Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 17

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 17

எதுவும் பேசாமல் அந்த லேப்டாப்பையே அமிழ்தா கூர்ந்து பார்க்க, அதைப் பார்த்த சந்தனாவும் அதிர்ந்தாள்.

“அக்…கா… இவர் சக்தியண்ணன் கூட இருந்தவர்தான…”

“ம்ம்…அருணாச்சலம்” என்றபடி அமிழ்தா அருகே வர, தான் அமர்ந்திருந்த கட்டிலில் தன்னையறியாமல் நகர்ந்தமர்ந்தாள் சந்தனா.

அமிழ்தா அந்த இடத்தில் அமர்ந்து விட மேசையில் இருந்த மடிக்கணினியில் அந்தக் காணொளி தொடர்ந்து கொண்டிருந்தது.

அருணாச்சலத்தின் காலழுத்தத்தில் அருளாளன் எழமுடியாமல் திமிற எதையோ ஊசி வழியாகச் செலுத்தினார் அந்த எம்.எல்.ஏ நாகாபரணம்…
அவர் கீழே போட்ட ஊசியை ஏதோ கோபமாகச் சொல்லியபடியே எடுத்த அந்த கமிஷனரின் முகத்தைப் பார்த்து அதிர்ந்தாள் அவள்.

‘டிரக்ஸ் இன்ஜக்ட் பண்ணிட்டு ஆக்ஸிடன்ட்…’ அந்தக் கமிஷனரின் குரல் எதிரொலிக்க, அவரின் காலடியில் இருந்தவனது முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தாள். ஒருகணம் மூச்சு நின்றது.

இவன்…இவன்… என மனம் தாளமடிக்க, இத்தனை நாள் கொடுக்காத யோசனை ஒன்றை அவளது மூளை கொடுத்தது.

வேகமாக கைப்பேசியில் அந்த மாவட்டத்தின் பெயரைப் போட்டு இறந்து போன கலெக்டர் என்று அவள் தட்டச்சு செய்து கொண்டிருக்கையிலேயே அருளாளன் என்று வர, அந்த இணைப்பைச் சொடுக்கினாள்.

அது ஆமையை விட அற்புதமான வேகத்தில் லோட்டாக,
‘அப்ப இது படமில்லையாக்கா…’ சந்தனாவின் கேள்விக்குப் பதிலாக, மறுப்பாய் தலையசைத்து விட்டு, கைப்பேசியையே பார்த்துக்கொண்டிருந்தவள்,
‘அய்யோ’ என சந்தனா கத்திய கத்தில் நிமிர்ந்து லேப்டாப்பைப் பார்த்தாள்.

கண்கள் செருகத் தடுமாறிய அருளாளனை அங்கிருந்த பாறையில் தலைமோதும்படி ஓங்கி அடித்திருந்தார் அருணாச்சலம்…

இரத்தம் பெருகத் தலையைக் கைகளால் தாங்கியபடி தடுமாறியவனைத் தூக்கி நிறுத்தியவர் மீண்டும் ஏதோ கூற அதற்கு அவன் நக்கலாகச் சிரித்தபடி ஏதோ கூறினான்.

அதில் உன்மத்தம் பிடித்தவர் போல மீண்டும் மீண்டும் அவனை இடைவெளியின்றி மோதச்செய்ய,
சந்தனா அதைப்பார்க்க முடியாமல் ‘அக்கா’ என இவள் தோளில் முகம் புதைத்தாள். பயத்தில் வெடவெடுத்து அவள் நடுநடுங்கத் தொடங்க, அமிழ்தாவின் விழிகள் எதற்கென்று காரணம் சொல்லாமலே தன்போக்கில் கண்ணீர் துளிகளை உருள விட்டன.

அருணாச்சலம் ஏதோ சொல்ல ஒரு பைக்கை உருட்டிக்கொண்டு வந்து நிறுத்தினர் அந்த எம்.எல்.ஏவும் கமிஷனரும்.
இரத்த வெள்ளத்தில் தொய்ந்து விழுந்து கிடந்தவனின் மேல் அந்த பைக்கைத் தள்ளி பெட்ரோல் டேங்கைத் திறந்துவிட்டதோடு, அதை ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலேட்டரை முடுக்க, அசுரவேகத்தில் சுற்றிய அந்த பைக்கின் சக்கரத்தின் அடியில் அவனது கால் சிக்கியிருந்தது.

