றுவிட்டு அவனை நெருங்கினாள்.

அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த டபாலி இந்த மேடம் நம்ப அருள்சார் மாதிரியே பண்றாங்கல்ல சார் என்று பிரதாப்பைக் கேட்க பிரதாப்பின் தலை ஆமோதிப்பாய் அசைய, வாய் ‘அதான் எனக்கும் பயமா இருக்கு.’ என்ற சொற்களை முணுமுணுத்தது.

அமிழ்தா பேசிக்கொண்டிருந்தவனிடம் சென்றாள்.
ஆம். அது சக்திதான். பத்மினியிடம்தான் பேசிக்கொண்டிருந்தான்.

“சொல்லுங்கம்மா நீங்க ஏதோ எங்கிட்ட பேசணும்ன்னு சொன்னீங்கன்னு அப்பா சொன்னாரும்மா.”

“நீங்க சொல்லலையா…”

“ஒண்ணும் இல்லம்மா,இங்க எம்.எல்.ஏ ஆபிஸ் வர வந்தோம். எம்.எல்.ஏ கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வச்சுட்டு நீங்க என்கிட்ட ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்கன்னு சொல்லி என்னைப் போய்ப் பேசச்சொன்னாரு. நான் என்னன்னு அவர்கிட்டயே கேட்டுக்கிறேன்.”

“ஆ. சரிம்மா…”

“சாப்பிட்டேன்மா.நீங்க?”

“சரிம்மா.நான் போனை வச்சுறேன்.”

தொடர்பைத் துண்டித்தபடி திரும்பியவன், எதிரே நின்றிருந்த அமிழ்தாவைக் கண்டு திட்டத்தொடங்கும் முன் கையை உயர்த்தி அவனைத் தடுத்தாள் அவள்.

“லுக்ஸமிஸ்டர் சக்தியரசன். நான் உங்களுக்கு அப்படி என்ன துரோகம் பண்ணேன்னு எனக்குத் தெரியல. மிஞ்சிமிஞ்சி போனா எதாவது டெய்ரிமில்கோ பைவ்ஸ்டாரோ இல்ல ஐஸ்கிரீம்மோ உங்களுக்குக் கொடுக்காம சாப்பிட்டுருக்கலாம். அதைத்தவிர வேற எதுவும் துரோகம்ன்னு சொல்ற அளவு நான் பண்ண மாதிரி எனக்குத்தெரியல எனவும் சக்தி கொலைவெறியாய் அவளை முறைக்க, ‘அய்யோ முறைக்கிறானே முறைக்கிறானே’ என மனம் எச்சரிக்கை கொடுத்தாலும் அதைக் கண்டுகொள்ளாத மாதிரி தொடர்ந்தாள்.

“நீங்க என்ன சொன்னாலும் பரவால்ல. ஆனால்  உங்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லணும். நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க, அந்த அருணாச்சலம் யாரு அவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் எதுவும் எனக்குத் தெரியாது. தேவையுமில்ல. ஆனா நீ இங்க இருந்தா உன்னை உயிரோட விடமாட்டேன்னு ஒருத்தன் சொல்லிட்டு இருக்கான். நீ எதுக்கும் கவனமா இரு.”
என வேகமாக சிறுகுழந்தை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல சொல்லிவிட்டு நகர முயன்றவளின் கையைப் பிடித்துத் தடுத்தவன்,
“சொல்றத முழுசா சொல்லிட்டுப் போங்க மிஸ்.அமிழ்தா,
யாரவன் கலெக்டர்கிட்டயே மிரட்டறவன், எப்ப மிரட்டுனான்?
எந்த நம்பர்ல இருந்து கால்பண்ணான். டிரேஸ் பண்ண சொன்னீங்களா?”
வினாக்களைத் தொடுக்க அவன் யாரோ போல பேசுவதில் இருந்து தன்னிடம் பேச விரும்பவில்லை என்பதை உணர்ந்துகொண்ட அமிழ்தா அதில் கடுப்பானாள்.

“ப்ச். கால்லாம் பண்ணல.நேர்ல தான் மிரட்டுனான்.”

“நேர்லயா எங்க? எப்ப?”

“இப்பதான்…ஆபிஸ்ல…”

“அவன் எங்க? எந்த ஸ்டேஷன்ல வச்சுருக்காங்க?”

“எந்த ஸ்டேஷனா?”

“ஆமா. கலெக்டர் ஆபிஸ்க்கு வந்து ஒருத்தன் கலெக்டர மிரட்டுனா அவனை அரெஸ்ட் தான பண்ணிருப்பீங்க.”

“அரெஸ்ட்டா அதெல்லாம் பண்ணலய்யே.”

“ஏய் லூசு என்னடி இவ்வளவு அசால்ட்டா சொல்ற.
உனக்கெல்லாம் அறிவிருக்கா இல்லையா?”

பின்னால் ஒரு செருமல் கேட்டது.அருணாச்சலம்தான் அவனது கடைசி வரியைக் கேட்டபடி வந்தார்.
ஆனால் கேட்டது போல காட்டாமல் அமிழ்தாவிடம் பேசத்தொடங்கினார்.

“என்ன கலெக்டர் மேடம், மக்களுக்கு ரொம்ப நல்லது செய்யணும்ன்னு நினைக்கிறீங்க போல ,எம்.எல்.ஏ சொன்னாரு… நினைங்க நினைங்க அதுல ஒண்ணும் தப்பு இல்ல…          ஆனா என்ன?….  மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னா நாம முதல்ல நல்லா இருக்கணும்ல, நம்ப குடும்பமும் நல்லா இருக்கணும்… என்ன பி.ஏ சார் நான் சொல்றது சரிதான” அமிழ்தாவிடம் ஆரம்பித்து அருணாச்சலம் வருவதைப் பார்த்து விட்டு வேகமாக அமிழ்தாவின் அருகில் வந்திருந்த பிரதாப்பிடம் முடித்தார்.

அமிழ்தா ஒன்றும் பேசாமல் கண்ணில் கூர்மையை மட்டும் கூட்டியபடி நிற்க,சக்தியிடம் திரும்பியவர் ,

“என்னப்பா அரசு கலெக்டரம்மாட்ட பேசிட்டு இருந்த போல…உனக்கு நல்ல பழக்கமா?” என்று கேட்டார்.

“பழக்கம்தான்பா, நல்லபழக்கம்லாம் இல்ல, ஆனா இப்ப அதுவும் இல்ல”

“அது என்னமாதிரியான பழக்கம்ப்பா?”

அவன் தயங்க, “சும்மா சொல்லுய்யா. கலெக்டர் மேடம் நம்மகிட்டயும் ஏதோ வாய்க்கா தகராறுக்கு வருவாங்க போல, அதைத் தீர்த்து வைக்க இது பிரச்சனையாகிர கூடாதுல்ல. நாளைப்பின்ன மருமகளா அதுஇதுன்னு எதுவும் வந்துட்டா சங்கடமா போயிரும்லயா அதுக்காகத்தான் கேக்குறேன்.” எனவும் வேகமாக,
“மருமகளா? அய்யோ அப்படில்லாம் இல்லப்பா” என்றுவிட்டவன்,
அருணாச்சலம் சந்தேகக்கண்களோடு பார்க்க கோபக்குரலில் தொடர்ந்தான்.

“வாயைக் கழுவுங்கப்பா,
என்னை அப்பாம்மா இல்லாத சொத்துபத்து இல்லாத அனாதைன்னு சொல்லிட்டு நீயெல்லாம் எனக்குக் கால்தூசிக்குக் கூட வரமாட்டன்னு சொல்லிட்டுப் போனவல்லாம் எப்படிப்பா உங்களுக்கு மருமகளாக முடியும்?”
  ஒருகணம் தயங்கிப் பின் பிறர் அறியாமல் பெருமூச்சொன்றை விட்டுவிட்டு
“பணமில்லன்னா விட்டுட்டுப் போறவங்களுக்கும் பணத்தைப் பார்த்துட்டுத் திரும்பி வர்றவங்களையும் வேற பேர் தானப்பா சொல்லுவாங்க?
கண்ட கழிசடையெல்லாம் உங்க மருமகன்னு சொல்லி எங்கையோ இருக்க உங்க மருமகள ஏம்பா கேவலப்படுத்துறீங்க” மனம் கூச அமிழ்தாவிடமிருந்து ஓர் அறையை எதிர்பார்த்துக்கொண்டே தான் சொன்னான்.

ஆனால் அடிப்பதற்குப் பதிலாக அடிவாங்கிய…அல்ல…அல்ல…தலையில் இடிவாங்கிய பார்வையை அவள் பார்க்கவும் அதைக் கண்கொண்டு பார்க்க முடியாமல், அருணாச்சலம் அவளைக் கேவலமாகப் பார்ப்பதையும் தாங்கமுடியாமல்,
‘ஸாரி அம்மு’ என மனதிற்குள் கூறியவன் வெளியே “இவங்ககிட்ட நமக்கென்னப்பா பேச்சு வாங்கப்பா போகலாம்” என்றபடி அருணாச்சலத்தை அழைத்துக்கொண்டு கிளம்ப,
வார்த்தை வெளிவராமல் இதழ்கள் துடிக்க, கண்ணீரை வெளியிடாமல் கண்கள் அடக்க அவன் போன திசையையே வெறித்தபடி நின்றாள் அமிழ்தா.

அவளது தோளை “அமி” என்று மென்மையாய் அழைத்தபடி ஒருகரம் தொட்டது. அந்தக்குரலின் மென்மையில் அவளது வலியைத் தனதாய் உணர்ந்த வலி தெரிந்தது.

                                                                 
                                              (தொடரும்…)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *