“அப்படி என்னதான்யா பண்ணனும்? அதை முதல்ல சொல்லித்தொலை… பைத்தியம் மாதிரி மாறிமாறி பேசிட்டுக் கிடக்க? செத்துமா உனக்கு இன்னும் தெளியல…”
அவன் முறைக்கவும்தான் தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்தாள்.
“ஐயோ அமி, சும்மாவே ஆடுற பேய் கொட்டுக்கண்டா விடுமா? அவன் வேற மனசுக்குள்ள நினைச்சாலே கேக்கும்ங்கறான்… நீ வாயைத் தொறந்தே இப்படி பேசி வச்சுகிட்டு இருக்க…நீ பேயடிச்சுதான் சாகப்போற…” அவள் மனதுள் புலம்ப,
“என்னது?” என்றான் அவன் வந்த சிரிப்பை மறைத்துக்கொண்டு.
அவள் இடவலமாக, பின் வலஇடமாகத் தலையசைத்துவிட்டு “அப்படி என்னதான் பண்ணனும் பேய்சார்” என்றாள்.
அவன் சொல்ல வரும்போது சந்தனா அலறும் சத்தம் கேட்டது.
ஓடிப்போய்ப் பார்த்தால், தூக்கத்தில் எதையோ அனத்தியபடி புரண்டுக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் அமர்ந்து “சந்தனா… சந்தனா… என்னடா” அவளைத் தட்டி எழுப்ப, அவளோ எழாமல் அமிழ்தாவின் கைகளை இறுகப்பிடித்துக்கொண்டு அவள் மடியிலேயே படுத்து என்னவோ அரற்றினாள். அவள் என்ன சொல்கிறாள் என்பது தெளிவாகக் கேட்கவில்லை.
அருகில் நின்று இதனைப் பார்த்துக்கொண்டிருந்தவனை இவன் எதுவும் பண்ணிருப்பானோ என்கிற ரீதியில் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்தபடி அவள் மடியில் உருண்டுகொண்டிருந்தவளைப் பிடித்து சந்தனா ஏய் சந்தனா என உலுக்கினாள்.
அவள் உலுக்கிய உலுக்கலில் படாரெனக் கண்திறந்து அதே வேகத்தில் எழுந்தமர்ந்தவள், அமிழ்தாவைப் பார்த்து, “அக்கா நீதான் செத்துட்டல… இப்ப எப்படி திரும்பி வந்த?” என்றாள்.
“நான் செத்துட்டனா? எனக்குத்தெரியாம நான் எப்போடி செத்தேன். நீ வேற ஏன்டி இப்படி சாவடிக்கிற…”
“நான் இல்லைக்கா, அந்த செத்துப்போனவர் தான்… அந்த வீடியோல இருந்தார்ல… அவர்தான்கா பேயா வந்து உன்னைக் கொன்னுட்டாரு… “
“என்னது இவனா ஐயையோ… அப்ப நிஜமாவே நமக்குப் பேய் கையாலதான் சாவா?” என இவள் மனதுள் புலம்ப,
சந்தனாவோ, “அக்கா அப்ப நீ திரும்ப வரவே மாட்டியாக்கா… “என அவளை அணைத்தபடி அழத்தொடங்கினாள்.
“அடச்சீ நான் உயிரோட தான் இருக்கேன்….இப்ப அழறதை நிறுத்தலைன்னா உன்னைக் கொலை பண்ணிருவேன்…” சொல்லும் போதே நாம் நிஜமாகவே உயிரோடுதான் இருக்கிறோமா? என்ற சந்தேகம் வேறு அவளுள் வந்துத்தொலைத்தது .
இவள் இப்படி கூறவும் நிமிர்ந்து நிதானித்த சந்தனா “அப்ப நீ இன்னும் சாகலையா, அதெல்லாம் கனவா “என்றாள்…
“அடியேய்…”
“ஐயோ ஸாரிக்கா… கொஞ்சநேரம் பயந்துட்டேன் தெரியுமா… இன்னமும் அந்தப் பதட்டம் போகலைக்கா…” என அவளை மீண்டும் கட்டிக்கொண்டாள்.
“நீயாவது கொஞ்சநேரமா தான் பயந்த… நான் ரொம்ப நேரமா பயந்துகிட்டுதான் இருக்கேன்… கனவு கண்டதுதான் கண்ட… நல்ல கனவா கண்டுருக்கக் கூடாதா? சரி கெட்ட கனவுன்னாலும் சாகிறமாதிரி தான் காணணுமா? அதிலையும் நான் சாகிறமாதிரிதான் காணணுமா?… சரி அப்படியே சாகிற மாதிரியே கண்டாலும் இவன் கையால சாகிறமாதிரியா காணணும்? இவளா கனவு கண்டாளா? இல்ல இவன் வரவைச்சானான்னு தெரியலையே.” அருகில் நின்றுகொண்டிருந்தவனை முறைத்தாள்.
“ப்ச். உன் தங்கச்சி மதியம் நீ அழுகறதைப் பார்த்துருக்கா. வெளியே உன்னைச் சமாதானப்படுத்திட்டாலும் அது அவளோட ஆழ்மனசுல பதிஞ்சுருக்கும்;. அது முதல்காரணம். ரெண்டாவது நான் இறந்ததை வீடியோ மூலமாப் பாத்துருக்கா. அப்படியே போய்த் தூங்கிருக்கா. அந்த வீடியோ அவ மனசைப் பாதிச்சுருக்கும். அதனால இது ரெண்டும் சேந்துக் குழம்பிக் கனவா வந்துருக்கும். இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல…”
“ம்க்கும்… உன்னைப் பேய் வேஷம் போட்டுச் சுத்துற பிராடுன்னு நினைச்சா நீ பிராய்டு தியரி பேசுற பேயா இருக்கியேடா…எல்லாம் என் நேரம் பேய்கிட்டலாம் லெக்சர் கேட்டுட்டு இருக்கேன். ” அவள் மறுபடியும் மனதுள் மத்தளம் வாசிக்க,
“நீ அடிக்கடி ஒண்ணை மறந்துருற அமிழ்தா…” என்றான் அவன்.
“என்னது… நான் நினைக்குறது உங்களுக்குக் கேக்கும் அதுதான…
பேசதான் முடியல… நான் நினைக்குறதும் கேக்கும்ன்னா நான் என்னதான் பண்றது… கொஞ்சமாச்சும் பிரைவசி வேண்டாம்… “கத்திவிட, தோள் சாய்ந்திருந்த சந்தனா எழுந்து, “அக்கா என்னக்கா ஆச்சு” என்றாள்.
‘ஐயோ இவளை மறந்துட்டனே’, என உதட்டைக் கடித்தவள் முகத்தை ஒன்றும் அறியாதது போல பாவமாக வைத்துக்கொண்டு “என்ன ஆச்சு… சந்து… ஒண்ணும் ஆகலையே…” என்று சமாளித்தாள் .
“இல்லையேக்கா யார்கிட்டயோ பேசிகிட்டு… இல்லல்ல… கத்திகிட்டு இருந்த.. நான் நினைக்குறது கேக்கும்ன்னான்னு என்னமோ…” சந்தனா அவள் பேசியதை உறுதிப்படுத்த முயல, இவளோஅவளது கனவின் ஓர் பகுதி தான் அதென அவளை நம்பவைத்தாள்.
“நான் யார்கிட்டடி பேசுனேன்…அதெல்லாம் ஒண்ணுமில்ல உனக்கு அந்தக்கனவு எபெக்ட் இன்னும் போகலைன்னு நினைக்குறேன்… நீ முகத்தைக் கழுவிட்டு வந்து பேசாம தூங்கு…”
குழப்பத்துடன் பார்த்தவள் ‘இருக்கும் இருக்கும்’ என்று விட்டு குளியலறைப்பக்கம் போகவும்
அவனைப் பார்த்துக் கைகுவித்தவள், “இங்க பாருங்க… என் தங்கச்சி இன்னும் நாலு நாள்ல ஊருக்குப் போயிருவா… தயவுசெஞ்சு அவ போனதுக்கப்பறம் இங்க வாங்க…. அப்ப நான் மட்டும் தான் இருப்பேன். ரெண்டு வருஷம் சும்மா தான இருந்தீங்க…ஒரு நாலு நாள் தான கேக்குறேன்.. ப்ளீஸ்” என்று கெஞ்சியே விட்டாள்.
‘ம்ம்’ என அவன் யோசிக்கவும் ‘என்ன கையெடுத்துக் கும்பிட்டும் போக மாட்டேங்குறான். பேசாம கால்ல விழுந்துறலாமா சேச்சே வேண்டாம் இப்பவே விழுந்துட்டா பின்னாடி என்ன பண்றது… உயிருக்கு ஆபத்து வரும்ங்கற நேரத்தில அதைப் பயன்படுத்திக்கலாம்…’ என்று யோசித்தவள் ‘சை என்ன நாம இவ்வளவு கீழே இறங்கிட்டோம்; அவ்வளவா பயப்படுறோம்’, என்று தலையில் தட்டிவிட்டு அவனிடம் “அவ வேற ரொம்ப பயப்படுறா…அதனாலதான்” என்று சேர்த்துச்சொன்னாள்.
உண்மையில் அவளுக்கு யோசிக்க அவளது மனதைத் தயார்ப்படுத்தக் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அதைதத்தான் சந்தனாவைச் சாக்கு வைத்துக்கேட்டாள்.
‘அவ வேற ரொம்ப பயப்படுறா…அதனாலதான்’ என்பதைக் கேட்டு நக்கலாகச் சிரித்தவன் “அப்ப மேடம் நீங்க பயப்படலை… நாங்க இதை நம்பணும்…சரி ரெண்டு நாள்ல வருவேன்” என்று விட்டு காற்றில் கரைந்தான்.
அவன் கரைவதையே திகைப்புடன் பார்த்திருந்தவள், குளியலறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் முகத்தை இயல்பாக இருப்பது போல வைத்தாள். முகத்தை அழுந்தத் துடைத்த சந்தனாவின் முகம் சற்றுத் தெளிந்திருந்தது… தானும் போய் முகத்தைப் பலமுறை நீரடித்துக் கழுவியவள், தாய் கொடுத்தனுப்பியிருந்த விபூதியை எடுத்துத் தங்கைக்குப் பூசிவிட்டாள்.
தானும் எடுத்துப் பூசியவளுக்கு, ‘அவன் அடுத்த தடவை வரும்போது பேசாம இந்த விபூதியைத் தூக்கி அவன் மேல போட்டுரலாமா? ‘ என்றொரு எண்ணம் வந்தது.
“ஐயையோ வேண்டாம். அப்பறம் அருணாச்சலம் மேல இருக்குற கோபம் நம்ம மேல யூடர்ன் போட்டாலும் போட்டுரும்… எதுக்கு வம்பு அவன் நார்மலாதான் பேசிட்டு இருக்கான். சும்மா இருக்க சங்கை ஊதிக் கெடுத்துக்க வேண்டாம். நாம இப்படி நினைச்சது மட்டும் அவனுக்குத் தெரிஞ்சுச்சு…செத்தோம்… என்று சுற்றிமுற்றிப் பார்த்தவள் நல்ல வேளை அவன் போயிட்டான்…” என்று நினைத்தபடி படுத்துப் போர்வையைப் படாரென்று மூடியவள் அருகில் படுத்திருந்த தங்கையின் கையைப் பிடித்தபடி உறங்கிவிட்டாள்.
‘ஓ… மேடம் என்ன விரட்டுறதுக்குப் பெருசா திட்டம்லாம் போடுறாங்க போல…’ என்று எண்ணி நகைத்தபடி அவ்விடத்தை விட்டு அகன்றான் அங்கு அருவமாக நின்றிருந்த அருளாளன்…
சோற்றைப் பிசைவது எப்படி என்று ஏதோ ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதப் போவதைப் போல உண்ணாமல் கர்மசிரத்தையாகச் சோற்றைப் பிசைந்து மட்டுமே கொண்டிருந்த சக்தியை வியப்பாக நோக்கினார் பத்மினி.
“என்னப்பா அப்ப இருந்து சோத்தைப் பிசைஞ்சுகிட்டே இருக்க, சாப்பிட மாட்டேங்குற… ஒரு வாய் கூட வைக்கலையே” என்று வினவவும், “ஒண்ணுமில்லம்மா வேற ஒண்ணைப் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன். அதான் வேற ஒண்ணுமில்ல…” என்றபடி உண்ணத்தொடங்கினான்.
“சாப்பிடும் போது அப்படி என்னய்யா யோசனை? சாப்பிடுறப்ப வேற எதைப் பத்தியாவது யோசிச்சுட்டே சாப்பிட்டா அந்தச் சாப்பாடு உடம்புல ஒட்டாது. “என்று அருகிலிருந்த அருணாச்சலம் சொல்ல, ‘இந்த வீட்டுச் சாப்பாடு உடம்புல ஒட்டாம போச்சுன்னா அது நான் செஞ்ச புண்ணியம்’ என்று மனதில் நினைத்தவனுக்கு ஒவ்வொரு கவளமும் தொண்டையில் சிக்கிச்சிக்கிதான் இறங்கியது.
“ஏய் இந்தா என்னைப் பாடாப்படுத்தி வாங்குனல்ல… இந்தப் ப்ளுடூத்தை மறக்காம எடுத்து உள்ள வை…”
“ம்ம்; சரிக்கா” என்றபடி அந்தச் சின்ன கைப்பையில் அதனை வாங்கி வைத்துக்கொண்டாள் சந்தனா.
“உன்னோட மத்த பை எல்லாம் அந்த பஸ்ல பத்திரமாதான இருக்கும்?”
“ம்ம் ஆமாக்கா டிக்கில வச்சுருந்தது… வர்றப்ப எடுத்துட்டு வர முடியல்ல… அரேன்ஜ் பண்ணி வந்த பஸ்தான… அது பத்திரமாதான் இருக்கும்… ஆனா அதனாலதான் மேடம் உங்களோட இந்த ஸ்கைபுளு கலர் சுடிதாரை எனக்குக் கொடுத்தீங்க… மகளே அன்னைக்குக் கிளம்புறப்ப தரமாட்டேன்னு என்ன ஆட்டம் காட்டுன… இப்ப எப்படி எங்க கைக்கே வந்துருச்சா… எது எது எங்கங்க வரணும்ன்னு இருக்கோ அது அங்கங்க வந்து சேர்ந்துரும்…”
“அதெல்லாம் வரவேண்டிய இடத்துக்கு வந்துட்டுதான் உங்ககிட்ட வந்துருக்கு…”
சந்தனா புரியாமல் பார்க்க, “நான் ஊருக்குக் கிளம்பும்போது அது புது சுடிதார். ஆனா இப்ப அது புதுசில்ல… அதாவது மை லார்ட்… நீ இங்க வர்றதுக்கு முன்னாடியே ஒருநாள் அதை நான் வேலைக்குப் போட்டுட்டுப் போயிட்டேன்… நான் போட்டதைக் கூட, பஸ்ஸை மிஸ் பண்ணி, அந்த பஸ்ல டிரஸ்ஸையும் மிஸ் பண்ண என் தங்கச்சிக்குக் கொடுக்கலன்னா எப்படி?” என்று கண்சிமிட்டிச் சிரித்தாள்.
“ அதான பார்த்தேன்… நீ தூக்கிக் கொடுக்கறப்பவே நினைச்சேன். ம்கூம் இந்த அக்காங்களுக்கு மட்டும் தங்கச்சியா பிறக்கக் கூடாது. அண்ணனுங்களுக்குத் தம்பியா பிறக்கக்கூடாது. எப்பப்பார்த்தாலும் அக்காவோடதை எடுத்துக்கோ… அண்ணனோடதைப் போட்டுக்கோன்னு சாவடிக்;க வேண்டியது…நாங்க மட்டும் புதுசாப் போடக்கூடாதா?” அவள் முணுமுணுக்க,
“ ஹலோ என்ன போர்க்கொடி ரொம்ப உயரமா பறக்குது…லேட்டா வந்தா எல்லாம் லேட்டாதான் கிடைக்கும் ” என்று அவளை வம்பிழுக்க, கடுப்பான சந்தனா, அங்கிருந்த தலையணையை எடுத்து சாத்து சாத்து என்று சாத்தினாள்.
“ஏய் வலிக்குது விடுடி விடு” என்று அவளைத் தடுத்தாலும் மனம் நிறைவானது போல இருந்தது. ‘அக்காஅக்கா மூத்தவள் மூத்தவள்’ என்றே சொல்லிவளர்த்தால் சந்தனா எவ்வளவு வாய் பேசினாலும் அவ்வளவாகக் கைநீட்டமாட்டாள். அதனாலோ என்னவோ அமிழ்தாவுக்குச் சந்தனாவிடம் அடிவாங்க ரொம்பப் பிடிக்கும். அதற்காக அதை அவளிடம் சொல்ல மாட்டாள். அடிக்கடி கிடைக்கத் தொடங்கிவிட்டால்? வேண்டும் என்று தோன்றும் போது அவளே வம்பிழுத்து வாங்கிக்கொள்வாள். அப்படி கிடைத்த இந்த அடி அவள் நான்கு நாள் தங்கையுடன் கழித்த இந்தப்பொழுதிற்கு நிறைவூட்டியது போல இருந்தது. இன்னும் கொஞ்சநாள் கூட அவளைத் தன்னுடன் தங்கவைக்கலாம்தான்… செமஸ்டர் லீவுதான்… பெற்றோரிடமும் அவள் ஆசிரியர்களிடமும் பேசலாம்தான்… ஆனால் அவளுக்குத்தான் பேய் நடமாடும் இடத்தில் தன் தங்கையைத் தங்க வைக்க மனம் வரவில்லை. அவன் என்னவோ அவள் கெஞ்சியதற்கு மனமிரங்கி நான்கு நாட்களாக இந்தப்பக்கம் வரவில்லைதான்… ஆனால் எப்பொழுது வருவான் என்று தெரியாது.’
அவள் நினைத்துக்கொண்டு இந்தப்புறம் திரும்ப அவன் நின்றிருந்தான். ‘ஐயோ சைத்தானை நினைச்சா உடனே வரும்ன்னு சொல்வாங்களே… அதை ப்ரூவ் பண்றானே… ‘அவனைக் கடுப்பாகப் பார்த்தாள்.
ஏதோ ஒரு போன் வர, அதைப் பேசிக்கொண்டே சந்தனா வெளியே சென்றுவிட, இவன் பேசினான்.
“நம்ம ஊர்ல குலசாமி கும்பிடுவாங்கலல்ல…”என்று கேட்டான்.
தலையாட்டியவள், பேய் எதுக்கு சாமியைப் பத்திப் பேசுது என்று குழப்பமாகப் பார்த்தாள்.
“அந்தக் குலசாமி பெரும்பாலும் நம்மை மாதிரியே இந்த உலகத்தில வாழ்ந்து மறைஞ்ச நம்ம முன்னோர்களாத்தான் இருப்பாங்க… கல்யாணமாகாம இறந்துபோன கன்னிப்பெண்கள், ஊரைக்காப்பாத்த இறந்துபோன வீரர்கள், இப்படிப்பட்டவங்களாத்தான் பெரும்பாலும் இருப்பாங்க. அவங்களுக்கு அதாவது இறந்துபோன ஒருத்தருக்குத்தான் கோவில் கட்டி குலசாமின்னு பெரும்பாலும் கும்பிடுவாங்க. அந்தக் குடும்பத்துக்கு அந்தக்குலத்துக்கு ஆன்மா வடிவில இருக்குற அவங்க காவல் நிப்பாங்கங்கற நம்பிக்கைல…”
“ஐயா என் குலசாமியே உங்களை சைத்தான்னு சொன்னது சாரி நினைச்சது தப்புதான், போதுமா? இல்ல எங்கையாவது கோவில் கட்டணுமா? உங்களை ஒரு வார்த்தை சொன்னதுக்கு என் குடும்பத்துல இருந்து குலசாமி வரை வம்பிழுப்பீங்க போல…”
“ப்ச் நான் அப்படி சொல்ல வரலை. குலசாமி கோவில்லயும் விபூதி கொடுப்பாங்கல்ல.”
ம்ம்?
“இறந்து போய் ஆத்மாவா அலையுறவங்க எல்லாருமே தீய சக்தி கிடையாது. நீ என் மேல விபூதியைத் தூக்கிப்போட்டாலாம் நான் அதுக்குப் பயந்து போய் உன்னை விட்டுலாம் போயிர மாட்டேன். அந்த விபூதி தீய சக்தியைத் தான் ஏதாவது செய்யும். என்னை இல்ல… சரியா?”
‘அப்ப இவன் நான் விபூதி அடிக்கத் திட்டம் போட்டப்ப பக்கத்துல தான் இருந்தானா? ‘அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று முழிக்க, “அக்கா போலாமா? மலையில இருந்து கீழே இறங்க ஆரம்பிச்சுட்டாங்களாம். இப்பக் கிளம்பினாதான் கரெக்டா இருக்கும்” என்றபடி வந்தாள் சந்தனா.
‘என் தெய்வமே’ என அவளை மனதுள் கொஞ்சியவள், “போலாமே” என்றபடி அவளுடன் கிளம்பினாள்.
தங்கையை பஸ்ஸில் ஏற்றிவிட்டுக் கையாட்டியவள், தங்கைக்கு வாங்கும் போது தனக்கும் வாங்கியிருந்த ப்ளுடூத்தைக் காதில் மாட்டிக்கொண்டு அந்த பஸ் ஸ்டாண்டில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
சுற்றி முற்றிப் பார்த்து விட்டு அருளாளனை நோக்கி, “இருட்டத்தொடங்கிருச்சு, இங்க யாருமில்ல… நீங்க வழக்கம் போல வழித்துணைக்கு வந்துருங்க… இப்ப சொல்லுங்க சக்தி என்ன பண்ணனும்” என்றாள்.
“அந்த அருணாச்சலத்தோட அஸ்திவாரத்தை ஆட்டங்காட்டணும்…”
ச்ச் அவங்க எல்லாரும் உங்களை எதுக்காகக் கொலை பண்ணாங்கன்னு தெரியாது. நானா இருந்தா இப்படி புரியாம புதிரா பேசுறதுக்கே பண்ணிருப்பேன்.
“என்ன மேடத்துக்குக் குளிர்விட்டுப் போச்சு போல? ”
“ஆமாம். எதுக்கு நான் மனசுல எதையாவது நினைச்சு அது உங்களுக்குத் தெரிஞ்சு உங்ககிட்ட மொக்கை வாங்கிட்டே இருப்பானேன். வெளிய வாய்விட்டே சொன்னா என் மனசுக்காவது ஒரு ஆறுதலா இருக்கும்ல…அதை விடுங்க. நீங்க என்ன செய்யணுமோ அதைத் தெளிவா சொல்லுங்க…”
அவன் சொன்னான்.
அதைக் கேட்டவள் “ ஐடியால்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா அவன் இதைப் பண்ணுவானான்னு தெரியலையே…”
“ஏன்?”
“அவனுக்குக் கொஞ்சம் பயந்த சுபாவம்.”
“பயந்த சுபாவமா? அப்ப ரொம்ப நல்லது… உயிர் மேல பயமிருந்தா இதைத்தான் பண்ணியாகணும்ன்னு அவன் கிட்டப்போய்ச் சொல்லு போ…”
“என்ன ரொம்ப மிரட்டுறீங்க… என்ன இருந்தாலும் அவர் அவனோட அப்பா இல்லையா?”
“இல்ல…”
“என்னது?”
“அருணாச்சலத்தோட பையன் சக்தி இல்ல..”.
“என்ன?”
“என்ன என்ன என்னங்கற? அந்த விளக்கெண்ணெ அவரோட பையன் இல்லன்னு சொன்னேன்.”
“ என்…அப்படின்னா அவன் ஏன் அவரோட பையன்னு சொல்லிட்டு இங்க இருக்கணும்?”
“அதை நீ அவன்கிட்டதான் கேக்கணும். ஆனா அருணாச்சலத்துக்கு அவன் அவரோட உண்மையான பையன் இல்லன்னு தெரிஞ்சா அவன் உயிர் அவன் கிட்ட இருக்குமான்னு தெரியாது. அதனாலதான் அவனை உன் மூலமா ஊரை விட்டுப் போகச்சொல்லிச் சொன்னேன். ஆனா இப்ப அதுவும் கைமீறிருச்சு… அவர் சக்தி எங்க வளர்ந்தான்… எங்க படிச்சான்றது மாதிரி எல்லா டீடெய்ல்ஸையும் கலெக்ட் பண்ணிட்டாரு… இவன் அவரை ஏமாத்திட்டு எங்க போனாலும் தேடிக்கண்டு பிடிச்சு அவன் கதையை முடிக்காம விட மாட்டாரு. உன் பிரெண்டோட நல்ல நேரம், ஏதோ ஒரு விஷயம் இன்னமும் அவரை சக்திதான் அவர் பையன்னு நம்பவச்சுகிட்டு இருக்கு… ஆனா அந்த நல்ல நேரம் இன்னமும் எவ்வளவு காலம் நீடிக்கும்ன்னு சொல்ல முடியாது. அதனால இந்த வழிதான் ஒரே வழி. இதை ஒழுங்காப் பண்ணச்சொல்லு மிச்சத்தை நான் பாத்துக்குறேன்”
“அப்ப இந்த விஷயம் அவருக்குத் தெரிஞ்சா உங்களை மாதிரியே அவனையும் கொலை பண்ணிருவாருல…”
அவளை மேலும் கீழும் பார்த்தவன் “தனியா பேசற மாதிரி தெரியக்கூடாதுங்கறதுக்கு ப்ளுடூத்தை மாட்டிட்டுப் பேசுறதெல்லாம் புத்திசாலித்தனம் தான். ஆனா அதுக்காக, இப்படி உங்களைக் கொலை பண்ணாங்கன்னுலாம் யாரும் போன்ல பேசமாட்டாங்க…அதையும் கொஞ்சம் மனசுல வச்சுட்டுப் பேசு. என்னையவே பாத்துட்டுப் பேசாம கொஞ்சம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பாத்துப்பேசு. இல்லைன்னா இன்னைக்கும் உன் தங்கச்சி வேப்பிலை அடிச்சுறப் போறா…” என்றான்.
“ச்ச் அவ தான் இங்க இல்லையே…இப்ப அதுவா விஷயம்? அவரோட உண்மையான பையன் எங்க இருக்கான்னு தெரியலையே…” அவள் நெற்றியைத் தேய்த்து கொண்டு யோசிக்க,
“ அருணாச்சலத்தோட பையன் இங்க இருக்கானான்னு தெரியலை… ஆனா உன்தங்கச்சி இப்ப இங்க தான் இருக்கா” என்று எதிர்ப்புறம் கைகாட்டினான் அருளாலே.
அங்கே சந்தனா தான் வந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் இன்னொரு இளைஞன்.
அந்த இளைஞனை அமிழ்தாவின் கண்கள் கேள்வியோடும் அருளாளனின் கண்கள் யோசனையுடனும் அளவிட ஆரம்பித்தன.
(தொடரும்...)
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️