அந்த வேகம் அவனை மயக்கமடைய விடாமல் செய்ததோடு, அவனுக்கு உயிர் ஒட்டிக்கொண்டு இருப்பதைக் காட்டிக் கொடுத்தது.

கமிஷனரிடமிருந்து லைட்டரை வாங்கியவர் அவனது பைக்கின் முன்னால் இருந்த ஏதோவொரு காகிதத்தை…லைசன்ஸாகவோ ஆர்சியாகவோ இருக்கக்கூடும்…
அதில் நெருப்பைப் பற்றவைத்து அந்த பைக்கின் மேல் எறிய, அது பரபரவெனப் பற்றிக்கொண்டு பரவி எரிந்தது. அவனும்தான்…

அதைக் காணமுடியாமல் கீழே குனிந்தவளின்  பார்வை வட்டத்தில் கையிலிருந்த மொபைல் பட்டது…
அதில் இருந்த இவளது தேடலுக்கான முடிவுகளும்…

அதில் அவனைப் பற்றிய செய்திகள் குவிந்திருந்தன…

புகைப்படங்களுடன்…

கண்ணிலும் இதழிலும் கவர்ந்திழுக்கும் சிரிப்புடன் தனியான பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்…

எங்கோ எதையோ தீவிரத்துடன் ஆய்வு செய்து கொண்டிருக்கும் புகைப்படம்…

புயல்மழையின் போது ரெயின் கோர்ட்டுடனும் குடையுடனும் களப்பணியில் இருக்கும் போது எடுத்த புகைப்படம்…

மாணவர்கள் மத்தியில் கலகலப்பாகக் கலந்துரையாடும்போது எடுத்த புகைப்படம்…

எல்லாவற்றுக்கும் மேலாக…

உடல் முழுவதும் எரிந்து போய் உயிரற்ற சடலமாகக் கிடந்த புகைப்படம்…

ஆனால் எந்தப் புகைப்படத்திலும் அவனது கம்பீரம் சற்றும் குறையவில்லை என்று தோன்றியது அவளுக்கு…

உயிரற்ற முகத்தில் கூட ஒரு கம்பீரமான சாந்தம் தான் நிரம்பியிருந்தது…

செய்திகளின் வரிசையில்
ஆத்மாவாக நடமாடுகிறாரா இறந்து போன கலெக்டர் அருளாளன் ?
என்றொரு செய்தி இருக்க அவள் ஒரு கணம் ஸ்தம்பித்தாள்…

இதை…இதை… எப்படி மறந்தாள்…

வேறு எதையும் யோசிக்க மறந்து ஏன் அவள் அருளாளனுடன் சந்தித்ததையே அவள் மறந்து போகும் அளவு அந்தக்காட்சி அவளது மூளையை மரத்துப் போகச்செய்திருந்தது.

அப்படின்னா… அப்படின்னா… அவன் சொன்னது எல்லாம் உண்மையா? அவன் அவன் நிஜமாகவே இறந்துபட்டவனா?

செவிகளின் வழி கேட்ட அவன் சொற்கள் மீண்டும் மனதின் வழி ஒலித்தன.

“என்னோட பேர் அருளாளன்… நானும் உன்னை மாதிரி கலெக்டராத்தான் இருந்தேன், இதே ஊரில…
ரெண்டு வருசத்துக்கு முன்னாடி செத்துட்டேன்.
இப்ப பேயா உலாத்திட்டு இருக்கேன்..
.டீடெய்ல்ஸ் போதுமா? இந்த ரெண்டு வருசத்துல நான் யாரோட கண்ணுக்கும் தென்பட்டதில்ல…ஆனா நீ கலெக்டரா இருந்தாலும் சின்னப்பொண்ணு…அதோட ரொம்ப நல்லப்பொண்ணு. உனக்கு யாராலயும் எந்த விதத் துன்பமும் ஏற்பட்டுறக் கூடாதுங்கறதுக்காகத் தான் உனக்கு உதவிக்கு வந்தேன்.இந்த ஊர் ரொம்ப மோசமான ஊர்.கவனமா இரு…உனக்கு எப்ப எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை நீ மானசீகமாகக் கூப்பிட்டாலே நான் அங்க இருப்பேன்.சரியா?”

அவளுடைய மனம் இன்னமும் கூட அவன் இறந்திருப்பதை ஏற்க மறுத்தது. அவன் உயிரோடு இருக்க வேண்டும் என அவள் ஆழ்மனம் விரும்ப, என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கண்ணை மூடி ‘அருள்…அருள்…ப்ளீஸ் இங்க வாங்க…’ மனதில் அவனை அழைத்தாள்.
அவன் சொன்னது போல இறந்திருந்தால் தானே அவள் மானசீகமாக அழைப்பது கேட்கும்.
ஆழ்மனம் மேல்மனம் என அவளது அனைத்து மனமும் அவன் வந்துவிடக்கூடாது எனத்தான் விரும்பியது.
ஆனால் அவள் மனதின் வேண்டுதல் பொய்த்துப் போக அவள் வேண்டுதலுக்கு இரங்கி அங்கே நின்றிருந்தான் அவன்… ‘எதுக்குக் கூப்பிட்ட?’ என்ற கேள்வியோடு,

என்ன சொல்வாள்? மனம் உள்ளிருந்து வலிக்க, வார்த்தை வராமல் தண்ணீர் என சைகையில் காட்டினாள் அவள்.

அவளை மேலும் கீழும் பார்த்தவன் அங்கிருந்த தண்ணீர்ப்பாட்டிலை அவள் அருகில் தள்ளிவைத்தான்.

எடுத்து ஒரு இரு மடக்குக் குடித்தவள், இன்னமும் வெடவெடத்துக்கொண்டிருந்த தங்கையைத் தட்டி எழுப்பி, அவளது கையில் பாட்டிலைத் திணித்துக் குடிக்கச்சொன்னாள்.

அதை யோசனையாகப் பார்த்துக்கொண்டிருந்தவன் “உதவி வேணும்ன்னா கூப்புடுன்னு சொன்னேன்தான். அதுக்காகத் தண்ணீர் எடுத்துக் கொடுக்கலாமா கூப்புடுவ?” என்று கேட்கவும் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த தங்கையைப் பார்த்துத் திருதிருவென்று விழித்தாள்.

‘இப்பொழுது இவனிடம் பேசினால் யாரிடம் பேசுறன்னு கேட்பாளே…’ யோசிக்க, அவள் கொடுத்த ஐடியாவே நினைவுக்கு வந்தது.
யாருக்கோ போன் செய்வது போல பாவனை செய்து விட்டு போனைக் காதில் வைத்து அவனைப் பார்த்து “ அது… நீங்க சொன்னது உண்மைதானான்னு செக் பண்ணதான் கூப்புட்டேன்…ஸாரி” என அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, கண்ணை மூடி ஆத்ம ரூபத்திற்கு மாறியவன் சந்தனாவின் உடலில் புகுந்தான்.

அமிழ்தா அதைக் கண்டு மூச்சற்று நிற்க, தன் கையில்(சந்தனாவின் கையில்) இருந்த தண்ணீர்பாட்டிலை அவளது கையில் கொடுத்தவன், “போதுமா? இத்தனை நாள் சந்தேகம் தீர்ந்துருச்சா?” என்று கேட்க

, “என்…என்…என்ன… பண்றீங்க? முதல்ல என் தங்கச்சியை விட்டு வெளில வாங்க…”

“நானும் என்னதான் பண்றது, உன்னைப் பார்த்த நாள்ல இருந்து சொல்லிட்டே தான் இருக்கேன் நான் செத்துட்டேன் நான் பேய் நான் பேய்ன்னு. நீதான் நம்பவே இல்ல…”

“ ஐயோ நான் இப்ப நம்புறேன்… நீங்க முதல்ல வெளில வாங்க…”

“ இப்ப நம்பி?… டூ லேட்… மிஸ். அமிழ்தா ஞானசேகரன்… நானும் ரொம்ப நாளா தங்குறதுக்கு ஒரு உடம்பு தேடிக்கிட்டு இருந்தேன் … யு நோ உன்மேல கூட இறங்கலாமான்னு பார்த்தேன்…. ஆனா போயும் போயும் உன்னை மாதிரி ஒரு லூசு மேலயா இறங்குறதுன்னுதான் சும்மா இருந்தேன்… ஆனா உன் தங்கச்சி சந்தனா உன்னை மாதிரி கிடையாது… ரொம்ப புத்திசாலி பொண்ணு… எனக்கு ஏத்த உடம்புதான். ஸோ நான் இங்கையே இருந்துக்குறேன்… தாங்க்யூ ஸோ மச்…”
அமிழ்தா என்ன செய்வது என்ன சொல்வது என்று தெரியாமல் பரக்கப்பரக்க விழிக்க, அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கலகலவென்று நகைத்தவன்,

“பயப்படாத…அப்படில்லாம் செய்யமாட்டேன். சும்மா விளையாட்டுக்குதான் சொன்னேன்… உன்னை நம்ப வைக்குறதுக்காகத்தான் உன் தங்கச்சி மேல வந்தேன்.” என்றபடி வெளியேற, ‘அக்கா ஏன்க்கா இப்படி முழிக்குற…’ என சந்;தனாவே அவளை உலுக்கவும்தான் நடப்புக்கு வந்தாள்.

வந்தவள் அவளது முகத்தைச் ‘சந்து உனக்கு ஒண்ணுமில்லலடா’ என்றபடி தடவ, “அக்கா என்னக்கா செய்ற…எனக்கு என்னக்கா? ஒண்ணுமில்ல… ஆனா உடம்பெல்லாம் ஒருமாதிரி வலிக்குதுக்கா… தூக்கமா வருதுக்கா.. என்னக்கா ஆச்சு” என்று கேட்க, “ஒண்ணமில்லடா தூங்கு..” என்று அவளைப் படுக்க வைத்து போர்வையை இழுத்துப் போர்த்தி விட்டாள்.

திரும்பியவள் அவன் இதை ஒரு புன்னகையுடன் பார்த்திருப்பதைப் பார்த்துவிட்டு
“முமுமு…முதல்ல வெளியே வாங்க” என்றபடி அவள் ஹாலுக்கு வந்தாள்….

“அவ்வளவு பயமா” என நக்கலாகச் சிரித்தபடி அவனும் வெளியே வந்தான்.

“இங்…இங்க… பாருங்க… என் தங்கச்சியை நீங்க எதுவும் செய்யக்கூடாது…”

“உனக்கென்ன பைத்தியமா? உன் தங்கச்சி ஒரு அப்பாவி…அவளை நான் என்ன பண்ணப்போறேன்…”

மனதின் கனம் அகலுவது போல உணர்ந்தவள் ஒருகணம் அமைதிகாத்துவிட்டு மிடறு விழுங்கியவாறே, “சந்தனா மட்டுமில்ல…சக்தி கூட அப்பாவிதான்…” என, இவ்வளவு நேரம் அவனது முகத்திலிருந்த ஒரு சுமுகமான பாவனை நீங்கி கோபத்தின் தடம் தெரிந்தது. இவளுக்குள் பயம் தடதடவென ஓடியது…

“உன் தங்கச்சி மட்டுமில்ல… அவளைப் பெத்தவங்களும் அதாவது உங்க அம்மாப்பாவும் அப்பாவிதான…? ஆனா அந்த அருணாச்சலத்தோட பையன் அப்படி இல்லையே…”

“இங்க பாருங்க… அந்த அருணாச்சலம் நாகாபரணம் கமிஷனர் வெங்கடாச்சலம் இவங்களாம் சேர்ந்து உங்களைக் கொலை பண்ணிருக்கலாம். அதுக்கு நீங்க அவரைப் பழிவாங்குறது நியாயம். ஆனால் அதுக்கு என்னோட பிரெண்ட் என்ன பண்ணுவான். அவன் என்ன பாவம் பண்ணான்? நீங்களே சொல்லுங்க.” வரவழைத்த தைரியத்தோடு கேட்டாள் அமிழ்தா.

“அவருக்குப் பையனாப் பிறந்ததே ஒரு பாவம்தான்.” என்று கோபத்தோடு வேறு ஏதோ சொல்ல வந்தவன், “உனக்கு எப்படி என்னைக் கொலை பண்ணது அவங்கதான்னு தெரியும்? அருணாச்சலமாவது நான் சொன்னதுல இருந்து ஊகிச்சுருக்கலாம்… ஆனா இந்த நாகாபரணமும் கமிஷனரும்” என்று யோசித்தவன் கண்ணை மூடி நடந்ததை உணர்ந்தான்.

“ஓ அப்படின்னா அந்த லேப்டாப்ல இருக்கிறத பார்த்ததாலதான் இவ்வளவு நாள் பேய்ன்னு தெரியாமலயே என்கிட்ட பேசிகிட்டு இருந்த கலெக்டர் மேடம் இப்ப பேய்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தக் கூப்புட்டிங்களா? சரி கைல ஆதாரம் கிடைச்சுருச்சு இனி என்ன பண்ணப் போறீங்க?”

“இதை வச்சு அந்த மூணு பேரையும் உள்ள தள்ளி தூக்குல ஏத்தாம விடமாட்டேன்…” அமிழ்தாவின் குரலும் மூடியிருந்த உள்ளங்கையும் இறுகியது.

“அந்த முட்டாள்தனத்தை மட்டும் செஞ்சுராத…” அவன் பட்டெனக் கூற அவனைக் கேள்வியாய் நோக்கினாள் இவள்.

“எந்த முட்டாள்தனம்?”

“இப்ப சொன்னியே … அதை…போலிஸ், கோர்ட், கேஸ்ன்னு போயிராத…”

“என்னது? போலிஸ்கிட்ட போறது முட்டாள்தனமா? இந்தியா மக்களாட்சி நாடு. அது ஞாபகம் இருக்கா…இந்த ஒரு கமிஷனர் இப்படி இருக்குறார்ங்கறதுக்காக எல்லா போலிஸையும் குறை சொல்லமுடியுமா? இவரை விட ஹை அபிசியல்ஸ் கிட்டயே என்னால அப்ரோச் பண்ண முடியும்ங்கறது ஒரு கலெக்டரா இருந்த உங்களுக்கா தெரியாது.”

“ம்ப்ச் நான் என்னவா இருந்திருந்தாலும் இப்ப ஒரு ஆத்மா. இந்த உலக வாழ்க்கையை விட்டே தள்ளிப் போயிட்ட எனக்கு இந்தியா பாகிஸ்தான்ங்கற இந்த உலகத்தோட எல்லைகள் ஒரு கணக்கே கிடையாது. தேவையில்லாம எனக்கு நீதி வாங்கிக்கொடுக்குறேன். நியாயம் வாங்கிக்கொடுக்குறேன்னு நீ உன்னோட வாழ்க்கையைப் பாழாக்கிக்காத. உன்னால உயரதிகாரிகளை அணுகத்தான் முடியும். அந்த அருணாச்சலத்தால அந்த உயரத்தில இருந்து அவங்களைக் கீழே தள்ளி விட முடியும். உன்னையும்தான். நீ என்ன நினைக்கிற? என்னைக் கொலைபண்ணதை யாரோ எங்களுக்குத் தெரியாம வீடியோ எடுத்துருக்காங்க… அதுதான் அந்த லேப்டாப்ல இருக்குன்னுதான…”

அவள் ஆமாம் என்பது போலத் தலையசைக்க,

விரக்திப்புன்னகையொன்றை சிந்தியவன், “அங்கே கேமரா இருந்தது அருணாச்சலத்துக்குத் தெரியும்…” என்றான்.

“வாட்?”

                                               (தொடரும்….)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *