Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 16

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 16

சுடுகாட்டில் தென்றல் வீசினால்  – 16

எக்கா கொடுக்க இஷ்டமில்லன்னா இல்லன்னு சொல்லு.
இப்படில்லாம் பொய் சொல்லாத.
நான் உன் மூஞ்சில வேப்பிலை அடிக்கறதுக்கு முன்னாடிதான தனியா பேசிட்டு இருந்த…”

“தனியா பேசிட்டு இருந்தனா? நீ என்னடி சொல்ற…”
அமிழ்தாவின் முகம் அதிர்ச்சியை அப்பட்டமாய்க் காட்டியது.
                                                                 
                                            
“இல்ல இல்ல. நீ தனியா பேசல என்மாமன் கூட பேசிட்டு இருந்த. ஆளைப்பாரு ஆளை… ஒரு ப்ளுடூத் கேட்டதுக்கு இவ்வளவு புருடாவா? யாருக்கு வேண்டும் உன் ப்ளுடூத் நான் போகிறேன் உள்ளே… யாருமே இல்லாத இடத்தில் எனக்கு எதற்காக வேண்டும் ப்ளுடூத் லேப்டாப்பின் சப்தம் காதைக் கிழிக்கையில் எனக்கு எதற்காக வேண்டும் ப்ளுடூத்…நான் எதற்காக ப்ளுடூத் கேட்டேன் தெரியுமா? இரவில் நான் படம் பார்ப்பேன்… அப்பொழுது சத்தம் வரும்… அந்த சத்தத்தால் நீ முழித்து விடுவாய்… உன்னுடைய தூக்கம் கெட்டுவிடக்கூடாதே என்பதற்காக… அதை நீ புரிந்துகொள்ளவில்லையே…அக்கா…புரிந்து கொள்ளவில்லையே… வராத கண்ணீரைச் சுண்டு விரலால் சுண்டியெறிந்து விட்டு பழைய பட மாடலில் கையை ஆட்டி வசனம் பேசியவள் உள்ளே  சென்றுவிட
“ஏய் லூசு… பத்திரம்டி… இதைவச்சு நான் எப்படித்தான் நாலுநாள் சமாளிக்கப் போறன்னோ என்று தலையிலடித்து விட்டு அமிழ்தாவும் கிளம்பினாள். தங்கையின் விளையாட்டோடு விளையாட்டாக அதை ஒதுக்கினாலும் அவளது நெஞ்சில் நெருஞ்சியாய் ஒரு நெருடல் உறுத்தத்தான் செய்தது.

“ஹலோ அண்ணே நான் நாகாபரணம் பேசுறேன்…”

‘சொல்லுய்யா…இப்பதான உன் ஆபிசில இருந்து வந்தோம்… அதுக்குள்ள கூப்புடுற… எதுவும் பிரச்சனையா என்ன?”

“இல்லண்ணா அது வந்து…” அந்த எம்.எல்.ஏ இழுக்க, “என்ன அந்த கலெக்டர் வழிக்கு வரமாட்டேன்னு வம்பு பிடிச்சாளாக்கும்… நமக்குன்னே வந்து சேருதுங்க பாரு… கருமம்…கருமம்…நாமளே சும்மா இருக்கணும்ன்னு நினைச்சாலும் விடாதுங்க போல…” என்று புலம்பினார் அருணாச்சலம்.

“ஆமாண்ணா… ரொம்ப திமிரா பேசுறா.. ஏற்கனவே பல ஆர்டர் போட்டுட்டா போல…அதைவிட…”

“என்னய்யா அதைவிட… என்னவா இருந்தாலும் விட்டுப் பிடிப்போம்… ஏற்கனவே ஒருத்தனைச் சாவடிச்சதுக்கே ரெண்டு வருஷமா ராத்திரி பூரா தூக்கம் வரமாட்டேங்குது…”

“தூக்கம் வரமாட்டேங்குதா ஏண்ணே…” எம்.எல்.ஏவின் குரலில் பயம் அவரைப்பிடித்து ஆட்டுவது தெரிய,

“எனக்குத் தூக்கம் வரலைன்னா நீ ஏன்யா இவ்வளவு பதறுற… உனக்கே தெரியாததா… எனக்கு யாரையும் கொல்லப் பிடிக்காதுன்னு… ஒண்ணு அவனுங்களை விலைக்கு வாங்குவேன்… இல்லன்னா மிரட்டுவேன்… இவனை மாதிரி அதிகாரிங்கன்னா ஊரை மாத்தி அடிப்பேன்… மிஞ்சி மிஞ்சிப் போனா கையைக் காலை வாங்குறதோட விட்டுருவேன்… ஆனா இவன்தான் ரொம்பப் படுத்திட்டான்… அதனால தான் அப்படி பண்ண வேண்டியதா போயிருச்சு… ஆனாலும் இப்பல்லாம் அடிக்கடி அப்படி பண்ணிருக்கக் கூடாதோன்னு தோணுதுய்யா… பாவம் என்ன இருந்தாலும் சின்னப்பையன்… இளரத்தம்… எகிறிட்டான்… ஆனா நாம அப்படி பண்ணிருக்கக் கூடாதோன்னு தோணுது… அதுவும் அவ்வளவு  கொடூரமா… வாழ வேண்டிய வயசு…”
பெருமூச்செறிந்தவர்
“சரி இந்தப்பொண்ணு என்ன சொன்னா? அதைச் சொல்லு…”

“அவளுக்கு அவன் துணையா நிக்கிறதாச் சொன்னாண்ணா…”

“அவன்னா? எவன்?”

‘அவன்தாண்ணே இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருந்தோமே?”

“யாரு…அந்த அருளாளனா?”
“ம்ம்… ஆமாண்ணே…”

“என்னய்யா உளர்ற… அவன் நம்மக் கண்ணு முன்னாடிதான செத்தான்…”

“அதத்தான்னே அவளும் சொன்னா… செத்துப்போனவன் தான் பேயா வந்துருக்கானாம்…”

“அருணாச்சலம் கடகடவென்று நகைத்தார்…”

“யோவ்…நீயெல்லாம் எப்படிய்யா எம்.எல்.ஏ ஆன… அதுசரி… நீ எங்க ஆன… நான்தான ஆக்குனேன்… அவ நல்லா உன்காதில பேய்ப்பட ரீல் சுத்திட்டுப் போயிருக்காயா? நீயும் கேட்டுட்டு வந்து எங்கிட்ட சொல்லிட்டுக் கிடக்க… நாம அவனைப் போட்டுத்தள்ளி ரெண்டு வருஷம் ஆச்சு… உசிரோட இருந்தப்பவே அவனுக்கு அதிரடி முடிவு எடுத்துத் தான் பழக்கம்…அப்படி அவன் பேயா மாறியிருந்தான்னா சூட்டோட சூட்டா நம்மளையும் போட்டுத்தள்ளி மேலக் கூட்டிட்டுப் போயிருப்பான்…நாம இன்னைக்கு இப்படி உயிரோட இருக்க மாட்டோம்… பேயால்லாம் சுத்தமாட்டான்யா, அவன் நல்லவன்… நேரா பரலோகம் போய் நிம்மதியா இருப்பான்…”

“இல்லண்ணே ஆனா நீங்களே யோசிச்சுப் பாருங்க… நாம நம்ம இஷ்டப்படி நடக்கணும்ன்னு ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல 5 கலெக்டரை இந்த ஊருக்குப் போஸ்டிங் போட வச்சோம்… ஆனா என்ன நடந்துச்சு? நம்மகிட்ட குழையடிச்சு குழையடிச்சுப் பேசுனாலும் அவங்க பாத்த வேலையெல்லாம் நமக்கு எதிராத்தான இருந்துச்சு… அதுவுமில்லாம தொடர்ச்சியா ரிசைன் வேற பண்ணிருக்காங்க. இதெல்லாம் இயல்பா நடந்தது இல்லன்னு நீங்கதானண்ணே சொன்னீங்க…”

“இயல்பா நடந்தது இல்லன்னா யாரோ ப்ளான் பண்ணிப் பண்ணிருக்காங்கன்னு சொன்னேன்யா, பேய் பண்ணுச்சுன்னு சொல்லல்ல… போனை வை. பேசாம தூங்கித் தொலை.”

போனை வைத்தாலும் அவரது நெஞ்சிலும் ஒரு நெருஞ்சி…

இங்கே அமிழ்தாவோ பிரச்சனைக்குள் தலையை உருட்டுவதைக் கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு சப்பாத்தி மாவை உருட்டிக் கொண்டிருந்தாள்.

“என்னடி என்கிட்ட மலையைக் காட்டுறேன்… காட்டைக் காட்டுறேன்னு சொல்லிட்டு உங்கக்கா மாவு பிசையறதைக் காட்டிட்டு இருக்க…”
தமயந்தி வீடியோ காலில் சந்தனாவை நக்கலடித்துக் கொண்டிருந்தார்.

“யம்மா நீங்க மலை காடெல்லாம் பாத்துருப்பீங்க ஆனா எங்கக்கா மாவு பிசைஞ்சுப் பாத்துருக்கீங்களா? பாத்துருக்கீங்களா? என்னம்மோ கெங்கம்மா கெங்கம்மான்னா…. அதை நம்பி நானும் எங்கம்மா சாப்பாட விட  நல்ல சாப்பாடு கிடைக்கும்ன்னு நம்பி வந்துட்டேன். இப்பப் பாத்தா அந்தக்கா எங்கையோ அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருச்சாம்….இவகிட்ட வந்து சிக்கிட்டேனேம்மா… என்னைப் பரிசோதனை எலியா மாத்திகிட்டு இருக்காம்மா…”  சமையல் மேடையில் குரங்கு போல் அமர்ந்து அசராமல் வாயடித்துக்கொண்டிருந்தவளைப் பார்த்துக் கடுப்பானாள் அமிழ்தா.
பின்னே? நடந்தது முழுவதையும்  ஞானசேகரனிடமும் தமயந்தியிடமும் ஒப்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தாள்.
அவள் பேசியது அமிழ்தாவின் பிரச்சனை அல்ல. அவள் மட்டுமே தான் பேசிக்கொண்டிருந்தாள்…அதுதான்… கைவேறு சப்பாத்தி மாவாக இருந்தது. அவளிடம் இருந்து போனைப் பிடுங்கவும் முடியவில்லை.
கெஞ்சினாலும் தரவில்லை. வேறு வழியில்லாமல் முறைத்துக் கொண்டே மாவை உருட்டிக்கொண்டிருந்தவள் வாய்ஸ் மட்டும்  கொடுத்துக்கொண்டிருந்தாள்.

“ஏய் எனக்கு அதெல்லாம் நல்லாவே சமைக்கத் தெரியும்… வீட்டுக்கு வர்றப்ப அம்மாப்பா கையால சாப்பிடணும்ன்னு தான் சமைக்க மாட்டேன்.”

“ஆமாம்மா… ஆமாம்… எப்ப வீட்டுக்கு வந்தாலும் நான் எப்பவாவது தான வர்றேன் நான் எப்பவாவது தான வர்றேன்னு வேலைக்கு டிமிக்கி கொடுப்பல்ல… நான் இன்னைக்கு அதைத் திருப்பிக் கொடுத்துட்டேன். எப்பூடி…”

மாவை உருட்டி முடித்த அமிழ்தா  போனைப் பிடுங்கி அவளும் சற்று நேரம் வாயடித்து விட்டு போனை வைத்தவள், வெங்காயத்தை வெட்ட ஆரம்பித்தாள்.

“இங்க பாரு ஒழுங்கு மரியாதையா ஒண்ணு சப்பாத்தியைத் தேய்ச்சுக் கொடு, இல்லன்னா நான் தேய்ச்சுத் தரேன். நீ சுட்டுக் கொடு.
இதைச் செய்யல்லன்னா நைட்டு உனக்குச் சோறுதண்ணீ  கிடையாது.
பாத்துக்கோ..”

“எனக்குச் சோறு வேணாக்கா…சப்பாத்திதான் வேணும்”

வெங்காயத்தை வெட்டுவதை நிறுத்திவிட்டு கத்தியைத் திருப்பித்திருப்பித் தூக்கிக் கூர்பார்த்தவள் ‘நல்லா ஷார்ப்பா இருக்கும் போலயே..’ என்க, சட்டென சமையல்மேடையிலிருந்துக் குதித்தவள் “அக்கா நோ…வயலன்ஸ் ஒன்லி அன்பு அகிம்சை… புத்தம்… சரணம்… கச்சாமி…” என்றவள்
“ஒரே ஒரு நிமிஷம்… என்கூட வந்ததெல்லாம் ஸ்டேட்டஸா போட்டு வெறுப்பேத்துது…”

“அதுக்கு…”

“நானும் ஸ்டெட்டஸ் போடணும் சோ… கீஸ்…”
கன்னத்தோடு ஒட்டி நின்று செல்பி எடுத்தவள்,
“என்ன கேப்ஷன் போடலாம் சொல்லு… எல்லாரும் பொதுவா இப்படி அக்காக்கூட செல்பி எடுத்தா மை ஸ்வீட் சிஸ்டர்ன்னு கேப்ஷன் போடுவானுங்க… ஆனா ஒரு ஸ்டேட்டஸ்க்காகக் கூடப் பொய் சொல்ல எனக்கு விருப்பமில்ல… என்ன போடலாம்? ம்ம்…” என யோசித்தவள்,
அமிழ்தா பச்சை மிளகாயை வெட்டுவதைப் பார்த்துவிட்டு “ஐ கிடைச்சுருச்சு கிடைச்சுருச்சு” என வித் மை ஸ்வீட் சில்லி என்று தட்டிவிட்டாள்.

“மகளே நீ இப்ப வரல மிளகாயைக் கண்ணுல தேய்ச்சுருவேன்” என்றபடி அமிழ்தா சப்பாத்திக்குக் கூட்டைத் தயார் செய்ய, “சாடிஸ்ட் சாடிஸ்ட்” எனத் திட்டிக்கொண்டே, நல்ல பிள்ளையாக சப்பாத்தியைத் தேய்த்து அவளே சுடவும் ஆரம்பித்தாள் சந்தனா.

வெளியே அவளை அரட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளே தனக்காகத்தான் தன் தங்கை டூர் செல்லும் பஸ்ஸில் ஏறாமல் போனாள் என்று  அமிழ்தாவிற்குத் தெரிந்திருந்தது.
கண்ணீரும் கம்பலையுமாக, தன்னைப் பார்த்த தங்கை கண்டிப்பாக விட்டுச்செல்ல மனமில்லாமல் தான் இப்படி செய்திருப்பாள் என்பதை அறிந்தே இருந்தாள்.
அதை அவள் காட்டிக்கொள்ளாமல் வம்பிழுக்க, இவளும் தெரிந்து கொண்டது போலக் காட்டிக்கொள்ளாமல் பதிலுக்கு வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.

“ஆமா ஏன்க்கா அந்த வாட்ச்மேன் ரொம்ப பயந்த சுபாவமா?” அடுப்பை அணைத்தபடி கேட்டாள்.

“எப்படிடி கண்டுபிடிச்ச? ” என்றவள் முதல்நாள் அந்த வாட்ச்மேன் அவளைப் பார்த்துப் பிசாசு என்று பயந்து நடுங்கியதைச் சொல்லிச் சிரித்தாள். 

“நான் அவர் பயந்த சுபாவம்ன்னு கண்டுல்லாம் பிடிக்கல. அது அவர் முகத்திலேயே எழுதி ஒட்டிருக்காரு. ஆனா அவர் உன்னைப் பிசாசுன்னு கரெக்டா கண்டுபிடிச்சுட்டாரு பாத்தியா அங்க நிக்குறாரு… அவரு…” என வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க அவளைக் கொடூரமாக முறைத்தாள் அமிழ்தா.

அதை அலட்சியப்படுத்தி மேலும் சிரித்து ஸ்டேடஸ்க்கு வந்த பதில்களைப் பார்த்து செம, சூப்பர் அக்கா அழகு போன்ற கமெண்டுகளுக்கெல்லாம் நன்றி கூறி பதில் தட்டிவிட்டுக்கொண்டிருந்தவள் 
“அப்ப அவருக்கும் ஒரு வேப்பிலை வைத்தியம் பாத்துர வேண்டியதுதான்.” என்றாள்.

அவள் கூறியதும்தான் நினைவு வந்த அமிழ்தா, “ஏன்டி எவ்வளவு தைரியம் இருந்தா… பப்ளிக் ப்ளேஸ்ல வச்சு என் முகத்துல வேப்பிலை அடிப்ப… உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?” பொரிய ஆரம்பித்தாள்.

“ஏய் வெயிட் வெயிட் கிட்டத்தட்ட அரைமணி நேரமா அந்த பிரதாப் சார் மேடம்…மேடம்ன்னு உன் பக்கத்துல பம்மிகிட்டே இருக்காரு…நீ  அசையாம நிக்கிற. அதான் நான் எப்பவும் உனக்குப் பாக்குற வேப்பிலை வைத்தியத்தைப் பார்த்தேன். எப்படி உடனே தெளிய வச்சுட்டோம்ல.” என்றாள்.

மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளுக்குத் திட்டோ கொட்டோ பதிலாக இருந்திருக்கும்.

ஆனால் இப்பொழுது ஏதோவொன்று மனதை ஆழமாகக் குழப்ப, ஆழமான குரலில் அவளது முகத்தைப் பார்த்து,

“சந்து… அப்ப நீ அங்க யாரையுமே பாக்கலையா?”

“சேச்சே பார்த்தேனேக்கா அப்பவே சொன்னனே என் மாமாவைப் பார்த்தேன்னு.”

“ச்ச் இங்க பாரு சந்தனா, விளையாடத, நல்லா யோசிச்சுச் சொல்லு. நீ அங்க யாரையுமே பார்க்கலையா?” அமிழ்தாவின் குரல் எரிச்சலாக சந்தனாவின் குரல் தீவிரமானது.

“இல்லையேக்கா…நான் அங்க யாரும் பார்க்கல… ஏன்க்கா?”

“நீ எவ்வளவு நேரமா அங்க இருந்த…”

“நீ பேசிட்டு இருந்தப்பவே வந்துட்டேன்…ஏன்க்கா?”

“தனியாவா பேசிட்டு இருந்தேன்…?”

“ஆமாம் ஆமாம் ஏன் கேக்குறன்னு சொல்லித்தொலை.”

“ஆனா அங்க ஒருத்தன் நின்னுட்டு இருந்தானேடி… “அமிழ்தாவின் குரல் லேசாகப் பிசிறடித்தது.

“என்னக்கா சொல்ற… அந்த வாட்ச்மேன் வேற… பேய் நடமாடுற இடம் அது இதுன்னாரு. நீயும் இப்ப இப்படி சொல்ற…” என்றவள் போனை வேகமாகத் தடவினாள்.
எதையோ பார்த்து அதிர்ந்தவள்,
“அக்கா அக்க்க…கா” என்று திணற,

“என்னடி…”

“செல்பிக்கா…பேய்கூட செல்பி எடுத்துருக்கோம்க்கா..ஸ்டேட்டஸில ஏதோ பேய் வடிவம் தெரியுதுன்னு என் பிரெண்டு கேக்குறான்க்கா. “என்று போனைக் காட்ட அதை வேகமாகப் பிடுங்கினாள்.

அதிலோ,

“ சந்து… அக்கா செமையா இருக்காங்கடி, நம்பர் கிடைக்குமா,

செருப்பு கிடைக்கும்.

செருப்பா? மாமாகிட்ட இப்படில்லாம் மரியாதையில்லாம பேசக்கூடாது செல்லம்…

மாமாவா?

ஆமா அக்கா புருஷனை மாமான்னு தான சொல்லுவாங்க.

டேய் இதெல்லாம் எங்கக்காவுக்குத் தெரிஞ்சுச்சு உனக்கு அவ நம்பர் கிடைக்காது. உன் நம்பர் தான் போலிஸிக்குக் கிடைக்கும். எங்கக்கா செம டேன்ஜர்… உனக்கு செட்டாக மாட்டா சொல்லிட்டேன் பாத்துக்க..

ஐயோ லூசு வாயில அடி வாயில அடி அவங்க அக்க்க்க்க்கா… பிரெண்டோட அக்கா நமக்கும் அக்க்க்க்க்கா…

யாரோ எனக்கு மாமான்னாங்க… நம்பர் கேட்டாங்க…அக்கா நம்பர் வேணும்மா மாம்ம்ம்ம்மம்மா…….

ஐய்யய்யோ வேணாம்மா வேணாம்… நான் சும்மா றெக்க பட விஜய் சேதுபதி மாதிரி ஐ லவ் யூ அக்க்க்க்கான்னு சொல்லத்தான் கேட்டேன்.

தெரியுது தெரியுது மூடிட்டுக் கிளம்பு…”

இந்தக்கருமம்தான் இருந்தது. வாசித்தவள், சந்தனாவைப் பார்த்து முறைத்துவிட்டு போட்டாவைச் செக் செய்ய அதிலும் எதுவும் இல்லை.
இந்த ரெண்டு பேய் மட்டும் தான் இருந்தது. வேறெந்தப் பேயும் இல்லை.

கொலைவெறியுடன் சந்தனாவைப் பார்க்க, அவளோ புரண்டுப் புரண்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“அய்யோ அக்கா அக்கா யாரைப்பயமுறுத்தப் பாக்குற… நான் என்ன அந்த வாட்ச்மேனா? நீ சின்னப்புள்ளைல சிவிபடத்துல பேய் பைப்பைப் பிடிச்சுத் தலைகீழா ஏறுறதப் பார்த்தே பயந்துபோனப்பவே நான்தான் உனக்கு தைரியம் கொடுத்து இதே மாதிரி மந்திரிக்கு விட்டேன்.
நீ அதே மாதிரி இந்தப் பேயும் போட்டால போஸ் கொடுக்கும்ன்னு நினைச்சுட்டியா? ஹாஹா…”

கடுப்பான அமிழ்தா கோபத்தோடு டாம் போல கரண்டியை ஓங்கிக்கொண்டு துரத்த, சந்தனா ஜெர்ரியாய் அழகாய் ஆட்டம் காட்டினாள்.
சற்று  நேரம் கழித்து அவளைப் பிடித்தவள் செமத்தியாய்க் கவனிக்க, “அக்கா அக்கா…பிளீஸ்க்கா ஐ ம் பாவம்க்கா” என்று கெஞ்சியதில் விட்டுவிட்டு
“எருமமாடே ஒருநிமிஷம் நிஜமாவே பயந்துட்டேன் தெரியுமா?”

“அதான் தெரியுமே பயமுறுத்தத்தானே சொன்னது…”

“பரதேசி பரதேசி…”

“சரி சரி விடுவிடு வா சாப்பிடப்போவோம்.”

ஊர்க்கதை உலகக்கதை பேசிக்கொண்டே உண்டு முடித்தார்கள்.
தங்கையின் கலகலப்பில் கரைந்தவளுக்கு மனம் லேசானது போல ஓர் உணர்வு.

“அக்கா படம் பாக்கலாம்மா?. யூ டியுப்ல  ‘ஒக்க அம்மாயி தப்பா’ன்னு ஒரு தெலுங்குப்படம் சூப்பரா இருக்காம். விவேகன் சொன்னான்.”

“யாரு உங்கிட்ட வாட்ஸப்ல பேசிட்டு இருந்துச்சே ஒரு லூசு அதுதான?”

“அதேதான்”

“நான் ஏற்கனவே பாத்துருக்கேன். படம் நல்லாதான் இருக்கும்… நீ பாரு எனக்கு ஒரு  வேலை இருக்கு.”

“பாத்தியா பாத்தியா…இதுக்குத்தான் ப்ளுடூத்…”

“அம்மா தாயே நான் உனக்குப் ப்ளுடூத் வாங்கித்தரேன். இப்ப என் உயிரை அறுக்காத… எ
வ்வளவு வேணுமோ அவ்வளவு சவுண்ட் வச்சுப் பாரு.
நான் ஒண்ணும் சொல்லல. “என்றவள் தன் கைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல,
“அக்கா ஒரு நிமிஷம்.”

“இப்ப என்ன?”

“இந்த ஊருல உனக்கு ரொம்பக்குடைச்சல் கொடுக்கிற ரெண்டு பெயரைச் சொல்லு.”

“எதுக்குடி…”

“ஆங்.  பிளேம்ஸ் போட்டு விளையாடப்போறேன். எப்பப்பார்த்தாலும் லேப்டாப் பாஸ்வேர்ட அறிவாளித்தனமா வைக்கிறேன்னு எதிராளியோட பேரை வச்சுத் தொலைச்சுருப்பியே…”

” அதுக்குத்தான்…”

“வெரி சாரி… இப்ப போன் பேசி முடிச்சதும் எனக்கு லேப்டாப்ல வேலை இருக்கு. நீ உன் போன்ல பாரு.”
அவள் சென்று விட அங்கிருந்த அலமாரிகள், டிராயர் ஆகியவற்றை ஆராய்ந்தாள்.

ஒரு கால் மட்டும் ஆடிக்கொண்டிருந்த மேசையைப் பார்த்துக் ‘முக்கியமான பொருளை யெல்லாம் இந்த லூசு இப்படிப்பட்ட இடத்தில் தானே வைக்கும்’ என்றவாறு  அதைத் திறந்தவள் அங்கிருந்த தைப் பார்த்து
“ஹி ஹி… முந்தியவள் கை லேப்டாப்” என்றவாறே அந்த   லேப்டாப்பை எடுத்தாள்.

“லேப்டாப்டை ஏன் இவ்வளவு உள்ள வச்சுருக்கா…
எவ்வளவு தூசி…
இது மேல இருக்குற தூசியைப் பார்த்தா நாள்கணக்கில சாப்பாடு போட்டுருக்க மாட்டா போலயே “என அங்கிருந்த சார்ஜரையும் சேர்த்து எடுத்து சார்ஜ் போட்டு விட்டு அமர்ந்தாள்.

“ம்ம் எதைப் பாஸ்வேர்டா வச்சுருப்பா… ஐ நாம மதியம் பார்த்தோமே நாகாபரணம் அவர் பேரா தான் இருக்கும்” என அதைத் தட்டச்சு செய்ய’ இன்கரெக்ட் பாஸ்வேர்ட்’ என்று வந்தது.

“எரும எரும பாஸ்வேர்டைச் சொல்லிட்டுப் போனா என்ன? இவ பேசி முடிச்சு வர்றதுக்குள்ள நான் கிளைமாக்ஸ்க்கே வந்துருவேன்… வேலை பாக்கப் போறாங்களாம்… வேலை… பெரிய கலெக்டர் வேலை பாக்குறாங்க” எனத் திட்டியவள், நிஜமாகவே அவள் கலெக்டர் வேலைதான் பார்க்கிறாள் என்பது நினைவு வரவும் ‘சரிசரி’ என்று விட்டு மேலும் யோசித்தாள். “அட கூட ஒருத்தர் இருந்தாரே. ஆமாம் அருணாச்சலம் அவரை மறந்துட்டோமே” என A..r…u…எனத் தட்டச்சு செய்து கொண்டிருக்கையில் அமிழ்தா உள்ளே நுழைய சட்டென நிமிர்ந்ததில் அவளது விரல்கள் அவளை அறியாமல் எதையோ அடித்து Enter தட்டியிருந்தன.

இவள்தான் பரக்கப்பரக்க விழித்தாளே தவிர அமிழ்தா இவளைக் கண்டுகொள்ளாமல் பேசியவாறே உள்ள வந்தவள் எதையோ எடுத்துக்கொண்டு போய்விட்டாள்.

அப்பாடி என்றவாறு லேப்டாப்பைப் பார்க்க அது திறந்திருந்தது.

” பாருடா…பயத்துல கூட பாஸ்வேர்டை கரெக்டா அடிச்சுட்டியே..”.என்று தன்னைத்தானே சிலாகித்தவள் “பக்கி ஒரு நெட்கார்டு கூடப் போடாம வச்சுருக்கு” என அலைபேசியிலிருந்து இணையத்தைத் தொடர்புகொடுத்து யூ டியுபில் படம் பார்க்க ஆரம்பித்தாள்.
படம் விறுவிறுப்பாகப்  போய்க்கொண்டிருக்க, முக்கியமான கட்டத்தில் நெட் தீர்ந்து விட்டது.
“ஐயோ போச்சு… இப்பப் போய் இவகிட்ட நெட் கேக்கலாமா?” என எட்டிப்பார்த்தாள்.

“ம்ம் சரி பிரதாப் சார் அப்படியே பண்ணிருங்க…அப்பறம்…”என அவள் தீவிரமாக எதையோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவள் மூச்சுக்காட்டாமல்  வந்தாள்.

“ஒரு நெட்கார்ட் போடுறதுக்கு என்ன? வீடியோ கால் பேசுனது… போரடிக்குது போரடிக்குதுன்னு பாத்துகிட்டே இருந்தது… இவ வரவும் சேந்து பாக்கலாம்ன்னு தான் இந்தப்படத்தைப் பார்க்காம வச்சுருந்தேன். இல்லன்னா அப்பவே பார்த்துருப்பேன். நெட் இப்பப் போய்த் தீர்ந்துருச்சே… சரி… விடு விடு தலைவா… இந்த லேப்ல ஏதாவது படம் இருக்கான்னு பார்ப்போம்… ஆனா இந்தப் பக்கி எதுவும் டவுன்லோட் பண்ணி வச்சுருக்க மாட்டாளே… ” என அந்த மட்க்கணினியில் வீடியோக்களைத் தேட ஆரம்பித்தாள்.

பல வீடியோக்கள் வரிசை கட்டி நிற்க, எதைப் பார்க்கலாம் என்றபடியே அவளுடைய கண்கள் கணினியில் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது.

பெரும்பாலான வீடியோக்கள் நிமிஷக்கணக்கில் இருக்க, ஒரு வீடியோ மட்டும் மணிக்கணக்கில் இருந்தது.

அதைக் கிளிக் செய்துவிட்டு ஏதோ சண்டைக்காட்சி வர, ” வாவ்  ஹீரோ செம ஹேன்ட்சம்….சூப்பர் பைட்ல… அச்சச்சோ” ரசித்துக்கொண்டிருந்தவளை
‘டூருக்குக் கூட லேப்டாப்பைத் தூக்கிட்டு வந்திருக்க…’என்றபடி
அவளது காதைத் திருகினாள் அமிழ்தா.

அதில் நிமிர்ந்து விழித்தவள் “நான் லேப்டாப்பைத் தூக்கிட்டு வந்திருக்கனா?” என்றுவிட்டு அப்பொழுதுதான் அமிழ்தாவின் கையிலிருந்த லேப்டாப்பைப் பார்த்தாள்.

“அப்ப இது உன் லேப்டாப் இல்லையா? “என அமிழ்தாவிடம் அவள் இவ்வளவு நேரம் பயன்படுத்திக்கொண்டிருந்த மடிக்கணினியைக் காட்ட,
புருவத்தைச் சுருக்கியபடி அதனைப் பார்த்த அமிழ்தாவின் விழிகள் திகைப்போடு விரிந்தன.

ஏனென்றால்….
அதில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவில்  திமிறிக்கொண்டிருந்தவனை எழ விடாமல்  இருவர் பிடித்திருக்க,
அருளாளனின்  வலப்புற முகம் மண்ணில் உராய இடப்புறக் கழுத்தோடு சேர்த்துக் காலால் அழுத்திக் கொண்டிருந்தார் அருணாச்சலம்…

                                  (தொடரும்….)

5 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 16”

    1. ஆமாம் சிஸ். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சிஸ். பிற பாகங்களைப்(முழுக்கதையையும்) பதிவிட்டுள்ளேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.நன்றி.

    1. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ மிக்க நன்றி சிஸ். பிற பாகங்களைப்(முழுக்கதையையும்) பதிவிட்டுள்ளேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *